OVIYAPAAVAI-07

ஓவியம் 07
 
காரை விட்டிறங்கியவள் தொலை வானை வெறித்திருக்க சில நொடிகள் அவளையேப் பார்த்திருந்தான் ரஞ்சன். அவள் முகத்தில் தெரிந்த தீவிரம் அவனைச் சிந்திக்கச் செய்தது, நிதானிக்க வைத்தது.
 
‘இவள் பிரச்சனை என்னவாக இருக்கும்?!’ ஓவியனின் சிந்தனைப் பலவாறாக இருந்தது. ரஞ்சனும் இப்போது காரை விட்டு இறங்கினான். அவன் இறங்கியதைக் கூட உணராமல் ஏதோ நினைவுகளுக்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தது பெண்.
 
“சொல்லு சுமி.” தன்னருகில் கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தாள் சுமித்ரா. இத்தனை நாளும் அவளோடு பேசும் போது கூத்தாடும் குறும்புகள் அத்தனையும் காணாமல் போக அவளையே வெறித்துப் பார்த்திருந்தான் இளையவன்.
 
“என்ன சொல்லணும்?”
 
“ஏதோ இருக்கு… இந்த வெறுப்புக்குப் பின்னால ஏதோ பலமான ஒரு காரணம் இருக்குன்னு எனக்கு இப்பத் தோணுது… அது என்னன்னு எங்கிட்டச் சொல்லு.” பிடிவாதமாக நின்றவனைத் தீர்மானமாகப் பார்த்தது பெண்.
 
ரஞ்சனுக்குள் இப்போது ஏதோ பண்ணியது! அவளின் ஒற்றைப் பார்வை அவன் உயிர் வரைத் தீண்டியது. அந்தப் பார்வையின் தீட்சண்யத்தை அப்போதே ஒரு ஓவியமாக்க அவன் கைகள் பரபரத்தது!
 
“ஏற்கனவே என்னோட கல்யாணம் நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்து நின்னு போச்சு!” பெண் நிதானமாக, தெளிவாகத்தான் சொன்னது. ஆனால் அவள் சொல்லி முடித்த போது ரஞ்சனுக்கு ஒன்றுமேப் புரியவில்லை. அவள் பேசிய பாஷை புரியாதவன் போல மௌனமாக நின்றிருந்தான்.
 
“புரியலை…” நெற்றி சுருங்க அவன் சொன்ன போது கண்களை ஒரு முறை மூடித் திறந்தாள் சுமித்ரா.
 
“காதலிச்சு, கல்யாணம் வரைக்கும் வந்து…”
 
“பொறு பொறு!” பேசிக் கொண்டேப் போனவளைச் சட்டென்று நிறுத்தினான் ரஞ்சன்.
 
“காதலிச்சயா?! யாரு? நீயா?!”
 
“ஏன்? நான் காதலிக்கக் கூடாதா?”
 
“நீ காதலிக்கலாம், காதலிக்கணும்… ஆனா அது நானாத்தானே இருக்கணும் சுமி?!” கேள்வி கேட்டவனை வினோதமாகப் பார்த்தாள் சுமித்ரா. அவளைப் பொறுத்தவரை இது அர்த்தமில்லாத கேள்வி.
 
‘டேய்! லூசாடா நீ?!’ என்பது போல இருந்தது அந்தப் பார்வை.
 
“எதுக்கு இப்போ லூசை பார்க்கிற மாதிரி என்னைப் பார்க்கிறே?”
 
“நீங்க பேசுறது அப்பிடித்தானே இருக்கு ரஞ்சன்!” அவனை அவள் பெயர் சொல்லி அழைக்கும் போதெல்லாம் அவன் உருகிக் கரைவதை அவள் அறிவாளா?! ஆனால் அதையும் தாண்டி இப்போது அவனுக்கு வலித்தது!
 
‘அவளின்றி எனக்குக் காதலில்லை, ஆனால்… அவளுக்கு இருந்திருக்கிறதே! என்னைத் தாண்டி இன்னொருவன்!’ ரஞ்சனின் மனம் ஊமையாய் அழுதது.
 
“யாரு?” முகம் முழுவதும் வலியை அப்பிக் கொண்டு அவள் கடந்த காலத்தில் காலடி எடுத்து வைத்தான் ஓவியன்.
 
சுமித்ரா இப்போது சட்டென்று பேசி விடவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக நின்றிருந்தாள். அந்த அமைதியின் ஆழம் அவள் காதலின் தீவிரத்தைச் சொன்னது.
 
“கூடப் படிச்ச பையன், சூப்பர் சீனியர், நல்லாப் படிக்கிற பையன், தொரத்தித் தொரத்திக் காதலிச்சான்…” கடந்த காலக் கசப்பை அவள் கொட்டிக் கொண்டிருக்க, அதை வலியோடு விழுங்கிக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
 
“நான் ஆரம்பத்துல அதைப் பெரிசு பண்ணலை, வீட்டுல தெரிஞ்சாக் கொலையே விழும், சுரேஷ் அண்ணா ஆடித் தீர்த்திடுவாரு.”
 
“…….” 
 
“அப்போதான் அவனுக்கு மெடிசின் கிடைச்சுது, அவங்க வீட்டுல அவ்வளவு சந்தோஷம், வீட்டுல சொல்லி இருப்பான் போல… பையன் ஆசைப் பட்டுட்டானேன்னு அவங்க அப்பா வந்து பொண்ணு கேட்டாரு.”
 
“உங்கண்ணன் என்ன சொன்னாரு?” சட்டென்று வந்தது கேள்வி.
 
“மறுக்கிறதுக்கு எந்தக் காரணமும் அவங்களுக்கு இருக்கலை.”
 
“டாக்டர் ன்னதும் நீயும் பல்லை இளிச்சிக்கிட்டு தலையை ஆட்டிட்டே!” அவன் பொங்கி வெடிக்கவும் சிறிது நேரம் பெண் எதுவும் பேசவில்லை.
 
“அப்புறம் என்னாச்சு?”
 
“படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வெச்சுக்கலாம் ன்னு பெரியவங்க பேசிக்கிட்டாங்க.” 
 
“ம்…”
 
“ஃபோன்ல பேசிக்கிட்டோம், வீட்டுக்கு வர்ற தைரியம் அவனுக்கில்லை.”
 
“அதுதான் ஊர்ல ஆயிரத்தெட்டு இடம் இருக்கே! மீட் பண்ணி இருப்பீங்க.”
 
“ம்ஹூம்… பையனைத் தனியா விட முடியாதுன்னு அவங்க குடும்பமே அவன் கூடவேப் போய் யூனிவர்ஸிட்டிக்கு பக்கத்துல வீடெடுத்துத் தங்கினாங்க.”
 
“அடேயப்பா!”
 
“ரெண்டு தடவை என்னைப் பார்க்க வந்திருந்தான்.”
 
“அவங்க அப்பாக்கு தெரியாம வந்தானா?” குறுக்கு விசாரணை பலமாக இருந்தது.
 
“இல்லை… சொல்லிட்டுத்தான் வந்தான், ஆனா… கூடவே அவனோட தங்கையும் வந்திருந்தா.” இதைச் சொல்லும் போது சுமித்ராவின் குரல் இறங்கிப் போனது.
 
“ஹா… ஹா… தங்கையுமா? ஐயையோ! வடிகட்டின முட்டாளா இருப்பான் போலயே?!” ரஞ்சன் கவலையை மறந்து வெடித்துச் சிரிக்க சுமித்ரா முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள்.
 
“ரௌடித்தனத்தை உங்க அளவுக்குப் பண்ணுற கெட்டிக்காரத்தனம் எல்லாருக்கும் வராது மிஸ்டர் ரஞ்சன்.” அந்த ‘மிஸ்டர்’ என்ற வார்த்தை அவள் வாயில் நொறுங்கியது.
 
“ஹா… ஹா…” அவன் சிரிப்பு அந்த இடத்தையேக் கிடுகிடுக்க வைத்தது.
 
“இப்போ எதுக்குச் சிரிக்கிறீங்க?” அவன் மீண்டும் மீண்டும் சிரிக்க அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
 
“சரி சரி, நீ விஷயத்துக்கு வா, அந்த நல்லவன் எந்த இடத்துல கெட்டவன் ஆனான்?” ரஞ்சன் சிரிப்பதை நிறுத்திவிட்டுச் சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் அந்தக் கேள்வி அவளைச் சுட்டிருக்க வேண்டும். கண்கள் கலங்க நிலத்தைப் பார்த்தாள்.
 
“சுமி!” சிரிப்பு தொலைந்து போகச் சட்டென்று அவளருகேப் போனான் ரஞ்சன். சுமியின் கண்களிலிருந்து இரண்டு பெரிய நீர்த்துளிகள் வீழ்ந்து சிதறியது.
 
“அருகதையே இல்லாதவனுக்காக நீ இப்போ அழுறே சுமித்ரா!” ரஞ்சனுக்கு இப்போது ஏனோக் கோபம் வந்தது. ஏனென்று தெரியாமலேயே அவள் மீது கோபப்பட்டான்.
 
“லேட் ஆகுது, நாம போகலாம்.” நகரப் போனவளின் ஒற்றைக் கரத்தைப் பிடித்து நிறுத்தினான் ரஞ்சன்.
 
“எங்கப் போறே?”
 
“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? என்னை இங்க இருந்து பஸ் ல ஏத்தி விடுங்க, நான் போய்க்கிறேன்.”
 
“பாதில விட்டுட்டு ஓடுற முட்டாள் பயல் நானில்லை, நீ முழுசாச் சொல்லி முடி.”
 
“இல்லை…”
 
“சுமீ!” ரணத்துக்குப் பயந்து அவள் காயத்தை மூடி மறைத்தாள். அதைக் கீறியேத் தீருவேன் என்று ரஞ்சன் பிடிவாதமாக நிற்கும் போது அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
 
“நிச்சயதார்த்தம் பண்ணலாம் ன்னு தேதி குறிச்சாங்க.”
 
“ம்…”
 
“எல்லாருக்கும் பத்திரிகை குடுத்து அழைப்பும் வெச்சாங்க… ஆனா…” மேலே அவள் பேசவில்லை.
 
“என்னாச்சு? அவனோட அப்பன் மண்டையைப் போட்டுட்டானா?”
 
“ஐயையோ!”
 
“ஓ… இல்லையா? அப்போப் பையனே மண்டையைப் போட்டுட்டானா?”
 
“ஐயோ ஆண்டவா!” சுமித்ரா இப்போது காதுகளைக் கரங்களால் பொத்திக் கொண்டாள்.
 
“அப்போ என்னதான் ஆச்சு?!” ரஞ்சனின் பொறுமைப் பறந்தது.
 
“டாக்டர்… டாக்டரில்லையா…”
 
“வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலம்… நீ மேலே சொல்லு.” எரிந்து விழுந்தான்.
 
“யாரோ… பெரிய இடத்துல இருந்து கேட்டிருப்பாங்க போல இருக்கு.”
சுமித்ராவின் முகம் இதைச் சொல்லும் போதே சிறுத்துப் போனது. கூனிக் குறுகிப் போனாள்.
 
“பெரிய இடம் ன்னா?! எனக்குப் புரியலை? உன்னை விட பெரிய இடம் எங்க இருக்கு?” நொந்த அவள் மனதுக்கு அந்த வார்த்தைகள் பெரு மருந்தாக இருந்திருக்க வேண்டும். அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் நீர் மீண்டும் திரண்டது.
 
“இல்லை… நல்ல வசதியான வீட்டுல இருந்து…” அவள் அவமானத்தைத் தெள்ளத்தெளிவாக அவளால் சொல்லக் கூட இயலவில்லை. 
 
ரஞ்சனின் கை முஷ்டிகள் இப்போது இறுகியது. உடம்பு நாணேற்றிய வில் போல விறைத்தது. வார்த்தைகள் கூரிய அம்பாக அவளை நோக்கிப் பாயக் காத்திருந்தன. ஆனாலும் தன்னை வெகு சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
 
“அந்தப் பரதேசி உன்னை விட்டுட்டுப் போனது கூட எனக்கு ஒரு மேட்டரா தெரியலை, ஆனா அவனை நினைச்சு நீ இன்னும் அழுற பாரு… அதுதான் என்னை ரொம்பக் கோபப்படுத்துது சுமி!” சினம் தலைக்கேற தன்னெதிரே நின்றிருந்தவனைப் பார்த்தாள் சுமித்ரா.
 
“நான் உண்மையாத்தான் காதலிச்சேன்.”
 
“மண்ணாங்கட்டி! தகுதியே இல்லாத ஒருவன் மேல எப்பிடி உனக்கு லவ் வரும்?” அவன் இப்போது இடம் மறந்து கத்தினான்.
 
“தகுதி இல்லாதவனையா எங்க வீட்டுல அப்போ எனக்குப் பார்த்தாங்க?”
 
“ஆமா! தகுதின்னு நீ எதை நினைக்கிறே? அவனோட தொழிலையா? டாக்டர் ன்னா அவன் என்னப் பெரிய இவனா? அப்போ… அங்க உட்கார்ந்து மாம்பழம் விக்கிறானே, அவன் உங்கிட்ட வந்து அவனோட அன்பைச் சொன்னா நீ ஏத்துக்க மாட்டியா?” ரஞ்சனின் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தாள் சுமித்ரா. 
 
ஒரு இளைஞன் குவியலாக மாம்பழங்களை அடுக்கி ரோட்டின் ஓரமாக இருந்த ஒரு சின்னக் குடிசைக் கடையில் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தான். அவளின் குழம்பிய முகத்தைப் பார்த்த ரஞ்சன் மீண்டும் பேசினான்.
 
“உன்னை ஒருத்தன் நேசிக்கிறான்னா அவனோட அன்பை மட்டும் பாரு, அவனோட நேசம் எத்தனைத் தூய்மையா இருக்குன்னு மட்டும் பாரு, தொழில் பண்ணுறது வாழுறதுக்கு, தொழிலை வெச்சு மனுஷனை எடை போடாதே சுமி.”
 
“காதலிக்கிறேன்னு வந்து நின்னது அவன்தானே?!”
 
“காதல் இல்லைன்னு சொன்னதும் அவன்தானே? முன்னாடி ஏத்துக்க முடிஞ்ச உன்னால பின்னாடி ஏன் தூக்கிப் போட முடியலை?” 
 
சுமித்ரா இப்போது எதுவுமேப் பேசவில்லை. அமைதியாக நின்றிருந்தாள். அவள் மனதில் இருக்கும் ரணத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இதையெல்லாம் விளக்கவும் அவளால் இயலாது.
 
“இதுக்கெல்லாம் பதில் எங்கிட்ட இல்லை ரஞ்சன், இதையெல்லாம் வேற யாருக்கிட்டயாவது நான் சொல்லி இருப்பனான்னு கூட எனக்குத் தெரியாது, ஆனா நீங்க உங்க காலத்தையும் நேரத்தையும் வீணாக்குறீங்க, அதனாலதான் சொல்லுறேன், உங்க வேலைங்களை நீங்க கவனிங்க, உங்க மனசுல இருக்கிற எதுவுமே நடக்காது.” மளமளவென்று ஒப்புவித்துவிட்டு காரிலிருந்த தனது பையை எடுக்கப் போனாள் சுமித்ரா.
 
“இப்போ எதுக்கு அதை எடுக்கிறே?”
 
“நான் இங்கேயே இறங்கிக்கிறேன்.”
 
“ட்ரெயின் ல இருந்த உன்னை இறக்கி காருக்கு கூட்டிட்டு வந்தது நான், அப்பிடி நடு ரோட்டுல விட முடியாது, நீ உள்ளே ஏறு.”
 
“இல்லை நான்…”
 
“சுமி! சொன்னதைச் செய்!” அதட்டலாக வந்த அந்த வார்த்தைகளுக்குப் பணிய மனமில்லாவிட்டாலும் நடு வீதியில் வைத்து வாக்குவாதம் செய்ய அவள் விரும்பவில்லை.
 
“ஒரேயொரு கால் பண்ணிட்டு வந்தர்றேன், கொஞ்சம் வெயிட் பண்ணு.” சொல்லிவிட்டு சற்று அப்பால் போனான் ரஞ்சன்.
 
சுமித்ரா காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள். வாழ்க்கையில் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்தியது போல உணர்ந்தது மனது. 
 
வலித்தது! எதற்காக வலிக்கிறது என்று புரியாமலேயே வலித்தது பெண்ணுக்கு. தன் காதல் கைகூடாததால் வந்த வலியா? இல்லை, தன்னை ஒருவன் நிராகரித்துவிட்ட வலியா? எதுவாக இருந்தாலும் வலித்ததென்னமோ உண்மை! 
 
அந்த காரை அப்போதுதான் கவனித்தது பெண். புதிய மாடல் போலும். விளக்கி வைத்த வெண்கல குத்துவிளக்குப் போல பளபளவென இருந்தது. 
டேஷ் போர்டில் இருந்த அந்தச் சின்ன ஃப்ரேம் கருத்தைக் கவர அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தாள். ஒரு ஜோடி கண்கள்! 
 
பென்சிலால் ஒரு ஜோடி கண்கள் வரையப்பட்டு அதை ஃப்ரேம் பண்ணி இருந்தது. அந்தக் கண்கள் அவளை உறுத்து விழித்தன. ஏனென்றால்… அது அவள் விழிகள்!
 
காருக்குள் சுமி திகைப்போடு அமர்ந்திருக்க, வெளியே ரஞ்சன் ஃபோனை காதில் வைத்துக் கொண்டு மஞ்சுளாவை அழைத்திருந்தான்.
 
“சொல்லுங்க தம்பி, எப்பிடி இருக்கீங்க?” சட்டென்று லைனுக்கு வந்தார் மஞ்சுளா.
 
“வீட்டுல யாராவது இருக்காங்களா? உங்களால இப்ப எங்கூடப் பேச முடியுமா?”
 
“இல்லையில்லை, ஒன்னும் பிரச்சினை இல்லை, நீங்க சொல்லுங்க தம்பி.”
 
“சுமிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததை நீங்க ஏன் எங்கிட்டச் சொல்லலை?” சட்டென்று ரஞ்சன் கேட்டு விட்டான். அடுத்த முனையில் மஞ்சுளா இவன் கேட்டதில் திகைத்திருப்பார் போலும். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.
 
“உங்களுக்கு இதெல்லாம் யாரு சொன்னது?!”
 
“யாரு சொன்னா என்ன க்கா? உண்மைதானே?” 
 
“உண்மைதான்.” சட்டென்று ஒப்புக்கொண்டார் மஞ்சுளா.
 
“ஏன்? உங்க வீட்டுல இருக்கிற பெரிய மனுஷங்களுக்குப் புத்தி இல்லையா? நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னு கூடவாக் கண்டு புடிக்கத் தெரியலை.” 
 
“…….” மஞ்சுளா பதிலேதும் சொல்லவில்லை. ரஞ்சன் கேட்ட கேள்விகளில் நியாயம் இருந்ததால் வாயடைத்துப் போய் நின்றிருந்தார்.
 
“சுமிதான் சொன்னா.” அவன் குரல் வெகுவாக இறங்கிப் போயிருந்தது.
 
“ஓ…”
 
“அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சே, அவ மனசை மாத்தணும்னு யாராவது முயற்சி பண்ணினீங்களா?”
 
“எங்க தம்பி… பேசிப் பேசி எனக்கு அலுத்துப் போச்சு! அதுக்கப்புறமா எத்தனையோ வரன் வந்துச்சு, அசைய மாட்டேன்னுட்டா.”
 
“இப்பவும் உட்கார்ந்து ஓன்னு ஒப்பாரி வெக்குறா.”
 
“யாரைச் சொல்லுறீங்க?! சுமியா?! அவதான் இப்போ கொழும்பு போறாளே?! ட்ரெயின் ல இல்லை போறா?!”
 
“ட்ரெயின்லதான் போனா, நான்தான் கொஞ்சம் பேசணும்னு கார் ல வான்னு கூட்டிட்டு வந்தேன்.”
 
“ஐயையோ! வீட்டுல தெரிஞ்சா அவ்வளவுதான் தம்பி!” பதறினார் மஞ்சுளா.
 
“இதையெல்லாம் எதுக்கு நீங்க வீட்டுல சொல்லப் போறீங்க, சுமியோட விஷயத்துக்கு வாங்க க்கா, இப்போ நான் என்னப் பண்ணுறது?”
 
“தம்பி… நீங்க… இதெல்லாம் தெரிஞ்ச பிறகும்… இன்னும்…” 
 
“காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவனாக் கொண்டு போக முடியும்?! கேள்விப்படுற ஒவ்வொரு விஷயமும் சுமி எனக்கானவன்னு அடிச்சுச் சொல்லுது க்கா.” ரஞ்சன் சொன்ன போது மஞ்சுளா விசும்பி விட்டார்.
 
“அந்த முட்டாள் பொண்ணுக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது தம்பி, அந்த கேடுகெட்டவனையே நினைச்சுக்கிட்டு இருக்கா! காதல் சொன்னானாம் காதல்! அந்த நாசமாப்போன காதல் இல்லாம நாங்கெல்லாம் நல்லா வாழலையா?!”
 
“…….”
 
“நம்ம அன்பைக் கொட்ட ஒரு தகுதி, தராதரம் வேணாம்? நம்பினோம்… அதான் இல்லைன்னு ஆகிப்போச்சில்லை? தூக்கித் தூரப் போட்டுட்டு நம்ம வாழ்க்கையை வாழணுமில்லை?”
 
“ம்…”
 
“தாலி கட்டிக் குடித்தனம் பண்ணின பொண்ணுங்களே புருஷன் சரியில்லைன்னாத் தூக்கித் தூரப் போட்டுட்டுப் போய்கிட்டே இருக்காளுங்க, இவளுக்கு என்ன தம்பி வந்திச்சு?”
 
“புரிஞ்சுக்க மாட்டேங்கிறாளே!”
 
“தம்பி நீங்க…” மஞ்சுளா எதையோக் கேட்கத் தயங்கினார். மீண்டும் மீண்டும் அவருக்கு ரஞ்சனுடைய மனதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.
 
“மனசுல என்ன இருந்தாலும் அதைத் தாராளமா எங்கிட்டக் கேளுங்க க்கா.”
 
“சுமி மேல… நீங்க இன்னும்… நாளைக்கு இதையே நீங்க…” 
 
“நான் டாக்டரும் இல்லை, இன்ஜினியரும் இல்லை… மனுஷன் க்கா, இதுக்கு மேல என்ன சொல்லி உங்களுக்கு என்னைப் புரிய வெக்கிறதுன்னு எனக்குத் தெரியலை.”
 
“இல்லையில்லை… நீங்க என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது, நாங்க வாங்கின அடி ரொம்பப் பெரிய அடி ப்பா.”
 
“புரியுது க்கா, பொண்ணு கேட்டு என்னோட அப்பா, அம்மா வருவாங்க, கூடிய சீக்கிரமே.”
 
“ஓ… அப்போ சுமி?”
 
“அவளை நான் பார்த்துக்கிறேன், உங்க வீட்டுல பொண்ணு குடுத்தா நல்லது, உங்க மச்சினன் அன்னைக்குப் போல எகிறிக் குதிச்சா நான் விஷயத்தை வேற மாதிரித்தான் நடத்துவேன்.”
 
“ஐயோ தம்பி! நீங்க என்ன சொல்ல வர்றீங்க?!”
 
“உங்க பொண்ணை எனக்குக் குடுங்கன்னு சொல்லுறேன், வேற ஒன்னுமேயில்லை க்கா.” சொல்லிவிட்டுச் சிரித்தவன் அத்தோடு அழைப்பையும் துண்டித்து விட்டான்.
 
ரஞ்சன் காருக்குள் வந்து ஏறிய போது கையில் அந்த ஃப்ரேமை வைத்துக் கொண்டு யோசனை செய்தபடி அமர்ந்திருந்தாள் சுமித்ரா. ஒரு புன்னகையோடு அதை வாங்கி அதனிடத்தில் வைத்தவன் காரை ஸ்டார்ட் பண்ணினான்.
 
அதன் பிறகு அந்த ப்ளாக் ஆடிக்குள் பாட்டுச் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. இருவரும் அமைதியாக அமர்ந்தபடி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
 
ஆங்காங்கே சில இடங்களில் காரை நிறுத்தினான் ரஞ்சன். ஓரிடத்தில் பகலுணவை முடித்துக் கொண்டார்கள். இன்னுமோர் இடத்தில் பிரம்பாலான கைவினைப் பொருட்கள் விற்கப்படவும் அவற்றைப் பார்த்து ரசித்தான்.
 
மறந்தும் சுமித்ராவிடம் அவன் எதுவும் பேசவில்லை. பேசவில்லையேத் தவிர அவன் முகம் தீவிர சிந்தனையைக் காட்டியது. இறுதியாக கொழும்பு நெருங்கவும் அந்த ப்ளாக் ஆடியை ஓரிடத்தில் நிறுத்தினான் ரஞ்சன்.
 
“சுமி…” அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தவன் மிகவும் நிதானமாகப் பேச்சை ஆரம்பித்தான். பெண்ணும் அவனைத் திரும்பிப் பார்த்தது.
 
“உன்னோட வாழ்க்கையில ஒரு கசப்பான சம்பவம் நடந்து போச்சு, அதை நான் மறுக்கலை, ஆனா… அதையேக் காரணமாக் காட்டி எத்தனை நாளைக்கு உன்னால உன்னோட கல்யாணத்தைத் தள்ளிப்போட முடியும்?”
 
“ஏன்? பொண்ணுங்கன்னாக் கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா? என்னால தனியா வாழ முடியாதா?”
 
“இதையே உங்க பெரியண்ணன் கிட்ட உன்னால சொல்ல முடியுமா?”
 
“அது…”
 
“அப்பிடியேதான் நீ சொன்னாலும், சரிம்மா நீ சொல்ற படியே நாங்க கேட்டுக்கிறோம் ன்னு அவங்களும் கேட்டுக்குவாங்களா? கொஞ்சம் யோசிச்சுப் பாரு.”
 
“அதனால?!” கண்கள் சுருங்கக் கேட்டாள் சுமித்ரா.
 
“உன்னோட அண்ணனுக்காகவோ, இல்லைன்னாக் குடும்பத்துக்காகவோ நீ எப்பிடியும் கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்.”
 
“…..”
 
“அது உனக்குப் பிடிச்சாலும் சரி, பிடிக்கலைன்னாலும் சரி.”
 
“…..”
 
“யாரோ ஒருத்தனோட உன்னோட கல்யாணம் நிச்சயமா நடக்கத்தான் போகுது, அந்த ஒருத்தன் நானா ஏன் இருக்கக் கூடாது சுமி?” 
 
“…..” அவன் பேசிய வார்த்தைகளைக் கிரகித்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் சுமித்ரா. மனதுக்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
 
நான் வரவாக் கண்ணே நான் வரவா…
வாய்ப்பிருந்தா வந்து வாய் தரவா…