O Crazy Minnal(33)
O Crazy Minnal(33)
33
கட்டிலில் கண்மூடிக் கிடந்தவளின் அருகில் அமர்ந்தவனின் பார்வையோ தன்னால் அவள் காலுக்குச் சென்றது.
இடது காலின் காயத்திற்கு மருந்து வைத்துக் கட்டப்பட்டிருக்க அவளது வலது கையிலும் ஒரு கட்டிருந்தது.
அதைக் கண்டவனின் மனமோ இன்னும் கொதித்துக் கொண்டுதான் இருந்தது.
ஆனால் எல்லாம் அவளின் பிள்ளை முகத்தை காணும்வரைதான், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் அவன், நரேந்திரன்.
அந்த முகத்தினில் எதையோ தேடுவதைப்போல, ஆனால் அவனது தேடலுக்கான முடிவு கிடைக்காமல் போனதுதான் அதிசயம்!
மெல்ல மெல்ல அவளது இடக்கையை தன் கைக்குள் இருத்திக் கொண்டவன் அசந்து உறங்கும் அவளையே ஆழப் பார்த்தான்.
“ஏன்டா இப்படி பண்ற? என்னால தாங்கிக்கவே முடியல” என்று மென்மையாய் பேச ஆரம்பித்தவனின் குரலில் கோப ரேகைகள் நீளத் தொடங்கின.
“அடக்கமாட்டாம கோவம் வந்துச்சு! உன்மேல! வந்த வேகத்துக்கு….” என்றிழுத்தவனோ மீண்டும் அவள் முகத்தினில் பார்வை பதித்தவனாக,
“உன் மூஞ்ச பார்த்தா கோவம் கூட வரமாட்டேங்குது பக்கீ! எனக்கு வந்து வாய்ச்சிருக்கு பாரு, சரியான சொர்ணாக்கா! என் பீபிய ஏத்தி பார்க்கறதே வேலையா போச்சுல?” என்று அவன் முறுக்க அவனை முறுக்கிப் பிழிந்துவிடும் நோக்கில் அவளது கேசம்கூட அவனுக்கு எதிரே சதி செய்தது.
காற்றாடியின் உபயத்தால் கழுத்துவரை வெட்டப்பட்டிருந்த முடி கற்றையாய் அவள் முகத்தினில் விழுந்தது.
அவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தவாறு வீரவசனம் பேசியவனின் கரமோ அவன் அனுமதியின்றியே அவள் கூந்தலை வசதியாய் ஒதுக்கிவிட்டது.
பெரிய பெரிய விழிகளை மூடியிருந்த பட்டாய் இமைகள். அளவாய் அழகாய் வளர்ந்து வளைந்திருந்திருந்த இமைபீலிகளிரண்டும் அவனை மெல்ல மெல்ல வேறொரு உலகிற்கு அழைத்து சென்றது.
மேகக் கூட்டங்களுக்கிடையே அவனும் அவளும், நினைப்பே உள்ளத்தில் தித்தித்தன.
அவர்களிருவரையும் தவிர அங்கு வேறு எவருமில்லை. அந்த நிசப்தத்தில் நிறைந்த அறை, நித்திரையில் மூழ்கியிருந்த அவள். மனதின் எண்ணங்கள் அனைத்தையும் கொட்டிவிட துடிக்கும் அவனுள்ளம்.
தன் கைகளுக்குள் அடங்கியிருந்த அவளது கையிலேயே கவனம் பதித்தவன்,
“எனக்குத் தெரியல இஞ்சிமா.. என் ஃபீலிங்க்ஸ எப்படி எக்ஸ்பரெஸ் பண்றதுனு..
இது காதலா? தெரியலயே! எனக்கு நீ எப்போவும் சந்தோஷமா, நிம்மதியா, சிரிச்சிக்கிட்டே.. அந்த துறுதுறு கண்களோட என்ன வம்பிழுக்கற அந்த குறும்புத்தனத்தோடவே இருக்கனும், என்கூடவே! நான் நினைக்கறது தப்பா? எனக்கு தெரியல, ஆனா இன்னைக்கு ஒன்னு மட்டும் தெரிஞ்சிதுடா.. உனக்கு ஒன்னுன்னா,என்னால யோசிச்சுக்கூட பாக்க முடியல.. பைத்தியம் பிடிச்சா மாதிரி ஆகிருச்சு! “ என்றவன் அவள் காயங்களை ஆராய்ந்தான்.
மருந்து வைத்து கட்டப்பட்டிருந்தது. அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. அவள் காயங்களை கவனித்தவனின் கண்கள் இரண்டும் கலங்கின.
“ஏன்டா இப்படியெல்லாம் பண்ற? உனக்கு எவ்வளோ வலிச்சிருக்கும்? இன்னைக்கு எல்லாரும் உனக்காக பேசும்போது, ஒரு பக்கம் எல்லாரும் உனக்காக பேசுறாங்களேன்னு இருந்தாலும் இன்னொரு பக்கம், என்னால நீ செஞ்சத நெனச்சு பெருமை படவும் முடியல, கோவப்படவும் முடியலடா! இது எந்த மாதிரியான உணர்வு? ப்ளீஸ் இஞ்சி.. இனி இதுபோல பண்ணாதே” என்றவனுக்கோ அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யம்.
எவ்வளவு திடமானவன் அவன். அப்படிப்பட்டவனா இன்று இப்படிப் பதறுகிறான்? என்றெண்ணியவனுக்கோ இதழ்கடையோரம் புன்சிரிப்பொன்று இடம்பிடிக்க
“எனக்கு தெரியல இஞ்சி, இதெல்லாம்தான் காதல்னா…” என்றவன் இதழ் வளைய “உன்கூடவே இருப்பேன், கடைசிவரை, என் தேவதையோட சந்தோஷத்த பாதுகாத்துக்கிட்டே” என்று முதல் முறையாக, அவன் அவனது உள்ளத்தை உள்ளபடி உரைத்தான். இதுவரை மனதினுள் ஏதோ ஒரு ஓரத்தில் இருந்ததை இன்று மனம் முழுக்க பரவிடும் வகையில் ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து சொன்னான்.
அந்த நொடி, அவன் அவனது காதலை உணர்ந்த நொடி! உள்ளுக்குள் ஆயிரம் அதிசயங்கள் நிகழ்ந்த நொடி.
மனம் வேறு மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய் கிடுகிடுக்க அவன் வாசலை நோக்கி ஓரெட்டு எடுத்து வைத்தான், இல்லை வைக்க முயன்றான்.
அவனது சுண்டுவிரல் அவள் பிடியில்!
ஒரு கணம் அதிர்ந்தவன் பின் திரும்ப அவளோ இன்னும் உறக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் அவன் விரலை பிடித்து தன் கைக்குள் வைத்திருந்தாள்.
தாமாகவே புன்சிரிப்பொன்று மலர அவள் கையில் இருந்து அவன் விரலைப் பிரித்தவன் என்ன தோன்றியதோ, அவளின் பிறை நுதலில் தன் காதலின் முதல் அட்சரத்தை
தன் இதழின் மென்மையால் பதித்தான். பதித்தவனுக்கோ உள்ளுக்குள் ஆயிரம் ஆலங்கட்டி மழைகள்!
அவள் தலையை மென்மையாய் கோதியவனின் கவனத்தை அந்த ‘ஹகூனா மடாட்டா’ கலைத்தது.
அழைப்பது யாரென்று பார்த்தவன் அதில் ஜிதேந்திரனின் பெயர் ஒளிர அதை அவள் தூக்கம் கலையாத வண்ணம் சைலண்டிலிட்டவனின் முகமோ யோசனையில் இறுகி பின் திடமாய்.
“உன்னோட சந்தோஷத்துக்காக நான் எந்த எல்லைக்கும் போகத் தயங்க மாட்டேன் இஞ்சி, யார் வந்தாலும்!” என்று அவள் தலையை வருடியவன் அங்கிருந்து அகன்றான். ************************************************************************************************************************
ஆறாம் நாள்.
கதிரவனின் கரங்கள் அவள் முகத்தினை மூடிக்கொள்ளக் கூசிய கண்களைக் கசக்க சோம்பல் முறித்தவாறு எழுந்தவளின் முன் மணக்கும் காபி ஒன்று வீற்றிருந்தது.
கண்களைக் கசக்கியவள் ரேவதியைத் தேட, நீர் விழும் சத்தம் அவள் குளியலறையில் இருப்பதை உணர்த்தின.
‘இந்த காபி யாருக்கு? நமக்குதானா இல்ல ரேவ்ஸோடதா?’ என்ற யோசனையில் அவள் இருக்க அவள் யோசனையைக் கலைத்தது அவன் குரல்.
“யோசிக்கவே வேணாம் அது உன் காபிதான்!” என்றவனை ஆச்சரிய பார்வை பார்த்தவள்,
“எப்படி?” என்க அவனோ
“அதான் நீ காபிய வெறிச்சு வெறிச்சு பார்த்ததுலேயே தெரிஞ்சிதே, ஆறுரதுக்குள்ள குடி!” என்றவன் அந்த டபரா செட்டை கையிலெடுத்து ஒரு ஆத்து ஆத்தி நுரை ததும்பக் கொடுத்தான்.
அவள் கண்களில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் சண்டையிடுவதைக் கண்டவனாக,
“ஏன் இவ்வளோ ஷாக்?”
“இல்ல, அப்பூவும் இப்படிதான் எனக்கு கொடுக்கும்போது ஒரு வாட்டி ஆத்தி குடுப்பாங்க. நீ எப்படி அதே மாதிரி செய்ற?” என்றாள் ஆர்வமாய்.
தோள்களை குலுக்கியவன், ”இப்படி பண்ணா குடிக்கும்போது நல்லாருக்கும் இஞ்சி…”
“அதான் நீ எப்படி?”
“தெரியல, ஆமா இதுதான் எழுந்துக்கற நேரமா மேடம்?” என்று பேச்சின் திசையை மாற்றிவிட்டான்.
“தெரியல நரி, ரொம்ப டயர்டா இருக்கு அதான் ரொம்ப தூங்கிட்டேன்போல” என்றாள் யோசனையாய்.
“நான் சும்மா சொன்னேன் இஞ்சி, இன்னைக்கு ஃபுல்லா நீ ரெஸ்ட் தான் எடுத்தாகனும்” என்க அதில் பதறியவளாக குறிஞ்சியோ
“என்னது? இன்னைக்கு ஃபுல்லாவா?” என்றாள் அதிர்ச்சியாய்
“ம்ம் ஆமா! ஃபுல்லா!”
“ஹயோ! போரடிக்கும் நரி, அத ஹாஃப் டே வா ஆக்கிக்க கூடாதா?”
“நோ வே! இன்னைக்கு ஃபுல் டே உனக்கு ரெஸ்ட்! இந்த கண்ணுல இன்னும் அந்த ஒளிவரல, வர வரைக்கும்” என்றவன் சொல்லி கொண்டேபோக அவளோ
“ஒளி வரலன்னா ட்யூப்லைட்ட வாங்கி மாட்டு! என்ன ஏன் இப்படி படுத்தற?” என்று கடுப்பாய் மொழிந்தாள்.
கோபத்தில் சிடுசிடுவென எரிந்து விழுந்தவளைக் கண்டவனுக்கோ சிரிப்பு முட்டிக் கொண்டுவர, அதை அடக்கும் முயற்சியில் அவன்.
நல்ல வேளை! அவனைக் காக்க வந்தவளைப் போல குளியலறையில் இருந்து வெளியேறினாள் ரேவதி. குறிஞ்சியின் கடுகடு முகத்தையும், நரேந்திரன் சிரிப்பை அடக்குவதையும் கண்டு கொண்டவளாக,
“காலைலயே ஆரம்பிச்சிட்டீங்களா?” என்றபடி வந்தாள்.
“இங்க பாரு ரேவ்ஸ்! ஒரு நாள் ஃபுல்லா ரெஸ்ட் எடுக்கனுமாம், இது என்ன அநியாயம்?” என்று அவள் ரேவதியிடம் முறையிட்டாள்.
“இதுல என்ன யாழி அநியாயம்?”
“எனக்கு போரடிக்கும்ல, நானும் பாவம்ல” என்றாள் பச்சைப் பிள்ளையைப்போல முகத்தை வைத்துக் கொண்டு.
அவளை இடை மறித்தவனாக,
“அதெல்லாம் ஒன்னும் போரடிக்காது! நானும் ரேவதியும் இங்கதான் இருப்போம். அப்புறம் சாயந்தரமா கார்த்தியும் வந்துருவா!” என்றான் சமாதானமாக.
வாசலில் ‘டொக் டொக்’ என்ற சத்தம் கேட்க மூவரும் தங்களது கவனத்தை வாசலுக்குக் கொண்டு சென்றனர்.
வாசலில் நின்று கொண்டிருந்தது சாட்சாத் வளர்மதியேதான். அவரைத் தொடர்ந்து பேச்சியும். இருவரின் கைகளிலும் உணவுப் பாத்திரங்கள்.
பாத்திரங்களை அங்கிருந்த மேசையின்மேல் வைத்தவர் காயங்களை ஆராய்ந்தவராக நலம் விசாரித்தார்.
காலில் இருந்த கட்டை கழட்டியவர்,” இது சரியாகிடுச்சு குறிஞ்சிமா, லேசா வலி இருக்கும் ரெண்டு நாளுக்கு” என்றவர் அவளுக்குப் பரிமாறுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
“குறிஞ்சிமா! போய் பல்ல விளக்கிட்டு வா சாப்பிடலாம், ரேவதி நரேன் நீங்களும் கீழ போங்க நேரமாச்சு. அப்புறம் ஆச்சி வைய்யும்!” என்று வேலையில் மும்முரமானார்.
குறிஞ்சியின் சங்கடப் பார்வையை உணர்ந்தவன் அவரைத் தடுத்தவனாக,” நீங்களும் சாப்பிடலதானே? அவளும் இப்போதான் எழுந்துருக்கா சித்தி”
கீழே விமலா வளர்மதியை அழைக்கும் குரல் கேட்க “ நீங்க போங்க சித்தி நாங்க பாத்துக்கறோம்” என்று அவரை அந்த அறையிலிருந்து கடத்தும் முயற்சியில் அவன்.
கீழே அவருக்குக் காத்திருக்கும் வேலைகளை உணர்ந்தவர் அவன் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறவும் சரியென்று சென்றுவிட்டார்.
பின்னே பல வருடங்களுக்குப் பின் அவர்கள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் இரண்டு நாட்களில் வருவதாக இருக்கப் பெண்கள் அனைவரும் கால்களில் சக்கரத்தை கட்டியதைப்போலே ஓடிக் கொண்டிருந்தனர்.
“என்ன மேடம் பல் விளக்கற ஐடியாவே இல்லையா?“ என்றவன் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவளை பார்த்து வினவ
“ஈஈஈ” என்று அசடு வழிய எழுந்தவள் நறுக்கென்று அவன் கையில் கிள்ளிவிட்டு குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.
‘சொர்ணாக்கா!’ என்று முணுமுணுத்தவன் கைகளைத் தேய்த்தவாறே நிமிர அவனிடம் ஒற்றை புருவம் உயர்த்தி ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி.
“அப்போ முடிவெடுத்துட்ட?” என்றவளின் கேள்வியில் இருந்ததென்ன? கேலியா? இல்லை உண்மையிலேயே அறிந்துக் கொள்ளத்தான் கேட்கிறாளா? என்பது புரியாமல் போக முதலில் அவளிடம் என்ன சொல்வது என்று புரியாமல் நின்றவன் பின்
“யெஸ்ஸ்ஸ்!“ என்றான் கண்கள் மின்ன
அவனது பாவனையில் பக்கென அவள் சிரித்துவிட
“ஓய்! ஏன் இப்போ சிரிக்கற?” என்றான் அதட்டலாய்.
“ம்ம்.. இது எனக்கு மொதல்லையே தெரியும்! என் அறிவாளி அண்ணா!”என்றாள் அவன் கன்னத்தைக் கிள்ளி கிண்டலாக.
ஒரு கையால் அவள் கிள்ளிய இடத்தை தேய்த்துவிட்டவன்,”எப்படி?” என்றான் அதிர்ச்சியாக.
“ம்ம் அதெல்லாம் அப்படிதான் கம்பனி ரகசியம்! வெளிய சொல்ல முடியாது ப்ரோ!” என்றவள் அங்கிருந்து வெளியேற
“ஓய் எங்க ஓடற நீ?” என்றவனின் கேள்விக்கோ
“அடேங்கப்பா! அவகூட பேசனும்னுதானே அம்மாவ அனுப்பின?”
“ச்சே ச்சே அப்படியெல்லாம்”
“டேய் அண்ணா! நீ யாருனு எனக்கு தெரியும் நான் யாருனு உனக்குத் தெரியும்…”
“ரேவதி” என்றவனின் குரலில் விளையாட்டைக் கைவிட்டவள்
“சீரியஸா சொல்றேன் இந்திரா, அவ கிட்ட சொல்லிட்டியா?”
“இல்ல”
“ஏன்?”
“அவ நம்மள நம்பி வந்துருக்கா ரேவதி“ என்றவன் இழுக்கத் தலையில் கைவைத்தவள்
“அடேய் இந்திரா! இம்புட்டு நல்லவனாய்யா நீ? நாடு தாங்காது ப்ரோ!” என்றவள் கதவு திறக்கும் சத்தம் கேட்க ரகசியமாய் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்
“அதெல்லாம் உன்னிஷ்டம்! யாழிக்கு தெரிஞ்சா, என்னையும் சேர்த்து செஞ்சிருவா! நான் கீழ போறேன்” என்றவள் குறிஞ்சியிடம் சாப்பிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.
“நீ சாப்பிட போல?” என்றவள் நரேந்திரனைப் பார்த்து வினவ
சிந்தனை வலை அறுபட்டவனாக நிமிர்ந்தவன் “இல்ல நான் அப்புறமா
சாப்பிட்டுக்குவேன்” என்றவன் பின் நினைவு வந்தவனாக
“சரி நீ வா! சாப்பிடு” என்றவாறு பரிமாறினான்.
“அடேங்கப்பா! பெரிய ஆளுலாம் பரிமாறுராங்கப்பா!” என்றாள் போலி வியப்புடன்.
“யாரு நான் பெரிய ஆளா?”
“இல்லையா பின்ன? ஆமாம் இன்னேரத்துல அய்யா வீட்டுல இருக்க மாட்டீங்களே! இன்னைக்கு என்னாச்சு?”
அவளின் கேள்விக்குச் சின்னதாய் சிரித்தவன் தட்டை அவளிடம் நீட்டினான்.
“ஸ்பூன்?” என்றவளின் கேள்வியில் அவள் வலக்கரத்தை கவனித்தவன் வளர்மதி வைத்துச் சென்றதில் தேட, அதில் இருந்து ஒன்றை எடுத்தவன் கைநீட்டியவளிடம் அதைக் கொடுக்காமல் பதிலுக்கு அவனும் கையை மட்டும் நீட்டினான்.
என்னவென்பதுபோல் அவள் கேள்வியாய் அவனை நோக்கினாள்.
“தட்டு”
எதற்காகக் கேட்கிறான் என்று புரியாமல் அவள் பார்க்க அவனோ அவளுக்கு எதிரே அமர்ந்து கொண்டு ஸ்பூனைக் கொண்டு தட்டிலிருந்தவற்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“நான் என்ன பாப்பாவா? ஊட்டிவிட?”
“ம்ம் இப்போ பாப்பாதான்! அந்த கைய வச்சிக்கிட்டு எப்படி எடுப்ப?”
“அதுக்காக நீ ஊட்டனுமா?” என்றவளின் கேள்வியில் நிமிர்ந்தவன் அவள் கண்களைப் பார்த்து
“ஏன் மாமா ஊட்டமாட்டாங்களா? அப்படி நினைச்சுக்கோ!” என்றவன் தன் வேலையில் கவனமானான். அவளின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்தும் தட்டில் கவனம் பதித்தவனாக ஊட்டினான்.
அவனை பொருத்தமட்டில் அவன் அவளை நேசிக்கிறான். அது ஒன்று போதும் அவனுக்கு! அவளிடம் அன்புகொள்ள.
அவள் அவனை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அவளுக்கான அவனது அன்பு என்றும் மாறப் போவதில்லை! என்றிருந்தாலும் எதுவாகயிருந்தாலும், அவள் என் தேவதையே! என்ற மனநிலையில் அவன்.
இவனுக்கு என்னவாயிற்று? என்ற குழப்பத்தில் அவள்.
அந்த அமைதியின் கனத்தைத் தாங்காதவனாக அவனே பேச்சை ஆரம்பித்தான்.
“ஆறு நாள்கூட முடியல, அதுக்குள்ள அத்தனைபேரும் உனக்கு சப்போர்ட்! கில்லாடிதான் நீ” என்றவன் அவளிடம் இருந்து எதுவும் வராமல் போக நிமிர்ந்தான்.
அமைதியே உருவாய் அமர்ந்திருந்தவளின் கண்களில் கலக்கம்.
“ஹே! என்னாச்சு?”
என்றவனின் கையை பற்றியவள், “நான் யாரையும் என் பக்கம் இழுக்கனும்னோ, இல்ல இம்ப்ரெஸ் பண்ணனும்னோ நினைச்சு எதையும் பண்ணல நரி” என்றவளின் குரலில் கலக்கம் எட்டிப் பார்க்கத் தட்டை கீழே வைத்தவனோ
“ஹே, நான் விளையாட்டுக்கு சொன்னேன்” என்றான் சமாதானமாக.
“நான் நடிக்கல நரி நான் நானாதான் இருந்தேன்!” என்றாள் குரலில் உறுதியும் கண்களில் கலக்கமுமாய்
“எனக்குத் தெரியும்டா!” என்று ஆதரவாய் அவள் தலையை வருடினான்.
அன்று முழுக்க அவன் அங்குதான் இருந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் ரேவதியும் வந்துவிட்டாள். இவர்கள் மூவரும் சேர்ந்து அடித்த கொட்டம் பத்தாது என்பதைப்போலப் பள்ளி சென்றிருந்த கார்த்திகாவும் வீடு திரும்பிவிட அந்த அறை முழுக்க அன்று சிரிப்பு சத்தத்தில் மிதந்தது.
இரவு வெகு நேரமாகியும் இவர்களின் உரையாடல் தொடர, மூத்தவளாய் மாறி அனைவரையும் தூங்க விரட்டினாள் ரேவதி.
அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த நரேந்திரன் கிளம்பும் தறுவாயில் குறிஞ்சியிடம் வந்து, ”உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லனும் இஞ்சி! நாளைக்கு மதியம் பீ ரெடி!” என்று கண்சிமிட்டிச் சென்றான்.
என்னாச்சு இவனுக்கு? என்ற குழம்பியவளுக்கோ அவனது கண்சிமிட்டலுக்கான காரணம் புரிபடாமல் போக, ’சரி போய்தான் பாப்போமே!’ என்று விட்டுவிட்டாள்.
அவன் காதல் மொழி பேசிடக் காத்திருக்க
இவள் புரியா பரபரப்புடன் காத்திருக்க
இதை அனைத்தையும் உடைக்க ஒருவன் காத்திருக்க
இதில் வெல்வது யாரோ? எதுவோ?
நேசமா? வஞ்சமா?