Oviyam 18

“அத்தை!” அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள் அர்ச்சனா. காலையிலேயே கிளம்பி வந்திருந்தாள். கை வேலையாக இருந்த அமுதவல்லி வெளியே வந்தார்.

“அடடா! அர்ச்சனா வா வா. என்ன இந்த நேரத்துல?”

“உங்க பையன் எங்க அத்தை?”

“தூங்குறான்மா. என்னாச்சு?”

“ஒன்பது மணியாச்சு, இன்னும் தூங்குறாரா?”

“நைட் ஒரு மணி வரைக்கும் ஏதோ வேலை பார்த்தாம்மா. அதான் இப்போ தூங்குறான்.” சொன்ன அமுதவல்லியின் கையைப் பிடித்து அருணின் ரூமிற்குள் அழைத்துச் சென்றாள் அர்ச்சனா.

“என்னாச்சும்மா? ஏதாவது பிரச்சனையா?”

“உங்க பையனை எழுப்புங்க அத்தை. தூங்கினது போதும்.”

“சரிடா…” சிரித்தபடி அருணை எழுப்பினார் அமுதவல்லி. மனதில் என்னவோ ஏதோ என்ற குழப்பம் இருந்ததால் கலக்கமாகவே மகனை எழுப்பினார். ஆனால் அந்தக் குரலுக்கு அருண் எழும்பவில்லை.

“சீனியர்!” அர்ச்சனா போட்ட சத்தத்தில் அடித்துப் பிடித்து எழுந்து உட்கார்ந்தான் அருண். அந்த நேரத்தில் அங்கே அர்ச்சனாவை எதிர்பார்க்காததால் பக்கத்தில் கிடந்த டீ ஷர்ட்டை எடுத்து அவசர அவசரமாக மாட்டிக் கொண்டான்.

“சீனியர்! என்னோட ட்ரெஸ் எப்படி இருக்கு?” இடுப்பில் கையை வைத்துக்கொண்டு சட்டமாக அருணின் முன்னால் போய் நின்றாள் அர்ச்சனா. அமுதவல்லிக்கு ஆச்சரியமாகிப் போனது.

“அர்ச்சனா! என்னம்மா ஆச்சு?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை. நேத்து உங்க மகன் நான் பொண்ணுங்க மாதிரி ட்ரெஸ் பண்ண மாட்டேங்குறேனாம், வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த மாதிரி சத்தம் போட்டுப் பேசுறேனாம், அவங்கக் கூடவும் ரெண்டு பொண்ணுங்க சுத்துறாங்களாம், அமைதின்னா அமைதி அப்படியொரு அமைதியாம்னு அவ்வளவு அட்வைஸ். அதான்… இந்த ட்ரெஸ் ஓகே யான்னு சீனியர்கிட்ட கேக்க வந்திருக்கேன் அத்தை.”
அர்ச்சனா பேசிய விதத்தில் பக்கென்று சிரித்து விட்டார் அமுதவல்லி. அருண் சொன்னது அத்தனையும் நியாயம் தான் என்று அவருக்கும் புரிந்தாலும் மகளின் நாத்தனாரிடம் அதை ஒத்துக்கொள்ளவா முடியும்?

“பேசிக்கிட்டு இருங்க… நான் காஃபி கொண்டு வர்றேன்.” ரூமை விட்டு வெளியே வந்து விட்டார் அமுதவல்லி.

“சொல்லுங்க சீனியர்?” அவன் கட்டிலுக்குப் பக்கத்தில் வந்தாள் பெண். அத்தை அங்கே இல்லை என்றதும் இன்னும் கொஞ்சம் தைரியம் வந்திருந்தது.

“ஏய்! உம் பிரச்சனை என்ன இப்போ?”

“நான் பொண்ணு மாதிரி ட்ரெஸ் பண்ணி இருக்கேனான்னு சொல்லுங்க. இல்லைன்னா நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்.” நான் சொல்வதைச் செய்வேன் என்பது போல பிடிவாதமாக நின்றாள் அர்ச்சனா.

அவளை  மேலிருந்து கீழாக ஒரு விசித்திரமான ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தான் அருண். சுடிதார் அணிந்திருந்தாள். ஃபுல் ஸ்லீவ் டாப் அவள் கணுக்காலைத் தொட்டது.

போதாததற்கு யூ நெக் வேறு. இதித் துப்பட்டா வேறு. அருணிற்குச் சிரிப்புத்தான் வந்தது. பெண்களுக்கு உரித்தான எந்தவொரு நளினமும் இல்லாமல் சோளக்காட்டு பொம்மை போல நின்றிருந்தாள் அர்ச்சனா.

‘இவள் புடவை கட்டினால் அந்தப் புடவையின் நிலைமை என்ன ஆகும்?’ சம்பந்தமே இல்லாமல் சிந்தித்தான் அருண்.

“என்ன ஓகேவா?”

“ஏய்… லூசா நீ?”

“இல்லையில்லை… அதெல்லாம் இல்லை… நல்லாத்தான் இருக்கேன்.” அவள் சீரியஸாகச் சொல்லவும் தலையில் அடித்துக் கொண்டான் அருண்.

“சரி சரி போதும், கிளம்புங்க.” அவள் சொல்லவும் அவளைக் கேள்வியாகப் பார்த்தான் அருண்.

“இல்லை… நேத்து அந்த முட்டாள் பசங்கக்கிட்ட இவ நம்ம ஆளுன்னு சொல்லிட்டீங்க. அதை மெயின்டெய்ன் பண்ண வேணாமா? அதான் நேரா இங்க வந்துட்டேன். என்னைக் காலேஜ்ல ட்ராப் பண்ணிடுங்க.”

“ஏய்! கொன்னே போட்டிருவேன். வெளிய போ முதல்ல.”

“அத்தை…” அவன் சொல்லி முடித்த போது சத்தமாக அமுதவல்லியை அழைத்தாள் பெண்.

“இதோ வர்றேன்மா.” கையில் காஃபியோடு வந்தவர் இளையவர்களுக்குக் காஃபியைக் கொடுத்தார்.

“அத்தை காலேஜுக்குக் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. சீனியரை ட்ராப் பண்ணச் சொல்லுறீங்களா? ப்ளீஸ்…” முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நாடகம் போட்டாள் பெண்.

“அருண், அதான் அர்ச்சனா சொல்லுதில்லை. கொஞ்சம் ட்ராப் பண்ணிடு.” மருமகனின் தங்கை என்பதால் அவருக்கும் வேறு வழி தெரியவில்லை.

“ஒரு ஆட்டோ பிடிச்சுக் கொடுங்கம்மா.”

“டேய்! என்னடா பேசுற? தனியா ஒரு பொம்பளைப் புள்ளையை ஆட்டோவுல போகச் சொல்லுற? இப்போ நீ கிளம்புறயா? இல்லை நான் கிளம்பட்டுமா?” அம்மாவின் அதட்டலில் பாத்ரூமுக்குள் போனான் அருண்.

‘யாரு’ இதுவா பொம்பளைப் புள்ளை? ரெண்டு ஆம்பிளைங்களுக்குச் சமம்.’ இது அருணின் மைன்ட் வாயிஸ்.
அருண் பைக்கைக் கிளப்ப நல்லப் பிள்ளை போல அமர்ந்து கொண்டாள் அர்ச்சனா. எல்லாம் அமுதவல்லியின் தலை மறையும் வரைதான். அதன் பிறகு அவள் வலது கை அவன் தோளைக் கெட்டியாகப் பிடித்தது. அடுத்த கணம் அருண் அடித்த பிரேக்கில் அவன் முதுகிலேயே மோதி நின்றாள் பெண்.

“ஏய்! என்னப் பண்ணுற நீ?”

“எனக்கு பைக்ல போய் பழக்கமில்லை அத்தான்.”

“என்னது?! அத்தானா?”

“பின்ன நீங்க எனக்கு அண்ணாவா?”

“இங்கப்பாரு… ரொம்பப் பேசினே… இங்கேயே இறக்கி விட்டுட்டு நான் பாட்டுக்குப் போயிட்டே இருப்பேன்.”

“ஓஹ்ஹோ! போவீங்களோ நீங்க? உங்க அம்மாக்கு இப்பவே ஒரு ஃபோனைப் போடட்டுமா?” அவள் மிரட்டவும் தலையில் அடித்துக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணினான் அருண்.
காலேஜ் வாசலிலேயே அவன் பைக்கை நிறுத்த அவள் இறங்கிக் கொள்ளவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

“என்ன? மகாராணிக்கு இறங்குற ஐடியா இல்லையோ?”

“நீங்க வழமையா பைக் நிறுத்துற இடம் இது இல்லையே?”

“வழமையா நான் தனியா வருவேன். எங்க வேணும்னாலும் நிறுத்துவேன். இப்போ அப்படியா?” அவன் குரலில் எரிச்சல் இருந்தது.

“இங்கப்பாருங்க சீனியர், நேத்து நீங்களா ஒரு ஸ்டேட்மெண்ட் சொன்னீங்க. அதை மெயின்டெய்ன் பண்ணணும்னு நீங்கதான் என்னை உங்க பைக்ல ஏத்திக்கிட்டுப் போனீங்க. இப்போ நீங்களே அதுக்கு எதிரா நடக்குறீங்க. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குப் புரியலை.” அர்ச்சனா பதமாகச் சொல்லி முடிக்க அருண் அதற்கு மேல் விவாதம் பண்ணவில்லை. வழக்கம்போல அவன் பைக்கை நிறுத்தும் இடத்தில் நேராகப் போய் நின்றான். ஆங்காங்கே ஆச்சரியமாகப் பார்த்த ஓரிரண்டு கண்களை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
பக்கத்தில் இருந்த அந்தக் குட்டிச் சுவரில் நேற்று அர்ச்சனாவிடம் ரகளை பண்ணிய க்ரூப் உட்கார்ந்து கொண்டிருந்தது.

“காலேஜ்லயும் ஒரு குட்டிச் சுவரை எப்படித்தான் கண்டு பிடிக்குறானுங்களோ? உருப்படாதவனுங்க.” அவள் வாய்க்குள் முணுமுணுத்தது அருணிற்கும் தெளிவாகக் கேட்டது. பைக்கை விட்டு இறங்கியவள் நகர்ந்து விடாமல் அருணிற்குப் பக்கத்தில் வந்து நின்றாள்.

“அவனுங்க பார்த்துட்டானுங்க… போதும் நீ கிளம்பு.” சொன்ன அருணின் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க அர்ச்சனாவால் முடியவில்லை.

“கொஞ்சம் சிரிங்க சீனியர்.”

“ஏய்! இங்கப்பாரு… நேத்து உன்னை அந்தப் பசங்கக்கிட்ட இருந்து காப்பாத்த அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா ஏன்டா அப்படி நடந்துக்கிட்டோம்னு ஃபீல் பண்ண வெச்சுடாத.”

“அதென்ன… எப்பப்பாரு ‘ஏய்’ ன்னே கூப்பிடுறீங்க? எனக்குப் பெயர் இல்லையா?”

“இப்போ நீ கிளம்புறயா? இல்லை நான் கிளம்பட்டுமா?”

“ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிட்டுப் போறேன் அத்தான். நீங்க நேத்து என்னைக் காப்பாத்த ஒரு ஸ்டேட்மெண்ட் சொன்னீங்க இல்லை? அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.” சொல்லி விட்டு அவள் ஓடியே போய்விட அருண் அவளை முறைத்துப் பார்த்தான். ஆனால் அவள் அப்பால் போனபின் அவன் முகத்தில் தோன்றிய வசீகரப் புன்னகையை அர்ச்சனா பார்க்கவில்லை.

0-0-0-0-0

நாட்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது மாதவிக்கு. டாக்டர் கனடா போய் ஒரு வாரம் ஆகியிருந்தது. நாட்களை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தாள்.
வேலையில் கூட அவளால் ஒழுங்காகக் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் இல்லாத வெறுமை அவளை முழுதாகத் தாக்கி இருந்தது. இப்போதே அவன் பக்கத்தில் வேண்டும் என்பது போல அவள் மனம் கிடந்து தவித்தது.

அன்று கனடா கிளம்பும் போது அவளை ட்யூட்டிக்கு அனுப்பி விட்டான். ஏர்போர்ட் வரக்கூட அவளை அனுமதிக்கவில்லை. அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு அவனால் அவளை விட்டுப் போக முடியாதாம். வருத்தப்பட்டு அவன் சொன்னபோது கற்பகம் சிரித்தே விட்டார்.

‘டேய் செழியா! வருஷக் கணக்குல எங்களையெல்லாம் விட்டுட்டு லண்டன் ல போய் உக்கார்ந்து படிச்சியே? அப்பல்லாம் இப்படியொரு வார்த்தை இந்த அம்மாவைப் பார்த்துச் சொல்லி இருக்கியா?’ அம்மா மகனைக் கலாய்த்த போதும் செழியனின் முகத்தில் கவலையே மண்டிக் கிடந்தது.

‘அம்மா… மாதவியை நல்லாப் பார்த்துக்கோங்கம்மா.’

‘இதை நீ சொல்லணுமா செழியா?’

‘இல்லம்மா.. அவளுக்குன்னு எதையுமே யோசிக்கமாட்டா. நாமதான் பார்த்துப் பார்த்துப் பண்ணணும். எம் மாதவி உங்கப் பொறுப்பும்மா. பத்திரம்.’

‘சரிடா… ரொம்ப உருகாதே. காணாமப் போயிடுவே.’

‘அவளுக்குப் போரா இருந்ததுன்னா அவங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க.’
‘ம்ஹூம்… அது மட்டும் சரிவராது. நீ இல்லாதப்ப அவ இங்க தான் இருக்கணும். வேணும்னா அவங்க அம்மாவை இல்லைன்னா அருணை அடிக்கடி வரச் சொல்லுறேன்.’
ஹாஸ்பிடல் கேன்டீனில் உட்கார்ந்து சாப்பாட்டைக் கொறித்துக் கொண்டிருந்தாள் மாதவி. அதுவேறு இறங்குவேனா என்று தொண்டையில் சிக்கியது.

“ஹாய் மாதவி! என்ன டல்லா உக்கார்ந்து இருக்கிறாப்புல?” திரும்பிப் பார்க்காமலேயே புரிந்தது மாதவிக்கு, அது மேனகாவின் குரல் என்று. ரஞ்சிதாவும் மேனகாவும் இவள் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். புதிதாக ரிசப்ஷனுக்கு ஒருவரை வேலைக்கு சந்திரமோகன் அமர்த்தி இருந்ததால் இவர்களுக்கு இப்போதெல்லாம் சேர்ந்தாற்போல ஓய்வு கிடைத்தது.

“என்னம்மா புதுப்பொண்ணு? டாக்டர் ஃபோன் பண்ணினாரா?”

“ம்…”

“என்ன சொல்றாரு? கனடா குளிர் அவரை வாட்டுதாமோ?” மேனகாவின் குரலில் ரஞ்சிதாவே சிரித்தாள்.

“மாது… மாது…” குழைந்து அழைத்தபடி வேண்டுமென்றே பெண்கள் இருவரும் கேலிப் பண்ணவும் மாதவியின் கண்கள் குளமானது.

“ஏய்! மாதவி… என்ன இது? சும்மா தமாஷுக்குச் சொன்னா இப்படித்தான் அப்செட் ஆகுவியா?”

“ப்ளீஸ்… அப்படி என்னைக் கூப்பிடாதீங்க?” மாதவியின் கன்னத்தில் கண்ணீர் வழியவும் பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.

“சரி சரி… நாங்க சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னோம். நீ இதுக்கெல்லாம் போய் அழுவியா?”

“…………”

“ஆமா… முகமெல்லாம் பளபளக்குது? ஏதாவது விசேஷமா என்ன? டேட்டைக் கவனிச்சியா?” இது மேனகா.

“ஐய்யோ மேனகா! இப்போதான் கல்யாணமாகி ஒன்னரை மாசம் ஆகுது. அதுக்குள்ளேவா?”

“ரஞ்சீ… டாக்டர் மாதிரி ஆளுங்களுக்கு அதுவே ஜாஸ்தி. நீ வேறப் புரியாம…”

“அப்படியா சொல்றே!?” பெண்கள் இருவரும் இப்போது மாதவியைத் திரும்பிப் பார்க்க அவள் முகம் சிவந்து போனது.

“அடியேய் அமுக்குணி! அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லுவாய்னு பார்த்தா… இப்படி வெக்கப்படுறே?” ரஞ்சிதா பெருங்குரலில் சொல்ல மாதவி எழுந்தே விட்டாள்.

“அதெல்லாம் முடியாது. உக்காரு உக்காரு. எங்க ஓடப் பார்க்குற?” அதன் பிறகு மாதவியை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் பெண்கள் இருவரும்.

அன்றைய ஷிஃப்ட்டை முடித்து விட்டு மாதவி வீடு வந்த போது ஏழு மணியாகிவிட்டது. குளித்துவிட்டு வந்தவளுக்குச் சூடாக இட்லி பரிமாறினார் கற்பகம். அர்ச்சனாவும் இணைந்து கொண்டாள். க

இன்னும் வீடு வந்திருக்கவில்லை.

“மாதவி… நல்லாச் சாப்பிடு. இல்லைன்னா செழியன் ஃபோன் பண்ணும் போது சொல்லிக் குடுப்பேன்.”

“போதும் அத்தை.”

“என்னப் போதும். குருவி கொறிக்கிற மாதிரிச் சாப்பிடுறே. நாளைக்கு உங்கம்மாவை இங்க வரச்சொல்றேன். நீ லீவு போட்டுட்டு வீட்டுல நில்லு.”
.

“சரிங்கத்தை.”

“அப்படியே அங்க ஒரு வீரன் இருக்காரில்லை? அவரையும் வரச் சொல்லுங்க. அப்போதான் அண்ணிக்கு இன்னும் பலம் வந்த மாதிரி இருக்கும்.” இது அர்ச்சனா. புன்னகைத்த மாதவி ரூமிற்கு வந்துவிட்டாள்.

அவனில்லாத அறை அவளை வெகுவாக வாட்டியது. கட்டிலில் அவன் தூங்கும் பக்கமாக வந்து அமர்ந்து கொண்டாள். அந்தத் தலையணையில் இன்னும் அவன் வாசம் மீதமிருந்தது. அதற்காகவே எதையும் மாற்றாமல் அப்படியே வைத்திருந்தாள் மனைவி.

அங்கிருந்த அஃறிணைப் பொருட்கள் மட்டும்தான் அவளுக்கு அவன் வரும் வரை துணை.

ஃபோன் அடித்தது. அவனாகத்தான் இருக்கும். அவசர அவசரமாக அழைப்பை ஏற்றாள் பெண். அவள் காதில் வந்து மோதிய குரல் ஏமாற்றவில்லை அவளை.

“மாதூ…”

“ம்…”

“ட்யூட்டி முடிச்சாச்சா?”

“ம்… இப்போதான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?”

“ம்… ஆச்சுடா. எங்க இருக்கிற?”

“நம்ம ரூம்ல தான்.” சொல்லிக் கொண்டே அவன் தலையணையில் முகம் புதைத்தாள் பெண். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாகப் பேசினாள். இன்றைக்கு ஏனோ மனது அவனை அதிகமாகத் தேடியது.

“மாதவி… என்ன வாய்ஸ் கொஞ்சம் டல்லடிக்குது?”

“ஒன்னுமில்லைங்க… கொஞ்சம் வேலை ஜாஸ்தி இன்னைக்கு, அதான்.”

“ஓ… ரெஸ்ட் எடுடா. நான் லேட்டாக் கூப்பிடுறேன்.”

“இல்லையில்லை… இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்க.” சொல்லும் போதே மறுபடியும் மாதவியின் குரல் கலங்கியது.

“என்னாச்சு மாதவி?”

“செழியன்!”

“சொல்லுடா.” அவள் அவனைப் பெயர் சொல்லி அழைக்கும் போதெல்லாம் அவள் மனநிலை எப்படி இருக்கும் என்று அவன் நன்கு அறிவான்.

“இன்னைக்கு உங்களை ரொம்பவே நான் மிஸ் பண்ணுறேன்.”

“என்னாச்சுடா?”

“தெரியலை… போதாததுக்கு இன்னைக்கு மேனகாவும், ரஞ்சியும் வேற என்னோட உயிரை வாங்கிட்டாங்க.”

“ஹா… ஹா… நல்லா மாட்டினயா?”

“ம்… சாமியார், நானே இப்படி ஆகிட்டேனாம். அப்போ டாக்டர் நிலைமை என்னவா இருக்கும்னு ரெண்டும் ஒரே கூத்து.”

“அதுங்களுக்குப் புரியுது. கட்டினவளுக்குப் புரியலையே!”

“டாக்டர்…”

“ம்…”

“இனி இப்படி ஏதாவது சான்ஸ் கிடைக்கும் போது கண்டிப்பா என்னையும் கூட்டிக்கிட்டுப் போங்க என்ன?”

“இங்கப்பாரு மாதவி… ஏதோ நீ சொன்னியேன்னு இந்த வாட்டி கிளம்பி வந்துட்டேன். இதுவே கடைசியும் முதலுமா இருக்கணும் புரியுதா?”

“அதை அப்போப் பார்க்கலாம் டா

“டாக்டர்”

“புதுசாக் கட்டினப் பொண்டாட்டியைப் பிரிஞ்சிருக்கிற சமையமாடி இது? ஆத்திரத்தைக் கிளப்பாத மாதவி. உன்னை வந்துக் கவனிச்சுக்கிறேன். அப்போ இருக்கு உனக்குக் கச்சேரி.”

“காத்துக்கிட்டு இருக்கேன் டாக்டர்.”

“ஆஹா! மாதவிக்கு இன்னைக்கு என்னமோ ஆச்சு. பேச்செல்லாம் பலமா இருக்கு!”

“நீங்கப் பக்கத்துல இல்லைங்கிற தைரியம் தான்.”

“அதுசரி… மாதவி, பிரேக் டைம் முடியப் போகுது. நான் வைக்கட்டுமா?”

“ம்…” சொன்னவள் சட்டென்று ஃபோனில் இதழ் பதித்தாள்.

“மாதூ…” செழியனின் குரல் கரகரத்தது.

“டாக்டர்… ஐ லவ் யூ.”

“லவ் யூ பேபி… லவ் யூ ஸோ மச்.” அந்தக் குரல் குழைந்து போனது.

0-0-0-0-0-0
ரூ

நடை பயின்று கொண்டிருந்தாள் அர்ச்சனா. மனம் குழம்பித் தவித்தது. அந்த அருண் அத்தனை பேர் மத்தியில் ஒரு நாள் தன்னைக் கை நீட்டி அடித்திருக்கிறான் என்று எவ்வளவு ஞாபகப்படுத்திக் கொண்டபோதும் நினைவடுக்குகளில் அது மறைந்து போயிருந்தது.

‘அடேங்கப்பா! என்னமாக் கோபம் வருது அவனுக்கு!’ கற்பகம் மகளை எப்போதும் வையும் ஒரு விஷயம் என்றால் அது அவள் கோபம் தான்.

‘பொண்ணுங்களுக்கு இத்தனை கோபம் ஆகாது அர்ச்சனா.’ அம்மா அடிக்கடி அவளிடம் சொல்லும் வார்த்தைகள் இவை. ஆனால் அருணின் கோபம் அதையும் மீறியதாக இருந்தது. ஏனோ அந்தக் கோபக்காரனை அவளுக்கு இப்போது லேசாகப் பிடிப்பது போல இருந்தது.
பிடிக்கிறது என்றால்… தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டாள் பெண். அண்ணியின் தம்பி. உறவு அதுதான் என்றாலும் அதையும் தாண்டிய உரிமை அவனிடம் இப்போது தோன்றியது.
ஏன்? அவனும் தான் அந்த உரிமையை எடுத்துக் கொள்ளவில்லையா? அன்று என் நிலைமையில் எந்தப் பெண் நின்றிருந்தாலும் அவன் உதவி செய்திருப்பான் தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இத்தனை உரிமையாக வார்த்தைகள் வந்து வீழ்ந்திருக்குமா?

‘அப்புறமாக் கன்னத்துல இன்னுமொன்னு குடுத்தாராமே! அடேங்கப்பா! இவர் குடுக்குற வரை என் கை என்ன பூப்பறிச்சுக்கிட்டு இருக்குமாமா?’
ரொம்பவே தைரியம் தான்.

மனதுக்குள் பேசியபடி நடந்த அர்ச்சனா சட்டென்று நின்றாள். ஜன்னல் வழியாக வந்த பூங்காற்று அவள் உள்ளக் கதவை மெதுவாகத் தட்டியது.

‘எதுவும் இல்லையென்றால் இத்தனை மெனக்கெட்டு எதற்குச் சுடிதார் அணிந்துகொண்டு அவன் வீட்டிற்குப் போக வேண்டும்?’
எப்போதும் போல எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஃபோனை எடுத்தவள் அவனை அழைத்தாள். நேரம் இரவு பத்தரை. ஒரு ரிங்கிலேயே அழைப்பை ஏற்றான் அருண்.

“சீனியர்!”

“எங்க இருக்கே?”

“ஏன்? வீட்டுல தான்.”

“ஓ…” அவன் குரலில் நிம்மதி தெரிந்தது.

“ஏன் சீனியர்? என்னாச்சு?”

“இல்ல… இந்த நேரத்துக்குக் கால் வரவும் பயந்துட்டேன்.”

“ஏன்? இந்த நேரத்துல நான் உங்களைக் கூப்பிடக் கூடாதா?”

“நீ என்னைக் கூப்பிட்டாலே மனசு கிடந்து அடிச்சுக்குது. எந்த ஏழரையை இழுத்து வெச்சிருக்கியோன்னு.”

“ஓஹ்ஹோ! தப்புத் தான். என்னோட நம்பரைப் பார்த்தாலே உங்களுக்கு அப்படித்தான் எண்ணத் தோணுதுன்னா அது என்னோட தப்புத் தான். அருண்…”

“அடிங்! பேரைச் சொல்லிக் கூப்பிட்டே… தொலைச்சிடுவேன்.”

“ஏன்! அப்போ எதுக்கு உங்களுக்குப் பெயர் வச்சிருக்கு? அந்த முல்லையும் காஞ்சனாவும் உங்களைப் பெயர் சொல்லித்தானே கூப்பிடுறாங்க?”

“அவங்களும் நீயும் ஒன்னா?”

“இல்லை… நான் வேற தான். அருண்… ஐ லவ் யூ!” அவள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சொல்லியே விட்டாள்.

“வாட்!” அருண் திகைத்துப் போனான்.

“ஏய்! உனக்குப் பைத்தியமாடி?”

“ஆமா… அருண் பைத்தியம். அதுக்கு இப்போ என்னாங்குறே?”

“இப்போ அங்க வந்தேன்னு வை… உன்னைக் கொன்னுடுவேன். மரியாதைன்னா என்னன்னு உனக்குத் தெரியாதா?”

“ஏன்? சீனியருக்கு அது ரொம்பத் தெரியுதோ?”

“உன்னைச் சொல்லிக் குத்தமில்லை ஆத்தா… உங்கம்மாவைச் சொல்லணும். பொண்ணாடீ வளர்த்து வெச்சிருக்காங்க?”

“டவுட் இருந்தா நீங்களே செக் பண்ணிக்கோங்க சீனியர்.”

“அதான் இன்னைக்குப் பார்த்தேனே… வயக்காட்டுல நிக்குற பொம்மைக்குச் சுடிதார் போட்ட மாதிரி வந்து நின்னியே!”

“ஓ… அப்போச் சுடிதார்ல இன்னைக்கு நான் அழகா இருக்கல்லையா?” அவள் குரலில் லேசான வருத்தம் தெரிந்தது. இந்தப் புறமாக அதை அருண் வெகுவாக ரசித்தானோ!?

“உனக்கு அப்படி வேற எண்ணம் இருக்கா?”

“ஃபிஃப்டீன் தௌசன்ட் ருப்பீஸ்… அந்தச் சுடிதாருக்கு.”

“ஃபிஃப்டி தௌசன்டா இருந்தாலும், உனக்கு அது அழகா இருக்கணுமே?”

“டேய் அருண்!” அவள் குரல் கோபத்தில் கிறீச்சிட்டது.

“இப்போ அங்க வந்தேன்னு வை…” அவன் குரல் அதட்டியது.

“வாங்க சீரியர்… தைரியம் இருந்தா வந்து பாருங்க. என்னமோ எனக்குக் குடுத்ததா அன்னைக்கு அத்தனை பேரு முன்னாடி சொன்னீங்களே, அதை உங்களுக்கு நான் குடுத்து அனுப்புறேன்.”

“அட! ஐய்யைய்யோ… எனக்குப் பயமா இருக்கே ஜூனியர்! என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க ஜூனியர். இத்தனை நாள் நான் பாதுகாத்து வெச்ச கற்பு ஜூனியர்.” கெத்தாக ஆரம்பித்தவன் கேலியாக முடிக்கவும் அர்ச்சனாவிற்குக் கோபம் வந்தது.

“கேலி பண்ணுறீங்களோ? நாளைக்கு இங்க வருவீங்கல்லே… அப்போத் தெரியும் உங்களுக்கு இந்த அர்ச்சனா யாருன்னு.”

“அதையும் பார்த்திடுறேன். ஆங்… சொல்ல மறந்துட்டேனே… நாளைக்குக் காலையில அம்மா மட்டும்தான் உங்க வீட்டுக்கு வருவாங்க ஜூனியர். எனக்குக் காலேஜ்ல முக்கியமான ஒரு வேலை இருக்கு. அதால நான் கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன். சின்னப் பையன்… கொஞ்சம் பார்த்துப் பதமாப் பண்ணுங்க ஜூனியர்.” இப்போதும் அவளைச் சீண்டியது அவன் பேச்சு.”
நைட் ட்ரெஸ்ஸின் முனையைக் கையால் பிடித்து முறுக்கிய படி கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள் பெண். அங்கே அருண் அதுவரை டைப் பண்ணிக் கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு இரு கைநீட்டி சோம்பல் முறித்தான். முகம் முழுக்கப் புன்னகை ஒட்டி இருந்தது.