Oh kadhal kanmani 28

காதல் கண்மணி - final-e8fc1003

Oh kadhal kanmani 28

  காதல்  கண்மணி 28

–  நெமிரா

இதுவரை  …..

பாதுகாப்பை தேடி தாயிடம் வரும் மகவை போல் அர்ஜுனின்  நெஞ்சில் சாய்ந்து புதைந்தபடி  கதறிக் கொண்டிருந்தாள் மோனிஷா …

இனி …

சூரியன் தன் செங்கதிர்களால் இருட்டை விரட்டி உலகிற்கு வெளிச்சத்தை தருவது போல …. அர்ஜுன் மோனிஷாவின் மனதில் இருந்த இருட்டை தன் அரவணைப்பால் விரட்டி ஒரளவு அவளை தேற்றினான்  !

அந்த கசப்பான இரவு ஒருவழியாக கடந்து காலை பொழுது புதிதாய் புலர்ந்தது  … மோனிஷாவிடம் என்ன பேசுவது அவள் என்ன மனநிலையில் இருப்பாள் என்கின்ற தயக்கத்தில் அனைவரும் அமைதியாய் இருக்க … அவர்களது மனநிலையை உணர்ந்து கொண்டவள் … அவர்களை சங்கட படுத்த விரும்பாது ,

” எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல ” –  நிலவும் அமைதியை உடைப்பதற்காக …. வலியை நெஞ்சுக்குழிக்குள் புதைத்துக்கொண்டு  அவளே  ஆரம்பித்தாள் …. நீங்காத துயரம் இருந்தாலும்  நேற்று இரவு குரலில் தெரிந்த நடுக்கம்  இன்று  நன்றாகவே குறைந்திருந்தது  …  

” ஏய் அப்படி எல்லாம் இல்லை ” – என்றான் ரோஹித் … அவனை தொடர்ந்து அனைவரும் மோனிஷாவுக்கு ஆறுதல் கூற .

மெலிதாய் புன்னகைத்தவள்  ,

” நான் கண்டிப்பா இதை விட்டு வெளியே வந்துருவேன் … நீங்களும் வந்திருங்க … எல்லாம் சரியாகிரும் ” – என்றாள்…

” எப்படி முடியும் மோனிஷா … இன்னைக்கு நாம அவர் மேல கம்ப்ளயின்ட்  குடுக்குறோம் ” – உறுதியுடன் கூறினான் ரோஹித் … ரக்ஷிதா , தர்ஷித்,  லக்ஷ்   அனைவரும் அவனது கருத்துக்கு ஆதரிக்க … மோனிஷா அர்ஜுனை பார்க்க அவனோ  தன் விழிகளால் ‘ வேண்டாம்  ‘ என்பதை போல தீர்க்கமாய்  மறுத்தான் …

மோனிஷா எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள் …

” நீ எதுக்கும் பயப்படாத மோனிஷா நாங்க பார்த்துக்குறோம் இனிமே அந்த ஆளு எங்க காலேஜ்ல இருக்க கூடாது ” – ரோஹித்தின் விழிகள் கோபத்தில் கொதித்தது …

” அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்  ” – உடனே மறுத்தான் அர்ஜுன் ..

” நாள் கடத்த வேண்டாம் இன்னைக்கே பேசிருவோம்  அர்ஜுன் ” – ரோஹித்தின் உறுதியான குரல் அர்ஜுனுக்கு வியப்பை அளித்தது இதற்கு முன்பு ரோஹித் எந்த ஒரு பிரச்சனைக்கும்  இவ்வளவு  உணர்ச்சி வசப்பட்டதே கிடையாது என்பதே காரணம் …

” அதெல்லாம் வேண்டாம் ரோஹித் ” –  அழுத்தமாய் கூறினான்

” நீயா வேண்டாம்ன்னு சொல்ற  அர்ஜுன் ?” – ஆச்சரியத்துடன் வினவினான் ரோஹித்

” ஆமா நான் தான் சொல்றேன் வேண்டாம்….  டிஸ்சார்ஜ் ப்ராசெஸ் எல்லாம் முடிச்சாச்சு கிளம்பலாம் “

”  ஏன் வேண்டாம் “

” வேண்டாம் அவ்ளோ தான் “

” சாரி டா நான் கம்ப்ளயிண்ட் பண்ண தான் போறேன் ”  – என்று ரோஹித் பிடிவாதமாய் கூற … அவனை இறுக்கமாய் முறைத்த அர்ஜுன்

” நான் கூடாதுன்னு சொல்றேன் ரோஹித் “

” அதான் ஏன் ??” ..” ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்திருக்கு எப்படி சும்மா இருக்குறது “

” சரி அதுக்கு என்ன பண்ண போற “

” கம்ப்ளயிண்ட் குடுப்பேன் … அவனை வேலைய விட்டு தூக்குவேன்   “

” ஓகே வேலைய விட்டு அனுப்புனா…. பதிலுக்கு அவன் எதுவமே பண்ண மாட்டானா  ?? பதில் சொல்லு டா “

” அப்போ  அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா ?? “

” என்னை தண்டனை குடுப்ப … போலீஸ் கேஸ்ன்னு போவியா ? ஓகே கோர்ட்ல ஆதாரம் கேட்ப்பாங்க என்ன ஆதாரம் இருக்கு??? எதுவும் கிடையாது கோர்ட்ல  நம்ம யார் சாட்சியும் நிக்காது …  அவன் ஈசியா வெளியில வந்திருவான் ….  கஷ்டப்பட போறது நம்ம மோனிஷா தான் “

” அவனை விட்டு வச்சா இன்னும் பல   பொண்ணுங்கள கஷ்டப்படுத்துவான் டா “

” ஆமா “

” ஏன் அர்ஜுன் இப்படி அலட்சியமா பேசுற “

” வேற எப்படி பேசணும் … இவ்ளோ பேசுறீங்களே இந்த பிரச்சனைக்கு கிருஷ் மட்டும் தான் காரணமா ?? வேற யாருமே காரணம் இல்லையா  ?? ஏன் டா நான் மோனிஷாவை வர சொன்னேன்னு பொய் சொன்ன ?? ” என்றவன் ரக்ஷிதாவிடம் , 

” அவன் சொன்னா உடனே உங்க  ஃப்ரண்ட தனியா  அனுப்பி வச்சுருவீங்களா?? கூட நீங்களும் வந்திருக்கலாம்ல !!

அப்புறம் மோனிஷா உனக்கு என்னை எவ்வளவு நாள் தெரியும் எந்த நம்பிக்கையில என்னை பார்க்க வந்த …

எந்த தயிரியத்துல அந்த கிருஷ் கூட கார்ல போன …..

தினமும் எவ்வளவு நியூஸ் பாக்குறீங்க சொந்த சித்தப்பா மாமா அப்பா அண்ணன் ‘ ச்ச ‘ சொல்லவே அசிங்க மா இருக்கு இப்படி தெரிஞ்சவங்களே என்னலாம் பண்றாங்க … 

அப்படி இருக்கும் பொழுது முழுசா ஒருத்தன பத்தி தெரியாம எப்படி நீ அவனை நம்புன ” – ரோஹித்திடம் தொடங்கி மோனிஷாவிடம் முடித்தான் …

மோனிஷாவின் கண்களில் இருந்து பொல போல வென்று கண்ணீர் அணையை உடைத்துக்கொண்டு வெளியேற … பதில் பேசாமல் அமைதியாய்  இருந்தாள் … அதை கண்ட அர்ஜுனின் முகம் வாடியது … அவள் அழுவதை தாங்க முடியாதவன் ..

” உன்னை கஷ்டப்படுத்த இதை நான் சொல்லல …  பட்  இந்த உலகம் நாம நினைக்கிறத விட மோசமானது  … மனுஷங்க உருவத்துல  இருக்குற  நரி கூட்டம்  வாழ்ற  இடுகாட்டுல  தான் நாமளும் வாழ்ந்துட்டு இருக்கோம் நாம தான் கவனமா இருக்கணும் …. என் வார்த்தை உன்னை காயப்படுத்திருந்தா ஐயம் சாரி மோனிஷா  ” 

” ரொம்ப சரியா  சொன்ன அர்ஜுன் தப்பு என்னுடையது  … அவர் பேச்சை கேட்டு உன்னை கஷ்டப்படுத்திட்டேன் அது தான் என்னை உறுத்திட்டே இருக்கு ” – என்கிற அவளுடைய உடைந்த குரல்  அவனை சங்கடப்படுத்தியது ..

” இப்ச் அத விடு அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது நான் எப்பவோ மறந்துட்டேன் ” – உடனே ஆறுதல் கூறினான் அர்ஜுன் …

” சரி டா எல்லாம் ஓகே தான் …  அவனை கண்டுக்காம விட்டா  அவன் பண்ற தப்புக்கு நாமளே கிறீன் சிக்னல் காட்டுற மாதிரி ஆகிரும் ஸோ நாம் அவனை பத்தி சொல்றது தான் சரி  ” – தனது முடிவில் உறுதியாய் இருந்தான் ரோஹித் …

“நான் சொல்ற விஷயத்தை ஏன் டா புரிஞ்சிக்கவே மாட்டிக்கிற …

நீயே  இவ்வளவு யோசிக்கிறியே  அவ்வளவு  பெரிய குற்றத்தை தயிரியமா பண்ணின அந்த பொறுக்கி,  மாட்டிக்கிட்டா என்ன பண்ணனும்ன்னு  யோசிக்காமலா இருப்பான் …

நீ கம்ப்ளயின்ட் பண்ணின அடுத்த நொடி அவன் ஏதாவது பண்ணுவான் டா.

ஸோ  இப்போதைக்கு எதுவும்  வேண்டாம் … ” – பறந்து செல்ல துடிக்கும் தன் பொறுமையை இழுத்து பிடித்தபடி கூறினான் அர்ஜுன் ..

” நாம அமைதியா இருந்தா நாம பயப்படுறோம்ன்னு  அவன் நினைக்க மாட்டான் ” – ரோஹித்தால் அர்ஜுனின் கருத்தை ஏற்க முடியவில்லை …

” யார் டா சொன்னா அமைதியா இருக்கிறது கோழை தனம்ன்னு …

அவன் ஒரு வெறிபுடிச்ச நாய் மாதிரி அவனை பார்த்து முறைச்சா பதிலுக்கு கடிக்க வருவான் … நீ பயந்தா உன்னை பயமுறுத்துவான் …

ஆனா ‘ நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லடா உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ எனக்கு உன்னை பார்த்தா பயம் இல்லைன்னு ‘ அந்த நாய கண்டுக்காம போ உன் வழிக்கே வர மாட்டான் …

 நான் சொல்றத புரிஞ்சிக்கோங்க …

உங்க எல்லாரையும்  விட எனக்கு தான் அவன் மேல அதிக கோபம் இருக்கு …

ஆனாலும் பொறுமையா இருக்கேன்னா பின் விளைவுகளை யோசிச்சு தான் நான் பொறுமையா இருக்கேன் … 

நான் என் ஸ்டையில்ல அவனை டீல் பண்ணிக்கிறேன் …

சரியான ஆதாரம் இல்லாம நாம இவன் மேல கம்ப்ளயிண்ட்  குடுத்தா … நம்மள   பழிவாங்குறேன்னு சில்ர தனமா ஏதாவது பண்ணுவான் …

அவனுக்கு ஒன்னும் இல்லை தொடச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பான் ஆனா அவமானம் எல்லாம் நமக்கு தான் ….

நான் பார்த்துக்கறேன் ப்ளீஸ்  .. என்னை கேட்டகாம ஏதும் பண்ணி மறுபடியும் பிரச்சனையில மாட்டிக்காதீங்க … ” – என்று அர்ஜுன் கூற …  அனைவரும் அவனது கருத்துக்கு சம்மதம் தெரிவிக்க … ரோஹித்தும் இருமனதாய் ஒப்புக்கொண்டான் … பின்பு அனைவரும்  அங்கிருந்து சென்று விட  மோனிஷாவின் உள்ளம்  வேறொன்றை பற்றி சிந்திக்க தொடங்கியது … எதுவும் பேசாமல் மௌனமாய் அமர்ந்திருந்தாள் …

மோனிஷாவின் கவலை தொனித்த வதனத்தை கண்ட அர்ஜுனின் மனம் வேதனை பட , அவளது மென் கரங்களை தன் கரங்களுக்குள் புதைத்தவன்  ,

” எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா ஸ்டார்ட் பண்ணுவோம் மோனிஷா … உன்னை பத்தி நான் என்னை பத்தி நீ நிறையா  பேசுவோம் தெரிஞ்சிக்குவோம் … வாழ்க்கை ரொம்ப அழகானது மோனி … இதை பத்தி யோசிச்சு நேரத்தை சாகடிக்க வேண்டாம்  … உன்னை விட்டுற மாட்டேன் பா … நான் எல்லாத்தையும் சரி பண்ணிறேன்…நீ டென்ஷன்  எடுத்துக்காத   ”  – அர்ஜுனிடம்  இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தைகளும் மோனிஷாவின் இதயத்தில் ஆழமாய் பதிந்தது …

” எப்படி அர்ஜுன் உன்னால முடியுது உனக்கு போய் துரோகம் பண்ணிட்டனே அதை எப்படி சரி செய்ய போறேன் ” – என்று மோனிஷாவின் இதயம் மவுனமாய் கதறியது …

அப்பொழுது உள்ளே வந்த ரக்ஷிதா மோனிஷாவை அழைக்க … அர்ஜுனை  எண்ணி  மனதிற்குள் வருந்திய  மோனிஷா  … அவனிடம் எதுவும்  பேசாமல் அங்கிருந்து கிளம்பவும் அவளை தடுத்த அர்ஜுன் ரக்ஷிதாவை சிறிது நேரம் வெளியே நிற்கும் படி கூறினான் …

மவுனமாக  மோனிஷாவின் முகம் பார்த்தபடி நின்றிருந்தான் அர்ஜுன் …

” என்ன அர்ஜுன் ?”என்று கேட்டாள் மோனிஷா ..

அவன் பேசவில்லை … ஒருவித மயக்கும் புன்னகை அவன் முகத்தில் … புரியாமல் விழித்தாள் மோனிஷா…  இதற்கு முன்பு அவன் இவ்வளவு அழகாய் புன்னகைத்ததில்லை என்பதால் குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள் …

மோனிஷா பேச ஆரம்பிப்பதற்குள் அர்ஜுனின் கைகள் அவளது கன்னங்களைத் தாங்கி தன் முகத்தருகே இழுத்தது …

முத்தமிட போகிறானா ??  ‘ அர்ஜுன் உன்னுடைய காதலுக்கு  நான் தகுதி உடையவளே இல்லை … நான் ஒரு நம்பிக்கை துரோகி  வேண்டாம்  நான் உனக்கு வேண்டாம் ‘  என்று  எண்ணியவள் மன வேதனையுடன் அவனிடம் இருந்து  தன்  முகத்தை விலக்கும் முன் அர்ஜுனின் உதடுகள் மோனிஷாவின் நெற்றியில் பதிந்துவிட்டிருந்தது … அழுத்தமாக … மிக மிக அழுத்தமாக தன்னவளின் பிறை நுதலில் முத்தமிட்டிருந்தான் …

உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற சிலிர்ப்புடன் அப்படியே  விழித்துப்   பார்த்தவளை சிறு புன்னகையுடன் விலக்கியவன் ,” நான் இருக்கேன் பேபி டால் … சரி நீ  கிளம்பு  … கொஞ்ச நாள் தான் நான் காலேஜ் வந்துருவேன் ” என்றான் …

ஹாஸ்டலில் வார்டனின் கேள்விகளை ஒருவழியாக சமாளித்தபடி தங்களின் அறைக்குள் வந்த ரக்ஷிதா மோனிஷாவை ஓய்வெடுக்குமாறு  கூறிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்துகொள்ள …

மோனிஷாவால் சுயத்திற்கு வர முடியவில்லை … முத்தம் ஒன்றும்  அவளுக்கு புதிதல்ல  இதற்கு முன்பும் அவன் அவளுக்கு முத்தம் கொடுத்திருக்கிறான் … ஆனால் அப்பொழுதெல்லாம் ஏற்படாத ஒருவகை உணர்வு இன்று அவளுக்குள் ஏற்பட்டது …

ஒரு முத்தத்துக்கு  இத்தனை சக்தியா ??? அதுவும் நெற்றியில் கொடுத்தற்கு ?? உள்ளத்தில் பரவி கிடந்த வெறுமை நீங்கி புதுவித தயிரியம்  அவளுக்குள் பிறந்தது …ஒற்றை  முத்தத்தோடு அவன் மொழிந்த வார்த்தைகள்  … அவளை சித்தம் கலங்க வைத்தது ..

அவனது மீசை முடி உரசிய தனது நுதலை தொட்டுப்பார்த்தாள் … முத்தமிட்ட ஈரம் எதுவுமில்லை … ஆனாலும் மழை நீரில் நனைந்தது  போல அவளின் உடலில் ஒரு வித சிலிர்ப்பு … அர்ஜுனின் உண்மையான காதலை எண்ணியவளின்  விழிகள் தானாய் குற்ற உணர்வில் கலங்கியது ,”அர்ஜுன் ” என்று அவளது இதழ்கள் முனங்கியது …

மீண்டும் சிந்தனை அவளது மனதை கைது செய்ய … விழிநீரை துடைத்தவள்  …

” சாரி அர்ஜுன் நான் கிருஷ சும்மா விட மாட்டேன் … என்னை வச்சே உன்னை கஷ்டப்படுத்திட்டான்  … அவனுக்கான தண்டனையை நான் கண்டிப்பா குடுப்பேன் … மறுபடியும் உன் பேச்சை மீறி உன்னை கஷ்டப்படுத்த போறேன் அர்ஜுன் என்னை மன்னிச்சிரு ப்ளீஸ் ”  –  விழிகளில் தொடுக்கி நின்ற கண்ணீர் துளிகள் கன்னங்களை  நனைக்க  … நா வறண்டு போக …  பளபளக்கும்  விழிகளுடன் தீர்க்கமாக  அவள் கூறினாள் …

– தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!