O Crazy Minnal(38)

ocm38p-4fb1fef0

O Crazy Minnal(38)

38

கண்ணாடி பாட்டில் ஒன்று விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அவர்கள் அனைவரும் திகைத்தவர்களாய் திரும்பினர்.

விரிந்த விழிகளும் உணர்ச்சிகளற்ற முகமுமாய், உள்ளுக்குள் பல பூகம்பங்களைத் தாங்கியவளாக அறைவாசலில்  நின்றிருந்தவளைக் கண்டு அவர்கள்  அனைவரின் முகத்திலும் அதிர்வலைகள்.

 

ஜிதேந்திரனின் வாய்மொழியில் தன்னிலை மறந்து நின்றவள் அவரையே விழி விரித்துப் பார்க்க அவர் கண்களோ அதிர்ச்சியை மட்டுமே பிரதிபலித்தது.

முதலில் தன்னை மீட்டவனாக நரேந்திரன் “இஞ்சிமா…’ என்று ஓரெட்டு எடுத்துவைத்தான்.

 

மறுப்பாகத் தலையசைத்தவள் அக்கணமே அங்கிருந்து அகன்றிருந்தாள்.

அவள் வெளியேற  அதிர்ச்சியில் உறைந்து நின்ற ஜிதேந்திரனோ உடலின் பாரம் தாங்காதவராகத் தரையில் சரிந்தமர்ந்தார்.

 

இங்கு இவள் பின் செல்ல இருந்தவன் ஜிதேந்திரன் சரியவும் அவரிடம் விரைந்தான்.

ராகவேந்திரன் தண்ணீர் எடுத்துவந்து கொடுக்க,

 

“மாமா!” என்றவாறு அருகில் வந்த நரேந்திரனைத் தடுத்தவர் “யாழி” என அவனோ அவர் தோளை ஆதரவாய் பற்றி “அவள நான் பாத்துக்கறேன் மாமா!” என்றான். 

 

அவனது வாய்மொழி இதமாய் இருந்தாலும் மனம் ஏனோ அடித்துக் கொண்டது. 

இவரிடம் அவசரகதியில் உரைத்தவன் இவரையும் அவள் சென்ற திசையையும் ஒரு பார்வை பார்த்தவன் அவள் சென்ற திசையில் ஓடினான். “இஞ்சி! இஞ்சிமா!” என்றவன் ஓட அவனுக்கு முன்னே, சற்று தொலைவில் சென்று கொண்டிருந்தவளின் கவனத்தில் எதுவும் பதியவில்லை போலும். 

 

எங்கோ வெறித்தபடி நடந்து கொண்டிருந்தவள் அவள் அருகே ஒரு ஆட்டோ வந்து நிற்கவும் திகைத்து பின் அதில் ஏறி சென்றுவிட  அவனோ அவள் சென்ற திசையையே வெறித்தவண்ணம் நின்று கொண்டிருந்தான்.

 

அவனருகில் அவனை உரசியபடி வந்து நின்ற அந்த பைக் சத்தத்தில் அவன் கலைந்தான்.

 

“வா ஏறு!” என்ற ராகவேந்திரனை அவன் சந்தேகப் பார்வை பார்க்க அவனோ முகம் கறுத்தவனாய்,

 

“நான் அவ்வளோ கெட்டவன் இல்ல நரேன்!” என்றான் குறுகியவனாக.

 

“ராகவ்!” என்ற ஆச்சரிய குரலுடன் நரேந்திரன் அவனைப் பார்க்க அவனோ

 

“இப்போ குறிஞ்சிதான் முக்கியம் நரேன்!” என்றான்.

மறுபேச்சின்றி  வண்டியில் ஏறிக் கொண்டான் நரேந்திரன்.

 

வீடிருக்கும் தெருவில் ஆட்டோ நிற்க  இறங்கியவள் குர்தா பாக்கெட்டில் இருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளை அவரிடம் தந்தவளாக, சில்லறை வாங்கக்கூடத் தோன்றாமல் வீட்டை நோக்கி நடந்தாள். 

 

வீட்டினுள் நுழைந்தவள் யாரையும் கண்டுகொள்ளாமல், அவளை எதிர்கொண்டவர்களையும் தவிர்த்தவளாக அறையினுள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.

 

வீட்டிலுள்ள அனைவரும் ஹாலில் இருக்க, குறிஞ்சி உள்ளே நுழைந்ததும் அவள் முகம் சரியில்லாததைக் கண்டு அவளிடம் வந்தனர்.

எவரையும் கண்டுகொள்ளாமல் வேக நடையுடன் அறையினுள் அவள்  தஞ்சம் புகுந்து கொள்ள அவர்களுக்குத்தான் ஒன்றும் விளங்காத நிலை.

 

“குறிஞ்சி! யாழி!” என்றவர்கள் கதவைத் தட்ட அந்த பக்கத்தில் இருந்து எந்தவித பதிலும் இல்லாமல் போனது.

 

“ஏ புள்ள கதவ தொற!” என்றவர்களின் குரல் அவள் செவியைத் தீண்டாமல் இல்லை. ஆனால் எதுவும் அவள் கவனத்தில் பதியவில்லை!

 

யதீந்திரனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபின், வீட்டில் அனைவரும் என்னவோ ஏதோவென்று பயத்தில் இருக்கச் சற்று நேரத்திற்கெல்லாம் தேவேந்திரனே அழைத்து அங்கு அவர் உடல்நிலையைப் பற்றி எடுத்துரைத்து கவலைப்படாமல் இருக்குமாறு உரைத்திருந்தார். 

நேரம் கடக்கக் கடக்க அவளுக்குத்தான் இருப்புக்கொள்ளவில்லை! இங்கு அனைவரிடமும்  சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

 

முதலில் மறுத்தவர்கள் பின் அவள் விடாப்பிடியாய் நிற்கவும் சரியென்றுவிடக் கிளம்பிவிட்டாள் மருத்துவமனைக்கு.

அவளைக்  கடந்து சென்ற செவிலியரைப் பிடித்து விவரம் கேட்டவள் அறையைக் கண்டுபிடித்துவிட்ட திருப்தியுடன்  உள்ளே நுழையும் முன் அவள் செவிப்பறையை கிழித்தது நரேந்திரனின் குரல்.

 

அவன் “மாமா!” என்று குரலை உயர்த்தியதும் அதற்கு ஜிதேந்திரன் சற்றும் கோபப்படாமல் கசந்த குரலில்  வேறு வழி இல்லை என்றதும்.

ஒன்றும் புரியாமல்போக அறைவாசலிலேயே தேங்கிவிட்டாள் அவள். ஆனால் அவள் அப்பூவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுள் பல எரிமலைச் சிதறல்களாய்.

 

அந்த நொடி, அவளுக்குத் தான் எப்படி உணர்கிறோம் என்றே  புரியாத நிலை!

உணர்ச்சிக் குவியலாய் நின்றிருந்தவளை அழுக்கைக்கூடத் தீண்டவில்லை.

உலகமே நின்றுவிட்ட உணர்வு! அவளறியாமல் ஓரடி எடுத்து வைத்தவளின் கைப்பட்டு அங்கு ட்ரேயில் வைக்கப்பட்டிருந்த மருந்து பாட்டில் ஒன்று கீழே விழுந்து சிதறியது. அவளது எண்ணங்களும்.

 

யாரையும் எதிர்கொள்ளும் மனநிலையில் அவளில்லை! எல்லாரிடமிருந்தும் தள்ளி, ஆள் அரவமில்லாத இடத்திற்குச் சென்றுவிட வேண்டும்போல் ஒரு உணர்வு!

ஏன் நடக்கிறோம் எங்குச் செல்கிறோம் என்று தெரியாமல் நடக்கத் தொடங்கியவள் வீடு வந்து சேர்ந்ததே அதிசயம்தான். 

 

வெளியே கதவு தட்டப்படவில்லை!  அவ்வளவு நேரம் பதறியவர்களின் குரல் கேட்கவில்லை!

மெத்தையில் அமர்ந்திருந்தவளோ அவளுக்குள்ளே அமிழ்ந்து கொண்டிருந்தாள் கொஞ்சம் கொஞ்சமாய்.  

பேசமறந்தவளாய், பூட்டப்பட்டிருந்த கதவையே வெறித்து நோக்கியபடி சுழலுக்குள் அமிழ்ந்து கொண்டிருந்தவளை தட்டியெழுப்பியது அந்தக் குரல்!

அவனின் குரல்!

 

“இஞ்சிமா! இஞ்சிமா! கதவ திறடா! ப்ளீஸ்டா..” என்றவன் கதவைத் தட்டிக் கொண்டிருக்க அவன் இரண்டாவது முறை தட்டுவதற்கு முன் கதவு திறக்கப்பட்டிருந்தது.

 

கதவைத் திறந்தவள்  அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள அவனுக்கோ  கையாலாகாத நிலை! எது நடக்கக்கூடாதென்று நினைத்தானோ அது இன்று அவன் முன்னிலையில். அவனால் ஒன்றும் செய்யவியலாத நிலை!

 

அவனையே வெறுத்தவனாக தன்னை இறுக்கி அணைத்திருப்பவளின் முதுகில் ஆறுதலாய்  அவன் கரம்.

அந்த ஸ்பரிசம், அதில் அத்தனை நேரம் அழக்கூட முடியாமல் பேச்சற்று நின்றவளின் கண்களில் கண்ணீர் வழிய  ஒரு கேவலுடன் அவன் சட்டையில் தன் தவிப்பை உணர்த்தினாள் அவள் கண்ணீர்த் துளிகளால். அங்கு எவரின் புருவங்களும்  அவள் அவனைக் கட்டியணைத்ததற்கோ, இல்லை அவன் ஆதரவாய் நின்றதற்கோ  வளையவில்லை! மாறாக அவளை எப்படி சமாதானப்படுத்தலாம் என்ற கவலையில்தான் நின்றனர்.

 

தேவேந்திரன் அழைத்திருந்தார். அவள் வந்துவிட்டதை உறுதி செய்தவரிடம் இவர்கள் அனைவரும் கேள்வியெழுப்ப அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் உரைத்திருந்தார்.

 

தன் மார்பினில் முகம் புதைத்து தேம்பியழும் அவளைக் கண்டவனோ என்ன செய்யவென்ற குழப்பத்தில்.

 

“டா! இங்க பாரு! என்ன பாரேன் ஒரு நிமிஷம்!” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்த முயல அவளோ தன்பிடியை இன்னும் இறுக்கினாள்.

அழுதழுது ஒரு கட்டத்தில் அழுகை குறைந்திருக்கத் தலையை நிமிர்த்தாமலேயே அவனிடம்,”அப்போ.. அப்போ..” என்றவள் திக்க  அவள் தலை கோதியவன் 

 

“ஒன்னுமில்ல” என்றான் சமாதானமாய்.

 

“அப்போ நான் இந்த.. இந்த வீட்டு பொண்ணில்லையா நரி?” என்றவள் தேம்பினாள்.

 

“யார் சொன்னா? நீ இந்த வீட்டுபொண்ணுதான்! அப்படிதானேமா? சொல்லுமா இவகிட்ட” என்ற நரேந்திரனின் குரல் சத்யாவை  கலங்க  வைத்தது.

அவன் சுலபத்தில் கலங்கும் ரகமல்லவே!

 

“அப்போ.. என்னையும்.. எல்லாருக்கும்  பிடிக்காம போயிரும்ல?” என்றவள் உடைந்தழ அவன் பொறுமை அனைத்தும் காற்றில் பட்டமாய்.

அவள் வார்த்தையில் அனைவருக்கும் எதிலோ தோற்றுவிட்ட உணர்வு! 

 

“அதெல்லாம் பிடிக்கும்!” என்றவன்  “நீ என் யாழி! உன்ன யாருக்கும் பிடிக்காம போகாது. அப்படி நீ வேணாம்னா எனக்கும் எதுவும் வேணாம்!”  என அந்த வார்த்தையில் ஜிதேந்திரன் உறைந்துவிட்டார். நரேந்திரன் வந்த சில நிமிடங்களிலேயே அவரும் வந்துவிட்டார்.  

அழுகை சற்று மட்டுப்பட அவனை அணைத்து நின்றவளின் பார்வையில் ஜிதேந்திரன் விழ அடுத்த கணமே இவனிடம் இருந்து விலகியவள்,

 

“அப்பூ!” என்றவாறு ஜிதேந்திரனின் தோள் சாய்ந்திருந்தாள்.

 

“யாழிமா!” என்றணைத்துக் கொண்டவரோ “அழாதடா! கண்ணா..” என 

அவளுக்கோ அவர் பேசப் பேச அழுகை கூடிக்கொண்டே போனது.

 

“கண்ணா! யாழிமா.. “ என்றவரின் குரலில் நிமிர்ந்தாள்.

 

“அப்போ.. நான் அனாதையா?” என்று கண்களில்  ஏக்கமும், குரலில் ஏமாற்றமுமாய் கேட்பவளைக் கண்டவரின் மனதிலோ பல ஈட்டிகள் இறங்கியிருந்தன.

 

“சாஞ்சு அழ ஒரு தோளிருக்கற வர, இங்க  யாருமே அனாதையில்ல யாழிமா!” என்றவர்,”நீ என் பொண்ணுடா! இன்னொருதடவ இப்படி சொல்லாத!” என்றவரின் கண்கள் கலங்கிவிட அதை கண்டவளோ அவர் கண்ணீரைத் துடைத்தவாறு “சாரி அப்பூ! அழாத.. ப்ளீஸ்!” என்றவளை ஆதரவாய் தழுவியது லீலாவின் கரம்.

 

“யாரு சொன்னது நீ அனாதைனு?  அப்போ இந்த அம்மா உன் கண்ணுக்கு தெரியலையா?” என்றவர் கண்ணைக் கசக்க மனைவியையும் மகளையும் சேர்த்தணைத்துக் கொண்டார் ஜிதேந்திரன். தந்தையின் அணைப்பில் நின்றவள்  நிமிர அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது அஷ்மிதாவின் கரம்.

அவள் அறைந்ததில் அனைவரும் அதிர அவளோ குறிஞ்சியின் கையை பற்றியவளாக,

 

“என்ன? என்கிட்டயும் கேக்கப் போறீயா?”  என அவள் விட்ட அறையிலேயே அதிர்ந்தவள் அவள் தன்னிடம் குரலை உயர்த்தி கத்தவும் அதிர்ச்சியாய் பார்த்து நின்றாள். இதுநாள் வரை அஷ்மி அவளிடம் கை ஓங்கியதில்லை.  ஏன் எவருமே கை ஓங்கியதில்லை அதற்கு அஷ்மி விட்டதுமில்லை!  அப்படிப்பட்டவளா இன்று இப்படி? என்று புரியாமல் அவள் விழிக்க   அவர்களை நோக்கி ஓரெட்டு எடுத்து வைத்த நரேந்திரனின் கரம் பற்றித் தடுத்தாள் ரேவதி.

 

“அஷ்..”

 

“பேசாத நீ!  நீ என் தங்கச்சி நான் உன் அக்கா! இத யாராலும் மாத்த முடியாது!  யார் என்ன சொன்னாலும் சரி! நீதான் என் தங்கச்சி! அண்ட் நீ மட்டும்தான்! நீ என்னோட இஞ்சி இத யாராலும் மாத்த முடியாது! அப்பாட்ட கேட்ட மாதிரி என்கிட்ட கேட்ட! பல்ல கழட்டி கைல குடுத்துருவேன்! ஜாக்கிரதை!” என்றவள் பார்வையைச் சுழலவிட அது ஓரிடத்தில் நிலைத்தது. “வா” என்றவள் குறிஞ்சியின் கைபற்றி இழுத்துச் சென்றாள் ராகவேந்திரனிடம்.

குறிஞ்சி அவளை அதிர்ந்து நோக்க அவளோ ராகவேந்திரனையே கூர் பார்வை பார்த்தாள்.

அவன் தலை கவிழ அவள் சந்தேகம் தீர்ந்ததுபோல்,

 

“நீதான? நீதான கால் பண்ணது?” என்றாள் அதட்டலாய் 

 

“அஷ்மி” என்ற குறிஞ்சியை,  “நீ சும்மா இரு!” என்று அடக்கியவள் அவனிடம் மறுபடியும் கேள்வியெழுப்பினாள்.

அவனது வெற்று பார்வையே பதிலாகிவிட அஷ்மியோ,

 

“நீதான இவள பத்தி பேசினது? என்ன சொன்ன என்கிட்ட?” என்றவளைத் தடுக்கும் முயற்சியில் லீலாமதியும் “அஷ்மீ” என்றழைக்க அவள்தான் யாரையும் கண்டுகொள்ளவே இல்லையே!

 

“லுக்! இவ என் சிஸ்டர்! எனக்குத் தெரியும் இவளபத்தி! இன்னொரு தடவ இவளபத்தி ஏதாவது சொன்ன.. நான் எப்பவும் ஒன்னுபோல இருக்கமாட்டேன்!” என்றவள்  குறிஞ்சியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் படியேறினாள்.

அஷ்மியையும் ராகவையும் மாறி மாறிப் பார்த்தவள் இவனிடம் பார்வையாலே மன்னிப்பு  வேண்டியவளாக, அஷ்மியின் பின்னால் ஓடிவிட்டாள்.

“அஷ்மி! அஷ்மி நில்லு அஷ்மி!” என்று தன் பின் ஓடிவரும் தங்கையின் குரல் கேட்டாலும் நிற்காமல் நடந்தவள் அறையினுள் நுழைய  அவளைப் பின்தொடர்ந்தவளாக குறிஞ்சியும்.

தன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தவளாக அமர்ந்திருக்கும் அஷ்மிதாவை கண்டவளுக்கோ உள்ளுக்குள் உறுத்தியது. ஏதோ தவறிழைத்துவிட்டோம் என்று புரிந்தது ஆனால் என்னவென்று தான் புரியவில்லை. 

அப்பொழுதுதான் உரைத்தது காலையில் வந்ததிலிருந்து அஷ்மி தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்று. 

 

“அஷ்மீ..” 

“…..”

 

“என்கிட்ட பேசமாட்டியா?” என்றவள் குரலில் முழு ஏக்கத்தையும் தேக்கிக் கேட்க எதிரில் இருந்தவளுக்குத்தான் என்னவோ போலாகிவிட்டது.

 

“உன்கிட்ட பேசாம வேற யார்ட்ட பேசுவேன்?” என்று வாய் திறந்தாள் அஷ்மிதா.

 

“அப்போ என்மேல என்ன கோவம்?” என்றவளின் கேள்வியில் அடங்கிய கோபம் மீண்டும் தலை தூக்கியது.

 

“என்ன கோவமா? நீ பண்ண காரியத்துக்கு! இப்படிதான் சொல்லாம கொள்ளாம வருவியா? ஏன் இஞ்சி? எல்லாத்தையும் சேர்ந்தே தானே செய்வோம், எங்க போனாலும் சேர்ந்துதானே போவோம்.. எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பண்ணுவீயே? இப்ப மட்டும் என்னாச்சு?“ என்றவள் கோபத்தில் தொடங்கி அழுகையில் முடிக்க  அவள் கண்ணீரைக் கண்ட சிறியவளுக்கோ  அதுவரை இருந்த மற்ற பிரச்சனைகள் எல்லாம் பின்னுக்குச் சென்றுவிட அஷ்மியே பிரதானமாய் பட்டாள். 

 

“அஷ்மி….”

“பேசாத போ! உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? அந்த கால் வந்ததுக்கு அப்பறம், இங்க உன்ன பாக்கற வர உயிர கைலபிடிச்சிட்டு வந்தேன்”

 

“அஷ்மி.. சாரி அஷ்மி..”

 

“என்கிட்ட சொல்லனும்னு உனக்கு தோணவேயில்ல ல?” என்றவளின் குரல் உடைய  எழுந்து சென்று அமர்ந்திருந்தவளை  அணைத்துக் கொண்டவள் 

 

“தப்புதான்! நான் செஞ்சது தப்புதான்! எனக்கு அப்போ வேற வழி தெரியல அஷ்மி. எனக்கு அப்போ அம்மூவோட  கௌரவம் பெருசா தெரிஞ்சிது.  எந்த வீட்டுல அவங்க அவமானப்பட்டாங்களோ.. அதே வீட்ல அவங்கள மறியாதையோட வரவேற்கனும்னு தோணுச்சு, அப்பூவுக்கு அவங்க குடும்பத்த திருப்பி குடுக்கனும்னு தோணுச்சு அஷ்மி”

 

“இஞ்சி…”

 

“ஐ நோ… நான் செஞ்சது தப்புதான்! அசட்டு துணிச்சல்தான். ஆனா இன்னைக்கு, அப்பூ முகத்துல தெரிஞ்ச சந்தோஷம், அம்மூ இன்னைக்கு நிம்மதியா தூங்குவாங்கள்.. எனக்கு அதுபோதும் அஷ்மி. அதுக்காக என்ன வேணாலும் செய்யலாம்..”  என்றவளின்   கன்னம் வருடியவள்

 

“வலிக்குதா?” என்றாள் அவள் அறைந்ததைக் காட்டி 

கன்னத்தைத் தேய்த்துவிட்டவள் “லைட்டா, ஆனா எத்தன நாள் கோவத்த சேத்து வச்சு அடிச்ச? நல்ல வலுவா விழுந்துது” 

 

“ம்ம்ம்.. உன்னெல்லாம் இன்னும் நாளு சாத்து சாத்திருக்கனும்!”

 

“அதுசரி ராகவ்தான் கால் பண்ணானு எப்படி கண்டுபிடிச்ச?” 

“என்ன இஞ்சி நீ? அவ்வளவு கூடவா வாய்ஸ் தெரியாது? அதுமட்டுமில்ல நான் வந்ததுல இருந்து கவனிச்சிட்டுதான் இருந்தேன் அவன, இங்க நம்ம ஏஜ் க்ருப்ல இருக்கது நரேனும் அவனும்தான்”

 

“ஓ..” என்றவள் “ஆனாலும் அவன் ரொம்ப பாவம் அஷ்மி” என அஷ்மியின் முகமோ அஷ்ட கோணலாகியது!

************************************************************************************************************************

“யாழி எங்க அஷ்மிமா?” என்ற தந்தையைப் பார்த்து “அவ  கீழ இருக்காபா!” என்றவள்  லீலாமதியுடன் சேர்ந்து கொண்டு வந்திருந்தவைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்க  அஷ்மியின் கவனம் வாசல் புறம் திரும்பியது.

ஜிதேந்திரனோ வெளியே நின்றிருந்தவனை உள்ளே வரும்படி அழைத்தார்.

ராகவ் உள்ளே வந்த அடுத்த நொடி அஷ்மி  ஜிதேந்திரனின் அருகே வந்தமர்ந்தாள்.

அவனுக்கோ எப்படி தொடங்கவென்று  தெரியாமல் திணறியவன் பின் ஒரு முடிவுடன் முதலில் இருந்து அனைத்தையும் சொல்லியிருந்தான்.

அவன் சொல்லி முடிக்க அவனிடம் பாய்ந்திருந்தாள் அஷ்மி.

 

“எவ்ளோ தைரியம் இருந்தா? இஞ்சி கிட்ட இப்படியெல்லாம் நடந்திட்டு அத என்கிட்டயே  சொல்லுவ?” என்றவள் கத்த,  செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு வந்து அவளைப் பிடித்திழுத்தார் லீலாமதி.

 

“அஷ்மி! கண்ட்ரோல் யுவர் செல்ஃப்!” என்ற லீலாமதியின் அதட்டலில் 

 

“உனக்குத் தெரியாதுமா! இவன் நம்ம இஞ்சிய பத்தி என்னவெல்லாம் பேசினான் தெரியுமா?” என ஜிதேந்திரன்,

 

“அஷ்மிமா! நம்ம யாழியவிட ஒன்னு ரெண்டு வயசுதான் பெரியவனா இருப்பான்டா. இவனும் உனக்கு தம்பிதானே?  அவன்தான் வருத்தப்படுரானேடா தப்பு பண்ணிட்டான்னு” 

கோபம் குறையாவிட்டாலும் ஜிதேந்திரன் சொல்வதிலும்  நியாயம் இருப்பதாகப்பட  அங்கிருந்த இருக்கை ஒன்றில் கைகளைக் கட்டியவாறு அமர்ந்து கொண்டாள் அவள்.

சிறுபிள்ளைபோல் உர்ரென முகத்தை வைத்திருக்கும் மகளைக் கண்டவரின் இதழோரம் புன்னகை ஒன்று மலர ராகவிடம் திரும்பியவர் ஒரு பிரச்சனையுமில்லை என்று அவனிடம் உரைத்தார்.

 

 அவன் அஷ்மியை பார்க்க அதை உணர்ந்தவராக அவன் தோளில் ஆதரவாய் தட்டியவர் கண்ணசைக்க அவனும்  அங்கிருந்து விலகினான் மனநிம்மதியுடன்.

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில் அவர்கள் அறைக்கதவைத் தட்டினாள் குறிஞ்சி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!