Oh Papa Laali–Epi 6

அத்தியாயம் 6

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பெஸ்ட் விமான நிலையம் என பல தடவைகள் ஆவார்ட் வாங்கியிருக்கிறது. பிள்ளைகள் விளையாட இடம், திறந்த வெளி கார்டன், உடற்பயிற்சி மையம், நல்ல உணவகங்கள், நீச்சல் குளம் என டாப் க்ளாஸ் வசதிகள் இங்கே கிடைக்கின்றன.

 

வானத்து நிலவை அஃபிசியலாக சந்திக்கப் போகும் நாளன்று ரொம்பவே மெனெக்கெட்டான் சூர்யா. நேரமில்லை, உடம்பு வலிக்கிறது இப்படி சாக்கு சொல்லி, வெறும் பெயரளவு மட்டும் மெம்பராக இருந்த ஜிம்முக்கு காலையிலேயே விஜயம் செய்திருந்தான். ஆரோக்கியமாக இருக்க இதோ இப்பொழுது மோட்டிவேஷன் வந்துவிடும், அப்பொழுது வந்துவிடும் என பணத்தை மட்டும் தண்டமாக கட்டி வந்தான் அந்த ஜிம்முக்கு. இப்பொழுதுதான் அதற்கொரு நேரம் வந்திருந்தது.

ஜிம் லாக்கரில் பொருட்களை வைத்தவன், ஐபோட்டில் நல்ல குத்துப் பாடல்களை ஒலிக்கவிட்டு ட்ரெட்மில்லில் ஏறி நின்றான். லொங்கு லொங்கு என நடந்தவனால் பதினைந்து நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. நடக்கத்தான் முடியவில்லை, மசல்ஸ்சையாவது முறுக்கேற்றலாம் என வெயிட் லிப்டிங் பகுதிக்கு வந்தான் சூர்யா. எடுத்தவுடனே எட்டு கிலோ டம்பெல்லை தூக்கியவனுக்கு மூச்சு முட்டியது. ஐந்து செட் கூட செய்ய முடியவில்லை. ஒரு பக்க கை நரம்பு இழுத்துக் கொள்வது போல இருக்க உடனே அதை கீழே வைத்தான்.

‘எடுத்தவுடனே எவரஸ்ட்ல ஏற ட்ரை பண்ணக்கூடாது! முதல்ல மவுண்ட் ஃபேபர் (சிங்கப்பூரில் இருக்கும் குட்டி மலை) ஏறிட்டு அப்புறம் எவரெஸ்ட் ஏறலாம்’ என எண்ணியவன் அதற்கு பிறகு கொஞ்சம் ஸ்லோ அண்ட் ஸ்டேடியாக ரிலேக்சான பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தான். உடம்பு ‘போதும்டா சாமி என்னை விட்டுரு’ என கதறவும் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு அங்கேயே குளித்து விட்டுக் கிளம்பினான்.

இரவு உணவுக்கு சந்திக்கலாம் என மேசேஜ் அனுப்பி இருந்தவள், ஓசியன் ரெஸ்டாரண்டை அவர்களின் சந்திக்கும் இடமாக தேர்ந்தெடுத்திருந்தாள். சீ அகியூரியம் என அழைக்கப்படும் கடல் வாழ் உயிரினங்களை காட்சிக்கு வைத்திருந்த இடத்தின் பக்கத்தில் அமைந்திருந்தது இந்த உணவகம். கண்ணாடி தடுப்பின் அந்தப் பக்கம் மீன்களைப் பார்த்தப்படி அவற்றின் சொந்த பந்தங்களை நாம் தட்டில் உணவாக்கிப் பிரித்து மேயலாம்.

எங்கே எப்பொழுது என பதில் போட்டவள் அதற்குப் பிறகு இவனை தொடர்பு கொள்ளவில்லை. நேற்று, சந்திப்பு உறுதிதானா என இவனே மேசேஜ் போட்டதற்கு, யெஸ் என்று மட்டும் பதில் அளித்திருந்தாள். ஆனாலும் இந்த ஒரு வாரமாக தன்னைத் தொடர்ந்தபடி தான் இருக்கிறாள் என அவ்வப்பொழுது கண்ணில் பட்ட அவள் பிம்பம் உறுதி செய்தது. அது தான் நேரில் சந்தித்து என்ன ஏது என கேட்க போகிறோமே என இவனும் கண்டும் காணாமல் இருந்துக் கொண்டான்.

வருவாளா அவள் வருவாளா என மனதில் பாடியப்படியே அவள் சொன்ன ஏழு மணிக்கு முன்னமே அந்த இடத்தை அடைந்திருந்தான் சூர்யவர்மன். அழகே உருவான பிரம்மனின் காவியம், ரவிவர்மனின் ஓவியம் ஒன்றை சந்திக்கப் போகும் குஷி அவன் நாடி நரம்பெல்லாம் பாய்ந்தோடியது. யாரோ ஒருத்தியாக அவளை ரயிலில் பார்த்திருந்த போதே அவளின் அழகு இவனைப் பாதித்திருந்தது. அவளே தன்னை தொடரும் காரிகை என தெரிந்த போதோ பித்தம் தலைக்கேறத்தான் செய்தது. தன்னை அவள் தொடரும் நோக்கம் என்ன என தெரிந்துக் கொண்ட பிறகே எதையும் யோசிக்க வேண்டும் என மனதுக்குக் கட்டளை இட்டாலும், அது இவன் சொல் பேச்சு கேளாமல் குதியாட்டம் போட்டது.

ஸ்கைமூன் வாங்கித் தந்திருந்த ஆகாய நீல நிற ஷேர்ட் அணிந்திருந்தவன், முடியை ஜெல் வைத்து வாரி அழகாக போனி டெயில் போட்டிருந்தான்.

இவன் போன வாரமே இங்கே மேசை புக் செய்ய போன் போட, அதற்குள் அவளே இவன் பெயரில் மேசை புக் செய்திருப்பதாக சொன்னார்கள் உணவகத்தினர். அவளது யோசித்து செயல்படும் நேர்த்தியை மெச்சிக் கொண்டாலும், நம்மை விட பெரிய அப்பாடக்கராக இருப்பாளோ என தோன்றவும் செய்தது இவனுக்கு.

கடந்த இரண்டு வருடங்களில் தான், தாராளமாக கணக்குப் பார்க்காமல் செலவு செய்யும் நிலையை எட்டி இருந்தான் சூர்யவர்மன். அதற்கு முன் எல்லா மிடில் கிளாஸ் மக்களைப் போலவே எண்ணி எண்ணி செலவு செய்யும் வர்க்கத்தை சேர்ந்தவன் தான் இவனும்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேசையில் போய் அமர்ந்தவன், முதலில் ஒரு கிளாஸ் நீரைப் பருகி படபடவென அடிக்கும் நெஞ்சை கொஞ்சம் நிதானப்படுத்தினான்.

‘இந்தப் ஃபீல்ட்ல எத்தனை பேர ஹேண்டில் பண்ணி இருக்கேன்! இந்த மூன்லாம் எனக்கு ஜூஜூபி! என்ன கொஞ்சம் அழகா இருந்துத் தொலைக்கிறா! பரவாயில்ல, சமாளிப்போம்!’

இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேசை அக்குவேரியத்தின் கண்ணாடி பேழையின் அருகே இருந்ததால் ஒரே நீலமாக இருந்தது அந்த இடமே. சரியாக ஏழு மணிக்கு அவன் இருக்கும் இடம் நோக்கி வந்தாள் அவள், ஸ்கைமூன். வானத்து நிலவே தரை இறங்கி வந்தது போல தகதகவென மின்னினாள் அவள். நீலத்தில் வெள்ளைப் பூக்கள் போட்ட முட்டி வரை இருக்கும் ப்ளோரல் கவுன் அணிந்திருந்தாள் பாவை. மிதமான ஒப்பனை, கழுத்தில் குட்டி வைரக்கல் பதித்த வைட் கோல்ட் சங்கிலி, கையில் பிடித்திருந்த குட்டி எல்.வி பேக் என மெதுவாக நடந்து வந்தாள்.

அவன் அருகில் நெருங்கி வந்தவள், கொஞ்சம் பதட்டமாக இருப்பது போல இருந்தாள். லேசாக உதடு நடுங்க மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள். இவனும் நாற்காலியில் இருந்து எழுந்து நின்றான்.

“ஹாய், ஐம் சூர்யா, சூர்யவர்மன்!” என தனக்குள் எழுந்த பதட்டத்தை அழகாக மறைந்துக் கொண்டு கையை நீட்டினான் சூர்யா.

“ஹாய் வர்மன்!” என நீட்டிய கையை மெல்லப் பற்றிக் குலுக்கினாள் அவள். பஞ்சென இருந்தன அவள் விரல்கள்.

“எக்ஸ்கியூஸ் மீ” என சொல்லியவன் சற்றே நகர்ந்து அவளுக்கு நாற்காலியை இழுத்துப் போட்டான்.

“ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என புன்னகையுடன் சொன்னான் சூர்யா. எவ்வளவு அடக்கியும் முகம் பிரகாசிப்பதையும் முப்பதிரெண்டு பல்லைக் காட்டுவதையும் நிறுத்த முடியவில்லை அவனால்.

“தேங்க்ஸ்” என சொல்லியவள் பட்டென அமர்ந்துக் கொண்டாள்.

“பேசற முன்னுக்கு சாப்பாடு ஆர்டர் செஞ்சிடலாமா மிஸ் ஸ்கைமூன்?” என கேட்டான்.

அவள் மெல்லிய புன்னகையுடன் சரி என தலையாட்டினாள். மெனுவை அவள் புறம் தள்ளி வைத்தவன்,

“வைட் வைன் ஆர்டர் பண்ணவா ஸ்கைமூன்?” என கேட்டான்.

அதற்கும் சரியென தலையாட்டினாள் அவள். பின் தன் இடது புறம் இருந்த கட்லரிசை எடுத்து வலப்புறம் அழகாக அடுக்கி வைத்தவள், தண்ணீர் கிளாசை வலப்புறம் இருந்து இடது புறத்துக்கு மாற்றினாள். அதற்கு பின் தான் ரிலேக்‌ஷாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு மெனுவை புரட்ட ஆரம்பித்தாள்.

அவளின் ஒவ்வொரு அசைவையும் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் சூர்யா. அவனோடு நடிக்கும் சக நடிகைகள் ஆகட்டும், கோ ஹோஸ்ட் ஆகட்டும் தாங்கள் அழகி எனும் கர்வம் தரும் மிதப்பில் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவனை எடுபிடி மாதிரிதான் நடத்துவார்கள். இவனும் பெண்கள் ஆயிற்றே, மெல்லினத்துக்கு வல்லினம் தான் உதவ வேண்டும் எனும் மனப்பான்மையால் அவர்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் முடித்துக் கொடுப்பான்.

ஆனால் இவளோ தான் அழகாக இருக்கிறோம் எனும் எண்ணமே கிஞ்சிற்றும் இல்லாதவள் போல் கரண்டியை அடுக்குவதும், உப்பு பவுலை அடுக்குவதிலும் தான் அக்கறைக் காட்டினாள். முதல் டேட்டிங்குக்கு வரும் பெண்கள் போல் முடியை ஸ்டைலாக ஒதுக்குவதோ, புருவங்களை ஏற்றி இறக்குவதோ, கண்களை படபடவென கொட்டுவதோ, கழுத்து சங்கிலியில் விளையாடுவதோ என ஒரு ஆண்மகனை கவரும் எந்த செய்கையையும் செய்ய முற்படவில்லை இந்த மூன்.

மெனுவில் ஒரு கண்ணும் அவள் மேல் ஒரு கண்ணும் வைத்திருந்த சூர்யாவுக்கோ அவளது ஒவ்வொரு அசைவும் அழகிய நடன அடவுகள் போலவே தோன்றியது.  

‘ஃபுல் போட்டல் வைன் அடிச்சா ஏறுற போதை இவ ஒத்தக் கண்ணசைவில படக்குன்னு ஏறிடும் போலிருக்கே! ஒரு லிட்டர் கள் அடிச்சா ஏறுற போதை இவ உதட்ட சுழிச்சா தடக்குன்னு ஏறிடும் போலிருக்கே! அரை டஜன் பீர் அடிச்சா ஏறுற போதை, இவ கன்னங்குழிய சிரிச்சா சடக்குன்னு ஏறிடும் போலிருக்கே!’

“சார், சார்” என கேட்ட குரலில் தான் மாய போதையில் இருந்து தெளிந்தான் சூர்யவர்மன். வெயிட்டர் தான் இவன் ஆர்டருக்காக காத்திருந்தான். அவளும் இவனையேத் தான் பார்த்தப்படி இருந்தாள். அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவன், தனக்கு வேண்டிய உணவு ஐட்டத்தை சொன்னான்.

“சோ!” வெயிட்டர் போனதும் இருவரும் ஒரு சேர சொல்லிவிட்டு, பின் புன்னகைத்துக் கொண்டார்கள்.

“சொல்லுங்க ஸ்கைமூன்! லேடிஸ் ஃப்ர்ஸ்ட்” என அந்த ஸ்கைமூனை அழுத்தி சொன்னான். வந்ததில் இருந்து அந்தப் பெயர் சொல்லியே கூப்பிடுகிறான், ஆனால் இவள் தானாக வாய் திறந்து தனது சொந்தப் பெயரை சொல்லவில்லை.

“என்ன சொல்லட்டும்?” மெல்லிய குரலில் கேட்டாள் பெண்.

“எவ்வளவோ இருக்கு சொல்லவும், கேட்கவும்! முதல்ல உங்க பெயர சொல்லி நம்ம கன்வர்செஷன ஆரம்பிக்கலாமே!”

“நான்…என் பெயர் வான்மதி”

“ஓஹோ! ரொம்ப அழகான பெயர் ஆளைப்போலவே! ஸ்கை-வான், மூன் – மதியா! வெரி நைஸ்” என சிலாகித்தான் சூர்யா.

“தேங்க்ஸ் வர்மன்” என சொல்லியவள் கிளாசில் இருந்த நீரைப் பருகினாள், அணிந்திருந்த கவுனை குனிந்து நீவி விட்டாள், கரண்டியை எடுத்து டஷூ வைத்து துடைத்தாள் பின் மீண்டும் அதை எடுத்த இடத்திலேயே வைத்தாள். அவன் முகம் பார்க்காமல் இப்படி எதையாவது செய்து கொண்டே இருப்பவளை ஆழ்ந்து நோக்கினான் சூர்யா. அவள் நெர்வசாக இருப்பது இவனுக்கு நன்றாகவே தெரிந்தது.

“வான்மதி” என பெயருக்கே வலிக்கும் போல மெல்லிய குரலில் கூப்பிட்டான் சூர்யா.

“ஹ்ம்ம்! என்ன வர்மன்?”

பக்கத்தில் மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் அகுயூரியத்தைக் காட்டி,

“மீனுக்கும் மனுஷனுக்கும் இருக்கற கனேக்‌ஷன் பத்தி சொல்றேன், கேக்கறீங்களா?” என கேட்டான்.

“தட்டுல விழுந்தா மீனை நாம சாப்பிடுருவோம், கடல்ல விழுந்தா மீனு நம்மள சாப்பிட்டுரும், அதுவா? நீங்க போன ஏப்ரல் பிப்டின்ல ஒன்பது மணிக்குப் போட்ட வசந்தம் நிகழ்ச்சியில இந்த ஜோக்க சொன்னீங்க வர்மன்”

‘பார்டா! டேட்ல இருந்து டைம் வரைக்கும் சரியா சொல்லுறா’ ஆச்சரியமாகிப் போனான் சூர்யா.

“அது இல்ல வான்மதி!”

“பின்ன?” ஆர்வமாக அவன் முகத்தைப் பார்த்தாள் நிலாப் பெண்.

“மீனும் மூச்சு விடுது, நாமளும் மூச்சு விடறோம்! மீனும் உணவு சாப்பிடுது, நாமளும் சாப்பிடறோம்! மீனும் முட்டைப் போட்டு பிள்ளைப் பெத்துக்குது, நாமளும் குட்டிப் போட்டு பிள்ளைப் பெத்துக்கறோம்” என இவன் அடுக்கிக் கொண்டே போக, அவள் கலகலவென வாய் விட்டு சிரித்தாள்.

முகம் மலர, கண்கள் பளிச் பளிச்சென மின்ன அவள் சிரிக்கும் அழகையேப் பார்த்திருந்தான் சூர்யவர்மன்.

“போதும், போதும் வர்மன். என்னால சிரிப்ப அடக்க முடியல! நீங்க சொன்னத எல்லா அனிமல்சும் தான் செய்யுது” என சிரிப்புடன் சொன்னாள் வான்மதி.

“இருக்கலாம் மதி! ஆனா மனுஷன் குரங்குல இருந்து வரல, மீனுல இருந்துதான் இவோல்வ் ஆகி வந்துருக்கான்னு இப்போ உள்ள சயிண்டிஸ் சொல்லுறாங்க தெரியுமா?” என இவன் வான்மதியை மதியாக்கி பேச்சை வளர்க்க, அவளும் தயக்கம் அகன்று அவன் பேச்சில் கலந்துக் கொண்டாள்.

அதற்கிடையே உணவு வர இருவரும் அமைதியாக சாப்பிட்டனர். அவள் சாப்பிடுவதில் கூட ஒரு நேர்த்தி இருந்ததை இவன் கவனித்துக் கொண்டே தான் தன் உணவை உட்கொண்டான். அவள் ஒரே ஒரு கிளாஸ் வைன் குடிக்க, இவனும் அதோடு நிறுத்திக் கொண்டான். சாப்பிட்டு முடித்ததும், உடனே வெயிட்டரை அழைத்து இடத்தை சுத்தம் செய்ய சொன்னாள் அவள்.

பின் அவனை நிமிர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தவள்,

“என்னைப் பற்றி நிறைய சந்தேகங்கள், நிறைய விளக்கங்கள் எல்லாம் கேட்கனும்னு லிஸ்ட் போட்டுட்டு வந்திருப்பீங்க வர்மன். எல்லாத்தையும் கேளுங்க! நான் பதில் சொல்லுறேன்! ஆனா அதுக்கு முன்ன நான் உங்க கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லனும் வர்மன்!” என மெல்லிய குரலில் இயம்பினாள் வான்மதி.

“என்ன மதி? சொல்லுங்க!”

“அது வந்து, ஹ்ம்ம்… வந்து…ஐ லவ் யூ சூர்யவர்மன்!”

“வாட்!!!!!!!!!!!!!!!!”

(பாடுவான்….)