Oviyam 21

டைனிங் டேபிளில் நிசப்தம் குடி கொண்டிருந்தது. சற்றுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கருணாகரன் ஒரு முறை அங்கிருந்தவர்களைக் கண்களால் அலசினார். ஆனால் எதுவும் பேசவே இல்லை.

“அர்ச்சனா! என்னப் பேசுறே நீ?” செழியன் சத்தமாக ஒரு அதட்டல் போட்டான்.

“ஏன் ண்ணா நீ என்னைச் சத்தம் போடுறே? நீ மட்டும் உனக்குப் பிடிச்சவங்களைத் துரத்தித் துரத்திக் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் பண்ணக்கூடாதா?”

“வாயைக் கிழிச்சிடுவேன் ராஸ்கல். அண்ணாக்கிட்டப் பேசுறப் பேச்சாடி இது?” கற்பகம் அதட்டினாலும் செழியன் அதன்பிறகு எதுவும் பேசவில்லை. கேட்ட விதமும், இடமும் தவறென்றாலும் அதில் நியாயம் இருந்ததால் மௌனித்து விட்டான்.
ஆண் என்பதற்காக தனக்கொரு நியாயம் அவளுக்கொரு நியாயம் என்பதில் அவனுக்கு அத்தனை உடன்பாடு இல்லை.

மாதவி கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் மௌனம் அவளைக் கொல்லாமல் கொன்றது.

“நான் என்ன சொல்ல வர்றேங்கிறதை முதல்ல புரிஞ்சுக்கோ அர்ச்சனா. இளங்கோ அண்ணா உனக்கு எல்லா விதத்திலயும் பொருத்தமா இருப்பாங்க. நான் அதைத்தான் சொல்ல…”

“அண்ணீ! திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க. எரிச்சலா வருது.” மாதவியை முழுதாக முடிக்க விடாமல் அவள் மேல் பாய்ந்தாள் இளையவள். செழியனின் கண்கள் அந்தப் பேச்சில் சிவந்து போனது.

மாதவிக்கு நிலைமையின் வீரியம் புரியவில்லை. ஏதோ அர்ச்சனா அருண் மேல் பிரியப்படுகிறாள் போலும். எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வாள் என்ற அடிப்படையிலேயே அவள் பேச்சு இருந்தது.

“அருண் உனக்குச் சரிவர மாட்டான் அர்ச்சனா.”

“அதை நான் சொல்லணும் அண்ணி.” அந்த ‘நான்’ இல் அத்தனை அழுத்தம்.
“உனக்கென்ன தெரியும்? நீ சின்னப் பொண்ணு அர்ச்சனா.”

“அப்படி யாரு சொன்னா? எனக்குத்தானே மாப்பிள்ளை பார்க்குறீங்க?”

“மாப்பிள்ளைப் பார்க்குறாங்க… சரிதான். அதுக்காக அந்த மாப்பிள்ளை யாருன்னு நீயே முடிவு பண்ணுவியா?”

“வேற யாரு பண்ணணும்? ஏன்? இப்போ என்னோட செலக்ஷன்ல என்னக் குறையை நீங்க கண்டுட்டீங்க?”

“உன்னோட அம்மா அப்பா உனக்கு ரொம்ப லக்ஷரியா ஒரு லைஃபைத் தந்திருக்காங்க. அதை அருணால உனக்குத் தர முடியாது.”

“இதெல்லாம் பார்த்து வர்றது லவ் கிடையாது.”

“இப்போப் பேசுறதுக்கு இதல்லாம் நல்லா இருக்கும். ஆனா ப்ராக்டிகலுக்குச் சரி வராது அர்ச்சனா… புரிஞ்சுக்கோ.”

“இங்க அத்தனைப் பேரும் அமைதியா இருக்காங்க. நீங்க மட்டும் ஏன் அண்ணி இப்படிக் குதிக்குறீங்க?”

“ஏன்னா நீ பேசுறது என் தம்பியைப் பத்தி. அருண் இதுக்கு ஒருக்காலமும் சம்மதிக்க மாட்டான்.”

“முறுக்கிக்கிட்டுத் திரிஞ்ச உங்க தம்பி என் வழிக்கு வந்து ரொம்ப நாளாச்சு.” அர்ச்சனாவின் அந்தப் பேச்சில் மாதவி கதிகலங்கிப் போனாள். இப்போது இளையவளின் முகத்தில் அவ்வளவு கர்வம்!

“என்னால அருண் மனசை மாத்த முடியும். நான் சொன்னா அவன் கேப்பான்.” மாதவி இதைச் சொன்ன போது அர்ச்சனா நாற்காலி கிறீச்சிட எழுந்து நின்றாள். கண்கள் குரோதத்தைக் கக்கியது.

“உங்களால முடிஞ்சா செஞ்சுப் பாருங்க அண்ணி. இதே அண்ணன் உங்கப் பின்னாடி அலைஞ்சப்போ அதைக் கண்டுக்காம வீட்டுல பார்த்த மாப்பிள்ளைக்குத் தலையாட்டின ஆளுதானே நீங்க? நீங்க இப்படித்தான் பேசுவீங்க. உங்களை மாதிரி என்னால இருக்க முடியாது.” ஆக்ரோஷமாகச் சொல்லிவிட்டுக் காலேஜுக்குக் கிளம்பி விட்டாள் அர்ச்சனா. மாதவி சர்வாங்கமும் அதிர அமர்ந்திருந்தாள்.

என்ன மாதிரியான வார்த்தைகள் இவை? திராவகம் போல அவள் நெஞ்சைச் சுட்டுப் பொசுக்கிய அந்தக் கேள்வியில் மாதவியின் கண்கள் குளமாகின.

கற்பகம் இதுவரை டைனிங் டேபிளை ஆதாரமாகப் பிடித்தபடி நின்றிருந்தவர் இப்போது நாற்காலியில் அமர்ந்து விட்டார். அர்ச்சனாவின் வார்த்தைகள் மிகவும் அதிகப்படி என்று தோன்றினாலும் யாருக்காக வாயைத் திறப்பது என்று அவருக்குப் புரியவில்லை. ஆண்கள் இருவரும் இதுவரை எதுவுமே பேசவில்லை.

ஆனால் மாதவிக்கு அப்போது பேசவேண்டும் போலத் தோன்றியது. பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக‌ மௌனமாக இருப்பது நல்லதுதான். ஆனால் இப்போது அவள் மௌனமாக இருந்தால் பிற்பாடு பிரச்சனைகள் வருமோ என்று அஞ்சினாள் பெண்.

இளஞ்செழியனைத் திரும்பிப் பார்த்தாள். கண்கள் சிவக்க எதையோ விழுங்கி ஜீரணிப்பது போல அமர்ந்திருந்தான்.

அவனிடமிருந்து தனக்கு எந்த உதவியும் கிடைக்காது என்று புரியவே தானே களத்தில் இறங்கினாள்.

“அத்தை…” மாதவியின் குரலில் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தார் கற்பகம். முகம் வெளிறிப் போய் இருந்தது.

“உங்கப் பையனை எந்தப் பொண்ணுமே வேணாம்னு சொல்ல மாட்டா அத்தை.” மாதவி ஆரம்பிக்கவும் செழியன் குறுக்கிட்டான்.

“மாதவி… கொஞ்சம் சும்மா இரு.”

“இல்லைங்க… இப்போ நான் பேசலைன்னா அது பெரிய தப்பாப் போயிடும்.” இப்போது ஒரேயொரு கணம் கருணாகரன் மருமகளைப் பார்த்தார். ஆனால் மாதவி எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள். பேசுவதே அவருக்காகத்தானே!

“எங்க வீட்டுல நான் மூத்த பொண்ணு அத்தை. என்னோட ஒவ்வொரு செயலும் என் குடும்பத்தை, என் தம்பியோட எதிர்காலத்தைப் பாதிக்கும். மெடிஸின் படிக்கிறது எங்கிறது உங்களுக்கு வேணாச் சுலபமா இருக்கலாம். ஆனா எங்களைப் பொறுத்த வரை அது வாழ்நாள் சாதனை அத்தை.”

“மாதவி…”

“சாதாரணமான குடும்பம் அத்தை. அம்மா அப்பாவோட கஷ்டம் என்னன்னு நல்லாவே தெரியும். உங்க மகனுக்குச் சட்டுன்னு சம்மதம் சொல்லிட்டு நிம்மதியா இருந்திருக்கலாம். ஆனா அப்படிச் சுயநலமா முடிவெடுக்க முடியலை. இதுல உங்கக் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கு. என்னால இங்க எந்தப் பிரச்சனையும் வந்திரக்கூடாது. இதையெல்லாம் நான் அப்போ யோசிச்சேன் அத்தை.”

“புரியுது மாதவி. அந்தக் கழுதை ஏதோ புரியாமப் பேசுறா.”

“என்னோட தனிப்பட்ட முடிவுகளுக்கு இடம் குடுக்கிற அளவுக்கு என்னோட நிலைமை அப்போ இருக்கலை அத்தை. மிடில் கிளாஸ் குடும்பம்னாலும் சுயமரியாதையோட வாழணும்னு நினைப்போம். ஏணி வெச்சாக்கூட உங்களுக்கும் எங்களுக்கும் சரியா வராது அத்தை.” இதை மாதவி சொல்லும்போது செழியன் கோபமாக எழுந்து மேலே போய்விட்டான். ஆனால் கருணாகரன் அப்படியேதான் அமர்ந்திருந்தார். கற்பகத்தின் முகத்தில் கவலை மண்டியது.

“போதும் மாதவி… இப்போ நீ சந்தோஷமா இருக்கணும். இந்தப் பழங்கதையை விடு.”

“இதையே தான் அப்பவும் நான் உங்க மகன்கிட்டச் சொன்னேன். இப்படித்தான் அன்னைக்கும் கோபப்பட்டார். ஆனா என்னால என்னப் பண்ண முடியும் சொல்லுங்க? அர்ச்சனா தப்புத் தப்பா என்னென்னமோ பேசுது அத்தை.”

“விடு மாதவி. நீ மேல போ. அவன் வேற முறுக்கிக்கிட்டுப் போறான். போய் அவனை என்னன்னு பாரு.” கற்பகத்தின் உந்துதலில் மாடியை நோக்கிப் போனாள் மாதவி. யாரும் சரியாகச் சாப்பிட்டிருக்கவில்லை

“மாதவி… இந்தாம்மா, இந்தப் பாயாசத்தை எடுத்துக்கிட்டுப் போ. ரெண்டு பேரும் சாப்பிடுங்க.”

“ம்…” அத்தைக் கொடுத்ததை வாங்கிக்கொண்டு மாதவி மேலே போகக் கணவரைப் பார்த்தார் கற்பகம்.

“என்னங்க இதெல்லாம்? யாரு என்ன சொன்னாங்க?”

“யாரும் எதுக்குச் சொல்லணும் கற்பகம். அதுதான் உம் பொண்ணு எல்லாத்தையும் சொல்லிட்டாளே.”

“உண்மையைச் சொல்லுங்க. உங்கக் காதுக்கு என்ன வந்துது?”

“ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு ஊரைச் சுத்துறாங்களாம்.”

“ஒருவேளை சொந்தம் தானேன்னு…” மனைவி முடிப்பதற்குள் கணவனின் பார்வை அவர் பேச்சை நிறுத்தியது.

“அந்த அளவுக்கு நான் இன்னும் முட்டாள் ஆகல்லை.”

“ஐயையோ! நான் அப்படிச் சொல்லலைங்க.”
நிதானமாக உண்டு முடித்த கருணாகரன் கையைக் கழுவிக் கொண்டார். தான் எத்தனை பெரிய நிதானமான நிர்வாகி என்பதை அவரது ஒவ்வொரு செய்கைகளும் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

“என்ன கற்பகம்? பாயாசம் எனக்கும் உண்டா? இல்லையா?” அந்தக் கேள்வியில் சட்டென்று பாயாசத்தை கணவரிடம் நீட்டினார் கற்பகம். அவரின் நிதானம் இவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

எதுவும் பேசாமலேயே கம்பெனிக்குக் கிளம்பிவிட்டார் மனிதர்.

***
மாதவி ரூமிற்கு வந்தபோது செழியன் படுக்கையில் கால்நீட்டி அமர்ந்திருந்தான். முகத்தில் அத்தனை வேதனை தெரிந்தது.

“டாக்டர்… பாயாசம்.”

“அங்க வை மாதவி.” முகத்தை அந்தப்புறமாகத் திருப்பிக் கொண்டான். ஆனால் மாதவி விடவில்லை.

“அத்தை மெனக்கெட்டு சந்தோஷமாப் பண்ணி இருக்காங்க. குடிங்க அத்தான்.” அவள் வற்புறுத்தலில் கிண்ணத்தை வாங்கிக் கொண்டவன் அதைப் பருக ஆரம்பித்தான். பாதி தீரும் வரைப் பொறுமையாக இருந்தவள் மீதியை அவனிடமிருந்து வாங்கி அவள் பருக ஆரம்பித்தாள். செழியனுக்கு அவள் மீதிருந்த அத்தனை கோபமும் காணாமற் போயிருந்தது.

“எதுக்குடீ உன்னை நீயே குறைச்சிக்குற?”

“இல்லையே… உள்ளதைத்தானே சொன்னேன்.”

“அடிப் பின்னிடுவேன்! எது உள்ளது? இளஞ்செழியனோட பொண்டாட்டி நீ.”

“அது இப்போதானேங்க?”

“இதை மட்டும் பேசு, போதும். பழங்கதை எனக்குத் தேவலை.”

“ஆனா அர்ச்சனா பழங்கதையெல்லாம் பேசினாளே?”

“ஒரு மாசம் நான் நாட்டுல இல்லை. என்னென்னமோ பேசுறீங்க. மண்டை வெடிக்குது மாதவி.”

அதற்கு மேல் என்ன பேசுவதென்று இருவருக்குமே புரியவில்லை. மாதவி மௌனமாக செழியனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“கொஞ்சம் டயர்டா இருக்கு அத்தான்.” அவன் கைகள் மாதவியை இதமாக வருடிக் கொடுத்தது.

0-0-0-0-0-0
“வாங்க மாப்பிள்ளை! வாம்மா மாதவி.” அமுதவல்லி பரபரப்பாக வரவேற்றார். கூடவே உமாசங்கர். இன்று எல்லோரும் வீட்டில்தான் இருந்தார்கள். இவர்கள் வருவதற்கு முன்பே கற்பகம் ஃபோன் பண்ணிவிட்டார். அதனால் வீடு கலகலவென்று இருந்தது.

“உட்காருங்க மாப்பிள்ளை.”

“இருக்கட்டும் மாமா.” சொன்ன செழியனின் விழிகள் அருணைத் தேடின.

“அருண் எங்க அத்தை?”

“குளிக்கிறான் மாப்பிள்ளை. இப்போ வந்திடுவான்.”

“பரவாயில்லை… ஆறுதலாவே வரட்டும்.” தம்பியின் பெயரைச் சொன்ன போது மாதவியின் முகம் லேசாக வாடியது. ஆனால் எதையும் அப்போது காட்டிக்கொள்ளவில்லை.
பாவம் அம்மா அப்பா. இது போன்ற சந்தோஷங்கள் எல்லாம் அவர்களுக்கு அடிக்கடி கிடைப்பதில்லை. அப்படி அபூர்வமாகக் கிடைப்பதை அவர்கள் அனுபவிக்கட்டுமே!

ஸ்வீட் பலகாரம் என்று வீட்டில் நெய் வாசம் கமகமத்தது. அமுதவல்லி பரிமாறிக் கொண்டிருக்கும் போது அருண் வெளியே வந்தான்.

“மாதவி… வந்துட்டியா? வாங்க அத்தான்.” வரவேற்றவன் மாதவியை வந்து அணைத்துக் கொண்டான்.

அங்கிருந்த அனைவருக்குமே அந்தக் காட்சி கொஞ்சம் நெகிழ்ச்சியாகவே இருந்தது.

“ஏம்மா? அப்போ மாதவி குழந்தைக்கு நான் மாமாவா?”

“ஆமா… பின்னச் சும்மாவா? சீக்கிரமா ஒரு வேலைக்குப்போய் இப்போ இருந்தே சேமிச்சு வை. மாதவி குழந்தைக்கு நீதான் தாய்மாமன். எல்லாச் சீரும் நீதான் செய்யணும்.”

“அதை விட்டா எனக்கு வேற என்ன வேலை இருக்கு. ஜமாய்ச்சுட மாட்டேன்.” அந்தக் குரலிலும் முகத்திலும் கள்ளம் கபடம் இருப்பது போல இளஞ்செழியனுக்குத் தெரியவில்லை.

“என்னம்மா செய்யுது? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“ஒன்னுமில்லைப்பா… லேசா டயர்டா இருக்கு.”

“வா மாதவி, வந்து ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” அமுதவல்லி மகளை அழைத்துக்கொண்டு ரூமிற்குள் போகவும் செழியன் வீட்டுக்கு வெளியே வந்தான்.

“அத்தான்… உங்க கனடா ட்ரிப் எப்படிப் போச்சு?” கேட்டபடியே வந்த அருணைத் திரும்பிப் பார்த்தான் செழியன்.

“என்ன ஆச்சு அத்தான்?”

“உங்கிட்டக் கொஞ்சம் பேசணும் அருண். ஆனா இங்க வச்சு வேணாம்.”

“ஓ… இதோ பைக் கீயை எடுத்துட்டு வந்தர்றேன்.” மாமனும் மச்சானும் புறப்பட்டு வெளியே கிளம்பி வந்துவிட்டார்கள். ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலையின் ஓரம் வண்டியை நிறுத்தினான் அருண்.

“சொல்லுங்க அத்தான்?”

“உனக்கும் அர்ச்சனாவுக்கும் ஏதாவது பிரச்சனையா அருண்?”

“அத்தான்… இல்லையே…”

“அப்போ என்னதான் நடக்குது? அர்ச்சனா என்னென்னமோ சொல்றா? வீட்டுல இன்னைக்குப் பெரிய கலவரம் ஆகிப்போச்சு.”

“அத்தான்?”

“எனக்கு ஒழுங்கா பதில் சொல்லு அருண். உங்கக்காவை நான் எவ்வளவு தூரம் நேசிச்சுக் கல்யாணம் பண்ணினேன்னு உனக்கு நல்லாவே தெரியும். நான் காதலுக்கு எதிரி கிடையாது. ஆனா… உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன இருக்குன்னு எனக்குத் தெளிவாத் தெரியணும்.”

“அத்தான்… அது…”

“எம் முகத்தைப் பார்த்துப் பேசு அருண்.”

“அன்னைக்கு ஜூனியர்ஸ் அர்ச்சனாக்கிட்டப் பிரச்சனை பண்ணினப்போ…” என்று ஆரம்பித்த அருண் நடந்தது அனைத்தையும் செழியனிடம் சொல்லி முடித்தான்.

“ஓ… இவ்வளவு தூரம் வந்திடுச்சா?”

“அத்தான்… சாரி… நான் வேணும்னு எதுவும் பண்ணலை.”

“அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம்தான் அருண். ஏன்னா நீங்க ரெண்டு பேரும் ஆளாளுக்குப் பழிவாங்கக் கிளம்பிடுவீங்களோன்னு நான் ரொம்பவே பயந்துட்டேன்.”

“வீட்டுல… என்ன பிரச்சனை?”

“அப்பாக்கு விஷயம் தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். அர்ச்சனாக்கு மாப்பிள்ளைப் பார்க்கலாம்னு பேச்சை ஆரம்பிச்சார். அதுக்கு அர்ச்சனா பொங்கிட்டா. உன்னைப் பத்தின பேச்சு வந்ததும் மாதவியும் பதில் சொன்னா. பெரிய வாக்குவாதம் ஆகிப்போச்சு.”

“ஓ…”

“இந்தக் கல்யாணத்துக்கு மாதவியோட முழு எதிர்ப்பு உண்டு அருண்.”

“அத்தான்!”

“உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அருண். நல்ல பையன், டாக்டர்… உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அது எல்லாத்தையும் தாண்டி நீ மாதவியோட தம்பி. உன்னைவிட நல்லப் பையன் வேற எங்கத் தேடினாலும் கிடைக்காது.”

“……………..”

“ஆனா இதுக்கு நடுவுல மாதவியை இழுக்காதீங்க. அவ கண் கலங்குறதை என்னாலப் பார்க்க முடியாது.”

“ஐயோ! என்னத்தான் இப்படியெல்லாம் பேசுறீங்க?”

“இன்னைக்கு அதான் நடந்துச்சு. அர்ச்சனா மாதவியை வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசிட்டா. அவளோட சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம் அருண். அதுவும் இந்த மாதிரி நேரத்துல அவளோட சந்தோஷம் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் அருண்.”

“புரியுது அத்தான்.”

“மாதவிக்கு சுயநலமா யோசிக்கத் தெரியாது. அது அர்ச்சனாக்குப் புரியலைன்னாலும் அருணுக்குப் புரியணும்.”

“அத்தான்!”

“இதுக்கு மேல பேச நான் விரும்பலைப்பா. போகலாம்.” அத்தோடு பேச்சு முடிந்தது என்று செழியன் கிளம்ப வேறு வழியில்லாமல் கூடவே கிளம்பினான் அருண்.

0-0-0-0-0-0
மாதவியும் செழியனும் கிளம்பும் வரைக் காத்திருந்து வெளியே கிளம்பினான் அருண். வழமையாக அவர்கள் மீட் பண்ணும் இடம் அல்லாமல் ஒரு பார்க்கிற்கு அர்ச்சனாவை வரச்சொல்லி இருந்தான். அவன் வந்து சற்று நேரத்திற்கு எல்லாம் பெண்ணும் வந்து விட்டாள்.

“இன்னைக்கு என்ன நடந்துச்சு வீட்டுல?” அருணின் குரலில் காரம் இருந்தது.

“ஓ… அதுக்கிடையில உங்கக்கா பத்த வெச்சுட்டாங்களா?”

“விட்டேன்னா ஒரு அறைப் பல்லுப் பறந்துரும். தேவையில்லாதப் பேச்சுப் பேசாம என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லு.” அவன் ஆணையில் அவள் கண்களில் தீப்பொறி பறந்தது.

“அப்பா இன்னைக்குக் கல்யாணப் பேச்சை எடுத்தாங்க.”

“என்னத் திடீர்னு? செகன்ட் இயர் படிக்கிற பொண்ணுக்கு இப்போ எதுக்குக் கல்யாணம்?”

“அதை எங்கப்பாக்கிட்டத் தைரியம் இருந்தாப் போய்க் கேளு அருண்.”

“எப்பக் கேக்கணும்னு எனக்குத் தெரியும். அதுக்கு நீ என்னை கைட் பண்ணத் தேவையில்லை. உங்கப்பா நாடி உனக்குப் பிடிபடாமலா இருக்கும்? சும்மாச் சொல்லு.”

“அந்தப் பரதேசி சொல்லி இருப்பான் அவங்க அப்பாக்கிட்ட.”

“யாரு? மினிஸ்டர் பையனா?”

“ம்…”

“அப்போ உங்க அப்பா ஆழம் பார்த்திருக்காரு. அது புரியாம நீயும் அவருக்கு எடுத்துக் குடுத்திருக்க?”

“அவரு ஆழம் தான் பார்க்குறார்னு எனக்கும் தெரியும். எதுக்கு மறைக்கணும்? நானும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கிட்டுத் தான் இருந்தேன். கிடைச்சதும் யூஸ் பண்ணிக்கிட்டேன்.”

“ஓ… அதோட பின்‌ விளைவுகளைப் பத்தி யோசிச்சியா? இல்லை… எங்க வீட்டுல இதைப்பத்திப் பேசப் போறேன்னு எங்கிட்டத்தான் ஒரு வார்த்தை சொன்னியா?”

“ஒவ்வொன்னுக்கும் உங்கிட்ட வந்து பர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க என்னால முடியாது அருண்.”

“ஒவ்வொன்னுக்கும் உன்னை எங்கிட்ட வந்து பர்மிஷன் கேக்கச் சொல்லி நான் சொல்லலை. ஆனா நீ இப்போப் பேசி இருக்கிறது ரொம்பப் பெரிய விஷயம். அதைப்பத்தி நீ எங்கிட்ட கண்டிப்பா டிஸ்கஸ் பண்ணி இருக்கணும்.”

“இப்போ அப்படி நான் என்னத் தப்புப் பண்ணிட்டேன்? நம்ம லவ்வைப் பத்தி வீட்டுல பேசினேன். அது ஒரு குத்தமா?”

“குத்தம்தான். உங்கப்பா இதைத்தான் எதிர்பார்த்திருக்காரு. ஒன்னுமேயில்லை… இப்போ அவரால ஈஸியா என்னை ஆட்டத்துல இருந்து வெளியே கொண்டு வர முடியும்.” அருண் கோபமாக இதைச் சொன்னபோது அர்ச்சனா அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“அழகா என்னைக் கூப்பிட்டு, தம்பி நீங்க என்னப் பண்ணுறீங்கன்னு கேப்பார்.”

“ஏன் உனக்கென்ன குறைச்சல்? தாராளமாச் சொல்லு.”

“என்னன்னு? இப்போதான் இன்டெர்ன் பண்ணுறேன். இதுவரைக்கும் அப்பா, அக்கா சம்பாத்தியத்துல உக்கார்ந்து படிச்சிக்கிட்டு இருந்தேன். இதுவரைக்கும் நானா ஒரு சல்லிக்காசு சம்பாதிச்சதில்லைன்னா?”

“……………”

“என்ன சத்தத்தைக் காணோம்? இதுதான் நிதர்சனம். என்னமோ உங்கப்பாப் பெரிய ஹிட்லர், அவருக்குப் பயந்துக்கிட்டு இந்த அருண் பேசாம இருக்கான்னு நினைச்சியா? ஒரு அப்பாவா அவர் கேக்கப்போற நியாயமான கேள்விகளுக்கு இப்போ எங்கிட்டப் பதில் இல்லை. அதைத் தயார் பண்ணிக்கிட்டு நானா அவர்கிட்டப் பேசி இருப்பேன். பொண்ணை அவராக் குடுத்தாச் சந்தோஷம். இல்லைன்னா என்னப் பண்ணுறதுன்னு எனக்குத் தெரியும். இதுக்கிடையில நீ எதுக்கு முந்திரிக் கொட்டை மாதிரி வேலை பார்த்திருக்க?”

“அப்போ உங்க அக்காப் பேசினது சரியா?”

“அப்படி என்னப் பேசிட்டா?”

“இளங்கோவை அர்ச்சனாக்குப் பார்க்கலாமேன்னு சொன்னாங்க.”

“நமக்குள்ள இருக்கிற உறவு தெரிஞ்சு சொல்லி இருந்தாத் தப்பு. அவளுக்குத்தான் எதுவும் தெரியாதே. எதார்த்தமா சொல்லி இருப்பா. இதுக்கு நீ ஏன் குதிக்கிறே?”

“சரி… முதல்ல தெரியலை. அதான் அப்புறமா நான் சொல்லிட்டேன்ல. அதுக்கப்புறமும் தேவையில்லாமப் பேசினா என்ன அர்த்தம்?”

“என்னவாம்?”

“நீங்க எனக்குச் சரிவர மாட்டீங்களாம்.”

“அதுதானே இப்போ உண்மை. அதை உங்கப்பா சொன்னா எனக்குக் கௌரவக் குறைச்சல்னு அவளா முந்திக்கிட்டா.”

“ஏன்? அந்த உண்மை என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கும் போது உங்களுக்கு ஞாபகம் வரலையா?” இப்போது அருண் கண்களை மூடிக்கொண்டான். முகத்தில் வலி தெரிந்தது.

“அடிக்கடி ஞாபகம் வந்தது அர்ச்சனா. அதால தான் நான் ஒதுங்கி ஒதுங்கிப் போனேன். என்னோடத் தப்புத்தான்.” அருணின் இந்தக் குரல் அர்ச்சனாவை ஏதோ பண்ணியது.

“அருண்! நான் என்ன சொல்…”

“போதும் நிறுத்து அர்ச்சனா. தகுதி தெரிஞ்சு நான் ஆசைப்பட்டிருக்கணும். தப்புப் பண்ணிட்டேன்.”

“என்னத் தப்புப் பண்ணிட்டேன் தப்புப் பண்ணிட்டேன்னு புலம்புறே? இதைப்பாரு அருண்! உங்கக்கா மாதிரி மனசுல ஒன்னை வச்சுக்கிட்டு அப்பாப் பார்க்குற மாப்பிள்ளைக்குத் தலையாட்ட என்னால முடியாது.”

“ஏய்! அவளைப் பத்தி ஏதாவது பேசினே… கொன்னுடுவேன்.”

“ஏன்? ஏன் பேசக் கூடாது? நான் நல்லாப் பேசுவேன். எல்லாம் அவங்களாலதான் வந்தது. வாயை மூடிக்கிட்டுச் சும்மா இருக்க வேண்டியது தானே? பெரிய இவங்களாட்டம் பேச வந்துட்டாங்க. அவங்க சொன்னா அவங்கத் தம்பி கேப்பாங்களாம். தம்பி மனசை அவங்க மாத்துவாங்களாம். அதையும் தான் பார்ப்போமே!”

கேலியும் கோபமும் கலந்து மாதவியை அர்ச்சனா சரமாரியாக வைது கொண்டிருக்க அருணுக்கு அத்தனை ஆவேசம் வந்தது. தனக்காகத் தன் தமக்கை எத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்பதெல்லாம் இவளுக்குத் தெரியுமா?

கை நிறையச் சம்பாதித்துக் கொண்டு, தனக்காக ஒரு பைசா கூடச் செலவு பண்ணாமல் தம்பிக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த மாதவியின் அருமை இவளுக்குத் தெரியுமா? கோபம் தலைக்கேற அர்ச்சனாவின் அருகில் வந்தவன் இடது கையால் அவள் கழுத்தை நெரித்தான்.

“ஆமா! கேப்பாண்டீ… மாதவியோட தம்பி அவ வேணாம்னு உன்னைச் சொன்னாக் கண்டிப்பாக் கேப்பான். உன்னை நினைச்சப் பாவத்துக்கு நீ மட்டும் போதும்னு காலம் முழுக்க பிரம்மச்சாரியா இருந்தாலும் இருப்பேனே ஒழிய, மாதவிக்குப் பிடிக்காத உன்னைத் திரும்பியும் பார்க்க மாட்டேன்.”

கர்ஜித்தவன் அவளை உதறித் தள்ளிவிட்டு பைக்கை நோக்கிப் போய்விட்டான். பைக் சீறிப் பாய்ந்தது. தன்னந்தனியாக அந்தப் பார்க்கில் நின்றிருந்தாள் அர்ச்சனா.

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத்தானடா… வாங்கிப் போன என் இதயத்தின் நிலைமை என்னடா? தாங்கிப் பிடிக்க உன் தோள்கள் இல்லையே… தன்னந்தனிக் காட்டில் எந்தன் காதல் வாட…