O Crazy Minnal(31)

thumbnail_large-0c6e6ccc

31

வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து ஏதோ நெருடலாகவே இருந்தது, ஆனால் தேவேந்திரன் முக்கியம் என்று தன்னிடம் கொடுத்திருக்கும் வேலைகளை விட்டுவிடவும் மனமில்லாமல் போகவே அவன் கிளம்பியிருந்தான்.

 

ஆனால் ஏனோ நேரம் கடந்ததே தவிர அவனது பதற்றம் குறையாமல் கூடியது! கூடவே இலவசமாகப் பய உணர்வும்.

 

ஏதோ ஒன்று தவறாக நடக்கவிருக்கிறது என்று அவன் மனம் அடித்துக் கூற மனதில் அதற்கு மேலும் எதையும் போட்டு யோசித்து நேரத்தை வீணாக்க அவன் தயாராய் இல்லை.

 

வீட்டில் அவளும் ரேவதியும் இல்லை என்ற மறுகணம் அவன் பொறுமை பறந்திருந்தது.

முழு கவனத்துடன் வண்டியோட்டுபவனின் கவனம்  அன்று அடிக்கடி சிதறியது.

ஆற்றங்கரையை நெருங்கிய மறுநொடி வண்டியை அப்படியே விட்டவன் இறங்கி ஓடினான்.

 

அங்கு அவன் கண்ட காட்சி! அவன் பயமும் பதற்றமும் சரியென்பதுபோல, அவன் உயிர் உறைய வைத்த காட்சி!

 

இழுத்துச் செல்லும் ஆற்றில், இரு பாறைகளுக்கு நடுவே இடது  கால் சிக்கியிருக்க வலது காலை முடிந்தளவு முன்னே வைத்தவள், கைகளை நீட்டியபடி முன்னேறினாள்.  சேலை ஒன்றின் ஒரு பக்க முனையை  அவள் இடுப்பைச் சுற்றிக் கட்டியிருக்க மறுமுனை அவளிடம் இருந்து சற்று தள்ளி பாறையொன்றில் நின்றிருந்த ரேவதியின் பிடியிலிருந்தது.

 

அவளுக்கு எதிரே மூன்று வயதுக் குழந்தை ஒன்று இரு பாறைகளின் நடுவில்  மாட்டி கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில்  ஆற்று நீரின் வேகத்தில் பிள்ளை பாறையின் இடுக்கில் இருந்து வெளியே வந்துவிடும். அப்படி வந்துவிட்டால், அதன்பின்  நிலைமை மோசமாகிவிடக்கூடும்!

 

கண்கள் அலைபாய  ஓடி வந்தவனின் செவியில் அழுகுரலும் அதை தொடர்ந்த எச்சரிக்கை குரல்களும் கேட்க அவன் திரும்பிய திசையில் அவள் நின்ற காட்சி, அவளது இடது கால் பாறையிலிருந்து விடுபட கைகளை நீட்டியபடி முன்னேறியவளோ ஒரு நொடி பாறையின்மேல் விழப்போக ரேவதி பிடியை இறுக்கியிருந்தாள்.

 

நூலிலையில் உயிர் தப்பித்திருந்தாள்.

கைகளை நீட்டியவாறு முன்னேறியவள் குழந்தையின் அருகில் வந்தவுடன் மாட்டியிருந்த கொலுசைப் பிடித்திழுக்க அது அவள் கையை பதம் பார்த்தாலும் அதிகம் சோதிக்காமல் வந்துவிட்டது.

 

ரேவதி கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாய்  சேலையைப் பிடித்திழுக்கக்  குழந்தையை மார்போடு சேர்த்தணைத்திருந்தவள் தாயிடம் ஒப்படைத்த மறுகணம் மேலே ஏறியிருந்தாள். 

 

அவள் பின்னே அவசர அவசரமாய் ரேவதியும்.

குறிஞ்சி மேலே ஏறி இரண்டெட்டு எடுத்து வைத்திருப்பாள், அதற்குள் அவள் முன் மூச்சுவாங்க ஓடிவந்த உருவமொன்று கிட்டத்தட்ட அவளை இடிப்பதுபோல் வந்து நிற்க  அவள் அதிர்ந்து நோக்க அவனோ சற்றும் யோசியாமல் கையை ஓங்கியிருந்தான்.

 

அவள் விழி பார்வையில் என்ன கண்டானோ  மறுகணமே ஓங்கிய கையை கீழே போட்டவன் அவளை இறுக அணைத்திருந்தான். அவள் எலும்புகள் அத்தனையும் நொறுங்கும் அளவு!

 

அவள் பின்னால் வந்த ரேவதியோ நரேந்திரனைச் சற்றும் எதிர் பார்த்திருக்கவில்லை. அவன் ஓடிவந்த விதமும், அவளிடம் கை ஓங்கியதும் பின் அவளை இறுக்கி அணைத்திருப்பதும், அவளை அதிர்ச்சிக்குள்ளாக்க அவளது பார்வை கூர்மையானது.

 

அவள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாள், அதுவும் தன் பிடியிற்குள்தான் நிற்கிறாள் என்பதை உறுதி படுத்திக் கொள்பவனைப் போல இறுகியிருந்த அவனது அணைப்பும், சிவந்திருந்த முகமும், துடித்துக் கொண்டிருந்த இதழ்களும், யாரையும் பார்க்க விரும்பாததுபோல இறுக மூடியிருந்த விழிகளும், அவளுக்கு வேறெதையோ உணர்த்தின.

மெல்ல அணைப்பைத் தளர்த்தியவன், கண்களை திறந்த அடுத்த கணமே எந்த வேகத்தில் அணைத்தானோ அதே வேகத்தில் அவள் தோள்களை பற்றியவன் தள்ளி நிறுத்தியிருந்தான்.

 

“அறிவிருக்கா உனக்கு? பைத்தியக்காரி பைத்தியக்காரி! மேல் மாடிய என்ன பெங்களூர்லயே விட்டு வந்திட்டியா?” என்று பொரிந்து தள்ளிய நரேந்திரன்  ரேவதிக்கு புதியவன்! குறிஞ்சி எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை. அவ்வளவு திட்டியும் தலை குனிந்து நிற்கும் குறிஞ்சியைக் கண்டவனுக்கு மனமோ ஆறவேயில்லை. என்ன காரியம் செய்துவிட்டாள் என்று.

 

அவள் கையை பற்றி  இழுத்துச் சென்றவன் ரேவதியை ஒரு பார்வை பார்க்க அவளும் மறு வார்த்தையின்றி வண்டியிலேறினாள்.

வீடு வந்து சேரும்வரை யாரும்  ஒரு வார்த்தை பேசவில்லை.

மூவரும் அவரவர் உலகத்தில், ஏதேதோ சிந்தனைகளுடன்.

காரை நிறுத்தியவனின் முகத்தில் எரிமலையின் வெப்பம்!

தன் இருக்கையில் இருந்து இறங்கியவன் அவன் பக்க கதவை அடைத்துச் சாத்த, அந்த வேகத்தில் நிகழ்காலத்திற்கு வந்த ரேவதி கீழே இறங்கினாள் என்றாள் குறிஞ்சியோ ஏதோ யோசனையில்.

 

இறங்கியவன் நேராக இவள் பக்கம் வந்து கதவைத் திறக்க கீழே இறங்கியவளின் கையை பற்றியவன் தரதரவென இழுத்துச் செல்வதைப்போல இருந்தது அவன் அவள் கையை பற்றி அழைத்துச் சென்ற விதம்.

 

அவன் அவளை இழுத்து  வந்த விதத்தில் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில்.

எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் பொறுமை இழக்காமல் கையாளும் நரேந்திரன் பொறுமையின்றி கத்திவிட்டுச் செல்லவும் எல்லோரும் என்னவோ ஏதோவென்று பயந்து அவன் ஃபோனுக்கு  அழைக்க   அதுவோ எடுக்க படவேயில்லை! 

 

வேறு வழியின்றி  அனைவரும் அவனுக்காக  ஹாலிலேயே அமர்ந்துவிட்டனர்.

தேவேந்திரனும் எவ்வளவோ முயன்றும் அவன் அழைப்பை ஏற்காததால் மருதை அழைத்து என்னவென்று பார்க்குமாறு சொல்லிக் கொண்டிருக்க அது அவசியமில்லை என்பதுபோல வாசலில் அந்த  கார் சத்தம்.

 

அனைவரும் வந்துவிட்டான் என்று நிம்மதியடைய இன்னும் இல்லை என்பதைப்போல அவன் குறிஞ்சியின் கைபற்றி இழுத்து வரவும் ஒருநொடி அனைவரும் அதிர்ந்தனர்.

 

“இந்திரா.. நான் சொல்றத கொஞ்சம் கேளு!” என்ற ரேவதியின் வார்த்தைகள் அவன் செவிப்பறையைத் தீண்டக்கூட இல்லை. ஹாலிலேயே எல்லாரும் அமர்ந்திருக்க அதுவரை பற்றியிருந்த அவளது கரத்தை அப்பொழுதுதான் விடுவித்தான். ஏதோ இனி அவள் பாதுகாப்பாய் இருப்பாள் என்பதுபோல.

 

“என்னாச்சு கண்ணா? என்னாச்சு நரேன்?” என்று மற்றவர்கள் அனைவரும் அவனிடம் கேட்க, கோபத்தில் சிவந்திருந்த அவன் முகமே அதற்குப் பதிலாய்.

 

அவனிடம் கேட்டும் பயனில்லை என்பதை உணர்ந்தவர்களாகக் குறிஞ்சியைக் காண அவளோ அங்கு நின்ற எவரையும் ஏரெடுத்தும் பார்க்காமல் தரையை வெறித்தபடி நின்றாள். 

ரேவதியை அனைவரும் கேள்வியாய் நோக்க வேறுவழியின்றி தொண்டையை செறுமியவள்  தொடங்கினாள் முதலில் இருந்து ஒவ்வொன்றாக,

 

“அது.. ஆத்தங்கரைல..” என்றவள் எப்படி சொல்வதென்று புரியாமல் விழிக்க வளர்மதியின் “ரேவதி!” என்ற அதட்டலில்  அத்தனையையும் கொட்டியிருந்தாள்.

 

“வெளியூர்காரங்க போல.. அவங்களுக்கு உள்ள தள்ளியிருக்க எடத்த பத்தி தெரியல.. மூனு வயசு கொழந்த ஒன்னு” என்றவளின் வார்த்தையில் அனைவரின் இதயமும் ஒரு நொடி நின்று துடித்தது! மூன்று வயது பிள்ளையா? என்ற அதிர்ச்சியில். 

 

“சத்தம் கேட்டுதான் அந்த பக்கம் போனோம்.. பாறைக்கு நடுவுல  பிள்ளையோட கால் மாட்டிருச்சு, யாழிதான் காப்பாத்துனா..” என்று அவள் முடித்த பின்பே மற்றவர்களுக்குப்  புரிந்தது நரேந்திரனின் கோபம்.

 

அது சற்று ஆபத்தான பகுதி. பொதுவாக அந்த பக்கம் யாரும் செல்ல மாட்டார்கள். அங்கு நீர்வரத்து அதிகமாய் இருக்கும் காரணத்தால் சுலபத்தில் ஆட்களை இழுத்துச் சென்றுவிடும். அப்படி இழுத்து செல்லப்பட்டவர்களில் பாதி இன்று இல்லை. எவ்வளவு நன்றாக நீந்தத் தெரிந்தவர்களாக இருந்தாலும் அந்த நீரின் வேகத்தில் தடுமாறித்தான் போவர்.

 

அப்படியிருக்கையில் நேற்று வந்த இவள்?

 

ஒருபக்கம் குறிஞ்சியின் துணிச்சலை நினைத்து அவளைப் பாராட்டுவதா? இல்லை எப்பேர்ப்பட்ட ஆபத்தில் சிக்கியிருக்கிறாள்  என்று கடிவதா என்று புரியாத நிலை.

 

 நரேந்திரன் இன்னும் தன்னிலையில் இல்லாமல் வெடித்துச் சிதறும் கோபத்தை அடக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் லேசாக அவன் தோளில் தட்ட அவனோ பொரிந்து தள்ளினான்.

 

“இல்ல தாத்தா! இவ பண்ண காரியத்துக்கு.. மனசுல பெரிய ஆக்ஷன் ஹீரோயின்னு  நினைப்பு!  கொஞ்சம் ஸ்லிப்பாகியிருந்தாலும் என்னவாகிருக்கும்?” என்றவனுக்கு அதற்கு மேல் யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

அவன் முகம் கசங்குவதைக் கண்ட வளர்மதி அவனைச் சமாதானம் செய்யும் பொருட்டு அவனிடம் பொறுமையாக எடுத்துரைத்தார்.

 

“எதுவும் ஆகலையே! துணிச்சலா ஒரு உயிர காப்பாத்தியிருக்கானு நினைச்சுப்போம்”

 

“துணிச்சலா? அசட்டு துணிச்சல் சித்தி! அறிவிருக்கற யாராவது இப்படி யோசிக்காம இறங்குவாங்களா?” என்று காய 

 

“ஏன் நரேன் நீ இறங்கிருக்க மாட்டியா?” என்று வினவினார் வசுமதி.

 

அதற்கு அவனிடம் பதிலில்லை. எப்படி இல்லையென்பான்? அவனாய் இருந்தாலும் உதவியிருப்பான்தான். ஆனால் அவளை அந்த நிலையில்  கண்டவனுக்கு எந்த ஆறுதலையும்  அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை! 

அது என்ன எதிர்பார்க்கிறது என்றும் புரியவில்லை.

 

அமைதியானான். இப்படி அனைவரும் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்க அனைவரையும் மௌனிக்க வைத்தது அந்த கணீர் குரல்.

 

“இப்ப அவ என்ன பண்ணிட்டான்னு எல்லாரும் இவ்வளவு பேசறீய? ரெண்டு உசுர காப்பாத்திருக்கா! அந்த பிள்ளையோட அம்மாவையும் சேர்த்துதான் சொல்லுதேன்!” என்றவர் எல்லோரின் ஆச்சரிய பார்வையையும் தவிர்த்து  அங்கு நின்ற பேச்சியிடம் வெந்நீரும், பின் குடிக்கச்  சூடாக ஏதாவதும் கொண்டு வருமாறு பணித்தவர் பின் விமலாவிடம்

 

“அந்த துண்ட கொஞ்சம் எடுத்துட்டுவாத்தா!” என்றுவிட்டு  குறிஞ்சியின் கையை பற்றி அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு நொடி அந்த வீடே நிசப்தத்தில் மூழ்கியது.

அத்தனை காலம் எதிலும் பங்கெடுக்காமல், எவரிடமும் முகங்கொடுத்துப் பேசாமல் எல்லாரையும் ஒதுக்கியவராக இருந்த செல்வியா இன்று அதே கணீர் குரலில் பேசியது?

 

அத்தனை நேரம் தரையை வெறித்துக் கொண்டு நின்ற குறிஞ்சியோ அந்த புது குரலில் அதிர்ந்து நிமிர்ந்தாள் என்றால், அடுத்த அதிர்ச்சியாக அவள் கரம் பற்றி அழைத்துச் சென்றார் செல்வி.

 பதிலேதுமின்றி அமைதியாய் அவள் அவரை தொடர்ந்தாள்.

அனைவரும் ஆச்சரியத்தில் நின்று கொண்டிருக்க அங்கிருந்து வேக நடையுடன் வெளியேறினான் நரேந்திரன்.

அவன் பின்னால் ரேவதியும், முகேஷும்.

 

குறிஞ்சியை அவள் அறைக்கு அழைத்து வந்த செல்வி அவளைக் கட்டிலில் அமர்த்திவிட்டு அங்குக் கிடந்த சின்ன மோடா ஒன்றை இழுத்து அவள்  காலடியில் போட்டவர்  அதில் அமர்ந்து கொண்டு அவள் கால்களை ஆராய்ந்தார்.

பாறையின் இடுக்கில் சிக்கியிருந்த இடது கால் கன்றிச் சிவந்திருந்தது.

வலது கரத்தின்  உள்ளங்கையில் ரத்தம் கசிந்திருந்தது.

மருந்துகளனைத்தையும்  வைக்கும் பெட்டியை அவர் தேடிக் கொண்டிருந்தார் என்றால், அவள் மனமோ அங்கு உழன்று கொண்டிருந்தது.

 

குளிர்ந்த நீரால் காயங்களை  சுத்தப்படுத்தியவர்  மருந்தைக் காலில் தடவ அந்த வலியில் அவள் கால் அசைக்கவும் அவள் முகத்தை நிமிர்ந்து நோக்கினார்.

வலியில் அவள் கண்கள் இரண்டும் கலங்கியிருக்கப்  பல்லைக் கடித்தவாறு வலியை பொறுத்துக் கொண்டிருந்தாள்.

 

கண்கள் கலங்கியிருந்தன, ஆனால் ஒரு சொட்டு  கண்ணீர் கூட வெளியே வரவில்லை.

‘அழுத்தக்காரிதான்!’ என்று மனதினுள்  வியந்தவர்  வெளியே மருந்திட்டவாறு

 

“எப்பவும் வாய் ஓயாம பேசிட்டே இருப்ப.. இப்போ என்னாச்சு?” என்றார் கேள்வியாக.

 

“நீங்க பேசவே மாட்டீங்க” என்றவளின் குரலில் இருந்தது என்னவென்று புரிய அமைதி காத்தார்.

 “ஆச்சி…” என்றவள் மெதுவாய் ஆரம்பிக்க அவள் காலில் இருந்து கண்ணை உயர்த்தாமல் ‘ம்ம்ம்…’ என்றார்.

 

“ஒன்னு கேட்கவா?” என்றவளின் கேள்வியில் அவளை நிமிர்ந்து பார்த்தவர் 

 

“கேளு!”  என்றுவிட்டுக் குனிந்து கொண்டார்.

 

“யாரும் உங்கள ஒதுக்கல, நீங்களும் யாரையும் வெறுக்கல,  ஆனா எல்லாத்துல இருந்தும் ஒதுங்கியிருக்கீங்க..  ஏன்?” என்றவளின் வாய்மொழியில் செல்வியின் இதயம் ஒரு நிமிடம் தன் துடிப்பை நிறுத்தியது போலானது.

‘எப்படி? எப்படி இவள்  இவ்வளவு சரியாகக் கேட்கிறாள்?’ என்றவர் எண்ண ஓட்டம் இருக்கக் குறிஞ்சியோ அவர் பதிலுக்காய் அவர் முகம் பார்த்து நின்றாள்.

*********************************************************************************************************************

வீட்டிலிருந்து வெளியேறியவன் நேராக சென்று தெருமுனையிலிருந்த பழைய கோவில் ஒன்றின் திட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.

 

அவன் பின்னால் வந்த முகஷை கண்டவனுக்கு கோபம் இன்னும் இன்னும் கூடிக் கொண்டே போனது.

 

முகேஷோ,”மாப்ள.. சொல்றத கொஞ்சம் கேளு” என்றபடி வர அவனிடம் பாய்ந்தான் நரேன்.

 

“என்ன கேக்கனும்? இல்ல என்ன கேக்கனும்ங்கறேன்? நான் பாத்தத நீ பாத்திருந்த தெரிஞ்சிருக்கும்! அவதான் கேக்கறான்னா உங்க ரெண்டு பேருக்கும் எங்க போச்சு?”

 

“ஆத்தங்கறைக்கு போனதுல என்னல தப்ப கண்டுட்ட நீ?” என்ற முகேஷின் குரலில் சலிப்பு.

 

பின்னே போகக் கூடாத இடத்திற்கா அவளை அழைத்துச் சென்றான்? 

 

“உனக்கு விளையாட்டா போச்சுல? இவ்ளோ சலிச்சிக்கற!  ஆத்தங்கறைக்கு போனது தப்பில்ல அந்த இடத்துக்கு போனது தப்பு! அவங்க ரெண்டுபேத்தயும் நீ தனியா விட்டு வந்தல்ல? அதான் தப்பு!”  என்றவனின் குரலில் 

 

“நீ ஏன் ஓவர் ரியாக்ட் செய்ற இந்திரா?” என்று ரேவதி கேள்வியெழுப்ப  அவனுக்கோ அடிபட்ட உணர்வு!

 

‘என்னது நான் ஓவர் ரியாக்ட் செய்றேனா? அவள அந்த நொடி, அந்த இடத்துல பாத்தப்ப  நான் எந்த மாதிரி உணர்ந்தேன்னு எனக்கு மட்டும்தானே தெரியும்! உயிரே போனதுபோல இருந்துச்சே எனக்கு!’  என்றவன் மனம் வருந்திக் கொண்டிருந்தது.

 

அவளது கேள்விக்குப் பதிலில்லாமல் போக, பதில் வரும் என்று எதிர் பார்த்து நின்ற முகேஷோ நரேந்திரனையே சந்தேகமாய் பார்த்தான்.

 

“காதலா ல?” என்ற முகேஷின் சந்தேக கேள்வி  அவனை தாமதமாய் வந்தடைய அதற்குள் ரேவதியோ அவனையே   உற்று நோக்கியவள்,

 

“யாழி யாரு இந்திரா?” என்றாள். அவளது இந்த திடீர் கேள்வியில் அதிர்ந்தவனாக அவன் விழித்தானென்றால்,

 

 “எதையாவது மறைக்கறீயா இந்திரா?” என்றவளின் அடுத்த கேள்வியில் அவன் பேச்சற்று போனான்.