Oviyam 10

Oviyam 10

நான்கு நாட்கள் கடந்திருந்தன.‌ மாதவியின் வீடு வழமைக்குத் திரும்பி இருந்தது.‌ யாரும் எதையும் பற்றி மறந்தும் கூடப் பேசவில்லை. விரும்பத்தகாத காரியம் ஒன்று நடைபெற்றுவிட்டது.‌ அதற்காக உட்கார்ந்து ஒப்பாரியா வைக்க முடியும்?‌ அமைதியாகக் கடக்கப் பழகிக் கொண்டார்கள். அருண் கூட அமைதியாகக் தான் இருந்தான்.
மாதவி எப்போதும் போல வீடு வந்த அடுத்த நாளே ஹாஸ்பிடல் கிளம்பி விட்டாள். அதனால் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.‌ ஆனால் இந்த நான்கு நாட்களும் இளஞ்செழியன் ஹாஸ்பிடல் வரவில்லை.

மாதவி கொஞ்சம் குழம்பிப் போனாள். ஏற்கனவே இளஞ்செழியன் செய்வதாக முடிவாகி இருந்த ஆப்பரேஷன்களை எல்லாம் என்ன செய்யப் போகிறார்கள். டாக்டர் ஏன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்?

அன்று ட்யூட்டி நேரம் முடிந்ததும் நேராகச் சீஃபின் ரூமை நோக்கிப் போனாள் மாதவி. சந்திரமோகன் ரூமில் தான் இருந்தார்.

“வாம்மா மாதவி.”

“சீஃப்… டாக்டர் ஏன் ஹாஸ்பிடல் வரலை?‌ உடம்புக்கு ஏதாவது முடியலையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. நல்லாத்தான் இருக்கான். இன்னைக்கும் கால் பண்ணினேன்.‌ வர மாட்டானாம்.”

“அப்போ ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணின ஆப்பரேஷனை எல்லாம் என்ன பண்ணுறது?”

“வேற சர்ஜன் யாரையாவது வெச்சுப் பண்ணுங்கன்னு சொல்லுறான்.” சலிப்பாக வந்தது சந்திரமோகனின் குரல்.

மாதவிக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. எதுவும் பேசாமல் ரூமை விட்டு வெளியே வந்துவிட்டாள்.
இளஞ்செழியனிடம் இருந்து இப்படியொரு விஷயத்தை மாதவி கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.

எத்தனை பொறுப்பான தொழிலில் இருந்து கொண்டு இப்படியெல்லாம் அசட்டுத்தனமாக நடப்பது அளுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

மேனகாவைப் பிடித்து இளஞ்செழியனின் அட்ரஸை வாங்கியவள் நேராக அவன் வீட்டிற்குத்தான் சென்றாள். மேனகாவின் வியந்த பார்வையையோ, கேலியையோ கவனிக்கும் நிலையில் மாதவி இல்லை. கூர்க்காவிடம் தகவல் சொல்லிவிட்டு வெளி வாசலிலேயே காத்திருந்தாள்.

“மாதவி…” அழைத்தபடியே வேகமாக வந்தார் கற்பகம்.

“உள்ளே வாம்மா.”
“டாக்டரை… பார்க்கணும்.” அவள் தயங்கி நிற்கவும் மாதவியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துப் போனார் கற்பகம்.

“முதல் தடவையா வீட்டுக்கு வந்துட்டு இப்படி யாரோ போல வெளியே நிக்கலாமா?”

“இல்லை ஆன்ட்டி…”

“அத்தைன்னு கூப்பிடு மாதவி.” இளையவளை இடைமறித்து ஆசையாகச் சொன்னார் கற்பகம்.‌

ஆனாலும் மாதவி தலையைக் குனிந்து கொண்டாள். எந்தச் சொந்தத்தின் அடிப்படையில் இவரை நான் அத்தை என்று அழைப்பது? மனது கலங்கியது.

“டாக்டர் நாலு நாளா ஹாஸ்பிடல் வரலை. அது சம்பந்தமாக் கொஞ்சம் பேசணும். வெளியே எங்கேயாவது பார்த்துப் பேசினாத் தப்பாப் போயிடும். அதான் இங்கேயே வந்தேன். நீங்கத் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.”

“ஐயையோ!‌ இதுல நான் தப்பா எடுத்துக்க என்னம்மா இருக்கு? நீ இந்த வீட்டுக்கு எப்போ வருவேன்னு நான் எவ்வளவு ஆசையா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா?” பேச்சு அபாயகரமான பாதையில் செல்லவும் மாதவி சுதாரித்துக் கொண்டாள்.

“டாக்டர் வீட்டுல தான் இருக்காங்களா?”

“இதோ… கூப்பிடுறேன். செழியா… இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கன்னு.” கற்பகம் மாடியை நோக்கிச் சத்தமாகக் குரல் கொடுத்தார்.

வீடு நல்ல விசாலமாக இருந்தது. வீட்டைப் பார்க்கும் போதே செழியனின் வாழ்க்கைத் தரம் என்னவென்று சொல்லாமலேயே மாதவிக்குப் புரிந்தது. பகட்டாக எதுவும் இருக்கவில்லை, ஆனால் அந்த வீட்டைப் பார்ப்பவர்களுக்கு சட்டென்று புரிந்துவிடும், இது மேல்தட்டு வர்க்கம் என்று.

“அம்மா… கூப்பிட்டீங்களா?” மேலிருந்து குரல் வர இரண்டு பெண்களும் அண்ணார்ந்து பார்த்தார்கள். செழியன் மாடிப்படி வளைவில் நின்றிருந்தான்.

“செழியா வா வா. யாரு வந்திருக்காங்க பாரு!” கற்பகத்தின் குரல் துள்ளியது.

“மாதவீ!” ஆச்சரியப்பட்டபடி படிகளில் தடதடவென இறங்கி வந்தான் இளஞ்செழியன்.

“செழியா… பார்த்து வாப்பா.” சிரித்தபடி அம்மா கேலி பண்ண, அதை ரசித்துப் புன்னகைத்தான் மகன். மாதவி லேசாக நெளிந்தாள்.

“பேசிக்கிட்டு இருங்க. நான் குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்.” கற்பகம் நகர்ந்து விட மாதவி செழியனை நிமிர்ந்து பார்த்தாள்.

இரண்டு நாட்கள் சவரம் செய்யாத முகத்தோடு அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் இளஞ்செழியன்.

“ஏன் டாக்டர் ஹாஸ்பிடல் வரலை?” கொஞ்சம் அதிகாரமாகத்தான் வந்தது மாதவியின் குரல்.

“மாதவி?”

“ஹாஸ்பிடலுக்கு ஏன் வரலைன்னு கேட்டேன்.”

“வேணாம் மாதவி…‌ கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வேற ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்.”

“ஏன்? எங்க ஹாஸ்பிடல் என்ன பாவம் பண்ணிச்சு?”

“புரிஞ்சு தான் பேசுறியா மாதவி? உன்னை இனித் தொல்லைப் பண்ண மாட்டேன்னு சொல்லி இருக்கேன்.”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் டாக்டர்? உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை.”

“கரெக்ட்… ஏன்னா உன்னைப் பொறுத்தவரைக்கும் நான் வெறும் டாக்டர். உணர்ச்சிகளே இல்லாத ஜடம். உன்னால இன்னவரைக்கும் டாக்டர் எங்கிற வார்த்தையைத் தாண்டி என்னைப் பேர் சொல்லிக் கூடக் கூப்பிட முடியலை. ஆனா நான் சாதாரண மனுஷன் மாதவி. எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு. எனக்கும் வலிக்கும்.”

“உங்களையே நம்பி வந்த பேஷன்ட்ஸுக்கு அப்போ நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க?”

“ஏன்? இந்த உலகத்துலேயே நான் மட்டும் தான் டாக்டரா? அதுக்கெல்லாம் அங்கிள் வேற ஏற்பாடு பண்ணிக்குவாரு.”

“இதுதான் உங்க முடிவா டாக்டர்?”

“நான் வேற என்னதான் பண்ணுறது மாதவி? என்னை என்ன பண்ணச் சொல்லுறே?”

“பழையபடி ஹாஸ்பிடல் வாங்க டாக்டர். ட்யூட்டியில ஜாயின் பண்ணுங்க.”

“இல்லை மாதவி. அது உன் ஃபியூச்சருக்கு நல்லதில்லை. உன்னோட லைஃப் நல்லா இருக்கணும். அதுவரைக்கும் நாம தள்ளி இருக்கிறது தான் பெட்டர்.”

“எனக்குன்னு இனித் தனியா ஒரு லைஃப் நீங்க இல்லாம இல்லை டாக்டர்.” இளஞ்செழியனின் கண்களைப் பார்த்துத் தெளிவாகச் சொன்னாள் மாதவி. டாக்டர் திகைத்துப் போனான்.

“மாதவி! என்ன சொன்னே? இப்போ என்ன சொன்னே?” அவன் பரபரத்துக் கொண்டிருக்கும் போது கையில் ட்ரேயோடு வந்தார் கற்பகம்.

“அம்மா! மாதவி இப்போ என்ன சொன்னான்னு கேளுங்க. நீங்க கேளுங்கம்மா.”

“மாதவி அப்படி என்ன சொன்னா செழியா?”

“அதை அவகிட்டயே கேளுங்கம்மா. ஏய் மாதவி!” மாதவியின் கையைப் பிடித்து அவளைத் தன்னை நோக்கி இழுத்தான் இளஞ்செழியன். மாதவி மிரண்டு போனாள். மெதுவாகத் தன் கையை விலக்கிக் கொண்டு அவனை விட்டு நகர முயற்சித்தாள். ஆனால் செழியன் தன் பிடியை விடவில்லை.

“சொல்லு மாதவி… நீ இப்போ எங்கிட்டச் சொன்னதை அம்மாக்கிட்டச் சொல்லு மாதவி.”

“அதான் மாதவி உங்கிட்டச் சொல்லிட்டா இல்லை, நீ எங்கிட்ட அதைச் சொல்லேன் செழியா.”

“நானில்லாம அவளுக்குன்னு இனித் தனியா ஒரு லைஃப் இல்லையாம். சொன்னாளா இல்லையான்னு கேளுங்க?” மகனின் பொங்கி வழிந்த குரலில் ஆவலாக மாதவியைப் பார்த்தார் கற்பகம். டாக்டர் இப்படிப் போட்டு உடைப்பார் என்று பெண் எதிர்பார்த்திருக்கவில்லை. லேசாகத் திணறிப் போனாள்.

“சொல்லேன் மாதவி. ஏன் அமைதியா இருக்க?” மாதவியின் தோள்களை உலுக்கினான் செழியன்.

“செழியா! விடு அவளை. என்ன பண்ணுற நீ?‌ முரட்டுப் பையன்.” மகனை வைத கற்பகம் மாதவியைத் தன்னருகே அழைத்து அமர்த்திக் கொண்டார். செழியனின் முகம் சுணங்கிய போதும் பூரித்துப் போய் உட்கார்ந்து கொண்டான்.

“நான் சுயநலமா முடிவெடுத்திருக்கேன்.” மாதவியின் பதிலில் கற்பகம் புன்னகைத்தார்.

“வாழ்க்கையில ஒரு சில இடங்கள்ல சுயநலமா இருந்துதான் ஆகணும் மாதவி.”

“டாக்டருக்கு எந்த வகையிலயும் நான் பொருத்தமில்லை.”

“ஏய் மாதவி!” அந்த வீட்டைக கண்களால் ஒரு முறை அளந்தபடி மாதவி பேசவும் ஒரு அதட்டல் போட்டான் இளஞ்செழியன்.

“அப்படி நீ சொல்றே. ஆனா செழியன் அப்படிச் சொல்லலையேம்மா. நீ இல்லைன்னா ஒன்னுமே இல்லைங்கிறானே!” கற்பகம் சொல்லவும் ஒரு தவிப்போடு செழியனைப் பார்த்தாள் பெண். ஏதோ உலகத்தையே வென்றுவிட்ட இறுமாப்போடு உட்கார்ந்திருந்தான் டாக்டர்.

“நான் கிளம்புறேன் ஆன்ட்டி.”

“அத்தைன்னு கூப்பிடு மாதவி.”

“ம்… நான் கிளம்புறேன்… அத்தை.” தயங்கியபடியே வந்தது குரல்.

“அம்மா… நான் மாதவியை ட்ராப் பண்ணிட்டு வந்திர்றேன்.”

“இல்லை…‌ நானே…”

“மாதவி!”

“செழியா… சும்மா சும்மா எல்லாத்துக்கும் அதட்டக்கூடாது.”

“என்னை எப்பதாம்மா இவ புரிஞ்சுக்கப் போறா?”

“அதெல்லாம் போகப்போகப் புரிஞ்சுக்குவா.”

“புரிஞ்சுக்கிறப்போ புரிஞ்சுக்கட்டும். இப்போ எங்கூட வரச்சொல்லுங்க.” என்றவன் கார் கீயோடு வெளியே போய்விட்டான். மாதவி தர்மசங்கடமாக கற்பகத்தைப் பார்த்தாள்.

“நான் இங்க வந்தது வீட்டுல யாருக்கும் தெரியாது அத்தை.”

“எப்பவும் தெரியவராது.”

“என்னை நீங்க புரிஞ்சுக்கிறீங்க இல்லை?” கலங்கிய குரலில் மாதவி கேட்கவும் இளையவள் கையைப் பற்றிக் கொண்டார் கற்பகம்.

“செழியன் முகத்துல இருக்கிற சந்தோஷத்தைப் பார்த்தியா மாதவி. இவன் பண்ணின காரியத்துக்கு எங்க நீ அவனை வெறுத்துடுவியோன்னு நான் பயந்தேன். எம் புள்ளையோட வாழ்க்கை இனி என்ன ஆகும்னு நான் மிரண்டு போய் நின்னேன்.”

“ஆனா… இதை மேற்கொண்டு எப்படி நடத்துறதுன்னு எனக்குத் தெரியாது அத்தை.”

“அதை நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாதேம்மா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கார் ஹார்னை பலமாக அடித்தான் இளஞ்செழியன். பெண்கள் இருவரும் வெளியே வந்தார்கள்.

“போதும் பேச்சு. வா மாதவி.” அவன் குரலில் அத்தனை உரிமை இருந்தது. கற்பகத்திடம் விடைபெற்றுக் கொண்டவள் காரில் ஏறிக் கொண்டாள். அந்த ப்ளாக் ஆடி சுகமாகப் பறந்தது.
மெல்லிய விசிலோடு காரை ஓட்டிக்கொண்டிருந்த இளஞ்செழியன் ஆள் அரவமற்ற ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து வாய்விட்டுச் சிரித்தான். நடந்ததை இன்னும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்டென்று மாதவியைத் திரும்பிப் பார்க்க, அவள் இவனை வினோதமாகப் பார்த்தபடி இருந்தாள். அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன் அவள் முகமெங்கும் முத்தம் வைத்தான். மாதவி திடுக்கிட்டுப் போனாள்.

“டாக்டர்! என்ன பண்ணுறீங்க? விடுங்க என்னை…”

“முடியாது…”

“ஐயோ! யாராவது பார்த்திடப் போறாங்க. ப்ளீஸ்…”

“ம்ஹூம்…”

“நான் இங்கேயே இறங்கிக்கிறேன்…” அவள் காரை விட்டு இறங்குவதற்கான முயற்சிகளில் இறங்கவும் மெதுவாக அவளை விட்டவன் காரை லாக் பண்ணினான்.

“மாதவி…” ஆசையாக வந்தது அவன் குரல்.
“டாக்டர்… நீங்க… என் மரியாதைக்குரிய மனிதர்.”

“ஆனா எனக்கு அப்படியில்லை மாதவி. நீ என்னோட காதலி… மனைவி. எனக்குள்ள இருக்கிற ஆசைக்கு பயமும் தெரியாது, வெட்கம்னாலும் என்னன்னு புரியாது.” மாதவி இப்போது செழியனைக் கலவரமாகப் பார்த்தாள். அவளை இன்னும் நெருங்கி அமர்ந்தவன்,

“என்னை உன்னோட மரியாதைக்குரிய மனுஷனாப் பார்க்காம சாதாரண மனுஷனாப் பாரு மாதவி. உன்னோட செழியனாப் பாரு.”

“ம்…”

“நாளைக்கு எத்தனை மணிக்கு ட்யூட்டி?”

“நைட் ட்யூட்டி.” அவள் சொல்லி முடிக்கவும் அவன் வேண்டுமென்றே விசிலடித்தான்.

“நாளைக்கு அப்போ எனக்கும் நைட் ட்யூட்டி போடச் சொல்லுறேன்.”

“இல்லையில்லை, வேணாம்.”

“ஏன்?”

“நீங்க இப்படியே ஏதாவது வம்பு பண்ணுவீங்க.” அவள் சொன்ன விதத்தில் அவன் சத்தமாகச் சிரித்தான்.

“கண்டிப்பா… வர்றதே அதுக்குத்தானே.”

“டாக்டர்!”

“செழியன்னு கூப்பிடு மாதவி.”

“அது…‌ சட்டுன்னு வரமாட்டேங்குது.”

“கல்யாணத்துக்கு அப்புறமாவது கூப்பிடுவியா?”

“அது உங்க சாமர்த்தியம்.”

“ஓஹோ! அப்போச்சரி… என்னோட சாமர்த்தியத்தை நான் கல்யாணத்துக்கு அப்புறமாக் காட்டுறேன்.” அவன் விஷமமாகச் சொல்ல முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மாதவி.

***

அந்த நட்சத்திர ஹோட்டலில் அமர்ந்திருந்தார் உமாசங்கர். யாரின் வரவையோ எதிர்பார்த்து அமர்ந்திருப்பது போல இருந்தது அவர் தோற்றம். காஃபி ஒன்றை வரவழைத்து அதைப் பருகிய படி வாசலையே பார்த்திருந்தார்.

“மன்னிக்கணும் உமாசங்கர். உங்களை ரொம்பவே காக்க வெச்சுட்டேன்.” அவசர அவசரமாக வந்து அமர்ந்தார் சந்திரமோகன்.

“பரவாயில்லை டாக்டர்.”

“சொன்ன டைமுக்குக் கிளம்பிட்டேன். அப்போப் பார்த்து அர்ஜென்ட் கேஸ் ஒன்னு வந்திடுச்சு. தவிர்க்க முடியலை.”

“புரியுது டாக்டர்.”

“சொல்லுங்க உமாசங்கர், என்ன விஷயம்? என்ன திடீர்னு எங்கிட்டப் பேசணும்னு சொன்னீங்க?”

“எல்லாம் மாதவியைப் பத்தித் தான் டாக்டர்.”

“என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?”

“இல்லை டாக்டர்… ஆனா இனிமேல் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு பார்க்கிறேன்.”

“புரியலை… தெளிவாச் சொல்லுங்க உமாசங்கர்.”

“மாதவிக்குக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் டாக்டர்.”

“நல்ல விஷயம்தானே… ஏதாவது வரன் பார்த்திருக்கீங்களா?”

“அது சம்பந்தமாத்தான் பேச வந்தேன் டாக்டர்.”

“எதுவா இருந்தாலும் எங்கிட்டத் தயங்காமச் சொல்லுங்க. மாதவிக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.”

“டாக்டர்… விரும்பியோ விரும்பாமலோ எம்பொண்ணு வாழ்க்கையில இப்படியொரு விஷயம் நடந்து போச்சு. அந்த விஷயமே எம்பொண்ணு வாழ்க்கையைப் பாதிச்சிடுமோன்னு நான் பயப்படுறேன் டாக்டர்.”

“ம்… புரியுது. ஒரு தகப்பனா உங்களோட பயம் நியாயம்தான்.”

“எம்பொண்ணு போன மாதிரியேதான் திரும்பி வந்திருக்கான்னா யாரு நம்புவா? நாளைக்கு அவளுக்கொரு கல்யாணம் ஆகி வர்றவனுக்கு இதெல்லாம் தெரிய வந்தா எம்பொண்ணோட கதி என்ன டாக்டர்?”

“நியாயம்தான்.”

“எனக்கு இப்போ என்ன பண்ணுறதுன்னு புரியலை டாக்டர். ரொம்பக் குழம்பிப் போய்த்தான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன்.”

“என்னால எதுவும் பண்ண முடியும்னு நினைக்கிறீங்களா உமாசங்கர்?”

“நான் உங்களைத்தான் நம்பி வந்திருக்கேன் டாக்டர்.”

“சொல்லுங்க… கண்டிப்பாப் பண்ணுறேன். மாதவி எம்பொண்ணு மாதிரி. அவளுக்கொரு கஷ்டம் வர நான் விடமாட்டேன்.”

“எனக்கு எப்படிச் சொல்றதுன்னு புரியலை டாக்டர். ஆசைப்பட்டவரே மாதவியைக் கல்யாணம் பண்ணிக்கட்டும்.”

“உமாசங்கர்! நிஜமாத்தான் சொல்லுறீங்களா?”

“ஆமா டாக்டர். எனக்கு இதை விட வேற எந்த வழியும் மாதவியைச் சுகப்படுத்தும்னு தோணலை. நாளைக்கு மாதவியோட வாழ்க்கையில ஒரு சின்னப் பிரச்சனை வந்தாலும் அதைத் தாங்கிக்கிற சக்தி எங்க யாருக்குமே இல்லை டாக்டர். தனக்காகன்னு அவ என்னைக்குமே யோசிச்சதில்லை டாக்டர். அவ நல்லா இருக்கணும்.”

“கண்டிப்பா… ஆனா நீங்க இந்தக் கல்யாணத்தை மறுத்ததுக்கான காரணங்கள் இன்னமும் அப்படியே தானே இருக்கு?”

“இருக்கலாம்… ஆனா இப்போ அதையெல்லாம் பார்க்குற நிலைமையில நான் இல்லை டாக்டர். எங்கண்ணுக்கு இப்போ மாதவி மட்டும் தான் தெரியுறா.”

“ம்…”

“என்னோட கவலை இப்போ அது இல்லை…”

“சொல்லுங்க…”

“அவங்களாக் கேட்டப்போ நாங்க மறுத்திருக்கோம். இப்போ அதை அவங்க மனசுல வெச்சுக்கிட்டு…”

“இல்லையில்லை… செழியனோட வீடு அப்படிப்பட்டது கிடையாது. காலேஜ்ல நடந்த பிரச்சனை இன்னைக்கு வரைக்கும் கருணாக்குத் தெரியாது. நீங்க உங்க சக்திக்கு மீறின இடத்துல பொண்ணைக் குடுக்கப் பிரியப்படலைன்னு தான் அவனுக்குத் தெரியும்.”

“பையனோட அம்மா…”

“கற்பகம் மாதிரி ஒரு மாமியார் கிடைக்க மாதவி குடுத்து வெச்சிருக்கணும். அவ்வளவு நல்ல மாதிரி. அதைப் போகப்போக நீங்களே புரிஞ்சுக்குவீங்க. பையனைப்பத்தி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.”

“டாக்டர்… அவங்க வீட்டுல நீங்க… இதைப்பத்தி…”

“கவலையே படாதீங்க உமாசங்கர். இந்தக் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சவன் நான்தான். மாதவிக்கும் செழியனுக்கும் நல்லாவே பொருந்தும்னு நினைச்சுத்தான் இந்தப் பேச்சையே ஆரம்பிச்சேன். இடையில என்னென்னவோ ஆகிப்போச்சு. அதை விடுங்க. நடந்ததைப் பேசுறதுல அர்த்தம் இல்லை. மேற்கொண்டு ஆகுறதைப் பார்ப்போம்.”

“சரி டாக்டர்.” இருவரும் பரஸ்பரம் சில முடிவுகளை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போனார்கள். உமாசங்கருக்கு மனதில் கொஞ்சம் நிம்மதி பரவியது.

***

வீடு அமைதியாக இருந்தது. நேரம் இரவு பத்தையும் தாண்டி இருக்க வேண்டும். மாதவி கட்டிலில் புரண்டு படுத்தாள். தூக்கம் அத்தனை சுலபத்தில் வரவில்லை.
இன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மனக்கண்ணில் படம் போல ஓடிக் கொண்டிருந்தது. டாக்டர் வீட்டிற்குப் போனது, டாக்டரையும் அவர் அம்மாவையும் பார்த்தது, காரில் மீண்டும் டாக்டரே… மேற்கொண்டு எதுவும் யோசிக்க முடியாமல் மாதவிக்குத் தொண்டைக்குள் எதுவோ அடைத்தது.
தன்னுடைய மனநிலை என்னவென்று மாதவிக்கு நன்றாகவே புரிந்தது. அது டாக்டருக்கு நியாயம் செய்யவில்லை என்பதும் அவளுக்குத் தெளிவுதான்.
தன் மேல் அத்தனை அன்பையும் பிரியத்தையும் கொட்டும் டாக்டருக்குத் தான் தகுதியானவள் அல்ல என்பது ஒரு புறம் இருக்க, தனக்கு அவர் மேல் இத்தனை காதல் இல்லையே என்பதுதான் அவளுக்கு முள்ளாகத் தைத்தது.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இப்படிஅ மையவில்லை என்றால் தானாகச் சென்று நான் டாக்டரைக் கல்யாணம் பண்ணச் சம்மதித்திருப்பேனா?

அந்த நேரத்தில் ஃபோன் அலறவும் மாதவி திடுக்கிட்டுப் போனாள். புதிய நம்பராக இருந்தது. வேறு யார்? நிச்சயம் டாக்டராகத்தான் இருக்க வேண்டும். அவரில்லாவிட்டால் இந்த நேரத்தில் அவளை வேறு யார் அழைக்கப் போகிறார்கள்!

“ஹலோ.”

“மாதவி… தூங்கிட்டியா?”

“இல்லை டாக்டர்… சொல்லுங்க.”

“ஏன் தூங்கலை?”

“தூக்கம் வரலை டாக்டர்.”

“ஏன் மாதவி?”

“நான் டாக்டருக்கு நியாயம் பண்ணலைன்னு மனசாட்சி உறுத்துது டாக்டர்.” மாதவியின் பேச்சில் செழியன் மெதுவாகப் புன்னகைத்தான்.

“நான் அப்படி நினைக்கலையே மாதவி.”

“டாக்டர்…”

“ஏய் பொண்ணே! என்னை அப்படிக் கூப்பிடாதே.”

“ம்… ட்ர்ரை பண்ணுறேன்…” அவள் இழுத்த இழுப்பில் இன்னும் ஏதோ தன்னிடம் அவள் சொல்ல நினைப்பபது புரிந்தது இளஞ்செழியனுக்கு.

“மாதவி… உம்மனசுல என்ன இருக்குன்னு நான் சொல்லட்டுமா?”

“சொல்லுங்க…”

“உம்மனசுல எம்மேல ரொம்ப மரியாதை இருக்குன்னு நீ நினைச்சுக்கிட்டு இருக்க.”

“அது உண்மைதானே?”

“அது உண்மைதான்… இல்லேங்கலை… ஆனா அதையும் தாண்டி உனக்கு எம்மேல லவ் இருக்கு.”

“டாக்டர்!”

“இது… இதான் உன்னைத் தடுக்குது. என்னை ஒரு சாதாரண மனுஷனாப் பாரு மாதவி. ஏதோ வானத்துல இருந்து குதிச்ச தேவ தூதன் மாதிரிப் பார்க்காத. இவருக்கு நாம பொருத்தமான்னெல்லாம் யோசிக்காத. அப்படி எதுல நீ கொறைஞ்சு போயிட்டே? எனக்குப் புரியலைடா.”

“………………”

“நான் குடுக்கிற அன்பை எனக்குத் திருப்பிக் குடு மாதவி. உன்னை எனக்குக் குடு. உம்மனசை எனக்குக் குடு. செழியனை உனக்குப் பிடிக்கும். செழியனை நீயும் லவ் பண்ணுறே. அதை தைரியமா ஒத்துக்கோ. எதுக்கு மறைக்கணும். உன்னோட ஒரு வாழ்க்கை… காதலோட… நான் வாழணும் மாதவி.” செழியன் பேசப்பேச மாதவி லேசாக விசும்ப ஆரம்பித்தாள்.

“ஹேய் மாதவி… அழுறியா?”

“இல்லை…” கன்னத்தைத் துடைத்தபடியே அவள் சொல்ல, அந்தக் கரகரத்த குரலே அவள் சொல்வது பொய் என்றது.

“நீ இப்படி அழுதா நான் எப்படி வீட்டுக்கு நிம்மதியாப் போறது?”

“எங்க இருக்கீங்க?”

“உங்க வீட்டுக்கு முன்னாடி தான்.”

“என்ன?!”

“ஐயையோ! எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்?”

“இங்க என்னப் பண்ணுறீங்க?”

“நீ பாட்டுக்கு வந்து பேசிட்டுப் போயிட்டே. மனுஷனுக்கு இருப்புக் கொள்ள மாட்டேங்குது. அதான் கிளம்பி வந்துட்டேன். கொஞ்சம் வெளியே வரலாமில்லை.”

“ஐயையோ! யாராவது பார்த்துட்டா?”

“உங்க வீட்டுக்குப் பின்னாடி இந்த நேரத்துல யாரு வரப்போறா?”

“வீட்டுக்கு முன்னாடி இருக்கேன்னு சொன்னீங்க.”

“அடிப்போடீ… பெரிய கோட்டை மதில் பாரு. ஏறிக் குதிச்சா உள்ள வந்திடலாம்.” பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் எம்பிக் குதிப்பது கேட்டது.

“இப்போ வா மாதவி.”

“பயமா இருக்கு…”

“உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். தைரியமா வா.”

“நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. யாராவது எந்திரிச்சு வந்துட்டாங்கன்னா?”

“யாரும் வர மாட்டாங்க. நீ தைரியமா வா. கெஞ்ச வெக்காத மாதவி.”

“ம்…” டாக்டர் கொடுத்த தைரியத்தில் வெளியே வந்தாலும் மாதவிக்கு நெஞ்சுக்குள் ரயில் ஓடியது. லைட்டைப் போடக் கூடப் பயமாக இருந்ததால் தட்டுத் தடுமாறி கிணற்றடிக்கு வந்து சேர்ந்தாள்.

வீதியிலிருந்து வந்த மெல்லிய மெர்க்குரி வெளிச்சத்தில் அவன் தென்னை மரத்தில் சாய்ந்து நிற்பது தெரிந்தது. வந்த அவசரத்தில், தான் நைட்டியில் இருப்பதை அவள் மறந்து போனாள். அவன் பார்வை அவளை ரசித்த விதத்தில்தான் மாதவிக்கு அது உறைத்தது. செழியன் அவள் பக்கத்தில் மெதுவாக நடந்து வந்தான்.

“எதுக்கு மாதவி அழுத?”

“அது…”

“இப்போ நான் கூப்பிட்ட உடனேயே எதையும் பத்தி யோசிக்காம வெளியே வந்தியே… இதையே வேற யாராவது கூப்பிட்டிருந்தா வந்திருப்பியா?”

“ம்ஹூம்…”

“அப்போ இதுக்குப் பேர் என்ன மாதவி?”

“நம்பிக்கை…”

“ஓஹோ! என்னை எத்தனை வருஷமா உனக்குத் தெரியும்? அதென்ன… மத்தவங்க மேல வராத நம்பிக்கை இந்தச் செழியன் மேல மட்டும் வருது?” அவள் காதோரம் கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டபடி அவன் பேசவும் அவள் கண்கள் மீண்டும் கலங்கியது.

“என்னடா?”

“எனக்கு ரொம்பக் குற்ற உணர்ச்சியா இருக்கு.”

“ஏன்?”

“நான் உங்களுக்கு நியாயம் பண்ணலை டாக்டர். நிறையவே சுயநலமா யோசிக்குறேன். என்னைப் பத்தி மட்டுமே சிந்திக்கிறேன்.”

“ஹா… ஹா… மாதவி… மாதவி…” செழியன் அவள் சிறுபிள்ளைத் தனத்தில் வாய்விட்டுச் சிரித்தான்.

“உனக்குப் புரியலையா… இல்லை புரிஞ்சும் ஏத்துக்க மறுக்கிறயான்னு எனக்குப் புரியலை… பரவாயில்லை விடு. நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கணும். அதுக்கப்புறமா என்னைப் பத்தி மட்டும் யோசி, சரியா?” அவன் குறும்பாகச் சொல்லவும் மாதவி நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள்.

அந்தக் கண்கள் முழுவதும் காதல் தான் நிரம்பி இருந்தது. மாதவிக்கு மீண்டும் கண்கள் குளமானது. கலங்கியிருந்த அந்தக் கண்களைத் துடைத்து விட்டான் செழியன்.

“லேட் ஆச்சு, உள்ள போ மாதவி.”

“ம்…” மெதுவாக நகர்ந்தவளின் கையைப் பிடித்து நிறுத்தினான் இளஞ்செழியன்.

“தான்க் யூ.”

“எதுக்கு?”

“கூப்பிட்ட உடனே எந்த மறுப்பும் சொல்லாம வந்ததுக்கு.” அவன் பதிலில் மாதவி அழகாகப் புன்னகைத்தாள். செழியன் சொக்கிப் போனான். கலைந்து போய் அத்தனை அழகாக இருந்தாள் பெண். முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

போக மனமில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடை பயின்றவளை இமைக்காமல் அந்த இருளில் பார்த்தபடி நின்றிருந்தான் இளஞ்செழியன்.

error: Content is protected !!