Oviyam final 1

“இப்போப் பரவாயில்லையா மாதவி?”

“ம்…” கணவனின் மார்பில் சாய்ந்திருந்த மாதவி சோர்வாகத் தெரிந்தாள்.

“என்னப் பண்ணுது?” செழியனின் குரலில் அத்தனை கனிவு.

“சொல்லத் தெரியலையே!” சொல்லி விட்டுச் சிரித்தாள் மனைவி. செழியனின் முகத்திலும் காதலாக ஒரு புன்னகை அரும்பியது.

“நல்லா ரெஸ்ட் எடு மாதவி. கீழே இறங்கிப் போகாதே.”

“ரூம்லயே இருந்தா மூச்சு முட்டுதுங்க.”

“அப்போ வெளியே எங்கேயாவது கூட்டிக்கிட்டுப் போகட்டுமா?”

“ஐயையோ! என்னால முடியாது.” செழியனை இன்னும் நன்றாக இறுக்கிக் கட்டிக்கொண்டாள் மாதவி.

“வீட்டுல இருக்கிற நேரம் என்னோட இப்படிக் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க டாக்டர், அது போதும் எனக்கு.” சொன்ன மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான் செழியன். கதவு தட்டும் ஓசை கேட்டது.

‘யாராக இருக்கும்?’ எண்ணமிட்டபடியே எழுந்து போய் கதவைத் திறந்தான் இளஞ்செழியன். அர்ச்சனா நின்றிருந்தாள்.

“அண்ணி எங்க?” விறைப்பாகக் கேட்டபடி தங்கை உள்ளே வர செழியனுக்கு பகீரென்றது.

‘இப்போது என்ன வில்லங்கமோ!?’ மானசீகமாகத் தலையில் கையை வைத்துக் கொண்டான்.

“என்ன அர்ச்சனா? இங்கதான் இருக்கேன்.”

“அண்ணி… இந்தப் புடவையை எனக்குக் கட்டி விடுங்க.”

“என்னது? புடவையா?” வாயைப் பிளந்தான் அண்ணன்.

“ஏன்? நான் புடவைக் கட்டக் கூடாதாண்ணா?”

“இது எப்போ இருந்து அர்ச்சனா?” செழியன் உண்மையாகவே ஆச்சரியப்படவும் இப்போது மாதவி கணவனைக் கண்டித்தாள்.

“ஏங்க? அர்ச்சனா புடவைக் கட்டுறதுல உங்களுக்கு அப்படியென்ன ஆச்சரியம்?”

“அதானே! நல்லாக் கேளுங்க அண்ணி.” நேற்று வரை இவள் தானா மாதவியோடு மல்லுக்கு நின்றவள் என்று திகைத்துப் போனான் இளஞ்செழியன். அத்தனை அன்பைத் தன் அண்ணி மேல் பொழிந்தாள் இளையவள்.

“சும்மா வாய் பார்த்துக்கிட்டு நிக்குற இந்த அண்ணாவை வெளியே போகச் சொல்லுங்க அண்ணி, லேட்டாகுதில்லை?”

“ஏங்க… நீங்கக் கொஞ்சம் வெளியே போங்க.” மனைவி சொன்ன போதும் செழியன் நகரவில்லை.

“இங்கப்பாரு அர்ச்சனா… அண்ணியால முடியலைமா. டயர்டா இருக்காம். நீ அம்மாக்கிட்டப் போய் புடவையைக் கட்டிக்கோ.”

“என்னது? அம்மாவா? நோ… நோ… ஏற்கனவே அவங்க பொம்மைக்குச் சேலைக் கட்டினா மாதிரி இருக்குன்னு அன்னைக்குக் கேலிப் பண்ணினாங்க. அண்ணிதான் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க.”

“அப்போ அம்மாவும் ஏற்கனவே உண்மையைச் சொல்லிட்டாங்களா?” சிரித்தபடியே கேட்டான் செழியன்.

“அண்ணா… வேணாம்…” தங்கை மிரட்டவும் வாய்விட்டுச் சிரித்தான் பெரியவன்.

“ஏங்க? எதுக்கு இப்போ வீணா அர்ச்சனாக்கிட்ட வம்பு வளக்குறீங்க? அம்மாக்கும் மகனுக்கும் ரசனையே இல்லை.”

“அப்படிச் சொல்லுங்க அண்ணி.” அர்ச்சனா மாதவியைப் பாய்ந்து கட்டிக் கொண்டாள்.

“நடக்கட்டும்… நடக்கட்டும்…” ஒரு தினுசாகத் தலையை ஆட்டியபடி சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான் செழியன். மாதவி மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

இளஞ்சிவப்பு வண்ணப் பட்டுப் புடவை. மெல்லிய ஜரிகை வேலைப்பாடு.‌ அன்று இளஞ்செழியன் புதிதாக வாங்கிய ஆலமரத்தடி வீட்டில் பால் காய்ச்சுவதாக ஏற்பாடு பண்ணி இருந்தது. அதற்குத் தான் அர்ச்சனா ரெடியாகிக் கொண்டிருந்தாள்.

மாதவிக்குக் காலையில் இருந்தே கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.‌ இருந்தாலும் இளையவள் கேட்கும் போது மறுக்க முடியவில்லை.‌ ஏற்கனவே சரியான புரிதல் இல்லை. அவளாக இறங்கி வரும் போது தானும் பெரியவளாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாள் மாதவி.

புடவைக்கு சீராக மடிப்புகளை எடுத்துக் கவனமாக பின் பண்ணிக் கொண்டிருந்தாள். வேலையில் கவனமாக இருந்தவளைக் கலைத்தது அர்ச்சனாவின் குரல்.

“அண்ணி…”

“சொல்லு அர்ச்சனா.”

“சாரி…”

“எதுக்கு?” மாதவிக்குப் புரியவில்லை.

“நான்… நான் உங்கக்கிட்ட அப்படி நடத்திருக்கக் கூடாது.”

“எப்படி நடந்துக்கிட்டே? அதெல்லாம் ஒன்னுமில்லை. குடும்பம்னா அப்படித்தான். சண்டைச் சச்சரவு எல்லாம்தான். அண்ணியை நீ கோபிக்காம வேற யாரு கோபிப்பா?”

“இல்லை அண்ணி… அருணுக்கு நீங்க எவ்வளவு பண்ணி இருக்கீங்க? எங்கிட்டச் சொல்லி வருத்தப்பட்டான். சட்டு சட்டுன்னு அக்காக்கிட்ட இப்படிப் பேசாத அர்ச்சனான்னு சொன்னான்.”

“பரவாயில்லை விடு அர்ச்சனா. இந்தப் புடவை உனக்கு அன்னைக்கு விட இன்னும் சூப்பரா இருக்கு.”

“நீங்கதான் சொல்றீங்க அண்ணி. அருணும் அன்னைக்குக் கேலிதான் பண்ணினான்.”

“அவன் கெடக்குறான். அவனுக்கு என்னத் தெரியும்? நான் புடவைக் கட்டினாலும் அப்படித்தான் ஏதாவது சொல்லுவான்.”

“அண்ணீ… எம்மேல உங்களுக்குக் கோபம் இல்லையே?”

“இல்லை அர்ச்சனா.”

“அது… நீங்க அன்னைக்கு அருண் உனக்கு வேணாம்னு சொன்னதும் சட்டுன்னு கோபம் வந்திடுச்சு. அது போதாததுக்கு அருண் வேற எனக்கு மாதவிதான் முக்கியம், நீ இல்லைன்னு சொன்னானா? அதான்…”

“விடு அர்ச்சனா. போய் நகையெல்லாம் போட்டுக்கோ.” பேச்சை வேண்டுமென்றே மாற்றினாள் மாதவி.

“அண்ணி… ஏதாவது பேசுங்க அண்ணி. எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு.”

“இதுல கில்ட்டியா ஃபீல் பண்ண என்ன அர்ச்சனா இருக்கு. உனக்கும் அருணுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தா நான் என்ன சொல்லிடப் போறேன்? அத்தைப் புரிஞ்சுப்பாங்க… ஆனா மாமா?”

“அதை நான் பார்த்துக்கிறேன் அண்ணி. நான் சொன்னா அப்பாக் கேப்பாங்க.” சின்னவள் குதூகலமாகச் சொல்லவும் மாதவியின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“அண்ணி பூ?”

“நான் வெக்கும் போது உனக்கும் வெச்சு விடுறேன்.”

“ஓகே அண்ணி.” ஹாப்பியாக வெளியே போகும் நாத்தனாரை யோசனையோடு பார்த்திருந்தாள் மாதவி.

***

புத்தம் புதிதாகப் பால் காய்ச்சி பூஜைப் புனஸ்காரங்கள் எல்லாம் இனிதாக நிறைவேறி இருந்தன. யாரும் கவனிக்காவிட்டாலும் அனைத்து நிகழ்வுகளிலும் அருண் தனது பக்கத்தில் நிற்குமாறு சந்தர்ப்பங்களை அமைத்துக் கொண்டாள் அர்ச்சனா.

இளஞ்செழியனும் மாதவியும் தம்பதி சகிதமாக அனைத்தும் செய்தபோது பார்க்க அத்தனை அழகாக இருந்தது. பட்டு வேஷ்டி சட்டையில் செழியனும் பட்டும் பவுனுமாக மாதவியும் நின்றிருந்தார்கள். மாதவி சும்மாவே அத்தனை அழகு.‌ தாய்மைப் பொலிவில் இன்னும் பேரழகாக இருந்தாள்.‌ செழியனின் கண்கள் மனைவியின் பின்னே அலைந்து கொண்டிருந்தது.

மதிய உணவையும் முடித்துக்கொண்டு மாதவியின் பெற்றோர் சொந்தத்தில் ஒரு விசேஷம் இருந்ததால் ஒரு நடை போய் பார்த்து விட்டு வருகிறோம் என்று கிளம்பி இருந்தார்கள். அவர்களுக்கு இதுவரை செழியன் தம்பதியினர் தனிக்குடித்தனம் வருவது பற்றித் தெரியாது. புது வீட்டில் மங்களகரமாக இருக்கப் பால் காய்ச்சுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டார்கள்.

கருணாகரன் அன்றைய பொழுது முழுவதும் செழியனின் வீட்டில் தான் இருந்தார். கற்பகத்திற்குக் கூட அத்தனை ஆச்சரியம்! கணவர் இப்படி நிதானமாக நேரம் செலவழித்து நெடுங்காலம் ஆகிறது என்று எண்ணிக் கொண்டார்.

அருண் அத்தானுக்குத் துணையாக ஏதோ உதவி பண்ணிக் கொண்டிருக்க பெண்கள் கிச்சனில் ஏதோ ஸ்வீட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். டைனிங் டேபிளில் எதையோ வைக்க வந்த மாதவி சட்டெனத் திரும்பும் போது லேசாகத் தலை சுற்றவும் அப்படியே நின்று விட்டாள்.

சோஃபாவில் அமர்ந்திருந்தபடி பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த கருணாகரன் ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தார். அவர் பார்த்ததெல்லாம் பிடிமானத்துக்காக ஏதாவது கிடைக்குமா என்று திணறிக் கொண்டிருந்த மாதவியைத் தான்.

“மாதவி! என்னம்மா ஆச்சு?” பதறியடித்துக் கொண்டு மருமகளிடம் ஓடி வந்தவர்,

“கற்பகம்! சீக்கிரமா வா!” சத்தமிட்டபடி மாதவியைத் தாங்கிக் கொண்டார். கருணாகரன் போட்ட சத்தத்தில் கிச்சனிலிருந்து கற்பகமும் அர்ச்சனாவும் ஓடி வர, ரூமிலிருந்து செழியனும் அருணும் ஓடி வந்தார்கள்.

“ஐயையோ! கருணா என்ன ஆச்சு?”

“மாதவியை என்னன்னு பாரு கற்பகம். அப்படியே விழப் பார்த்துட்டா.” சுற்றிவர மூன்று டாக்டர்கள் நின்றிருக்க, மனைவிக்கே அனைத்தும் தெரியும் என்பது போல முறைப்பட்டார் கருணாகரன். செழியன் முன்னே வந்து மனைவியை முழுதாகத் தன்மேல் சாய்த்துக் கொண்டான்.

அர்ச்சனா சட்டென்று ஒரு சிறிய டவலைக் குளிர்நீரில் நனைத்து மாதவியின் முகத்தை மெதுவாகத் துடைத்து விட்டாள். அந்த இதத்தில் மாதவிக்கு லேசாக விழிப்பு வந்தது.

சுற்றிவர அத்தனை பேரும் நின்றிருக்க தான் கணவனின்மேல் சாய்ந்திருப்பது சங்கடமாக இருக்கச் சட்டென்று விலகப் போனாள். ஆனால் இளஞ்செழியன் அதற்கு அனுமதிக்கவில்லை. ஹால் சோஃபாவிலேயே அவளை அமர வைத்தான்.

“மாது… ஓகேயா நீ?”

“ம்… இப்போப் பரவாயில்லைங்க.”

“ஒரு இடத்துல உக்காருன்னு எத்தனைத் தடவைதான் சொல்றது.” கணவனின் அதட்டலில் புன்னகைத்தாள் மாதவி.

“மாதவி இப்பவே ட்ரெயினிங் எடுக்குது செழியா.” இதைச் சொன்னது வேறு யாருமல்ல. சாட்ஷாத் நம் கருணாகரனே தான்!

அத்தனைப் பேரும் திகைத்துப் போனார்கள். மருமகள் சம்பந்தப்பட்ட எதையும் நேரடியாக கருணாகரன் இதுவரைப் பேசியதே இல்லை.

“என்னம்மா மாதவி? நான் சொல்றது சரிதானே?” மாதவியின் முகத்தைப் பார்த்துக் கருணாகரன் கேட்கவும், மற்றவர்கள் திகைத்தார்கள் என்றால் மாதவி மூச்சுவிடக்கூட மறந்து போனாள்.

“மாமா…” திக்கித் திணறியபடி அவள் எழுந்து கொள்ளப் போகவும் கையமர்த்தித் தடுத்தார் பெரியவர்.

“உக்காரும்மா… எதுக்கு இப்போ எழுந்து சிரமப்படுத்திக்கிறே?” கரிசனையாக மாமனார் கேட்க மாதவிக்குக் கண்கள் கலங்கிப் போனது.

“இல்லை… அதான் எம் புள்ளை உன்னை இந்த வீட்டுல தனியாக் கொண்டுவந்து வெக்கப்போறான் இல்லை? அதனாலதான் அப்படிச் சொன்னேன். இப்போ இருந்தேத் தனியா எல்லாத்தையும் செஞ்சு பழகிக்கணும் இல்லை? அப்போதானே நாளைக்கு வேலைப் பண்ணச் சுலபமா இருக்கும். என்ன கற்பகம்? நான் சொல்றது சரிதானே?”

கற்பகம் வாயைத் திறக்கவில்லை. கணவர் வேண்டுமென்றே பேசுகிறார் என்று நன்கு புரிந்தது. அப்பாவும் மகனும் என்னவாவது பண்ணிக்கொள்ளட்டும் என்று அமைதியாக கிச்சனுக்குள் போனவர் மாதவிக்கு ஆரஞ்ச் ஜூஸ் கொண்டு வந்தார்.

“மாதவி… இதைக் குடிம்மா. கொஞ்சம் புளிப்பா இருக்கு. வாய்க்கு நல்லா இருக்கும்.” கற்பகம் நீட்ட மாதவி வாங்கிக் கொண்டாள்.

“கற்பகம்! வேலை பார்த்தது போதும் கொஞ்சம் இங்க வந்து உக்காரு. நாம ரெண்டு பேரும் நம்ம புள்ளைங்களைப் பத்திக் கொஞ்சம் பேசணும்.”

“என்னங்க நீங்க? நல்ல நாளும் அதுவுமாப் பிரச்சனைப் பண்ணிக்கிட்டு?”

“இல்லை கற்பகம். எங்கேயோத் தப்பு பண்ணி இருக்கோம். நம்ம புள்ளைங்களை நாம சரியா வளர்க்கலையோ?”

“ஏங்க? இதென்ன புதுசு புதுசா எல்லாம் உங்களுக்குச் சந்தேகம் வருது?” கற்பகம் இப்போது உண்மையாகவே சிரித்தார். அருண் சட்டென்று அந்த இடத்தை விட்டு அகலப் போக கருணாகரனின் குரல் அவனைத் தடுத்தது.

“தம்பீ… நீங்க எங்கப் போறீங்க? அதான் அவ்வளவு தைரியமா வந்துப் பொண்ணு கேட்டீங்க இல்லை? அதுக்கப்புறமும் எதுக்கு விலகி நிக்கணும்?” இந்தத் தகவலில் செழியன் தம்பதியினர் திகைத்துப் போனார்கள். ஆனால் அர்ச்சனாவின் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது. அப்பாவின் வார்த்தைகள் அவளுக்குத் தெம்பைக் கொடுத்தது.

எல்லோரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். கருணாகரன் அன்று எல்லாவற்றையும் பேசிவிடுவதென்ற முடிவோடுதான் இருக்கிறார் என்று பார்த்த போதே புரிந்தது.

“மாதவி… உங்கூட நான் பேசுறதே இல்லைன்னு உம் புருஷன் ஒரு குற்றச்சாட்டு வெச்சான். அவனோட இடத்துல இருந்து பார்த்தா ஒருவேளை அது நியாயமாக் கூட இருக்கலாம். ஆனா என்னோட இடத்துல இருந்து ஏன் யாரும் யோசிச்சுப் பார்க்கலை?”

“மாமா… அது… வந்து…”

“நான் எப்பவுமே உன்னைக் குத்தம் சொல்லமாட்டேம்மா. உங்க வீட்டுச் சம்பந்தத்தைக் கொண்டு வந்தது மோகன். உன்னோட ஃபோட்டோவைப் பார்த்துப் பிடிச்சுப் போய் கோவில் வரைக்கும் உன்னை வந்து தன்னோட மகனுக்காகப் பார்த்தது கற்பகம். இதுல நான் எப்படிம்மா உன்னைத் தப்புச் சொல்ல முடியும்?”

“ஏங்க? எதுக்கு இப்போ அந்தப் பேச்செல்லாம்?”

“இல்லை கற்பகம்… செழியனைப் பார்த்து நான் ரொம்பவே பெருமைப் பட்டிருக்கேன். இன்னைய தேதியில பணக்கார வீட்டுப் பசங்க எப்படியெப்படியெல்லாமோ வாழுறாங்க. ஆனா எம்புள்ளை அப்படியில்லை. அவனோட இந்த முப்பது வயசு வரை அவனுக்குத் தெரிஞ்சதெல்லாம் அவனோட படிப்பு, ஹாஸ்பிடல் இது மட்டும் தான். மிஸ்டர். கருணாகரன்… உங்கப் பையன் பெரிய சர்ஜனாமேன்னு நாலு பேர் கேக்கும் போது எனக்கு அப்படியேப் பூரிச்சுப் போகும் கற்பகம். ஆனா… அது அத்தனையையும் ஒரு நாள் செழியன் உடைச்சான். அன்னைக்கு ஒரு நல்ல அம்மா அப்பாவா நாம தோத்துப் போயிட்டோம் கற்பகம்.”

“கருணா!” கற்பகத்தின் குரல் தேம்பியது.

“என்னைப் பெருமைப் படுத்திய அதே செழியன் ஒரு குடும்பத்துக்கு முன்னாடி என்னைத் தலை குனிய வெச்சான். அன்னைக்கு நான் பலமா அடி வாங்கிட்டேன் கற்பகம்.” இதை கருணாகரன் சொல்லும்போது செழியனின் தலைத் தானாகக் குனிந்தது. அவன் முகத்தில் வேதனை மண்டிக் கிடந்ததைப் பார்த்த போது மாதவிக்குக் கிடந்து பதறியது.

“மாமா… டாக்டரைக் குத்தம் சொல்லாதீங்க…‌ ப்ளீஸ்… அவங்க ரொம்ப நல்லவங்க.” மாதவியின் குரல் விம்மியது.

“எது நல்ல தனம் மாதவி? ஒரு பொண்ணோட எதிர்காலத்தைப் பத்தி எந்தக் கவலையுமே இல்லாம அவளைத் தூக்குறது நல்ல விஷயமா?” கணவன் பேச்சில் கற்பகத்தின் கண்களில் கரகரவெனக் கண்ணீர் கோர்த்தது.

“எதுக்குங்க இப்போ எம்புள்ளையை நீங்க இவ்வளவு தப்பாப் பேசுறீங்க?”

“அப்போ உம் பையன் பண்ணினது சரின்னு நீயும் சொல்றியா கற்பகம்?”

“செழியன் பண்ணினது சரியா தப்பான்னு ஆராயுற நீங்க ஏன் அவன் மனசைப் பார்க்கலை. இதே மாதவி அத்தனை நாள் வரைக்கும் செழியனோட ஒரே ஹாஸ்பிடல்ல தானே வேலை பார்த்தா. அப்போ செழியன் காதல் கத்தரிக்காய்னு வந்து நிக்கலையே? இந்த அம்மா பார்த்த பொண்ணைத்தானே ஆசைப் பட்டான்?”

“அதுக்கு அந்தப் பொண்ணு சம்மதிக்கலையே கற்பகம்?”

“ஏன் சம்மதிக்கலை? அப்படி என்ன குறை எம் புள்ளைக்கிட்ட? இந்த மாதவிக்கு எம் புள்ளையை விட நல்ல புருஷன் கிடைச்சிடுவானா? மாதவியை எதுவோ சம்மதிக்கவிடல்லை. மாதவி கழுத்துல கத்தியை வெச்ச மாதிரி சூழ்நிலைகள் அமைஞ்சு போச்சு.”

“என்னப் பேசுறே நீ?”

“விடுங்க கருணா. இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க. எனக்கு சந்தோஷத்தை மட்டுமே குடுத்த புள்ளை அவன். நான் கைகாட்டின பொண்ணைத்தான் அவன் ஆசைப்பட்டான், கட்டிக்கிட்டான். இன்னைக்கு அவளை நல்லாவும் வச்சிருக்கான்.”

“இதை உங்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை கற்பகம். செழியனை நீ கண்மூடித்தனமா சப்போர்ட் பண்ணுறே. இது நியாயமே இல்லை.”

“நீங்க என்ன வேணாச் சொல்லுங்க. எம் புள்ளைன்னு வந்துட்டா இதுதான் என்னோட நியாயம். மாதவியை ஒன்னும் நடுரோட்டுல விடலை எம் புள்ளை. நல்லாத்தான் வச்சிருக்கான். ஏன்? இந்தா நிக்குற அருணைக் கேளுங்க.‌ இதே செழியனை விரோதி மாதிரித்தானே இந்த அருண் ஆரம்பத்துல பார்த்தான். இப்போ அதே அருணை எம் புள்ளையைப் பத்தித் தப்பா ஒரு வார்த்தைச் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.” அம்மாவின் குரலில் மகனைப் பற்றி அத்தனைப் பெருமிதம்.

“எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு இப்போத் தனிக்குடித்தனம் வந்திருக்கானே… இதுக்கும் ஏதாவது குருட்டு நியாயம் வெச்சிருக்கியா கற்பகம்?”

“அதுக்குக் காரணம் நீங்களும் உங்க பொண்ணும். இதுல எதுக்கு என்னை இழுக்குறீங்க?”

“ஓ… அது வேறயா?” தாடையைத் தடவிக் கொண்ட கருணாகரன் சுற்றி ஒரு முறைக் கண்களைச் சுழல விட்டார். செழியனின் முகம் குற்ற உணர்ச்சியில் சிவந்து போயிருந்தது. அருணும் அர்ச்சனாவும் குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தார்கள். மாதவி ஒரு தவிப்போடு தன் கணவனைப் பார்த்திருந்தாள்.

“மாதவி…”

“சொல்லுங்க மாமா.”

“ஒரு தகப்பனா எம் புள்ளைங்க வாழ்க்கையைப் பத்தி எனக்கு சில ஆசைகள் இருந்துச்சும்மா.”

“அது நியாயம் தானே மாமா.”

“அந்த ஆசைகள் நிராசையாப் போனப்போ எனக்குக் கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்துச்சு, இல்லேங்கலை. ஆனா… அவங்க நிலைமையில இருந்து அவங்களோட ஆசைகளைப் புரிஞ்சுக்கிட்டு அதை நான் நிறைவேத்திக் குடுத்தேன். இருந்தாலும்… என்னால சட்டுன்னு எல்லாத்தையும் ஏத்துக்க முடியலை. அதுக்காக உன்னை நான் நிராகரிச்சேன்னு அர்த்தம் இல்லைம்மா.”

“புரியுது மாமா.”

“அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையை எங்களுக்குக் குடுக்க வேணாம்னு உம் புருஷன் கிட்டச் சொல்லும்மா.”

“அண்ணீ…” கருணாகரன் சொல்லி முடிக்க அர்ச்சனாவின் குரல் மாதவியைக் கலைத்தது.

“சாரி அண்ணி…”

“ஐயோ அர்ச்சனா… இதையே எத்தனைத் தரம் சொல்லப் போறே?”

“இல்லை அண்ணி… நான் அன்னைக்கு உங்களை அப்படிப் பேசி இருக்கப்படாது. நீங்க எல்லாரையும் யோசிச்சுத்தான் பேசினீங்க. ஆனா…”

“விடு அர்ச்சனா…”

“அதுக்காக அண்ணா வீட்டை விட்டு வர எடுத்த முடிவு எனக்குப் பிடிக்கலைண்ணி. அண்ணா முடிவெடுத்தா எடுத்தது தான். மாத்திக்க மாட்டாங்க. ஆனா நீங்கக் கொஞ்சம் பேசிப் பாருங்க அண்ணி.” மாதவி செழியனைத் திரும்பிப் பார்த்தாள். கல்லுப்போல உட்கார்ந்திருந்தான். ஆனால் அருணின் பார்வையோ காதலாக அர்ச்சனாவைப் பார்த்தது.