ஓ காதல் கண்மணி 22
– நெமிரா
வணக்கம் நட்பூஸ் ,
விட்டு விட்டு கொடுத்தாலும் என்னை விட்டு கொடுக்காது நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி .
ஓ காதல் கண்மணியின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி …
படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் …
இதுவரை …..
அவனை காணவில்லை என்றதும் பாவையின் பார்வை சுணங்கியது. ஆனால் தக்க சமயத்தில் வந்த குழைவான இசை அவளது செவியை வருட … வீசிய தென்றல் காற்றில் தேகம் தளிர்த்தவள் . விழிகளை மூடியபடி இசை மழையில் நனைந்து கொண்டிருந்தாள். .
இனி……
காத்திருத்தல் சுகமென்று யார் சொன்னது ? அதுவும் காதலில் !
அது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை மோனியிடம் கேட்டால் பக்கம் பக்கமாக சொல்லிருப்பாள் …
நொடிகள் நிமிடங்கள் எல்லாம் கடந்து மணி ஒன்பதை தொட்டிருந்தது … அலைபேசியை மேலோட்டமாய் பார்த்து கொண்டிருந்தாலும் , மனம் மட்டும் வேறெங்கோ இருந்தது .
அவன் வந்தால் தான் கதவை திறக்கும் சத்தம் கேட்க்குமே? என்று அறிவு கூறினாலும் ..
விழிகள் அடிக்கடி அனிச்சையாய் வாசல் பக்கம் சென்று திரும்பின ..
அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது …
” நீ வரமாட்டல அர்ஜுன் ” – உதடுகள் மெல்ல முணுமுணுத்தன .
” நான் வராம எப்படி ? ” – என்றபடி அவளை நெருங்கினான் அர்ஜுன்..
” அர்ஜுன் ..” – அர்ஜுனை கண்டதும் மோனிஷாவின் விழிகள் பூரிப்பில் விரிந்தன . உணர்வுகள் உள்ளே போராடின . விழிகள் கலங்கின .
ஆறடி உயரம் , எடுப்பான மீசை , ட்ரிம் செய்ய பட்ட தாடி , அகன்ற தோள்கள் அனைத்திற்கும் மேலாக அவனுக்கே உரித்தான காந்த விழிகள் என்று ஆஜானுபாகுவாக அவள் முன்பு வந்து நின்றான் …
இந்த ஏங்காத வேளையில் சிறிது நேரத்திற்கு முன்பு அவளது மனதை மயக்கிய எந்த காந்த இசையும் இப்பொழுது அவளது செவிகளில் விழவில்லை …
கண்ட கணமே அர்ஜூனுக்குள் கலந்தவள் , மெல்ல மெல்ல அவனுடன் கரைந்துகொண்டிருந்தாள். அவளது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .
அவனை தழுவி கொள்ளும் ஆவலோடு நெருங்கினாள் .
நோக்கம் அறிந்து விலகினான் ! அவன் தான் என்ன செய்வான் ?
ஏற்கனவே , நெருப்பாய் கொதிக்கும் அவளது நினைவுகளை ஒதுக்க முடியாமல் நித்தமும் தீ மிதித்து கொண்டிருக்கிறான் … பின்பு எப்படி அவளிடம் நெருங்க முடியும் ?
ஆண்மைக்கும் மென்மை உண்டு அல்லவா !
முரடனுக்கும் முள் முள் தானே !
வரும்பொழுது உச்சத்தில் இருந்த அர்ஜுனின் கோபம் மோனிஷாவை கண்டதும் சல்லென்று வடிந்தது உண்மைதான் .. ஆனாலும் புண்பட்ட மனதை எப்படி ஆற்றுவது ?? எனவே நெருங்க இயலாமல் தள்ளி நின்றான் .
அவனது விலகலை தாங்காது தவித்தாள் .. முகம் சிவந்தது ,
” அர்ஜுன் நான் ” – என்று அவள் பேச தொடங்கவும் ..
” யு லுக் குட் மோனிஷா ” – அவனது குரல் அவளது பேச்சை இடைவெட்டியது …
” தேங்க்ஸ் அர்ஜுன் “- வெட்கத்தில் தலை தாழ்த்தினாள் .
” இந்த அரேஞ்சமென்ட்ஸ் எல்லாம் உனக்காக தான் பண்ணினேன் ” – இயல்பாக கூறினான் .
” ரொம்ப நல்லா இருக்கு … பட் நான் தான் ஸ்பாயில் பண்ணிட்டேன் ” – வருத்தத்துடன் கூறினாள் .
” வா வந்து உக்காரு ” – மோனிஷாவுக்காக நாற்காலியை நகர்த்தி அவளை அமரச்செய்தவன் ” வசதியா இருக்கா ” – கனிவுடன் கேட்டான் ..
அவனிடம் இருந்து இதை சற்றும் எதிர்பார்க்காதவள் ” ஐயம் ஓகே அர்ஜுன் ” – புன்முறுவலுடன் கூறினாள் .
” எல்லாமே எனக்கு புடிச்ச மாதிரி தான் ஆர்டர் பண்ணிருக்கேன் உனக்கு என்ன புடிக்கும்ன்னு தெரியல ? உனக்கு என்ன புடிக்கும் ?” – அவள் எதிரே வந்து அமர்ந்தபடி கேட்டான்.
கத்தி சண்டையிடுவான் என்று எண்ணியிருந்தவளுக்கு அவனுடைய வித்யாசமான அணுகுமுறை கலக்கமடைய செய்தது ….
அர்ஜுனிடம் நெருங்கி தன் தரப்பில் உள்ள காரணத்தை கூறி அவன் தோளில் சாய்ந்து கொள்ளவேண்டும் என்று அவள் மனம் ஒருபுறம் துடிக்க !
மறுபுறமோ அவளது உள்ளத்தில் பரவியிருந்த குற்ற உணர்ச்சி மோனிஷாவை அவனிடம் நெருங்க விடாமல் தன் பக்கம் இழுத்தது .
இருவேறுபட்ட உணர்வுகளுக்கிடையே சிக்கிக் கொண்டு தவித்தவள்
” பேசலாமா ! வேண்டாமா !” என்று யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் .
” வாண்ட் டு ட்ரின்க் ?” – மதுவை தன் வாயில் சரித்தபடியே கேட்டான் ..
” ஹான் … நோ நோ ” – உடனே மறுத்தவள் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள்.
” இப்போ எல்லாம் என்னுடைய கணிப்பு ரொம்ப தப்பா இருக்கு அதான் கேட்டேன்” – என் நம்பிக்கையை உடைத்து விட்டாய் என்பதை சொல்லாமல் சொல்லிக்காட்டினான் .
புரிந்து கொண்டவளின் மென் வதனம் சுருங்கியது … அமைதியாய் அமர்ந்திருந்தாள் …
மதுவை கணக்கில்லாமல் பருகினாலும் அவன் கவனம் முழுவதும் மோனிஷாவின் மீதே இருந்தது . அவளே பேசட்டும் என்று காத்திருந்தான் . ஆனால் அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள் .
தன்னுடைய அதிகப்படியான கோபம் தான் அவளை தன்னிடம் இருந்து விலக்கி வைக்கின்றது என்பதை புரிந்து கொள்ளாதவன் .” அவ்வளவு அழுத்தம் ” உள்ளுக்குள் பொருமினான் .
இதற்கு மேல் மௌனமாய் இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்த மோனிஷா தயிரியத்தை வரவழைத்தபடி ,
” அர்ஜுன் நீ என்கிட்ட இப்படி நடந்துக்கணும்ன்னு அவசியம் இல்லை … நீ என் மேல கோபமா இருக்கன்னு எனக்கு தெரியும் ப்ளீஸ் என்கிட்ட உன் கோபத்தை காட்டிரு ” – வருத்தத்துடன் கேட்டாள்.
” ஏன் ” – அவளை கூர்ந்து பார்த்தான் .
” நான் பொய் சொல்லிருக்க கூடாது … உங்க கிட்ட என் பிரச்சனைய பத்தி பேசிருக்கணும் ” – கண்கள் கலங்கின
” ஏன் பேசல? … கிருஷ் சொன்ன மாதிரி உன் அன்பு ஃப்ரண்ட்ஸ ஏதாவது பண்ணிருவேன்னு நினைச்சிட்ட … ” – விரக்தியுடன் கேட்டான் …
” அர்ஜுன் உனக்கு தெரியுமா ?” – அதிர்ச்சியுடன் கேட்டாள் .
” ————— ” – இயந்திரம் போல உணர்வற்று புன்னகைத்தான்.
தொழில் கெட்டிக்காரனான அர்ஜுனுக்கு இதைக்கூட புரிந்து கொள்ள முடியாதா என்ன ?
கிருஷ் தன் மீது கொண்டுள்ள விரோதத்தை நன்கு அறிவான் அர்ஜுன் …
ரக்ஷிதா, லக்க்ஷை தவிர மோனிஷாவுக்கு ஆதரவாக , தனக்கு எதிராக யாரால் புகார் கொடுக்க முடியும் ? என்பதையும் அறியாமல் இருக்க வாய்ப்பு இல்லையே !
அனைத்திற்கும் மேலாக வேறு யாருக்காக தன்னையே விட்டு கொடுக்க துணிய போகிறாள் மோனிஷா ?… சந்தேகமே இல்லை ஒன்று ரக்ஷிதாவாக இருக்க வேண்டும் இல்லையேல் லக்ஷாக இருக்க வேண்டும் …
நிமிடத்தில் பிரச்சனைக்கான காரணத்தை யூகித்துவிட்டான் அர்ஜுன் …
அவன் புகார் கடிதத்தை வாசிக்கும் பொழுதே ஓரளவு யூகித்துவிட்டான் …
இருந்தும் அவன் அமைதியாக இருந்ததுக்கு முக்கிய காரணம் இரெண்டு ஒன்று அவர்கள் மோனிஷாவின் நண்பர்கள் ….
மற்றொன்று புகாரை கொடுத்தது வேண்டுமானால் அவர்களாக இருக்கலாம் ஆனால் கொடுக்க வைத்தது கிருஷ் என்பதை அறிந்திருந்ததால் அவனது கோபம் கிருஷ் மேல் தான் அதிகமாக இருந்தது …
ஆனால் மோனிஷா தன்னை இப்படி விட்டு கொடுப்பாள் என்பதை தான் அவன் தன் கனவிலும் நினைக்கவில்லை … அதனால் அவன் அவளை சந்தேகிக்கவில்லை ….
என்ன செய்வது காதல் அவனது மதியை விழுங்கிருக்க ? எப்படி அவனால் மோனிஷாவை சந்தேகிக்க முடிந்திருக்கும் ? நம்பினான் இப்பொழுது உடைந்து நிற்கிறான்…
“என் மேல அவ்வளவு நம்பிக்கை இல்ல “- அவனது இறுக்கமான குரலில் ஆழமான வேதனை தெரிந்தது …
சுருக்கென்று மோனிஷாவின் இதயத்தை நெருஞ்சி முள்ளாய் தைத்தது …
” அர்ஜுன்… அதுவந்து… நான் ” – தடுமாறினாள்
” கதை சொல்லாம உண்மைய மட்டும் சொல்லு ” – அவனுடைய அலட்சிய தோனி அவளை மிகவும் புண்படுத்தியது … இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாதவள் ,
” கிருஷ் சாரே சொல்லும் போது கொஞ்சம் குழம்பிட்டேன் ” என்றாள் …
” ஓ ! கிருஷ் சார் …வாவ் !அவரு மேல அவ்ளோ நம்பிக்கை ” – ஏறி இறங்கிய அவனது குரலில் தெரிந்த விஷம் அவளை காயப்படுத்தியது ‘அவனை நம்புவ என்னை மாட்ட ‘ இது தான் அவன் வருத்தத்திற்கான காரணம் ஆனால் அதை அவன் குத்தலாக சொன்ன விதம் அவளை வெகுவாக நோகடித்தது .. கண்ணீர் கன்னத்தை நனைத்தது
” எப்போ தெரியும் “- முறைத்தபடி கேட்டான் …
” என்னது ” – மெல்லிய குரலில் கேட்டாள்.
” ஓ ! நான் எதை பத்தி கேட்குறேன்னு உங்களுக்கு தெரியாது ம்ம் “- குத்தினான் .
” ————– ” – வார்த்தைகள் இன்றி மௌனமானாள் .
” எப்போ… தெரியும் ” – அழுத்தம் திருத்தமாய் கேட்டான் … கோபத்தில் சிவந்திருந்த விழிகள் எரிமலையின் அக்கினி பிழம்பை நினைவு படுத்தியது …
” ஹாஸ்…. பிடல்ல.. இருக்கும்…. போதே ரக்… ரக்ஷிதா போன் பண்ணி….. சொல்லிட்டா ” – சுழற் காற்றில் அகப்பட்ட துரும்பு போல் திக்கி திணறினாள்.
” நம்மளுடைய ஃப்ர்ஸ்ட் கிஸ் ! நியாபகம் இருக்கா ?” – புருவம் உயர்த்தியவன் அவளை நோக்கியபடி ,” எனக்கு புடிச்சிருந்தது ! உனக்கு எப்படி ?” – வார்த்தைகள் ஈட்டி போன்று அவளை குத்தி கிழித்தது ….
” புடிச்சிருந்ததா … இல்லையா ” – விழிகள் மிரட்டின .
புடிக்காமல் இருந்திருந்தால் அவள் இங்கே வந்திருக்கவே மாட்டாளே … அதீத கோபம் புத்தியை மறைத்திருக்க கொஞ்சமும் சிந்திக்காமல் அவளை தன் வார்த்தையாலே காயப்படுத்தினான் .
” புடிச்சிருந்தது அர்ஜுன் ” – துக்கம் தொண்டையை அடைத்தது .
” எப்படி உன்னால முடிஞ்சிது ? மனசாட்சி குத்தல ? ” முகத்தை சுளித்தபடி கேட்டான் … அச்சாணியற்ற தேர் போல நாடி இல்லா உயிருக்கு சமமாய் அமர்ந்திருந்தாள் … கண்ணீர் பெருகியது … அவமானத்தில் உடம்பெல்லாம் கூசியது … கண்ணீர் குறைந்தபாடில்லை செய்த தவறுக்காக மிகவும் வருந்தினாள் …
அவனுக்கும் அவளை கஷ்டப்படுத்துவதில் சிறிதும் விருப்பம் இல்லை இருந்தும் அவனால் அவள் செய்த தவறை மன்னிக்க முடியவில்லை !
அலைகடலின் சீற்றம் அடங்கினாலும் அவனது அகக்கடலின் சீற்றம் மற்றும் சற்றும் குறைந்தபாடில்லை ..
“
பதில் சொல்லு “- மிதக்கும் விழிகளை உருட்டினான் .
” மன்னிச்சிரு அர்ஜுன் கிருஷ் ஆர் அப்படி சொன்னதும் நான் ரொம்பவே குழம்பிட்டேன் … ரக்ஷிதாக்காக தான் அப்படி சாரி அர்ஜுன் … தயவு செஞ்சி புரிஞ்சிக்கோ ப்ளீஸ் அர்ஜுன் ” – இடை இடையே குறுக்கிட்ட தேம்பல்களை கட்டுப்படுத்தியபடி கெஞ்சினாள் .
அவளது வலியை காணயியலாதவன் வேகமாக அங்கிருந்து கிளம்ப அவனை தடுத்த மோனிஷா ” நம்ம காதலுக்காகவாது ஒரு சான்ஸ் குடு அர்ஜுன் “
” நம்ம காதலா … ” – விரக்தியுடன் சிரித்தவன் ,” இட்ஸ் ஆள் ஓவர் மோனிஷா தேர் இஸ் நத்திங் பிட்வீன் யு அண்ட் மீ ” அழுத்தமாய் கூறினான் ..
” கிருஷ் சார் சொல்லும் பொழுது அர்ஜுன் ” – மென்குரல் நடுங்கியது
” ஷட் அப் … கிருஷ் கிருஷ் அவன் பேர இனிமே என் முன்னாடி சொல்லாத ” – ஆக்ரோஷமாக அவன் கத்தியதில் இடியோசை கேட்ட குழந்தை போல மிரண்டு போனாள் மோனிஷா ..,
” இது அந்த கிருஷ் பத்தியோ , உன் ஃப்ரண்ட்ஸ் பத்தியோ கிடையாது !
இது நம்மள பத்தி ! சிம்பிள் , நீ ஏன் என்னை நம்பல ? ஏன் ?
நீ என்னை நம்பிருக்கணும் மோனிஷா “! – விரக்தியுடன் கூறினான் ..
” ப்ளீஸ் அர்ஜுன் ” – ஏங்கினாள் … துடைக்க துணிந்த கரங்களை அடக்கியவன் … கனத்த மனதுடன் அங்கிருந்து சென்றான் .
தண்ணீர் இல்லா சிறு மீனாய் தரையில் விழுந்து துடித்தாள் …
https://www.youtube.com/watch?v=u0G4JelEDnU
—————————————————————————————————–
கீழே ரிசெப்ஷனில் ” ஒரு டேபிள் கூடவா இல்ல “
” ஆமா சார் இன்னைக்கு எல்லா டேபிளும் புக் ஆகிடுச்சு சார் “
” அதெப்படி … ஒரு டேபிள் கூடவா இல்லை “- ரிசெப்ஷனிஸ்ட்டிடம் அந்த இளைஞன் வாதத்தில் ஈடுபட
” சலீம் விடு பா … இல்லனா அவங்க என்ன பண்ணுவாங்க இன்னொரு நாள் பார்த்துக்கலாம் … நாம வீட்டுக்கே போய்டலாம், அம்மா சொன்னா கேளுடா ” – என்று ஒரு நடுத்தர வயது பெண்மணி தன் மகனை அழைத்து கொண்டு அங்கிருந்து செல்லவும் …
வெளியே செல்வதற்காக வந்த மோனிஷாவின் கால்கள் படியில் தட்டி விழப்போகவும் சரியாக இருக்க … அதை கவனித்த அந்த பெண்மணி தக்க நேரத்தில் மோனிஷாவை தாங்கி பிடித்தார் …
அழுது அழுது கன்றி சிவந்திருந்த மோனிஷாவின் வதனம் அந்த பெண்மணிக்கு அவள் ஏதோ பிரச்சனையில் இருப்பதை தெரிவிக்க புரிந்து கொண்ட அப்பெண்மணி …
” பார்த்து போ மா , எல்லாம் ஓகே தான ஏதும் பிரச்சனை இல்லையே ” – வயதுக்கே உரிய அக்கறையுடன் வினவினார் …
” இல்லை ” – மெதுவாய் கூறினாள்.
“சரி கொஞ்சம் தண்ணி குடி” என்று அவளை ஆசுவாசப்படுத்தினார்.
” என் பேரு நிஹரிக்கா , நான் பெண்கள் மறுவாழ்வு இல்லம் வச்சு நடத்திட்டு இருக்கேன் … இது என் பையன் சலீம் … ” – தன்னையும் தன் புதல்வனை அறிமுகம் செய்தார் ..
” ஓ ஐயம் மோனிஷா ” – ஒப்புக்காய் புன்னகைத்தாள் ..
“உனக்கு வேற எந்த பிரச்சனையும் இல்லையே”
” நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை “
” எங்க போகணும்னு சொல்லு மா நாங்க டிராப் பண்றோம் “
” இல்லை பக்கம் தான் க்ளாசிக் அகெடமியில தான் படிக்கிறேன் ஹாஸ்டல் போகணும் ஆட்டோல போய்டுவேன் … தேங்க் யு ” – என்றவள் அவர்களிடம் இருந்து விடை பெற்று கொண்டு , அங்கிருந்து சென்றாள் .
க்ளாசிக் அகாடெமி என்னும் பெயரை கேட்டதும் நிஹரிக்காவின் விழிகள் தானாய் கசிந்தது …
– தொடரும்