O Crazy Minnal(6)

6

பன்னீரைத் தூவும் மழை

ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இந்நேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ

வண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே

வெந்நீல வானில்

அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும்

அதில் உண்டாகும் ராகம்

புரியாதோ என் எண்ணமே

அன்பே

 

அந்த அறை முழுக்க இசையால் நனைந்திருக்க, கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கியபடி காதோர கூந்தல் சுருளை  சரி செய்தது வேறு யாருமல்ல, லீலாமதியேதான்.

 

பழைய பாடல்தான் ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் ஒருவித புத்துணர்ச்சி!

வார்த்தையால் விவரிக்க முடியாத ஒன்று.

 

இனிமையான இசை,  ஒரு கையில் தனக்கு பிடித்த புத்தகமிருக்க, மறுகையில் நாசியைச் சீண்டும் காபியின் நறுமணம்.

வேரென்ன வேண்டும், இசையுடன் கலந்து அந்தப் புத்தகத்திற்குள் மூழ்கிக் கொண்டிருந்தவரைக் கலைத்தது அந்த அழைப்பு மணி.

 

“அஷ்மி! அஷ்மி கண்ணா!” என்றழைக்க அவளோ அவள் அறையில் உருண்டு புரண்டு சிரித்து கொண்டிருந்தாள்.

பதில் வராது போகவே அவரே சென்று கதவைத் திறக்க, வாட்ட சாட்டமாக நின்று கொண்டிருந்த இளைஞன் இவரைப் பார்த்தவுடன் மரியாதையுடன் “வணக்கம் ஆன்ட்டீ!” என்றான்.

 

அவர் அவனது மரியாதையில் வியந்தவராக “வணக்கம்பா! நரேன்.. இல்லையா?” என்று வினவ

அவன்   சிறு புன்னகையுடன் ஆமோதிப்பாக தலையாட்டினான்.

 

“உள்ள வா நரேன்! நான் அஷ்மிய கூப்பிடறேன்” என்று நகர அவன்,

 

“ஆன்ட்டீ ஒரு நிமிஷம்!” என்றொரு பையை நீட்ட அதிலிருந்து  ஒரு ஸ்வீட் டப்பா எட்டிப்பார்க்க லீலாவோ

 

“ஏன் நரேன் இந்த ஃபார்மாலிட்டீஸ்லாம்?” என்று வினவ அவன் மறுபடியும் அதே புன்னகையுடன்

 

“நான் ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வரேன்ல ஆன்ட்டீ…” என்றவன் அவர் உயரத்திற்குக் குனிந்து மெதுவாக “அப்போதானே ஆன்ட்டீ ஸ்பெஷலா ஏதாவது பண்ணா எனக்கும் ஒரு பார்சல் போடுவீங்க” என்று குறும்பாக மொழிய லீலாவோ சிரித்துக் கொண்டே “நீ எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம் நரேன் இது உன் வீடு மாதிரி.. ஆனா என் சமையல் மேல உனக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்கக் கூடாது”  என்றவர்

 

“உக்காரு நரேன் நான் அஷ்மிய கூப்பிடறேன்”  என்றுவிட்டு உள்ளே செல்ல அவனோ அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டு அவன் பார்வையைச் சுழலவிட்டான்.

*******************

‘இவளுக்கு என்னாச்சு?’ என்றெண்ணியபடியே அறையினுள் நுழைய அஷ்மியோ சிரித்துச் சிரித்தே சோர்ந்திருந்தாள். கண்ணோரத்தில் நீர் துளிர்க்கச் சிரித்துக் கொண்டிருந்தவளை பார்த்துவிட்டு

“என்னாச்சு அஷ்மி?” என்றவரைப் பார்த்து  மறுபடியும் அடக்கமாட்டாமல் சிரித்தவள் பின் சிரிப்பினூடே அவரிடம்

 

“இஞ்சி கூப்பிட்டிருந்தாமா..” என்று முழுக்கதையும் விவரித்தவள்

அவள் திட்டிய விதத்தையும் ஒன்னுவிடாமல் சொல்ல, அவளுக்கு மறுபடியும் சிரிப்பு!

 

“நல்ல வேளைடா கூட புவனா இருந்தா..” என்றவரின் கண் முன் இதற்கு முன் நடந்த பல சம்பவங்கள் வந்து போயின. வேரென்ன எல்லாம் குறிஞ்சியின் வீர தீரச் சாகசங்கள்தான்!

அதைப் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தவர் திடீரென நரேனின் நினைவு வர

 

“அஷ்மி நரேன் வந்துருக்கான் பாரு.. வெய்ட் பண்ணிட்டு இருக்கான்”

 

“என்னது? எப்போ? எங்கே?” என்று பாவனையாகக் கேட்க

 

“ஹால்ல வெய்ட் பண்றான்டா.. அப்போவே வந்தாச்சு!”

 

“இதோ வரேன்” என்றவள் ஹாலிற்கு வர அவனோ சாவதானமாகக் குற்றால அருவிக்கறையில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு அமர்ந்திருப்பவனைப் போல் எல்லாவற்றையும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் கவனம் முழுவதும் அந்த சுவரில் வரையப் பட்டிருந்த ஓவியத்தில்தான் இருந்தது. அழகாக வரையப் பட்டிருந்தது அந்த பெரிய அளவிலான சிறகுகள்.

தேவதைகளுக்கு இருக்குமே அதே போன்றது, வெளிர்நீல நிறத்தில்.

 

“என்ன நரேன்?”

 

“இல்ல.. அந்த பெய்ண்டிங்..” என்றெழுந்தவன் அதன் அருகில் சென்று பார்க்க, அங்கே அந்த சிறகுகளுக்குச் சற்று கீழே “யாழி” என்று எழுதப் பட்டிருக்க, ஒரு முறை ‘யாழி!’ என்று அவனுக்குள் சொல்லிப் பார்த்தவன் அஷ்மியிடம் திரும்பி

 

“ரொம்ப அழகா இருக்கு! யாரு வரைஞ்சது?” என்று வினவினான்.

 

“ஓ.. அதுவா, இது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வரைஞ்சாங்க”

 

“வாவ்! செம அஷ்மி அப்போ யாழி?” 

 

“யாழி என் சிஸ்டர். அவ முழுப் பேரு குறிஞ்சி யாழ், அதான் யாழி.. இது அவளுக்காக வரைஞ்சது, அவ பர்த்டே கிஃப்ட்” என்று உரைத்தவளின் முகத்தில் மருந்துக்கும் பொறாமையில்லை மாறாக அன்பு.. அன்பு.. அன்பு மட்டுமே!

 

“சரி நரேன் வா இப்போவே லேட்டாகிடுச்சு” என்றுவிட்டு அவர்கள் அறையிலிருந்த ஒரு சிறிய முக்காலியை இழுத்துப் போட்டவள், அந்த குட்டி சைஸ் மேசையை வாக்காக வைத்திருக்க அதில் அந்த லேப்டாப் வீற்றிருந்தது.

 

சில பல வெப்ஸைட்களை அலசி ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான சில குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை போலும்.

கடைசியாக அவர்கள் டிஸ்கஷனை முடிப்பதற்கும் லீலா அங்கு வரவும் சரியாக இருந்தது.

 

“என்னடா முடிச்சிட்டீங்களா?” என்று வந்தவர் நரேனின் “ஹச்சூம்!”மில் (அதான்பா தும்மலில்)

 

“என்ன நரேன் கோல்டா?” என்று கேட்க அவனோ

 

“ஆமா ஆன்ட்டீ இன்னும் க்ளைமேட் செட் ஆகல..” என்க 

 

“அப்போ ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணு மிளகு ரசம் வச்சிடலாம்” என்று அவர் அடுக்களையை நோக்கிச் செல்ல அவனோ அஷ்மியிடம் “அஷ்மி ஆன்ட்டீட்ட சொல்லேன் நான் வீட்டுக்குப் போயே சாப்ட்டுக்கறேன்” என்றவனைப் பார்த்து

 

“டெய்லி நீ சமைச்சதுதானே சாப்பிடற.. இன்னைக்கு ஒரு சேஞ்சுக்கு இங்க சாப்பிடேன், அம்மாவோட மிளகு ரசம் செமயா இருக்கும்” என்றவளிடம் என்ன சொல்ல.

பார்வை சுழல அந்த அறையை அப்பொழுதுதான் முழு கவனத்துடன் பார்த்தான்.  அறை முழுக்க அங்கங்கே கோட்ஸ்(quotes) மற்றும் சில பெய்ன்டிங்க்ஸ்!

 

அவன் கண்ணைக் கவர்ந்தது என்னவோ அந்த ஆரெஞ்சு நிற சார்ட்டில் தமிழில் எழுதப்பட்டிருந்ததுதான்.

 

              “தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”

                                                        -பாரதியார்

 

என்று எழுதப்பட்டிருக்க அதன் பக்கத்திலேயே பாரதியாரின் ஓவியம் ஒன்று.

 

அதையே ஆச்சரியமாகப் பார்த்தவன் அவளிடம் “இது..” என்று கேட்க

 

அவளோ “இந்த பெய்ன்டிங் என்னோடது.. எழுதுனது குறிஞ்சி!” என்றாள்.

 

“வாவ்! உங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமா? நான் பேச மட்டும்தான் தெரியும்னு நினைச்சேன்”

 

“ம்ம்ம்.. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்ப நல்லா தெரியும், எங்களுக்கு அம்மாதான் சொல்லிக் குடுத்தாங்க”

“ஃபென்டாஸ்ட்டிக் அஷ்மி!”என்றவனை அந்த கடுகு பொறியும் சத்தம் கலைக்க நேரத்தைப் பார்த்தவனோ இவளிடம் சொல்லி உபயோகமில்லை என்பதை உணர்ந்து அடுக்களையை நோக்கிச் சென்றான்.

 

“ஆன்ட்டீ?” என்று தயங்க

 

“வாப்பா! வா ஜஸ்ட் டூ மினிட்ஸ்!”

 

“இல்ல ஆன்ட்டீ பரவால்ல நான் வீட்டுக்குப் போய் பாத்துக்கறேன்”

 

“ஓஹோ! அந்த பார்சல் போட சொன்ன நல்லவன் எங்கப்பா?”  என்று அவனைத் தாண்டி அடுக்களைக்கு வெளியில் எட்டிப் பார்க்க.

 

“ஹீ.. ஹீ.. அப்பறம் உங்க இஷ்டம்பா! நான்லாம் வெறித்தனமான ஃபூடீ!” என்று காலரைத் தூக்க, லீலாவோ

 

“அதையும்தான் பாப்போமே..” என்றுவிட்டு

 

“ஆமா சாப்பாடுலாம் எப்படி செல்ஃப் குக்கிங்கா இல்ல ஹோட்டெலா?” என்க  அவனோ பெருமிதமாக

 

“என்ன ஆன்ட்டீ இப்படி கேட்டீங்க செல்ஃப் குக்கிங்தான்! நமக்கு இந்த ஹோட்டல் சாப்பாடுலாம் ஒத்துவராதுபா”.

 

“வாவ்! அப்போ செமயா சமைப்ப போலிருக்கே!”

 

“அது நானே எப்படி சொல்லுவேன்.. ஆனா குக்கிங்ல இன்ட்ரஸ்ட் உண்டு”

 

“அதான் சொல்லிட்டீயே..” என்றுவிட

“கலாய்ககறீங்களா? நான் கோவமா கிளம்புவேன் ஆனா ரசம் நல்ல வாசமாயிருக்கு” என்று வாசம் பிடிப்பது போல் பாவனை செய்ய

 

“அதுசரி.. எங்க வீட்டு வாண்டும் இப்படிதான் பேசும். ப்ச் லஞ்சுக்கு வரதா சொல்லியிருந்தா..”

 

“என்னாச்சு ஆன்ட்டீ?”

 

“லேட்டாகுமாம்.. அங்கேயே பாத்துகறேன்னுட்டா”.

 

“ஓ.. அப்போ மேடம் எஸ்கேப்பா!” என்று அவர் காலைவார, அவரோ அவனைப் பொய்யாக முறைத்தவாறே

 

“இரு இரு ரசத்துல மிளக அள்ளிக் கொட்டுறேன் உனக்கு..”

 

“அய்யோ ஆன்ட்டீ! மீ பாவம்..”

 

“அது! ஆமா அதென்ன மேடம்?”

 

“ஓ அதுவா! இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சதுல இருந்து இப்ப வரைக்கும் என் காதுல விழற பேரு யாழிதான்! அதான்.. மேடமுக்கு ஐஸ் வச்சாதானே நாளைக்கு பார்சல் வரும்..” 

 

“அதுசரி! ஐஸு.. அவள.. வர பார்சலையும் பிடிங்கிருவா!” 

“என்னது!”

 

“உனக்கு அவளோட வீர வரலாறு தெரியாதுல அதான்..”

“இன்ட்ரஸ்ட்டிங்! அப்போ உங்க வீட்டு குட்டி சொர்ணாக்காவா?”

 

“ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திதான்.. என் பொண்ண பத்தி என் முன்னாடியே இப்படி பேசறீயே.. ராட்சசிதான் ஆனா அழகான ராட்சசி.. மனசளவுல! அசட்டு துணிச்சல்  அதிகம். இப்படிதான் இந்த வாரத்துக் காண கோட்டாவ நல்லா செஞ்சா பாரு.. ஷப்பாஹ்! அந்த பையன் அவ கண்ணுல படக்குடாதுன்னு நான் தினமும் வேண்டிக்கிட்டிருக்கேன்..” என்றவர் சொல்லிக் கொண்டேப் போக

 

எதேர்ச்சியாக அந்த ஃப்ரிஜின் மேலிருந்த ஃபோட்டோவைப் பார்த்தவன் அதிர, அதை உணராது அவர் சொல்லிக் கொண்டே போனார்

 

“அதுலயும் அவ குடுத்த சாபம்லாம் இருக்கே.. டிசைன் டிசைனா யோசிப்பா போல, அவன் பூரி போட்டா அப்பளம் ஆகனுமாம், ரசம் விசமாகனுமாம், பைக் நடு ரோட்ல ஹெவி ட்ராஃபிக்ல பஞ்சராகனுமாம்..” என்று அடுக்கிக் கொண்டேப் போக அவனுக்கோ ‘டேய்! நரேனு.. இது அவள? சிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து சிக்கியிருக்கியேடா..’

 

அவர்  இடைவிடாது சொல்லிக்கொண்டேப் போக அங்கிருந்த தண்ணி பாட்டிலை காலியாக்கிருந்தவனோ

 

“போதும் ஆன்ட்டீ! நான் தாங்க மாட்டேன், பிஞ்சு உடம்பு..” என்றவனையே அவர் கேள்வியாக நோக்க  அவனோ

 

“எனக்காக வேண்டிக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப தாங்கஸ் ஆன்ட்டீ! அந்த புண்ணியவான் நான்தான்.. நானேதான்”

 

“என்னது?” என்று கோரஸான குரலைக் கேட்டு அவன் திரும்ப வாசலிலோ அஷ்மி.

 

“சாரி ஆன்ட்டீ, நான் வேணும்னுட்டே பண்ணல.. இருந்தாலும் தப்புதான் சாரி ஆன்ட்டீ! ஐம் ரியலி சாரி. இத தான் அவங்க கிட்டயும் கேக்கனும்னு நினைச்சேன் ஆனா.. அவங்க நிக்கல..” என்று வருந்த

 

அவன் தோளைத் தொட்ட அஷ்மி,”பரவால்ல நரேன் விடு” என்றவாறே தாயைப் பார்க்க லீலாமதி என்னதான் வெளியில் கலகலப்பாக இருந்தாலும், அப்படிக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் தாயாக வருந்தத்தான் செய்தார். ஆனால் இன்றோ இவன் வருந்த ஒரு தாயாய் மாறி அவனைத் தேற்றத்தான் தோன்றியதே தவிர, சண்டையிடத் தோன்றவில்லை!

 

அவன் தோளைத் தட்டியவர் “இப்படி வந்து மாட்டிக்கிட்டியேப்பா!” என்று கிண்டலடிக்க

 

“ஆன்ட்டீ!” என்றவன் ஆர்ச்சயத்தின் உச்சத்திற்கே செல்ல, குக்கர் கூட விசிலடித்தது லீலாவின் கௌன்ட்டருக்கு.

***************

“இப்ப ஏன் மூஞ்ச இப்படி உர்ருனு வச்சிருக்க?” என்ற புவனைப் பார்த்து

 

“அப்டியே ஓடிரு! கடுப்ப கிளப்பக்கிட்டு ஒருத்தி விழுந்துகிடக்கா.. அதுக்கூட தெரியாம ஆடி அசைஞ்சு வர.. அவன் மட்டும் கைல மாட்டட்டும்.. அவன..” என்றவள் தாறுமாறாகத் தாளிக்க அங்கு வந்த ரிஷி

 

“என்னாச்சு?” என்க புவன்

 

“கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல நம்ம கிட்ட விளையாடறதே  வேலையா போச்சு!” என்றுவிட அவனோ ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தவன், அப்பொழுதே கையைப் பார்க்க அவளின் இடது கையில் லேசாக சிராய்த்திருந்தது.

 

“ஏ மேடி என்னாச்சு?” என்று பதறியவன் தனது கை குட்டையால் துடைக்க, அப்பொழுதுதான் அவளே அதைக் கவனித்தாள். லேசான சிராய்ப்புதான்.

“இரு வரேன்…” என்றோடியவன் கை குட்டையைத் தண்ணீரில் நனைத்து கொண்டுவந்து துடைத்துவிட, உள்ளே நெகிழ்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “என்ன தம்பி பாசம் ஓவர் ஃப்ளோயிங் போல..” என்று வம்பிழுக்க  அவனோ

 

“அடிங்க! இரு போகும் போது நானே உன்ன உருட்டி விட்டு போறேன்” என்றெழுந்தான்.