O Crazy Minnal(30)

thumbnail_large-e1bfb22e

30

“இங்க பாரு!” என்று  அவள் முகம் பார்க்க முயன்று கொண்டிருந்தான் நரேந்திரன்.

 

ரேவதியிடம் அவளையும் அழைத்து வருவதாக கூறியவனுக்கோ உள்ளுக்குள் உற்சாக ஊற்று.

 

“தாத்தாவ பார்த்துட்டு வரேன்” என்று துள்ளலாய் ஓடியவளின் புன்னகை பூசிய முகத்தை எதிர்பார்த்து அவன் வர அவளோ கலங்கிய விழிகளைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சியில்.

 

அவன் பார்க்க வந்த அந்த துருதுரு விழிகளில் கண்ணீர் குளம் கட்டியிருக்க எதைப் பற்றிய சிந்தனையுமின்றி அவளிடம் விரைந்திருந்தான் அவன்.

அவனைக் கண்டவளின் கண்ணீர்த் துளிகளோ கரை தாண்ட அவனை அணைத்துக் கொண்டவளின் கண்ணீர்த் துளியில் அவன் சட்டை நனைவதை அவனால் உணர முடிந்தது.

 

அவளது கண்ணீரில் பதறியவன், அவள் அவனை கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தவும் ஒன்றும் ஓடவில்லை அவனுக்கு.

 

“இங்க பாரு! என்ன பாருடா ப்ளீஸ்!” என்று அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருக்கச் சற்று தெளிந்தவளாக விலகி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் உருண்டோடிய நீர் மணி ஒன்றை மென்மையாய் துடைத்தவாறு வினவினான்

 

“என்னாச்சுடா? ஏன் அழற?” என்றவனின் பரிவான கேள்வியில் அவள் உள்ளத்தைத் தென்றல் ஒன்று தீண்டிச் சென்றது. அவளுக்கே  தெரியவில்லை தான் எப்படி உணர்கிறோம் என்று, தெரிந்தால் தானே அவனுக்கு விளக்க!

புது உணர்வொன்று. வார்த்தையில் விளக்கிட முடியாத ஒன்று! 

அவள் பதிலுக்காக அவள் முகம் பார்த்து அவன் நிற்க,  

 

“தெரியல.. வித்தியாசமான  ஃபீல், புது அனுபவம் எனக்கிது ரொம்ப புதுசா இருக்கு..” என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அவனை மறுபடியும் அணைத்தவளாக,

 

“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்!” என்று தலையை மட்டும் நிமிர்த்தி அவன் முகம் பார்த்து “தாங்க்ஸ் எ லாட்!” என்றாள் முழு மனதாக.

பின் அவனிடம் இருந்து விலகியவள்  புன்சிரிப்பொன்றைச் சிந்தினாள்.

கலங்கிய விழிகளும், வளைந்த இதழ்களுமாக நின்றவளின் தலையை அவன் செல்லமாய் கலைத்துவிட  அதற்குள் தன்னுணர்வுக்கு வந்திருந்தவள் அவன் கையில் அடித்து,”நரிபயலே!” என்றவளின் கண்களில் பழைய துருதுருப்பு. அதில் திருப்தி அடைந்தவனாக அவளை அழைத்துச் சென்றான் அவன்.

அவள் அழுகையுடன் கட்டியணைக்க

இவன் ஆதரவாய் தலை கோத

அவ்வழி கடந்து சென்ற இருவிழி வெறுப்பை உமிழ்ந்ததையோ,

இல்லை வஞ்சம் தீர்க்க வழி தேடுவதையோ, பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை.

***************************************************************************************************************

“ம்ம்ம் சாப்பிடற நேரமா இது?” என்று கடிந்தபடி அடுக்களைக்குள் விரைந்தார் வளர்மதி.

 

 பதிலேதுமின்றி அமைதியாய் அமர்ந்திருந்தவள் அவளுக்கு நேரெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நரேந்திரனைக் காண அவனோ அவளை கண்டு ஒரு கையால் கண்ணைக் கசக்கியவாறு, வாயைக் கோணி என அழுவதைப் போலப் பாவனை செய்தான்.

 

‘உன்ன!’ என்றவள் வாய்க்குள் முணுமுணுக்க அவனோ அவளைப் பார்த்துச் சிரித்து வைத்தான். 

 

மேசைக்கு அடியில் அவனது காலிலேயே  அவள் மிதித்துவிட அவனோ ‘ஆ!’ என்ன அலறலுடன் காலை நகர்த்திக் கொண்டான்.

 

அவனைப் பார்த்து வெற்றி சிரிப்பொன்றைச் சிரித்தவள் தட்டில் கவனமானாள்.

அவனுக்கும் அதுதானே வேண்டும்.

 

அது நாள்வரை அவள் அழுது அவன் பார்த்தில்லை! அவளது கோப முகத்தை ரசிக்க  முடிந்த அவனால், அந்த நீர் நிரம்பிய விழிகளைக் கற்பனையில் கூட காண பிடிக்கவில்லை. அது ஆனந்தக் கண்ணீராய் இருந்தாலும், அவனுக்கு அவள் சிரித்த முகமாய், துருதுரு விழிகளுடனும் அந்த கோபமான முறைப்புடனும் அவனிடம் சண்டையிடும்பொழுது எட்டிப்பார்க்கும் அந்த சிறுபிள்ளைத்தனமும்தான் வேண்டும்.

 

அவளது முறைப்பே அவனுக்கு போதுமானதாக இருக்க, அவள் சிந்திய சிரிப்பு அவன் இதழிலும் ஒன்றை மலரச் செய்ய தனக்குள் சிரித்துக் கொண்டவன் தட்டில் கவனமானான்.

 

ஒரு பாத்திரத்துடன் வெளியே வந்த வளர்மதி குறிஞ்சியின் தட்டை நிரப்பும் முயற்சியில்.

“அய்யோ போதும் அத்த! எவ்ளோ?” என்றவள் பதற அவரோ 

 

“அதெல்லாம் இல்ல இத மட்டுமாவது சாப்பிடற! உனக்காகவே பண்ணது” என்றவரைக் கண்டு அவள் அச்சரியம் பொங்க கேட்டேவிட்டாள்.

 

“எனக்காகவா?”

 

“ஆமா.. உனக்காகத்தான்! நீ வத்தலும் தொத்தலுமா இருக்கேன்னு அம்மாதான் உனக்குப் பருப்பு உருண்ட குழம்பு பண்ண சொன்னாங்க”

 

நரேந்திரன் தன்னை ஆச்சரியமாய் பார்ப்பது புரிந்தும் தலையைத் திருப்பாமல் சாப்பாட்டில் கவனமானாள் அவள்.

 

“ஏன் நரேன், அக்கா எத்தனை மணிக்கு  வாராங்க?” என்றவரின் கேள்வி நரேந்திரனின் பக்கம் திரும்பி விட்டது.

 

கையை திருப்பி மணி பார்த்தவன் “இன்னும் ஒரு ரெண்டுமணி நேரத்துல வந்துருவாங்க சித்தி” என்று எழுந்துவிட்டான். “பெரிய தாத்தா ஏதோ வேலை இருக்குனு கூப்பிடாங்க, நான் பார்த்துட்டு வரேன்..” என்று இருவருக்கும் பொதுவாய் உரைத்தவன் கை கழுவச் சென்றுவிட்டான்.

 

“ம்ம் நானும் வந்ததிலேர்ந்து பாக்கறேன், இவன் ஏன் எப்பவுமே வேலையா இருக்கான்த்த?” என்று சந்தேக ரேகைகள் படரக் கேட்டாள்.

 

அவளருகில் இருந்த இருக்கை ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்தவர் அவளது கேள்வியை ஒரு குறுநகையுடன் ஆமோதித்தார்.

 

“அதுவா.. நரேந்திரன் பாமாக்காக்கு ஒரே பிள்ள. மொதல்ல இங்கதான் இருந்தாங்க அப்புறமாதான்  பாலா மாமாவோட   மெட்ராஸுக்கு போனாங்க. அவன் எப்பவும் இங்கேயேதான் இருப்பான். ராத்திரி தூங்க மட்டும்தான் அக்கா அவன தூக்கிட்டு போவாங்க“ என்றவரின் கண்களில் பழைய நினைவுகள் தித்திப்பாய்.

 

“சாந்தி அக்கா பிள்ளயலும் இங்க அவ்வளவா வரதில்ல” என்று சொன்னவருக்கோ உள்ளுக்குள் வருத்தம் என்பதை அவர் முகமே காட்டியது.

“ரேவதியும் ஒரே பிள்ளையா போய்ட்டாளா, இவன்தான் மூத்தவன் அவள அப்படி பாத்துபான், அவளும் இந்திரா இந்திரான்னு இந்த அய்யாகூட தான் சுத்துவா, இங்கேயே வளர்ந்த பையன், பெரிய தாத்தாக்கு அவன் மேல அம்புட்டு பிரியம்! அவனுக்கு பேர் வச்சதே அவர்தான். நல்ல மூளக்காரன்டான்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு, எந்த வேலையா இருந்தாலும் அவன்ட்ட சொன்னா முடிஞ்சிரும்னு ஒரு நம்பிக்கை. அதான் அவனுக்கு நிக்க நேரமில்லாம ஓடுதான். பொறுப்பான புள்ள! ஹ்ம்ம்..  உனக்கும் ஒரு அக்கா மட்டும்தானே?”

 

அவ்வளவு நேரம் அவர் சொல்வதை கேட்டு கொண்டிருந்தவளோ அவரது திடீர் கேள்வியில் விழித்து பின் ஆமாம் என்பதாக தலையாட்டினாள்.

 

“ஆமா, அஷ்மிதா! அவளும் நரேன் மாதிரிதான்த்த பொறுமைசாலி, எதா இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடுப்பா, அண்ட் அது சரியாவும் இருக்கும்.

என்ன விட்டுட்டு எதையும் செய்ய மாட்டா, எங்க போனாலும் எனக்குனு பாத்து பாத்து செய்வாத்த”  என்றவளின் மனமோ எப்பொழுதோ பெங்களூரை நோக்கிப் பயணித்திருந்தது.

 

அவள் தலையை மெல்ல வருடியவர் சின்ன சிரிப்புடன் “மொத பிள்ளைங்கன்னா அப்படிதான் இருப்பாங்க போல” என்று கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

 

அவள் அதைக் கவனிக்கவில்லை! அவள் கவனம் அங்கில்லை. அஷ்மிதாவிடம் தாவியிருந்தது.

‘எப்படி என்ன விட்டு அவளால இருக்க முடியுதோ? என்றெண்ணியவளுக்கு   குற்ற உணர்ச்சி குறுகுறுத்தது! எல்லாவற்றையும் அஷ்மியிடம் பகிர்ந்து கொள்வாள், அஷ்மியிடம் அவள் பேசாத விஷயங்கள் இல்லை, ஆனால் இப்போ?’ 

 

‘சாரி அஷ்மி!’ என்று மானசீகமாய் மன்னிப்பை வேண்டியவள் எழுந்து கொண்டாள்.

 

கை கழுவியவள் ரேவதியைத் தேடியபடி புற வாசல் பக்கம் வர அங்கு ரேவதியோ திண்டு ஒன்றில் அமர்ந்து கொண்டு பேச்சியக்காவிடம் எதைப் பற்றியோ தீவிரமான முகபாவத்துடன்  பேசிக் கொண்டிருந்தாள்.

 

“ரேவ்ஸ்!” என்று அழைத்தவாறே வந்து அவள் பக்கத்தில் அவளை இடித்தவாறு அமர்ந்தவள்

 

“நீ இங்கதான் இருக்கியா? உன்ன எங்கெல்லாம் தேடறது? என்ன பண்றே?”  என்று கேள்விகளை அடுக்கினாள்.

 

“சும்மாதான், பேச்சியக்காட்ட பேசிட்டிருந்தேன்! ஆமா நரேன் எங்க?” “அவன் ஏதோ வேலை வந்துருச்சுனு ஓடிட்டான்!”

 

“ஓ..”

 

“ஆமா! கார்த்தி எப்போ வருவா?” என்று வினவியவளைக் கண்ட ரேவதி

 

“ஏன் ரொம்ப போரடிக்குதா?” என்றாள்

 

முதலில் இல்லை என்பதுபோல் தலையாட்டியவள் பின் ஆமாம் என்பதாக அசைக்க,”சரிவா!” என்றபடி எழுந்து கொண்டாள்.

 

“எங்க?”

 

“சும்மா அப்படியே ஒரு ரௌண்ட் போயிட்டு வருவோம்” என்றவள் பேச்சியிடம் திரும்பி “அக்கா  அம்மா கேட்டா சொல்லிருங்க” என்று நடக்க ஆரம்பித்தாள்.

இருவரும் வெளி வாசல் வரை வருவதற்கும் முகேஷ்  உள்ளே வருவதற்கும் சரியாய் இருந்தது.

 

“இரண்டு மகாராணிகளும் எங்க கிளம்பிட்டீங்க? எங்க அந்த குட்டி சாத்தான காணோம்?” 

 

“ம்ம்ம் மிஸ்டர்.மூக்காண்டி இல்லாம போரடிச்சுதா அதான் காத்தாட நடக்கலாம்னு கிளம்பிட்டோம்!” என்று அவனைப் போலவே ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்தாள் குறிஞ்சி.

 

“முகேஷ்!” என்று பல்லை கடித்தவன் ரேவதியிடம் எங்குப் போகிறார்கள் என்று கேட்டு பின் யோசனையாக அவளிடம் “இந்த வெயிலயா?  ஆத்தங்கறை தோப்புனு எங்கயாவது போயிட்டு வரலாம்ல?” என்றவனுக்கு அவனது அந்த கேள்வியால் வர இருக்கும் விபரீதத்தைப் பற்றி அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை.

 

“இல்ல முகேஷ்! ஆத்தங்கறைக்குலாம் வேணாம் இப்போ” என்று ரேவதி முழு மூச்சாக மறுத்தாள் அவள் மறுத்த பின்பே அவனுக்கும் அவள் எதற்காக மறுக்கிறாள் என்று புரிய அமைதியானான்.

 

“ஏன் கூடாது? ஆத்தங்கறைக்கே போவோமே, நான் பாத்தது இல்ல” என்ற குறிஞ்சியின் குரலில் திரும்பியவள் “அதெல்லாம் வேணாம் யாழி நரேன் நாளைக்கு போலாம்னு சொல்லிருக்கான், நாம நாளைக்கே எல்லார் கூடவும் சேர்ந்துபோலாம்” என்க அவளோ விடாப்பிடியாக நின்றாள்

 

“ப்ளீஸ்! ரேவ்ஸ்” என்க முகேஷோ “அதனாலென்ன ரேவதி இன்னைக்கு சும்மா ஒரு பத்து நிமிஷம் போயிட்டு வரலாம், நான் வேணா கூட்டு போறேன்” என்றான்.

 

முதலில் விருப்பமில்லை என்றாலும் குறிஞ்சி இவ்வளவு ஆசையாய் கேட்கும்பொழுது சரியென்று தோன்றிவிட ரேவதியும் சம்மதித்தாள்.

“நரேந்திரன் எங்க?” என்றவனின் கேள்விக்கு  “அவன் வெளிய போயிருக்கான்” என்ற பதிலே கிடைக்க  அவன் எண்ணிற்கு முயன்று பார்த்தான்.

 

அதற்கும் பலனில்லாமல் போக “சரி நாம கிளம்பலாம்” என்று அவர்களை அழைத்துச் சென்றான்.

 

தேவேந்திரன் கொடுத்த வேலைகளைக் கவனிக்க வென்று வெளியே வந்திருந்தவன் அந்த கடையின் நெரிசலில்  சிக்கியிருந்தான்.

 

ஒருவழியாக வேண்டியவற்றை வாங்கி கொண்டு  வெளியே வந்தவன் ஃபோனை  எடுக்க அதிலோ முகேஷிடமிருந்தும் அவன் அன்னை சத்யபாமாவிடமிருந்தும் பல அழைப்புகள் வந்திருந்தன.

 

மறுபடியும் அன்னையிடமிருந்து அழைப்பு வர அதை எடுத்தவனுக்கோ ஏனென்று தெரியாமல் உள்ளுக்குள் ஒருவித பதட்டம்.

“எங்க இருக்க நீ?” என்றவரின் கேள்விக்கு

 

“கடைக்கு வந்தேன்மா, நீங்க வந்தாச்சா?” என்று வினவினான்.

 

“ஆமாகண்ணா இப்போதான் வந்தோம்”

 

“இதோ வந்திடறேன்மா!”என்றவன் வண்டியை நோக்கி விரைந்தான்.

அவ்வளவு நேரம் இல்லாத பதற்றம் ஒன்று அவனை ஒட்டிக் கொண்டது!  ஏதோ சரியில்லை! எதுவோ நடக்கப் போகிறது என்று அவன் மனம் சொல்லிக் கொண்டிருக்க அவனுக்கோ நேரமாக ஆகப் பதற்றம் கூடிக்கொண்டே போனதே தவிரக் குறையவில்லை.

 

வீட்டு வாசலை அடையவும் வண்டியிலிருந்து சாவியைக்கூட எடுக்காமல் அப்படியே விட்டவன் வீட்டினுள்ளே விரைந்தான்.

உள்ளே நுழைந்தவனின் கண்கள் அலைபாய்ந்தன, அவன் கண்களில் அவள் படாமல் போக அங்கு வந்த வளர்மதியிடம் விரைந்தவன் 

 

“சித்தி யாழி எங்க?” என்றான்  “அவ ரேவதி முகேஷெல்லாம் வெளிய போயிருக்கதா பேச்சி சொன்னா, ஏன் எதாவது பிரச்சனையா  நரேன்?” என்று கேட்டவரிடம் தலையை ஆட்டியவன் வாசலில் கேட்ட வண்டி சத்தத்தில் வெளியே விரைந்தான்.

 

முகேஷ் கையில் ஒரு ஃபையிலுடன் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருக்க  அவனிடம் விரைந்தவனோ “யாழியும் ரேவதியும் உன்கூட இருக்கதா சித்தி சொன்னாங்க!” என்றான் கேள்வியாக

 

“ஆமா மாப்ள! ஆத்தங்கறைக்கு போனும்னு சொன்னாங்க அதான் கூட்டு போனேன், இப்போ மாமா இந்த ஃபைல் வேணும்னு ஃபோன்  போட்டாக, அதான் வந்தேன்” என்க அங்கு நரேந்திரனுக்கோ பீபி எகிறியிருந்தது.

 

“அறிவுக் கெட்டவனே! அவ கேட்டா, கூட்டு போயிருவீயா? அவதான் சின்ன பிள்ள கேக்கறா, உனக்கு எங்க போச்சு? தனியா விட்டு வந்திருக்க?” என்று அவன் சட்டையைப் பிடிக்காத குறையாக அவன் கத்திய கத்தலில்  சத்யா என்னவோ ஏதோ என்று பதறி வெளியே வந்தார்.

 

ஆத்தங்கறைக்கு கூட்டுபோனதுக்கு இவன் ஏன் இப்படி கத்தறான? என்று புரியாமல் நின்று கொண்டிருந்த முகேஷை கொலைவெறியுடன் பார்த்தவன் விருட்டென வெளியேறியிருந்தான்.

 

 அவனது கத்தலில் பதறியவர்களாக அனைவரும் உறைந்து நிற்க அவனோ வண்டியை எடுத்துக் கொண்டு பறந்திருந்தான்.

 

பத்து நிமிடத்தில் சென்றுவிடும் இடத்திற்கு அவன் ஓட்டிய வேகத்தில் ஐந்து நிமிடத்திலேயே அங்கிருந்தான்.  

 

அந்த ஐந்து நிமிடமும் அவன் உள்ளம் பதறியதும் பயந்ததும் அவன் பட்டபாடு அவனுக்குத்தான் தெரியும்!

 வண்டியை அப்படியே ஓரிடத்தில் விட்டவன் பயமும் பதற்றமும் போட்டிப்போட இறங்கி ஓடினான்.

 

அங்கு அவன் கண்ட காட்சி!  அவனது பயம் சரியென்பதுபோல்,

அவன் சர்வமும் அடங்கியது.