Odi Polama 4

 1. ஓடி போகலாம் 4
  அங்கு சரோஜா தேவி போல் அந்த கால நீள உடை அணிந்து, தலையில் தொப்பி அணிந்து கொண்டு அவள் தங்கி இருந்த அறையில் இருந்த அவள் பாட்டி காமாட்சி தேவியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
  “பாட்டி! இந்தியாவில் இருந்து நேரா இங்க தான் வரீங்களா? என் கிட்ட சொல்லவே இல்லை நீங்க, ஆமா எப்போ வந்தீங்க?” என்று நிஷா கேள்வியை அடுக்கினாள்.
  “நல்லா இருக்கீங்களா பாட்டி, வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க?” என்று அவரை கேட்டுவிட்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான் ஷியாங்.
  அவனை ஆசிர்வதித்து, தன் நலத்தை பற்றி கூறிவிட்டு அவனையும் விசாரிக்க தொடங்கினார் காமாட்சி.
  இதை பார்த்து கொண்டிருந்த நிஷாவோ, காதுகளில் புகை வரும் அளவிற்கு அவளின் பாட்டியை முறைத்துக் கொண்டு இருந்தாள். அதற்குள் அவன் வேலை சற்று இருப்பதால் விடை பெறுகிறேன் என்று கூறிவிட்டு வெளியேறினான், அவளை கண்டுகொள்ளாமல்.
  “பாட்டி! என்னது இது? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, நீங்க பாட்டுக்கு அவனோட கொஞ்சி குழாவிகிட்டு இருக்கீங்க” என்று அவரிடம் சிடுசிடுத்துக் கொண்டு இருந்தாள் நிஷா தேவி.
  “நிஷா நீ ஒன்னு புரிஞ்சிக்க, அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம கொடுத்து தான் ஆகனும், அதே மாதிரி நீ வந்த உடனேயே நீ வாங்க பாட்டி அப்படினு கூப்பிட்டியா முதலில்” என்று பதிலுக்கு அவளை பார்த்து கேட்டார்.
  தன் தவறை உணர்ந்தவள் உடனே மன்னிப்பு கேட்டாள் அவரிடம். பேத்தி எப்பொழுதும் இப்படி கிடையாது என்று அவர் நன்கு அறிவார். இன்று அவளின் முகத்தில் தெரிந்த களைப்பும், கடுகடுப்பும் அவள் அவளாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.
  அதன் விளைவாக இன்று பேத்தியிடம் மனம் விட்டு பேச எண்ணினார். அவளும் வேலை இனி இல்லை என்பதால், தன் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள பாட்டியிடம் கேட்க எண்ணினாள்.
  “எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு டா நிஷா. நீ மாப்பிள்ளையை விரும்புற தானே, இல்லை கட்டாய கல்யாணம் அப்படினு கஷ்டபட்டு இந்த பந்தத்தில் இருக்க நினைக்கிறியா?” என்று கேட்டார்.
  “பாட்டி! நான் இப்போ என் மனசுல இருக்கிறதை சொல்லுறேன், அப்புறம் என் குழப்பம் என்னனு உங்களுக்கே புரியும்” என்று கூறிவிட்டு அவரின் முகத்தை பார்த்தாள்.
  அவரோ, நீ சொல்லு பிறகு என்னவென்று நான் சொல்லுகிறேன் என்பது போல் பார்வை பார்த்தார். அதன் பிறகு, சொல்ல தொடங்கினாள்.
  “பாட்டி, கிட்டத்தட்ட நான் இந்த ஃபீல்டு ல ஒரு மூணு வருஷமா இருக்கேன். எத்தனையோ பேரோட சேர்ந்து வேலை பார்த்து இருக்கேன், ஆனா அப்போ எல்லாம் தோனாத ஒன்னு இப்போ இவரை பார்த்த பிறகு சம்திங் ஐ ஃபீல் ஸ்ட்ரேஞ்”.
  “கூடவே சேர்ந்து வாழனும், ஓடி போகனும் போல இருக்கு. ஆனா நிறைய விஷயங்கள் எங்களுக்குள்ள ஒத்தே போகல, பட் ஸ்டில் ஏதோ ஒன்னு ஐ அம் இன் லவ் வித் ஹிம் அப்படினு தோணுது பாட்டி” என்று அவள் கூறியதை கேட்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
  “சரி இந்த அஞ்சு நாளுக்குள்ள அப்படி என்ன சண்டை உங்களுக்குள்ள?” என்று கேட்டது தான் தாமதம் உடனே அத்தனையும் கொட்ட தொடங்கினாள்.
  அன்று ஷுட்டிங் ஸ்பாட் சென்றவன், டைரக்டரை பார்த்து பேசி சற்று இலகுவாக காட்சிகள் நடிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். அவரும் இவனிடம் சரி என்று கூறிவிட்டு, அன்றைய ஆக்ஷன் பகுதி பற்றி ஸ்டண்ட் மாஸ்டரிடம் விரிவாக பேசிக் கொண்டு இருந்தார்.
  அதற்குள் கேமராமேன் வந்துவிட்டார் என்று தகவல் அவருக்கு வரவும், உடனே அந்த சண்டை காட்சிகளை விளக்கி கூறினார் நிஷாவிடம்.
  “சார்! என்னது இது? இதை யாரு மாத்தினாங்க? நேத்து டிஸ்கஸ் பண்ண ஸ்டண்ட் என்னாச்சு?” என்று விடாமல் கேள்விகளை வீசினாள் நிஷா அந்த ஸ்டண்ட் மாஸ்டரிடம்.
  “டைரக்டர் தான் சொன்னார் நிஷா மேடம், ஸ்டண்ட் ஹீரோக்கு ஈஸியா வைக்கணும் அப்படினு. ஆனா டைரக்டர்க்கு கூட இதுல உடன்பாடு இல்லை, ஹீரோ ரொம்ப கம்பெல் பண்ணி கேட்டதால சரின்னு சொல்லி இருக்கார்”.
  “இதுல நாம என்ன பண்ண முடியும் மேடம், அதுவும் ஹீரோ பெரிய இடத்து பையன் வேற” என்று ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லிவிட்டு நகர்கையில் அவள் தடுத்தாள்.
  “நாம நேத்து டிஸ்கஸ் பண்ண ஸ்டண்டே பண்ணலாம், நான் டைரக்டர் கிட்ட பேசிக்குறேன்” என்று கூறிவிட்டு அவள் நேராக டைரக்டர் முன் போய் நின்றாள்.
  அவரிடம் அவள் என்ன சொன்னாளோ, உடனே காட்சிகள் மாற தொடங்கியது. எடுத்த எடுப்பிலேயே ஹீரோவை கடல் தண்ணீருக்குள் தள்ளி விடும் காட்சி தான்.
  தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று அவனிடம் சொல்லாமல் அவனை தள்ளி விட்டு இருந்தனர். அதன் பின் கடல் கீழே அவன் எதிர்பாராத அளவில், காட்சிகள் மாறி மாறி அவனே எதிர்பார்க்காத வகையில் சண்டையிட தொடங்கினான்.
  அதை கேமராவில் பார்த்துக் கொண்டு இருந்த நிஷா இதை தானே எதிர்பார்த்தேன் என்பது போல், அதில் சில விஷயங்களை சரி செய்துவிட்டு எல்லாம் முடித்துக் கொண்டு அவன் இங்கு வரும்முன் அவள் சிட்டாக பறந்து விட்டாள்.
  இதை கேட்டுக் கொண்டு இருந்த அவளின் பாட்டி, அவளை முறைத்துக் கொண்டே சிரித்தார்.
  “என்ன பாட்டி! முறைச்சிகிட்டே சிரிக்கிறீங்க, என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?” என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்டாள்.
  “நீ மாப்பிள்ளையை கீழே தள்ளி விட சொன்னதே தப்பு, இதுல எங்க உன்னை தள்ளி விட்டுடுவாரோ அப்படினு பயந்து தானே அங்க இருந்து உடனே எஸ் ஆகி போன” என்று பாட்டி பாய்ண்ட்டை பிடித்துக் கொண்டு கேட்கவும், அவள் மாட்டிக் கொண்ட உணர்வுடன் முழித்தாள்.
  “என்ன முழிக்குற? நான் சொன்னது சரி தான” என்று அவர் கேட்கவும் அவள் நாலா பக்கமும் மண்டையை உருட்டினாள்.
  “ஆனா அவன் அடுத்து சும்மா இல்லை, தேடி வந்து இழுத்துட்டு போய் தள்ளி விட்டுட்டான், இடியட்” என்று உதட்டை பிதுக்கவும் அவர் அப்படி ஒரு சிரிப்பு சிரித்தார்.
  “இதாவது எனக்கு நீச்சல் தெரிய போய் தப்பிச்சேன், ஆனா அடுத்து ஹனிமூன் கூட்டிட்டு போறேன் சொல்லிட்டு அவன் என்னை தலை கீழா தொங்க விட்டுட்டான் தெரியுமா?” என்று மேலும் உதட்டை பிதுக்கவும் அவர் சிரித்தார்.
  “சரி! சரி! எனக்கு அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்ததுல அலுப்பா இருக்கு, நான் தூங்க போறேன்” என்று சொல்லிவிட்டு அவர் அங்கு இருந்து எழுந்து செல்லுமுன் நிஷா தடுத்தாள்.
  “கேட்கணும் நினைச்சேன் பாட்டி, அது என்ன சரோஜா தேவி கெட்டப் போட்டு இருக்கீங்க, எதுக்கு?” என்று கேட்டாள்.
  “ம்க்கும்! நீ எல்லாம் சினி ஃபீல்டு ல இருக்க அப்படினு சொல்லிக்காத. இதுக்கு பேர் ஃபேஷன், இது கூட தெரியல உனக்கு. ஊருல இருந்து கிளம்பும் பொழுதே, இப்படி ப்யூட்டியா தான் கிளம்பி வந்தேன் டார்லிங்” என்று குளிர் கண்ணாடியை சரி செய்து கொண்டு சென்ற பாட்டியை பார்த்து நன்றாக சிரித்தாள்.
  அவள் பாட்டி அவளுக்கு முதன் முதலில் சொல்லிக் கொடுத்த கதையே, மகாபாரத கதை தான். அதுவும் போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் சொன்னது தான் முதலில் கூறினார்.
  எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
  இதை தான் அவளுக்கு திரும்ப திரும்ப போதித்தார். அதனால் தான் அவளால் இன்று இவ்வளவு தூரம், பிடிக்காத திருமணத்தை பிடித்த திருமணமாக மாற்ற அவளால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டு இருக்கிறாள்.
  இப்பொழுது அவள் பாட்டி வந்தது கூட, அவளுக்கு உதவ தான். நேற்றே அவள் இதை பற்றி ஃபோனில் இவரிடம் பேசி இருந்தாள். ஆனால், அவர் இப்படி நேரில் வந்து அவளுக்கு அதிர்ச்சி அளிப்பார் என்று அவள் நினைக்கவில்லை.
  சிறிது நேரத்தில் அங்கே வந்த ஷியாங், அவளை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்து குளியலறைக்குள் சென்றான்.
  “இந்த மியாவ் எதுக்கு இப்படி நக்கலா சிரிச்சிட்டு போறான்? சம்திங் நாட் ரைட்!” என்று தனக்குள் யோசித்துக் கொண்டு இருந்தாள்.
  ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவம் அவளின் கண் முன் காட்சியாக விரிய தொடங்கியது. அதே காட்சி ஷியாங் மனகண் முன்னேயும் விரிந்தது.
  அன்று தேடி வந்து இவளை தண்ணீருக்குள் தள்ளி விட்ட ஷியாங், அடுத்து அவன் செய்த முதல் வேலை சற்று ரொமான்டிக் ஆக்ஷன் படமாக மாற்றி அமைக்க சொல்லி டைரக்டரிடம் சொன்னது தான்.
  “இரு டி இனி நான் உனக்கு ஆட்டம் காட்டுறேன், இந்த ஷியாங்கை சாதாரணமா எடை போட்டுட, வெயிட் அண்ட் வாட்ச் பேபி! ரொமான்டிக் பாய் இஸ் பேக்” என்று சூளுரைத்துக் கொண்டு சென்றான்.
  அறையில் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டு இருந்த நிஷாவிற்கு ஒரே யோசனையாக இருந்தது. சிறிது நேரத்திற்கு முன் தான் டைரக்டர் இவளுக்கு போன் செய்து விஷயத்தை கூறி இருந்தார்.
  “என்னமோ பிளான் பண்ணிட்டான், ஆனா என்னனு தான் தெரியல! சரி காலையில் பார்த்துக்கலாம்” என்று நினைத்து உடனே படுத்து உறங்கினாள்.
  மறுநாள் இவன் வருமுன், அவள் செட்டில் அமர்ந்து இருந்தாள். அந்த 3D ஸ்டுடியோ தியேட்டரில் தான் செட் அமைத்து இருந்தார்கள் இம்முறை.
  இன்று ரொமான்டிக் காட்சி, ஹீரோ ஹீரோயின் மத்தியில். சில எஃபெக்ட்ஸ்காக மட்டுமே பட்டயாவில் இந்த இடத்தை தேர்ந்தெடுத்து இருந்தனர்.
  அன்று அவன் கண்ணுக்கு கண்ணாடி கூலர்ஸ், க்ரே கலர் கோட் சூட் என்று கம்பீரமாக அந்த அரங்கிற்குள் நடந்து வந்தான்.
  டக்குனு டக்குனு டக்குனு பார்க்காத
  பக்குண்ணு பக்குன்னு ஆக்காத
  கிக் ஒன்னு கிக் ஒன்னு இருக்குது பார்வையில என்று மனதிற்குள் அவனுடன் டூயட் பாடிக் கொண்டு இருந்தவள், அங்கே அவனை ஒரு யுவதியுடன் சேர்ந்து பார்த்ததில் அட்டென்ஷன் போசிற்கு திரும்பி, என்னவென்று பார்க்க தொடங்கினாள்.
  அது ஒரு ரொமான்டிக் காட்சி, மிகவும் தத்ரூபமாக ஒருவரை ஒருவர் அனைத்து கொண்டு, அந்த 3D படங்களை பார்த்துக் கொண்டும், முத்தம் கொடுத்துக் கொண்டும் இருக்க வேண்டும்.
  இவளுக்கு அந்த இடத்தில் இருக்க பிடித்தம் இல்லை, ஆனால் டைரெக்டர் இருந்து எல்லாவற்றையும் படமாக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்ததால், வேறு வழியின்றி அங்கேயே அமர்ந்து இருந்தாள்.
  அங்கே ஷியாங், இவளை வெறுபேற்ற வேண்டி அந்த யுவதியுடன் மிகவும் ஒட்டி நின்று, அவளை அணைத்துக் கொண்டே இவளை ஒரு பார்வை பார்க்கவும், காதுக்குள் இருந்து இவளுக்கு புகைச்சல் சும்மா ராக்கெட் வேகத்தில் கிளம்பியது.
  அடுத்தது முத்தக் காட்சி எனவும், டைரக்டர் ஆக்ஷன் சொல்ல, இவள் கட் சொல்லிவிட்டு நேராக அவனிடம் சென்று நின்று, முறைத்துக் கொண்டு இருந்தாள்.
  “பேபி! பிளீஸ் டேக் திஸ் சீன் மச் ப்யூட்டிஃபுல் ஓகே” என்று சிரித்துக் கொண்டே அவளை வம்பு வளர்க்கவும், இவள் யாரும் எதிர்பாராத நேரத்தில் அவனை இழுத்துக் கொண்டு செட்டை விட்டு வெளியேறினாள்.
  தொடரும்..