Oviyam 17

Oviyam 17

ஒரு மாதம் கடந்து போயிருந்தது. செழியனுக்கும் மாதவிக்கும் வாழ்க்கை வழமைக்குத் திரும்பி இருந்தது. இயல்பாகவே செழியனின் வீட்டில் தன்னைப் பொருத்திக் கொண்டாள் மாதவி.

இனிக்க இனிக்கத் தேன் நிலவைக் கொண்டாடி விட்டுத்தான் வண்டி பெரியாரிலிருந்து கிளம்பி இருந்தான் இளஞ்செழியன். ஹாஸ்பிடலில் தேடுவார்களோ என்ற கவலையைத் தவிர மாதவிக்கு வேறெதுவும் நினைவில் இருக்கவில்லை. சமயத்தில் அதைக் கூட மறக்கச் செய்திருந்தான் கணவன்.

இத்தனைக் காலமும் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல் என்று வாழ்நாளைக் கழித்த நானா இப்படியெல்லாம் உருகி உருகிக் காதலிக்கிறேன் என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான் செழியன். ரிசப்ஷனும் வெகு விமரிசையாக நடந்தேறியது. ஆனால் சித்ரா தான் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

இருவரும் வேலைக்குப் போக ஆரம்பித்திருந்ததால் மருமகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கிக் கொண்டார் கற்பகம். அர்ச்சனாவும் அண்ணி அண்ணி என்று மாதவியோடு நன்றாக ஒட்டிக் கொண்டாள். கருணாகரன் மட்டும் தான் இன்னும் முறுக்கிக் கொண்டு திரிந்தார். அதற்காக மாதவியை ஒதுக்கி வைத்தார் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவளுக்கான மரியாதையைக் கொடுக்கத்தான் செய்தார். ஆனால், இயல்பாக இரண்டு வார்த்தைகள் அவளோடு இன்னும் பேசியிருக்கவில்லை.

மாதவி வீட்டிலும் இரண்டு நாட்கள் போய்த் தங்கிவிட்டுத்தான் வந்திருந்தார்கள் புது மணத் தம்பதியினர். வார இறுதியில் இருவரும் வீட்டில் இருக்கும் நாட்களில் ஒரு நடை மாமனார் வீட்டிற்குப் போக செழியன் தவறுவதே இல்லை.

அன்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. செழியனும் மாதவியும் வீட்டில்தான் இருந்தார்கள். மதிய உணவின் போது அத்தனை பேரும் டைனிங் டேபிளில் கூடி இருந்தார்கள்.

“என்ன செழியா… எப்போ கனடா கிளம்பப் போறே?” இயல்பாகப் பேச்சை ஆரம்பித்தார் கருணாகரன்.

“கனடாவா?” ஆச்சரியமாக மனைவி கேட்கவும் அவரைத் திரும்பிப் பார்த்தார் கருணாகரன்.

“ஓ… உனக்கும் விஷயம் தெரியாதா கற்பகம்? மூனாவது மனுஷன் சொல்லி நம்ம வீட்டு நிலவரம் தெரியவருது நமக்கு.”

“என்ன கருணா சொல்றீங்க?”

“என்னை ஏன் கேக்குறே? அங்கக் கேளு.” மகனின் புறம் கண்ணைக் காட்டிவிட்டு சாப்பாட்டில் கவனமானார் கருணாகரன். கற்பகம் மருமகளைக் கேள்வியாகப் பார்த்தார். அவளும் தலையைக் குனிந்து கொண்டாள்.

“செழியா! அப்பா என்னமோ சொல்லுறாங்களே… என்ன அது?”

“அதெல்லாம் பெருசா ஒன்னும் இல்லைம்மா.” வெகு சாதாரணமாகச் சொன்ன மகனை விழி விரித்து ஆச்சரியமாகப் பார்த்தார் கருணாகரன்.

“என்னது?! பெருசா ஒன்னும் இல்லையா? கற்பகம்… உன்னோட மகனுக்கு கனடா போறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. இந்தியால இருந்து மொத்தமா பத்து டாக்டர்ஸ் தான் போறாங்க. அதுல உம் மகனும் ஒரு ஆள். இது அவருக்குப் பெரிய விஷயமோ இல்லையோ எனக்குப் பெரிய விஷயம்.”

“அப்படியா! உண்மையாவா செழியா? எப்போக் கிளம்புறே? எவ்வளவு காலம் அங்க இருக்கணும்?”

“அது… அம்மா…”

“என்னடா மென்னு முழுங்குறே? மாதவி… நீ சொல்லும்மா?”

“அடுத்த வாரம் கிளம்பணும் அத்தை… ஒரு மாசம் அங்க தான் இருக்கணும். எல்லா நாட்டுல இருந்தும் டாக்டர்ஸ் வர்றாங்க. ரொம்ப நல்ல ஆப்பர்சூனிட்டி அத்தை.”

“அப்படியா!?” கற்பகம் திறந்த வாயை மூடாமல் டைனிங் டேபிள் செயாரில் அமர்ந்து விட்டார்.

“அண்ணா! கன்கிராட்ஸ். சூப்பர்ணா.” அர்ச்சனாவும் ஆர்ப்பரிக்க மாதவி புன்னகைத்தாள்.

“இவன் ஏம்மா இதை இத்தனை நாள் சொல்லலை?” கற்பகம் அங்கலாய்த்துக் கொள்ளவும் மாதவி அத்தையிடம் கண் ஜாடையால் செழியனைச் சுட்டிக் காட்டினாள். அப்போதுதான் மகனின் முகத்தைப் பார்த்தார் அம்மா. அங்கே மகிழ்ச்சி மிஸ்ஸிங்.

‘என்ன?’ என்பது போல மருமகளை கற்பகம் பார்க்க, ‘அப்புறமாச் சொல்லுறேன்’ என்றாள் மாதவி சமிக்ஞை மூலமாக. செழியன் அத்தோடு சாப்பாட்டை முடித்துக் கொண்டான்.

அத்தனை பேரும் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுத்திருந்த கற்பகம் மருமகளை மெதுவாக இழுத்துக் கொண்டு தங்கள் ரூமிற்கு வந்துவிட்டார்.

“என்னாச்சு மாதவி?”

“கனடா போக முடியாதாம் அத்தை.”

“ஐயோ! என்னாச்சு இவனுக்கு? ஏன் போக முடியாதாம்?” மாதவிக்கு இதற்குப் பதில் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. என்னை விட்டுப் பிரிந்து உங்கள் மகனால் இருக்க முடியாதாம் என்றா சொல்ல முடியும்? அவளின் சங்கடத்தை கற்பகம் நொடிப்பொழுதில் புரிந்து கொண்டார்.

“நீயும் கூடப் போகலாமே மாதவி?”

“அது சரியா வராது போல அத்தை. ஆர்கனைஸ் பண்ணுறவங்க ஃபாமிலிக்கெல்லாம் ஸ்பான்ஸர் பண்ண மாட்டாங்க போல.”

“அது எதுக்கு நமக்கு?”

“அப்படி இல்லை அத்தை… அவங்களே ஹோட்டல் குடுத்துருவாங்க போல. அப்படியே போனாலும் ஆளுக்கொரு இடத்துல தான் தங்கணும்.”

“ஓ…”

“ஒரு மாதம் தானே அத்தை… அதெல்லாம் கிளம்பிடுவாங்க. நான் சீஃப் கிட்டயும் எல்லா ஏற்பாடும் பண்ணச் சொல்லிட்டேன்.”

“ஆனா அவன் முகத்தைப் பார்த்தாப் போவான் போலத் தோணலையே மாதவி.”

“அதெல்லாம் போவாங்க அத்தை. எவ்வளவு பெரிய சான்ஸ்! யாராவது இதை மிஸ் பண்ணுவாங்களா?”

“அதானே!” கற்பகத்திற்கும் லேசாக வருத்தமாகத்தான் இருந்தது. மனைவி மேல் பாசம் இருப்பது நல்லதுதான். ஆனால் அதே பாசம் மகனது முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்துவிடக் கூடாதே.

எதுவாக இருந்தாலும் அவர்கள் இருவரும் பேசி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்து விட்டார் கற்பகம். தங்கள் ரூமிற்கு வந்தாள் மாதவி. கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தான் செழியன்.

“என்ன மேடம்! மாமியாருக்கு எல்லாத் தகவலும் சொல்லிட்டீங்களா?” கேலியாக அவன் கேட்க, அவன் பக்கத்தில் வேண்டுமென்றே நெருக்கிக் கொண்டு உட்கார்ந்தாள் மாதவி.

“எதுக்கு இப்போ இப்படி உரசுறீங்க? நீங்க நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது.”

“ஏங்க? என்னப் பேச்சு இது? சின்னப் பையனா நீங்க?‌ ஹாஸ்டலுக்குப் போக முடியாதுன்னு அடம்பிடிக்கிற குழந்தை மாதிரி இருக்கு உங்கப் பேச்சு.”

“மாதவி… நீ என்ன வேணும்னாலும் சொல்லு. ஆனா நான் கனடா போக மாட்டேன்.” அவன் குரலில் இருந்த பிடிவாதத்தைக் கவனித்த மாதவி அதன் பிறகு எதுவும் பேசவில்லை. அமைதியாகி விட்டாள். கட்டிலின் அந்தப் புறமாகப் போனவள் இவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

“என்ன? பேச்சைக் காணோம்?”

“…………..”

“இப்படிப் பேசாம இருந்தா நாங்க கிளம்பிப் போயிடுவோம்னு நினைச்சீங்களோ? அது நடக்காது பொண்ணே.” கறாராகச் சொன்னவன் அவளருகே நெருங்கி அவள் இடுப்பில் கையைப் போட்டுக்கொண்டு தூங்கி விட்டான்.‌ அவனிடம் அசைவு தெரியாததால் தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள் மாதவி. சீராக மூச்சு விட்ட படி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் இளஞ்செழியன்.

0-0-0-0-0-0

திங்கட்கிழமை காலை. மணி பத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது.

“எங்க மச்சான் இந்தப் பொண்ணுங்களை இன்னும் காணோம்?” ரிஸ்ட் வாட்ச்சைத் திருப்பிப் பார்த்துக்கொண்ட விஷாலின் முகத்தில் எரிச்சல் தெரிந்தது. ஒரு ப்ரொஃபெசரைப் பார்க்கக் காலேஜ் வரை வந்திருந்தார்கள். முல்லையும், காஞ்சனாவும் தாங்களும் வருவதாகச் சொல்லவும் அவர்களுக்காகக் காத்திருந்தார்கள்.

“அதான் பொண்ணுங்கன்னு சொல்லிட்டே இல்லை? அப்போ எப்படி டைமுக்கு வருவாங்க?”

“மச்சான் அங்கப்பாரு.” விஷால் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தான் அருண். அர்ச்சனா போலத் தெரிந்தது.

“யாரு அது? அர்ச்சனாவா?”

“ஆமா மச்சான். அந்தப் பையன் அன்னைக்கும் அவகிட்ட ஏதோ வம்புப் பண்ணிக்கிட்டு நின்னான். நான் பார்த்தேன். இன்னைக்கும் ஏதோ கலாட்டாப் பண்ணுறான் போல.”

“இவ வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காளா? பேசுறதுக்கு மட்டும்தான் அதை யூஸ் பண்ணுவாப் போல.” அருண் சாதாரணமாகச் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டான்.

“அருண்! இல்லைடா மச்சான். பிரச்சனைப் பண்ணுறான் போல, அங்கப்பாரு.” விஷால் சொல்லவும் மீண்டும் திரும்பிப் பார்த்த அருணின் கண்களில் நெருப்புப் பொறி பறந்தது. ஏனென்றால்… அர்ச்சனா அந்தப் பையனை ஒற்றை விரல் நீட்டி ஏதோ எச்சரித்துக் கொண்டிருக்க, அந்த விரலைப் பற்றியிருந்தான் அந்தப் பையன்.

அப்பாலிருந்த பென்ச்சுகளைத் தாவிக் கடந்த அருண் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அர்ச்சனாவிடம் போய்ச் சேர்ந்திருந்தான். விஷாலுக்கு விதிர் விதிர்த்துப் போனது.

“என்ன ஜூனியர்… பொம்பளைப் பசங்க விரலையெல்லாம் பிடிச்சுக்கிட்டு நிக்குறீங்க?” அருண் சிரிப்போடு கேட்கவும் சட்டென்று அர்ச்சனாவின் விரலை விட்டான் பையன். இருவரும் அருணிற்கு ஜூனியர் என்றாலும் அந்தப் பையன் அர்ச்சனாவிற்கு சீனியர்.

“ஒன்னும் இல்லை சீனியர்… சும்மாப் பேசினாலே ரொம்ப எதிர்த்துப் பேசுறா. சீனியருங்கிற மரியாதையே இல்லை. இன்னைக்கு விரலை நீட்டி வேறப் பேசுறா.” அருணிற்கும் அர்ச்சனாவிற்கும் ஏற்கனவே நடந்த சண்டையை அறிந்திருந்ததால் பையன் சாவகாசமாகப் புகார் சொன்னான் அருணிடம்.

“இல்லை சீனியர்… இவன் ரொம்பத் தப்புத் தப்பாப் பேசுறான்.” ஒருமையில் விளித்தாள் அர்ச்சனா.

“பாருங்க சீனியர்… உங்க முன்னாடியே எப்படிப் பேசுறான்னு.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அர்ச்சனா எதிர்த்துப் பேசினாள்.

“நீ பேசின பேச்சுக்கு உனக்கு மரியாதை வேற குடுப்பாங்களா?”

“ஏய்! என்னடி?” அர்ச்சனாவின் பக்கமாக எகிறிய அந்தப் பையனின் நெஞ்சில் கை வைத்துத் தடுத்தான் அருண். அந்தப் பையனின் பார்வை இப்போது அருணைக் கோணலாகப் பார்த்தது.

“என்ன சீனியர்? மேல்ல எல்லாம் கை வெக்குறீங்க?”

“வேணாம் விடுப்பா, பொம்பளைப் புள்ளை.” அருண் பொறுமையாகக் கொஞ்சம் இறங்கித் தான் பேசினான். ஆனால் எதிர்த்தரப்பு அப்படி இருக்கவில்லை.

“இதே பொம்பளைப் புள்ளை கன்னத்துல தானே அன்னைக்கு நீங்க ஒன்னுக் குடுத்தீங்க?” கேலிச் சிரிப்போடு அவன் சொல்ல, அவன் நண்பர்கள் சிலரும் சிரித்தார்கள். அருணிற்குக் கோபம் தலைக்கேறியது. வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழ ஆரம்பித்தன.

“அதென்னன்னா ஜூனியர்…” அருண் தன் கோபத்தை மறைத்துக்கொண்டு சிரிப்போடு ஆரம்பிக்கவும் விஷாலுக்கு மணியடித்தது. ஏனென்றால் அவனுக்கு அருணை நன்றாகத் தெரியும்.

“அவ கன்னத்துல இங்க வெச்சு நான் குடுத்தது மட்டும் தான் உங்க எல்லாருக்கும் தெரியும்.” அருணின் பேச்சில் அர்ச்சனாவுமே ஆச்சரியப்பட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘இவன் என்ன சொல்ல வருகிறான்?’

“அதுக்கப்புறமா நம்ம ஆளைத் தள்ளிக்கிட்டுப் போயி… தனியா அதே கன்னத்துல நான் வேறொன்னும் குடுத்தது உங்கெல்லாருக்கும் தெரியாது.”

“சீனியர்!” அருணின் பேச்சில் அங்கு நின்றிருந்த அத்தனை பேரும் மலைத்துப் போனார்கள் என்றால், சம்பந்தப்பட்ட பையன் அலறியே விட்டான்.

“தங்கச்சி உங்க ஆளா? எனக்கு இது தெரியாது சீனியர். என்னை மன்னிச்சிடுமா தங்கச்சி.” இடை வரை குனிந்து அர்ச்சனாவிற்கு வணக்கம் வைத்தவன் தன் கும்பலோடு கலைந்து விட்டான். இருந்தாலும் அவன் பார்வையில் இருந்த வன்மத்தை அருணும் கவனிக்கத் தவறவில்லை, விஷாலும் கவனிக்கத் தவறவில்லை.

“என்னடா மச்சான் இதெல்லாம்?” விஷாலுக்குப் பேச்சு வந்தது. ஆனால் சத்தம் தான் வரவில்லை.

“மச்சான்… அவனுங்க அத்தனை பேரும் நம்மளைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கானுங்க. முல்லையும் காஞ்சியும் வந்தா நீங்கப் போய் ப்ரொஃபெசரை மீட் பண்ணுங்க. முதல்ல இவங்களைப் போய் என்னோட பைக்கில உட்காரச் சொல்லு.”

“இல்லை…” ஏதோ அர்ச்சனா பேசப்போக,

“மச்சான்… என்னைக் கடுப்பாக்காம போய் உட்காரச்சொல்லு மச்சான்.” என்றான் பற்களைக் கடித்தபடி.

“அர்ச்சனா… ப்ளீஸ். அருண் சொல்றபடி கேளுங்க. அவனுங்களுக்கு டவுட் வருது. நம்மையே பார்க்குறானுங்க.” விஷாலும் சேர்ந்து சொல்லவும் வேறு வழியில்லாமல் அருணோடு அவன் பைக் வரை வந்தாள் அர்ச்சனா. விஷால் தன் கையிலிருந்த ஹெல்மெட்டை நீட்டவும் வாங்கிக் கொள்ள அருணின் பைக் பறந்தது.

நேராக அர்ச்சனாவின் வீடு வரை வந்தவன் அவளை இறக்கி விட்டுவிட்டுப் போகாமல் உள்ளே வந்தான்.

“அடடே! அருண். வா வா. லேசுல இந்த வீட்டுப் பக்கம் வரமாட்டியே! என்னாச்சு? இன்னைக்கு ஆச்சரியமா வந்திருக்கே? உங்கக்கா வேற ஹாஸ்பிடல் போயிட்டா.” கலகலப்பாகப் பேசியபடி வந்த கற்பகம் இளையவர்களின் முகத்தைப் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார்.

அருணும் அர்ச்சனாவும் ஒன்றாக வீட்டினுள் நுழைந்த போதும் அவர்கள் இருவரும் ஒன்றாக வந்திருப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

“என்னாச்சு? ஏன் ரெண்டு பேரும் ஒரு மாதிரியா இருக்கீங்க?” கற்பகத்தின் குரலில் சுருதி இறங்கி இருந்தது. அர்ச்சனாவை முறைத்துப் பார்த்தான் அருண்.

“வாயடக்கம் வர்றதாவே இல்லை அத்தை.”

“சீனியர்! அவன் என்னப் பேசினான்னு தெரியாம நீங்களா எதுவும் சொல்லாதீங்க.” அப்போதும் எகிறினாள் பெண்.

“பார்த்தீங்கல்லை அத்தை. இப்படித்தான் மரியாதை இல்லாம எல்லார்கிட்டயும் பேசுறது.” நிதானமாக அருண் சொல்ல மகளை ஒரு பார்வை பார்த்தார் கற்பகம்.

காலையிலேயே மாதவியும் செழியனும் ஹாஸ்பிடல் போய்விட்டார்கள். ஆனால், செழியனுக்கு ஏற்பாடாகியிருந்த ஒரு ஆப்பரேஷன் நோயாளிக்கு பிபி அதிகமாக இருந்ததால் கான்சல் ஆகியிருந்தது. செழியன் வீடு வந்திருந்தது தங்கைக்குத் தெரியாது. கீழே நடப்பதை மாடியில் இருந்த படி யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பெரியவன்.

“நீங்க எதுக்கும்மா என்னை முறைக்கிறீங்க? அவன் தப்பாப் பேசினான்.”

“அதுக்கு நீங்க விரல் நீட்டிப் பேசுவீங்களோ?” இது அருண்.

“பின்ன என்னப் பண்ணச் சொல்றீங்க சீனியர்? அவனை இடுப்பில தூக்கி வெச்சுத் தட்டிக் குடுக்கச் சொல்லுறீங்களா?”

“காலேஜ்னா அப்படித்தான். நாலு தறுதலை இருக்கத்தான் செய்யும். ஏன்? அவன் உங்கிட்ட மட்டும்தான் இப்படிப் பேசுறானா? எல்லாப் பொண்ணுங்கக் கிட்டயும் இப்படித்தான் பேசுறான். அதுங்க எல்லாம் உன்னை மாதிரிச் சண்டைக்கா போகுதுங்க.” கோபத்தில் அருணின் பேச்சில் மரியாதை காணாமற் போயிருந்தது.

“மத்தவங்கச் சும்மா போனா நானும் அதே மாதிரிப் போகணுமா சீனியர்? என்னால முடியாது.” விடைத்துக் கொண்டு சண்டை போட்டாள் அர்ச்சனா.

“முதல்ல இது என்ன ட்ரெஸ் அத்தை? பொம்பிளைப் பிள்ளை போடுற மாதிரியா இருக்கு?” முகத்தைச் சுருக்கிக் கொண்டு அருண் கேட்க இப்போது அர்ச்சனாவிற்குக் கோபம் தலைக்கேறியது.

“ஏன்? என்னோட ட்ரெஸ்ஸுக்கு என்னக் குறைச்சல்?” ஸ்லிம் ஃபிட் டெனிமும், டாப்பும் அணிந்திருந்தாள். அனார்கலி ஸ்டைலில் இருந்த டாப் ரொம்பவும் குட்டையாக இருந்தது. கழுத்து வேறு கொஞ்சம் டீப்பாக இருந்தது.

“உங்களுக்குத்தான் பசங்களோட பார்வை எப்படி இருக்கும்னு தெரியாது. உங்கப் பையன் என்ன அத்தை பண்ணுறார்? அவர் இதையெல்லாம் என்னன்னு கேக்க மாட்டாரா?”

“அருண்…” கற்பகம் எதையோ சொல்லத் தொடங்க அவரைத் தடுத்தான் இளையவன்.

“சாரி அத்தை… இதெல்லாம் நான் பேசக்கூடாது தான். இருந்தாலும் மனசு கேக்கலை. மாதவி வீட்டுப் பொண்ணுங்கிறதால தான் இவ்வளவும் பேசுறேன். இல்லேன்னா நான் பாட்டுக்குப் போயிட்டே இருந்திருப்பேன்.”

“என்ன எம்மேல தப்புங்கிற மாதிரியே பேசுறீங்க? அவன் தப்பே பண்ணலையா?” இப்போதும் அர்ச்சனா எதிர்த்துப் பேச அருண் கண்ணில் தீப் பறந்து.

“அவன் பண்ணினது தப்புன்னே வெச்சுக்கோ. இன்னைக்கு உங் கையத் தொட்டா மாதிரி வேற எங்கேயாவது தொட்டிருந்தா என்னப் பண்ணியிருப்பே?” அருண் பெருங்குரலில் சொல்லவும் கற்பகம் கண்களை மூடிக்கொண்டார். அர்ச்சனாவிற்கு மூச்சு வாங்கியது. மாடியில் நின்றிருந்த செழியனின் கை முஷ்டி இறுகியது.

“சொல்லும் போதே கேக்க உங்கம்மாக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே, துடிக்கிறாங்களே… அப்படி நடந்திருந்தா எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்க. அறிவில்லை உனக்கு? எங்கூடவும் ரெண்டுப் பொண்ணுங்க சுத்துறாங்க. பாத்திருக்க இல்லை? எவ்வளவு டீசன்ட்டா ட்ரெஸ் பண்ணுறாங்க. அந்த முல்லை உன்னை விடப் பணக்காரி… தெரியுமா? எப்பவாவது அவ சத்தம் போட்டுப் பேசிப் பார்த்திருக்கியா? ஆனா நீ இருக்கிற இடம் எப்பப் பார்த்தாலும் வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த மாதிரித்தான் இருக்கு. புரிஞ்சு நடந்துக்கோ.” கத்தி முடித்தவன் கற்பகத்தைத் திரும்பிப் பார்த்தான்.

“என்னை மன்னிச்சிடுங்க அத்தை.” சொன்னவன் மீண்டும் அர்ச்சனாவின் பக்கம் திரும்பினான்.

“நீ உங்கண்ணாவைக் கூட்டிட்டு வந்து மிரட்டினப்போ கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்ட மாதவியோட தம்பி அருணில்லை அவன். மினிஸ்டர் பையன், எதுக்கும் தயங்க மாட்டான். எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிட்டேன். அதுக்கப்புறம் உன்னோட இஷ்டம்.” சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான் அருண். கற்பகம் அப்படியே அசையாமல் நின்றிருக்க அர்ச்சனா யோசனையோடு மாடியேறினாள். அங்கே நின்றிருந்த அண்ணாவை அப்போது அவள் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டுப் போனாள்.

0-0-0-0-0-0

அந்த ப்ளாக் ஆடி அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. மனைவியைத் திரும்பிப் பார்த்த செழியன் சிரித்துக் கொண்டான். நேற்று கனடா போவதைப் பற்றிப் பேச்சு வந்ததிலிருந்து செழியனோடு எதுவும் பேசவில்லை மாதவி.

இன்று காலையிலும் ஒன்றாகத்தான் இருவரும் ஹாஸ்பிடல் கிளம்பிப் போனார்கள். ஆப்பரேஷன் தடைப்பட்டதால் சீக்கிரமாக வீடு திரும்பிவிட்டான் கணவன். அவளுக்கு ட்யூட்டி முடிந்த பிறகு அழைத்துக் கொண்டு வரலாம் என்று அவன் எண்ணியிருக்க ஆட்டோவில் வந்து இறங்கினாள் பெண்.

‘என்ன செழியா? மாதவியைக் கூப்பிட நீ போகல்லையா?’ கேள்வி கேட்ட அம்மாவைப் பார்த்துச் சிரித்தான் மகன்.

‘நேத்துல இருந்து உங்க மருமக எங்கிட்டப் பேசலை.’

‘ஐயையோ! என்னாச்சு?’

‘அவங்க சொல்லுறதை நான் கேக்கலையாம்.’

‘ஓ…’ கற்பகத்திற்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. விலாவரியாகவா எல்லாவற்றையும் கேட்க முடியும்?

‘உங்க மருமகளுக்கு நான் இப்போ கனடா போய் பெரிய டாக்டர்னு பெயர் வாங்கணுமாம்.’ மனைவியின் காதில் தான் பேசுவது கேட்கிறது என்பதற்காகவே வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்தான் இளஞ்செழியன்.

‘சரி… அவதான் சொல்லுறா இல்லை… அப்போக் கேளேன் செழியா.’

‘அதுக்கு வேற ஆளைப் பாருங்க. இன்னைக்கு நைட் நான் எங்க மாமியார் வீட்டுக்குப் போகப் போறேன். உங்க மருமகளை ரெடியாகச் சொல்லுங்க.’ நமுட்டுச் சிரிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான் செழியன்.

இப்போது கார் மாதவியின் வீட்டிற்குத்தான் போய்க் கொண்டிருந்தது. மனைவியின் முகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணமே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் டாக்டர்.

“வாங்க மாப்பிள்ளை… வாங்க வாங்க. அருண்! அப்பாவைக் கூப்பிடு.” ஆர்ப்பரித்தார் அமுதவல்லி. அருண் ரூமை விட்டு வெளியே வந்தவன்,

“வாங்க அத்தான்.” என்றான். மாதவி நேராகக் கிச்சனுக்குள் போய் விட்டாள். உமாசங்கரும் வந்துவிட ஆண்கள் மூவரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

“என்ன மாப்பிள்ளை? மாதவி என்னவோ போல இருக்கா?” அமுதவல்லி கேட்கவும் சிரித்தான் செழியன். மாமியார் நீட்டிய சமோசாவைச் சுவைத்தவன்,

“அதை மாதவிக்கிட்டயே கேளுங்க அத்தை.” என்றான்.

“கேட்டேன்… மூஞ்சைத் தூக்கி வெச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போயிட்டா.”

“உங்கப் பொண்ணு எங்கூடச் சண்டை போட்டுக்கிட்டுப் பேச மாட்டேங்கிறா.”

“யாரு? மாதவி சண்டை போட்டாளா?” இப்போது ஆச்சரியமாகக் கேட்டது அருண்.

“ஏன்? உங்கக்கா சண்டைப் போட மாட்டாளா?”

“இல்லையே… அதான் ஆச்சரியமாக் கேக்குறேன்.”

“அதெல்லாம் எங்கிட்ட நல்லாவே போடுவா அருண்.” செழியன் சொல்லவும் இப்போது சிரித்தது உமாசங்கர்.

“என்னாச்சு மாப்பிள்ளை?”

“கனடா போக ஒரு சான்ஸ் வந்திருக்கு… ஒரு மாசம் தங்கணும்.”

“ஓ… அங்க…?”

“கான்ஃபரன்ஸ் மாமா.”

“ஓ… அப்போ நல்லது தானே மாப்பிள்ளை?” உமாசங்கர் சொல்லவும் செழியன் தலையைக் குனிந்து கொண்டான். உமாசங்கரும் அமுதவல்லியும் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.

“அக்காவையும் கூட்டிக்கிட்டுப் போங்களேன் அத்தான்.” சிக்கலின் நுனியைச் சரியாகப் பிடித்தான் அருண்.

“அது முடியுமா இருந்தா நான் ஏம்பா இவ்வளவு யோசிக்குறேன்?”

“அது சரிதான்.”

“அருண்… பைக்கை எடுத்துக்கிட்டு வாயேன். ஒரு ரைட் போகலாம். ரொம்ப நாளாச்சு.” அத்தான் கேட்கவும் சட்டென்று எழுந்தான் அருண். இளையவர்கள் நகரவும் மனைவியைப் பார்த்தார் உமாசங்கர்.

“அமுதா… மாதவியைக் கூப்பிடு.”

“இதோ… மாதவி…” அம்மா அழைக்கவும் ரூமை விட்டு வெளியே வந்தாள் பெண்.

“என்னம்மா ஆச்சு?” அப்பா கேட்கவும் அனைத்தையும் கொட்டினாள் மாதவி.

“ஓ… அவ்வளவு பெரிய வாய்ப்பை யாராவது தவற விடுவாங்களாம்மா?”

“அதையே தான் நானும் சொல்லுறேன்பா. நீங்களும் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க.”

“ஏன் மாதவி? அங்க யாராவது உன்னாலதான் இப்படின்னு  ஏதாவது சொன்னாங்களா?”

“சேச்சே… அப்படியெல்லாம் எதுவும் இல்லைம்மா. ஆனா வெளியே சொல்லாட்டியும் மனசுல தோணும் இல்லைம்மா?”

“ம்…” பேச்சு இங்கே இப்படிப் போக அங்கே அருணிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் செழியன்.

“இன்னைக்குக் காலேஜ்ல என்ன நடந்துச்சு அருண்?”

“அத்தான்!” அருணிற்கு பக்கென்றது.

“பரவாயில்லை… சொல்லு.”

“பிரச்சனையைப் பெருசு படுத்திராதீங்க. பொம்பிளைப் புள்ளை விஷயம்.” சொன்ன அருணை வியப்பாகப் பார்த்தான் பெரியவன்.

“அதுக்கு…‌ சும்மா விடச் சொல்லுறியா அருண்?”

“வேற என்னப் பண்ணிட முடியும் அத்தான்? மினிஸ்டர் வீட்டுப் பையன் வேற.”

“யாருப்பா அது?” செழியன் கேட்கவும் விபரங்கள் சொன்னான் அருண்.

“ஓ… கொஞ்சம் பெரிய இடம் தான் இல்லை!”

“அதான் அத்தான்… இதோட விட்டிருங்க. பெரிசு பண்ண வேணாம்.”

“ம்…”

“அத்தான்… நான்… இன்னைக்கு…”

“நீ வீட்டுக்கு வந்தப்போ நானும் வீட்டுல தான் இருந்தேன் அருண்.” அந்த வார்த்தைகளில் அருண் திடுக்கிட்டுப் போனான்.

“அத்தான்… சாரி… எனக்கு இன்னைக்கு உங்கத் தங்கச்சி கண்ணுக்குத் தெரியலை. எனக்கு மாதவியைப் பார்த்த மாதிரித்தான் இருந்துச்சு. எங்கண்ணுக்கு மாதவி தான் தெரிஞ்சா. அந்த இடத்துல மாதவி இருந்திருந்தா நான் என்னப் பண்ணி இருப்பனோ அதைத் தான் பண்ணினேன். என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க.” சொன்ன அருணின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு தட்டிக் கொடுத்தான் செழியன்.

“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா அருண். அடுத்த வாரம் நான் கிளம்ப வேண்டி இருக்கும்.”

“ஓ… கனடா கிளம்புறீங்ளா அப்போ?”

“வேற என்னப் பண்ணச் சொல்லுற என்னை? நேத்துல இருந்து முகத்தைத் தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கா. பேச மாட்டேங்கிறா.”

“ஹா…‌ ஹா…” அருண் உல்லாசமாகச் சிரித்தான்.

“உனக்கும் உங்கக்காக்கும் எம்பொழைப்பு சிரிப்பா இருக்கில்லை?!”

“இதுக்கு ஆரம்பத்துலேயே போறேன்னு சொல்லி இருக்கலாமில்லை? கெத்தாவாவது இருந்திருக்கும்.”

“அடப்போடா! மாதவிக்கிட்ட எனக்கென்னடா கெத்து வேண்டிக் கிடக்குது. அவ நில்லுன்னா நிப்பேன், உக்காருன்னா உக்காருவேன்.” செழியன் சொல்லவும் தலையில் அடித்துக் கொண்டான் அருண். பெரியவன் சிரித்தான்.

“பார்த்துக்கோ அருண். அப்பா அடிக்கடி பிஸினஸ் விஷயமா வெளியூர் போயிடுவாரு. அவர் காதுலயும் இந்த விஷயத்தைச் போட்டு வெக்குறேன். அர்ச்சனாவை நினைச்சா இப்போக் கொஞ்சம் பயமா இருக்கு. அவ மேல ஒரு கண்ணை வெச்சுக்கோ. நான் கனடா போனதுக்கு அப்புறமா என்னை எப்படிக் கான்டாக்ட் பண்ணுறதுன்னு சொல்றேன். கொஞ்சம் வீட்டுப் பக்கம் அடிக்கடி எட்டிப்பாரு, சரியா?”

“சரிங்கத்தான்.”

மாமனும் மச்சானும் வீடு வந்த போது அமுதவல்லி சின்னதாக ஒரு விருந்தே தயார் பண்ணி இருந்தார்.

“மாப்பிள்ளை, இன்னைக்கு நைட் இங்கேயே தங்குங்களேன்.”

“ஓகே அத்தை, தங்கிட்டாப் போச்சு.” சட்டென்று ஒத்துக்கொண்டான் இளஞ்செழியன்.

இரவு உணவை முடித்துக்கொண்டு அத்தனை பேரும் தூங்கிவிட மாதவி கணவனை ரூமிற்குள் தேடினாள். அவனைக் காணவில்லை.

‘எங்கே போயிருப்பான்?’ அவள் யோசிக்கும் போதே அவள் ஃபோன் ஒளிர்ந்தது.

“மாது…” அவன் குரல் அவள் தேகம் முழுவதும் பரவியது.

“இன்னைக்குக் கஷ்டப்பட்டுச் சுவரேறிக் குதிக்காம வந்திருக்கேன். வெளியே வா… ப்ளீஸ்.” அவன் குரல் கெஞ்சவும் தன்னை அறியாமலேயே எழுந்து கிணற்றடிக்குப் போனாள் மாதவி.

எப்போதும் போல அந்த மெர்க்குரி ஒளியில் தென்னை மரத்தில் சாய்ந்திருந்தான் செழியன். மனைவியைப் பார்த்த போது கைகள் இரண்டும் தானாக விரிந்தன. ஓடி வந்து அவனுக்குள் புகுந்து கொண்டாள் பெண்.

“உன்னாலயும் முடியலை இல்லை? ரெண்டு நாளையே கடக்க முடியலையே? நீ எப்படி ஒரு மாசம் தனியா இருப்பே?”

“வீசா, டிக்கெட் எல்லாம் ரெடியாகிடுச்சாம்.”

“ஓ… தெரியுமா உனக்கு? நான் போகப் போறேன்னு சொல்லவே இல்லையே?”

“நீங்க சொல்லாட்டியும் போவீங்கன்னு எனக்குத் தெரியும்.”

“அப்படியா?”

“ம்… நான் சொல்லி நீங்க செய்யாம இருப்பீங்களா?” மாதவி சிணுங்கலாகச் சொல்லவும் சிரித்தான் இளஞ்செழியன்.

“ஆனா நான் சொல்லுற எதையுமே நீ செய்யுறது இல்லை.” கணவன் கண்ணடிக்கவும் சிரித்தாள் மாதவி.

“எப்படி மாதவி?‌ எப்படிடீ உன்னை விட்டுட்டு ஒரு மாசம் இருக்கிறது?” அவன் அணைப்பு அவளை நொறுக்கியது. கலைந்திருந்த அவள் கூந்தலுக்குள் கரம் நுழைத்துக் கொத்தாய்ப் பிடித்தவன் முரட்டுத்தனமாக அவள் இதழ்களை ஆக்கிரமித்து இருந்தான்.

அன்றைய இரவு மாதவி செழியனின் காதலைப் பார்க்கவில்லை. வேறொரு மூன்றெழுத்தை அவளுக்குக் காட்டி இருந்தான் டாக்டர்.

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லை… என்னை விட உன்னைச் சரிவரப் புரிஞ்சுக்க யாருமில்லை… எவளுமில்லை…

 

error: Content is protected !!