O Crazy Minnal(36)

FB_IMG_1653209111569-f95a000a

O Crazy Minnal(36)

36

எட்டாம் நாள்.

“லூசாடீ  நீ?”

 

“ஓய் என்ன டீ போடற?”

 

“நீ பண்ற காரியத்துக்கு நாலு போடாம விட்டேனேன்னு நினைச்சுக்கோ!” 

என்று அதே மெத்தையில் தனக்கெதிரே அமர்ந்து கொண்டு தன்னை திட்ட வார்த்தைகளைத் தேடி கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தவளைக் கண்ட குறிஞ்சிக்கோ உள்ளுக்குள் சிரிப்பு குமிழிட்டது.

அதை அப்படியே தலை கவிழ்த்து மறைத்தவளின் மனதைப் படித்ததுபோல் ரேவதி,

 

“சிரிக்கிரியா?” என்றாள் சந்தேகமாய்.

நொடிப் பொழுதில் முகபாவத்தை மாற்றியவள் இல்லையென்பதாகத் தலையசைத்தாள்.

 

“அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டிருக்கே! ஒவர் நல்லவளா இருந்தா  உனக்கென்ன அவார்டா குடுக்கப் போறாங்க?” என்ற ரேவதியைக் கண்டவள்

 

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே” என்றாள்

 

“எப்படி?”

 

“நான் நல்லவனு”  என்றவளையே ஓர் நொடி ஆழமாய் பார்த்தவள் ஒரு பெருமூச்சொன்றை வெளியேற்றியவளாக,

 

“யாழி, நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் இவ்வளோ க்ளோஸானதும்.. 

 இல்ல இவ்வளோ கோவப்பட்டதும் இல்ல!” என்றவள் முதலில் பொறுமையாய் தொடங்கி பின் கோபத்தில் முடித்தாள்.

 

“ரேவ்ஸ்”

 

“சும்மா இரு யாழி! யாருக்கு ப்ரூவ் பண்ணபோற இப்போ?”

 

“நான் யாருக்கு ப்ரூவ் பண்ணனும்? நான் எனக்கு தோணுனததான் செஞ்சேன், செய்வேன்” என்றவளின் குரலில் இருந்த அழுத்தத்தில் தன் தவறை உணர்ந்தவள்,

 

“நான் அப்படி சொல்ல வரல” என்றாள் சமாதானமாக

 

“விடு ரேவ்ஸ்” என்ற குறிஞ்சி எழுந்து கொள்ள அவளையே பார்த்திருந்தவளுக்குள்தான் பல எண்ணக் கலவைகள்.

எந்த மாதிரி பெண்ணிவள்? சில நேரம் சின்ன சின்ன சில்லறை விசயங்களுக்கும் சண்டை பிடிக்கிறாள்,

இல்லையென்றால் பெரிய விசயங்களை ‘உஃப்!’ என ஊதித் தள்ளி விடுகிறாள்.

சிறுபிள்ளையாய் சிணுங்கும் இவள்தான் சமயத்தில் முதிர்ந்தவளாய் மாறி முடிவெடுக்கிறாள்.

அடம்பிடிக்கிறாள். விட்டும் கொடுக்கிறாள்.

எப்படிப்பட்டவள் இவள்?

எந்த வகையில் இவளைச் சேர்க்க?  

என்றவளின் சிந்தனையைக் கலைத்தது அதற்கு காரணமானவளின் குரல்.

 

“ரேவ்ஸ்! அவங்க வந்துட்டாங்க போல” என்றவளின் உற்சாகக் குரலில் சிந்தனை கலைந்தவளாக விரைந்தாள் ரேவதி.

 

“ம்ம்ம் வா!” என்றபடி அவள் கீழே இறங்க அவள் கரம் பற்றியவளாகத் தடுத்து நிறுத்தினாள் குறிஞ்சி.

 

என்னவென்பதுபோல் பார்த்தவளின் பார்வையில்,“இன்னும் கோவமா?” என்றாள் கேள்வியாய்.

 

“ஏதாவது ஆகியிருந்தா?” என்ற ரேவதியைக் கண்டவள்

 

“எதுவும் ஆகியிருக்காது ரேவ்ஸ்” என  ரேவதி அவளை  நம்பாமல் பார்த்தாள்

பற்றியிருந்த கரத்தில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தவள்  “அவன் அவளோ மோசமானவனில்ல ரேவ்ஸ்” என்றவள் நம்பு என்பதைப்போலக் கண்களை மூடித் திறந்தாள்.

 

என்ன நினைத்தாளோ எதிரில் நின்றவளிடம் புன்சிரிப்பொன்றை உதிர்த்தவளாக “ம்ம், சரி வா கௌசிய காட்டறேன்!” என்று மாற்றவளின் கையையும் பிடித்து இழுத்தவளாகக் கீழிறங்கினாள் ரேவதி.

வெளி வாசலில் வண்டி வந்து நிற்க மருதுவும் சில ஆட்களுமாகச் சேர்ந்து பெட்டிகளை இறக்கி வைத்தபடி இருந்தனர்.

 

கிட்டத்தட்ட அவ்வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அங்கு தானிருந்தனர். 

எல்லோரும் சாந்தமதியிடம் விசாரித்து கொண்டிருக்க மருதுவிற்கு உதவியவாறு நின்ற கௌசல்யாவிடம் விரைந்தனர் இருவரும்.

 

பின்னிருந்து அவள் கண்களை ரேவதி மூடிக் கொள்ள அதைப் பிரித்தெடுத்தவளாகத் திரும்பியவளோ “ஹே! ரேவதி!” என்றவாறு அணைத்துக் கொள்ள ரேவதியும் புன்னகை முகமாய் “அக்கா!” என்றணைத்தாள்.

 

ரேவதியை அணைத்து விடுவித்தவள் அவளுடன் நிற்கும் புதியவளைக் கண்டு புருவங்கள் கேள்வியாய் வளைந்தாலும் இதழிலோ சிநேனகப் புன்னகையொன்று உதயமானது.

 

அவள் பார்வையை உணர்ந்தவளாக ரேவதி  அவளுக்கு குறிஞ்சியை அறிமுகம் செய்தாள். 

“ஆமா.. சுசீண்ணா எங்க?” என்ற ரேவதியின் கேள்விக்கு 

 

“எங்க ரேவதி, அவனுக்கு வேலை இருக்காம். நாளைக்கு வரேனுட்டான் அப்பாவோட, அதான் நானும் அம்மாவும் மட்டும் வந்தோம்” என்றவள் மருது எல்லா பெட்டிகளையும் எடுத்து வைத்ததை உறுதிபடுத்திக் கொண்டு  மற்றவர்களுடன் பேசியபடி நடக்க ஆரம்பித்தாள்.

 

நீண்ட காலங்களுக்குப் பின் வந்திருப்பவர்களை வாசலில் வந்து வரவேற்றவர்கள் அவர்களை அழைத்தவர்களாக வீட்டினுள் நுழைய அவர்களது நடையையும் பேச்சையும் தடுத்து நிறுத்தியது அந்த கார் சத்தம்.

 

வீட்டின் வெளிவாசலில் வாடகை காரொன்று வந்து நிற்க அது வந்து நின்ற வேகத்திலும் அந்த வாகனம் எழுப்பிய சத்தத்திலுமாக அனைவரும் திகைத்து  வாசல் பக்கம் திரும்பினர்.

 

வண்டியில் இருந்து இறங்கி வேக நடையுடன் வெளிவாசலைக் கடந்து உள்ளே வந்து கொண்டிருந்தவர்களைக் கண்டவர்களோ பேச்சற்று ஸ்தம்பித்து நிற்க வந்தவர்களைக் கண்ட குறிஞ்சியின் முகமோ அதிர்ச்சியும் ஆனந்தமுமாய்.

உணர்வுகள் பேசும்பொழுது வார்த்தை மௌனியாகி கண்ணீர் மொழியாகிவிடும், அங்கு அப்படிதான். அந்த நிலையில்தான் அனைவரும்.

 

கோபமும் கௌரவமும் போட்டி போட்டு கொண்டிருந்த மனதினில் வென்றது என்னவோ பாசம்தான்! இல்லையென்றால் கண்கள் ஏன் கலங்க வேண்டும்? இதயம் ஏன் கண்டவுடன் தடதடக்க வேண்டும்?

 

அவர்களை இன்னுமின்னும் அதிர வைத்தது,”அப்பூ!!” என்ற ஆச்சரிய குரலுடன் ஓடிச் சென்று ஜிதேந்திரனின் கழுத்தைக் கட்டிக் கொண்ட குறிஞ்சி.

 

‘அப்போ?’ என்றனைவரும் அடுத்த கட்ட அதிர்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்க ரேவதியின் கண்களில் விழுந்தது என்னவோ அவர்களுக்குப் பின்னால், வாசலில் அதிர்ந்த முகத்துடன் நின்றிருந்த நரேந்திரன்.

 

 மகளுக்கு எதுவும் இருக்காது. இருக்கக் கூடாது! என்ற பயத்தில் அங்கு வரும்வரை தொண்டைக் குழியில் நின்று துடித்த இதயம், இப்பொழுது மகள் ‘அப்பூ!’ என்றவாறு ஓடிவந்து கட்டிக் கொள்ளவும் அதனிடத்திற்கு தாமாகவே சென்றுவிட்டதுபோலும். அடையாளமாகக் கண்களில் திரையாய் கண்ணீரும் ஆறுதலுமாய்.

மகளின் தலையை மென்மையாய் வருடியவரோ,”அப்பா வந்துட்டேன்டா கண்ணா!” என்றார் ஆதரவாய். 

 

“யெஸ்!” என்று அதை ஆமோதிப்பவளைப்போல சற்று இறுக்கி அணைத்தவளின் கண்களில் தன்னையே கலங்கிய விழிகளுடன் வெறித்து நோக்கியவாறு நிற்கும் லீலாமதிபட  தந்தையிடமிருந்து விலகியவள் “அம்மூ!” என்று  அவரை அணைத்துக் கொண்டாள். ஆனால் ஏனோ அஷ்மிதாவின் இறுகிய முகம் அவள் கருத்தில் படவேயில்லை.

கலங்கிய அவர் கண்களை அவள் துடைத்துவிட, எங்கெங்கோ சென்ற மனதை இறுக்கி பிடித்த நிகழ்காலத்திற்கு வந்தவராக ஜிதேந்திரனை நோக்கி ஓடி வந்தார் வளர்மதி. அவரை தொடர்ந்து மற்றவர்களும்.

 

அண்ணா என்ற அலறலுடன் வந்த தங்கையை கண்டவரின் கண்கள் கலங்க,”வளரு!” என்ற ஆச்சரியத்துடன் அவர் ஓரெட்டு எடுத்து வைக்க கண்களில் கண்ணீர் வற்றாத நதியாய் ஓடியது வளர்மதிக்கு.

 

“இப்போதான் வழி தெரிஞ்சிதா?” என்ற ஆதங்கத்துடன் ஆரம்பிக்க  அவரை சமாதானம் படுத்தும் பொருட்டு சத்யபாமா வளர்மதியின் தோள்களை ஆதரவாய் பிடித்தார்.

அதற்குள் அனைவரும் ஜிதேந்திரனை நெருங்கியிருந்தனர்.

 

பெரியம்மா, பெரியப்பா, தங்கை, தம்பி, சித்தி, என்று அனைவரின் திட்டுக்களுக்கும் கேள்விகளுக்கும் உரிமையான கோபங்களுக்கும் ஆதங்கத்துக்கும் பதிலளித்தவர்  இவர்களிடமிருந்து சற்று தள்ளி, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நிற்கும் கோமதியைக் கண்டு “அம்மா!” என்று அவரிடம் விரைந்தார்.

 

அருகில் வந்த பிறகும் வாயைத் திறக்காது கண்களில் நீர்வழிய, உதடு துடிக்க,  நிற்பதே பாரம்போல சோர்ந்து நின்றவர் தொப்பென்று படியில் அமர்ந்துவிட 

 

“அம்மா” என்றவாறே கோமதியிடம் விரைந்தவர் அவர் கால்கள் பக்கத்தில் அமர்ந்தவராக அவர் முகம் பார்த்து, ”என்கிட்ட பேசவே மாட்டியாமா?” என்று தன் மொத்த ஏக்கங்களையும் தன் குரலில் தேக்கிக் கேட்க அதில் உடைந்து அழுதார் கோமதி.

 

ஜிதேந்திரனின் தலையை வருடியவர் அவரை தன்னோடு சேர்த்தணைத்தவராக,”உன் கிட்ட பேசாம நான் வேற யாருட்டயா பேச போறேன்? இந்தம்மாவ விட்டு போக எப்படிப்பா மனசு வந்தது?” என்றவரின் கண்ணீரோ நின்றபாடில்லை.

 

தாயிற்கும் மகனுக்கும் இடையேயான உணர்வு போராட்டத்தில், கேள்விகள் அனைத்திற்கும் கண்ணீரே பதிலாய்.

 

“தப்புதான்! உன்ன விட்டுட்டு போனது தப்புதான்மா.. ஆனா என்ன நம்பி நம்ம வீட்டுக்கு வந்தவள நாம நடத்தின விதம்..  உன்னமாதிரியே அவளுக்கும் நான்தான்மா எல்லாம்” என்ற மகனின் முகம் பார்த்தவர் எழுந்துவிட்டார்.

கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தவர் நேராய் அவ்வளவு நேரம் மௌனப் பார்வையாளராய் நின்று அனைத்தையும்  பார்த்துக் கொண்டிருந்த லீலாமதியிடம் சென்றார்.

தன்னை நோக்கி வரும் கோமதியையே விழி விரித்துப் பார்த்து நின்றார் லீலா.

ஒருபக்கம் பயமும்கூட.

 

லீலாமதியிடம் வந்த கோமதியின் மேலே அனைவரது கவனமும் இருக்க அவரோ எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாதவராக லீலாமதியின் இருகரங்களையும் பிடித்தவராகக் கண்ணீர் வழிய,

 

“எங்கள மன்னிச்சிருமா, எவ்வளவு கனவுகளோடவும் ஆசையோடவும் வந்த அன்னைக்கு…” என்றவரின் வார்த்தை ஒவ்வொன்றும் தந்தியடிக்க அவர் தன் கைகளைப் பற்றியதிலேயே கண்கள் பனிக்க நின்றிருந்த லீலாமதி அவர் மன்னிப்பு எனவும் “அத்தை..” என்று அவரை அணைத்துக் கொண்டார்.

 

“மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை அத்த.. நாம எல்லாருமே சூழ்நிலை கைதிகளாகிட்டோம். நீங்கதான் என்னைய மன்னிக்கனும், இவ்வளவு அழகான குடும்பம் உடைய நானும் ஒரு காரணமா இருந்துட்டேனே!” என்றழ 

 

“என்ன மயினி நீங்க? சின்ன பிள்ளையாட்டம்!” என்று லீலாவை கடிந்தவாறே அவர் தோளில் கைபோட்டாள் வளர்மதி.  லீலாவின் கண்களைத் துடைத்துவிட்ட கோமதி,” ச்சே ச்சே அப்படியெல்லாம் சொல்லாதம்மா“ என்றார்.

மனைவியின் முகத்தினில் குற்ற உணர்ச்சியை விலக்கியபடி உதிக்கும் அந்த நிம்மதி உணர்வும், அஷ்மியின் கன்னத்தில் கைவைத்துப் பரிவாய் பேசும் அன்னையையும் கண்ட ஜிதேந்திரனின் மனம் நிம்மதி கொள்வதற்கு பதில்,

இதில் எதிலும் ஒட்டாமல் நின்று கொண்டிருக்கும் சாந்தமதியிடம் சென்று நின்றது.

“அக்கா..” என்றபடி தயக்கமாய் அவர் நிற்க ‘பளார்’ என்றச் சத்தத்தில் அனைவரும் திரும்பினர்.

 

எல்லோரும் “சாந்தி! அம்மா!” என்று அதிர்ச்சியாய் பார்க்க அவர்களை  அமைதி காக்கும் படி கை உயர்த்தினர் சாந்தமதி

 

“அக்கா!” என்று அதிர்ந்த ஜிதேந்திரனை கண்டவரின் முகத்திலோ நொடிப் பொழுதில் கோபம் அழுகையாய் மாறியிருந்தது.

 

“அக்கா அக்கானு எதுக்கெடுத்தாலும் என்கிட்டதானேல வருவ? எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டு செய்ற நீ, வீட்ட விட்டு போகும்போது மட்டும் இந்த அக்கா உன் ஞாபகத்துல இல்லையோ? ஏன்ல? என்கிட்ட ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை சொல்லியிருந்தீனா, இவ்வளோ ப்ரச்சனை வந்துருக்காதே!” என்றவரின் ஆதங்கமும் கண்ணீரும் எல்லோரையும் ஒரு நொடி  அதிர வைத்தது.

 

ஜிதேந்திரன் வீட்டை விட்டுக் கிளம்பிய சமயம் சாந்தமதி சுந்தரேஸ்வரனுடன் தூத்துக்குடியில் இருந்தார். அவர் வார இறுதியில் வீடு திரும்பிய பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது ஜிதேந்திரன் வீட்டை விட்டு வெளியேறியது.

 

சித்தி மகன்தான் என்றாலும் ஒற்றை பிள்ளையாய் வளர்ந்த சாந்தமதியிடம் ஒட்டிக் கொண்டு அலைந்த தம்பி வீட்டைவிட்டு சென்றுவிட்டான் என்றதும், அதற்கான காரணத்தையும் அவரால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

தன் தம்பி வீட்டை விட்டு சென்றதுக்குக் காரணம் இவர்கள்தான் என்றெண்ணியவர் அன்று சண்டையிட்டுச் சென்றவர்தான்!

உங்கள் கௌரவத்தை உங்களிடமே வைத்து கொள்ளுங்கள்! என்று கணவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறிய சாந்தமதி அதற்குப்பின் அங்கு வரவில்லை.  அவர் பிள்ளைகளை தடுக்கவில்லை, ஏன் சுந்தரேஸ்வரனைகூட தடுத்ததில்லை. ஆனால் அவர் அந்த வீட்டினுள் அதன்பின் காலெடுத்து வைக்கவில்லை!

 

முக்கிய வைபவங்களுக்குக் கூட மண்டபங்களுக்கும் கோவிலுக்கும் வருவாரே தவிர வீட்டிற்கு வந்ததில்லை. இத்தனை வருடங்கள் கழித்து இன்றுதான் வந்திருக்கிறார், அவரே எதிர் பார்க்காத விதமாய் ஜிதேந்திரனின் வருகை அமைந்துவிட ஒருபுறம் அழுகை முட்டிக் கொண்டு வந்ததென்றால், மறுபுறமோ கோபம் தலைக்கேறியது. அதான் அறைந்துவிட்டார்.

 

அதுதான் அக்காவிற்கும் தங்கையிற்குமான வித்தியாசம் போலும்.

அத்தனை வருடம் அண்ணனுக்காகக் காத்திருந்த பொழுதும் அண்ணனைக் கண்டவுடன் கட்டியணைத்து கண்ணீர் வடித்தார் வளர்மதி.

ஆனால், அதே பாசம்தான், அதே பரிதவிப்புதான், ஆனால் கட்டியணைக்கவில்லை, கை ஓங்கிவிட்டது.

தன்னுடைய தம்பி தனக்கு முதல் பிள்ளை என்கிற உறவு கொடுக்கும் உரிமை அது!  “அக்கா…” 

 

“போ ல!” என்றவாறு கண்களைத் துடைத்துக் கொண்டார்.

 

“உள்ள கூட்டு போய் பேசுங்க!” என்றவாறு மருதுவை அழைத்த தேவேந்திரன்  அவர்களின் பெட்டியை உள்ளே எடுத்துச் செல்லும்படி பணித்தார்.

எல்லோரும் உள்ளே செல்ல ஜிதேந்திரனோ லீலாமதியின் கையை பற்றியபடி வாசலிலேயே நின்றுவிட்டார். அவருக்குப் பின்னால் தந்தையை பின்பற்றியவர்களாக அஷ்மிதாவும் குறிஞ்சியும்.

 

இவர்கள் நின்று விட்டதைக் கண்டவர்களோ உள்ளே வரும்படி அழைக்க ஜிதேந்திரனின் பார்வை மஹேந்திரனையே முற்றுகையிட்டது.

அன்று  வேண்டாமென்ற அனைவரும் இன்று வேண்டுமென்கிறார்கள்! ஏன் வசுமதியின் கண்களில் மின்னிய கண்ணீர்த் துளியைக் கண்ட குறிஞ்சிக்கோ ஆச்சரியம். கம்பீரமாய் சுற்றிக் கொண்டிருந்தவராயிற்றே!

மௌனமாய் நிற்கும்  தந்தையையே அவர் பார்த்து நின்றார். எத்தனை வயதானாலும் தகப்பனுக்குப் பிள்ளைதானே?

ஜிதேந்திரன் நின்ற விதமே சொல்லியது அவர் முழுமனதாய், இருவரையும் ஏற்றுக் கொள்ளும்வரை தான் படியை மிதிப்பதாக இல்லையென.

ஆர்வமாய் தன்னையே பார்த்து நிற்கும் மகனைக் கண்டவர் படிகளில் இருந்து இறங்கியவராகக் குறிஞ்சியைப் பார்த்துக் கண்ணசைத்தார் அருகில் வரும்படி.

ஏன் என்று புரியாமல் போக யோசனையாய் இவர்களையும் அவரையும் மாறி மாறி பார்த்தவள் மஹேந்திரனிடம் வந்தாள்.

 

அவள் தலையை மென்மையாக வருடியவர் “இப்படியொரு பேத்தி எனக்கு கிடைச்சது நான் செஞ்ச புண்ணியம்! பிள்ளைய  அருமையா வளர்த்திருக்கத்தா” என்று லீலாமதியிடம் உரைத்துவிட்டு அவர் நகர 

 

“அப்பா!” என்று ஆச்சரியமாய் அவர் கையை பிடித்து நிறுத்திய ஜிதேந்திரனிடம் திரும்பியவரின்  கண்களில் நிறைவான உணர்வு ஒன்று மேலிட, அதுவே அவர் மனதைக் காட்டியது.

 

ஜிதேந்திரன் அவர் காதலித்ததிற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. மற்றவர்கள் மனதை காயப்படித்தியதற்காக கேட்டார். 

அவரின் ஆசைபோலே எல்லோரும் லீலாமதியை மரியாதையாகவும், குடும்பத்தில் ஒருத்தியாகவும் நடத்த,

நீண்ட காலங்களுக்குப் பின் அந்த வீட்டில் அவரும், அவரின் எல்லாமுமானவர்களும் வாசற்படியில் தங்களது பாதம் பதித்தனர்.

அங்கு நிறைத்திருந்த ஆனந்தக் கண்ணீர் துளிகளையும்,  உற்சாக பேச்சு சத்தங்களையும் கலைத்தது பேச்சியின் அலறல் சத்தம்!

 

தன்கூட்டுக்குத் திரும்பிய பறவையின் சந்தோஷ சங்கீதத்தைக் குலைத்திடுமோ இந்த அலறல் சத்தம்?

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!