O Crazy Minnal(3)

3

அந்தக் காலை நேரப் பெங்களூரின் வாகன நெரிசலில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தான் நரேந்திரன்.

 

முன்னாடி நகருவேனா என்று நிற்கும் வாகனங்கள்..

பின்னாடியோ ‘நீ நகர்ர வரைக்கும் விடமாட்டேன்’ என்று சபதம் எடுத்தது போல் ஹார்னில் வைத்த கையை எடுக்காத ஓட்டுநர்களின் அட்ராஸிட்டீஸ் என்று வகை தொகையில்லாமல் அவனைச் சோதித்தது அவனது வாழ்க்கை. இந்த அழகில் அவன் பெங்களூரிற்குப் புதிது வேறு. கூகுல் குருவிடம் தான் வழி கேட்டுத் தட்டுத் தடுமாறி, பல சந்து பொந்துகளில் நுழைந்து, என சில வீரதீர சாகசங்களுக்குப் பிறகே  அந்த சிக்னலிற்கு வந்திருந்தான்.

 

சிக்னலும் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற ரேஞ்சிற்கு இவனை நோக்கி கண் சிமிட்ட, காதிலிருந்த ப்ளூ டூத்தையும் தாண்டி அவனது தலைக்குள் இறங்கியது அவன் பின்னிருந்த ஆட்டோ ஹார்ன். வேறு வழி மறுபடியும் கூகுல் குருவையே நாடினான்.

 

அவனது வலது பக்கமிருந்து பிரிந்து சென்ற அந்த தெருவை அது காட்ட இங்கு சில பல அர்ச்சனைகளைத் தவிர்த்துவிட்டு அந்த நெரிசலிலிருந்து அவனது வண்டியைப் பிரித்தெடுப்பதே பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.

 

“ச்சே.. இடியாப்ப சிக்கல கூட ஈஸியா பிரிச்சிரலாம் போல, ஆனா இந்த ட்ராஃபிக்ல இருந்து தப்பிக்கறதுக்குள்ள மனுசன் உசுரு போயிரும்” என்று நொந்துக்கொண்டே அவன் அந்த தெருவினுள் நுழைய, மனதுக்குள் மழைச்சாரல்..!

 

அந்த தெருவே அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

இருபக்கமும் மரங்கள் வளர்ந்து வளைந்து நிற்க, அவ்வளவு குளுமையாய்..!

 

அவனுக்கோ மனதுக்குள் ‘பச்சை நிறமே.. பச்சை நிறமே’ தான்.

ஆனால் அவனது ப்ளூ டூத்தோ வேறொரு பாடலை அவனுக்காகப் பாட அவனும் அதை ரசித்துக் கொண்டே அடுத்த வளைவில் திரும்புவதற்காக வேகத்தைக் குறைத்தான்.

 

ஓ க்ரேஸி மின்னல்

அழகிய கண்ணில்

அச்சங்கள் பறந்துபோகும் பறவை போல விண்ணில்

கண்ணாடிக் கண்ணில் உன் முகம்தானே

கண்ணீரைச் செய்துவிட்டாய் சீனி மிட்டாய் நீயே

நீதானே காதல் செல்லப் ப்ராணி

நீ போனால் வாழ இல்லை திராணி

சில் சுடரே சுடரே…ஏ…ஏ..ஏ…

மெல் இடரே என் மனப்புதிரே…

மின் மினியே.. மினியே.. ஏ.. ஏ.. ஏ..

என் வழியே.. என் வழித்துணையே..

 

“ஏஏஏ!!!” என்ற அலறலுடன் வண்டியை நிறுத்தினான்.

பாடலை ரசித்துக் கொண்டே அந்த வளைவில் திரும்பியவன் அந்தப் பெண்ணை எதிர்பார்த்திருக்கவில்லை, சுதாரித்து நிறுத்திவிட்டான்தான் இருந்தும் அவனது பைக் அப்பெண்ணின் சைக்கிளைப் பதம் பார்த்திருந்தது.

 

இவன் வண்டியை நிறுத்திவிட்டு அவளுக்கு உதவ நினைக்க அதற்குள் அவளாகவே எழுந்தவள்,

 

“கண் காண்ஸல்வா?”(கண்ணு தெரியாதா?) என்றவள் அவனை  தாறுமாறாக  துவைத்தெடுக்க, அதே சமயம் அவள் ஃபோன் வேறு பாட நேரத்தைப் பார்த்தவள் வேறு வழியில்லாமல் பக்கத்திலிருந்த பஞ்சர் ஒட்டும் கடையில் வண்டியை நிறுத்திவிட்டு ஆட்டோ பிடிக்கச் சென்றாள்.

அவனும் உதவ முன் வர அதைக் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளாமல் சென்றுவிட்டாள்.

 

அவனுக்கோ மாநிறத்தில், சராசரி உயரத்தில், கழுத்துவரை வெட்டப் பட்டிருந்த கூந்தலுடன் ஓர் உருவம் அவன் முன் நின்று அவனைத் திட்டிய விதம் கொஞ்சம் சிரிப்பாக இருந்தாலும் ஒரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது.

 

மறுபடியும் வண்டியை எடுத்தவன்,”ச்சே என்னடா இது?” என்றானது.

 

அவன் அங்கு வந்திருப்பதே பட்ட மேற்படிப்பிற்காக. பெங்களூரிலேயே தலை சிறந்த ஒரு கல்லூரியில் அவனுக்கு MBA ஸீட் கிடைக்க, அங்கொரு வீட்டை வாடகைக்கெடுத்து தங்கியிருந்தான்.

இல்லையெனில் அவனது சொர்க்கமான வீட்டையும், சொந்த ஊரையும் விட்டு வந்திருப்பானா.

 

எப்படியோ சில பல சாகசங்களுக்குப் பிறகு அவன் கல்லூரியை அடைந்திருக்க அங்கிருந்த பார்க்கிங் லாட்டில் அவனது வண்டியை நிறுத்திவிட்டு வகுப்பறையை நோக்கி நடந்தான்.

 

தூரத்தில் அந்த மரத்தடியில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தவளைப் பார்க்க அவளோ எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள். இவன் வருவதைக் கவனிக்கவேயில்லை, இவன் அவளருகில் அமரும்வரை.

 

“என்ன அஷ்மிதா.. ஏதாவது ப்ரச்சனையா?” என்று அவளது சிந்தனையைக் கலைக்க அவளோ

 

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல நரேன்..” என்றவள் நினைவு வந்தவளாக அவனிடம் திரும்பி

 

“சாரி நரேன்.. நேத்து கால் அட்டன்ட் பண்ணது என்னோட சிஸ்டர்.. அவளுக்கு கொஞ்சம் விளையாட்டுத்தனம் ஜாஸ்தி, பட் அட் த சேம் டைம் டாலன்டட் உம் கூட” என அவள் குறிஞ்சியை விட்டுக் கொடுக்காமல் அதே சமயம் மன்னிப்பும் வேண்ட, ஒரு சிறு புன்னகையுடன்

 

“அதெல்லாம் ஒரு ப்ரச்சனையுமில்ல அஷ்மி, நானும் யாருன்னு கேக்காம ஏதோ அவசரத்துல பேசிட்டேன்..” என்றவன் கூறவே அவளுக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.

 

“அந்த ஃபைல் ஓபனாச்சா?”

 

” இல்ல அஷ்மி பிடிஎஃப் ஓகே, பட் அந்த ஃபைல் சப்போர்ட் ஆகல” என 

“ஓ..” என்றவள் “நான் அனுப்புனது இருக்குல?”

 

” ஆமா”

 

“அப்போ எனக்கு மெயில் பண்ணிடு லைப்ரரிக்கு போய் பார்த்துக்கலாம் என்னன்னு” என்றெழுந்தவள்

 

“நீ லைப்ரரிக்கு.. இல்ல வேண்டாம்  நீயும் வா ஸ்மிதா மேம்ட்ட எதுக்கும் கேட்டுப்போம்” அவனும் சரியென்று எழுந்துவிட இருவரும் லைப்ரரியை நோக்கி நடையைக் கட்டினர்.

****************

காலை நேர ட்ராஃபிக் எவ்வளவு கொடுமையோ அதற்கு நான் சளைத்தவனில்லை என்பதைக் காட்டிக்கொண்டிருந்தது அந்த மாலை நேர வாகன நெரிசல்!

 

‘இப்படி ஊர்ந்து ஊர்ந்து போறதுக்கு பேசாம பக்கத்து ப்ளாட்ஃபார்ம்ல ஒரு பாயை விரிச்சு படுத்துரலாம்’ என்று தோன்ற ப்ளாட்ஃபாரமைப் பார்த்தால், பாதி வண்டி ஃப்ளாட்ஃபாரத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது!

சிக்னலில் இருந்து தப்பிக்கிறார்களாம்.

 

மறுபடியும் பச்சை லைட் பளபளக்க அதில் படு குஷியாகிய ஜிதேந்திரன், அந்த ஊர்ந்து செல்லும் ரேசில் பங்கேற்றார். ஆனால் இம்முறை எல்லோரும் கொஞ்சம் வேகமாக ஊர்ந்ததாலோ என்னவோ அவர் சிக்னலை கடந்திருந்தார்.

 

ஏனோ அவரது வீடிருக்கும் தெருவினுள் நுழைந்தாலே ஒருவித உற்சாகம் தொற்றிக் கொள்கிறது அவருக்கு.  உதடுகள் தானாகவே ஒரு பாடலை முணுமுணுக்க ஒருவித துள்ளலுடனே வீட்டை அடைந்திருந்தார்.

 

வீட்டினுள் நுழைந்த மறுகணமே அவரது உற்சாகம் வடிந்திருந்தது.

வீடே சற்று அமைதியாக இருக்க,

 

“என்ன அஷ்மி? குறிஞ்சி வெளில எங்கயாவது போயிருக்காளா?”

 

“அதெல்லாம் இல்லப்பா. தூங்கிட்டு இருக்கா”

 

“ஏன்? என்னாச்சு?”

 

” காலைல சின்ன ஆக்ஸிடென்டாம்.. ஆரா டேமேஜ் ஆகிடுச்சுனு ஒரே மூட் அவுட். யார்கிட்டயும் சரியா பேசலை” என ஆக்ஸிடென்ட் என்ற வார்த்தையிலேயே பதறியவர் பின் அவள் சொன்னதை கேட்டுவிட்டு அவர்கள் அறைக்குச் செல்ல குறிஞ்சியோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

அவள் பக்கத்தில் அமர்ந்தவரின் கவனம் அவள் கைகளில்தான் இருந்தது. கீழே விழுந்ததில் லேசாகச் சிராய்த்திருக்க அதில் மருந்தும் தடவப்பட்டிருந்தது. அவருக்குத் தெரியும் இது அஷ்மிதா தான்  தடவியிருப்பாள் என்று. அவருக்குக் குறிஞ்சியைப் பற்றியும் நன்றாகத் தெரியும்!

 

எப்பொழுதெல்லாம் கட்டுப்படுத்த முடியாத அளவு கோபமோ இல்லை எப்பொழுதெல்லாம் மனம் ஒரு நிலையில் இல்லையோ அப்பொழுது  தூங்கிவிடுவதுதான் அவளது வழக்கம்.

 

அவளைப் பொருத்தமட்டில் தூங்கி எழும்பொழுது பிரச்சனைகளின் பாரம் குறைந்து, தெளிவான முடிவு எடுக்க முடியும். இது குறிஞ்சியின் தியரி!

 

அந்த லேசான சிராய்ப்பிற்கே அவர் கலங்க, அவரைத் தேடி அங்கு வந்திருந்த லீலாமதியோ, அவர் தோளில் கை வைக்க அதன் அழுத்தத்தை உணர்ந்து எழுந்து கொண்டவர் ஹாலிற்கு வர இவர்கள் இங்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே குறிஞ்சியும் எழுந்து வந்துவிட்டாள்.

 

வந்தவளோ லீலாவிற்கும் ஜிதேந்திரனுக்கும் நடுவிலிருந்த சிறு இடைவெளியில் ‘தொப்’ என்று அமர

 

“உனக்கு வேற இடமே கிடைக்கலையாக்கும்” என்றது வேறு யாருமல்ல லீலாமதி தான்.

 

இன்னும் நன்றாக இடித்துக் கொண்டு அமர்ந்தவளோ

“கிடைக்கும்.. ஆனா இப்படி மெத்து மெத்துனு இருக்குமா?” என

 

“வாலு! சரி ஆராவ என்ன பண்ண?” என்று வினவ அவ்வளவுதான்! கேட்கவா வேண்டும்? காலையில் நடந்ததை முழுதாக உரைத்தவள், பின் அதற்குக் காரணமானவனை வார்த்தையாலேயே துவைத்துப் பிழிந்தெடுத்தாள்.

 

லீலாமதிக்கோ ‘கடவுளே! அந்த பையன் மட்டும் இவ கண்ணுல பட்ற கூடாதுப்பா’ என்று மானசீகமாக ஒரு வேண்டுதலைப் போட்டார்.