O Crazy Minnal(39)

FB_IMG_1654019182583-139921c1

39

“ரேவ்ஸ்..  ரேவ்ஸ்ஸ்!” என்றவளின் கெஞ்சல் குரலுக்கு நேரெதிராய் கடுமையாய் ஒலித்தது ரேவதியின் குரல்.

“நோ வே!” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

வளர்மதியைக் கண்டவளோ “பாருங்க அத்த!“ என்று அவரிடம் முறையிட்டாள்.

அவரும் “ரேவதி…” என்று ஆரம்பிக்க ரேவதியோ யார் பேச்சையும் கேட்பதாக இல்லை.

“ரொம்பத்தான்!” என்று அலுத்துக் கொண்டவளாக “இப்போ எதுக்கு இப்படி பண்ற நீ?” என்று வினவினாள் குறிஞ்சி.

 “எதுக்கா? அப்ப உனக்கு தெரியாதில?” என்றவளை “ரேவதி!” என்று அதட்டினார் வளர்மதி.

“இரும்மா! என்னெல்லாம் சொன்னா நேத்து? மேடம நம்மளுக்கு பிடிக்காம போயிருமாம்..  வர ஆத்திரத்துக்கு!” என்று கோபமாய் தொடங்கியவள் குறிஞ்சியின் முகம் சுருங்குவதை கண்டு குரலைத் தாழ்த்தினாள்.

“ஐம் சாரி! ஆனா நீ அப்படி சொன்னப்போ எவ்ளோ சங்கடமா இருந்துச்சு தெரியுமா?” என்றவளின் குரலில் வலியின் சாயல்.

குறிஞ்சி என்ன சொல்லவென்று புரியாமல் விழிக்க நிலைமையைச் சமாளித்தார் வளர்மதி.

“ரேவதி,  அவ நேத்திருந்த மைண்ட் செட்ட யோசிச்சு பாரு!” என்றவர் குறிஞ்சியிடம் திரும்பி,

“இங்க பாரு குறிஞ்சிமா! இனிமே அப்படியெல்லாம் பேசக்கூடாது சரியா?” என அவளும் அவரிடம் தலையசைத்தாள் சம்மதமாக.

“ரேவ்ஸ்! நான்தான் சொல்றேன்ல இனிமே இப்படிலாம் பேச மாட்டேன்னு” என்க ரேவதியோ  போனா போகுது என்ற பாவனையில்,

“என்ன இருந்தாலும் நம்ம பிள்ளையா போயிட்ட, இந்த தடவ மன்னிச்சு விடறேன்!” என்றாள் கேலி புன்னகை ஒன்றை தத்தெடுத்தவளாக.

இவர்கள் இங்குக் கேலியும் சிரிப்புமாக இருக்க  இவர்களைக் கலைத்தது நரேந்திரனின் குரல்.

“ஓய்! உன்ன எங்கெல்லாம் தேடுறது? சரி சரி வா சீக்கிரம் கிளம்பு!” என அவளுக்குத்தான் எங்கே? என்ற கேள்வி உள்ளுக்குள்.

“எங்க? திடீர்னு?” என்றவள் கேள்வியெழுப்ப அவள் தோள்களின் மேல் கை போட்டவனோ

 “அடராமா! அதுக்குள்ள மறந்துட்டியா? திடீர்னுலாம் இல்ல, அன்னைக்கே சொன்னேனே  வெளிய போனும்னு” என்றவன் குரலில் போலியான சோகம் ஒன்று மேலிட  அவளும் தலையின் மேல் கை வைத்தவளாக

“அச்சச்சோ! மறந்தே போயிட்டேன் நரி!” என்றாள் அவனைப்போலவே போலியாய்.

‘சொர்ணாக்கா! ஈக்வல் டஃப் குடுக்கறாளே!’ என்றெண்ணியவன் “சரி சரி வா கிளம்பலாம்” என்று அவள் கரம் பிடித்து அறையில் இருந்து வெளியேற அவளோ தலையை மட்டும் திருப்பியவளாக  ரேவதியிடம்,

“நான்  உனக்கு ஸ்டிக்மிட்டாயும், பர்ட் ப்ரெடும் வாங்கிட்டு வரேன்” என்றாளென்றாள்  ரேவதியின் பார்வை நரேந்திரனிடம் சந்தேகமாய் பாய அவனோ  ஆமோதிப்பாய் தலையசைத்தான். 

அவனுக்குக் கண்களாலேயே ‘ஆல் த பெஸ்ட்!’ என்றாள் ரேவதி.

“இரு நரேன், நான் லீல்ட்ட சொல்லிட்டு வரேன்!” என்று அவள் வெளியேறிவிட அவள் பின்னே விரைந்தான் அவன்.

இங்கு வளர்மதியோ “அதென்ன பர்ட் ப்ரெட்?” என்று சத்தமாய் யோசிக்கச் சிரிப்பை அடக்கிய குரலில், “குச்சிமிட்டாயும் குருவிரொட்டியையும்தான் அப்படி சொல்லிட்டு போறா” என்று அவ்வளவு நேரம் உர்ரென இருந்தவள் இப்பொழுது கலகலவென சிரித்தாள். 

“ஓய் எங்க போற?” என்றவனின் கேள்வியில் பாதி படிகளைக் கடந்திருந்தவள் அவனிடம் திரும்பினாள்.

“லீல்ட்ட சொல்ல”

“அதெல்லாம் சொல்லியாச்சு!” என்றவனை அவள் சந்தேகமாய் பார்க்க அவனோ,

“அட நம்புமா! அத்தைகிட்ட கேட்டுட்டுதான் உன்ன கூப்பிட வந்தேன்” என்றவனின் குரலில் இருந்த பரபரப்பையும் உற்சாகத்தையும் கண்டவள் மறுபேச்சின்றி  கிளம்பினாள்.

*****************************************************************************************************************

 கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சை பசேலென, நீண்ட நெடிய தென்னை மரங்களுடன் மண்வாசமும் மனதைக் கவரக் கையில் அப்பொழுதே சீவியிருந்த இளநீருடன் சரிந்து நின்ற சிமெண்ட் திட்டின் மேல் வசதியாக ஏறி அமர்ந்திருந்தாள் அவள்.

அவள் பக்கத்திலேயே திட்டின்மேல் லேசாக சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தவனின் கண்ணசைவில் அவளுக்கு  இளநீர் சீவிக் கொடுத்தவன் இடத்தை காலி செய்திருந்தான்.

மெல்லப் பேச்சைத் தொடங்கினான் அவன்.

“ஏன் இஞ்சி.. எந்த நம்பிக்கையில என்கூட கிளம்பி வந்த? பெங்களூர்ல இருந்து..” என்றவனின் குரலில் தலையைக்கூட நிமிர்த்தாதவள்,

“சிம்பிள்! நம்பிக்கைதான்” என்றாள் 

“நம்பிக்கைன்னா?” என்றவன் மறுபடியும் வினவ இப்பொழுது தன் பார்வையை அவனிடம்  பதித்தவள்,

“நம்பிக்கைனா நம்பிக்கைதான்!” என்றாள் அழுத்தமாக.

“இங்க இருக்கவங்கள பத்தி அப்போ உனக்குத் தெரியாதுல…” என்றவன் இழுக்க

“அதான் நீ இருக்கல்ல?” என்று முடித்து வைத்தாள் அவள்.

“ஏன் இஞ்சி? அவ்வளோ நம்பிக்கையா? என்மேல” என்றவனைக் கண்டவளின் புருவங்கள் முடிச்சிட 

“இப்போ என்னாச்சு உனக்கு?” என்றாள் சந்தேகமாய்.

 “ஒன்னுமில்ல.. கேக்கனும்னு தோணுச்சு அதான்…”  என்றுவிட அவனையே கேள்வியாய் நோக்கியவள் பின்,

“என்னவோ தெரியல, உன்கூட இருக்கும்போது  ஐ ஃபீல் மை செல்ஃப்” என்றவள் ஒரு இளநகையுடன் “ஏன், நிம்மதியாக்கூட இருக்கு” 

என்றவளின்  கவனம் மறுபடியும்  இளநீருக்குத் திரும்பியது.

அவளின் வார்த்தை ஒவ்வொன்றையும் கேட்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் குளிர்காற்று வீச, மனம் முழுக்க மயிலிறகின் வருடல்.

அவனுக்குத்தான் எப்படி ஆரம்பிப்பது எதைச் சொல்வது எதை விடுவது என்று புரியவில்லை! 

மனதுக்குள் பல போராட்டங்கள்!   அருகிலிருப்பவளின் முகம் கண்டவனின் மனம் இளக, இன்றே சொல்லிவிட வேண்டும் என முடிவெடுத்தவனாக,

அவள் கவனம் இளநீரில் இருக்க யாருமில்லாததை உறுதிப்படுத்தி கொண்டவனைப்போலச் சற்று மேடாக இருந்த பகுதியில் இருந்து குதித்து இறங்கியவன் அவள் எதிரே வந்து நின்றான். ‘இவன் ஏன் இப்போ குதிச்சு விளையாடறான்?’ என்று தோன்ற இரண்டு கைகளாலும் இளநி கூடை பிடித்திருந்தவள் ‘என்ன?’ என்பதுபோல் பார்வையாலே வினவினாள்.

பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவன் அவளை உற்று நோக்கி “அப்போ என்ன கல்யாணம் பண்ணிப்பியா?” என்று ஆர்வமாய் கேட்டான். 

அவனது கேள்விக்கு எந்த விதமான முகபாவத்தையும் பிரதிபலிக்காதவள்

” எனக்கு இன்னொரு இளநீ வேணும்” என்று கேட்க

‘நான் என்ன கேக்கறேன் இவ என்ன சொல்ற?’ என்று தோன்றினாலும்

” வாங்கித்தறேன் இப்போ பதில் சொல்லு” என்றான் விடாப்பிடியாக

  மீதமிருந்த நீரை ஒரே மடக்கில் உள்ளே இறக்கிவிட்டு கூடை அங்கேயே ஒரு ஓரமாக வீசியவள் கீழே குதித்தாள்.

சட்டையின் கைகளை மடக்கியவாறு “என்ன அந்த ஆத்தங்கரைக்கு கூட்டுபோ!” என்றாள் அழுத்தமாக அதை மறுக்க மனமற்றவன்போல அவளை அழைத்துச் சென்றான்.

******************************************************************************************************************

அந்த ஆற்றங்கரையில், ஈரக் காற்று உடலை உரசிச் செல்ல, அவனோ பலவண்ண குழப்பங்களுடன். 

அவளிடம் அவன் உரைத்தவை, அந்த வார்த்தைகளில் அவள் அதிரவும் இல்லை கோபிக்கவும் இல்லை. அதே சமயம் மகிழ்ச்சியையும் அவள் முகம் பிரதிபலிக்கவில்லை!  

அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்ற சிந்தனையில் அவன் பரபரப்புடன்.

தோப்பிலிருந்து கிளம்பியதிலிருந்து இருவரிடையிலும் மௌனம் ஒன்றே மொழியாகிட, வார்த்தைகளுக்கு  தட்டுப்பாடு.

 சலசலவென சலங்கை ஒலியுடன் கண்ணாடி தண்ணீரில் பாறைகளால் பாசி வண்ணம் ஆங்காங்கே தென்படச் சரளமாய் ஓடிக்கொண்டிருந்த ஆற்றுநீரை காலால் அலைந்தவாறு தூரத்து மலையடிவாரத்தில் பார்வை பதித்திருந்தவளுக்குச்  சற்று நேரம் பிடித்தது நேற்று நடந்த களேபரத்திலிருந்து வெளியே வருவதற்கே! 

என்னதான் எல்லோரிடமும் சிரித்து பேசினாலும், ஓரத்தில் இன்னும் அந்த அதிர்வலைகள் இருக்கத்தான் செய்தன.

அவளுக்குமே எதை எப்படிச் சொல்வதென்று புரியாத நிலைதான்.

இப்படியொரு நாள் வருமென்று அவள் எதிர்பார்த்ததுதான்.

ஆனால்  திடுதிப்பென அவன் இப்படி, இன்றே  கேட்கக்கூடும் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.

பாறை ஒன்றின் மேல் அமர்ந்திருந்த இருவரின் எண்ணங்களும் ஆற்றுக்குச் சமமாக ஓடிக்கொண்டிருக்க,

“ம்ம்ம் உன் ஃப்யூச்சர் ப்ளான் என்ன நரி?” என்றாள் பார்வையைத் தொலைதூரத்தில் தென்பட்ட மலையடிவாரத்தில்  பதித்தபடி.

ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்க தோன்றவில்லை அவனுக்கு

“MBA முடிக்கனும், பிஸ்னஸ டெவலப் பண்ணனும்.. சக்ஸஸ்ஃபுல் பிஸ்னஸ்மேன் அண்ட் ஏன் ஐடியல் லைஃப் பார்ட்னர்! மாமாவபோல” என்று கண்சிமிட்டலுடன் முடித்தவனின் குரலில் குறும்பு கூத்தாடியது.

அதை கவனியாதவள் போல “என்கிட்ட கேட்க மாட்டியா?” என்றாள்

“எங்க நான் கேட்டதுக்கே பதில் வரல” என்றவனைப் பார்த்து

“கேளேன்” என்றாள் அவள்.

“ம்ம்ம் சரி. சொல்லு உன் ஃப்யூச்சர் ப்ளான் என்ன இஞ்சீஈ?” 

“ம்ம்ம்.. நல்லா படிக்கனும், Ph.D பண்ணனும், பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணனும்…” என்றவளின் விழிகளில் பல மின்மினி கனவுகள் கரைதாண்டின.

“அப்புறம்…” என்று அவள் இழுக்க 

“அப்புறம்?” என்றான் அவன் கேள்வியாக.

“ஒருத்தனிருக்கான் நரி…” என்றவளின் வார்த்தைக்கு உணர்ச்சிகளைத் துடைத்த அவனது முகமே பதிலாக அவளே தொடர்ந்தாள்.

“ரொம்ப நாள் முன்னாடி, என் லைஃப்ல மின்னல் மாதிரி.. ம்ம்ம் இல்ல இல்ல தென்றல்  மாதிரி  வந்தான்! அந்த குறும்புத்தனத்த குத்தகைக்கு எடுத்த இதழும், பாசத்த மட்டுமே எனக்கு காட்டின கண்ணும்..” என்று அவள் உணர்ந்து  சொல்லிக் கொண்டிருக்க அவனோ 

“வா யாழி வீட்டுக்கு போலாம்.. இருட்டப்போகுது!” என்று எழுந்தவன் இரண்டு எட்டு எடுத்து வைத்தான்.

‘ஓஹோ! அதுக்குள்ள இஞ்சி யாழி ஆகிட்டாளா? ம்ம்ம்’ என்றெண்ணியவள் எழுந்து வேகவேகமாக அவன் முன் வந்து நின்றாள்.

மூச்சுவாங்க தன் முன் வந்து நிற்பவளையே உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவன்

“ஏன் இப்படி ஓடுற? பாரு மூச்சு வாங்குது!” என்றான் கண்டிப்பாக.

‘ரொம்பத்தான் கரிசனம்!’ என்று பொருமியவள் ‘சரியான ட்யூப்லைட்டா இருக்கியேடா நரி!’ என்று அவனைத் துவைத்துத் தொங்கவிட்டாள் மனதினுள்.

முன்னே வந்து நின்றவள் ஏதும் சொல்லாது ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்க அவளைத் தாண்டிச் செல்ல ஓரெட்டு எடுத்துவைத்தான் நரேந்திரன்.

அவன் அசைவில் கலைந்தவளாக அவன் கையை பிடித்து  நிறுத்தியவள் ஆள்காட்டி விரலை ‘ஒரு நிமிஷம்’ என்பதுபோல் காட்ட அவனும் நின்றான்.

கால் சிராயைக் கொஞ்சம் மேலே வசதியாக இழுத்து விட்டவள் ஒரு காலை மட்டும் முழந்தாளிட்டு அமர்ந்தாள்.

‘என்ன பண்றா இவ?’ என்று அவன் குழம்ப அவன் கண்களையே உற்று நோக்கியவள் இரண்டு கைகளையும் அவன் புறம் நீட்டினாள் அவன் கைகளை அதில் வைக்குமாறு.

‘என்ன?’ என்பதுபோல் அவன் பார்வையாலேயே வினவ அவளோ வாயைத் திறவாமல் கண்ணசைத்தாள் கையை வைக்குமாறு.

அவனும் அவன் கைகளிரண்டையும் அவளதில் வைக்க அதை மென்மையாக தன் கைகளில் ஏந்தியவள் அவன் கண்களையே பார்த்தவாறு,

“அந்த குறும்புத்தனத்த குத்தகைக்கு எடுத்த இதழும், பாசத்த மட்டுமே எனக்கு காட்டின கண்களும், எனக்கு.. எனக்குன்னு மட்டுமே கடைசிவரை கிடைக்குமா?”  

என்று தன் உணர்வுகள் அனைத்தையும் வார்த்தைகளில் வடிக்கமுடியாவிடினும், அதில் பாதி மொழியாலும் மீதி விழியாலும் உணர்த்தினாள். 

சொல்லச் சொல்ல அவள் கண்கள் மட்டுமின்றி அவனது விழிகளும் பனித்தன.

விழிகள் இரண்டும் வானவில்லாய் விரிய அதில் அதிர்ச்சி, ஆனந்தம், காதல் என்று அத்தனை உணர்வுகளும் கலவையாய் வழிய நின்றவன்,

“ம்ம்ம் மிஸ்டர்.இஞ்சி ஆக ரெடியா?” என்று அவள் முடிப்பதற்குள் அவள் அளவிற்கு மண்டியிட்டு அமர்ந்து அப்படியே அவளை அவன் கைகளுக்குள் அடக்கிக்  கொண்டான்.

அவன் அணைப்பில் அவளிருக்க, அவள் மனம் முழுதிலும் அவனும், அவனதில் அவளுமென நிறைந்திருக்க,  அந்த அணைப்பு, அந்த இறுக்கம், பச்சிலை வாசம், ஆற்றுநீரின் நடனம், பட்சிகளின் பாசக்குரலின் ஓசை என அத்தனையும் அவர்களுக்கான தனிமையை இனிமையாக்கியது. தன்னை இறுக்கி அணைத்திருந்தவனின் காதலில் அமிழ்ந்தவளோ மீண்டெழ முயலவில்லை. 

ஆனால் முதலில் மீண்ட அவனோ அவள் முகத்தை கைகளிரண்டாலும் பற்றியவாறு, கண்கள் பளபளக்க மொழி மறந்தவனாய் திணறி பின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் மணியாய் கோர்த்தெடுத்தான்.

அப்படியா? என்பதுபோல் அவன் தலையசைத்து அவள் விழி நோக்க அவளோ ஆம் என்பதாகத் தலையை  வேகமாய் மேலும் கீழுமாய் அசைத்தாள்.

காதல் உலகில் மௌனம் மொழியாகிட, அவளது அலாதி அன்பினில் அமிழ்ந்திடத் துடித்தவனின் நெற்றியில் தன் இதழ் பதித்தவள் அவன் சுதாரிக்கும் முன்னர் எழுந்தோடினாள். 

“ஏ” என்றவன் அழகான அதிர்ச்சியில் சிக்க அவளோ அவன் புறம் திரும்பியவாறு பின்னோக்கி நடந்தவள் 

“நீ குடுத்தது.. உனக்கே திருப்பி குடுத்துட்டேன்! இந்த இஞ்சி கடன்காரியா இருக்கமாட்டா!” என்றாள்.

தான் எப்பொழுது கொடுத்தோம்? என்று ஓடிய சிந்தனையில் வேகத்தடையாய் வந்துபோனது அவன் முதன்முதலில்  முத்தம் பதித்த நாள்.

ஆனால்.. என்றெண்ணியவனின் கண்கள் விரிய அவளையே அதிர்ச்சியாய் நோக்கியவன்,

“அப்போ.. நீ?” என்றிழுக்க அவளோ முன்னே திரும்பியவளாக

“ பத்துமணி.. மொட்டமாடி..” என்று வார்த்தைகளை  மட்டும் அவனிடம்  அனுப்பியவளாக  தனக்குப் பிடித்த பாடல் ஒன்றை அவள்  வாய் முணுமுணுக்கத் துள்ளலுடன் ஓடினாள்.

 ***************************************************************************************************************************

“அடடா பிரம்மன் புத்திசாலி

அவனை விட நான் அதிஷ்டசாலி

ஓஹோ!”  என்ற வரிகளை வாய்விட்டுப் பாடியவளாக,  நடையில் ஒருவித துள்ளலுடன் வீட்டினுள் நுழையும் குறிஞ்சியைக் கண்ட கார்த்திகாவோ அவளது இந்த துள்ளலின் காரணம் புரியாமல் போக,

“என்னக்கா? பாட்டெல்லாம் பலமா இருக்கு” என்றாள்.

கண்களில் ஆச்சரியம் வழிய தன்னிடம் கேட்கும் சிறியவளின் மூக்கின் நுணியைப் பிடித்துக் கிள்ளியவள் “ம்ம்ம்.. குறிஞ்சி ஹாப்பி அண்ணாச்சி!” என்று ஓடிவிட மூக்கை தேய்த்தவாறு நின்ற கார்த்திகாவையே ஆராய்ச்சியாய் பார்த்தபடி வந்தாள் ரேவதி.

“என்ன கார்த்தி? மூக்க தேச்சிட்டு நிக்க?”

“அதொன்னுமில்ல ரேவதி, இந்த குறிஞ்சி அக்கால்ல.. ரொம்ப குஷியா வந்தாங்க, என்னன்னு கேட்டதுக்கு மூக்க நுள்ளிட்டு ஓடிட்டாங்க” என்க ரேவதிக்கோ உள்ளுக்குள் ஆச்சரியமே மேலோங்கச் சிறியவளை சமாதானப்படுத்தியவளாக அங்கிருந்து கூட்டிச் சென்றாள்.

“ஹ்ம்.. ஹம்..” என்று ஹம் செய்தவாறு அவள் அறையினுள் நுழைய அவளுக்காக  அங்கு காத்திருந்ததுபோல்,

“ம்ம்ம்.. அவளே வந்துட்டா! பேசு”  என்றவாறு லேப்டாப்பில் யாரிடமோ உரைத்த அஷ்மிதா  குறிஞ்சியிடம் கண்ணசைத்தாள்.

“யாரு?” என்று அவள் சைகையில் வினவ  அவளிடம் வந்தவளோ “ புவி! செம கடுப்புல இருக்கா” என்றவள் “நான் அப்பாவ பாத்துட்டு வரேன்” என்று ஓடிவிட்டாள்.

‘அடிப்பாவீ அஷ்மீ! இப்படி மாட்டிவிட்டீயே!’ என்று பொருமியவள் லேப்டாப்பின் முன் அமர்ந்தாள். அடுத்த ஒருமணிநேர அர்ச்சனையைக் கேட்கவென்று. ஆனால் அரைமணிநேரத்திலேயே அவளைக் காக்க வந்தவனைப்போல அந்த அறையினுள் நுழைந்தான் ராகவ்.

***********************************************************************************************************************

டொக் டொக் என இருவிரல்கொண்டு வாசல் கதவைத் தட்டியவனைக் கண்ட ஜிதேந்திரன் அவனை உள்ளே வரும்படி அழைத்தார்.

வந்ததில் இருந்து பிணைந்திருந்த தன் கைவிரல்களையே ஆராய்ந்து கொண்டிருந்தவனை அவரின் கூர் பார்வை தொடர, ஒரு முடிவெடுத்தவனாகத் தலை நிமிர்ந்தான் நரேந்திரன்.

“நான்.. நான் யாழிய…” என்றவன் தொடங்க அவரோ

“தெரியும்” என்றார் அவனை அதிர வைத்தவராக.