Oviyam 13

வீடு கலகலவென்றிருந்தது. புன்னகை முகமாக மாதவி அவள் ரூமில் அமர்ந்திருந்தாள். இன்று மாதவிக்கும் இளஞ்செழியனுக்கும் நிச்சயதார்த்தம்.
கல்யாணத்தைத் தங்கள் பொறுப்பில் கருணாகரன் எடுத்துக் கொண்டதால் உமாசங்கர் நிச்சயதார்த்தத்தைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.
கல்யாண வேலைகளையும் தாங்களே பார்த்துக் கொள்வதாக உமாசங்கர் எவ்வளவு சொல்லியும் கருணாகரன் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவர்களின் ஜனக்கட்டு அப்படி. நிறையப் பேர் வருவார்கள் என்பதால் பெண் வீட்டாருக்குச் சிரமம் கொடுக்க கருணாகரன் விரும்பவில்லை.
நிச்சயதார்த்தத்தைக் கொஞ்சம் பெரிதாக நடத்தவே திட்டம் போட்டிருந்தார் உமாசங்கர். கருணாகரனின் செல்வச் செழிப்பு நன்கு தெரிந்திருந்ததால் அவர்களுக்கு எந்த மனக்குறையும் வராமல் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார்கள் பெண் வீட்டார்.
அருணின் படிப்பிற்காக எவ்வளவு செலவழித்தார்களோ அதேயளவு மாதவிக்காகவும் சேமித்து வைத்ததால் பெரிதாக எந்தப் பணத்தட்டுப்பாடும் வரவில்லை.
உமாசங்கர் பாங்கில் வேலை செய்வதால் கொஞ்சம் பெரிய தொகையாக லோன் போட்டு மாதவிக்கு இன்னும் கொஞ்சம் நகைகள் வாங்கிக் கொண்டார்கள்.
பெட்டியில் எல்லாம் வைத்தாகிவிட்டதா என்று இன்னுமொரு முறை சரிபார்த்துக் கொண்டாள் மாதவி.
“மாதவி, எல்லாம் ரெடியா? இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பணும்.”
“எல்லாம் ரெடிம்மா.”
“நகைகளைப் பத்திரமா எடுத்து வெச்சிருக்கியா?”
“ம்… பத்திரமா இருக்கு.”
“சரி… நான் எல்லாரையும் கிளப்பிட்டு வந்தர்றேன்.” அமுதவல்லி நகர மாதவி கப்போர்ட்டைப் பூட்டுவதற்காக எழுந்தாள். முன் வரிசையில் இருந்த புடவைகளில் ஒன்று அவளைப் பார்த்துச் சிரித்தது.
அன்று ஜவுளி எடுக்கப் போனபோது அவளுக்காக அவன் ஸ்பெஷலாக வாங்கிய புடவை அது. மெல்லிய ஷிஃபான் சேலை. இளமஞ்சள் நிறத்தில் இருந்தது. அதை உடுத்துவதும் ஒன்றுதான் உடுத்தாமல் இருப்பதும் ஒன்றுதான். மாதவி விதிர்விதிர்த்துப் போனாள்.
ஆனால் டாக்டர் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. கூடவந்திருந்த எல்லோரும் வாயைப் பிளந்த போதும் அவன் யாரையும் பொருட்படுத்தாமல் சேலையைத் தெரிவு செய்திருந்தான். எல்லோரும் சட்டென்று நகர்ந்து விட்டார்கள். தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் அதற்கு முன்பே தெரிவு செய்து விட்டதால் இவர்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணட்டும் என்று நினைத்திருப்பார்கள் போலும்.
‘ஐயோ! மானம் போகுது. இதை யாரு உடுத்துவாங்க?’
‘ஏன் மாதவி? நீதான் உடுத்தப் போறே.’
‘இதை எப்படி உடுத்துறது?’
‘ஏன்? உனக்குப் புடவை கட்டத் தெரியாதா?’
‘ஐயோ அது இல்லைங்க! இது ரொம்ப மெல்லிசா இருக்கே?’
‘அதான் அதை செலெக்ட் பண்ணினேன்.’ இளஞ்செழியன் சாதாரணமாகச் சொல்லவும் மாதவி திடுக்கிட்டுப் போனாள். ஆனால் அவன் எதுவும் அறியாதவன் போல சும்மா உட்கார்ந்திருந்தான்.
‘டாக்டர்! நீங்க வரவர ரொம்பவே கெட்டுப்‌ போனீங்க.’
‘அடிப்போடீ… என்னோட வயசுக்கு நான் பின்ன பாப்பா மாதிரியா இருக்க முடியும். கல்யாணம் முடியட்டும், நான் எத்தனை கெட்டவன்னு உனக்குக் காட்டுறேன்.’ அதற்கு மேல் மாதவி அங்கு நிற்கவில்லை, ஓடிவிட்டாள்.
அன்று இரவும் அவள் தொலைபேசியில் பேசும் போது ஏதோ பேச்சுவாக்கில் அவனை அத்தான் என்று சொல்லிவிட்டாள் என்று மீண்டும் சுவரேறிக் குதித்து வந்துவிட்டான். அதுவும் அன்று அவன் வாங்கிக் கொடுத்த இளமஞ்சள் நிற ஷிஃபானைக் கட்டிக்கொண்டுதான் வரவேண்டும் என்ற கட்டளையோடு.
வீட்டின் கிணற்றடிக்குப் போவதற்கு புதுப்புடவை கட்டிக்கொண்டு போனது அவளாகத்தான் இருக்கும்! அந்தப் புடவையில் அவளைப் பார்த்த டாக்டருக்குக் கிறுக்குத்தான் பிடித்துவிட்டது போலும். யாருக்கும் தெரியாமல் அவனை ஏறக்கட்டி அனுப்பி வைத்துவிட்டு வீட்டினுள் வந்த போதுதான் நிம்மதியாக மூச்சு விட்டாள் மாதவி.
‘இந்த மனிதரைக் கல்யாணத்திற்குப் பிறகு எப்படிச் சமாளிக்கப் போகிறோம்!’
“மாதவி! கிளம்பலாமா?” பெருத்த யோசனையோடு நின்றிருந்த மகளைக் கலைத்தது அம்மாவின் குரல்.
“இதோ கிளம்பலாம்மா.”
அமுதவல்லியின் பெரியம்மா முறைக்காரப் பெண்மணி ஒருவர் ஆரத்தி எடுக்க மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள் மாதவி. நல்லப் பெரிய மண்டபமாகத்தான் பிடித்திருந்தார் உமாசங்கர்.
கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டிருந்தாலும் கருணாகரன் முகத்தில் தெரிந்த சின்னதொரு அதிருப்தி பெண்வீட்டாருக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.
அதற்குக் காரணமும் இல்லாமற் போகவில்லை. கருணாகரனோடு தொழில் மூலம் தொடர்பு கொண்டிருந்த பலர் அவரோடு சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பிரியப் பட்டிருந்தார்களாம். பையன் வேறு பெரிய டாக்டர் என்பதால் பல சம்பந்தங்கள் வந்திருக்கும் போலும். ஆனால் டாக்டர் தான் எதற்கும் பிடிகுடுக்க மறுத்து விட்டாராம். பாங்கில் குணசீலன் உமாசங்கரிடம் சொன்ன தகவல்கள் இது. அதில் உமாசங்கருக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் என்றாலும், அமுதவல்லி எதையும் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு என் மகளுக்குக் கல்யாணம் நடந்தால் போதும் என்பது போல இலகுவாக எல்லாவற்றிலும் பங்கெடுத்துக் கொண்டார். அருணும் பட்டும் படாமலும் தான் நடமாடிக் கொண்டிருந்தான். இந்தப் பெண்கள் மட்டும் எப்படித்தான் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு எல்லோரோடும் பொருந்திப் போகிறார்களோ!
மாதவி வாகனத்திலிருந்து இறங்க மாப்பிள்ளை வீட்டார் வந்து ஆரத்தி எடுத்தார்கள். அந்த விஷயத்தில் எல்லாம் கற்பகத்தை மெச்சத்தான் வேண்டும். எந்தவித பந்தாவும் காட்டாமல், மாப்பிள்ளையின் அம்மா என்று குற்றம் குறை கூறாமல் பெண் வீட்டாரைத் தாங்கிக் கொண்டார்.
மாதவி மண்டபத்திற்குள் நுழையும் போதே ஒரு பக்கத்தில் இருந்து பெருங்குரலெடுத்துச் சிரிக்கும் சத்தம் கேட்டது. வேறு யார்?! டாக்டர் தான். தன் நண்பர் பட்டாளத்தோடு உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
“மச்சான்! பொண்ணு வந்தாச்சு. வா வா, வந்து இன்ட்ரடியூஸ் பண்ணு.” நண்பர்களின் சேட்டை ஆரம்பமானது.
“ஆமாம்பா… நம்ம சாமியையே ஆசாமி ஆக்கின பொண்ணு யாருன்னு நாங்களும் பார்க்க வேணாமா? இளங்கோ மட்டும் தான் பார்த்திருக்கான்.”
“சரி சரி… இதோ…” என்று சொன்ன இளஞ்செழியன் மாதவியிடம் போய் அவளைக் கையோடு அழைத்து வந்தான்.
“மாதவி, மீட் மை ஃப்ரெண்ட்ஸ்…” டாக்டர் அறிமுகப்படுத்த, ஒரு இளநகையோடு ‘ஹாய்’ சொன்னாள் பெண். சில பல ‘ஹாய்’ களுக்குப் பிறகு அந்த இடமே கலகலப்பாகிப் போனது. இன்று இளங்கோவும் எல்லோருடனும் சேர்ந்து ஜோடியைக் கலாய்க்கத் தொடங்கிவிட்டான்.
“ஏம்மா மாதவி… எங்க மச்சான் சாமியார் மாதிரி இருந்தான். என்னம்மா பண்ணின அவனை? இந்த ரேன்ஜுக்கு மாறிட்டான்?”
“அப்படிக் கேளு இளங்கோ. ஏன்டா செழியா… ஹாஸ்பிடலே கதின்னு கிடக்குறியாம்? உண்மையாவா?”
“அதுமட்டுமில்லைடா… நல்லா ஹை ஜம்ப் எல்லாம் பண்ணுறானாம். சுவரேறிக் குதிக்கிறதுல ஐயா இப்போ படு எக்ஸ்பர்ட்டாம்.”
“ஆமா ஆமா…” எல்லோரும் கூடி நின்று கைகொட்டிச் சிரிக்க, மாதவி வெட்கிப் போய்த் தலையைக் குனிந்து கொண்டாள். இந்த மனிதர் இதையெல்லாமா வெட்கம் கெட்டுப்போய் தன் நண்பர்களிடம் சொல்லுவார்?!
“நான் யார்க்கிட்டயும் எதுவும் சொல்லலை மாதவி. இது இளங்கோ வேலை. சொல்லாதடா சொல்லாதடான்னு எவ்வளவோ சொன்னேன். பயல் கேக்கலை. என்னை என்னப் பண்ணச் சொல்லுறே?” மாதவியின் காதில் அவள் மனதைப் படித்தாற் போல மெதுவாக இளஞ்செழியன் முணுமுணுக்க அதற்கும் ‘ஹோ’ வென்ற ஆர்ப்பாட்டம்.
“என்னடா மச்சான்? கல்யாணமே இன்னும் ஆகலை, அதுக்குள்ள இப்போவே விளக்கம் சொல்ல ஆரம்பிச்சுட்டியா? யாரை நம்பினாலும் இந்தச் சாமியார் பசங்களை மட்டும் நம்பக் கூடாதுப்பா. லேசுல விழ மாட்டாங்க. அப்படியே விழுந்தாலும் சாஷ்டாங்கமா விழுந்திடறாங்கப்பா!”
“ஹா…‌ ஹா…” அந்த இடமே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. பேச்சு இன்னும் எல்லை மீறிப் போக மாதவி சங்கடமாக உணர்ந்தாள். அவள் லேசாக நெளிவதை செழியனும் உணர்ந்து கொண்டவன் போல ஆதரவாக அவள் தோளைத் தழுவிக் கொண்டான்.
“இந்த மாதிரி  சந்தோஷம் எல்லாம் லைஃப்ல எப்பவும் வராது மாதவி. அது வர்றப்ப அதை அனுபவிக்கணும். இப்போ எதுக்கு அன் ஈஸியா ஃபீல் பண்ணுறே… ம்?” செழியன் இயல்பாகக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தார் கற்பகம்.
“என்னப்பா இளங்கோ? ஃப்ரெண்ட்ஸுங்க எல்லாருமாச் சேர்ந்து என்னோட மருமகளைக் கலாய்க்குறீங்களா?”
“ஐயையோ ஆன்ட்டி… உங்க மகன்தான் குப்புற விழுந்துட்டான்னா நீங்களுமா?” கற்பகத்தையும் விடாமல் அவர்கள் வம்புக்கிழுக்க அவருமே சிரித்துவிட்டார்.
“அடப் போங்கப்பா! நீ வா மாதவி நேரமாகுது. இவனுங்க செட் சேர்ந்தாலே இப்படித்தான். நம்மளை ஒரு வழி பண்ணிடுவானுங்க.” மாதவியை அழைத்துக்கொண்டு வந்த கற்பகம் மணப்பெண்ணுக்கான அறைக்குள் அவளை அழைத்து வந்தார். அர்ச்சனா அங்கேதான் நின்றிருந்தாள்.
“வாங்க அண்ணி. உங்களுக்காகத்தான் இவங்க வெயிட் பண்ணுறாங்க.” அவள் அருகில் நின்றிருந்த ப்யூட்டி பார்லர் பெண்களை அறிமுகப்படுத்த மாதவியும் புன்னகைத்தாள்.
“நேரமாச்சு… சீக்கிரமா ஆரம்பிங்க. இங்கப்பாருங்கம்மா… மேக்கப் பண்ணுறோம்னு நிறைய முகத்துல அப்பி விட்டுடாதீங்க. எம்மருமக ஏற்கனவே இதெல்லாம் போடாமலேயே அழகுதான். அதால லைட்டாப் பண்ணினாப் போதும் என்ன?” இது கற்பகம்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேம்மா. நீங்க போய் வந்தவங்களைக் கவனிங்க.” அர்ச்சனா அம்மாவை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.
“சித்ரா நீ எங்கூட வாம்மா.” கற்பகம் அழைத்த பின்புதான் அந்தப் பெண்ணை மாதவி கவனித்தாள். இதுவரை அவளும் பியூட்டி பார்லரிலிருந்து வந்த பெண்தான் போலும் என்று நினைத்திருந்தாள். அந்தப் பெண் தன்னைப் பார்த்த பார்வையில் அத்தனை ஸ்நேக பாவம் இருந்தாற் போல மாதவிக்குத் தோன்றவில்லை.
“அர்ச்சனா… யாரு அவங்க?”
“யாரு சித்ராவா? அவளை உங்களுக்கு நான் இன்ட்ரடியூஸ் பண்ணலை பாருங்களேன். விஜயலக்ஷ்மி அத்தையோட பொண்ணு அவ. பெயர் சித்ரா. எக்ஸாம் இருந்ததால அவளால இப்போதான் வர முடிஞ்சுது. லேட் ஆகுது அண்ணி, ஆரம்பிக்கலாமா?”
“ம்…” அதன்பிறகு எல்லாம் மடமடவென நடந்து முடிந்தது. ஒப்பனை பண்ணியதே தெரியாத அளவிற்கு மாதவிக்கு முழு அலங்காரம் பண்ணி இருந்தார்கள் பெண்கள். ‘கொஞ்சம் சாதாரண குடும்பத்தில் பெண் எடுத்திருக்கிறாரே கருணாகரன்’ என்ற சுற்றத்தின் வம்புப் பேச்சு மாதவியின் அழகைப் பார்த்த போது தானாக அடங்கிப்போனது.
செழியனும் பட்டு வேஷ்டி சட்டை என அமர்க்களமாகத்தான் அமர்ந்திருந்தான். நண்பர்கள் புடைசூழ அவன் அட்டகாசம் பலமாகத்தான் இருந்தது. கற்பகத்தின் முகத்திலும் அவ்வளவு மலர்ச்சி, மகன் ஆசைப்பட்ட வாழ்க்கை இத்தனை தடங்கல்களுக்குப் பிறகு அவனுக்குக் கைகூடி விட்டதே என்று.
அர்ச்சனாவும் சந்தோஷமாகத்தான் நடமாடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் நண்பிகள் யாரையும் நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கக்கூடாது என்று அம்மா ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருந்ததால் அருண் கொஞ்சம் நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தான்.
விஜயலக்ஷ்மியும் பரமசிவமும் ஏதோ தங்கள் வீட்டு விசேஷம் போல தம்பி வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். வீட்டில் முதல் விசேஷம் என்பதால் கற்பகத்திற்கும் கருணாகரனிற்கும் அந்த மூத்த தம்பதிகளின் வழிநடத்தல் பெரும் உதவியாக இருந்தது.
சடங்குகள் சம்பிரதாயங்கள் என அனைத்தும் நிறைவு பெற மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் தட்டை மாற்றிக் கொண்டார்கள். அந்த நிகழ்வும் நிறைவு பெற வந்திருந்தவர்கள் அனைவருக்கும் தரமான விருந்தொன்று வைத்திருந்தார் உமாசங்கர்.
மாப்பிள்ளையையும் பெண்ணையும் அருகருகே அமர்த்தி அர்ச்சனா பரிபாறிக் கொண்டிருந்தாள். இளவட்டங்கள் சேர்ந்து தம்பதிகளைக் கேலி பண்ண அந்த இடமே சிரிப்பொலியாக இருந்தது.
அருணுக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது. தான் காலேஜில் பார்த்த திமிர் பிடித்த அந்தப் பெண்தானா இவள்!? எந்தவொரு மனக்கசப்பும் இல்லாமல் இவளால் எப்படி இப்படி மாதவியோடு நட்புக் கொண்டாட முடிகிறது? தனக்கு மட்டும் ஏன் இளஞ்செழியனை இன்னும் மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை? ஒருவேளை இவள் கொஞ்சம் நல்ல பெண் தானோ? நாம் தான் அவளைச் சீண்டிச் சீண்டி சீற வைத்துவிட்டோமோ? தலையைப் பிடித்துக்கொண்டான் அருண்.
“அருண்… என்னடா ஆச்சு?” அமுதவல்லி வந்து நிற்கவும் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு தன் மனதில் இருந்ததை மெதுவாக அம்மாவின் காதில் போட்டான் மகன்.
“எனக்கும் அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுன்னு தான் தோணுதுடா. இல்லைன்னா இவ்வளவு நேரத்துக்கு எத்தனை நாத்தானார் பந்தா காட்டியிருக்க முடியும்? ஆனா எவ்வளவு பிரியமா மாதவிக்கு எல்லாம் பார்த்துப் பார்த்துப் பண்ணுது. எனக்கு மனசு நிறைஞ்சிருக்குடா அருண். மாமியார் நல்லமாதிரியாத்தான் இருக்காங்க. எங்க இந்தப் பொண்ணால மாதவிக்கு ஏதாவது சிக்கல் வருமோன்னு நினைச்சேன். இப்போ அந்தக் கவலையும் எனக்கில்லைடா.” அம்மாவின் அனுபவம் அருணைச் சிந்திக்க வைத்திருந்தது.
விருந்து முடிந்த கையோடு வந்திருந்த விருந்தினர்கள் மெதுவாகக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். இளையவர்கள் பெரியவர்கள் என இரு குடும்பத்திற்கும் வேண்டப்பட்டவர்கள் மட்டுமே மண்டபத்தில் எஞ்சி இருந்தார்கள்.
இளையவர்களால் இனிதாகப் பாட்டுக் கச்சேரி ஒன்று ஆரம்பமானது. சித்ராதான் அதை ஆரம்பித்து வைத்தாள். பெரியவர்கள் கூட சந்தோஷமாக அந்த இடத்தில் கூடி விட்டார்கள். சினிமாப் பாடல்கள் மண்டபத்தை நிரப்பியது.
“மாதவி… சித்ரா நல்லாப் பாடுவா. நாங்கெல்லாம் அவளைச் சின்னக்குயில் சித்ரான்னு தான் கேலியே பண்ணுவோம். நல்லாப் பேசுவா.” இது செழியன்.
“ஆனா எங்கூடப் பேசலியே?”
“அப்படியா? இதென்ன ஆச்சரியமா இருக்கு? சித்ராவாவது பேசாம இருக்கிறதாவது!” செழியன் சத்தமாகச் சிரிக்க எல்லோர் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியது.
“என்ன அத்தான்? நீங்க பாட்டுக்குத் தனியாச் சிரிக்கிறீங்க?”
“ஏம்மா சித்ரா? உங்கத்தான் எப்பப்பாரு உன்னோடவும் அர்ச்சனா கூடவும் சிரிச்சிக்கிட்டு இருக்க முடியுமா? அதுக்குத்தான் இப்போ செழியனுக்குன்னு ஆள் வந்திடுச்சில்லை.” சித்ரா கேட்ட கேள்விக்கு உறவுக்காரப் பெண்ணொருவர் பதில் கொடுத்திருந்தார்.
“சரிசரி… சிரிச்சது போதும். உங்க மாதவியை இப்போப் பாடச் சொல்லுங்க.” சொன்ன சித்ராவின் குரல் செழியனுக்கு அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை.
“என்னம்மா சித்ரா? உங்கத்தான் உன்னை விட்டுட்டு மாதவியைக் கல்யாணம் பண்ணப்போறானேங்கிற கோபத்துல இருக்கியோ?” இன்னொரு பெண்மணி சீண்ட இப்போது மாதவி திடுக்கிட்டுப் போய் செழியனைப் பார்த்தாள்.
“ஏய்! அவங்க ஏதோ விளையாட்டுக்குச் சொல்றாங்கன்னா நீ எதுக்கு இப்படிப் பார்க்குறே?” அவன் இலகுவாகச் சொன்னபோதும் மாதவிக்கு சித்ராவின் நடவடிக்கைகளில் நிறையவே வித்தியாசம் தெரிந்தது.
புதிதாகத் தங்கள் குடும்பத்தில் ஒரு கல்யாணம் நடக்கும்போது மணப்பெண்ணிடம் எல்லோரும் ஆசையாகப் பேசுவதுதானே வழக்கம். ஆனால் சித்ரா தன்னைத் தவிர்ப்பது போலவே உணர்ந்தாள். விஜயலக்ஷ்மி அத்தையிடம் இருந்த இதத்தை சித்ராவிடம் தேடிச் சற்றுத் தோர்த்துப் போனாள் மாதவி.
“மாதவி… அதான் சொல்றாங்க இல்லை, நீ பாடு.” அமுதவல்லி மகளிடம் சொல்லவும் செழியன் மாதவியை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“மாதவி… நீ பாடுவியா?”
“ஆமா மாப்பிள்ளை… ரொம்ப இல்லைன்னாலும் சுமாராப் பாடுவா. நீங்க தைரியமாகப் பாடச் சொல்லுங்க.” அமுதவல்லிக்கு அப்போது என்ன தோன்றியதோ… மாதவியைப் பாட வைப்பதிலேயே குறியாக இருந்தார்.
“ஏம்மா…” என்பது போல மாதவி பார்க்க அமுதவல்லியின் கண்கள் மகளைத் தீர்க்கமாகப் பார்த்தது. அத்தனை பேரின் பார்வையும் தன்னை நோக்கித் திரும்ப மாதவி சற்றுச் சங்கடமாக செழியனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கை அவள் விரல்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டது. கண்கள் ‘பாடு’ என்று அவளை இறைஞ்ச, மாதவியின் குரல் திருநாவுக்கரசர் பெருமானின் வரிகளில் கரைந்தது.
‘முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்…’ என்ற பாடலை செழியனின் முகம் பார்த்து அவள் பாட அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள். இதுவரைக்கும் அங்கே சினிமாப் பாடல்கள் தான் ஜோராக ஒலித்துக் கொண்டிருந்தது. திடீரென்று பக்தி மணம் கமழவும் பெரியவர்கள் லயித்துப் போனார்கள்.
ஒரு பெண் கடவுள் மீது வைத்த தீராத காதலை, பக்தியை நாவுக்கரசரின் வரிகளில் தன் தலைவனுக்காகப் பாடிக் கொண்டிருந்தாள் மாதவி. செழியனின் உள்ளும் புறமும் சிலிர்த்தது.
இதுவரை மாதவி மீது அவன்தான் காதலைக் கொட்டி இருக்கிறான். சொல்லப்போனால் ஒரு சில சமயங்களில் அவள் மீது தன் நேசத்தைத் திணிக்கின்றோமோ என்று கூட செழியன் நினைத்ததுண்டு. ஆனால் இப்படியொரு சரணாகதியை அவன் என்றும் எதிர்பார்த்ததில்லை.
‘முதலில் அவனுடைய பெயரைக் கேட்டாள், குணநலன்களைக் கேட்டாள், இருக்கும் இடத்தைக் கேட்டாள். இவையெல்லாம் கேட்டு அவன் மேல் பைத்தியம் ஆகிப்போனாள் அந்தப் பெண். பெற்றவரை விட்டு விலகினாள், பழக்க வழக்கங்களை மறந்தாள், தன்னையும் மறந்து தன் பெயரையும் மறந்து, அவன் பாதங்களைச் சரணம் அடைந்தாள்.’
பாடலை மாதவி பாடி முடித்தபோது கருணாகரனே சட்டென்று மாதவியைத் திரும்பிப் பார்த்தார். அவர் கண்களில் ஒரு திருப்தி தெரிந்தது. விஜயலக்ஷ்மி ஓடிவந்து மாதவியின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.
“கருணாகரா! சாதாரண குடும்பத்துல பொண்ணு எடுத்திருக்கியேன்னு நினைச்சேன்… ஆனா ஏன்னு இப்போ தானே புரியுது. சும்மா சொல்லக்கூடாது, நீ கெட்டிக்காரன் தான்.” வயதில் மூத்தவர் ஒருவர் சொல்லவும் அமுதவல்லியின் முகம் மலர்ந்து விகசித்தது.
ஆனால் இது எதையும் உணரும் நிலையில் செழியன் இல்லை. பித்துப் பிடித்தவன் போல அமர்ந்திருந்தான். சித்ராவின் முகம் தொங்கிப் போனதை மாதவி கவனிக்கத் தவறவில்லை.
மாப்பிள்ளை வீட்டார் அத்தனை பேரும் மண்டபத்தை விட்டுக் கிளம்ப ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மாதவி இன்னும் அலங்காரங்கள் எதையும் கலைக்கவில்லை. மாப்பிள்ளை வீட்டார் கிளம்பும் வரை அப்படியேதான் இருக்க வேண்டும் என்று அம்மா சொல்லிவிட்டார்.
ஒவ்வொருவராக வண்டியில் ஏறிக்கொண்டிருக்க மாதவியிடம் கண்களாலேயே விடைபெற்ற செழியன் அருணிடம் வந்து நின்றான். மாதவி வீட்டாருக்குக் கொஞ்சம் திக்கென்றது.
“அருண்… நீ எங்கூடப் பேசவே மாட்டியா?”
“…………..” இப்போது அருணின் நிலைமை தர்மசங்கடமாகிப் போனது.
“எங்கம்மாக்கிட்ட அவ்வளவு இயல்பாப் பேசுறே. ஏன் என்னை மட்டும் இன்னும் ஒதுக்கி வெக்குறே? இன்னும் உன்னால என்னைப் புரிஞ்சுக்க முடியலையா?”
“இல்லை… அது…” அருணுக்கு என்னப் பேசுவதென்று புரியவில்லை. பேசக்கூடாது என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.
“பரவாயில்லை விடு… உனக்குன்னு ஒரு பொண்ணு நாளைக்கு வரும்போது உன்னால என்னைப் புரிஞ்சிக்க முடியும். அது வரைக்கும் நான் காத்திருக்கேன்.” செழியன் படு சீரியஸாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அருண் வாயைத் திறந்தான்.
“நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சு…” இவன் என்ன சொல்ல வருகிறான் என்று செழியன் ஆவலாகப் பார்க்க அருண் தொடர்ந்தான்.
“வீட்டுக்கு வர்றதா இருந்தா இப்போ நேராவே வரலாம். இப்படி… சுவரேறிக் குதிக்கிறது… நல்லா இல்லை.” அருண் குறும்பாகச் சொல்லிவிட்டு அமைதியாக நிற்க செழியனுக்கு மைத்துனனின் வார்த்தைகள் புரியச் சற்று நேரமானது. சட்டென்று அருணை ஆரத் தழுவிக் கொண்டவன்,
“டேய்! உங்கக்கா என்னைப் பைத்தியம் ஆக்குறாடா. எங்கம்மாக்கிட்ட இதைச் சொன்னா என்னை முறைக்குறாங்க, சிரிக்குறாங்க. லூசு மாதிரி ஆகிட்டேன்டா. என்னை லூசாக்கிட்டு நான் பிச்சி ஆனேன்னு இன்னைக்குப் பாட்டு வேற  பாடுறா.” அந்தப் பிரபல மருத்துவன் புலம்பவும் அருண் சிரித்துக் கொண்டான்.
“ஆனா ஒன்னுடா அருண்! ஒரேயொரு தடவை இன்னைக்கு மட்டும் சுவரேறிக் குதிக்க பர்மிஷன் குடு. செம த்ரில்லா இருக்குடா.” சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தவன் அந்த ப்ளாக் ஆடியில் ஏறிப் போய்விட்டான்.
0-0-0-0
மாதவி அந்த கும்மிருட்டில் மெதுவாகப் பதுங்கிப் பதுங்கிக் கொல்லைப்புறத்திற்கு வந்தாள். எப்போதும் போல அந்தத் தென்னை மரத்தில் சாய்ந்து நின்றிருந்தான் இளஞ்செழியன். தெருவிளக்கின் மெர்க்குரி ஒளி மங்கலாக அவன் மீது விழுந்திருந்தது.
எப்போதும் கண்ணியம் காப்பவன் அன்று அந்த எண்ணத்தில் இல்லை போலும்! மாதவியைத் தன்னருகே இழுத்து அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்து கொண்டிருந்தான்.
“எ… என்ன… இது?” மாதவி திணறிப் போனாள்.
“அதான் ஊரைக் கூட்டி நிச்சயதார்த்தமே முடிஞ்சாச்சே. இனியென்ன?”
“அதுக்காக… டாக்டர்…”
“என்ன சொன்ன? டாக்டரா? சொல்லச் சொல்லக் கேக்காம என்னை டாக்டர்னு சொல்லுற வாய்க்கு தண்டனை குடுக்க வேணாமா?” சரசமாகக் கேட்டவன் அவள் இதழ்களை மூடினான்.
மாதவிக்கு உலகமே சுற்றியது. நடப்பை உணர்ந்து கொள்ளவே அவளுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டது. திடுக்கிட்டு விலகப் போனாள். ஆனால்…‌ அவன் விட்டால்தானே!
அந்த நொடிகளில் இருவரும் உலகை மறந்து கரைந்து நின்றிருந்தார்கள். அவள் கன்னத்தில் தன் இதழ்களைப் புதைத்தவன்,
“இன்னொரு தரம் டாக்டர்னு கூப்பிடு மாதவி.” என்றான் அவளைச் சீண்டுவது போல. குரல் குழைந்திருந்தது.
“ஏன் மாதவி? நீ இவ்வளவு இனிப்பானவளா?” அவன் குறுஞ்சிரிப்போடு கேட்க அவன் மார்பிற்குள் புகுந்து கொண்டாள் பெண்.
“ப்ளீஸ்… இன்னொரு தரம் டாக்டர்னு கூப்பிடேன்.” அவன் வேண்டுமென்றே அவளைக் கலாய்த்தான்.
“நான் போகட்டுமா?”
“ஏன்? இப்போ தானே வந்த?”
“இல்லை…” அவள் வெட்கப்படவும் அவள் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தான் இளஞ்செழியன்.
“ஏய்! நான் சும்மா விளையாட்டுக்கு அப்படிச் சொன்னேன்.‌ ஆமா… என்னமாப் பாடுற மாதவி! நீ இவ்வளவு அருமையாப் பாடுவேன்னு எனக்குத் தெரியாதே!”
“சின்ன வயசுல இருந்தே சுமாராப் பாடுவேன். அம்மாதான் என்கரேஜ் பண்ணுவாங்க. ஸ்கூல்லயும் கத்துக்கிட்டேன்.”
“ஓ… தொடர்ந்து கத்துக்கோ மாதவி. நல்ல வாய்ஸ் உனக்கு.”
“ட்யூட்டிக்குப் போறதுக்கே நேரம் சரியா இருக்கு. இதுல எங்கங்க பாட்டுக் கத்துக்க நேரம் இருக்கு?”
“கத்துக்கணும்னு நெனைச்சாக் கத்துக்கலாம். ஆனா இப்போ வேணாம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இப்போ மாதவியோட நேரம் முழுசா எனக்குத்தான், ஓகே?”
“ம்… ஏங்க?”
“சொல்லுங்க.” அவன் சிரித்தான்.
“கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்குப் போகலாமில்லை?” அவள் கேட்கவும் ஆச்சரியமாகப் பார்த்தான் செழியன்.
“என்ன கேள்வி மாதவி இது? வேலைக்குப் போகாம என்ன பண்ணப் போற நீ?”
“இல்லை…‌ அத்தை ஓகே… மாமாதான்…”
“மாமாக்கு என்ன?”
“இல்லை… எங்கிட்ட இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசலை…”
“அதெல்லாம் பேசுவார் மாதவி, அவசரப்படாத.”
“ஏங்க?? மாமாக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைல்ல?”
“அப்படியில்லைம்மா…” அவன் ஏதோ சொல்லிச் சமாளிக்கப் போக மாதவி புன்னகைத்தாள்.
“புரியுதுங்க… அவங்க பையனுக்குப் பெரிய இடத்துல பொண்ணு பார்க்கணும்னு அவங்க நினைச்சிருப்பாங்க. நீங்கதான் எல்லாத்தையும் கெடுத்துட்டீங்க.”
“ம்ப்ச்… மாதவி…”
“இதையெல்லாம் யோசிச்சுட்டுத்தான் ஆரம்பத்துலேயே நான் விலகி விலகிப் போனேன்.”
“இப்போ அந்தப் பழங்கதை எதுக்கு மாதவி? நான் நல்ல மூடுல இருக்கேன். ப்ளீஸ்… வேற ஏதாவது பேசு.” சிடுசிடுத்தான் இளஞ்செழியன்.
“இன்னைக்கு அருண் கிட்டப் பேசினீங்களா?”
“ம்… நம்ம மச்சினன் செம வெவரந்தான்.”
“ஏன்? அப்படி என்ன சொன்னான்?”
“வீட்டுக்கு நேரா வாங்க, இனி சுவரேறிக் குதிக்கத் தேவையில்லைன்னு சொன்னான்.”
“என்ன?!” மாதவி அதிர்ந்து போய் நிற்க செழியன் கடகடவெனச் சிரித்தான்.
“ஐயோ! எதுக்கு இப்போ இத்தனை சத்தமாச் சிரிக்கிறீங்க? அவன் எந்திரிச்சு வர்றதுக்கா?” செழியனின் வாயை மூடினாள் மாதவி.
“ஏய்! இன்னைக்கு இங்க வர்றதுக்கு அவங்கிட்டப் பர்மிஷன் வாங்கிட்டேன். சோ… டோன்ட் வொர்ரி.”
“அட ஆண்டவா! இதையுமா அருண்கிட்டச் சொன்னீங்க?”
“அடியேய்! அவன் என்னோட மச்சினன்டீ… அவங்கிட்டச் சொல்லாம வேற யாருக்கிட்டச் சொல்லச் சொல்லுற?”
“ஐயையோ! அருண் என்னைப் பத்தி என்ன நினைப்பான்? அந்த மனுஷன் தான் வெவஸ்தை கெட்டுப் போய் கூப்பிடுறார்னா இவளும் வெக்கம் கெட்டுப் போய் போறாளேன்னு நினைச்சிருப்பான்.”
“அடிங்… ராஸ்கல். யாருக்கு வெவஸ்தை கெட்டுப் போச்சு?”
“ஏன் உங்களுக்குத் தான். இல்லைன்னா அர்த்த ராத்திரியில சுவரேறிக் குதிப்பீங்களா?” அவள் வாய் பொத்திக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
“வேணாம் மாதவி… வம்பு பண்ணாத… இந்தச் சிரிப்பை முதல்ல நிப்பாட்டு.”
“பின்ன… ஒரு டாக்டர் பண்ணுற வேலையா இது? சுவரேறிக் குதிச்சு…” முழுதாக முடிக்காமல் மாதவி பொங்கிப் பொங்கிச் சிரிக்க செழியனுக்கு வெட்கமாகிப் போனது.
“உன்னை…” அவள் சிரிப்பை அவன் நிறுத்திய போது மாதவி மயங்கிப் போனாள்.
அந்த ராஜ சுகத்தில் இருவரும் உலகை மறந்து போனார்கள்.