அந்த ப்ளாக் ஆடி லைப்ரரியின் வாசலில் நின்றிருந்த கொன்றை மரத்தின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. போருக்குப் போகும் இளவல்கள் தங்கள் உயர்ஜாதிக் குதிரைகளுக்கு தாகசாந்தி அளிப்பது போல இருந்தது அந்தக் காட்சி.
காரில் சாய்ந்தபடி நின்றிருந்தான் இளஞ்செழியன். யாரின் வருகையையோ எதிர்பார்த்து நின்றிருப்பது போல இருந்தது அவன் தோற்றம்.
எத்தனை பெரிய உயரத்தில் இருந்த போதும் அதை என்றும் எண்ணிக் கர்வம் கொள்ளாதவன் அவன். அதனால் எல்லோரோடும் இலகுவாக செழியனால் பழக முடியும்.
லைப்ரரியை விட்டு அருண் வெளியே வரவும் அவனையே பார்த்தபடி இருந்தான் செழியன். நல்ல நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான் பையன். கட்டுக்கோப்பான உடம்பு. மாதவியின் தம்பி என்று அந்த எடுப்பான முகத்தைப் பார்த்தாலே சொல்லி விடலாம். ஏதோ ஒரு சொந்தம் அவன் மேல் உருவாக வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்திருந்தான் செழியன்.
இது எதுவும் அருணின் கவனத்தில் படவில்லை. நாளை முக்கியமானதொரு பரீட்சை இருந்ததால் சில தரவுகளுக்காக லைப்ரரி வரை வந்திருந்தான். மிகவும் களைப்பாக இருந்ததால் வீடு போனால் போதும் என்றிருந்தது.
“அருண்!” அந்தக் குரலில் சட்டென்று நின்றான் அருண். அந்த ஆழ்ந்த குரலை இதற்கு முன்பு அவன் கேட்டிருக்கிறான். நெற்றி சுருங்கச் சரேலென்று திரும்பினான் இளையவன்.
“உங்கூடக் கொஞ்சம் பேசணும் அருண்.” செழியனின் வார்த்தைகளைக் கொஞ்சமும் மதிக்காதவன் தன் பைக்கில் ஏறி அதை ஸ்டார்ட் பண்ணினான். பைக்கின் அருகில் போன செழியன் அதன் சாவியைத் தன்வசம் எடுத்துக் கொண்டான். அருணின் முகத்தில் அத்தனை ரௌத்திரம் தெரிந்தது.
“அருண்… உங்கூட நான் பேசணும்.” இப்போது செழியனின் குரலும் சற்று அழுத்தமாகவே வந்தது.
“எங்கிட்டப் பேச உங்களுக்கு என்ன இருக்கு டாக்டர்? பேசாமப் போயிடுங்க. நான் ஏதாவது சொல்லிடப் போறேன். மாதவி உங்களைப் பத்தி அவ்வளவு சொன்னாளேன்னு தான் இப்ப வரைக்கும் உங்கக்கிட்ட அமைதியாப் பேசிக்கிட்டு இருக்கேன்.” பைக்கை விட்டு அப்போதும் இறங்காமல் இளமை முறுக்கோடு திமிறிய அந்த இளையவனை செழியனுக்குப் பிடித்திருந்தது.
மாதவியின் தம்பியல்லவா? கொஞ்ச நேரம் அந்த இளமையின் வேகத்தை ரசித்தான்.
“மாதவிக்கு நீ உண்மையாவே தம்பியா அருண்?” அந்தக் கேள்வியில் அருணின் நெற்றி சுருங்கியது.
“இல்லை… அந்தப் பொறுமைக்கும் இந்த வேகத்துக்கும் சம்பந்தமே இல்லையே… அதான் கேட்டேன்.”
“நாளைக்கு ஒரு முக்கியமான எக்ஸாம் இருக்கு. நீங்கக் கொஞ்சம் வழி விட்டீங்கன்னா நல்லா இருக்கும் டாக்டர்.” வார்த்தைகளில் இருந்த மென்மை குரலில் கொஞ்சமும் இருக்கவில்லை. செழியனும் புன்னகைத்துக் கொண்டான்.
“டாக்டரே! ஒரு பத்து நிமிஷம் எங்கூடப் பேசுறதால உங்க எக்ஸாமுக்கு ஒன்னும் ஆகிடாது. அதால நான் தேடி வந்திருக்கிற மாதவியோட தம்பியை எங்கண்ணுல கொஞ்சம் காட்டுங்க.” இன்றுவரை செழியன் இப்படியெல்லாம் இறங்குபவனல்ல. ஆனால் மாதவி அவனை இறங்க வைத்திருந்தாள்.
“அருண்… அன்னைக்குக் காலேஜ்ல என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. நடந்தது எதுவா இருந்தாலும் அர்ச்சனா பேசின வார்த்தைகள் ரொம்பவே தப்பு. அதுக்காக நான் உங்கிட்ட சாரி கேட்டுக்கிறேன்.” அந்த வார்த்தைகளில் பைக்கை விட்டு இறங்கிய அருண் பக்கத்தில் நின்றிருந்த கொன்றை மரத்தின் தண்டில் ஓங்கிக் குத்தினான்.
“உங்க தங்கச்சி அவ கால்ல கிடந்ததைக் கழட்டி அன்னைக்கு என்னை அடிச்சிருந்தாலும் நான் பொறுத்துக்கிட்டுப் போயிருப்பேன் டாக்டர். ஆனா… ஆனா…”
“அருண்…”
“உங்க தங்கை மட்டுமில்லை… நீங்களும் தான் அன்னைக்குத் தப்பா வார்த்தைகளை விட்டீங்க!” அருணின் முகம் சிவந்து தணலாகிப் போனது. அவன் வார்த்தைகளின் சூடு செழியனை லேசாகச் சுட்டது.
“அருண்… என்னை எப்படி உனக்குப் புரிய வெக்குறதுன்னு எனக்குத் தெரியலை…”
“எதுவும் புரிய வேணாம் டாக்டர். மாதவி உங்களை ரொம்பப் பெரிய உயரத்துல வெச்சிருக்கா. நீங்க சொன்ன வார்த்தைகளை…”
“அருண்! ப்ளீஸ்… அதை மறந்திடு.”
“எப்படி மறக்க முடியும் டாக்டர்?”
“அருண்… அன்னைக்கு மாதவி மேல நீ ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டே…” செழியன் சொன்னபோது அருண் அவனை வியப்பாகப் பார்த்தான். இப்போது செழியன் தான் திணறிப் போனான்.
“புரியலை…”
“அருண்…” எதையோ சொல்ல வாயெடுத்த இளஞ்செழியன் அமைதியாகிப் போகவும் அருண் தன்னெதிரில் நிற்கும் மனிதனை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“டாக்டர்… நீங்க மாதவியை லவ் பண்ணுறீங்களா?” கூரிய வேலாக வார்த்தைகள் செழியனை நோக்கி வந்தன. இருந்தாலும் பதம்பார்க்க வேண்டிய வார்த்தைகள் அவனுக்குப் பூமாரி தான் பொழிந்தன.
“அருண்…”
“எங்கக்கா மேல நான் உரிமை எடுத்துக்கிட்டா உங்களுக்கு ஏன் டாக்டர் வலிக்குது?”
“………..”
“ஏன் டாக்டர் அமைதியா இருக்கீங்க? எங்கண்ணைப் பார்த்துப் பேசுங்க டாக்டர். உங்க மனசுல என்ன இருக்கு?” ஒரு தம்பியாக அருண் தன்னைக் கேள்வி கேட்டது செழியனுக்கு நியாயமாகத்தான் பட்டது. ஆனாலும்… ஒரு ஆண்மகனாக அந்த விசாரணை அவனுக்கு அத்தனை திருப்தியாக இருக்கவில்லை.
அருணின் கண்களை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்தான் இளஞ்செழியன். அந்தப் பார்வையில் இருந்த உறுதி அருணிற்கும் உவப்பானதாக இருக்கவில்லை.
“பிடிச்சிருக்கு அருண். மாதவியை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. யெஸ்… ஐ லவ் மாதவி.” செழியன் சொல்லியே விட்டான். சொல்லவேண்டும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. ஆனால்… சூழ்நிலை அப்படி அமைந்து போனது.
அந்தச் சின்னப் பையன் தன்னை நிற்க வைத்துக் கேள்வி கேட்டதை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அந்த நிமிடத்தில் மாதவியின் தம்பி என்பதையும் தாண்டி தன் எதிரில் நிற்கும் பையன் அருணாகத்தான் இளஞ்செழியனுக்குத் தெரிந்தான்.
அருண் இப்படியொரு விஷயத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. வேகமாக செழியனின் கையிலிருந்த சாவியைப் பிடுங்கியவன் பைக்கை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு கிளம்பிவிட்டான். புள்ளியாகத் தேய்ந்த அந்த பைக்கைப் பார்த்தபடி நின்றிருந்தான் இளஞ்செழியன்.
***
அப்போதுதான் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு வந்திருந்தாள் மாதவி. கையில் காஃபியோடு தனது தோட்டத்துக்குள் நுழைந்தாள். வீட்டின் முன்னும் பின்னுமாகச் சின்னதாகத் தோட்டம் வைத்திருந்தாள்.
“அம்மா!” அருணின் குரல் பின்கட்டு வரை கேட்டது.
“மாதவி வந்துட்டாளா?” தம்பியின் குரலில் தெறித்த கோபம் மாதவியை வீட்டிற்குள் வரச்செய்தது.
“என்னாச்சு அருண்? எதுக்கு இப்படிச் சத்தம் போடுறே?” கைவேலையாக இருந்த அமுதவல்லி கேட்க டீவி பார்த்துக் கொண்டிருந்த உமாசங்கரும் மகனைத் திரும்பிப் பார்த்தார்.
“டாக்டர் டாக்டர்னு பெருசாப் பேசினியே… அந்த டாக்டர் இன்னைக்கு என்ன சொன்னார் தெரியுமா?” நடுவீட்டில் நின்று கொண்டு கர்ஜித்த மகனை அம்மாவும் அப்பாவும் அதிசயமாகப் பார்த்தார்கள்.
“யாரைச் சொல்ற அருண் நீ?” இது உமாசங்கர்.
“அப்பா… அது…” மாதவி திருதிருவென முழிக்க அம்மா அப்பா இருவரின் பார்வையும் மகளை நோக்கித் திரும்பியது. காலேஜில் நடந்த பிரச்சனையை மாதவி வீடு வரை கொண்டு வந்திருக்கவில்லை. தேவையில்லை என்று அருணை எச்சரித்திருந்தாள். அப்படியிருக்க அருண் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்!
“எதுக்கு மறைக்கிற மாதவி? அதான் அப்பா கேக்குறாங்க இல்லை… நடந்ததைச் சொல்லு.”
“அருண், என்ன நடந்துச்சு? நீ எங்கிட்டச் சொல்லு.” அப்பா கேட்கவும் ஆதியோடு அந்தமாகக் காலேஜில் நடந்த பிரச்சனையைச் சொல்லி முடித்தான் மகன்.
உமாசங்கரும் அமுதவல்லியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.
“இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு. எங்கக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணலையா மாதவி?”
“அப்பா…”
“அதோட போயிருந்தாப் பரவாயில்லைப்பா. அந்த டாக்டர் இன்னைக்கு என்னை வந்து பார்த்தாரு.”
“என்ன? அவர் எதுக்கு உன்னை வந்து பார்த்தார்?”
“அவருக்கு மாதவியைப் பிடிச்சிருக்காம். லவ் பண்ணுறாராம். எவ்வளவு தைரியம் இருந்தா அதை எங்கிட்டயே வந்து சொல்லுவாரு?” அருணின் கோபத்தில் மாதவி ஸ்தம்பித்துப் போனாள்.
அருணின் வார்த்தைகள் அத்தனை சுலபத்தில் அவளை வந்து சேரவில்லை. மலங்க விழித்தபடி நின்றிருந்த பெண்ணை பெற்றோர்கள் விசித்திரமாகப் பார்த்தார்கள்.
“மாதவி? என்ன இது? அருண் என்னென்னவோ சொல்லுறான்?”
“………………”
“மாதவி மேல தப்பு இல்லைப்பா. இவ லூசு மாதிரி அந்த டாக்டர் நல்லவர் வல்லவர்னு டயலாக் அடிக்கிறா. ஆனா அவர் மனசுல வேற மாதிரி எண்ணம் தான் இருக்கு.”
“அருண் நீ கொஞ்சம் அமைதியா இரு. மாதவி… என்னம்மா இதெல்லாம்?”
“அப்பா… எனக்கு இது எதுவுமே தெரியாதுப்பா. டாக்டர் ரொம்ப நல்ல மாதிரி… எல்லார் கூடவும் ரொம்ப மரியாதையா நடந்துப்பாங்க. சீஃபுக்கு வேண்டப்பட்டவங்க.”
“ம்…” தாடையைத் தடவிய உமாசங்கர்,
“சரி விடு அருண். பொண்ணுங்க வீட்டுல இருந்தா இதெல்லாம் சகஜம் தான். காலாகாலத்துல நான் மாதவிக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி இருந்திருந்தா இந்தப் பேச்சுக்கெல்லாம் இடமிருந்திருக்காது.”
“அப்பா…”
“இல்லை மாதவி… இதுக்கு மேலேயும் அப்பா உம்பேச்சைக் கேக்கணும்னு எதிர்பார்க்காதம்மா.” முடிவாகச் சொன்ன உமாசங்கர் தங்கள் ரூமிற்குள் செற்றுவிட அமுதவல்லியும் பின்னோடு போனார்.
“அமுதா… மாதவிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம். இனியும் தாமதிக்க வேணாம்.”
“ஆமாங்க… அவளைக் கேட்டா வேணாம்னு தான் சொல்லுவா. அதை நீங்க காதுல போட்டுக்காதீங்க. நாளைக்கே நல்ல தரகராப் பார்த்து விவரம் சொல்லுங்க.”
“ம்… அப்படித்தான் பண்ணணும்.”
அதே நேரம் தனது ரூமில் அசையாமல் அமர்ந்திருந்தாள் மாதவி. அருண் சொன்ன வார்த்தைகளை அவளால் நம்ப முடியவில்லை. ஆனால்… நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால், இன்று மேனகா அப்படியொரு தகவலைத் தான் அவளிடம் சொல்லி இருந்தாள்.
‘என்ன மாதவி? டாக்டர் செழியன் காத்து உன்னோட பக்கம் வீசுற மாதிரித் தெரியுது!’
‘என்னாச்சு மேனகா?’
‘ஏய்! ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி நடிக்காதே மாதவி. எவ்வளவு தைரியமா நேத்து எங்கிட்டயே வந்து உன்னை விசாரிக்கிறாரு.’
‘எதுக்கு விசாரிச்சாரு?’
‘ம்… உன்னை ஒரு நாள் பார்க்காம அவரால இருக்க முடியலியாம். அதான் வந்து விசாரிச்சாரு. உன்னோட அட்ரஸ் குடுத்தனே… வந்து பார்க்கலியா?’ மேனகா இடக்கு முடக்காகப் பதில் சொல்லவும் மாதவி நகர்ந்து விட்டாள். டாக்டர் ஏதாவது முக்கியமான விஷயத்திற்காக நம்மைத் தேடி இருப்பார் என்று தான் நினைத்திருந்தாள்.
மேனகாவைப் பற்றி அவளுக்குத் தெரியாதா? வேண்டுமென்றே கேலி பண்ணுகிறாள் என்று தான் எண்ணினாள். ஆனால் அருண் இப்போது என்னென்னவோ சொல்கிறானே! டாக்டர் எதற்கு அருணைப் போய்ப் பார்க்க வேண்டும்? சரி… அப்படியே பார்த்தாலும் எதற்கு இப்படியெல்லாம் பேச வேண்டும்?
விளையாட்டாகப் பேசும் பேச்சல்லவே இது. அதற்கும் மேலாக டாக்டர் அப்படியெல்லாம் விளையாடும் ஆளும் அல்லவே! தலைக்குள் ஒரு ரயிலே ஓடுவது போல இருந்தது மாதவிக்கு. தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். பிரச்சனைகளும், சிக்கல்களும் அவளுக்குப் புதிதா என்ன? என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம்.
***
அன்று முக்கியமான ஒரு ஆப்பரேஷன் இருந்தது. தியேட்டர் அதற்கான அனைத்து ஆயத்தங்களுடனும் ரெடியாக இருக்க செழியன் கொஞ்சம் கோபத்தில் இருந்தான். காரணம், அனஸ்தீஸியா பண்ணும் டாக்டர் ஐந்து நிமிடம் லேட்.
மாதவியும் அன்று தியேட்டரில் தான் நின்றிருந்தாள். அது சந்திரமோகனின் கைங்கரியம். இப்போதெல்லாம் செழியனுக்கு எங்கு ட்யூட்டியோ அங்கெல்லாம் மாதவியும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு பற்றி இளஞ்செழியனும் பேசவில்லை, மாதவியும் தனக்கு எதுவும் தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளவும் இல்லை.
முதுகுப் புறமாக அவன் ஏப்ரனில் முடிச்சுக்களைப் போட்டவளால் அந்த தார்மீகக் கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது.
“டாக்டரோட குழந்தைக்கு உடம்புக்கு முடியலியாம். அதான் கொஞ்சம் லேட் ஆகுறாங்க. இல்லைன்னா எப்பவுமே இப்படி நடந்துக்க மாட்டாங்க.” அவள் மெதுவாகச் சொல்லவும் சரேலென்று திரும்பினான் செழியன்.
“எவ்வளவு பெரிய ஆப்பரேஷன் தெரியுமா? கிட்டத்தட்ட அஞ்சு மணித்தியாலம் ஆகலாம். பேஷன்ட்டோட குடும்பம் அத்தனையும் வெளியே ஆண்டவனுக்கு அடுத்ததா நம்மளைத்தானே நம்பி நிக்குறாங்க.” அவன் படபடவெனப் பேசவும் மாதவிக்கும் அது சரியென்று தான் தோன்றியது.
“ஒரு நிமிஷம் அந்த டாக்டர் நிலைமையில உங்களை வெச்சு யோசிச்சுப் பாருங்க டாக்டர். உங்க குழந்தைக்கு…”
“நம்ம குழந்தைக்கு…” சட்டென்று செழியன் அவளைத் திருத்த மாதவி விக்கித்துப் போனாள்.
“நீ பெத்துக் குடுக்குறியா மாதவி?” அவன் இயல்பாக ஒருமைக்குத் தாவி இருந்தான். மாதவி இமைக்க மறந்து அவனையே பார்த்திருந்தாள். என்றோ ஒரு நாள் இது பற்றிப் பேச்சு வரும் என்று தெரியும் தான். ஆனால்… சத்தியமாக இன்று எதிர்பார்த்திருக்கவில்லை.
திரும்பி நடக்கப் போனவளின் கையைப் பற்றித் தடுத்தான் செழியன். கையை மெதுவாக இழுத்துக் கொண்டாள் பெண்.
“சரி சரி… தொடலை. அதுக்காக இப்படி எதுவும் பேசாமப் போனா என்ன அர்த்தம்?”
“……………”
“மாதவி… ஏதாவது பேசு.” அவன் வற்புறுத்தவும் சில நொடிகள் யோசித்தவள் ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.
“வேணாம்… இப்போ எதுவும் சொல்லாதே. கொஞ்சம் கிரிட்டிக்கலான ஆப்பரேஷன். நாம இதைப்பத்தி அப்புறமாப் பேசலாம். இப்போ என்னை விஷ் பண்ணு மாதவி.” அவன் உரிமையாகக் கேட்கவும் மாதவி சற்றுத் திகைத்துப் போனாள்.
“குட் லக் டாக்டர்.”
“ம்ஹூம்… இது மாதவியோட வழமையான பேச்சு இல்லையே!” இப்படிச் சொல்பவனிடம் என்ன சொல்வது?
“………….” மௌனமாக நின்றிருந்தாள் மாதவி.
“மாதவி… இப்போ நீ என்னை ஒழுங்கா விஷ் பண்ணலைன்னா நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். அதுக்கப்புறம் உன் இஷ்டம்.” சொன்னவனை அண்ணார்ந்து அவள் பாக்க, தோளைக் குலுக்கினான் செழியன். அந்தக் கண்களில் குறும்பிருந்தது.
சற்று முன்பிருந்த கோபத்தை மறந்து அவன் இயல்பாய் நின்றது மாதவிக்கும் சந்தோஷமாகவே இருந்தது. ஆண்டவனுக்கு அடுத்த படியாய் தியேட்டரில் இருக்கும் உயிர் இப்போது தன்னெதிரில் நிற்பவன் கையில் தானே இருக்கிறது!
“குட் லக் டாக்டர்!” மலர்ந்த முகமாக அவள் சொல்ல செழியனும் புன்னகைத்தான்.
“தான்க் யூ மாதவி. ஆப்பரேஷன் நடக்கும் போது மாதவி எம்பக்கத்துலேயே நிக்கணும். ஆப்பரேஷன் முடிஞ்சதுக்கு அப்புறமா ஸ்ட்ராங்கா ரெண்டு கப் காஃபி என் ரூமுக்கு வரணும். இன்னைக்கு… காஃபி வித் மாதவி… ஓகே.” அவள் முகத்தை நோக்கிக் குனிந்து சொன்னவன் மூக்கையும், வாயையும் மறைத்த அந்த மாஸ்க்கை மாட்டிக்கொண்டு நகர்ந்து விட்டான். மாதவி செய்வதறியாது நின்று கொண்டிருந்தாள்.
திட்டமிட்டதையும் விட இன்னும் ஒரு மணி நேரம் தியேட்டரில் அதிகமாகச் செலவழித்தான் இளஞ்செழியன். ஆனால் ஆப்பரேஷன் சக்ஸஸாக முடிந்திருந்தது.
வெளியே நின்றிருந்த பேஷன்ட்டின் குடும்பத்தார் இளஞ்செழியனின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதபோது மாதவியே கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனாள்.
உடம்பு அத்தனை அயர்வாக இருந்தது செழியனுக்கு. நல்ல குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவியவன் டவளால் துடைத்துக்கொண்டு வந்து அமர்ந்த போது அவன் முன்னால் காஃபியை வைத்தாள் மாதவி.
“மாதவி… உனக்கு?” அவன் இயல்பாக உரிமை எடுத்துக் கொண்டான்.
“இல்லை… இப்போ வேணாம் டாக்டர்.”
“பாதி குடுக்கட்டுமா?” களைப்பையும் மீறிய துள்ளல் அந்தக் குரலில் தெரிந்தது.
“ரொம்ப டயர்டாத் தெரியுறீங்க. நீங்க குடியுங்க டாக்டர்.”
“இன்னும் டாக்டர் தானா மாதவி?” கேட்டவனை உறுதியாக நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
“எப்பவுமே ‘டாக்டர்’ தான் டாக்டர்.”
“ஓ… ஏனப்படி?” அவன் குரலின் துள்ளல் காணாமற் போயிருந்தது.
“காலேஜ்ல நடந்த பிரச்சனை வீட்டுல தெரிஞ்சு போச்சு டாக்டர்.”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் மாதவி?” அவன் குரலில் இப்போது உஷ்ணம் இருந்தது.
“இது சரியா வராது டாக்டர்… வேணாம்.”
“மாதவி!”
“இந்தப் பிரச்சனை இல்லைன்னாக் கூட எங்க வீட்டுல இதுக்கு சம்மதிச்சிருக்க மாட்டாங்க டாக்டர்.”
“ஏன்? அப்படி எந்த வகையில உனக்கு நான் தகுதி இல்லாமப் போயிட்டேன்?”
“தகுதி எங்களுக்குத்தான் இல்லை டாக்டர். உங்க உயரம் ரொம்ப ஜாஸ்தி. அதுக்கு ஈடு குடுக்க எங்களால முடியாது.”
“என்ன உளறல் இது?”
“இது உளறல் இல்லை டாக்டர்… நிதர்சனம்.”
“மண்ணாங்கட்டி… கடைசியா நீ என்ன தான் சொல்ல வர்ற மாதவி?”
“வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க டாக்டர்.” சொன்னவள் வந்த வழியே திரும்பிப் போய் விட்டாள். இளஞ்செழியன் மேசை மேல் ஓங்கி ஒரு அடி அடிக்க அவள் வைத்துவிட்டுப் போன காஃபி சிதறியது.