OVIYAPAAVAI-06

ஓவியம் 06
 
அவள் கழுத்து வளைவில் யௌவனம் நிகுநிகுத்தது. அதற்கு மேல் பார்வையை ஓட்டாமல் கண்களைத் திருப்பிக் கொண்டான் ரஞ்சன்.
 
அத்துமீறும் அவன் செயல்களை அடக்க வழி தெரியாமல் கண்களை இறுக மூடியபடி வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது அவள் முகம். அதற்கு மேலும் அவளைக் கஷ்டப்படுத்த அவனுக்குத் தைரியம் இருக்கவில்லை.
 
“பேச்சு ரொம்ப எல்லை மீறுது சுமி, கோபம் எல்லாருக்கும் வரும், பார்த்துப் பேசணும்.” என்றான் பொறுமையாக.
 
“நான் எதுவும் தப்பாப் பேசலை!” முகத்தில் அடித்தாற் போல வந்தது பதில்.
 
“செருப்புப் பிஞ்சிடும் ன்னு சொன்னே!”
 
“ஓஹோ! குடும்பம் நடத்தப் போறேன்னு சொல்றது மட்டும் மகா யோக்கியமான பேச்சோ?!” அவள் வெடித்தாள்.
 
“ஏய்… உங்கூட நான்தானேடி குடும்பம் நடத்தணும்?!”
 
“அது ஒருநாளும் நடக்காது!” வெறுப்போடு உறுதி கலந்த அந்தக் குரல் ரஞ்சனுக்குள் மீண்டும் சினத்தை உண்டு பண்ணியது. கண்களை ஒருமுறை மூடித் திறந்து தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான்.
 
“இங்கப்பாரு சுமி, உனக்கு ஒன்னு மட்டும் நான் தெளிவாச் சொல்றேன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்.”
 
“நிச்சயமா இல்லை!” 
 
“பொறு பொறு… எதுக்கு இப்போ இவ்வளவு அவசரப் படுறே? இந்தக் கல்யாணத்தை நடத்தாம நானும் ஓய மாட்டேன்.”
 
“அதையும் பார்த்திடலாம்!”
 
“எங்கிட்டச் சவால் விடாதே பொண்ணே!”
 
“ஏன்? ஊர் உலகத்துல வேற பொண்ணேக் கிடைக்கலையா உனக்கு?”
 
“ஆயிரம் பொண்ணுங்க கிடைப்பாங்க, ஆனா எனக்கு நீதான் வேணும்.” சொன்னவன் அழகாகப் புன்னகைத்தான்.
 
“கனவுலதான்.” அவள் முகத்தில் இப்போது ஒரு எள்ளல் சிரிப்புத் தோன்றியது.
 
“கனவுல நான் ஏற்கனவே வாழ்ந்துட்டேன் பொண்ணே! எந்தளவுக்குன்னு நான் சொன்னேன்னா நீ மிரண்டு போயிடுவே!” அவனது கோணல் பேச்சில் அவள் முதுகுத்தண்டு சிலிர்த்தது.
 
சந்தேகமாக அவள் விழிகள் இப்போது அவனை நோக்கியது. இருவருக்கும் இடையே இருந்த அரையடி தூரத்தையும் அவன் இன்னும் கொஞ்சம் குறைத்தான். அவள் பார்வையின் பொருள் புரிந்தவன் லேசாகக் கண்ணடித்தான். 
 
“சாதாரண மனுஷனுக்கும் ஒரு கலைஞனுக்கும் இருக்கிற வித்தியாசம் தெரியுமா சுமி உனக்கு?” அவன் கேள்வி அவளுக்குப் புரியவில்லை.
 
“……..”
 
“சாதாரண மனுஷன் ஒரு பொருளையோ இல்லை சம்பவத்தையோ வெறும் கண்ணால பார்த்துட்டுப் போயிடுவான்… ஆனா கலைஞன் அப்பிடியில்லை.” ரஞ்சனின் குரலில் இப்போது குறும்பு கூத்தாடியது.
 
“நான் வரையுற ஒவ்வொரு பொருளோடயும் நான் ஒரு வாழ்க்கையே வாழுவேன் சுமி.” சொல்லிவிட்டு அந்த ஓவியன் மீண்டும் கண்ணடித்தான்.
 
“ஓ…” அவளது ஒற்றை எழுத்துப் பதில் காரசாரமாக வந்தது. அவளின் முக பாவம் பார்த்து ரஞ்சன் வாய்விட்டுச் சிரித்தான்.
 
“நீ பார்த்தியே ஒரு ஓவியம்… அதுக்கு எத்தனையோ ஆயிரம் பவுன்ட்ஸ் பரிசாக் குடுத்தாங்க, எவ்வளவு ன்னு கூட சரியா எனக்கு ஞாபகம் இல்லை, அதெல்லாம் எனக்கு ஆத்ம திருப்தியைக் குடுக்கலை சுமி…” சொல்லி முடித்துவிட்டு வலது கண்ணோரம் சுருங்க அவளை ஒரு பார்வைப் பார்த்தான் ரஞ்சன். 
 
சுமித்ரா அவனை இப்போது திகில் பார்வைப் பார்த்தாள். பார்வைகள் இரண்டும் சில நொடிகள் பிரியாமல் ஒன்றை ஒன்று ஈர்த்து நின்றன.
 
“புருஷன், பொண்டாட்டி… கூடிக் கொண்டாடின சந்தோஷம்… அந்த ஓவியத்தை வரைஞ்சு முடிச்சப்போ… உன்னோட ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து முடிச்சுட்டேன் சுமி!” அவன் மூச்சுக்காற்று இப்போது அவள் கன்னம் தடவியது.
 
அந்த நெருக்கத்தை அவள் விரும்பவில்லைப் போலும். அவன் நெஞ்சில் கை வைத்து அவனை அப்பால் தள்ளினாள். அந்தச் சின்னஞ்சிறு தீண்டலுக்கே ஓவியன் சிலிர்த்தான்.
 
“கனவு மட்டும் எனக்குப் போதும் ன்னு காலம் பூரா நான் வாழ்ந்து முடிச்சிருப்பேன்… உன்னைப் பார்க்காமப் போயிருந்தா, ஆனா இப்போ கனவு மட்டும் போதாது சுமி, ப்ளீஸ்… என்னைப் புரிஞ்சுக்கோ!” அவன் குரல் கரகரத்தது.
 
“கலைஞர்கள் ன்னா என்னமோ மென்மையா இருப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்!” மீண்டும் அந்தக் குரலில் ஏளனம்.
 
“ஆமாமா! நாங்க மென்மையா இருந்து உங்களுக்கு மனசுலயேப் பூஜை பண்ணணும், நீங்க எங்களுக்கு டாட்டா காட்டிட்டு எவங்கூடவாவது போய்க்கிட்டே இருக்கணும், அதுக்கு வேற ஆளைப் பாரு.”
 
“எனக்கு யாரைப் பார்க்கிற ஐடியாவும் இல்லை, முதல்ல ரூமை விட்டு வெளியேப் போ!” 
 
“முடியாதுன்னு சொன்னா என்னப் பண்ணுவே?”
 
“அண்ணியை கூப்பிடுவேன்.”
 
“எங்க… கூப்பிடு பார்க்கலாம்!” அவன் அவளோடு மல்லுக்கு நின்றான். 
 
“சுரேஷ் அண்ணாக்கு உன்னைப் பிடிக்கவே இல்லை, நீ இப்பிடியெல்லாம் எங்கிட்ட நடந்துக்கிறேன்னு ஒரு வார்த்தைச் சொன்னேன்…” சுமித்ரா அவனை மிரட்டினாள்.
 
“என்னடி பண்ணுவான் உங்கண்ணன்? இல்லை என்னப் பண்ணுவான்னு கேட்கிறேன்?” வரிந்து கட்டிக் கொண்டு அவன் சண்டைக்கு வர பெண் மிரண்டு போனது.
 
“மிஞ்சி மிஞ்சிப் போனா பொண்ணு தரமாட்டோம் ன்னு சொல்லுவாங்க, அவ்வளவுதானே… சொல்லிப் பார்க்கச் சொல்லு உங்கண்ணனை, வீடு புகுந்து உன்னைத் தூக்குறேனா இல்லையா பாரு!” விரல் சொடுக்கி அவன் சவால் விட்டான்.
 
“கனவுல நான் வாழ்ந்த அந்த வாழ்க்கையை நிஜத்துல உங்கூட வாழாம நான் விடப் போறதில்லை சுமி, அதுக்கு நீ ரெடியா இருந்துக்கோ.” அவன் பேச்சில் முகத்தை வெறுப்புடன் திருப்பினாள் சுமித்ரா.
 
தனக்காகத் திரும்பியிருந்த அந்தக் கன்னத்தில் சட்டென்று முத்தம் வைத்த ரஞ்சன் அத்தோடு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
 
***
இரண்டு நாட்கள் ஓய்வெடுத்தது போதும் என்று அன்று கொழும்பு செல்ல ஆயத்தமானாள் சுமித்ரா. யூனிவர்ஸிட்டி இறுதி ஆண்டில் இருக்கிறாள்.
 
“இன்னைக்கேக் கிளம்பணுமா சுமி?”
 
“ஆமா ண்ணா.” இளைய அண்ணனின் கேள்விக்குப் பதில் சொன்னவள் தனது பொருட்களை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
 
“ட்ரெயின் வரைக்கும் நான் வர்றேன்.”
 
“எதுக்கு ண்ணா? இத்தனை வருஷமாப் போறேன், வர்றேன், இன்னமும் எதுக்கு நீங்க அலையுறீங்க?” சிரித்தபடி கேட்ட தங்கையைப் பார்த்து சுரேஷும் சிரித்தான்.
 
அவள் சொல்வதும் சரிதானே? கடந்த நான்கைந்து வருடங்களாக சுமித்ரா தனியேதான் பயணம் செய்கிறாள். இருந்தாலும் சுரேஷிற்கு மனது கேட்காது. அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் தங்கை கிளம்பினால் கூடவேப் புறப்பட்டு விடுவான்.
 
“பரவாயில்லை ம்மா, என்னோட மனசு திருப்திக்காக டவுன் வரைக்கும் வர்றேன்.”
 
“சரி ண்ணா.” அதற்கு மேல் சுமித்ராவும் எதுவும் பேசவில்லை. இருவரும் கிளம்பி விட்டார்கள். 
 
அப்போது நேரம் காலை பத்து மணி. சாவகாசமாக டவுனுக்கு வந்தார்கள் இருவரும். வேலை இருந்ததால் தங்கைக்கான ட்ரெயின் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு சுரேஷ் போய்விட்டான்.
 
“பத்திரம் சுமி, போனதும் ஃபோன் பண்ணு.”
 
“சரி ண்ணா.” பையைத் தோளில் மாட்டிக்கொண்டு ப்ளாட் ஃபோர்ம் க்கு வந்தாள் சுமித்ரா. ட்ரெயின் ஏற்கனவே வந்திருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் ஏதோ பண்டிகை இருந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது.
 
‘ஐயையோ! உட்கார சீட் கிடைச்சாப் பெரிய விஷயந்தான்!’ எண்ணமிட்ட படியே உள்ளே ஏறியவள் கண்களை ஒரு முறை சுழல விட்டாள். 
 
‘ம்ஹூம்… ஒரு சீட் கூடக் காலியா இல்லையே!’ மனதுக்குள் சிணுங்கிக் கொண்டிருந்தவளைக் கலைத்தது ஃபோன். புது நம்பர்! அழைப்பை ஏற்றது பெண்.
 
“ஹலோ.”
 
“என்ன மேடம்? சொல்லாமக் கொள்ளாமக் கிளம்பிட்டீங்க?!” ரஞ்சன் சின்ன வருத்தத்தோடு கேட்டான்.
 
“யாரு நீங்க?” சுமித்ரா இருந்த மனநிலையில் உண்மையிலேயே பேசுவது யாரென்று அவளுக்குத் தெரியவில்லை.
 
“போச்சுடா! தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே… தொட்டவனை மறந்ததென்ன…” அவன் ராகத்தோடு பாட ஃபோனை அணைத்து விட்டது பெண். 
 
மீண்டும் அவள் கண்கள் எங்காவது உட்கார இடமிருக்கிறதா என்று தேட, மீண்டும் இப்போது ஃபோன் அடித்தது. சுமிக்கு கோபம் தலைக்கேறியது.
 
“யோவ்! உனக்கு வேற வேலை வெட்டியே இல்லையா? எதுக்குய்யா என்னோட உயிரை வாங்குறே?!” இருக்கும் இடத்தை மறந்து சத்தம் போட்டது பெண்.
 
“ஓகே ஓகே… கூல் சுமி கூல், உட்கார இடம் கிடைக்கலை ன்னா டென்ஷன் ஆகுறது சகஜந்தான், அதுக்காக கொழும்பு வரைக்கும் நின்னுக்கிட்டேப் போகப் போறியா?”
 
“அது என்னோட பிரச்சினை, நீ உன்னோட வேலையை மட்டும் பார்க்கிறியா?”
 
“ஸ்டேஷனுக்கு வெளியே கார் நிக்குது, வா… நாம அதுல போகலாம்.”
 
“இடியட்!” எரிச்சலோடு ஃபோனை அணைத்தவள் அதை ஆஃப் பண்ணி பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள். எப்போதும் பயணங்களுக்கு குர்தா, பேண்ட் அணிவதுதான் அவள் வழக்கம்.
 
ட்ரெயின் நகர ஆரம்பித்திருந்தது. இவள் நின்றிருந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். காதலர்கள் போலும். அவர்கள் உலகத்தில் கொஞ்சிக் குலவியபடி சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
 
‘கருமம்!’ கூட்டம் அன்றைக்கு அதிகமாக இருந்ததால் சுமித்ராவால் அவள் நின்றிருந்த இடத்தை விட்டு நகரக் கூட முடியவில்லை. தலையில் அடித்தபடி அவர்களின் நாடகத்தைப் பார்த்து முகம் சுளித்தாள்.
 
பக்கத்தில் நின்ற யாரோ நகரும் போது இவளின் தோளில் பலமாக இடித்தது. போதாததற்கு கூட இருந்தவன் ஏதோ சொல்லவும் அந்தப் பெண் வேறு சிணுங்கியது. காதை மூடிக் கொள்ளலாம் போல இருந்தது சுமித்ராவுக்கு.
 
“அறிவிருக்கா உனக்கு?!” சிடுசிடுத்த அந்தக் குரலில் சட்டென்று திருப்பினாள் சுமித்ரா. ரஞ்சன்தான் நின்றிருந்தான். 
 
அப்போதும் கொஞ்சம் பருமனில் பெரிய மனிதர் இவர்களைக் கடந்து செல்ல, சுமித்ரா அவளுக்குப் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு மனிதனின் மேல் மோதினாள். 
 
பெண்ணை அவசரமாகத் தன்னோடு இழுத்துக் கொண்ட ரஞ்சன் அவன் இரு கைகளையும் அவளுக்கு இரு புறமாகவும் வைத்துக் கொண்டான். 
 
அவனோடு ஒட்டிக்கொண்டு நிற்க வேண்டித்தான் இருந்தது. ஆனாலும் பாதுகாப்பாக உணர்ந்தாள் சுமித்ரா.  பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களின் சில்மிஷத்தை அப்போதுதான் கவனித்த ரஞ்சன் பட்டென்று சிரித்து விட்டான்.
 
“ஏற்கனவே நான் ஒரு மார்க்கமாத் திரியுறேன், இதுல இவனுங்க வேற ஏன் சுமி?” அவள் காதோரம் சிணுங்கிய அந்தக் குரலில் சுமித்ரா லேசாக விலகப் போனாள். ஆனால் எங்கேயென்று விலகுவது?!
 
“சுமீ…” தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை முழுவதுமாக அனுபவித்தான் ரஞ்சன். அவள் கூந்தல் காடு இப்போது அவன் வசம்.
 
“ப்ளீஸ்… ரஞ்சன்…” அவனை விலக்கும் வழி தெரியாது தடுமாறினாள் பெண்.
 
“ஹேய்! உனக்கு எம் பேரெல்லாம் தெரிஞ்சிருக்கு! எங்க இன்னொரு தரம் கூப்பிடு பார்க்கலாம்?!” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொருவர் பின்னால் நகர்ந்து இவனை முன்னே தள்ளினார். ரஞ்சனின் இடது கை இப்போது அவள் இடை வளைத்தது. 
 
“ப்ளீஸ்… தள்ளி நில்லுங்க, பப்ளிக் ல இப்பிடி நடந்துக்கிறது ரொம்பக் கேவலமா இருக்கு.” அவள் வார்த்தைகள் இப்போது தடுமாறியது, கண்களில் லேசாகக் கண்ணீர் துளிர்த்தது.
 
“அடுத்த ஸ்டேஷன் ‘கடுகண்ணாவ‘, நாம ரெண்டு பேரும் அங்க இறங்கிறோம்.”
 
“முடியாது.”
 
“சொன்னாக் கேட்கணும் சுமி, இப்பிடியே உன்னைத் தனியா விட்டுட்டு என்னால போக முடியாது.”
 
“பரவாயில்லை…”
 
“இவ்வளவு கூட்டமா இருக்கு! எப்பிடி டா உன்னைத் தனியா விட்டுட்டு நான் போறது?! ட்ரெயின்லதான் போகணும்னா கொழும்பு வரைக்கும் இப்பிடியே உன்னை உரசிக்கிட்டு வர நான் ரெடி சுமி.” 
 
அதற்கு மேல் சுமித்ரா எதுவும் பேசவில்லை. அங்கே இங்கே என்று நடந்து திரிந்த சக பிரயாணிகளின் உபயத்தால் ரஞ்சன் இன்பத்தின் உச்சத்தில் இருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்!
 
வேண்டுமென்று எதையோக் குனிந்து பார்ப்பது போல அவள் தோள் வளைவில் முகம் பதித்தான். சுமித்ரா குனிந்த தலை நிமிரவில்லை. அவன் வெற்றிச் சிரிப்பு மட்டும் அவள் காதில் கேட்டபடி இருந்தது. 
 
அடுத்த ஸ்டேஷன் வந்த போது ரஞ்சன் அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான். ஸ்டேஷனுக்கு வெளியே அந்த ப்ளாக் ஆடி நின்றிருந்தது.
 
“ஏறு சுமி.” அப்போதும் அவள் சும்மா நிற்கவும் அவள் தோளில் தொங்கிய பையை வாங்கி காரின் பின் சீட்டில் வைத்தவன் முன்பக்கக் கதவை அவளுக்காகத் திறந்து விட்டான்.
 
தயங்கிய படியே வந்தவள் உள்ளே ஏறிக் கொண்டாள். புத்தம் புதிய ப்ளாக் ஆடி அவளைப் பார்த்த குஷியில் உல்லாசமாகத் தன் பயணத்தை ஆரம்பித்தது.
 
“யூனிவர்ஸிட்டியில எந்த டிபார்ட்மென்ட்?” பேச்சை சுமுகமாக ஆரம்பித்தான் ரஞ்சன்.
 
“மேத்ஸ்.”
 
“ஓ… கணக்கு டீச்சரா? நல்லதுதான், நான் கணக்குல கொஞ்சம் வீக் சுமி, நம்ம பசங்களுக்கு அப்போ அது ஒரு பிரச்சினையா இருக்காது.” அவன் சொல்லவும் அவள் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள்.
 
“இதுக்கும் முறைச்சா எப்பிடிம்மா? நான் உண்மையைத்தானே சொல்லுறேன்.” 
 
“கொஞ்சம் பேசாம காரை ஓட்டுறீங்களா?” அடக்கிய கோபம் அந்தக் குரலில் கேட்டது. ரஞ்சன் அதன் பிறகு வாயைத் திறக்கவில்லை. 
 
காரின் ரேடியோவை ஆன் பண்ணினான். ‘சூரியன் எஃப் எம்’ ஒலித்துக் கொண்டிருந்தது. ஏதோவொரு பாடல் ஒலிபரப்பாக ரஞ்சன் பாடலின் சத்தத்தை அதிகப் படுத்தினான்.
 
தாளம் படப்பாடல், வைரமுத்துவின் வரிகளை ஹரிஹரன் உருகி உருகிப் பாடிக் கொண்டிருந்தார். பாடல் வரிகளின் அர்த்தம் ரஞ்சனை ஈர்க்க அவன் விரல்கள் தாளம் போட்டன.
 
கலை மானே உன் தலை கோதவா… இறகாலே உன் உடல் நீவவா… உன் கையிலே…
 
பாடல் இதமாக இருக்க ரஞ்சன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணைத் திரும்பிப் பார்த்தான். இறுகிப் போய் அமர்ந்திருந்தாள். அந்த முகத்தில் பாடலை ரசித்ததிற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
 
“பாட்டு… ரொம்ப நல்லா இருக்கில்லை சுமி?” அவன் கேட்டபோதும் முகத்தை வெடுக்கென்று ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். 
 
தொலைவான போது பக்கம் ஆனவள்… பக்கம் வந்த போது தொலைவாவதோ…
 
பாடல் வரிகள் தொடர ரஞ்சனின் கைகளில் கார் கொஞ்சம் தடுமாறியது. சட்டென்று திரும்பிய பெண் அவனை விசித்திரமாகப் பார்த்தது.
 
ரஞ்சன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டான். அதே பாடல் வரிகள் மீண்டும் ஒலிக்க சுமித்ரா அப்போதுதான் வரிகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாள். 
 
ரஞ்சன் விதிர்விதிர்த்துப் போனான். அவன் மனதுக்குள் இருக்கும் எண்ணத்தை யார் அந்தக் கவிஞனுக்குச் சொன்னது?! அவன் எண்ணவோட்டத்தைப் பிரதிபலிப்பது போலவே எதற்காக இந்தப் பாடல் வரிகள் இப்போது ஒலிபரப்பானது?!
 
எத்தனை அர்த்தமான வார்த்தைகள்! அந்த வார்த்தைகளுக்குள் எவ்வளவு உண்மை ஒளிந்திருக்கிறது!
 
எங்கோ தொலைவில் இருந்த போது அவனது கனவுகளை அலங்கரித்த அவனது தேவதைப் பெண்… அவனோடு கூடவே இருந்தாளே! அதே மங்கை இன்று கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறாள். ஆனால் அவனுக்கும் அவளுக்கும் இடையே எத்தனை இடைவெளி!
 
யாரென்றே தெரியாத போது கனவில் கொஞ்சிக் குலவி, கூடி மகிழ்ந்த பெண், நிஜமென்று வந்தபோது சீறுகிறாள், சினக்கிறாள், சிரிப்பைத் தொலைத்து நிற்கிறாள்! 
 
பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த வரிகளின் கனத்தைத் தாங்க முடியாமல் ரஞ்சன் பாட்டை நிறுத்தினான். இயல்பாக அவன் கை நீண்டு பெண்ணை இழுத்து அணைத்துக் கொண்டது.
 
“சுமி…” ரஞ்சனின் குரல் பெண்ணின் காதோடு காதல் பண்ணியது. எப்போதும் அவனை விலக்க நினைப்பவள், விலகத் துடிப்பவள் அன்று அமைதியாக அமர்ந்திருந்தாள்.
 
ரஞ்சன் அதிசயப்பட்டுப் போனான். நெஞ்சு படபடக்க அவள் முகம் பார்த்தவனுக்கு ஏமாற்றமேக் காத்திருந்தது. சுமித்ராவின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
 
“சுமி! ஏய் சுமி! என்னடா? என்னாச்சு? எதுக்கு இந்த அழுகை இப்போ?!” அவன் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவளிடம் பதிலில்லை.
 
“பிடிக்கலையா? இங்கப்பாரு… என்னைப் பாரு சுமி, பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லணும், அதை விட்டுட்டு எதுக்குடா நீ அழுறே?!”
 
“சாரி…” வேறெதுவும் அவள் பேசவில்லை.
 
“மனசுல இருக்கிறதைத் தைரியமா எங்கிட்டச் சொல்லுடா.” 
 
“எனக்கு… எனக்கு…” அவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கியது.
 
“ம்… சொல்லு.” ரஞ்சன் அவசரப் படுத்தினான்.
 
“எனக்குப் பிடிக்கலை.” பட்டென்று போட்டு உடைத்தது பெண்.
 
“ஓ… நான்தான் அப்போத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேனா? நான் வரைஞ்சதைப் பார்த்த கோபத்துல ஏதோ சின்னப் புள்ளைத்தனமாக் கோபப்படுறேன்னு நினைச்சேன்.”
 
“……”
 
“நம்ம சுமிதானேங்கிற உரிமையில விளையாடிப் பார்க்க நினைச்சேன், இவ்வளவு வெறுப்பை நான் எதிர்பார்க்கலை சுமி… சாரி டா.” ரஞ்சன் சட்டென்று உடைந்தான்.
 
“சாரி…” கண்களில் வழிந்த கண்ணீரை இப்போது துடைத்துக் கொண்டது பெண்.
 
“ஏன் சுமி? அப்பிடியென்ன வெறுப்புடா எம்மேல? அதை மட்டும் நான் தெரிஞ்சுக்கலாமா?” நெஞ்சு கனக்கக் கேட்டான் ஓவியன்.
 
“நீங்கன்னு இல்லை… இந்த உலகத்துல இருக்குற யாரு வந்து எங்கிட்ட இதைப்பத்திப் பேசினாலும் அவங்களுக்கான பதில் இதுதான்.” தீர்மானமாகச் சொன்னது பெண்.
 
“புரியலை சுமி.” ரஞ்சன் இப்போது குழம்பினான்.
 
“எதுவும் புரிய வேணாம், விட்டுடுங்க.” மெல்லிய குரலில் சொன்னவள் காரை விட்டு இறங்கி தொலை வானத்தை வெறித்தாள். ரஞ்சன் அவளையே இமை கொட்டாமல் பார்த்திருந்தான்.