oviyam-20

oviyam-20

நேரம் மாலை ஐந்து மணி.

உடலெல்லாம் பரபரக்க ஏர்போர்ட்டில் நின்றிருந்தாள் மாதவி. தனியாக… அது டாக்டரின் ஏற்பாடு. மாதவியும், ப்ளாக் ஆடியும் தங்கள் தலைவனுக்காகக் காத்து நின்றிருந்தார்கள். ட்ரைவர் காரைப் பார்க் பண்ணிவிட்டு, சாவியையும் இவள் கையில் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

மாதவிக்கு இருப்புக் கொள்ளவில்லை. கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்பாள். கொஞ்ச நேரம் அங்கும் இங்குமாக நடை பயில்வாள். காத்திருப்பு அதன் முழு ரூபத்தை அன்று அவளிடம் காட்டி இருந்தது.

விமானம் அரைமணி நேரத்திற்கு முன்பாகவே தரையிறங்கி விட்டது. பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்த வண்ணம் இருந்தார்கள். நேரத்தைக் கணக்கிட்டபடி ‘அரைவல்ஸ்’ வாசலையே பார்த்திருந்தாள் பெண்.

பிரசவ அறை வாசலில் நிற்கும் கணவனின் நிலை போல இருந்தது மாதவியின் மனநிலை. இந்த டாக்டரை எனக்கு எத்தனை மாதங்களாகத் தெரியும்? வியப்போடு அவள் மனது அவனையே வலம் வந்தது.

அவளை ஆட்கொண்டிருந்த எண்ணத்தின் நாயகன் தூரத்தே ட்ராலியை உருட்டிக் கொண்டு வருவது தெரியவும் அங்கிருந்த இருக்கை ஒன்றில் தொப்பென்று அமர்ந்து விட்டாள் பெண்.

நெஞ்சம் கொஞ்சம் படபடக்க உடம்பு இப்போது லேசாக வியர்த்தது. முயன்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் எழுந்து நின்றாள். செழியன் அங்கிருந்த படியே அவளைக் கண்களால் தேடுவது அவளுக்குப் புரிந்தது.

கொஞ்சம் ஜன நெருக்கடி இல்லாத இடமாக அவனுக்குத் தெரியும் வண்ணம் நகர்ந்து நின்றாள் மாதவி. அவளைப் பார்த்த மாத்திரத்தில் செழியனின் நடை சட்டென்று ஒரு நொடி நின்றது.

மனைவியின் மோகன எழிலுருவைக் கண்களால் ஒரு முறை அள்ளிப் பருகியவன் அங்கிருந்த படியே அவளுக்குக் கையை ஆட்டினான். மாதவியும் மகிழ்ச்சியாகக் கையை ஆட்டினாள். அத்தனை பேர் அங்கே கூடி நின்றதால் மாதவியால் கணவனைச் சட்டென்று நெருங்க முடியவில்லை. ஏதோ ஒன்று தடுக்க அமைதியாக நின்றிருந்தாள்.

ஆனால் செழியனுக்கு அது எதுவும் தோன்றியாகத் தெரியவில்லை. அவள் அருகில் வந்தவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“மாதூ…” அவன் குரலில் ஆசைப் பொங்கி வழிந்தது. மாதவி லேசாக நெளிய ஒரு புன்னகையோடு அவளை விடுவித்தான்.

“போலாமா?”

“ம்…” சின்னச் சிரிப்பு இப்போது அவள் இதழ்களில்.

கார் பார்க்கிங்கிற்கு இருவரும் வந்து சேர கீயை அவனிடம் நீட்டினாள் மாதவி.‌ வாங்கிக் கொண்டவன் ட்ராலியில் இருந்த பொருட்களைக் காரில் வைத்து விட்டு வந்தான்.

மாதவியும் ஏறி உட்கார காரைக் கிளப்பாமல் முழுதாக அவளைப் பார்த்தபடி திரும்பி உட்கார்ந்தான். அவன் பார்வை மாதவியை ஏதோ பண்ணியது.

“என்ன அத்தான் அப்படிப் பார்க்கிறீங்க?” என்றாள் ஒரு இள நகையோடு. அப்போதும் செழியன் வாய்திறந்து எதுவும் சொல்லி விடவில்லை. கைகள் இரண்டையும் அவள் புறமாக விரிக்க அந்தக் கைகளுக்குள் எந்தத் தாமதமும் இன்றிப் புகுந்து கொண்டாள் பெண்.

“ஏய் மாதவி… உன்னை விட்டுட்டு எப்படி இந்த ஒரு மாசமும் இருந்தேன் நான். என்னால நம்பவே முடியலை.” அவள் கூந்தலுக்குள் முகம் புதைத்துக் கொண்டு டாக்டர் புலம்ப அவன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள் மாதவி.

“டாக்டர்… இது கார் பார்க்கிங்.”

“ஆமால்லை.” அசடு வழிந்தவன் நேராக உட்கார,

“வீட்டுக்குப் போகலாமா அத்தான்?” என்றாள் மாதவி.

“நோ… நோ… இப்போ அங்க போய் நாம என்னப் பண்ணப் போறோம்?”

“அப்போ என்ன ஐடியாவாம்?” அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அம்மாவை அழைத்தான் செழியன்.

“செழியா! வந்துட்டியாப்பா?”

“ஆமாம்மா.”

“வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?”

“இல்லைம்மா… கொஞ்சம் லேட் ஆகும்.”

“பரவாயில்லை செழியா.‌ பாவம் மாதவி. நீ இல்லாம ரொம்பவே வாடிப் போய்ட்டா. சரியாச் சாப்பிடுறதும் இல்லை. பாதியாகிட்டா.” அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே மனைவியைத் திரும்பிப் பார்த்தான் இளஞ்செழியன். இளைத்துத்தான் தெரிந்தாள்.

“நல்ல ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போ. ரெண்டு பேரும் உக்கார்ந்து நல்லாச் சாப்பிடுங்க. உனக்கும் நாக்குச் செத்துப் போயிருக்கும். உங்கூடச் சாப்பிட்டாத்தான் அவளும் சரியாச் சாப்பிடுவா. வீட்டுக்கு வந்து லேட்டாச் சாப்பிட்டுக்கலாம்.” இருவருக்கும் நாகரிகமாகத் தனிமை ஏற்படுத்திக் கொடுத்தார் அந்தத் தாய்.

“சரிம்மா… வச்சிடட்டுமா?”

“ஓகேப்பா. பத்திரம். ரொம்ப லேட் பண்ணிடாத.”

“ம்… சரி.” பேச்சை முடித்தவன் மனைவியை ஒரு முறைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான்.

“என்ன டாக்டர்? சும்மாச் சும்மா சிரிக்கிறீங்க?” காரை ஸ்டார்ட் பண்ணியவன் அவள் கன்னத்தில் எட்டி ஒரு முத்தம் வைத்தான். கார் லேசாக வேகமெடுத்தது.

இருவரின் அருகாமை இருவருக்குமே இதமளிக்க அந்த மௌனத்தை அனுபவித்தார்கள் கணவனும் மனைவியும். செழியனின் கை வழக்கம் போல சீடி ப்ளேயரை ஆன் பண்ணியது.

‘கூதலான மார்கழி நீளமான ராத்திரி… நீ வந்து ஆதரி…’

பாடலும் அவர்களுக்கு ஏற்றாற்போல ஒலிக்க மாதவி வெளியே பார்த்தபடி சிரித்தாள்.‌ செழியனுக்கும் அவள் சிரிப்புத் தொற்றிக்கொண்டது. காரை அந்த உயர்தர ஹோட்டலின் முன்பாக நிறுத்தியவன் அவர்களுக்கென ஒரு தனி அறையை ஏற்பாடு பண்ணிக்கொண்டு உள்ளே போனான்.

“வீட்டுல அத்தை மாமா ஒன்னும் நினைக்க மாட்டாங்களா?”

“இதுல நினைக்க என்ன மாதவி இருக்கு?”

“இல்லை…” மாதவிக்கு ஏனோ இந்தத் தாமதம் அத்தனை உவப்பாக இருக்கவில்லை.

“இங்கப்பாருடா… வீட்டுக்குப் போனா இந்தத் தனிமை நமக்குக் கிடைக்காது. கொஞ்ச நேரம்தான். அதுக்கப்புறம் வீட்டுக்குப் போகலாம் என்ன?”

“ம்…” அரை மனதாகச் சம்மதித்தாள் மாதவி. இருவருக்குமாக சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சூடாக வந்தது.

“ஐயோ! என்னால இவ்வளவெல்லாம் சாப்பிட முடியாது டாக்டர்.”

“மாதவி… ரொம்ப மெலிஞ்சு போயிட்டே. அம்மா வேற நீ சாப்பிடுறதே இல்லைன்னு சொல்லுறாங்க. என்னாச்சு?”

“ஒன்னுமில்லை… நீங்க சாப்பிடுங்க டாக்டர். என்னோடதிலேயும் ஷெயார் பண்ணுவீங்களாம்.”

“அடிதான் வாங்கப் போற நீ. எல்லாத்தையும் சாப்பிட்டு முடிக்கலைன்னா எனக்குக் கெட்ட கோபம் தான் வரும்.” அவன் கோபத்தை அவள் கண்டு கொள்ளவே இல்லை. சிரிப்புடன் சாப்பிட ஆரம்பித்தவள் கால்வாசி கூட உண்டிருக்க மாட்டாள்.

“போதும் டாக்டர்.” என்றாள். கணவன் இப்போது அவளை டாக்டர் பார்வை பார்த்தான். அந்த அரைவட்ட உயர் ரக சோஃபாவில் அவனை நெருங்கி அமர்ந்தவள் அந்தத் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் கைகள் அவன் இடுப்பை வளைத்துக் கொண்டன.

“நீங்கச் சாப்பிடுங்க டாக்டர். நான் இப்படியே கொஞ்ச நேரம் உக்கார்ந்திருக்கேன். இடக்கையால் அவளை அணைத்துக் கொண்டவன் அவளுக்கும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விட்டான்.

“ஹாஸ்பிடல்ல என்ன விசேஷம் மாதவி? அங்கிள் எப்படி இருக்காங்க?”

“எல்லாம் நல்லாப் போகுது. சீஃபுக்கு நீங்க இல்லாதது தான் பெரிய குறை. எப்பப் பார்த்தாலும் செழியன் இருந்தா, செழியன் இருந்தான்னுச் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.”

“ம்… அந்த அரட்டையோட ஹஸ்பெண்ட் எப்படி இருக்காராம்?”

“நல்லா இருக்காராம்? விட்டா அவ உங்களுக்கு ஒரு கோயிலே கட்டிடுவாப் போல.”

“அது சரி… மாதவி உனக்கு வேற என்ன வேணும்?” சாப்பிட்டு முடித்தவன் டிஷ்ஷூவால் வாயைத் துடைத்துக் கொண்டு அவளுக்கும் துடைத்து விட்டான்.

“ஐஸ்கிரீம்.”

“என்ன?” சொன்ன மனைவியை வியப்பாகக் குனிந்து பார்த்தான் செழியன். ஏனென்றால் ஐஸ்கிரீம் அவளுக்கு அத்தனை பிடித்தமான விஷயம் இல்லை.

“இப்போச் சாப்பிடணும் போல இருக்கு.” மனைவி சொல்லவும் அவன் கண்கள் லேசாகச் சுருங்கியது. அவள் கண் இரப்பைகளை விரித்துப் பார்த்தவன், மணிக்கட்டைப் பிடித்து நாடியைப் பரிசோதித்தான். மாதவிக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.

‘டாக்டர் புத்தி.’ என்று அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும்‌ போதே அவன் கைகள் அவள் இடுப்புப் புடவையை விலக்கி விட்டு எதையோ பரிசோதிக்க ஆரம்பமானது. இப்போது மாதவி சுதாரித்துக் கொண்டாள். அவன் கைகளைச் சட்டென்று தட்டி விட்டாள்.

“டாக்டர்… நீங்க கார்டியோலாஜிஸ்ட் தான். சும்மா கைனோகோலாஜிஸ்ட் மாதிரி சீன் போடாதீங்க, சரியா?” சொன்னவள் எழுந்து வெளியே நடந்தாள்.

“ஏய் மாதவி!”

“ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமோட காருக்கு வந்து சேருங்க.” சொல்லிவிட்டு மாதவி கிடுகிடுவென்று காரை நோக்கிப் போய் விட்டாள்.

செழியனுக்கு அதற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. பில்லைச் செலுத்திவிட்டு அவள் கேட்ட ஐஸ்கிரீமோடு காருக்கு விரைந்து வந்தான்.

“மாதவி…” அவன் ஐஸ்கிரீமை நீட்ட வாங்கிக் கொண்டவள் முதல் ஸ்பூனை அவனுக்குத் தான் கொடுத்தாள். அவன் கண்கள் மனைவியை இப்போதும் கேள்வியாகப் பார்த்தது.

ஐஸ்கிரீமைக் காரின் டாஷ்பார்டில் வைத்தவள் அவள் ஹான்ட் பேக்கில் இருந்து எதையோ எடுத்து செழியனிடம் நீட்டினாள். அந்த வெள்ளைப் பட்டையில் அழகான இரண்டு சிவப்புக் கோடுகள். பார்த்த செழியனின் சர்வாங்கமும் நடுங்கியது! கைகள் நடுங்க… பேச்சற்றுப் போய் அமர்ந்திருந்தான்.

“எப்…போ…”

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே தெரியும்.”

“ஏன் சொல்லலை?”

“எதுக்கு? நீங்க அடுத்த ஃப்ளைட்டைப் புடிக்கிறதுக்கா?”

“மாதவி!”

“புரிஞ்சுக்கோங்க அத்தான்.”

“அம்மாக்குத் தெரியுமா?”

“ம்ஹூம்… உங்களுக்கிட்டச் சொல்லாம வேற யாருக்கும் சொல்ற ஐடியாவே இல்லை.” சுற்றுப் புறத்தை மறந்த செழியன் மாதவியை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.

“அழுத்தக்காரி… எப்படிடீ உன்னால முடிஞ்சுது? நானா இருந்திருந்தா எம் மண்டையே வெடிச்சிருக்கும்.”

“தெரியுமே… அதனால தான் சொல்லலை. டாக்டர் விடுங்க… வலிக்குது.”

“நல்லா வலிக்கட்டும். எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தா… ரெண்டு வாரம் எங்கிட்டச் சொல்லாம மறைச்சிருப்ப?!”

“நீங்கதான் ஜாலியா உங்க லண்டன் கேர்ள் ஃப்ரெண்ட்டோட ஊர் சுத்தினீங்களே. உங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான் சொல்லலை.”

“அடிங்!” அவன் அவளை இன்னும் இறுக்கிக் கொள்ள வாய்விட்டுச் சிரித்தாள் மாதவி. மனைவியின் இதழ்களில் முத்தமிட்டான் செழியன்.

0-0-0-0-0-0

வீடு மகிழ்ச்சியைத் தனதாக்கிக் கொண்டிருந்தது. செழியனும் மாதவியும் வீடு வந்து சேர்ந்த போது இரவு எட்டைத் தாண்டி விட்டது. வந்ததும் வராததுமாக அம்மாவிடம் விஷயத்தைக் கொட்டி விட்டான் மகன்.

கற்பகம் தன் முகத்தில் வந்து மோதிய சேதியில் ஆடிப்போய் விட்டார். மருமகளை முழுதாக அணைத்தவரின் கண்கள் கலங்கிப் போய் விட்டன. அர்ச்சனாவும் கொண்டாடித் தீர்த்து விட்டாள்.

“உங்க வீட்டுல தெரியுமா மாதவி?”

“இல்லை அத்தை.”

“ஏம்மா?” அத்தையின் கேள்வியில் கணவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண். அவன் முகத்திலும் புன்னகை இருந்தது.

“அது வந்து… அத்தை…” அவள் சொல்லத் தயங்கவும் கற்பகத்திற்கு எதுவோ புரிவது போல் இருந்தது.

“சரி விடும்மா. இந்த நேரத்துல சொன்னா அவங்களுக்குச் சங்கடமாகிப் போயிடும். இப்போக் கிளம்பி வரவும் முடியாது. காலைல சொல்லிக்கலாம்.”

“ம்…”

“செழியா… பத்திரமா மேலக் கூட்டிட்டுப் போப்பா.” மகனின் வெளிநாட்டுப் பயணத்தை முழுதாக மறந்து போன அன்னை மருமகளைத் தாங்கிக் கொண்டார்.

“ஏன் அண்ணி? பொண்ணு பொறந்தா நல்லா இருக்குமில்லை?”

“ஏய் அர்ச்சனா!‌ வாயை மூடு. இப்போ அதெல்லாம் பேசக் கூடாது. நீ பாட்டுக்கு எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டிருக்காத. புரியுதா?”

“ஏம்மா? எவ்வளவு ஹாப்பியான நியூஸ். காலேஜ்ல என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டச் சொல்றேனே.”

“சொன்னாக் கேக்கணும். இதெல்லாம் இப்போ…”

“விடுங்கம்மா… ஏதோ சந்தோஷத்துல சொல்லுறா.” அம்மாவை இடைமறித்து விட்டு ரூமிற்குள் வந்திருந்த டாக்டர் மனைவியை அணைத்துக் கொண்டான்.

“ஸோ… இதனால தான் சரியா சாப்பிடலையா?”

“ம்… அப்படி இல்லை டாக்டர். சாப்பிட முடியாம எல்லாம் இல்லை. சில நேரங்கள்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அவ்வளவுதான்.”

“வாமிட் இருக்கா?”

“ம்ஹூம்… அதெல்லாம் ஒன்னுமில்லை.” அவன் வந்ததே போதும் என்பது போல அவனோடு ஒட்டிக் கொண்டாள் பெண்.

“கனடால இருந்து வந்ததும் வண்டி பெரியாருக்கு ஒரு ட்ரிப் போகலாம்னு பெரிய ப்ளானோட வந்தேன் மாதவி. எல்லாம் காலி.” டாக்டர் பெருங்குரலில் சிரிக்கவும் மாதவி அவனைத் தள்ளி விட்டாள்.

“ஆமா… இல்லாட்டி நீங்க சும்மா தான் இருப்பீங்களாக்கும். ஃபோன்லயே அந்த வாய் அவ்வளவு பேசிச்சு…”

“ஏய்! இல்லையா பின்னே? எத்தனை நாளாச்சு எம் பொண்டாட்டியைச் சரியா நான் கட்டிப் பிடிச்சு.”

“ஆஹா… இனி அதெல்லாம் நடக்காது.”

“அடியேய்! நான் டாக்டர்டி. விட்டா இவ எனக்கேப் பாடம் எடுப்பாப் போல இருக்கு.” மனைவியை இழுத்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டவன் மிகக் கவனமாக அவளுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தான்.

***

மாதவியும் செழியனும் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து கீழே வந்துவிட்டார்கள். கருணாகரன் மகனைப் பார்த்ததும் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பே மகனுக்குச் சொன்னது, விஷயம் அப்பாவின் காதுவரைப் போய்விட்டது என்று.

முகம் லேசாகச் சிவக்கத் தலையைக் குனிந்து கொண்டான் செழியன். ஆனால் கருணாகரன் மகனை ஆரத் தழுவிக் கொண்டார். மாதவிக்கு நிற்பதா போவதா என்று ஒன்றும் புரியவில்லை. அந்தப் பாசப் பரிவர்த்தனையைப் பார்த்த படி நின்றிருந்தாள்.

இதுவரை மாமனார் அவளிடம் எதுவும் பேசியது கிடையாது. அதற்காக அவளைக் கவுரவக் குறைவாகவெல்லாம் நடத்தியது கிடையாது. ஆனால் இன்று வரை எதுவும் பேசியது கிடையாது.

அன்று திருமணத்தன்று அவள் நாவுக்கரசரின் வார்த்தைகளைப் பாடியபோது ஒரு அதிசயப் பார்வையை அவள் புறம் வீசியவர்தான். அதன் பிறகு மாதவியை அப்படி அவர் நின்று நிதானமாகப் பார்த்ததும் கிடையாது. இதற்கெல்லாம் அந்த மனிதர் வீடு தங்கினால் தானே!

மகனை விட்டு மெதுவாக விலகிய கருணாகரன், பக்கத்தில் நின்றிருந்த மாதவியிடம் வந்தார். அவர் கை மருமகளின் தலையை லேசாக வருடிக் கொடுத்தது.‌ இமைக்க மறந்து நின்றிருந்தாள் பெண்.

“பத்திரம்மா.” அதற்கு மேல் எதுவும் பேசாமல் போய் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டார். உணர்ச்சிப் பிழம்பாக நின்றிருந்த மனைவியை அழைத்துக்கொண்டு போய் டைனிங் டேபிளில் அமர வைத்தான் செழியன்.

“செழியன்… மாமா…” நாத்தடுமாற முணுமுணுத்த மனைவியை,

“ஷ்… சாப்பிடலாம் மாதவி.” என்று அடக்கிவிட்டான். அர்ச்சனாவும் வந்து அமர்ந்து கொண்டாள்.

“அம்மா சீக்கிரம்…”

“கொஞ்சம் பொறு.” எல்லாவற்றையும் மேசை மேல் கொண்டு வந்து வைத்த மனைவியை அழைத்தார் கருணாகரன்.

“ஏம்மா நீயும் வந்து உக்காரு. நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“என்ன கருணா… இந்நேரம் என்னப் பேசப் போறீங்க?”

“பேசாம வந்து உக்காரு.” கணவன் அதட்டலாகச் சொல்லவும் ஆச்சரியப் பட்டபடி வந்து உட்கார்ந்தார் கற்பகம். அத்தனை சீக்கிரத்தில் மனைவியிடம் இப்படி எரிச்சலாகப் பேசுபவர் அல்ல கருணாகரன். அதுவும் மருமகளின் முன்பாக.

“நம்ம அர்ச்சனாவுக்கும் வயசு ஏறுதில்லை. அதனால சீக்கிரமாவே ஒரு மாப்பிள்ளைப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.” வீட்டுத் தலைவன் இதைச் சொன்ன போது அங்கிருந்த ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு பாவம் காட்டியது. அர்ச்சனாவின் கை இட்லியோடு அந்தரத்தில் நின்றது.

“செழியா… நீ என்ன சொல்றே?”

“பார்க்கிறது ஒன்னும் தப்பில்லைப்பா. என்னைப் பொறுத்த வரைக்கும் இதுதான் சரியான வயசுன்னு நினைக்கிறேன்.”

“ம்… நீ என்ன சொல்றே கற்பகம்?”

“நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்குங்க.”

“ம்…” உறுமலாகப் பதில் சொன்னவர் சாப்பாட்டில் கவனமாகி விட்டார். அர்ச்சனாவின் முகம் சோபை இழந்து போனது. திடீரென்று அப்பா இப்படிப் பேசுகிறார் என்றால் ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே!

மாதவி அர்ச்சனாவை அண்ணார்ந்து பார்த்தாள். அவள் முழித்த முழி அத்தனை நன்றாகத் தெரியவில்லை மாதவிக்கு. கணவனைத் தன்னருகே குனியுமாறு ஜாடை காட்டியவள் செழியனின் காதில் ஏதோ முணுமுணுத்தாள். அர்ச்சனாவின் கண்கள் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

“ஏங்க? நம்ம இளங்கோ அண்ணாவை அர்ச்சனாக்குப் பார்க்கலாம் இல்லை?”

“இளங்கோவா?!”

“ம்… ரொம்ப நல்ல மாதிரி இல்லைங்க அவங்க?” கணவனும் மனைவியும் கிசுகிசுக்கவும் நிமிர்ந்து பார்த்தார் கருணாகரன்.

“என்ன செழியா? எதுவா இருந்தாலும் வெளிப்படையாப் பேசு.”

“இல்லைப்பா… நம்ம இளங்கோ அர்ச்சனாக்குச் சரியா இருப்பான்னு மாதவி சொல்றா. நமக்குத் தெரிஞ்ச பையன் தானே?”

“ம்…” கருணாகரன் எதுவும் பதில் பேசாமல் சொன்ன விஷயத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டார். ஆனால் அர்ச்சனாவிற்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ!

“ஏன் அண்ணி? ஊரா வீட்டுல இருக்கிற டாக்டர் தான் உங்கக் கண்ணுக்குத் தெரியுமா? உங்க வீட்டுல இருக்கிற டாக்டர் உங்கக் கண்ணுக்குத் தெரியாதா?” ஆங்காரமாகக் கேட்டவள் மாதவியை உறுத்துப் பார்த்தாள். மாதவி அதிர்ந்து போய் கணவனைப் பார்த்தாள் என்றால், கருணாகரன் அங்கிருந்த அனைவரையும் ஒரு ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்தார்.

error: Content is protected !!