O Crazy Minnal(40)

FB_IMG_1654192785915-7af799a3

40

முன்தின இரவில் ராகவேந்திரன் வந்து சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம்  அங்கு அமைதியாய் வந்து நின்றாள் அவள்.

எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி தனது சுபாவத்திற்கு நேரெதிராய், அமைதியே உருவாய் வாசலில் வந்து நின்ற மகளைக் கண்டவருக்கோ உள்ளம் பிசைந்தது.

தந்தையின் பார்வை தன்மேல் விழுவதை கண்டு கொண்டவள் உள்ளே நுழைந்தாள்.

 

உள்ளே நுழைந்தவளைக் கண்டு ஜிதேந்திரன் தன் கரம் நீட்டி அழைக்க, அவளோ அத்தனை நேரம்  உணர்வுகளை அடக்கி தன் கட்டுக்குள் வைத்திருந்த கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றும் கன்னங்களில் உருண்டோட ஓடி வந்து அமர்ந்திருந்த தந்தையின் கைகளுக்குள் புகுந்து கொண்டாள்.  மௌனமாய் தன் தோள் சாய்ந்து கண்ணீரால் தன் அதிர்ச்சியைப் போக்கிக் கொள்ளும் மகளைக் கண்டவரோ அவளை உணர்ந்தவராக அவள் தலை கோதினார் ஆதரவாய். எவ்வளவு வளர்ந்தாலும் அவள் என்றும் அவரின் யாழிமாதானே!

கண்ணீர் உகுத்தாள். வார்த்தை உதிர்க்கவில்லை.

சற்று நிதானித்தவள் தலையை நிமிர்த்தியவளாக அவர் முகம் பார்த்தாள்.

 

“என்கிட்ட சொல்லிருக்கலாமே அப்பூ…” என்றவளின் குரலில் உடைந்தவர் அவள் கண்களில் இருந்து கசிந்த நீர்த்துளிகளை துடைத்தவராக அவளிடம் காட்டினார்.

 

“இதோ! இதுக்காகத்தான் சொல்லல…” என்றவரின் கண்கள் கலங்க அவர் தோளில் அழுத்தமாய்  படிந்தது லீலாமதியின் கரம்.

 

தன்னிடம் சாய்ந்தழும் மகளின் தலையை கோதியவர் தலை நிமிர்த்த அங்கு அவருக்கு ஆறுதலளிக்கும் வகையில் கண்களை மூடித் திறந்தார் லீலா.

வலக்கரம் கொண்டு மனைவியின் கரம் பற்றியவர் அவரையும் அருகில் அமரவைத்தவராக மகளிடம்,

 

“என் லீலாவோட மறுபக்கத்த எனக்கு காட்டினவடா நீ!” என்றவரை அவள் புரியாமல் பார்க்க அவரோ மனைவியின் கண்களில் கசிந்து நின்ற மையினில் கரைந்தவராக,  பின்னோக்கிச் சென்ற தன் மனதில் ஆழப் பதிந்த அந்த உரையாடலின் மிச்சத்தில் இன்னொரு முறை அமிழ்ந்தெழுந்தார்.

மனைவியிடம் தன் பார்வையை பதித்திருந்தவர் இப்பொழுது மகளிடம் திரும்பியவராக,

 

“அன்னைக்கு நான்.. லீலா சொன்ன வார்த்தை.. அது ஒவ்வொன்னும் அவ கடந்து வந்ததை மட்டுமில்ல, நீ கடக்க கூடாதத எனக்கு உணர்த்துச்சு” என்றவர் 

 

“அவ என்ன சொன்னா தெரியுமாடா? நான் அவகிட்ட போய் கேட்ட மறுகணம், என் கையை பிடிச்சிக்கிட்டவ சொன்ன அந்த ஒரு வார்த்தை, அதுதான் என் லீலாவுக்குள்ள இருந்த ஆராத ரணத்த எனக்கு உணர்த்துச்சு..

சாஞ்சு அழ ஒரு தோள் இருந்தா, இங்க  யாருமே அனாதை இல்ல ஜிதேன். எனக்கு நீங்க இருக்கீங்க, உங்களுக்கு நானிருக்கேன், இப்போ இவளுக்காக நாம இருப்போம்!னு அவ சொல்லும்போது அவ கண்ணுல இருந்தது.. அப்போ தான் புரிஞ்சது என் லீலாவோட உலகம் நான் அவள பார்த்ததுல இருந்து தொடங்கலன்னு “ என்றவர் உணர்ச்சிவசப்பட  

 

கணவனின் கைப்பற்றியவளோ ஆறுதலாய் ஓர் அழுத்தம் அதில் வைக்கத் தன்னிலை திரும்பினார் அவர்.

 

“அதனாலதான், எனக்கு இப்படி பேர் வச்சீங்களா?” என்றவளின் குரலில் தெளிவு வந்திருந்தது.

 

“எங்க வாழ்க்கையோட யாழிசைடா நீ!” என்ற லீலாமதியையும் ஜிதேந்திரனையும் அவள் சேர்த்தணைத்துக் கொண்டாள்.

 

“ஏன் அப்பூ? உனக்கு என் மேல கொஞ்சம்கூட கோவமில்லையா?” என்றவள் கேட்க அவரோ இளநகையொன்றை இதழ்களில் தவழ விட்டவராக,

 

“ஏன்டா கோவப்படனும்?” என்றார்.

 

“உன் கிட்ட சொல்லாம இங்க வந்துட்டேனே..”

“என் யாழிமா என்ன செஞ்சாலும் அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு எனக்குத் தெரியும்டா” என்றவரின் வார்த்தையில் அவள் உள்ளம் நெகிழ்ந்தது.

அவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்த மகள் மௌனமாகிடச்  சற்று பொறுத்தவர் பின் கேட்டுவிட்டார் என்னவென்று.

 

அவளுக்கு அவரிடம் தயக்கமில்லைதான், இருந்தும் ஏதோ ஒன்று தடுக்க சற்று பொறுமை காத்தவள்,

 

“நரேன பத்தி என்னப்பூ நினைக்கற?” என்ற கேள்வியை எப்படியோ கேட்டுவிட்டாள்.

 

அதற்குக் குறுநகையொன்றைப் பரிசளித்தவர்,“யாழி என்ன நினைக்கறாளோ, அததான் நானும் நினைக்கறேன்” என்றுவிட அவ்வளவு நேரம்  தலையை நிமிர்த்தாமல் இருந்தவள் அவரது வார்த்தையில் பட்டெனத் தலை நிமிர்ந்தாள் “அப்பூ!” என்ற அதிர்ச்சிக் குரலுடன்.

 

“நீ சொல்லலன்னா, எங்களுக்குத் தெரியாதா?” என்றவாறு வந்த அஷ்மி அவளை இன்னுமின்னும் அதிர்ச்சியில் தள்ளினாள்.

அதிர்ந்து விழிக்கும் மகளைக் கண்டவர் “என்னடா?” என்றவள் தலை வருட அவளோ இன்னும் அதிர்ச்சி விலகாத நிலையில்.

 

“இந்த அப்பாக்கு எப்படி தெரியும்னு நினைக்கற அதானே?” என்றவர் வினவ அவளோ ஆம் என்பதாக தலையசைத்தாள்.

 

“இத்தன வருஷமா, நீ எதுக்கு சிரிப்ப, எதுக்கு அழுவன்னு தெரிஞ்ச எனக்கு, உனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுனு கூடவா தெரியாமப் போகும்?” என அவள்தான் அடுத்த கட்ட கண்ணீர் கலவரத்துக்குத் தயாரானாள். 

 

அதில் பதறியவளாக அஷ்மியோ, “மறுபடியும் ஆரம்பிச்ச! அடிவிழும் பாத்துக்கோ!” என்றவள் ஜிதேந்திரனையும் லீலாமதியையும் பார்த்து

“இங்க வந்து இஞ்சி ரொம்ப அழுமூஞ்சியா ஆகிட்டால்ல?” என்று கேலியாய் வினவ அதில் வீராப்பாய் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அழவில்லை என்பதாய் நிமிர்ந்தாள்.

சிட்டுக் குருவியொன்று தன்கூட்டிற்கு திரும்பியது.

அதே சீண்டல்கள், கேலி பேச்சுக்கள், கால்வாரல்கள், இரசனை பரிமாற்றங்கள் என மணித்துளிகள் ஒவ்வொன்றும்  வெப்பக்காற்றில் பனியாய் கரைந்தது.

இரவு வெகு நேரம் சென்றுவிட, உறங்கவென்று படுக்கையைச் சரிசெய்து கொண்டிருந்த லீலாவிடம் வந்தவளோ,

 

“நான் இன்னைக்கு நடுவுல படுத்துக்கறேனே” என்றாள் ஆசையாய்.

அவளை உணர்ந்தவராக அவரும் தலையசைக்க தாய் தந்தையின் இடையில், அவர்களது அணைப்பில் இருந்தவள், அந்த கதகதப்பு தந்த இதத்திலும்  நிம்மதியிலும் கண்ணயர்ந்தாள். 

 

ஆனால், தங்களுக்கிடையில் மறுபடியும் அதே சிறுபிள்ளையாய் உறங்கும் மகளைக் கண்டவர்களோ உறக்கம் நழுவியதைக்கூட கவனியாமல் அலட்சியம் செய்தவர்களாய் அவள் முகம் பார்த்து பழைய எண்ணங்களின் இனிமையில் அந்த இரவை கடத்தினர்.

 

தன்னெதிரில்  அமர்ந்து தன்னையே  அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் நரேந்திரனிடம், அவர் சம்மதம் தெரிவித்ததைத் தவிர மற்ற எல்லாவற்றையும் உரைத்தவர் அவன் முகம் காண அதிலோ கலவையான உணர்வு.

 

முதலில் அதிர்ச்சி, பின் சாந்தோஷச் சாரல்கள். தன்னிலை பெற்றவன் பெற்றவரின் சம்மதம் வேண்டி அவர் முகம் காண அவரோ உணர்வுகளைத் துடைத்த முகமாய்.

பதிலேதுமின்றி அமைதி காப்பவரை கண்டவன் வாய்திறந்தான்.

 

“மாமா…” என்று தொடங்கியவன் பின் தயக்கத்தைத் தூக்கி எறிந்தவனாக அவரிடம் கேட்டான். 

அவனுள்ளமோ அப்படி என்ன நடந்துவிடக்கூடும்? என்னயிருந்தாலும் அவர் உன் மாமன்தானே? தயக்கமெதற்கு? என்றுவிட உறுதியுடன்,

 

“மாமா நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று கேட்டான் நிமிர்வாய்.

மனம் அவனின் நிமிர்வைக் கண்டு மெச்சிக் கொண்டாலும், கண்களில் கூர்மையுடன் அதற்கு நேரெதிராய் பேசினார் அவர்.

 

“பிடிக்கலைனு சொன்னா?” என்றவரின் குரலில் இருந்தது என்னவோ?

ஒருநொடி மனம் அதிர்ந்தாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனாய் அவர் கூர் பார்வையைத் தாங்கியவன்,

 

“காத்திருப்பேன் மாமா!” என்றான் 

இதை அவர் எதிர்பார்க்கவில்லையே. அதிர்ச்சியை மறைத்தவர் அவன் விழிப் பார்த்து,

 

“அப்போ, உன்ன வேணாம்னு சொன்னா எனக்கும் வேணாம்னு சொன்ன?” என்றார் கேள்வியாய். 

அவனுக்கு எதுவோ புரிவது போலிருக்க, வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அவரைக் கண்டவன்,

 

“என் சந்தோஷம் யாழிக்கிட்ட இருக்கு, ஆனா அவளோடது உங்ககிட்டதான் மாமா இருக்கு! இந்த குடும்பம் உடைஞ்சா நீங்க சந்தோஷப்படுவீங்களா?” என்றவனின் வார்த்தையில் மனிதர் ஃப்ளாட்!

 

அவன் உரைத்தவை ஒவ்வொன்றும் அவன் உள்ளத்தில் உள்ளவை! அதை அவரும் உணர்ந்து கொண்டார். அவருக்கு நரேந்திரனை பிடிக்கும். இருந்தும் மகளுக்கான அவனது எண்ணங்களைத் தந்தையாய் அறிய ஆசைப்பட்டார்.

அவனது பதிலில் திருப்தியான உணர்வொன்று எழ மனமெங்கிலும் நிம்மதியின் சாயல்.

“நரேன், அப்ப யாழிக்கு அஞ்சு  வயசிருக்கும்,  ஸ்கூல் வானை மிஸ் பண்ணிட்டா.  நான் மீட்டிங் முடிஞ்சு வெளில வரும்போதுதான் தெரியும். அடிச்சு பிடிச்சு நான் ஸ்கூலுக்கு போனா யாருமேயில்லாம தனியா உஞ்சல்ல கண்ணு நெறைய பயத்தோட உக்கார்ந்துருந்தவ, வாசல்ல என்ன பாத்த மறுநிமிஷம் ஓடிவந்து கட்டிபிடிச்சிக்கிட்டா. ஏதோ இனி பயமில்லை, நாம ஸேஃபா இருக்கோம்ங்ற உணர்வு அவ அணைப்புல இருந்துச்சு“ என்றவர் சொல்லிக் கொண்டே போக, எதற்காக இது என்று புரியாத பாவனையில் அவன்.

அதை உணர்ந்தவராக சொல்றேன் என்பதாக தலையசைத்தவர்,”அதே அஞ்சு வயசு யாழிய நேத்து  நான் பாத்தேன்” என்றார்.

அவன் புரிந்தும் புரியாத நிலையில் நிற்க, அவன் தோள்தட்டியவரோ,  

 

“அத்தன பேர் சொல்லியும் கதவ தொறக்காதவ உன் குரல் கேட்டு தொறந்தா. அங்க அத்தனை பேர் நின்னாங்க, ஆனா அவ உன்கிட்டதான் வந்தா“ என அவனோ

 

“மாமா!” என்றான் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய்.

 

“நானும் யாழியும் வேற வேற இல்ல நரேன்” என்றவரின் வார்த்தையில், தன் சம்மதத்தை இப்படிக்கூடத் தெரிவிக்கலாமா? என்று வியந்தவனின் உள்ளத்தில் ஆனந்தம் பெருவெள்ளமாய் ஓட அதில் தடுமாறியவன் அவர் எதிர்பார்க்காத நிலையில் அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டுவிட  அவர்களது உரையாடலை அவ்வளவு நேரம் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த அஷ்மியோ தலையில் அடித்துக் கொண்டவளாக,

 

“கருமம்! கருமம்! அவர் யாழியும் அவரும் ஒன்னுன்னு சொன்னது எண்ணங்களடா!” என்றவள் ஜிதேந்திரனிடம்

 

“அப்பா! எதுக்கும் அவன்கிட்ட இருந்து டென் ஸ்டெப்ஸ் தள்ளியே நிள்ளுங்க! வர வர அவன் ஆக்ட்டிவிட்டீஸ் எதுவும் சரியில்ல” என்றாள் 

அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையிலா இருக்கிறான்? உல்லாச ஊற்றில் ஊரே மௌனியாகிவிட, அவனுலகில் அவனும் அவனவளும் மட்டுமே! காதலின் சங்கீதத்துடன்.

“லவ் யூ சோ மச்! மாமா!” என்று கத்தியவன் துள்ளலுடன் அங்கிருந்து அகல அதுவே சொல்லியது அவன் அஷ்மியின் வார்த்தைகளைக் கவனிக்கவில்லை என்று. ‘அவகிட்ட சொல்ல வேண்டியதெல்லாம் அப்பாக்கிட்ட சொல்லிட்டு போறான்! எவனாவது மாமனாருக்கு முத்தம் குடுப்பானா?’ என்று புலம்பியவாறு அவள்  அந்த அறையினுள்  நுழைய அவனோ எப்பொழுதடா  பத்துமணியாகுமெனக் காத்திருந்தான்.

***********************************************************************************************************************

அதே சமயம்… அங்கு அவளறையில் லேப்டாப்பின் முன் அமர்ந்தவளாக, எதிரில் இருப்பவளின் கோபத்தை எப்படிச் சமாளிக்க என்ற சிந்தனையில் இருந்தாள் அவள், குறிஞ்சி.

 

“பக்கீ! எரும! பிசாசே!” என்று தனக்குத் தெரிந்த அளவில் திட்டி தீர்த்தவளுக்கோ கண்கள் கலங்கிவிட அத்தனை நேரம் அவள் திட்டல்களைப் பொறுத்திருந்தவளால் ஏனோ அந்த கண்ணீரை மட்டும் தாங்கி கொள்ளவே முடியவில்லை!

 

“ப்ளீஸ்டா! புவன் அழாதேயேன்…” என்றிவள் கெஞ்ச அவளோ

 

“ஒன்னும் பேசாத போ! அன்னைக்கு அவன் பேசும்போதே இடிச்சிச்சு! நான் கெஸ் பண்ணிருக்கனும், ச்சே!” என்றவள் தலையிலடித்துக் கொள்ள இங்கு இவளோ சந்தேகத்தில்,“எவன் பேசும்போது? என்ன கெஸ் பண்ணிருக்கனும்? தெளிவா சொல்லு “ என்றவளின் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன.

 

“அதுவா, நீ அன்னைக்கு ஃபோன் எடுக்காம டெக்ஸ்ட் போட்டல்ல,  சரியா பேசவுமில்ல..  அதான் நரேனுக்கு கால் பண்ணேன். அவனும் சரியா ரெஸ்பாண்ட் பண்ணல, சரி பெங்களூர் வந்துட்டு நேரா உங்க வீட்டுக்குதான் வந்தேன், ஆனா நீயில்ல.  அங்கிளும் ஆண்ட்டியும் டென்ஷனா கிளம்பிட்டிருந்தாங்க, அப்போதான் தெரிஞ்சுது” என்றவளின் விளக்கத்திற்கு இவள்

 

“ஓ…” என்று தலையசைக்க அதில் கடுப்பாகிய புவனாவோ

 

“டிக்கெட் கிடைக்கல.. இல்லன்னா நேர்ல வந்து நாலு சாத்து சாத்திருப்பேன்!” என அதில் பதறியவளாக 

“நல்ல வேளை கிடைக்கல! இங்க சாத்துனது பத்தாதா? நீ வேறயா?” என்றாள் போலியான சோகத்துடன்.

 

இவர்கள் இங்குப் பேசிக்கொண்டிருக்க வாசலில் கேட்ட டொக் டொக் என்ற கதவைத் தட்டும் சத்தம் இவர்களைக்  கலைத்தது.

 

“ஒரு நிமிஷம் புவன்” என்றவள் வெளியே எட்டிப் பார்க்க அங்கோ தயக்கமாய் நின்றிருந்தான் ராகவேந்திரன்.

அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்றாலும் சந்தோஷமாய் அவனை வரவேற்றாள் அவள்.

 

“ஐ! வாட் ஏ சர்ப்ரைஸ்! வா வா!” என்றவள் தன் முன் வந்து நின்ற ராகவேந்திரனின் கை பற்றி அவள் புறம் இழுத்தவளாக, அவளருகில் அமர வைத்துக் கொண்டாள். 

“புவன்! என் அண்ணா ராகவ்!” என்று ஆனந்தமாய் அறிமுகப்படுத்தியவளின் குரலில் இருந்த மகிழ்வு அவனை ஏனோ வருத்தியது.

குதூகலமாய் தன்னை பற்றி ஒவ்வொன்றாய் பெருமையாய் பேசும் அவளையே அவன் விழி தொடர அங்கு புவனும் அவனைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.

சுதாரித்தவளாய் தன் பேச்சை நிறுத்தியவள் ஒரு கேலி புன்னகையுடன்,  

 

“ஓய்! என்ன என் அண்ணன சைட் அடிக்கறீயா?” என்றாள் போலி அதட்டலுடன். அவளது குரலில் தன்னிலை மீண்டனர் இருவரும். அவன் இப்பொழுது லாப்டாப்பையும் கவனிக்க புவனாவும் குறிஞ்சியிடம் கவனம் பதித்தவளாய் வம்பிழுத்தாள்.

 

“ஆஹான்! ஆசைய பாரு ஆசைய” என்றவள் கிண்டலாய் மொழியக் குறிஞ்சியோ ராகவேந்திரனின் கரம் பற்றியவளாக,

 

“ஏனாம்? என் அண்ணனுக்கு என்ன கொறச்சலாம்?” என்றாள் 

 

“ம்ம்ம்.. உன் அண்ணன்கிறதே பெரிய கொறச்சல் இல்லையா?” என்றுவிட அதில் பட்டெனச் சிரித்தவள் ராகவேந்திரன் எதுவோ பேச விரும்புவதை உணர்ந்தவளாய் அவளை அப்புறமாய் அழைப்பதாய் கூறி வைத்தாள்.

அங்கு லேப்டாப்பை மூடிவைத்தவள் அவன் புறம் திரும்பினாள் என்னவென்பதாக.

 

அதற்காகவே காத்திருந்தவன்போல அவள் கைகளைப் பற்றிக் கொண்டவன் மனமாற “ஐம் சாரி குறிஞ்சி.. எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்!  அதுவும் என் தங்கச்சிய நானே.. வாய்க்கு வந்தபடி பேசி.. ச்சீ! நினைக்கவே கேவலமா ஃபீல் பண்றேன்” என்றவனிடம் என்னவென்று சொல்ல, அவளும் அவன் மனதில் இருப்பவை எல்லாம் வெளியே வரட்டும் என மௌனம் காத்தாள்.

 

“நான் கேட்டேன்.. அன்னைக்கு.. உன் ஃபோன திருப்பிக் கொடுக்க வந்தப்போ, கேட்டேன் நீ அப்பாகிட்ட எனக்காக பேசினத” என்க அப்பொழுதுதான் புரிந்தது அவள் ஃபோன் எப்படி அங்கு வந்தது என்று.

 

“ஐம் ரியலி சாரி!” என்றவன் தொடங்க அவளோ அமைதியான பார்வையுடன் அவனிடம்,

 

“நரேந்திரன உனக்கு பிடிக்கல.. ஏன் ராகவ்? என்கிட்ட கூட சொல்லக்கூடாதா?” என்று கேட்க அவனோ இதழ்களில் கசப்பான முறுவல் ஒன்று படர

 

“நரேனும் நானும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் குறிஞ்சி. அவன் இங்கதான் படிச்சான்“ என்றவன் பெருமூச்சொன்றை இழுத்து விட்டவனாகத் தொடர்ந்தான்.

 

“சின்ன வயசுல எனக்கு ஒன்னும் புரியல. ஆனா வளர வளரத்தான்  எங்களுக்குள்ள இருக்கற வித்தியாசம் புரிஞ்சது. அப்பாவோட ஆதங்கம் புரிஞ்சது. எல்லாரும் அவன தலைல தூக்கி வச்சிக்கிட்டு கொண்டாடும்போதுதான் புரிஞ்சது நான் என்னன்னு..  அப்பா எதிர்ப்பார்த்தெல்லாம் அவன்ட்ட இருந்துச்சு, ஆனா என்ட்ட? ஒவ்வொன்னுக்கும் நரேந்திரன பாரு நரேந்திரன பாருன்னு  குத்தி குத்தி காட்டுவாரு குறிஞ்சி. வாழ்க்கையே நரகமாகிருச்சு, நான் ஆசைபட்டத படிக்க முடியல. அவர் ஆசைபட்டத ஏத்துக்க முடியல. என்ன எல்லாரும் ஒதுக்கிட்டாங்க, நான் எதுக்குமே லாயக்கில்லாதவனாயிட்டேன்“ என்றவனின் குரலில் இப்பொழுது பரிதாபத்திற்குப் பதிலாய் கோபமே அவளுக்குள் எட்டிப்பார்க்க அதைக் குரலிலும் காட்டினாள் அவள்.

 

“லூசா ராகவ் நீ? நீ ஏன் நரேன ஒரு ஸ்டாண்டர்டடா வச்சுக்கற? அவனபோல இருக்கனும்னா நீ ஏன் ராகவ்வா பொறக்கனும்? ராகவ் தனி மனுஷன் அவனுக்குனு தனித் திறமை உண்டு. அதுல ஏன் நீ நரேன நுழைக்கற? அவன் யாரு மொதல? உன்ன போல ஒருத்தன் தானே? ஏன் அவன கூப்ட்டு நான் இப்போ ராகவ் மாதிரி நீ ஏன் இல்லனு கேட்க முடியுமா? முடியாதுல, அப்படிதான்! நீ வேற அவன் வேற! அப்புறம் என்ன சொன்ன? எல்லாரும் ஒதுக்கிட்டாங்களா? உன்னையா? இன்னைய வரைக்கும் உனக்காக பாத்து பாத்து செய்றவங்களாம் பைத்தியக்காரங்க இல்ல? எல்லாரும் அவன மொதல்ல கூப்பிடறாங்கன்னா அதுக்கு காரணம் அவன் எல்லாத்தையும் முன்ன  நின்னு செய்யறான். அதனாலதான் அவன்ட்ட சொல்றாங்க, ஏன்  உன்கிட்ட கேட்டதே இல்லனு சொல்லு? கேட்றுப்பாங்க, ஆனா நீ தொடர்ந்து  மறுக்கவும்தான் உனக்கு விருப்பமில்லைனு  உன்ன தொல்ல பண்ணக்கூடாதுனு விட்டுட்டாங்க“ என்றவள் இருத்த வேகத்தில் படபடவென பொரிந்துவிட்டாள்.

பின்னரே சிந்தனையில் சுருங்கியிருந்த அவனது நெற்றியைக் கண்டவள் அவனைப் பார்க்கவும் பாவமாய் இருக்க நிதானித்தவளாய்.

 

“ஐ நோ ராகவ்! உனக்கு இப்பவும் நரேன பிடிக்கும், ஆனா மத்தவங்க உங்க ரெண்டு பேருக்குள்ள வரவரைக்கும்! அஷ்மி என்னவிட திறமைசாலி! ஆனா இன்னைய வரைக்கும் எனக்கு அவமேல எந்தவிதமான போட்டியும் பொறாமையும் வந்ததில்லை. ஏன்னா, எனக்குத் தெரியும்! நான் குறிஞ்சி யாழ்! அவ அஷ்மிதா! அதேபோலத்தான் நரேன் நட்சத்திரமா ஜொலிச்சாலும் உன் வாழ்க்கைல நீதானே ஹீரோ?” என்றாள் எப்படியாவது இவனுக்குப் புரிந்து விடாதா என்ற எண்ணத்துடன்.

 

சற்று தெளிந்தவன்,“நீ சொல்றதெல்லாம் சரிதான்  குறிஞ்சி, ஆனா எல்லாம் ஒரே நாள்ல மாறிடாது. எனக்கும் எனக்குள்ள இருந்து வரதுக்கு டைம் வேணும்” என்று மெலிதாய் புன்னகைத்தவன் அவளிடம்

 

“ஏன் குறிஞ்சி உனக்கு என் மேல கோவமே வரலையா?” என்றான் ஆச்சரியமாய்.

கேலியாய் சிரித்தவளோ “யார் சொன்னா? நான் ஒன்னும் அவ்வளோ நல்லவலாம் கிடையாது! உன்மேல செம கோவத்துல இருக்கேன். ஆனா ஏனோ போனா போகுதுனு விட்டுட்டேன்” என்றவளைக் கண்டவன் இப்பொழுது புன்னகை புரிய அது அவளையும் தொற்றிக் கொண்டது.

வாசல் வரை சென்றவனைத் தடுத்தது அவள் குரல்.

 

“அதெல்லாம் சரி, நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். என் ஃப்ரெண்ட சைட் அடிச்ச அண்ணனு பாக்க மாட்டேன், அவ என்னப்போல சாந்த சொரூபி கிடையாது!” என்க அவனோ யாரு நீதான? என்று பார்த்து வைத்தான்

பின் முகம் முழுக்க புன்னகை பூசிக் கொள்ள விழிகள் இரண்டிலும் குறும்பு வழிய நின்றவன்,

 

“இதுவரை அந்த ஐடியா இல்ல.. பட் இப்போ பண்ணா தப்பில்லைனு தோணுதே!” என்றான் 

 

“பார்ரரா!” என்றவள் வாய்விட்டே அதிசயிக்க அந்த அறையைச் சின்ன சிரிப்பு சத்தத்தினால்  நிரப்பியவன் வெளியேறினான்.

அவன் செல்வதையே பார்த்திருந்தவளின் கவனம் கடிகாரத்தில் பதிய நாக்கை கடித்துக் கொண்டவளாய் படியை நோக்கி ஓடினாள்.

***************************************************************************************************************°

கருநீல வானில் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருந்த நட்சத்திரக்கூட்டங்களை ஒற்றை ஆளாய், ஒன் மேன் ஆர்மியாய், நின்று தன்னொளி வீசிக் கொண்டிருந்தது அந்த வட்ட நிலா! 

அந்த இரவு நேரத்துக் குளிர்காற்றும், தென்னை மரத்தை உரசிவரும் தென்றலுமென அந்த இரவின் அழகை மொத்தமுமாய் இரசித்தவண்ணம் அந்த மொட்டைமாடியின் கைபிடி சுவரில் உட்கார்ந்து கால்களை வெளிப்புறம் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தனர் இருவரும்.

 

அவளின் நரேந்திரனும், அவனின் குறிஞ்சி யாழும்.

கண்ணெதிரே கீழே, முற்றத்தில் பெரிய அளவிலான ஜமக்காளங்களை விரித்து அதில் அமர்ந்தபடி கதைபேசிக்கொண்டும், பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டும் தவறவிட்ட கணங்களை ஈடுகட்டும் முயற்சியில் மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தது.

 

தயங்கித் தயங்கி நின்ற ராகவேந்திரனின் கைபிடித்து தங்களுடன் அமரவைத்துக் கொண்ட ஜிதேந்திரன், லீலாமதியை விட்டு ஒரு நொடிகூட விலக மாட்டோம் என்பதுபோல ஒட்டி அமர்ந்து கோமதியுடன் இணைந்து கதை கேட்டுக் கொண்டிருந்த வளர்மதியும் விமலாவும் எனக் கண்கள் நிறையும் காட்சி அவள் உள்ளத்தில் பதிய  அக்கணங்களை அவள் வாழ்க்கையின் பொக்கிஷங்களாய் பொதிந்து வைத்தாள் அவள். 

பார்வையை கீழேயே வைத்திருந்தவள் தன்னருகில் அமர்ந்திருக்கும் நரேந்திரனிடம்

 

“அங்க பாத்தியா நரேந்திரா? அம்மூ முகத்துல இருக்கற சந்தோஷம் அப்பூ முகத்துல பிரதிபலிக்குது“ என்றவளின் சந்தோஷக் குரலும் அகல விரிந்து கண்ட காட்சியில் நிலைத்திருந்த விழிகளைக் கண்டவனின் கண்களிலோ அவள் மகிழ்ச்சியின் சாயல்!

 

“கண்ணுக்கெதிர்ல இத்தனை சந்தோஷம், சிரிப்பு சத்தம்,  இந்த குளிர் காத்து..  பக்கத்துல நீ” என்று அவன் தோளில் தன் தலை சாய்த்தாள்.

 

“Life is so beautiful! ல..” என்றவளின் வார்த்தைகளை ஆமோதிப்பதைப்போல அவனும் தலையசைத்தான் ஆம் என்று.

 

“விடிஞ்சா நாம சொன்ன அந்த பத்தாவது நாள். எல்லாம் உன்னாலதான் நரி..  தேங்க்யூ சோ மச்!” என்று அமர்ந்திருந்த வாக்கிலேயே அவனைத் தோளோடு சேர்த்தணைத்து விடுவித்தாள் அவள்.

 

“நான் மாமாட்ட பேசினேன்” என்றவனின் குரலில் நிமிர்ந்தவள் நினைத்தேன் என்பதாய் பார்க்க அவனோ “என்கிட்ட ஏன் சொல்லல?” என்று வினவினான்.

“ஏன் சொல்லனும்?” என்றவளின் கேள்வியில் அவன் புரியாமல் விழிக்க அவளே தொடர்ந்தாள்.

 

“Love should be felt, not said. அதுக்காக சொல்லாமலேயே இருந்துருக்க மாட்டேன், எப்பவாவது சொல்லியிருப்பேன்தான்.. ஆனா இன்னைக்கு,  அன்எக்ஸ்பெட்டட்!” 

 

“அப்போ.. உனக்கு முன்னாடியே தெரியுமா?”

 “ம்ம்ம்”

 

“எப்போ? அன்னைக்கு.. நீ தூங்கலைல அப்போவா?”

என்றவனின் வார்த்தையில் அன்று அவன் இதழ் பதித்ததும், தெளிவற்ற அவன் பேச்சுக் குரலுமே நினைவடுக்குகளில் இருந்து எட்டிப் பார்த்தது அவளுக்கு.

 

“இல்ல அதுக்கு முன்னாடியே! ஓய் ஒரு நிமிஷம், அன்னைக்கு நான் தூங்கிட்டுதான் இருந்தேன்!” என்க அவனுக்கோ முன்னாடியேவா? என்று ஒருபுறம்  அதிர்ச்சி தாக்க அமர்ந்திருந்தான்.

 

“தூங்கினா எப்படி தெரியும் உனக்கு?” என்றவனின் கேள்விக்குத் தோளை குலுக்கியவள்.

 

“தெரியல.. ஐ ஃபெல்ட் யு! அரைகுறை தூக்கமா கூட இருக்கலாம்ல.  மொதல்ல கனவுனு நினைச்சேன், அப்புறம்தான் புரிஞ்சிது” என்றாள் கிண்டலாய் சிரித்து.

 

“முன்னாடியே தெரியுமா? எப்படி?” என்றவனின் குரலில் ஆர்வமே நிறைந்திருக்க  தன் சுட்டுவிரலால் அவன் நெஞ்சைத் தொட்டவள் இதயத்தைக் காட்டியவளாக,“இது சொல்லுச்சு. அந்த ஆத்தங்கரைல, எனக்கான உன் தவிப்ப, காதல.. இது சொல்லுச்சு நரி. எனக்கு கேட்டுச்சு!” என்க அவளை தன்னோடு சேர்த்தணைத்தவன் அவள் உச்சியில் முத்தமிட்டு விலகினான். 

 

“ஒருவேளை மாமா வேணாம்னு சொல்லியிருந்தா?” என்றவனின் கேள்வியில் நிமிர்ந்தவள் முழுமனதாய் அதை மறுத்தாள்.

“அதெல்லாம் அப்பூ அப்படி சொல்லமாட்டாங்க!” என்றவளின் உறுதியைக் கண்டவனுக்கோ அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆசையெழ 

 

“ஒருவேள சொல்லியிருந்தா?”

 

“அதான் இல்லைங்கறேன்ல!” என்றவள் அப்பொழுதுதான் அவன் முகத்தைச் சரியாய் பார்த்தாள். அவன் அவளை வம்பிழுப்பது புரிந்துவிட அவளும் மறுமுறை அவன் கேட்டவுடன் சோகமே உருவாய் முகத்தை வைத்து கொண்டு.

 

“என்ன பண்றது.. இந்த நரி இல்லன்னா இன்னொரு ஓநாய்னு விட்டுட வேண்டியதுதான்!” என்றாள் தீவிரமான முகபாவனையில்.

 

அவனோ “அடிப்பாவீ! சொர்ணாக்கா சொர்ணாக்கா!” என்று வாய்விட்டே சொல்லிவிட அவளோ “என்ன சொர்ணாக்காவா?” என்று அனலாய் பார்த்து நின்றாள்.

 

அதன்பிறகே தான் இத்தனை நாள் மனதினுள் அழைத்த பெயர் வெளியில் வந்துவிட்டதை உணர்ந்தவன் அவள் அனல் பார்வை பார்க்கவும் குதூகலமாய்,

 

“ஆமா! சொர்ணாக்காதான் நீ! சரியான சொர்ணாக்கா!” என்று அந்த சொர்ணாக்காவில் அழுத்தம் கொடுக்க கால்களை உள்பக்கம் தூக்கிப் போட்டவளோ 

அவன் தலையில் நங்கென்று குட்டியது மட்டுமில்லாமல்,” நான் சொர்ணாக்கான்னா நீ யாரு? நரிபயலே!“ என்று கத்த அவனோ தலையைத் தேய்த்துவிட்டவனாக “என்னது நரிபயலா?” என்று அவளைப் பிடிக்க முயல அவள்  ஓடினாள். அவனும் சுவரிலிருந்து கீழே இறங்கியவனாக அவளைத் துரத்தினான்.

ஓடுவதுபோல் ஓடியவள் ஒருகட்டத்தில் வேண்டுமென்றே நின்றுவிட அவன் அவள் கைப்பற்ற அவளோ அவன் நெஞ்சில் சாய்ந்தவளாக,

 

“அச்சச்சோ! இப்படி  மாட்டிக்கிட்டீயே இஞ்சி!” என்றவள் தனக்குத்தானே கூறிக் கொண்டவள் விருப்போடுதான் மாட்டிக் கொண்டாள் என்று அவனுக்கு தெரியாமலா போகும்! அவனும் பரிதாபக் குரலில்

“என்ன சொர்ணாக்கா இப்படி தோத்திட்டீயே?” என்றான் பாவமாக. அவளோ அவன் நெஞ்சினில் வசதியாய் தலைவைத்தவளாக  அவனை அணைத்தவாறு

 

“பிடிச்சவங்ககிட்ட தோத்து போறதுகூட சந்தோஷம்தான் மிஸ்டர்.இஞ்சி!” என்றாள்  அவனோ  தன்னை அணைத்திருந்தவளின் தலையை நிமிர்த்தி அவள் நெற்றியில்  தன் இதழ் பதித்தவனாக

 

“அப்போ நான் என்னைக்கோ தோத்துட்டேன் மிஸஸ்.நரி!” என்றவனின் விழிகளில் காதலின் தேக்கம்.

எதிர்பாராத வண்ணம் சாரலாய் தொடங்கி அவர்களை நனைக்க முயன்றது மழை.

அவளின் தென்றலாய் அவனும்..

அவனின் மின்னலாய் அவளும்.. இணைய

மென்சாரலாய் தொடங்கியது காதலின் மழை!