4
‘என்னை தாலாட்ட வருவாரா..’ என்று எல்லோரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக்கிடக்க, அவர்களது ஏக்கத்தை உணர்ந்தோ என்னவோ எப்போதும் போல் இப்போதும் தனது வேக நடையுடன் அனைத்து மாணவச் செல்வங்களையும் ஒரே பாராவில் தூங்க வைத்துவிட வந்து கொண்டிருந்தார் ஜகன்நாத்!
பெயரில் மட்டுமின்றி அவர் குணமும் அப்படியே! அனைத்து மாணவர்களையும் தன் பிள்ளையைப் போல் நினைப்பவர். அதுவும் திட்டும்பொழுது சொல்லவா வேண்டும், ஜகஜோதியாய் இருக்கும் அவர்களது வகுப்பே. சில பல ஆக்ஷன் ஸீக்வன்ஸ்ஸை நேரில் காணலாம். வார்த்தையில் கூட இவ்வளவு வன்முறையா என்று தோன்றுமளவு!
குறிஞ்சி எவ்வளவு முயன்றும் அவளால் அவள் இமைகளைத் தடுக்கவே முடியவில்லை.
அவர் கர்மமே கண்ணாகத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க இவள் பக்கத்திலிருந்த புவனோ பாதி பாட்டில் தண்ணீரை காலியாக்கியிருந்தாள். இவர்கள் இருவருக்கும் பக்கவாட்டிலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த ரிஷியோ அரை மயக்க நிலையில் இருந்தான்.
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை பாட்டிலைப் படுத்திக்கொண்டிருந்த புவனாவிற்கு வலது பக்கமிருந்த ஸ்வரா
“ஏ! என்ன புவி பண்ற நீ?”
“பார்த்தா தெரியல? தண்ணி குடிக்கறேன்”
“அதுதான் கேக்கறேன்.. ஏன் இவ்ளோ தண்ணீ?” கேட்டதுதான் தாமதம்
“மனுசனாய்யா அவரு? இல்ல தெரியாமத்தான் கேக்கறேன் இப்படியா ஒரு மனுஷன் கேப் விடாம நடத்துவான்? அதான் கேட்டு கேட்டு டயர்டாகி தண்ணி குடிச்சிட்டு இருக்கேன்” என்று புவன் புலம்ப இந்த ஓரத்திலிருந்த குறிஞ்சியோ
“ஓய்! சத்தம் போடாதீங்க.. இரண்டு தடவை திரும்பி பார்த்துட்டாரு” என்று உதட்டையசைக்காமல் பேசினாள்.
அவள் சொன்ன செய்தியில் பதறிய புவனா மறுபடியும் பாட்டிலைத் தேட ஸ்வரா நோட்ஸை தொடர்ந்தாள்.
ஸ்வரா தீவிரமாக நோட்ஸ் எடுத்து கொண்டிருக்க
“டேய் பங்கு! எப்படிபா.. இதே டாபிக்க அவர் நாலாவது தடவையா எக்ஸ்ப்ளெய்ன் பண்றாரு.. ஆனா இவ என்னமோ முதல் தடவை மாதிரி நோட்ஸ் எடுக்கறா?” என்று வினவக் குறிஞ்சி
“பதினாலாவது தடவையும் அவ இதே மாதிரிதான் எடுப்பா” என்றாள்.
ஸ்வரா புவனாவின் இடுப்பில் கை முட்டியால் இடிக்க
‘என்னவாம்?’ என்றவள் பார்க்க அவரது பார்வையோ இவர்களை துளைத்துக் கொண்டிருந்தது.
“என்ன பங்கு இப்படி மொறச்சு பாக்கறாரு” என்று தலை கவிழ அவர் என்ன சொல்லியிருப்பாரோ அதற்குள் அங்கே சில ஸ்டாஃபுகளுடன் ஹெச்.ஓ.டீயும்
“எக்ஸ்க்யூஸ் மீ சர்” என்றவாறு உள்நுழைய
புவன் “நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்..” என்று பாடினாள். அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் ஸ்வரா
‘ஏன்டா ஏன்?’ என்று பார்த்து வைத்தாள்
“உங்களுக்குலாம் எத்தன தடவை சொல்லனும்? இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸ்!” என்ற லைப்ரரியனின் குரலில்.. இல்லை கத்தலில் இவர்கள் கவனம் அங்கே திரும்ப அவரோ வழக்கம்போல் தனது அர்ச்சனையை ஆரம்பித்திருந்தார்.
“டேய் என்ன ட்ரெஸ் இது.. பாதி பேன்ட் எங்க? உன் தலைல என்னடா யாரோ நாத்து நட்றுக்காங்க? என்ன ஹேர் ஸ்டைல் இது?” என்று அவர்களை வறுத்தெடுத்தவர்தான் பல வருடங்களாக அந்த கல்லூரியின் டிஸிப்ளின் ஹெட்.
இது அடிக்கடி நடக்கும் ஒன்று தான் இவர்களும் லேசு பட்டவர்களில்லை சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ‘ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்!’
காச்சு காச்சென்று காய்ச்சியவர் கடைசியில் கிளம்பும் பொழுது “ஸி.ஆர். யாரு?” என்க அவ்வளவு நேரம் கடைசி பக்கத்தில் கை போன போக்கில் கிறுக்கிக் கொண்டிருந்த ஸ்வரா பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்.
“மீட் மீ ஆஃப்டர் திஸ் க்ளாஸ்” என்று சென்றுவிட்டார்.
“ஓகே சர்” என்றவளைப் பார்க்கப் பார்க்க இவர்களிருவருக்கும் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.
“இதுக்குத்தான் ஸி.ஆர். ஆகக் கூடாதுங்கறது”
“நானா கையத் தூக்குனேன்?” என்று புவனாவை முறைக்கவும் பெல்லடிக்கவும் சரியாக இருந்தது.
“நாங்க போய் இடம் புடிக்கறோம்.. நீ அந்த கும்பகர்ணன எழுப்பிரு” என்று ரிஷியின் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைத்து இருவரும் கேண்டினை நோக்கி ஓடிவிட
“ஆஆஆ! லூசு மேடி” என்றெழுந்தவனும் மணியைப் பார்த்துவிட்டு கேண்டினை நோக்கி ஓடினான்.
*****************
“அங்கிள்! ஒரு ப்ளேட் பூரி” எப்படியோ அந்தக் கூட்டத்தினுள் நுழைந்து அவள் டோக்கனையும் வாங்கிவிட
“செம மேடி!”
“இந்த கதையெல்லாம் வேணாம்.. நீதான் போய் வாங்கிட்டு வர” என்று புவனின் கையில் அந்த டோக்கனை கொடுத்தவள் அங்கிருந்த டேபிளில் அமர்ந்து கொள்ள, புவனாவும் சென்றுவிட்டாள். அவள் சென்ற சில நிமிடங்களிலேயே அநாவசியமாக ஆஜரானான் அர்ஜுன்.
“ஹாய் யால்!” என்று அவள் பக்கத்து சேரில் அமர
“இட்ஸ் யாழ் அர்ஜுன்” என்றவளின் குரலிலோ எரிச்சலே ஏக்கர் கணக்கில்.
“ஓ.. ஓகே யாழ். நேத்து உனக்கு கால் பண்ணனும்னு நினைச்சேன்.”
“ஏன்?”
“எனக்கு டௌப்ட் இருந்தது”
“எதுல?”
“எல்லாத்துலயும்..” என்றுவிட்டு ஏதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டதைப் போல் அவன் சிரிக்கக் குறிஞ்சியோ ‘லூசு’ என்று பார்த்தாள்.
“ஆனா கூப்பிடல”
“ஏன்?”
“இல்ல நான் கூப்ட்டு உங்கம்மா அப்பா யாராவது எடுத்து திட்டிட்டாங்கன்னா?”
“அவங்க ஏன் திட்டப் போறாங்க?”
“சரி அப்போ நான் இனிமே டௌட் இருந்தா கால் பண்றேன்”
“ம்ம்ம்” என்றவள் ஃபோனை நோண்ட
முதலில் மெதுவாக எதையோ முணுமுணுத்தவன் இப்பொழுது அவள் காதில் விழும்படியே,
“உன் சமையலறையில் நான் உப்பா.. சர்க்கரையா?” என்ற பாடல் வரிகளை முணுமுணுக்க
சற்றும் யோசியாமல் இவள் “பெருங்காஆஆஆயம்!”என்றுவிட அவன் திருதிருவென விழிப்பதை பார்த்துவிட்டு
“பெருங்காயத்துக்கு தெலுங்குல என்ன அர்ஜுன்?” என்று அப்பாவியாய் கேட்டாள் அவனோ
“எனக்கு தெலுங்கு அவ்ளோவா தெரியாது குறிஞ்சி.. லேட்டாயிடுச்சு பாரு நான் கிளம்பறேன்” என்று ஓடிவிட்டான்.
கையில் சுடசுட பூரி தட்டை ஏந்திவந்த புவன்,
“ஏ! என்ன யோசனை?”
“ம்ம்ம்.. காதுக்குள்ள வந்து காதல் பாட்டு பாடுற காட்ஸிலாக்கள என்ன பண்றதுனு யோசிக்கறேன்” என்று சீரியஸாக சொல்ல
“என்ன ரகசியம் பேசறீங்க ரெண்டுப்பேரும்? எங்கள விட்டு” என்று ரிஷியும் ஸ்வராவும் அங்கு வந்தனர். அவர்களிடம் முதலில் இருந்து சொல்லியவள் பாடலிற்கான அர்த்தத்தையும் விளக்க.
ஒன்றுமில்லாத விஷயத்தையே ஒரு மணி நேரம் பேசுபவர்களுக்கு இப்படியொரு அருமையான கன்டன்ட் கிடைத்தால் சும்மாவா விடுவார்கள்? இவர்கள் அடித்த அரட்டையில் அந்த கேன்ட்டின் கௌன்ட்டரில் நின்ற அங்கிளே “ஹே வாண்டுகளா டைம் ஆகிடுச்சு பாருங்க..”என்றவர் அருகில் வந்து மெதுவாக “ஹெச் ஓ டீ க்ளாசுக்குப் போயாச்சு” என
“என்னது?” என்று ஸ்டாஃப் பகுதியை எட்டிப் பார்க்க அதுவோ வெறிச்சோடி கிடந்தது.
“என்ன அங்கிள் முதல்லயே சொல்ல கூடாதா..” என்று மின்னல் வேகத்தில் கிளம்ப அவர் “இப்போ அவர் க்ளாஸா?” என்று கேட்க
“ஆமாம்”என்று அங்கிருந்து ஓடியவர்களுக்கு ஒரே நிம்மதி என்னவென்றால் ஹெச் ஓ டீயாகப்பட்ட கங்காதர் யாரிடமோ நின்று பேசிக் கொண்டிருந்ததுதான். இவர்களைப் பார்த்து ஒரு சின்ன புன்னகையை வீச இவர்களோ பதிலுக்கு ‘ஈஈஈ’ என்றுவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினர்.
அவர் ஃப்ரெண்ட்லியான ஹெச் ஓ டீதான், ஆனால் அதே சமயம் டெரர் பீஸும் கூட. ஹெச் ஓ டீயாச்சே!
ரிஷி “ஹே செம ஃப்ரெண்ட்லில..”
புவன் “ஓ.. அப்படியா ராசா அவர் க்ளாசுக்கு அஞ்சு நிமிஷம் லேட்டா போய் பாரு, எம்புட்டு ஃப்ரெண்ட்லின்னு தெரியும்”
அதற்கடுத்து அவன் ஏன் அங்கு நிற்க போகிறான்.
***************
“அநியாயம் பண்ற அம்மூ நீ!” என்று சமையல் மேடையிலிருந்து குதித்து இறங்கினாள் குறிஞ்சி.
“என்ன அநியாயம் பண்ணிட்டாங்க?”
“பின்ன எதுக்கு இப்ப அந்த கேஷு டப்பாவ அங்க தூக்கி வச்ச”
“கேசர்பாத்ல போட ரெண்டாவது வேணும்ல”
“எப்படியும் சாப்பிடத்தானே போறோம்”
“அதுக்குனு இப்படியா?” எனவும் காலிங் பெல் கதறவும் சரியாக இருந்தது.
“அப்பூ வந்தாச்சு!” என்று துள்ளி ஓடியவளைப் பார்க்கப் பார்க்க சிரிப்புதான் வந்தது லீலாமதிக்கு.
“அஷ்மி எங்கடா?”
“அவ லாப்டாபோட டூயட் பாடிட்டிருக்கா” என்றவாறே அவர் பேகை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“லீல் எங்க?”
“அம்மூ! அப்பூ கூப்டிங்க்ஸ்!” என்று கத்தியவள் அவளது ஃபோனை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு
“அஷ்மி!” என்று ஓடிவிட்டாள்.
உடை மாற்றி வந்த ஜிதேந்திரனை ‘ஹகூனா மடாட்டா’ வரவேற்க
“கண்ணா ஃபோன்!” என்க இதையெல்லாம் தங்கள் அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குறிஞ்சி
“அப்பூ யாருன்னு கேளேன்.. டூ மினிட்ஸ் வந்துட்டேன்” என்றாள்.
அஷ்மி “என்ன இஞ்சி பண்ற?” என்று புரியாமல் கேட்க
“ப்ச்.. உஷ்! ஜஸ்ட் வெய்ட் அன்ட் வாட்ச்” என்று வாய் மேல் விரல் வைத்துச் சொல்ல இரு சகோதரிகளும் மறைந்திருந்து கவனித்தனர்.
“யார் இஞ்சி அந்த அப்பாவி?”
“உஷ்! சும்மா இரு அஷ்மி.. நான் அம்மூக்குதான் ப்ளான் பண்ணேன் பட் அப்பூ.. சரி பரவால்ல பாப்போம்” என்று சுவாரஸ்யமாகக் கவனித்தாள்.
“ஹலோ!”
“…”
“ஹலோ அர்ஜுன்”
“ஹலோ அங்கிள் நான் அர்ஜுன் குறிஞ்சியோட க்ளாஸ்மேட்” என்று உளறிக் கொட்ட
“ஹான் சொல்லுப்பா. குறிஞ்சி கொஞ்சம் வேலையா இருக்கா”
“ஓ.. இல்ல அங்கிள் டௌட் இருந்தது அதான் கேக்லாம்னுட்டு..”
“டூ மினிட்ஸ் அர்ஜுன்” என்றுவிட்டு ‘ கண்ணா! உன் க்ளாஸ்மேட் அர்ஜுன்”.
“இதோ வரேன்” என்றோட அவள் பின்னாடி வந்த அஷ்மி,
“இது உலக மகா நடிப்புடா சாமி!” என்க அவள் கையில் நறுக்கென்று கிள்ளியவள் ஃபோனை வாங்க, உப்பு சப்பு பெறாத ஒரு சந்தேகத்தைக் கேட்டுவிட்டு அவன் வைத்துவிட்டான்.
கையை தேய்த்துக் கொண்டே சிரித்து கொண்டிருந்த அஷ்மியைப் பார்த்து
“என்னாச்சுடா? ” என்றார் ஜிதேந்திரன்.
“அது ஒன்னுமில்லப்பூ ஷாக் ட்ரீட்மென்ட்!” என்று குறிஞ்சி கண்ணடிக்க அவர் புரியாமல் விழித்தாரென்றால் அங்கு வந்த லீலாமதி,
“இன்னுமா புரியல அவ உங்கள கோர்த்து விட்றுக்காப்பா” என்று கைபுள்ளையைப் போல் சொல்ல அஷ்மியோ
“அது உனக்கு வச்ச ஆப்பு முருகேசா!” என்றுவிட்டுச் சிரித்தாள்.
‘அடியாத்தி’ என்று உள்ளே பதறினாலும் வெளியே அதை மறைத்தவாறு “சரி சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்று சமாளித்த லீலாமதியை கண்ட அஷ்மிதாவோ ‘என்ன ஒரு புத்திசாலித்தனம்’ என்று பார்க்க ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா’ என்று அவளை அங்கிருந்து நகர்த்திச் சென்றார்.