ஓ காதல் கண்மணி 24
– நெமிரா
வணக்கம் நட்பூஸ் ,
விட்டு விட்டு கொடுத்தாலும் என்னை விட்டு கொடுக்காது நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி .
ஓ காதல் கண்மணியின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி …
படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் …
இதுவரை …..
” நான் … உன் அம்மா …டா ” – துயரம் தாக்கியதில் உள்ளத்தின் அணை உடைந்து கண்ணீர் வெள்ளப் பெருக்காய் மாறியது !
வார்த்தைகள் தடுமாறியது , கணவனை இழந்தபொழுதை விட இப்பொழுது அதிகமாய் கலங்கினாள் !
“அம்மாவா … யு ப்ளடி வம்ப் ” – வீடே அதிரும் படி கத்தினான் … அவன் போட்ட சத்தத்தில் வேலையாட்கள் அனைவரும் எட்டியெட்டி பார்த்து முணுமுணுத்தனர் … அவமானத்தில் கூனிக்குறுகி நின்றாள் நிஹரிகா .
இனி……
” நீ பேசுனத்துக்கெல்லாம் ஒருநாள் கண்டிப்பா வருத்தப்படுவ டா, உன்னை சும்மா விடமாட்டேன் அர்ஜுன் ” – சலீமின் அறைகூவல் செவியில் விடாமல் ஒளித்து கொண்டிருக்க , அர்ஜுனை அது மிருகமாக்கியது !
ஏற்கனவே அர்ஜுனின் மனம் உலைக்களனாகக் கொதித்துக்கொண்டிருக்க , இன்று மேலும் அவனது இருதயம் ரணகளம் ஆனது … உள்ளுக்குள் பற்றி எரியும் நெருப்பு அவனை கொஞ்சம் கொஞ்சமாக வதைத்து கொண்டிருந்தது !
சுயகட்டுப்பாட்டை முழுவதுமாய் இழந்திருந்தவன் ஹாலில் உள்ள சோபாவில் வெறி பிடித்த மிருகம் போல அமர்ந்திருந்தான் அவனது இரு விழிகளும் அனலை வீசியது .
அனைவரும் அவனை சுற்றி நிற்க ,
” இந்த பிரச்சனைய இன்னும் எவ்வளவு தான் வளர்த்துட்டே இருக்க போற ” –
கோபத்துடன் கேட்டார் காயத்ரி,
” என் மூச்சு நிக்கிற வரைக்கும் “- என்றான் அழுத்தமாக
” எத்தனை வருஷம் ஆச்சு இன்னும் ஏன் அதையே நினைச்சிட்டு இருக்கே அதை விட்டு வெளிய வா , எல்லாரும் வந்துட்டாங்க நீ மட்டும் இன்னும் அதே இடத்துல சுத்திட்டு இருக்க ” – வேதனையுடன் கூறினார் .
” என்னால முடியல பாட்டி … உங்க பையன் என் கண்ணு முன்னாடியே செத்து போனாரு … இப்பவும் வலிக்குது ” – அமைதியாகக் கூறினான் .
அவனது இருதயத்தில் இருக்கும் துயரத்தின் உச்சம் குரலில் தெரிந்தது….
” அர்ஜுன் ” – கவலையுடன் பேரனை எதிர்நோக்கினார் .
” ப்ளீஸ் என்னால முடியல பாட்டி … என்னை விட்ருங்க ” – இயலாமையுடன்
கூறினான் …
” விடுங்க அத்தை அவனை ஏதும் கேட்க்காதீங்க , நாம எல்லாரும் போகலாம் அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ” – என்றும் இல்லாமல் இன்று அர்ஜுனுக்கு ஆதரவாக பேசிய மஹிமா அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு … தன்னையே பார்த்து கொண்டிருந்த அர்ஜுனை பார்த்து லேசாக புன்னகைக்க பதிலுக்கு விரக்தியுடன் சிரித்தவன் .
” என்ன திடீர்ன்னு ” – மஹிமாவின் விழிகளில் ஊடுருவியபடி கேட்டான்
” என்ன அர்ஜுன் “- மலங்க விழித்தாள்
” ம்ம்ம் என்ன கேட்குறேன்னு புரியல ” – நக்கலாக கேட்டான்
” —————— ” – பதில் இன்றி நின்றாள்
” தாய போல பிள்ளை … கேட்டுச்சு சித்தி ” – அர்ஜுனின் பார்வை மஹிமாவை குத்தி துளையிட்டது .
” என்ன சொல்ற எனக்கு ஒன்னும் புரியல அர்ஜுன் ” – தடுமாற்றத்தை மறைத்தபடி கூறினாள்.
” ரியலி ! ” – போலியாக ஆச்சரியப்பட்டவன் ஆழமூச்செடுத்து , சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்துக்கொண்டு ,
” புரியலைன்னா புரியிற மாதிரி விளக்கமாவே சொல்லிருவோம் “
” சித்தி எனக்கு தெரியும் ஏன் ரோஹித்துக்கும் தெரியும் உங்களுக்கு என்னை சுத்தமா புடிக்காதுன்னு !
நீங்க எந்த ட்ராமாவும் பண்ண தேவை இல்லை !
ஒன் மோர் திங் ரோஹித் பிஸ்னஸ டேக் ஓவர் பண்ணின அடுத்த செகண்ட் நான் விலகிருவேன் !
சோ தேவை இல்லாம எனக்கு எதிரா பிளான் போடுறது, என்னை எதுலையாவது மாட்டிவிடணும்ன்னு நினைக்கிறது இதெல்லாம் வேண்டாம் !
நீங்க என்னை எவ்வளவு கீழ தள்ளினாலும் நான் இப்படி தான் இருப்பேன் !
எதுவுமே என்கிட்ட இல்லனாலும் என்னுடைய திமிர் , என்னை விட்டு போகவே போகாது ! சோ என்னை உங்களால எதுவுமே பண்ண முடியாது !
சின்ன துரும்பு மாதிரி நான் உங்க கண்ணை உறுத்திட்டே தான் இருப்பேன் ,என் மேல உள்ள பொறாமை உங்கள விட்டு போற வரைக்கும் !
என் அம்மா என் நம்பிக்கைய உடைச்ச மாதிரி நீங்க ரோஹித் நம்பிக்கைய உடைச்சிராதீங்க … ” பாடாரென்று அறைந்தது போல அனைத்தையும் முகத்துக்கு நேராக கூறியவன் , மேலும் தொடர்ந்து
” ஒன் மோர் திங் கிருஷ கூட்டு சேர்த்துட்டு கோமாளி தனமா எதாவது பண்ணிட்டு இருக்காதீங்க , எனக்கு அந்த கோமாளி பண்ற ஜோக்குக்கெல்லாம் சிரிக்க சுத்தமா டைம் இல்லை …
அப்புறம் என் அம்மா எப்படின்னு நீங்க செர்டிபிகேட் குடுக்கணும்ன்னு அவசியம்யில்லை … என் பர்சனல் இஷ்யூஸ் குள்ள வராதீங்க …. எப்பவும் இப்படி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன் … ” – என்று மேலும் அவளை அலட்சியப்படுத்தியவன்
மஹிமாவின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டுட்டு அங்கிருந்து சென்றான்.
” எல்லாம் தெரிஞ்சே இத்தனை வருஷமா நம்ம கூட சகஜமா இருந்திருக்கானா !” – மஹிமாவுக்கு பகீரென்று இருந்தது … தன்னை திடுக்கிட வைத்த ஒவ்வொரு வார்த்தைகளையும் சிந்தித்துக்கொண்டிருந்தவளின் மூளை சூடானது .
அவன் பேசிய வார்த்தைங்களை விட , ஏளனம் ததும்பிய அவனது குரல் அனைத்திற்கும் மேலான அவனது பார்வை அவளது கோபத்தை அதிகரித்தது ..
” மஹிமா இவன் ரொம்ப ஆபத்தானவன் , இவன் கார்த்திக் மாதிரி கிடையாது இவன் அப்படியே நிஹரிகா மாதிரி .. எவ்வளவு அடிச்சாலும் முன்னாடி வந்து நிப்பான் … கார்த்திக்க ட்ரீட் பண்ணின மாதிரி எமோஷனலா அர்ஜுன ஒன்னும் பண்ண முடியாது … ஐ ஹவ் டூ திங்க் மோர் ” – சிவந்த விழிகள் பழி உணர்ச்சியை தெளிவாய் காட்டியது.
செய்யாத தவறுக்காக இன்னும் எவ்வளவு நாட்கள் தான் அவப்பேரைச் சுமப்பது , என்று கலங்கிய மனம் ஆழிப்பேரலையில் சிக்கிய மலர் போல துவண்டு வருந்தியது …
நரகத்தை விட கொடுமையானது ஈண்ட மகனே தன் தாயின் நடத்தையை பற்றி தவறாய் கூறுவது … அப்படி ஒரு நரகத்தை விட கொடுமையான வேதனையை தான் நிஹரிகா இப்பொழுது அனுபவித்து கொண்டிருந்தாள் ..
” இப்படி தீராத பழிய என் மேல சுமத்திட்டு போய்ட்டிங்களே கார்த்திக் … ” – கல்லடி பட்டது போல இதயம் வலித்தது … விழிநீர் தாரை தாரையாக இறங்கியது … ” அர்ஜுன் என் மேல எந்த தப்பும் இல்லடா எப்படி டா புரியவைப்பேன் , என்னை நம்பு அர்ஜுன் ” – மகனுக்காக மனம் ஏங்கி தவித்தது … பொங்கி வந்த ஆத்திரம் தொண்டையை அடைக்க , கண்களை மூடி ஆழமாக மூச்சை உள்ளிழுத்தாள் … இறுக்கி பிடித்தும் மனம் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது .
நிஹரிகாவிற்கு அப்பொழுது ஒன்பதாம் மாதம் ஹாஸ்பிடலில் இருந்து எமெர்ஜென்சி என்று அழைப்பு வந்ததால் மறுக்க முடியாமல் அங்கு சென்றவள் … தன் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் பொழுது மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது .
எப்பொழுதும் தாமதமாக வரும் கணவனும் அத்தையும் அன்று சீக்கிரமே வந்திருந்தனர் . கணவன் கார்த்திக்கின் காரை வீட்டின் வாசலில் கண்டவள் …
” என்ன இது சீக்கிரமே வந்துட்டாரு … ” – பெருமூச்சுடன் நெற்றியை நீவி தயக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள் .
கண்ணில் தெரிந்த தூரம் வரை யாரும் தென்ப்படவில்லை , நிம்மதி அடைந்தவள் தன் அறைக்கு செல்ல எத்தனித்தாள் .
” ஏய் ” என்ற கார்த்திக்கின் கடுமையான குரல் , நிஹாவை தடுத்தது …
” எங்க போன ” – கார்த்திக்கின் மிதக்கும் விழிகள் … அவன் குடித்திருப்பதை அவளுக்கு புரியவைக்க … எரிச்சல் அடைந்த நிஹா
” குடிச்சிருக்கீங்களா ! நாளைக்கு பேசிக்கலாம் கார்த்திக் ஐயம் ரியலி டயர்ட் ” – நிதானமாக கூறினாள்.
” எங்க போனன்னு கேட்டா … என்னை குடிகாரன்னு சொல்றியா ” – கோபத்துடன் கேட்டான் .
” சரி ரூம்ல போய் பேசிக்கலாம் , இங்க வேண்டாம் வேலைக்காரங்களாம் பாக்குறாங்க ப்ளீஸ் கார்த்திக் “
“யார் வேணும்னாலும் பார்க்கட்டும் எனக்கு கவலை இல்லை … கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ ” – கத்தினான் .
” நான் என்ன வேற யாரையோவா பார்க்க போனேன் வேலைக்கு தானே போனேன் …. நிக்க வச்சு கேள்வி கேட்க்குறீங்க … யு ஆர் டிஸ்கஸ்டிங் கார்த்திக் ” – எரிச்சலுடன் கேட்டாள் …
ஆத்திரத்தில் அறையத்துணிந்தவன் மிகச்சிரமப்பட்டு தன் கோபத்தை உள்ளடக்கி , ” ரொம்ப இடம் கொடுத்துட்டேன் … அதான் என்கிட்டையே திமிரா பேசுற இங்க இருக்கணும்ன்னா நான் சொல்ற மாதிரி தான் இருக்கணும் ” – சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தான் !
” முடியாது கார்த்திக் … உதவின்னு யார் கேட்டாலும் நான் செய்வேன் … நான் மட்டும் இன்னைக்கு சரியான நேரத்துக்கு போலன்னா அம்மா புள்ளன்னு ரெண்டு பேரும் செத்துருப்பாங்க , என்ன நம்புற என் நோயாளிகளை என்னால கைவிட முடியாது ..எல்லாம் தெரிஞ்சி தானே கல்யாணம் பண்ணுனீங்க ” – அழுத்தமாய் கேட்டாள் .
” போ போய் இந்த குழந்தையையும் கொன்னுடு கொலைகாரி “- சற்றும் தயங்காமல் அமிலத்தை கக்கினான் … அவளது மென் இதயத்தை பஸ்மாமாக்கியது ..
” நான் கொலைகாரியா ? … என்ன பேசுறீங்க கார்த்திக் நானா தேடி போய் அபார்ஷ்ன் பண்ணிக்கிட்டேன் … எப்படியோ நடந்து போச்சு எனக்கு வருத்தம் இல்லையா என்ன? ” – “- கண்களில் திரண்ட கண்ணீர் கன்னத்தை நனைத்தது .
” நிறுத்து …. வருத்தம் இருந்திருந்தா இப்படி அஜாக்கிரதையா இருந்திருக்க மாட்ட , லுக் நீ என்ன வேணும்னாலும் பண்ணு ஐ டோன்ட் கேர் என் குழந்தைக்கு மட்டும் ஏதும் ஆச்சு … என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது … குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ எங்கையும் போக கூடாது “- கடுமையாக எச்சரித்தான் .
சத்தம் கேட்டு வெளியே வந்த காயத்ரி ,” கார்த்திக் எதுக்கு இப்போ அவ கிட்ட கத்திக்கிட்டு இருக்க ” – மகனை கண்டித்தார்
” வேண்டாம் யாரும் எனக்காக பேச வேண்டாம் நான் போறேன் ” – ஏங்கி அழுதவள் அங்கிருந்து கிளம்பினாள் .
” நிஹா எங்க டி போற ” – வேகமாய் மனைவியை தடுத்தான் … அடிவயிற்றில் ஒருவித அசவுகரியத்தை உணர்ந்தாள் … வயிறு மற்றும் இடுப்பின் தசை பகுதியில் ஏற்பட்ட அழுத்தத்துடன் கூடிய வலி அவளை எச்சரிக்க கணவனை ஏறிட்டு பார்த்தாள் … அவள் முகத்தில் தெரிந்த கலவரம் அவனை திடுக்கிட செய்ய , ” என்னாச்சு ” – பதற்றத்துடன் கேட்டான் .
” சும்மாவே இருக்க மாட்டியாடா நீ ” – மகனை அதட்டியபடி மருமகளிடம் வந்தார் காயத்ரி .
” அத்தை இன்னும் கொஞ்சம் நேரத்துல வாட்டர் ப்ரோக்காகிரும் ” – வலியில் முகத்தை சுளித்தபடி கூறினாள்
” வாட் என்ன வாட்டர்…. எனக்கு புரியல “
” கார்த்திக் போய் கார ஸ்டார்ட் பண்ணுடா ” – காயத்ரி கட்டளையிட்டாள்.
” என்னன்னு சொல்லுங்க ” – அடம் பிடித்தான்.
” இன்னும் கொஞ்சம் நேரத்துல குழந்தை பிறந்துரும், என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க ” – வலியில் கணவனின் கரங்களை இறுக்கமாக பற்றி கத்தினாள் …
” இன்னும் நாள் இருக்கே அதுக்குள்ள எப்படி மாம் … குழந்தைக்கு எதுவும் ஆகாதுல பயமா இருக்கு மாம் ” – கார்த்திக்கின் இதயம் தாறுமாறாய் துடிக்க .. பதற்றத்தில் முகமெல்லாம் வியர்த்து கொட்டியது
” கார்த்திக் ஸ்டே காம் ….சீக்கிரமா நீ காரை ஸ்டார்ட் பண்ணு “- மகனை அதட்டிவிட்டு மருமகளை தாங்கி அணைத்துக்கொண்டார் காயத்ரி .
மருத்துவமனையில் தன் மனைவி படும் துன்பத்தை எண்ணி மிகவும் கவலை அடைந்தான் கார்த்திக் …
” அம்மா ” என்று அவளது கதறல் அவனது செவியை கிழித்தெறிய … பதற்றத்தில் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தான் கார்த்திக் …
” இன்னும் எவ்வளவு நேரம் மாம் ” – பொறுமையிழந்து சிடுசிடுத்தான் …
” பயப்படாதீங்க அண்ணா கொஞ்சம் பொறுமையா இருங்க ” – தமையனுக்கு வினோத் ஆறுதல் அளித்து கொண்டிருக்க …
வீல் என்ற அழுகுரல் அனைவரின் செவியிலும் அமுதமாய் பொழிய தாயின் உயிரை வாங்கிக்கொண்டு இந்த பூமியில் வந்து ஜனனித்தான் நிஹரிக்கா கார்த்திக்கின் ஆசை மைந்தன் அர்ஜுன்.
அர்ஜுனின் பிறப்பு ஒரே நொடியில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிணக்குகளை நீக்கியது … குடும்பத்தின் முதல் வாரிசு என்று அனைவரும் அவனை கொண்டாடினர் …. அவனது பிறப்பு அனைவருக்கும் புத்துணர்ச்சியை அளித்தது .
தன் வாழ்க்கை முழுவதும் ஆசிரமத்தில் கழித்ததாலோ என்னவோ … துன்பத்தில் வாடும் யாரை பார்த்தாலும் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது … தயங்காமல் உதவி கரத்தை நீட்டிவிடுவாள் .
ஆரம்பத்தில் அவளது குணம் பிடித்துத்தான் கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
திருமணம் ஆன அடுத்த ஆண்டே நிஹா கருவுற்றிருக்க கார்த்திக் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் . அப்பொழுது நிஹாவுக்கு மூன்று மாதம் இதே போல் தான் அன்றும் ஒரு எமெர்ஜென்சி கேஸை அட்டென்ட் செய்வதற்காக கார்த்திக் எவ்வளவோ தடுத்தும் ஹாஸ்பிடல் சென்றார் . ஆனால் விதியின் விளையாட்டால் அன்று வேறொரு உயிரை காக்க சென்று தன் குழந்தையை பறிகொடுத்தார் .
அடைமழையால் சாலையில் உள்ள குழிகளெல்லாம் தண்ணீரால் நிரம்பிருக்க தவறுதலாய் ட்ரைவர் பள்ளத்தில் வண்டியை ஒட்டியதில் வண்டி தாறுமாறாய் குலுங்க , அந்த இடத்திலே நிஹாவின் கார்த்திக்கின் கருவுடன் சேர்ந்து கனவும் கலைந்தது …
தன் முதல் குழந்தை கலைந்ததற்கான காரணம் நிஹாவின் அஜாக்கிரதை தான் என்று எண்ணிய கார்த்திக்கிற்கு …. நிஹாவின் இந்த குணம் பிடிக்காமலே போனது . இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் சண்டை என்று மோதல் வலுத்து கொண்டே இருந்தது .
இப்படி இருக்க குஜராத்தில் பூகம்பம் வந்து வந்து மக்கள் பலர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்க , தமிழ்நாடு அரசாங்கம் சார்பாக தன்னார்வு தொண்டு மூலமாக ஆயிரத்திற்கும் மேலான மருத்துவர்கள் உதவிக்கரம் நீட்ட சென்றனர் .
ஏற்கனவே குழந்தையை இழந்து மன வேதனையில் இருந்த நிஹாவுக்கு கார்த்திக்கின் கசப்பான பேச்சு மேலும் மன உளைச்சலை தர … மன ஆறுதலுக்காக பேரிடரில் சிக்கி தவிக்கும் அப்பாவி பொது மக்களுக்கு உதவி செய்ய சென்றாள் .
அங்கு அவளுக்கு கிடைத்த உறவு தான் சலீம் .
சலீமிற்கு அப்பொழுது ஐந்து வயது தாய் தந்தை இருவரையும் இழந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான் … இரெண்டு நாட்களுக்கு பிறகு கண்விழித்தவன் பார்ப்பதற்கு நிஹா தன் தாயை போன்ற சாயலில் இருப்பதாலோ என்னவோ அவளை பார்த்த உடனே ‘அம்மா’ என்று அழைத்தான் …
ஏற்கனவே குழந்தையை இழந்த வேதனையில் தவித்த நிஹாவுக்கு அவனது ‘அம்மா’ என்ற சொல் ஆறுதலை அளிக்க… சலீமை தன்னுடன் அழைத்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பினார் …
சலீமை கண்டதும் கார்த்திக் காயத்ரி கோபம் கொண்டாலும் … அவன் வந்திருந்த நேரம் நிஹா மீண்டும் கருவுற்று இருந்ததால் … அவனை தங்களுடன் தங்க சம்மதித்தனர் .
என்ன தான் மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்கே மீண்டும் எதாவது தவறு நடந்துவிடுமோ என்று கலங்கிய கார்த்திக் நிஹாவிடம் மிகவும் கடினமாகவே நடந்துகொண்டார் …
சூரியன் முன்பு கரைந்தோடும் பனி துளிபோல அர்ஜுனின் பிறப்பிற்கு பிறகு அவர்களது சங்கடங்கள் எல்லாம் மறைந்து போனது , அணைத்து கசப்பான சம்பவங்களையும் மறந்து கணவன் மனைவி இருவரும் ஆனந்த மழையில் நனைந்தனர் .
அவர்கள் இருவருக்கும் இடையில் அனைத்தும் நன்றாகவே இருந்தது … மஹிமா வினோத்தின் திருமணம் நடக்காதவரை !
தன் மார்பின் மீது முட்டி மோதி தலை சாய்த்து துயில் கொண்ட தருணங்கள் என்று அர்ஜுனின் குழந்தைப்பருவத்தை நினைக்கும் பொழுது நிஹாவின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை . பழைய இனிமையான தருணங்களை எண்ணும் பொழுது மனம் ஆனந்தம் கொண்டது …
அர்ஜுனை முதன் முதலாக தன் கரங்களில் ஏந்திய தருணம் … தன் வெண்ணமுதான செங்குருதியை அவன் முதன் முதலில் பருகும் பொழுது ஏற்பட்ட தாய்மை உணர்வு … என்று அர்ஜூனுடன் கழித்த அணைத்து இன்ப தருணங்களையும் இப்பொழுது நினைத்த பொழுது கூட நிஹரிக்காவின் விழிகளில் ஆனந்த கண்ணீர் வழிந்தது …
” எவ்வளவு வெறுக்கணுமோ வெறுத்துக்கோ அர்ஜுன் … ஒருநாள் இல்லை ஒருநாள் உனக்கே புரியும் ” – வேதனையுடன் கூறினாள். சலீம் தாய்க்கு தாயாக மகனுக்கு மகனாக இருந்து நிஹாவின் வேதனையை துடைத்தான் …தன் வாழ்நாள் எல்லாம் தாய் மடியின் சுகத்தை அனுபவிக்காத நிஹா தன் மகன் சலீமின் மடியில் தலைசாய்த்து ஆறுதல் அடைந்தாள் .
ஈன்ற மகன் ஏற்படுத்திய காயத்திற்கு தத்துமகன் மருந்திட்டான் !
நேரமும் காலமும் யாருக்கும் காத்திருக்காமல் விரைந்து ஓடியது … நாட்கள் நகர நகர அர்ஜுனை காணாத ஒவ்வொரு நொடிகளும் மோனிஷாவுக்கு நரகமாகிப்போனது !
உணர்வற்ற ஜடம் போல காட்சியளித்தாள் ! ரக்ஷிதாவுக்கும் லக்ஷுக்கும் மோனிஷாவை அப்படி பார்க்கவே சங்கடமாக இருக்க … இருவரும் அவளது துயரம் நீக்க சித்தம் கொண்டனர் .
மோனிஷாவின் நிலைமை இப்படி இருக்க அர்ஜுனின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது …நித்தமும் போராட்டம் தான் !
வேலையிலும் முழுமனதாய் ஈடுபட முடியாமல் ,அவளையும் மறக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டான் .. அவளது மருண்ட விழிகள் , அதில் வழிந்த காதல் , வெட்கம் , கண்ணீர் என்று அனைத்தும் அவன் மனதை சிறைசெய்தன !
முதல் கண்ணீர் தொடங்கி முதல் முத்தம் வரை அவனை பித்தனாக்கியது … காதலில் கிறங்கி கிடந்த தருணம் இன்று சித்தம் கொண்டு அவனை சிறுக சிறுக சிதைத்தது ! உண்ண மறந்தான் உறங்க மறந்தான் உயிரற்ற சவம் போல இருந்தான் !
” அவங்களை கண்டிப்பா போய் பார்க்கணுமா “- கோபத்துடன் கேட்டான் தர்ஷித்
” அர்ஜுன் வேணும்ன்னா இதை செஞ்சி தான் ஆகணும் ” – திட்டமாக கூறினான் ரோஹித்
” மோனிஷாவால தான் அவன் இப்படி இருக்கான் “
” ஆனா அவளைத்தான் அர்ஜுனுக்கு புடிச்சிருக்கு , தர்ஷித் புரியுது ஆனா வழி இல்லை… எதோ அன்னைக்கு அப்படி சொல்லிட்டா …ஆனா அர்ஜுனை நினைச்சு அவளும் கவலையா தான இருக்கா .”
” எனக்கு அவளை சுத்தமா புடிக்கலை “
” நமக்கு புடிக்கணும்ன்னு அவசியம் இல்லை அர்ஜுனுக்கு புடிச்சிருக்கு , அவனுக்காக இதை நாம பண்ணுவோம் … அவனை என்னால அப்படி பார்க்க முடியல டா “
” எனக்கும் தான் கஷ்டமா இருக்கு ஆனா “
” அர்ஜுனுக்காக நாம செஞ்சிதான் ஆகணும் ” – என்று ரோஹித் உறுதியாக கூற தர்ஷித்தும் சம்மதித்தான் .
கல்லூரி கேன்டீனில் , ” இதெல்லாம் எப்படி சாத்தியம் ” – தயக்கத்துடன் கேட்டாள் ரக்ஷிதா .
” ரக்ஷிதா நமக்கு வேற வழி இல்லை .. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து பேசினா தான் ஒரு முடிவு கிடைக்கும் … நான் சொல்றத நீங்க பண்ணுங்க அது போதும் … இதுல ஒரு லெட்டர் இருக்கு மோனிஷாகிட்ட கிட்ட குடுத்திருங்க அப்புறம் பாருங்க எல்லாம் சரியாகிரும் ” – நம்பிக்கையுடன் கூறினான் ரோஹித்
” பிரச்சனை ஏதும் வராதுல ” – பயத்துடன் கேட்டாள் .
” வராது பா என்னை நம்புங்க யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது ” – உறுதியளித்தான்
” என்னாலதான் மோனிஷா கஷ்டப்படுறா ரோஹித் ” – கவலையுடன் கூறினாள்
” இங்க பாருங்க ரக்ஷிதா பழசை யோசிக்காதீங்க … நடக்கணும்ன்னு விதி நடந்து போச்சு … கவலைப்படாதீங்க அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறது தான் நம்மளுடைய ஒரே குறிக்கோள் ஓகே வா … ” – கனிவுடன் புன்னகைத்தான் …
சம்மதமாக தலையசைத்தாள் … விலகி இருக்கும் இரு காதலர்களையும் இணைப்பதற்காக இணைந்திருக்கும் இருவரது கரங்களும் வெற்றியை காணுமா ! இல்லையா! என்பதை காலம் தான் கூறவேண்டும் ..
ரோஹித் கூறியபடியே லாவகமாக பேசி மோனிஷாவை அர்ஜுனின் ஆபிஸ்க்கு அனுப்பிவைத்த ரக்ஷிதா .. ஒன்றும் அறியா குழந்தை போல மோனிஷாவிற்கு தொடர்பு கொண்டாள் …
மனம் முழுவதும் தயக்கம் இருந்தாலும் அர்ஜுனை காண போகும் மகிழ்ச்சியில் தயக்கத்தை புறம் தள்ளி அவனது ஆபிசுக்குள் நுழைந்தாள் …
வாயில் காவலர்கள் அவளிடம் ஏதும் கேட்ப்பார்கள் என்று எண்ணினாள் ..ஆனால் அவர்கள் ஏதும் பேசாமல் மரியாதையுடன் கதவை திறந்து வணக்கம் செலுத்தினர். இளநகையுடன் உள்ளே வந்தவள் செய்வதறியாது நிற்க ,
” நீங்க யாரை பார்க்கணும் மேம் ” – சீருடை அணிந்திருந்த பணிப்பெண் பணிவுடன் கேட்டாள் .
” அர்ஜுன் பாக்கணும் , என்னை வர சொல்லிருந்தாங்க இதோ இந்த …” என்று தன் கையில் இருந்த லெட்டரை அந்த பெண்ணிடம் நீட்டிய மறுநிமிடம் அந்த பெண்
” நீங்க மோனிஷா தானே ” என்று மோனியின் பெயரை சரியாக கேட்க
” ஆம் ” ஆச்சரியத்துடன் தலையசைத்தாள்
” இது எதுவும் வேண்டாம் மேம் ,நீங்க என்கூட வாங்க ” – என்றவள் அர்ஜுனின் அறைக்கு அழைத்துச்சென்று ..
” நீங்க இங்க வெயிட் பண்ணுங்க சார் ஸ்டாப்ஸ் கூட மீட்டிங்க்ல இருக்காங்க இப்போ வந்துருவாங்க “
“சரி நான் வெயிட் பண்றேன் ” -புன்னகையுடன் தலையசைத்து விட்டு சோபாவில் அமர்ந்தாள் மோனிஷா .
அர்ஜுனை சந்திக்க போகிறோம் என்று மனம் ஒரு பக்கம் ஆனந்த களிப்பில் மூழ்கிருக்க … மறுபக்கம் அவனை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்பதை நினைத்து உடலும் உள்ளமும் தானாய் நடுங்கியது .
அப்பொழுது பார்த்து தன் அலைபேசி அழைக்க அழைப்பை ஏற்றவள்,
” வந்துட்டேன் ரக்ஷு ” என்று ஆரம்பித்து வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் கூறினாள்
” சரி வேற பிரச்சனையை ஏதும் இல்ல தானே ” – அக்கரையுடன் ரக்ஷு கேட்டாள்
” இல்லை ஆனாலும் அர்ஜுனே என்னை வர சொல்லிருப்பான்னு என்னால இன்னும் நம்ப முடியல “
” ஏய் அப்போ அந்த லெட்டர் என்ன பொய்யா ” – பொய்யாக கோபித்தாள்
” கோபப்படாத சும்மா கேட்டேன் “
” நீ வருத்தப்படுற மாதிரி தான் அவனும் வருத்தப்பட்டுருப்பான் … தேவை இல்லாம ஏதும் யோசிக்காம அர்ஜுன் கிட்ட மனச விட்டு பேசு சரியா ” – தோழிக்கு தயிரியம் சொல்லிவிட்டு … ரோஹித்திடம் பேசினாள் .
அனைத்து ஏற்பாடுகளையும் முன்பே செய்திருந்தவன் ரக்ஷிதாவுக்கு தயிரியம் கொடுக்க … இருவரும் விலகியிருந்த மோனிஷா அர்ஜுன் மீண்டும் இணைவதற்காக காத்துக்கொண்டிருந்தனர் .
மோனிஷாவின் இன்பம் கலந்த படபடப்பு கொஞ்சமும் குறையவில்லை . இன்னமும் உடல் வெடவெடவென நடுங்கி கொண்டே இருந்தது . கைகளை பிசைந்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள் .
” ஜூஸ் எடுத்துக்கோங்க மேம் ” – கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே வந்தாள் பணிப்பெண் . ” தேங்க்ஸ் ” என்றபடி எடுத்துக்கொண்டாள் மோனிஷா .
நேரம் கடந்து கொண்டே போக சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அர்ஜுனின் புகைப்படம் ஒன்று கண்ணில் பட ,சோபாவில் இருந்து எழுந்தவள் … அர்ஜுனின் புகைப்படத்தை தொட்டுப்பார்த்து தன் கண்களாலே வருடிக்கொண்டிருந்தாள் .
” எங்க இருக்க அர்ஜுன் சீக்கிரமா வா ” – காதல் வழிந்த விழிகள் அவனை காண ஏங்கிக்கொண்டிருக்கவும் ,
” நாளைக்கு லொகேஷன் பார்க்க போகணும் நீங்க டிக்கெட் புக் பண்ணிருங்க மாறன் அங்கிள் ” என்றபடி மாறனுடன் அர்ஜுன் அறைக்குள் நுழையவும் சரியாக இருக்க …
விருட்டென்று அறையின் கதவு திறக்கப்பட்டதில் திடுக்கிட்டவள் வாசலில் அர்ஜுனை கண்டதும் மகிழ்ச்சியில் உடம்பெல்லாம் சிலிர்க்க … நொடி கூட தாமதிக்காது விரைந்து சென்று ” நீ என்னை ஏத்துக்குவன்னு எனக்கு தெரியும் ” என்றபடி , அர்ஜுன் பின்னால் இருக்கும் மாறனை கவனிக்காது அவனது மார்பில் தன் முகத்தை புதைத்த படி தன் மென் கரங்களால் அர்ஜுனை இறுக்கி அணைத்துக்கொண்டாள் …
– தொடரும்