37
எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது என்று எண்ணும்பொழுதே அது அப்படி இல்லை என்பதுபோல் அமைந்தது அந்த அலறல் சத்தம்! விருந்தாளியாய், தோழியாய் அந்த வீட்டினுள் நுழைந்தவள் இன்று அந்த வீட்டின் அங்கத்தினராய், அவர்களில் ஒருத்தியாய் அடியெடுத்து வைத்தாள்.
ஆனால் அவர்கள் வீட்டினுள் நுழைந்த மறுகணம் பேச்சியின் “அய்யா!” என்ற அலறல் சத்தம் கேட்க ஒரு நொடி அதிர்ந்து பின் அனைவரும் குரல் வந்த திசையை நோக்கி ஓடினர் பதறியபடி.
குரல் யதீந்திரனின் அறையில் இருந்து வர பதறியடித்துக் கொண்டு ஓடியவர்கள் அறையினுள் நுழைய, ஒரு பக்கம் காபி தம்ப்ளர் கிடக்க, மூச்சுத் திணறலுடன் சுவாசக்காற்றுக்கு ஏங்குவதைப் போலத் தரையில் கிடந்த யதீந்திரன் கொஞ்சம் கொஞ்சமாய் சுயநினைவை இழந்து கொண்டிருந்தார்.
சர்வமும் அடங்கியவர்களாக அனைவரும் திகைத்து நின்றனர் அங்குக் கண்ட காட்சியில்.
முதலில் சுதாரித்தவளாக அஷ்மிதா ஓடிச் சென்று அவரை தூக்க முயல அவளுக்கு உதவியாய் ஜிதேந்திரனும் குறிஞ்சியும் சேர்ந்து கொண்டனர்.
நரேந்திரனும் வர அவனைத் தடுத்தவராக “நீ போய் வண்டியை எடு நரேன்!” என்றார் ஜிதேந்திரன்.
அவனும் வண்டியை எடுத்து தயார் நிலையில் வைக்க ஓடினான் சாவியைக் கையில் எடுத்தவனாக.
பயணக் களைப்பு வேறு இருக்க ஜிதேந்திரன் சற்று தடுமாற, அவரை விலக்கியவனாக அவர் கையில் தாங்கி பிடித்திருந்த யதீந்திரனை தன் கரங்களில் ஏந்திக் கொண்டான் ராகவேந்திரன்.
யதீந்திரனை இரு கையிலுமாக தூக்கி கொண்டவன் குறிஞ்சியைப் பார்த்து,
“அந்த பீரோல தாத்தாவோட ரிபோட்ஸ்லாம் இருக்கும்” என்றவாறே நிற்க நேரமில்லாதவனாக அவரை தூக்கியபடி வெளியே விரைந்தான்.
அவன் சொல்லிய ஃபைலை எடுத்தவள் வாசலுக்கு ஓடினாள்.
வண்டியில் ஜிதேந்திரன் அமர்ந்து கொள்ள யதீந்திரனை வசதியாய் கிடத்தினான் ராகவ்.
ஃபைலுடன் வந்தவள் ஜிதேந்திரனிடம் அதை ஒப்படைக்க வண்டி அடுத்த நொடி மருத்துவமனையை நோக்கிப் பறந்திருந்தது. வண்டி கிளம்பிய மறுகணம் தன் பைக் சாவியை எடுத்தவனாக ராகவேந்திரனும் கிளம்ப எத்தனிக்க அவனுடன் இணைந்து கொண்டார் மஹேந்திரன்.
ஒன்றும் இருக்காது! ஒன்றும் இருக்காது! எதுவும் ஆகாது! என்று இங்கு இவர்கள் மனம் உருபோட்டுக் கொண்டிருக்க அங்கு வண்டி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்திருந்தது.
உள்ளே யதீந்திரனுக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருக்க வெளியே மூவரும் பதற்றத்தில். இடையில் தேவேந்திரன் மருத்துவமனைக்கு வந்துவிட்டதாகவும், உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாகவும் வீட்டிற்கு அழைத்துப் பேசிவிட்டு வந்தார்.
அவர்களாவது பதற்றமின்றி இருக்கட்டுமே என்று.
ஐசியுவில் இருந்து அவரை அறைக்கு மாற்றிய பின்புதான் அவர்களுக்கு மூச்சே வந்தது!
அதற்குள் அங்கு ராகவும் மஹேந்திரனும் வந்திருந்தனர்.
இனி எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவர்கள் நிம்மதியடைந்தனர். கொஞ்ச நேரம் கழித்து யதீந்திரனை பரிசோதிக்கவென்று வந்த மருத்துவர் ஒருவர் யதீந்திரனைப் பார்த்துவிட்டு நிமிர அவர் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன, ஜிதேந்திரனை கண்டு.
“எதனால டாக்டர்?” என்ற நரேந்திரனிடம் யதீந்திரனின் உடல்நிலையைப் பற்றி விவரித்தவர் பின் “நோ வர்ரீஸ் யங்மேன்! ஹீ வில் பீ ஆல்ரைட்!” என்று ஆதரவாய் புன்னகைத்தார்.
“நீங்க ஜிதேந்திரன் தானே?” என்றவர் புருவங்கள் முடிச்சிட, அதே சமயம் கண்கள் பளபளக்க வினவ முதலில் அவரை யாரென்று அடையாளம் தெரியாமல் பார்த்த ஜிதேந்திரனோ அவர் யாரென்று தெரிந்த மறுகணம் அவர் முகம் இறுகியது.
“யெஸ்! நீங்க ஜிதேந்திரனேதான்!” என்றவரின் உற்சாக குரலில்
“உங்களுக்கு இவர ஏற்கனவே தெரியுமா?” என்று சந்தேகமாய் கேட்டார் தேவேந்திரன்.
அந்த மருத்துவருக்கோ ஜிதேந்திரனின் முகமாற்றம் கருத்தில் படாமல் போக மிக உற்சாகமான தொனியில் ஆரம்பித்தார்.
“இவர எப்படி மறக்க முடியும்? இவர் பண்ணது எவ்வளோ பெரிய காரியம்?” என்றவர் ஜிதேந்திரனிடம் “ஐம் டாக்டர்.போஸ்! ஞாபகமிருக்கா? அந்த குழந்தை இப்போ எப்படி இருக்கு?” என்று வினவ அவரது கேள்வி மற்றவர்களுக்குப் புரியாமல் போகலாம், ஆனால் அவர் யாரென்று தெரிந்த இருவரும் பேயறைந்தார்போல் நின்றனர்.
ஒன்று ஜிதேந்திரன் மற்றொன்று நரேந்திரன்.
அவனுக்குப் புரிந்துவிட்டது வந்திருப்பது யாரென்று. இதை எப்படிச் சமாளிப்பது என்று அவன் சிந்தனை இருக்க வந்தவரோ கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். என்ன செய்யவென்று புரியாமல் நின்றான் அவன்.
இப்படியொரு நாள் வருமென்று அவன் என்ன கனவா கண்டான்? வந்து விட்டதே! என்ன செய்ய? என்றிருக்க ஓரளவு தன்னை சமாளித்துக் கொண்டவராக ஜிதேந்திரனே “நல்லாருக்கா” என்றார் ஒற்றை வார்த்தையாக.
டாக்டர் போஸிற்கு நேரம் இல்லாத காரணத்தினால் ஜிதேந்திரனிடம் மாலை சந்திப்பதாக உரைத்தவர் அங்கிருந்து அகன்றுவிட்டார்.
“எந்த குழந்தை?” என்ற தேவேந்திரனின் சந்தேகக் கேள்வியில் அவரது மனம் முழுக்க அதிர்வலைகள்! எதை அவர் யாருக்கும் தெரியக்கூடாதென்று நினைத்தாரோ, அதுவே இன்று வெளியே வரத்துடிக்கிறது!
ஜிதேந்திரனின் தடுமாற்றமே அவர் எதையோ மறைக்கிறார் என்பதை உறுதி செய்ய தேவேந்திரனின் பார்வை இன்னும் கூர்மையானது.
“எதையோ மறைக்கற!” என்றவரின் குற்றச் சாட்டில் தலை நிமிர்ந்தவர் அதிர்ந்து நோக்க மஹேந்திரனோ இடை புகுந்தவராக,”அப்போ சொல்லு!” என்றார்.
அவர் அனைவரையும் ஒரு முறை பார்க்க அவர் பார்வை நரேந்திரனிடம் தேங்கியது, அவனது கெஞ்சும் விழிகளில்.
அவன் விழியால் கெஞ்சிக் கொண்டிருக்க அவருக்குத்தான் அதிர்ச்சி அதிகரித்தது, ‘இவனுக்கு எப்படி?’ என.
“சொல்லு ஜிதேந்திரா!” என்ற மஹேந்திரனின் அழுத்தமான குரலில் அவர் திகைத்து நிற்க நரேந்திரனோ வாய் திறந்தே சொல்லியிருந்தான்.
“வேணாம் மாமா!” என்றவனின் குரலில் ஜிதேந்திரன் திகைக்க தேவேந்திரனின் குரல் அவனை அதட்டியது அமைதி காக்கும்படி. ராகவேந்திரனுக்கோ ஒன்றும் புரியாத நிலை, ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு நிச்சயம், இப்பொழுது ஜிதேந்திரன் சொல்லவிருக்கும் விஷயம் நிச்சயம் உவப்பானதாக இருக்கப்போவதில்லை என.
அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அவர் சொல்லவில்லை என்றால் இவர்கள் அந்த டாக்டரிடமே செல்லக்கூடும். அது இதைவிட மோசம்! அதற்கு இவர் சொல்லித் தெரிவதே மேல். ஆனால் எந்த உண்மை யாருக்கும் தெரியக்கூடாது என்று எண்ணினாரோ அதை இன்று அவர் வாயாலையே சொல்லும் நிலை.
அவர் சொல்லத் தயாராகிவிட நரேந்திரனோ “மாமா!” என்றான் குரலை உயர்த்தியவனாக
அவனைப் பார்த்தவரோ “வேற வழியில்ல நரேன்” என்றார் ஒரு கசந்த முறுவலுடன்.
“நான் அப்போ கொடைக்கானல்ல இருந்தேன்” என்றவரது நினைவுகளும் பின்னோக்கி பயணித்தன.
வீட்டை விட்டு வெளியேறியவர் லீலாமதியையும் அழைத்துக் கொண்டு கொடைக்கானலிற்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு வேலையும் கிடைத்துவிட, அவர்களுக்கென்று ஒரு உலகம் அதில் அவர்களிருவரும் என்று வாழத்தொடங்கினர்
அதிலும் அஷ்மிதா பிறந்தபின் சொல்லவா வேண்டும்? அவர்கள் உலகம் இன்னும் அழகாகியது.
தேவைக்கேற்ப, அளவான வருமானம், அழகான அன்பான குடும்பம் என்று நாட்கள் உருண்டோடியது.
அப்பொழுதுதான் ஒரு நாள், அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைத்த அந்த நாள் வந்தது.
அன்று.
காலை மணி ஏழு ஏழரை இருக்கக்கூடும், அந்த காலை நேர பனிக்காற்றை ரசித்த வண்ணம் நடைபயின்று கொண்டிருந்தார் ஜிதேந்திரன்.
முன்தின இரவு அஷ்மி உறங்கவே வெகு நேரமாகிவிடக் காலையில் அசந்து உறங்கும் மனைவின் தூக்கத்தைக் கலைக்க அவர் விரும்பவில்லை.
அன்று விடுமுறை தினம் வேறு! அவரே சமைத்துவிடலாம் என்று முடிவெடுத்தவராகக் கடைக்குக் கிளம்பியிருந்தார். மஃப்ளரும் ஸ்வெட்டருமாக வேக நடைப் போட்டு கொண்டிருந்தவரைத் தடுத்து நிறுத்தியது அந்த அழுகுரல்.
குழந்தை அழும் சத்தம்!
சுற்றி முற்றி அவர் தன் பார்வையை சுழலவிட, ஏமாற்றமே மிஞ்சியது.
அது ஆட்கள் நடமாட்டம் குறைவான இடம். சுற்றிலும் தன் பார்வையைச் சுழல விட்டவருக்கோ ஆச்சரியம்.
அழுகைச் சத்தம் கேட்கிறது, ஆனால் யாரையும் காணவில்லையே? என்று மறுபடியும் சுற்றி முற்றிப் பார்த்தவர் இம்முறை அமைதியாய் நின்று அழுகை சத்தம் வரும் திசையை கவனிக்கலானார்.
அந்த சத்தம் வந்த திசையில் நடந்தவருக்கோ ஒரு நொடி உயிரே போன உணர்வு!
அவர் அங்குக் கண்டது அப்படிப்பட்டதல்லவா.
சத்தம் வந்த திசையிலேயே நடந்து வந்தவரின் பார்வையில் விழுந்தது அந்த ஓடை(ஒரு காலத்தில்). ஒரு காலத்தில் நீரோடையாய் இருந்தது இன்று சாக்கடையாய் உருமாறியிருந்தது! ஐந்தடி தள்ளி நின்றவர் மூக்கை மூடிக்கொண்டவராக முன்னேறினார்.
சாக்கடையில் இருந்து சத்தம் வருகிறதே? என்று பதறியவருக்கோ உள்ளுக்குள் கற்பனை குதிரைகள் தாறுமாறாய் ஓடின.
என்னென்னவோ எண்ணங்கள், கற்பனைகளின் பலனால் பதறிப்போனவர் என்னவென்று பார்க்க விரைந்தார்.
அவர் உயிர் உறைய வைத்த காட்சி அது!
சாலையின் விளிம்பில் நின்றவர் அங்கிருந்து பார்க்க அவர் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை, ஆனால் சத்தம் மட்டும் வெகு அருகில் கேட்க இடமும் வலமுமாக அலைந்தார் அந்த சாக்கடையைச் சுற்றியே.
எல்லா முயற்சியும் தோல்வியில் முடிய சோர்ந்தவராக அவர் வந்து நிற்க, அவர் நின்ற இடத்தின் கீழே இருந்து வந்தது அந்த சத்தம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வந்தது.
மண்டியிட்டமர்ந்தவர் மூக்கில் மஃப்ளரை இழுத்து விட்டுக் கொண்டு கீழே தலையை கவிழ்த்தினார்.
சாலையின் அடியில் இடப்புறத்தில் இருந்து வலபுறத்திற்கு ஓடிக்கொண்டிருந்த ஓடை அது. இன்று தேங்கி. இவர் தலையை கவிழ்த்து பார்க்க அவர் சப்த நாடியும் அடங்கியது!
தேங்கி நின்ற சாக்கடை நீரில், அந்த குப்பை கூளங்களுக்கு மத்தியில்,
சாலையின் கீழே சென்ற பாதையின் ஓரத்தில் சுற்றிலும் ப்ளாஸ்டிக் பைகளும், கண்ணாடிக் குடுவைகளுமாக இருக்க அதன் நடுவில்,
அழகிய உலகின் அகோர பிடியில் சிக்கி எந்நேரமும் உயிர் பிரியும் நிலையில் ஒரு மின்மினி! ஆம் மின்மினியேதான்! இருளடைந்த சாக்கடையினுள் ஒற்றை கீற்றாய் ஒளி வீசியபடி, ‘வீல்!’ என்ற அழுகை சத்தத்தின் காரணமாய்.
கண்ட காட்சியில் உள்ளம் பதறியது அவருக்கு.
அவர் கையை நீட்டித் தூக்கிவிடும் முயற்சியில் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தார். அழுகைச் சத்தம் குறையக் குறைய அவருக்கோ உள்ளுக்குள் அச்சம்! அவரும் சாலையில் தன் முழு உடலையும் சரித்து கொண்டு கையை நீட்டி பார்த்தார் எட்டவேயில்லை.
எவ்வளவு முயன்றும் முடியாமல் போகக் கடைசியில் ஓடைக்குள் இறங்கி விடுவதாக முடிவெடுத்தவர் சற்றுத் தொலைவில் ஓடையினுள் பாதி மூழ்கி இருந்த கல் ஒன்றின் மீது கால் வைக்க முயன்றார்.
ஒற்றைக் காலை அதில் பதித்தவர் மற்றொன்றை அந்த ரோட்டின் விளிம்பில் வைத்துக் கொண்டார்.
அதற்குள் அந்த வழியே கடந்து சென்றவர்கள் அங்குக் கூட்டமாய் கூடிவிட்டனர்.
அவர்களாலும் ஒன்றும் செய்ய இயலாத நிலை. அவர்களால் முடிந்தது ஆம்புலன்சிற்கும் போலீஸிற்கும் அழைத்தார்கள்.
காலுக்கடியில் கல்லிருக்கும் தைரியத்தில் அவர் கையை நீட்டக் குழந்தையைச் சுற்றியிருந்த துணியை பிடித்துவிட்டார். மெல்ல மெல்லக் கண்ணாடி துண்டுகள் மீது படாத வண்ணம் இழுத்தவர் அருகில் வந்துவிடக் குழந்தையைத் தூக்கிய மறுகணம் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டவரின் கண்களிலோ இரு துளி வெள்ளம்.
ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அவருள் வலம் வந்தன!
விடையில்லா வினாக்கள் பல.
அழுகை சத்தம் நின்றிருக்கக் கண்கள் செருகிய நிலையில் இருந்த குழந்தையைப் பார்த்தவர் அதன் நெஞ்சில் தன் காதை வைத்தார். அதன் இதயத் துடிப்பைக் கேட்ட பின்பே அவர் இதயம் துடிக்கத் தொடங்கியது!
கூட்டத்தில் நின்றவர்களில் ஒரு பெண்மணி பிள்ளையை அவரிடம் கொடுத்துவிட்டு அவரும் மேலே ஏறும்படி உரைக்கப் பிள்ளையை அவரிடம் கொடுத்தவருக்கோ ஏறுவதில் தான் பிரச்சனையே! இறங்கும் பொழுது சுலபமாய் இறங்கிவிட்டார். ஆனால் இப்பொழுது ஏறுவதற்கு தோதாய் பிடிக்கவென்று அங்கொன்றுமில்லை.
ஒரே தாவாய் தாவியவரின் பாதத்தை கண்ணாடி சில்லொன்று பதம் பார்க்கத் தலைக்குப்பற விழ இருந்தவரைப் பிடித்திழுத்தனர் சிலர்.
தன் காலில் இருந்து கசியும் இரத்தத்தை பொருட்படுத்தாதவர் முதல் வேளையாகக் குழந்தையைத் தேட அங்கிருந்த மக்கள் சிலர் அவரையும் குழந்தையுடன் சேர்த்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
ஐசியுவில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.
வெளியே காலில் சிறிய கட்டுடன் இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தார் ஜிதேந்திரன். மனம் முழுக்க பிரார்த்தனைகளுடன்.
இதுவரை நம்பிக்கையாய் எதுவும் சொல்லவில்லை, இருந்தும் அவருக்குள் ஒரு ஓரத்தில் நம்பிக்கை ஒட்டிக் கொண்டுதான் இருந்தது.
பக்கத்துக் கடைக்கு அழைத்து லீலாவிடம் சொல்லிவிடும்படி சொல்லிவிட்டார்.
கண்களை மூடி தலையை பின்னால் சாய்த்தவாறு அமர்ந்தவரின் மனதிலோ மறக்க முடியாத சம்பவமாய் அது பதிந்தது.
எப்படிப்பட்ட வாழ்க்கை இது? என்றானது.
தாய்ப்பாலின் வாசத்தைச் சுவாசிக்க வேண்டிய நாசி,
சாக்கடையின் நாற்றத்தில்!
அன்னையின் அணைப்பில், தந்தையின் கவனிப்பில் இருக்கவேண்டிய குழந்தை, இன்று?
பிறந்த குழந்தைக்குக் கிடைக்கும் சிறந்த பரிசு,
தாயின் முதல் முத்தம், அந்த ஒரு துளி கண்ணீர்.
ஆனால் வாகன சத்தங்களும், அழுக்கு தண்ணீரும்தான் அவளுக்குக் கிடைத்தவை!
எந்த பாவமும் அறியாத பிஞ்சுக் குழந்தை அது. அது என்ன செய்தது?
எதற்காக இந்த தண்டனை?
எவரோ செய்த பாவத்திற்குப் பலியாவது ஒன்றுமறியா குழந்தையா?
சாக்கடையில் வீச நேரம் இருந்தவர்களுக்கு, அந்த பூமுகம் காண நேரமில்லாமல் போனதேனோ? ஒருவேளை கண்டிருந்தால்?
எதனால் உன்னை வீசினாரோ?
பெண்பிள்ளை வேண்டாமென்றா? இல்லை பிள்ளையே வேண்டாமென்றா? வீசியவரின் மனம் ஒரு நொடிப்பொழுதேனும் உன்னை நினைத்துக் குற்ற உணர்ச்சியில் குறு குறுக்காதா?
எப்படி முடிந்தது? என்று தன் மனம் போன போக்கில் கண்மூடி கிடந்தவரின் விழிகள் இரண்டும் நனைந்தன.
தோளில் கரம் படியக் கண்விழித்தவர் எதிரில் நின்ற டாக்டரை கண்டு வேகமாய் எழுந்தார்.
“டாக்டர் இப்போ எப்படி?” என்றவரின் பதற்றத்தைக் கவனித்தவர் அவரின் தோள்களை ஆதரவாய் பற்றி
“இனிமே பிரச்சனை இல்ல” என்றார்.
“நான்.. பார்க்கலாமா டாக்டர்?” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட ஜிதேந்திரனையே கவனித்த டாக்டர் போஸ்
“ம்ம்ம் பாருங்க, ஆனா சீக்கிரம் வந்துருங்க!” என்றுவிட்டுச் சென்றார்.
உள்ளே நுழைந்தவரின் கண்கள் அந்த மெத்தையையே சுற்றியது!
அந்த சிறிய உடலில் குழாய்கள்! கண் கொண்டு காண முடியாத காட்சி! மெத்தையின் அருகில் கீழே மண்டியிட்டு அமர்ந்தவர் அந்த சொப்பு கையின் குட்டி குட்டி விரல்களை ஒற்றை விரலால் வருடினார். அவ்வளவு மென்மையாய் இருந்தது.
மனம் தேவையில்லாதவற்றை எல்லாம் சிந்திக்க எழுந்துவிட நினைத்தவரின் சுண்டுவிரலை தன் பிஞ்சு விரல்களால் பற்றியிருந்தாள் அவள்.
அந்த நொடி, தந்த இதம்..
இனிப்பும், சிலிர்ப்புமாய்..
உள்ளத்தில் உறைந்திட, புத்துணர்வொன்று பூத்தது!
இந்த உலகத்தையே விலைக்கு வாங்கியதுபோல் ஒரு உணர்வு!
வலிக்காத வண்ணம் அவள் விரல்களைப் பிரித்தவர் ஒரு முடிவுடன்தான் அந்த அறையில் இருந்து வெளியேறினார்.
வெளியேறியவர் முதலில் சென்றது டாக்டர் போஸிடம்தான்! பின் அவரை விசாரித்த காவல் அதிகாரியிடம்.
அவருக்கு ஏனோ அவளை அங்கு விட்டு செல்ல மனமில்லை! அவள் அவர் விரல் பிடித்த அந்நொடியே மனதினில் வந்துபோக ஒரு முடிவுடன்தான் லீலாமதியையும் அணுகினார். அவரின் சரிபாதியல்லவா!
அன்று லீலாமதி உரைத்தவை இன்றும் அவர் நெஞ்சினில் அச்சடித்ததுபோல்.
பல சிக்கல்கள், ஃபார்மாலிட்டீஸ், அலைச்சல்கள். ஆனால் இது எதுவும் அவர்கள் இருவருக்கும் சங்கடமாய் இருக்கவில்லை! மனதளவில் அவள் என்றோ அவர்கள் மகள் ஆகிவிட்டாள். அதனால்தானோ என்னவோ இன்முகமாகவே எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டனர்.
அவள் வந்த பின்பு வாழ்க்கை இன்னும் அழகானது! ஒவ்வொரு நாளும் ரம்மியமானது!
சில மாதங்களுக்குப் பின் ஜிதேந்திரன் குடும்பத்துடன் பெங்களூருக்குச் சென்றுவிட்டார். பழைய அடையாளம் எதுவும் வேண்டாமென!
அவருக்கு அந்த சூழல். அந்த மக்கள் என அந்த சம்பவத்தை ஞாபகப் படுத்தும் எதுவும் வேண்டாம். அவளை அதிலிருந்து தள்ளி வைக்க எண்ணினார். இன்றுவரை லீலாமதிக்கும் ஜிதேந்திரனுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று. அவர் யாருக்கும் தெரியவேக்கூடாதென்று நினைத்த ஒன்று, அவர் பெங்களூர் செல்ல காரணமாய் இருந்த ஒன்றை, இன்று அவர் வாயால் சொல்லும்படி ஆகியதுதான் விதியோ!
சொல்லி முடித்தவர் உடலில் இருந்த அத்தனை சக்தியும் கரைந்தவராக அங்கிருந்த சேர் ஒன்றில் அமர்ந்துவிட்டார்.
கலங்கிய கண்களுடன் அனைவரும் அவரையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
“அப்போ அந்த குழந்தை?” என்ற தேவேந்திரனின் குரலில் பயம் சந்தேகம் என உணர்ச்சிப் போராட்டமாய் இருந்தது.
அவரின் சந்தேகம் சரியென்பதுபோல ஆமோதிப்பாய் தலையசைத்த ஜிதேந்திரன்,”யாழி” என்றார் ஒற்றை வார்த்தையாக.
முகத்தை அழுந்த துடைத்துக் கொண்ட மஹேந்திரன் “ரகசியம் ரகசியமாவே இருக்கட்டும்! யாரும்…” என்றவர் சொல்லிக் கொண்டே போக மருந்து பாட்டில் ஒன்று கீழே விழுந்து சிதறும் சத்தம் அவர்கள் அனைவரையும் கலைத்தது!
திரும்பியவர்களின் பார்வை அறைவாசலிலேயே நிலைத்துவிட, அவர்களோ அதிர்ச்சியில் பனியாய் உறைந்தனர்!