Oh Papa Laali –Epi 7

அத்தியாயம் 7

எஸ்ப்ளானேட் எனப்படும் அழகிய வடிவமைப்பு கொண்ட கட்டிடம் சிங்கப்பூரில் நடக்கும் தியேட்டர், நாடகங்கள் போன்றவை அரங்கேறும் இடமாகும். 1600 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய கான்சர்ட் ஹாலையும், 2000 பேர் அமரக் கூடிய தியேட்டரையும் கொண்டது இந்த எஸ்ப்ளானேட்.

 

தூங்க முடியாமல் புரண்டுப் புரண்டுப் படுத்த வான்மதி, அதற்கு மேல் போராட முடியாமல் மெல்ல எழுந்து அமர்ந்தாள். பெட் சைட் மேசையில் பச்சையில் மின்னிய டிஜிட்டல் கடிகாரத்தை ஏறிட்டுப் பார்த்தாள் வான்மதி. மணி விடிகாலை இரண்டு என காட்டியது. தனது சாட்டின் இரவு உடையை நீவி விட்டவாறே கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள் அவள். எப்பொழுதும் போல அந்த தனிமை பாடாய்படுத்தியது.

டேபிளில் இருந்த ரிமோட்டை எடுத்து சுவற்றில் பதித்திருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். தான் ரெக்கார்ட் செய்து வைத்திருந்த சூர்யவர்மனின் நிகழ்ச்சிகளில் அவளைக் கவர்ந்த பாட்டை செலெக்ட் செய்தவள் மெல்ல சரிந்துப் படுத்துக் கொண்டாள். இரவின் நிசப்தத்தில் சூர்யாவின் இனிமையான குரல் அவள் அறை எங்கும் பரவி வியாபித்தது.

“நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட

காதலன் குழந்தைதான் காதலி

ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்

கொதித்ததா குளிர்ந்ததா கூறடி” என உருகி பாடிக் கொண்டிருந்தான் அவன். மீண்டும் அதே வரியை ரிவைண்ட் செய்து போட்டாள் வான்மதி.

“நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட

காதலன் குழந்தைதான் காதலி”

மீண்டும் மீண்டும் அதே வரியையே போட்டு போட்டுப் பார்த்தாள். அதைப் பாடும் போது அவன் முகத்தில் இருந்த இளக்கம், உடல் மொழி எல்லாவற்றையும் எப்பொழுதும் போல சலிக்காமல் ரசித்தாள் அந்த நிலாப்பெண்.

“என்னை எப்போ தொடையில போட்டு ஓ பாப்பா லாலின்னு தாலாட்டுவீங்க வர்மன்?” ஏக்கமாக அவன் நிழல் பிம்பத்திடம் கேட்டாள் வான்மதி.

தொலைக்காட்சி அருகே போய் சூர்யாவின் பிம்பத்தைத் தடவிப் பார்த்தவள்,

“எந்த ஆசையும் நிறைவேறிட

நல்ல நாள் வருமே!!!” என அவனோடு சேர்ந்து மெல்லிய குரலில் பாடினாள்.

பின் ஒரு பெருமூச்சுடன் மூமை விட்டு வெளியேறி நேராக கிச்சனுக்குப் போனாள். அங்கே அவள் உபயோகிக்கும் இண்டக்‌ஷன் அடுப்பின் சுவிட்ச் மூடி இருக்கிறதா என இன்னொரு முறை செக் செய்தவள், பின் வழக்கம் போல வீட்டை ஒரு ரவுண்ட் வந்து ஜன்னல் கதவு எல்லாம் சாத்தி இருக்கிறதா என செக் செய்தாள்.

ஹாலுக்கு வந்து நின்றவள் ஜன்னலில் திரைச்சீலையை விலக்கி, வெளியே தெரிந்த இருட்டு வானத்தையும், அமுதை பொழியும் நிலவையும் கண் கொட்டாமல் பார்த்திருந்தாள். வான்மதி வசிப்பது ‘வெஸ்ட்வூட் ரெசிடென்ஸ்’ என அழைக்கப்படும் கொண்டோமினியித்தில். இவளது மூவறை கொண்டோ ஜிம், நீச்சல் குளம் போன்ற சகல வசதிகளையும் உள்ளடக்கிய இடமாகும். இவளது இருபத்து ஒன்றாவது பிறந்த நாளுக்கு அவள் தந்தை அளித்த பரிசுதான் இந்த கொண்டோ. வீட்டைக் கொடுத்து அதற்கு ஈடாக தனிமையையும் பரிசளித்தார் அவள் அப்பா சோமன்பாபு.

வான்மதியின் பெற்றோர் அவள் சிறு வயதாய் இருந்த போதே விவாகரத்து செய்துக் கொண்டார்கள். இவளது அம்மாவுக்கு மனநோய் என நிரூபிக்கப்பட்டதால், விவாகரத்து சுலபமாக கிடைத்தது மட்டுமில்லாமல் இவளும் தந்தைக்குத் தான் சொந்தம் என தீர்ப்பாகியது. அவளின் அம்மாவை உயர் ரக மனநோய் காப்பகத்தில் சேர்த்து விட்ட சோமன், மகளை சிறந்த குழந்தை வளர்ப்பு நிபுணர் என ஏஜென்சி தேர்ந்தெடுத்துக் கொடுத்த நேனியின் வசம் விட்டார்.

சிங்கப்பூரில் பணம் படைத்த இந்திய சீமான்களில் சோமனும் ஒருவர். அவர் நடத்திய மலிவு விலை விமான சேவை நன்றாகவே அவருக்கு பணத்தை ஈட்டித் தந்தது. பிஸ்னசில் பிசியாக இருந்தாலும் மகளை அவர் அநாதரவாக விட்டது இல்லை. அப்பாவின் அன்பிலும், நேனியின் கவனிப்பிலும் நன்றாகவே வளர்ந்தாள் வான்மதி.

அவளது வாழ்க்கையைத் திசை திருப்புவது போல அமைந்தது சோமனின் திடீர் மாற்றம். அவரது ஏர்லைனில் வேலை செய்த சீன விமானப் பணிப்பெண்ணோடு லீவிங் டுகேதரில் இருக்கிறார் தனது தந்தை என இவள் அறிந்துக் கொண்ட போது வான்மதிக்கு வயது பதினைந்து.  

தந்தையின் வரவு குறைந்துக் கொண்டே வர, சின்னப் பெண் மிகவும் ஏங்கிப் போக ஆரம்பித்தாள். அந்த ஏக்கத்தைப் போக்க எதாவது வேலை செய்துக் கொண்டே இருப்பாள் வான்மதி. சின்ன வயதில் இருந்தே சுத்தம், சுகாதாரம், எது செய்தாலும் நேர்த்தியாக செய்வது என இருப்பவள், சும்மா இருந்தால் தானே கண்டதையும் நினைத்து மறுக தோன்றுகிறது என எதையாவது செய்து கொண்டே இருக்க ஆரம்பித்தாள்.

போக போக இது தான் வாழ்க்கை, தனிமைதான் தனக்குத் துணை என பழகிக் கொண்டாள் வான்மதி. ஜெர்னலிஷம் படித்து முடித்தவள், கொஞ்ச நாள் வேலைக்கும் போக ஆரம்பித்தாள். அந்த வேலை சூழ்நிலை ஒத்து வராததால் அதை தலை முழுகி விட்டு, வீட்டில் இருந்தபடியே ப்ரீலான்ஸ்சாக ஆங்கில மெகஷின்களுக்கு எழுத ஆரம்பித்தாள். பணம் அவள் வாழ்க்கையில் பிரச்சனையே இல்லை. அவள் அப்பா அவளுக்காக செட் செய்திருந்த ட்ரஸ்ட் ஃபண்ட் பணத்தில் அவள் பேரன் பேத்தி கூட உட்கார்ந்து சாப்பிடலாம்.

நிலவைப் போல் தானும் தனிமையில் வாட வேண்டும் என தான் தனக்கும் மதி என வரும்படி பெயர் வைத்தாரோ தன் தந்தை என சிந்தித்தவாறே வானத்தை வெறித்தப்படி நின்றாள் வான்மதி. ரூமில் திறந்து வைத்திருந்த தொலைக்காட்சியில் இருந்து ரிப்பீட் மோடில் போட்டிருந்த பாடல் சத்தம் மெல்ல கசிந்து இவள் காதுகளை வந்தடைந்தது.

“ஓ பாப்பா லாலி

கண்மணி லாலி

பொன்மணி லாலி

பாடினேன் கேளடி” என பாடிய குரலை ஆழ்ந்து அனுபவித்தவள், ரூமுக்கு குடுகுடுவென ஓடினாள். மெத்தை மேல் அலட்சியமாக போட்டிருந்த கைத்தொலைபேசியை எடுத்தவள், சூர்யாவுக்கு கால் செய்தாள். ஓசியனில் சாப்பிட்ட தினத்தன்று  எண்களை பறிமாறிக் கொண்டார்கள்.

பல ரிங்கள் போய் கால் அட்டேண்ட் செய்யப்பட்டது.

“ஹலோ” தூக்கக் கலக்கத்தில் சூர்யாவின் குரல் ஹஸ்கியாக வெளி வந்தது.

“வர்மன்!”

“ஹ்ம்ம்”

“தூங்கறீங்களா?”

“ஹ்ம்ம்”

“ஐ லவ் யூ வர்மன்!”

“ஹ்ம்ம்”

“வில் யூ மேரி மீ வர்மன்?”

“வாட்? கம் அகேய்ன்!!!!” தூக்கம் சுத்தமாக பறந்துப் போயிருந்தது அவனுக்கு.

“வில் யூ மேரி மீ வர்மன்?” ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திக் கேட்டாள் வான்மதி.

“மதி!! டைம் என்ன தெரியுமா?”

“டைம் சொன்னாதான் கல்யாணம் பண்ணிப்பீங்களா வர்மன்?”

“வான்மதி, போதும் இந்த விளையாட்டு! அன்னைக்கு சொன்னத தான் இன்னிக்கும் சொல்லறேன்! நமக்குள்ள ஒத்து வராது! ப்ரெண்ட்ஸா இருக்கலாம்னு தான் நம்பர் கேட்டப்போ குடுத்தேன். இனிமே இப்படி போன் செய்து விளையாடினா உன் நம்பர ப்ளாக் பண்ணிருவேன். கெட் சம் ஓன் எல்ஸ் ஃபோர் திஸ் சிக் மைண்ட் கேம் ஆப் யுவர்ஸ்! பாய்” என சொன்னவன் கோபமாக போனை ஆப் செய்து கட்டிலில் வீசி இருந்தான்.

“மைண்ட் ஃபுல்லா நீங்கதான் வர்மன் இருக்கீங்க! உங்க கிட்ட நான் மைண்ட் கேம் விளையாடுவனா? என்னை புரிஞ்சுக்கோங்க வர்மன்!” என வாய் விட்டுக் கத்தினாள் வான்மதி. அமைதியான வீட்டில் அவள் போட்ட சத்தம் எக்கோவாக அவளுக்கே கேட்க, பயத்தில் ஓடிப்போய் கட்டிலில் படுத்து தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் வான்மதி. கன்னத்தில் மட்டும் கண்ணீர் வழிந்த படியே இருந்தது.

பாடுவான்…..