Oviyam 12

Oviyam 12

அருணின் தலைக்குள் யாரோ கல்லை ஏற்றி வைத்தாற் போல இருந்தது. காலேஜுக்குள் நுழைந்தவன் பைக்கை அதற்குரிய இடத்தில் பார்க் பண்ணிவிட்டு கேன்டீனை நோக்கிப் போனான்.

மாதவியின் கல்யாண விஷயம் அவன் தலையில் இடி போல இறங்கி இருந்தது. டாக்டர் மேல் அவனுக்கு இன்று வரை அத்தனை நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை.

ஆயிரம்தான் இருந்தாலும் மாதவியைக் கடத்திக் கொண்டு போன மனிதர்தானே அவர்.

பரீட்சைகள் எல்லாம் முடிவு பெற்றிருந்தன. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு மாதகாலம் தான். அதன்பிறகு இன்டர்ன்ஷிப் ஆரம்பித்துவிடும்.

கேன்டீனில் அவன் குழு ஏற்கனவே வந்து கூடியிருந்தது. அருணும் போய் அவர்களோடு அமர்ந்து கொண்டான்.

“மச்சான்… காஃபி சொல்லட்டுமா?” இது விஷால்.

“ம்…” தலையை மட்டும் ஆட்டிவிட்டு சன்கிளாசைக் கழட்டி மேசை மேல் வைத்தான் அருண். நண்பர்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“என்ன அருண்? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“ம்ப்ச்… சும்மா இரு முல்லை.”

“டேய்! அதான் முல்லை கேக்குறா இல்லை? என்ன ரொம்பத்தான் அலட்டிக்கிற. வாயைத் தொறந்து என்னப் பிரச்சனைன்னு எங்களுக்கும் சொன்னாத்தானே புரியும்.”

“நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா… தொணதொணன்னு…” சம்பந்தமே இல்லாமல் காஞ்சனா மீதும் பாய்ந்தான். அதன்பிறகு யாரும் எதுவும் பேசவில்லை. அமைதியாகி விட்டார்கள்.

அருணைப்பற்றி அவர்கள் மூவருக்கும் நன்றாகத் தெரியும்.

சின்ன விஷயத்திற்கும் அப்செட் ஆகிவிடுவான். பொறுமை மருந்திற்கும் கிடையாது. போதாததற்கு கோபம் மூக்கிற்கு மேல் வரும். இதற்கு மேல் அவனாக வாயைத் திறந்தால் தான் உண்டு. காஃபி வரவும் அதை அருந்தியபடி மௌனமாக இருந்தார்கள்.

“அப்பா… மாதவிக்குக் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டார்.”

“அப்படியா மச்சான்! சூப்பர்!” விஷால் ஆர்ப்பரித்த போதும் அருணின் முகத்தில் மலர்ச்சி இல்லை. முல்லை அதைக் கண்களால் சுட்டிக்காட்டினாள்.

“டாக்டரையே முடிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கார். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…”

“ஓ…” இப்போது அருணின் கோபத்திற்கான காரணம் எல்லோருக்கும் பிடிபட்டது.

“அவங்க வந்து பேசினாங்களா அருண்?”

“இல்லை காஞ்சி. அப்படி நடந்திருந்தாலாவது என் மனசு ஆறிப்போகும். இவராப் போய்ப் பேசி இருக்கார்.”

“யாருக்கிட்ட?”

“டாக்டர் சந்திரமோகன் கிட்ட.”

“ஓ…”

“ஆத்திரம் ஆத்திரமா வருது தெரியுமா? அந்த டாக்டர் வீட்டுலயும் ஒரு பேய் இருக்கில்லை? அவளையும் எவனாவது தூக்கிட்டுப் போனா இப்படித்தான் கல்யாணம் பண்ணிக் குடுப்பாங்களா? இல்லாதவங்கன்னா இப்படித்தான் நடந்துக்கணுமா?” அருண் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.

“இதெல்லாம் கூடப் பரவாயில்லை மச்சான்… அப்பா விஷயத்தைச் சொல்றார், நான் அவ்வளவு சண்டை போடுறேன். மாதவி சும்மா நிக்குறா.”

“பாவம்டா மச்சான் அக்கா. அவங்க என்ன பண்ணுவாங்க?”

“அருணுக்குப் பிடிக்காத கல்யாணம் எனக்கு வேணாம்னு சொல்ல வேண்ணியது தானே. அவ ஒரு வார்த்தை சொன்னா அப்பா மறுபேச்சுப் பேசி இருக்க மாட்டார். ஆனா இவ பேசல்லையே! எனக்கும் இதுல சம்மதம் எங்கிற மாதிரியில்லை நிக்குறா.”

“மாதவி அக்காவால வேற என்ன பண்ண முடியும் அருண்? ஒரு பொண்ணா என்னால அவங்களைப் புரிஞ்சுக்க முடியுது. அவங்க வேற என்னதான் பண்ணுவாங்க? இது வாழ்க்கைடா… விளையாட்டில்லை. நாளைக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இதெல்லாம் தெரிய வந்தா அவங்க நிலைமை என்னன்னு யோசிச்சுப் பார்த்தியா?”

“ஆமா… பெரிய பொடலங்கா நிலைமை. இதையே ஆளாளுக்குச் சொல்லி மிரட்டுங்க.”

“அப்படியில்லை அருண்… அக்கா…”

“போதும் நிறுத்து காஞ்சி… மாதவிக்கு என்னைவிட அந்த டாக்டர் தான் இப்போப் பெருசாப் போயிட்டான். அவ ஒரு வார்த்தை சொல்லி இருந்தா எல்லாமே ஆரம்பிச்சவுடனேயே நின்னு போயிருக்கும். இவளுக்கு அந்த வீட்டுல எந்த மரியாதையும் கிடைக்காது. அது புரியாம…” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அர்ச்சனா கேன்டீனுக்குள் நுழைந்தாள்.

“வர்றா பாரு பேய்…” அருண் வாய்க்குள் முணுமுணுத்தபடி கையில் ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்தான். முகம் கோபத்தில் தகித்தது. ஆனால் உள்ளே நுழைந்த பெண் இவர்களை நோக்கி வரவும் கொஞ்சம் சங்கடப்பட்டார்கள்.

“ஹாய் சீனியர்ஸ்…” அர்ச்சனா தயங்கியபடி சொல்லவும் பெண்கள் இருவரும் பொதுவாகச் சிரித்து வைத்தார்கள். விஷால் அருணின் தோளில் லேசாக இடித்தான்.

“நான்… உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்…” பெண் லேசாகத் தயங்கியது.

“மச்சான்… உங்கிட்டத் தான் பேசுறாங்க.”

“நான் யாரோடயும் பேசுற மூட்ல இல்லை… போகச் சொல்லு.” அருண் காட்டமாகப் பதில் சொல்ல அர்ச்சனா பல்லைக் கடித்துத் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வருவது‌ அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஒரு ரெண்டு நிமிஷம் தான்… உங்க நேரத்தை ரொம்ப நான் எடுத்துக்க மாட்டேன்.” இது அர்ச்சனா.

“மச்சான்… என்னடா இப்படிப் பண்ணுற? ஒரு பொண்ணு எல்லாத்தையும் மறந்து உங்கிட்டப் பேசணும்னு சொல்லுது. இது நல்லா இல்லைடா.” அருணின் காதிற்குள் மெதுவாகச் சொன்னான் விஷால்.

“என்ன விஷயம்?”

“கொஞ்சம்… தனியாப் பேசணும்…”

“பரவாயில்லை… இங்கேயே சொல்லலாம்… இவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ் தான்.”

“ஸாரி…” அர்ச்சனா சொல்லவும் அருணோடு சேர்த்து அத்தனை பேரும் வாயைப் பிளந்தார்கள்.

“உங்கக்கா… சாரி… அண்ணியைப் பத்தி அப்படி அன்னைக்கு நான் பேசினது ரொம்பத் தப்பு. அதை மனசுல வெச்சுக்கிட்டு…”

“இப்படி உக்காரு அர்ச்சனா.” திக்கித் திணறிய அர்ச்சனாவைத் தன் பக்கத்தில் காஞ்சனா உட்கார வைத்துக் கொண்டாள். இறங்கி வந்து பேசுவது என்பது அர்ச்சனாவிற்குப் புதிது போலும். வார்த்தைகளில் இருந்த பணிவு குரலில் தொலைந்து போயிருந்தது.

“அண்ணாக்கு அண்ணியை ரொம்பப் பிடிச்சிருக்கு சீனியர். என்னால இந்தக் கல்யாணம் தடைப்பட்டுப் போறது எனக்குக் கஷ்டமா இருக்கு. நீங்க உங்க ஃப்ரெண்ட் கிட்டச் சொல்லுங்க சீனியர்.” காஞ்சனாவை அவள் சிபாரிசு பிடித்துக் கொண்டிருக்க அருண் முகத்தை அப்புறமாகத் திருப்பிக் கொண்டான்.

“இவங்க அக்காக்கு இவங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணி வெக்கலாம். ஆனா, அண்ணா இவங்க அக்காவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டார்.”

“புரியுது அர்ச்சனா.”

“எம்மேல உள்ள கோபத்தை இந்தக் கல்யாணத்துல காட்ட வேணாம்னு சொல்லுங்க சீனியர்.” சொல்லிவிட்டு அர்ச்சனா சட்டென்று எழுந்து போய்விட்டாள்.

“என்ன மச்சான் நடக்குது இங்கே?”

“அதானே விஷால்… என்னால நம்பவே முடியலைடா! அர்ச்சனா தானா இது?” முல்லை ஆச்சரியமாக விழி விரிக்கவும் காஞ்சனா சிரித்தாள்.

“அருண்… நீ ஏன் ஒன்னுமே பேச மாட்டேங்கிற? ஏதாவது பேசுடா. அதான் அந்தப் பொண்ணு இவ்வளவு இறங்கி வந்து பேசுதில்லை?”
அவர்கள் ஆளுக்கொன்றாகப் பேசிய போதும் அருண் அமைதியாகவே இருந்தான். அர்ச்சனாவை அத்தனை எளிதில் அவனால் நம்ப முடியவில்லை.

அன்று எத்தனை எளிதாக மாதவியைப் பற்றிப் பேசினாள்.

இன்றைக்கு அவளே வந்து இப்படிப் பேசுகிறாள் என்றால்… இதில் ஏதாவது சூதுவாது இருக்குமோ? அருண் மௌனமாகவே அமர்ந்திருந்தான்.

***

“ம்க்கும்…” தொண்டையை லேசாகச் சரிபண்ணிக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார் சந்திரமோகன். மாதவியின் வீட்டில் எல்லோரும் கூடி இருந்தார்கள்.
எல்லோரும் என்றால் கருணாகரன், கற்பகம், கருணாகரனின் ஒன்றுவிட்ட அக்கா விஜயலக்ஷ்மி, அவர் கணவர் பரமசிவம்.

ஒன்றுவிட்ட அக்கா என்றபோதும் கருணாகரன் மேல் மிகவும் பாசமாக இருப்பார் விஜயலக்ஷ்மி. அத்தானும் அதே போல அமைந்துவிட கருணாகரன் வீட்டில் நடக்கும் எந்த நல்லது கெட்டது என்றாலும் அவர்கள் தான் முன்னால் நிற்பார்கள்.

கற்பகத்திற்கும் அதில் எந்த மனக்குறையும் இல்லை. ஏனென்றால் விஜயலக்ஷ்மி, பரமசிவம் தம்பதியரின் குணம் அப்படி. இப்போது முறையாக மாதவியைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். கூடவே சந்திரமோகனும் வந்திருந்தார்.

“நடந்து போனது எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம புள்ளைங்களோட எதிர்காலத்துக்காக இந்த நல்ல காரியத்தைப் பண்ணுறது ரொம்பச் சரின்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க உமாசங்கர்?”

“கண்டிப்பா டாக்டர், எனக்கு அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.” சந்திரமோகன் பேசச் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த எல்லோரையும் மெதுவாகத் தன் பேச்சில் இணைத்துக் கொண்டார்.

சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாகிக் கொண்டிருந்தது.

“கருணா… நீ என்னப்பா சொல்றே?”

“சரிதான்…” வாய்திறந்து பேசிய போதும் கருணாகரன் முகம் கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருந்தது.

“பொண்ணை வரச்சொல்லுங்க தம்பி… நான் இன்னும் மாதவியைப் பார்க்கலை.” இது விஜயலக்ஷ்மி.

“ஆமா விஜயா… நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேன். கல்யாணப் பேச்சையே காதுகுடுத்துக் கேக்காத நம்ம செழியனையே குப்புற விழவெச்ச ஆளில்லையா! பொண்ணை வரச்சொல்லுங்க.” பரமசிவமும் மனைவியோடு சேர்ந்து கொண்டார்.

சற்று நேரத்தில் ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத பட்டுப் புடவை ஒன்றை அணிந்து தலைநிறையப் பூ வைத்து கையில் ட்ரேயோடு வந்தாள் மாதவி. நடையில் தயக்கம் இருந்தது. எல்லாவற்றையும் மௌனமாக ரூமில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.

“வாம்மா மாதவி, வந்து இப்படி உக்காரு.” அவள் கையில் இருந்த ட்ரேயை கற்பகம் வாங்கிக் கொள்ள, தன் பக்கத்தில் பெண்ணை அமர்த்திக் கொண்டார் விஜயலக்ஷ்மி.

“அடேங்கப்பா! மாதவி அழகின்னு செழியன் சொன்னது சரியாத்தான் இருக்கு. இத்தனை அழகா இருந்தா எங்க புள்ளை என்னதான் பண்ணுவான்! இல்லையா கற்பகம்?”

“ஆமா அண்ணி…” கற்பகமும் இப்போது பெருமையாகச் சிரித்துக் கொண்டார். உமாசங்கர் இப்போது மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“எம் பொண்ணுக்கு இவ்வளவு பெரிய சம்பந்தம் கிடைக்கும்னு நாங்க எதிர்பார்க்கலை. இருந்தாலும் எங்க சக்திக்கு உட்பட்டு எந்தக் குறையும் இல்லாம சிறப்பாவே பண்ணிடுவோங்க.” அவர் வார்த்தைகளில் அதுவரை மௌனமாக இருந்த கருணாகரன் வாயைத் திறந்தார்.

“இல்லையில்லை… அப்படியெல்லாம் நீங்க சிரமப்படுத்திக்கத் தேவையில்லை. உங்களால முடிஞ்சதைப் பண்ணுங்க. உங்களுக்கு இன்னொரு பையனும் இருக்கான். அவனையும் பார்க்கணும் இல்லை.”
பேச்சுக்கள் இப்படியே நடந்து கொண்டிருக்க மெதுவாக எழுந்த கற்பகம் அமுதவல்லியிடம் போனார்.

“ஏங்க அண்ணி… உங்க பையன் வீட்டுல இல்லையா?”

“இருக்கான் அண்ணி, பெரியவங்க பேசுறதால ரூம்ல இருக்கான்.”

“ஓ… நான் கொஞ்சம் அருணைப் பார்க்கணுமே…”

“அப்படியா? வாங்க வாங்க…” அமுதவல்லி ரூமை நோக்கி நடக்க அவரைத் தடுத்தார் கற்பகம்.

“இல்லையில்லை… நீங்க ரூமைக் காட்டுங்க அண்ணி, நான் பேசிட்டு வந்தர்றேன்.”

“அதோ… அந்த ரூம்தான்…” அமுதவல்லி சற்றுச் சங்கடப்பட்ட படி ரூமைக் காட்ட ஒரு புன்னகையோடு நகர்ந்தார் கற்பகம். ரூமில் கட்டிலில் சாய்ந்தபடி ஹாலையே பார்த்திருந்த அருண் கற்பகம் வரவும் எழுந்து உட்கார்ந்தான்.

“வாங்க…” அருணின் முகத்தில் தர்மசங்கடமான ஒரு பாவம் தோன்றியது.

“கொஞ்சம் பேசலாமா அருண்?”

“வாங்க வாங்க…” தயக்கத்தோடே அருண் அழைக்க உள்ளே வந்தார் கற்பகம்.

“அருண்… நீ சின்னப்பையன் தான். இருந்தாலும் பரவாயில்லைன்னு உங்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்.”

“எங்கிட்டயா? நான் என்ன…”

“இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கணும் அருண். அது உன்னோட கைல தான் இருக்கு.” இப்போது அருணின் முகம் லேசாகக் கடினப்பட்டது.

“அதான் எல்லாம் சிறப்பா நடக்குதே… அதுக்கப்புறமும் எதுக்கு எங்கிட்ட வந்து பேசுறீங்க?”

“அத்தைன்னு சொல்லு அருண்.”

“……………”

“என்னதான் எல்லாம் சிறப்பா நடந்தாலும் உம்மனசு சந்தோஷமா இல்லைன்னா மாதவி சந்தோஷமா இருக்கமாட்டா. அது உனக்குத் தெரியாதா அருண்?”

“அவளுக்குத்தான் இப்போ என்னை விட மத்தவங்க பெருசாப் போனாங்களே.” இதை அருண் கசப்பாகச் சொன்ன போது கற்பகம் சிரித்துக் கொண்டார்.

“பொண்ணுங்கன்னா அப்படித்தான் அருண்… ரெட்டை வாழ்க்கை தான். அதுக்கு மாதவி மட்டும் விதிவிலக்கு இல்லை. நாளைக்கு உனக்குன்னு ஒருத்தி வரும்போது உனக்கே இது புரியும். நான் இப்போப் பேச வந்ததே வேற விஷயம் அருண்.”

“சொல்லுங்க…”

“அர்ச்சனா நீ நினைக்கிற அளவுக்கு ஒன்னும் கெட்டபொண்ணு இல்லை அருண்.” அருண் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.

“எனக்குப் புரியுது… இந்தப் பேச்சை எடுத்தாலே உனக்குக் கோபம் வரும். இருந்தாலும் பேச வேண்டிய கடமை எனக்கிருக்கு. அர்ச்சனா பண்ணினது தப்புத்தான். அதுக்காக உங்கிட்ட நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.”

“ஐயையோ! என்ன இதெல்லாம்?”

“பதறாத அருண்… இதுல என்னத் தப்பு இருக்கு? எம்பொண்ணு பண்ணினது தப்புத்தானே? ஆனா… எம்பொண்ணு பண்ணின தப்புக்காக எம்பையனைத் தண்டிக்காத அருண். உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.”

“ஐயோ அத்தை!” தன் முன்னால் கைகூப்பி நின்றிருந்த கற்பகத்தின் கரத்தைச் சட்டென்று இறக்கிவிட்டான் அருண்.

“என்னப் பண்ணுறீங்க நீங்க?”

“இல்லை அருண்… செழியன் உங்கக்கா மேல எவ்வளவு ஆசையா இருக்கான்னு உங்க யாருக்குமே தெரியாது. அதைக் காட்டத்தெரியாமக் காட்டி அவனும் தப்புப் பண்ணிட்டான். எல்லாமே அவனுக்கு எதிரா இப்போ நிக்குது. உனக்கு எங்க வீட்டுல மாதவி சுகப்படுவாளாங்கிற சந்தேகம் இருக்கலாம்.”

“இல்லை… அது…”

“உன்னை நான் தப்பாச் சொல்லலை. அது நியாயம் தானே? நீ யாரை நம்பலைன்னாலும் இந்த அத்தையை நம்பி மாதவியை எங்க வீட்டுக்கு அனுப்பு. சந்தோஷமா அனுப்பு. இப்படி சம்பந்தமே இல்லாத மாதிரி ஒதுங்கி நிக்காத. அது எல்லாருக்கும் மனவருத்தைத் தான் குடுக்கும்.”
அருண் எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றிருந்தான்.

கற்பகமும் இளையவனின் சிந்தனை படிந்த முகத்தைப் பார்த்துவிட்டு மௌனமாகவே வெளியேறி விட்டார். அவனுக்கு இப்போது தனிமை வேண்டும். அவனுக்குப் பிடித்தமில்லாத விஷயம் ஒன்றை அவன் ஏற்றுக்கொள்ள அவனுக்கும் அவகாசம் வேண்டும்தானே?
அடுத்த வாரத்திலேயே நிச்சயதார்த்தம் வைத்து அதற்கு அடுத்த இரண்டு வாரங்களில் கல்யாணம் வைப்பதாக வெளியே பேசி முடிவானது.

அருண் ரூமை விட்டு வெளியே வந்தான். தம்பியைப் பார்த்த மாத்திரத்தில் மாதவியின் முகம் பூவாக மலர்ந்து போனது. கற்பகமும் அவனைப் பார்த்துச் சிரிக்க, ஒரு அர்த்தம் பொதிந்த புன்னகையைச் சிந்தினான் அருண்.

***

புடவைத் தேர்வு நடந்துகொண்டிருந்தது. கடையை இரண்டு பண்ணிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. பெண்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். கூடவே இளஞ்செழியனும் வந்திருந்தான்.

நெடுநாட்கள் பழகியது போல மாதவியோடு அர்ச்சனா உறவு கொண்டாடியதை கற்பகம் ஒரு ஆச்சரியத்தோடு கவனித்துக் கொண்டார். ஆனால் கற்பகம் அருணிடம் பண்ணிய அதே விஷயத்தை மாதவி அர்ச்சனாவிடம் செய்தாள் என்பது யாருக்குமே தெரியாது. சின்னச் சின்ன மன்னிப்புக் கோரல்களும் விட்டுக் கொடுத்தல்களும் எத்தனை பெரிய கோபத்தையும் தூசு போல ஆக்கிவிடும் என்ற வித்தை தெரிந்தவர்கள் கற்பகமும் மாதவியும்.

“இது அண்ணிக்கு நல்லா இருக்கும்மா.”

“ஆனா பார்டர் சின்னதா இருக்கே அர்ச்சனா.”

“கலரும் நல்லா இருக்கு, டிசைனும் நல்லா இருக்கே…”

“பிடிச்சிருந்தா நீ எடு… நிச்சயதார்த்தத்துக்கு இது போதாது அர்ச்சனா.” பேச்சு பேச்சாக இருக்க மாதவியின் கண்கள்‌ கடை வாசலையே வட்டமிட்டது.

“என்ன மாதவி? யாரை எதிர்பார்க்கிறே?” இது இளஞ்செழியன்.

“இல்லை… அருண் வர்றேன்னு சொன்னான்…”

“ஓ… வருவானா?”

“ஏன் அப்படிக் கேக்குறீங்க?”

“இல்லை… நான் இங்க இருக்கேன்னு தெரிஞ்சிருக்கும், அதால வரமாட்டான்னுதான் நான் நினைக்கிறேன்.”

“ம்ஹூம்… கண்டிப்பா வருவான்.”

“சரிடா… வந்தா சந்தோஷம்தான். நீ சாரியை செலெக்ட் பண்ணு.”

“ம்…” அதன்பிறகு மாதவி புடவைத் தெரிவில் இறங்கிவிட்டாள். செழியனின் கண்கள் வாசலை ஒருமுறை தொட்டு மீண்டது. கல்யாண வேலைகள் அனைத்தும் ஜரூராக ஆரம்பித்திருந்த போதும் அருணை செழியனால் நெருங்க முடியவில்லை.

அது என்னவோ செழியனுக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்த போதும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. மாதவியின் உறவுகளை எப்போதும் செழியன் பிரித்துப் பார்த்ததில்லை. அவன் உறவுகள் போலத்தான் நினைத்தான்.

மாதவிக்கு உள்ளது ஒரேயொரு தம்பி. அவனும் இப்படி முறுக்கிக் கொண்டு திரிந்தது கோபத்தை வரவழைத்த போதும் மாதவிக்காகப் பொறுத்துக் கொண்டான்.

மாதவியின் அம்மாவும் அப்பாவும் இப்போதெல்லாம் செழியனோடு இயல்பாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் இளையவன் மட்டும் எதற்கும் மசியவில்லை.

“அதோ… அருண் வந்துட்டான்.” மாதவியின் குரலில் ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்தான் செழியன். உண்மையாகவே அருண் வந்துகொண்டிருந்தான். மாதவியைச் சட்டென்று திரும்பிப் பார்த்தான் செழியன்.

‘நான் சொன்னேன் அல்லவா?’ என்பது போலப் புன்னகைத்தாள் பெண். செழியனும் மகிழ்ச்சியாகவே புன்னகைத்தான். தான் இங்கே இருக்கிறேன் என்று தெரிந்தும் வந்திருக்கிறான் என்றால்…

பெண்கள் ஒருவாறாக நான்கைந்து சேலைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மாதவிக்கு ஒவ்வொரு புடவையாக கற்பகம் தோளில் வைத்துப் பார்க்கவும் மாதவியின் கண்கள் தம்பியின் முகத்தை எப்போதும் போல நிமிர்ந்து பார்த்தது.

அக்காவின் ஆடைத்தெரிவுகளுக்கு தம்பி கருத்துச் சொல்வது அவர்கள் பழக்கம். ஆனால் அது இன்று அருணுக்குக் கொஞ்சம் சங்கடத்தைக் கொடுக்க செழியனைத் திரும்பிப் பார்த்தான்.

“நல்லா இருக்கு மாதவி.” செழியன் சம்மதம் சொல்ல அருணும் சம்மதமாகத் தலையசைத்தான்.

நல்ல சிவப்பு நிறத்தில் உடல் முழுவதும் தங்க வேலைப்பாடமைந்த புடவை. பார்க்க அழகாக இருந்தது.
கற்பகமும் அமுதவல்லியும் இன்னும் சில புடவைகளைத் தேர்ந்தெடுக்க பில்லைப் பே பண்ணுவதற்காக நகரப் போனான் அருண்.

“அருண்… நான் பே பண்ணுறேன்.” செழியனின் குரல் அருணைத் தடுத்தது.

“இல்லையில்லை… அப்பா என்னைத்தான் பே பண்ணச் சொன்னாங்க.”

“ப்ளீஸ் அருண்… புரிஞ்சுக்கோ. மாதவிக்கு முதல் முதலாப் புடவை வாங்கிறோம். அது என் பணத்துல வாங்கினதா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.” செழியன் தயவாகக் கேட்டபோது அருணால் மறுக்கமுடியவில்லை.

அடுத்ததாக ஜவுளிக்கடைக்குப் பக்கத்தில் இருந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு எல்லோரையும் அழைத்துப் போனான் செழியன். அருண் எதற்கும் மறுப்புச் சொல்லவில்லை. செழியனுக்கு அவன் நடத்தைகள் பெரும் விந்தையாக இருந்தது. மாதவி அருணிற்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள இளஞ்செழியன் கற்பகத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

மறந்தும் அர்ச்சனாவும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

“படிப்பெல்லாம் எப்படிப் போகுதும்மா?” அமுதவல்லி இயல்பாகப் பேசவும் அர்ச்சனா திடுக்கிட்டுப் போய் அம்மாவைப் பார்த்தாள். செழியனும் கொஞ்சம் ஆச்சரியமாக கற்பகத்தைப் பார்த்தான்.

“அத்தை கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம எதுக்கு ரெண்டு பேரும் என்னோட முகத்தைப் பார்க்குறீங்க?” அசால்டாகச் சொன்ன கற்பகம் தனது மீதி ஐஸ்கிரீமில் கவனத்தைச் செலுத்தினார்.

“நல்லாப் போகுது… அத்தை…”

“எங்கூடப் பேச எதுக்கு இவ்வளவு தயக்கம் அர்ச்சனா?”

“இல்லை அத்தை… நீங்க எங்கூடப் பேசுவீங்கன்னு… நான்…”

“சில நேரங்கள்ல சில தவறுகள் நடக்குறது இயற்கைதான். அதையே பிடிச்சிக்கிட்டுத் தொங்க முடியுமா? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு சொல்லி இருக்காங்க. எம் பையனும் பரம சாது இல்லைன்னு எனக்கும் தெரியும் அர்ச்சனா.”

“இருந்தாலும்… அண்ணியைப் பத்தி அப்படி நான் பேசியிருக்கப்படாது. ஏதோவொரு கோபத்துல…”

“சரிவிடு… இப்போ சொந்தம்னு ஆகிப்போச்சு… பழசையெல்லாம் மறந்திரணும், புரியுதா?”

“சரிங்கத்தை…”

“சாப்பிடு.” ஒரு புன்னகையோடு அமுதவல்லி சொல்ல செழியன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
அன்று இரவு செழியன் ஃபோன் பண்ணிய போது கொஞ்சம் முறுக்கிக் கொண்டாற்போலத் தோன்றியது மாதவிக்கு.

“கோபமா இருக்கீங்களா?”

“இல்லையே…”

“இல்லை… நீங்கக் கோபமா இருக்கீங்க. எனக்குத் தெரியும்.”

“அதெல்லாம் இல்லை மாதவி.”

“உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆரம்பத்துல இருந்து அருணுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை. உங்களை ஏதோ வில்லனைப் பார்க்குற மாதிரியே பார்க்குறான்.”

“நான் வில்லன் இல்லை, ஹீரோன்னு நீ சொல்லேன் மாதவி.”

“விளையாடாதீங்க… அவனுக்கு இந்தக் கல்யாணத்துக்கு நான் சட்டுன்னு சம்மதம் சொல்லிட்டேன்னு எம்மேல கோபம்.”

“உங்கூட சண்டைப் போட்டானா?”

“இல்லையில்லை… நேத்து முல்லை கால் பண்ணினா. அருணோட ஃப்ரெண்ட். அவங்கக்கிட்ட அருண் வருத்தப்பட்டானாம். மாதவிக்கு இப்போ என்னை விட அந்த டாக்டர் தான் பெருசாப் போயிட்டார்னு.”

“ஹா… ஹா… லூசா மாதவி இவன்? சின்னப்புள்ளை மாதிரி பிஹேவ் பண்ணுறான்.”

“ஏன்? நீங்க இப்போ என்ன பண்ணினீங்களாம்? அதைத்தானே பண்ணினீங்க? சின்னப்புள்ளைங்க மாதிரி ஆளாளுக்குக் கோபப்பட்டா நான் என்னதான் பண்ணுறது? புரிஞ்சுக்கோங்க அத்தான்.”

“ஏய்! இப்போ என்ன சொன்னே? நீ என்னை இப்போ எப்படிக் கூப்பிட்ட மாதவி?”

“ஏன்? கட்டிக்கப் போறவங்களை அத்தான்னு தானே கூப்பிடுவாங்க?” அவள் சரசமாகக் கேட்கவும் செழியன் முழுதாக வீழ்ந்து போனான்.

“ஐயோ சாமி! இவ மனுஷனைக் கொல்லாமக் கொல்லுறாடா. இன்னைக்கும் அந்தக் கோட்டை மதிலைத் தாண்டிட வேண்டியதுதான்.”

“ஐயையோ! வேணாம் வேணாம்.” சிரித்தபடியே லைனைக் கட் பண்ணினாள் மாதவி.

error: Content is protected !!