ஓவியம் 08
தான் கேட்க வேண்டியதைக் கேட்டு முடித்துவிட்டு அமைதியாக ஸீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான் ரஞ்சன். மனதுக்குள் ஒரு ரயில் தடதடத்தது.
‘இந்தப் பெண் என்னப் பதில் சொல்லப் போகிறது?’
ஆனால் அத்தனைச் சுலபத்தில் சுமித்ரா வாயைத் திறந்து விடவில்லை. காது கேட்டதை மூளை கிரகித்து, பின்பு அதை மனது அலசி ஆராய்ந்து என்று அவளுக்குள் பல ரசாயனங்கள் நடந்து கொண்டிருந்தன.
“சுமி.” ரஞ்சன் மெதுவாக அழைத்தான். அவன் குரலில் இதுவரைச் சாலையை வெறித்திருந்த அவள் பார்வை அவனை நோக்கித் திரும்பியது.
“உங்களுக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா?” ஒரு குழந்தையிடம் கேட்பது போலக் கேட்டது பெண்.
“நல்லாவேப் புரியுது சுமி.”
“நான் ஒருத்தனைக் காதலிச்சிருக்கேன்னு சொல்றேன்!”
“ஸோ வாட் ம்மா?”
“ஸோ வாட் ஆ?! உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?!”
“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன், அதுக்காக உன்னை விட்டுட முடியுமா? இன்னொருத்தன் கிட்டத் தூக்கிக் குடுத்திட முடியுமா சுமி?”
“நான் கல்யாணமேப் பண்ணிக்கப் போறதில்லை ரஞ்சன்.”
“இல்லைடா, அது நடக்காது, உன்னோட வீட்டுல அதுக்குச் சம்மதிக்கப் போறதுமில்லை.”
“…..”
“நான் சொல்றதைக் கேளு பொண்ணே! பிடிவாதம் பிடிக்காதே, யாரோ ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணித்தான் ஆகணும், அது நானா ஏன் இருக்கக் கூடாதுன்னு மட்டுந்தான் இப்போ உங்கிட்ட நான் கேட்கிறேன்.”
“ஒருவேளை இதுக்கு எங்க வீட்டுல சம்மதிக்கலைன்னா?”
“எனக்குத் தேவை உன்னோட சம்மதம் மட்டுந்தான், வேற எதையும் நான் எதிர்பார்க்கலை.”
“நான் சம்மதிச்சு எங்க வீட்டுல முடியாதுன்னு சொன்னா என்னப் பண்ணுவீங்க?” அவள் முகத்தில் இதுவரை இருந்த சோக பாவம் இப்போது லேசாக மாறி இருந்தது. ரஞ்சனும் இப்போது புன்னகைத்தான்.
“நீதான் சொன்னியே, எனக்கு வில்லத்தனம் பண்ண நல்லா வருதுன்னு.” வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டான் ஓவியன்.
“ஓ… வீடு புகுந்து பொண்ணைத் தூக்குவீங்களோ?!”
“உன்னைத் தூக்குவேன்.” அவன் கண்களில் சிரிப்பிருந்தது, அதையும் தாண்டி அந்த விழிகளில் ஒரு தீவிரம் தெரிந்தது.
“ஓ…”
“எனக்கு என்னோட சுமி வேணும், அதுக்கு யாரு தடையா இருந்தாலும் அந்தத் தடையை நான் தாண்டத் தயங்க மாட்டேன்.”
“ஒருவேளை அந்தத் தடையா நான் இருந்தா?!”
“அப்போ மட்டுந்தான் இந்த ரஞ்சன் கொஞ்சம் நிதானிப்பான், எப்பிடி இருந்தாலும் கடைசியில என்னோட ஆசைதான் நிறைவேறும் சுமித்ரா!” அந்தக் குரலில் இருந்த உறுதி அவளைச் சிலிர்க்க வைத்தது.
“நீங்களே முடிவெடுத்துட்டீங்க… அதுக்கப்புறமா எதுக்கு எங்கிட்டப் பேசிக்கிட்டு இருக்கீங்க?” அவள் அவனை வேண்டுமென்றே ஏளனம் செய்தாள்.
“அது அப்பிடியில்லை சுமி, இறுதி முடிவு நான் ஆசைப்பட்ட படிதான் நடக்கும், அதுல எந்த மாற்றமும் இல்லை, ஆனா அதுக்கு முன்னாடி என்னைச் சார்ந்தவங்களோட மனசை நான் கொஞ்சம் மாத்த நினைப்பேன்.”
“ஓ! அப்போ இப்ப அதுதான் நடக்குதா?” அவள் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை, பற்கள் தெரிய அழகாகப் புன்னகைத்தான்.
“ஒருவேளை நீங்க இங்க வரும்போது எனக்குக் கல்யாணம் ஆகியிருந்தா… அப்போ என்னப் பண்ணி இருப்பீங்க?” அவளுக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை.
“பாவம் டாக்டர்! விட்டுரு, அவன் பொழைச்சுப் போகட்டும்!” அவன் அசால்ட்டாகத்தான் சொன்னான். ஆனால் சுமித்ரா விதிர்விதிர்த்துப் போனாள்.
‘இது என்ன மாதிரியான பதில்?! அப்படியென்றால்… இவன் எனக்காக எந்த எல்லைக்கும் போவானா?! கொலை கூடச் செய்வானா?!’
“உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் சுமி!” அவள் முகத்தையேப் பார்த்திருந்தவன் அவள் கேளாமலேயேப் பதில் சொன்னான்.
சுமித்ரா இப்போது அமைதியாகி விட்டாள். இந்த அன்பு நல்லதிற்கா? இல்லைக் கெட்டதிற்கா? அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தன் அருகில் அமர்ந்திருப்பவனால் தன் வாழ்வு சுகப்படுமா என்று கூட அவளுக்குப் புரியவில்லை.
“நிறைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில… மனசுல நிறைய ஆசைகளோட இந்தக் கல்யாணத்தைப் பண்ணணும்னு நீங்க நினைக்கிறீங்க.”
“….” அவள் ஒரு முடிவுக்கு வந்தவள் போல பேச ஆரம்பித்த போது ரஞ்சனின் முகம் கனிந்து போனது. அவளையேப் பார்த்திருந்தான்.
“ஆனா… என்னால…”
“ம்… சொல்லு சுமி, உனக்கு இப்போ என்னப் பிரச்சினை?”
“என்னால… என்னால ஒரு மனைவியா நடந்துக்க முடியும் ன்னு எனக்குத் தோணலை.”
“அப்பிடின்னா?” கண்கள் இடுங்க அவன் கேட்ட போது சுமித்ரா பார்வையை வெளியேத் திருப்பிக் கொண்டாள். இதைவிட பட்டவர்த்தனமாக எப்படிச் சொல்வது!
“உங்களைப் பத்தி எனக்கு இன்னமும் சரியாத் தெரியாது ரஞ்சன், தெரிஞ்ச வரைக்கும்…”
“அதை என்னைப் பார்த்துச் சொல்லேன் சுமி.” அவசரமாக அவன் சொல்லவும் பார்வையை அவன் புறமாகத் திருப்பினாள் பெண். அவன் கண்களில் அவள் எண்ணத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் தெரிந்தது.
“உங்க மனசறிஞ்சு, உங்க மேல காதலைக் கொட்டுற ஒரு பொண்ணு உங்களுக்கு அமைஞ்சா நல்லா இருக்கும்.”
“ஏன்? அந்தப் பொண்ணா நீ இருக்க மாட்டியா?”
“என்னால அப்பிடி இருக்க முடியும் ன்னு எனக்குத் தோணலை.”
“சரி, அப்ப நான் காத்திருக்கேன் சுமி.”
“யாரு? நீங்களா?!” அவள் புருவங்கள் இரண்டும் நெற்றி வரை ஏறி இறங்கியது. அவன் பொறுமையின் அளவைத்தான் அவள் நன்கறிவாளே!
“கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும் நான் உனக்கு ப்ராமிஸ் பண்ணுறேன்.”
“ப்ராமிஸா? என்னன்னு?”
“உன்னோட சம்மதம் இல்லாம எதுவுமே நடக்காது, ஆனா கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம் ன்னு சொல்லு.”
“காத்திருப்பேன்னு இப்போதான் சொன்னீங்க?!”
“கல்யாணம் பண்ணிட்டுக் காத்திருக்கேனே சுமி.” இப்போது அவனை சுமித்ரா நம்பாத ஒரு பார்வைப் பார்த்தாள்.
“நம்பிக்கைதான் வாழ்க்கை சுமி.” அவன் பேசிய நியாயத்தில் சுமித்ராவுக்கு சிரிப்புத்தான் வந்தது.
***
அடுத்த நாள் மாலை நான்கு மணி போல சுமித்ராவின் வகுப்புகள் அனைத்தும் முடிந்து விட்டன. நிம்மதியாக ஒரு குளியல் போட்டுவிட்டு ஹாஸ்டல் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது பெண்.
மனம் முழுவதும் ரஞ்சனின் முகமே நிரம்பி இருந்தது. கணக்கைப் பாடமாகப் படிக்கும் அவளுக்கே அவனை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
அன்பை அவள் மேல் பொழிகிறான். அதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் பார்த்தால் அவனை மணமுடிப்பவள் பாக்கியசாலிதான். அதை ஒப்புக் கொள்வதில் சுமித்ராவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
அவன் கண்களில் காதல் டன் கணக்கில் கொட்டுகிறது. அதிலும் அவளுக்கு எந்த ஐயப்பாடும் கிடையாது. ஆனால்… அவ்வப்போது வில்லன் போல பேசுகிறான், நடந்து கொள்கிறான். அந்த இடத்தில் மாத்திரமே அவளுக்கு லேசாக உதைத்தது.
என்ன மாதிரியான அன்பு இது?! இந்த அதீத அன்பைப் பார்த்த போது அவளுக்கு லேசான பயம் வந்தது. தன்னை அடைய அவன் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் போவான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
பார்க்க நன்றாகத்தான் இருக்கிறான். வசதியான வீட்டுப் பிள்ளை என்பது பார்த்தாலேப் புரிகிறது. இத்தனையும் இருக்கும் போது எதற்காக என் பின்னால் அலைகிறான்?! அப்படி என்ன இருக்கிறது என்னிடம்?!
ஃபோன் அடிக்கவும் திரும்பிப் பார்த்தாள் சுமித்ரா. அவன்தான் அழைத்துக் கொண்டிருந்தான். நேற்று மாலை இதே நேரம் போல அவளை ஹாஸ்டலில் கொண்டு வந்து விட்டிருந்தான்.
கல்யாணம் பற்றி இருவரும் பேசிய பிற்பாடு காரை எங்கேயும் நிறுத்தாமல் நேராக அவளை ஹாஸ்டலில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய் விட்டான்.
அவளை விட்டுவிட்டு மீண்டும் கண்டி போனானா? இல்லை கொழும்பிலேயே தங்கினானா? எதைப் பற்றியும் சுமி அவனிடம் கேட்கவில்லை.
கேட்கவில்லை என்று சொல்வதை விட அவனிடம் அவற்றையெல்லாம் கேட்க அவள் பயப்பட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். சும்மாவேக் கூத்தாடுகிறான்! இதில் அவள் வேறு சலங்கைக் கட்டிவிட வேண்டுமா?!
ஃபோன் ஒரு முறை முழுதாக அடித்து ஓய்ந்திருந்தது. அழைப்பை ஏற்பதா? வேண்டாமா? என்று சுமித்ரா யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அவன் அழைத்தான்.
“ஹலோ.”
“சுமி, லெஸன்ஸ் முடிஞ்சிருச்சா? இல்லை… டிஸ்டர்ப் பண்ணுறேனா?” தொல்லைதான் செய்கிறாய் என்று சொன்னால் ஒருவேளை அவன் சட்டென்று அழைப்பைத் துண்டிக்கக் கூடும்.
“இல்லையில்லை… நீங்க சொல்லுங்க.” ஏனோ அப்படிச் சொல்ல அவளுக்கு மனது வரவில்லை.
“எங்க இருக்கே?”
“ஹாஸ்டல்லதான்.”
“ஓ… ஃப்ரீயா இருக்கியா?”
“ம்… நீங்க எங்க இருக்கீங்க?”
“நேத்து உன்னை ட்ராப் பண்ணின இடத்துலதான்.”
“ஓ… ஏன்? கண்டிக்கு போகலையா?”
“அதான் நீ இங்க இருக்கியே, அங்க போய் நான் என்னப் பண்ணுறது?” இதற்கு பதில் சொல்லத் தெரியாமல் சில நொடிகள் தடுமாறினாள் சுமி.
“ஃப்ரீயா இருந்தா வெளியே வாயேன் சுமி.” அந்தக் குரல் அவளிடம் மன்றாடியது.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என்னத் தோன்றியதோ! இப்படிச் சொன்னவள் சட்டென்று கப்போர்டை திறந்தாள். கைக்கு அகப்பட்டதை எடுத்து உடுத்திக் கொண்டாள்.
மஞ்சுளா நன்றாகத் தையல் வேலைகள் செய்வார். அண்மையில் டீவியில் ‘வீர் ஸாரா’ ஹிந்திப் படம் ஒளிபரப்பாகி இருந்தது. அதில் ப்ரீத்தி ஸிந்தா அணிந்திருந்த சல்வார் கமீஸ் சுமித்ராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“அண்ணீ, இங்க கொஞ்சம் வாங்க.”
“என்ன சுமி?” உள்ளே தங்கள் ரூமில் கணவரோடு ஏதோப் பேசிக் கொண்டிருந்த மஞ்சுளா வெளியே வந்தார்.
“இந்த ஷல்வாரை பார்த்தீங்களா? ரொம்ப நல்லா இருக்கில்லை? வொயிட் அன்ட் யெல்லோ, ட்ரௌசர் நல்லாப் புஸ்ஸு புஸ்ஸுன்னு இருக்கு, ஆனா டாப்… ஷார்ட்டா டைட்டா இருக்கு.”
“உனக்குப் புடிச்சிருக்கா?”
“ம்… மெட்டீரியலை கொஞ்சம் நல்லாக் கவனிச்சுக்கோங்க, இதே மாதிரி மெட்டீரியல்ல தைச்சாத்தான் நல்லா இருக்கும்.”
“சரி சரி.”
சுமித்ரா ஆசையாகக் கேட்டுவிட்டாளே என்பதற்காக மஞ்சுளா பார்த்துப் பார்த்து அந்த ஆடையை வடிவமைத்திருந்தார். கழுத்து, கைக்கு என்று அழகான ரேந்தை (லேஸ்) பிடித்திருந்தார். சுமியின் நிறத்துக்கு அந்த ஆடை வெகு பொருத்தமாக இருந்தது.
அந்த ப்ளாக் ஆடியின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்தான் ரஞ்சன். நேற்று அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வீட்டுக்குப் போக ஏனோ மனம் வரவில்லை. லலித்தை அழைத்து நல்லதாக ஒரு ஹோட்டலில் ரூம் போடச் சொன்னான்.
நேற்று பயணம் செய்து வந்தது கொஞ்சம் அலுப்பாக இருக்கவே இரவு நன்றாகத் தூங்கி விட்டான். அவளிடம் பேச வேண்டும் என்று மனது அன்று முழுவதும் கிடந்து ஆர்ப்பரித்தது. படிக்கும் பெண்ணைத் தொல்லை செய்ய வேண்டாம் என்று நான்கு மணிவரைக் காத்திருந்தான்.
அதற்கு மேல் அவனால் பொறுக்க முடியாமல் அழைத்து விட்டான். வரமாட்டாள் என்று தெரியும். இருந்தாலும் அழைத்துத்தான் பார்ப்போமே என்றுதான் கூப்பிட்டான். பெண் சட்டென்று சம்மதித்தது அவனுக்கு இன்ப அதிர்ச்சி!
அன்றைய மாலைப் பொழுது அவளோடு! நினைத்துப் பார்க்கும் போதே அவனுக்கு இனிப்பாக இருந்தது. தூரத்தில் அவன் தேவதை நடந்து வருவது தெரிந்தது. அந்த ஓவியப் பாவையை விழி எடுக்காமல் பார்த்திருந்தான் ரஞ்சன்.
கூந்தலை ஒற்றைப் பின்னலாக்கி இடது தோளில் போட்டிருந்தாள். அந்தப் பின்னல் தழுவும் இடங்களைத் தான் தழுவ ஓர் வாய்ப்புக் கிட்டாதா என்று அவன் ஆண்மை அந்த நொடி தவித்தது!
எத்தனை எளிமை! அந்த எளிமைக்குள் எத்தனை அழகு! அழகு மொத்தத்தையும் இவளுக்கே வாரிக் கொடுத்து விட்டால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?! ரஞ்சனுக்கு பித்தம் தலைக்கேறியது!
மஞ்சள் நிற துப்பட்டாவை அவள் ஒரு முறைத் தூக்கித் தோளில் போட்ட போது ஓவியன் சில்லு சில்லாக உடைந்து போனான். அவள் அவனருகில் வந்து நின்ற போது ஒன்றிரண்டு கண்கள் இவர்களை நோட்டம் விட்டது.
“இங்க நின்னு இப்பிடிப் பேச முடியாது…” சுமி சங்கடப்பட்டாள்.
“எங்கேயாவது போகலாமா சுமி?” கேள்வியில் அடக்கப்பட்ட ஆர்வம்.
“ம்…” பெண் தலையை ஆட்டியதுதான் தாமதம், காரின் கதவைத் திறந்து விட்டான் ரஞ்சன். அந்த ப்ளாக் ஆடி காலி வீதியில் தன்னையும் இணைத்துக் கொண்டது.
“நைட் எங்கத் தங்கினீங்க?” ஒரு முடிவுக்கு வந்து விட்டதால் அவனோடு இப்போது இலகுவாகப் பேசியது பெண்.
“ஹோட்டல்ல.” பரவசமாக வந்தது பதில்.
“அது தெரியுது, எந்த ஹோட்டல்?”
“மவுன்ட் லவீனியா.”
“ஓ…”
கார் இப்போது மவுன்ட் லவீனியாவை நோக்கித்தான் போய்க் கொண்டிருந்தது. வலது புறமாக கடற்கரைச் சாலையில் காரை திருப்பினான் ரஞ்சன். உப்புக்காற்று சுகமாக உடல் தொட்டது.
மத்திய மலைநாட்டில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால் சுமித்ராவிற்கு கடல் என்றால் எப்போதும் ஆசைதான். கொழும்பு வந்த பிறகுதான் அவள் கடலையேப் பார்த்திருக்கிறாள்.
மனது இலகுவாக அவளாகவே காரை விட்டு இறங்கினாள். ரஞ்சனுக்கு அவன் கண்களையே அவனால் நம்ப இயலவில்லை. இத்தனை இணக்கத்தை அவளிடமிருந்து அவன் அன்றைக்கு எதிர்பார்க்கவில்லை.
கால் புதைய நடந்தவள் ஆர்ப்பரிக்கும் அலைகளின் அருகேப் போய் அமைதியாக நின்றாள். பின்னோடு வந்தவன் மங்கும் கதிரவனையும் தன் மங்கையையும் தன் காமெராவிற்குள் பதுக்கிக் கொண்டான்.
இயற்கையை ரசித்திருந்த பெண்ணும் சரி, இளமையை ரசித்திருந்த ஓவியனும் சரி… இருவருமேச் சற்று அப்பால் வந்து கொண்டிருந்த இரு இளைஞர்களைக் கவனிக்கவில்லை.
சற்று நேரம் கழித்து ரஞ்சன் அவர்களை அவதானித்த போது அவர்கள் இருவரும் சுமியை நெருங்கி இருந்தார்கள். அவர்களின் பார்வை அத்தனை நன்றாக இல்லையே என்று ரஞ்சன் நினைக்கும் போது அவர்களில் ஒருவன் சுமியை மோதி இருந்தான்.
“சாரி.” வேண்டுமென்றே மோதிவிட்டு சாரி வேறு சொன்னான். சுமித்ரா எதுவும் பேசாமல் சட்டென்று திரும்பி ரஞ்சனை நோக்கி வந்தாள். அது தெரியாமல் நடந்த தவறல்ல என்று அவளுக்குத் தெரியும்.
ஆனால் அந்தச் சம்பவத்தை அத்தோடு விட்டுவிட ரஞ்சன் தயாராக இருக்கவில்லை. பாய்ந்து சென்றவன் சுமியை மோதிய இளைஞனின் சட்டை காலரை கொத்தாகப் பிடித்திருந்தான்.
“ரஞ்சன்!” பெண் இதைக் கிஞ்சித்தும் எதிர்பார்க்காததால் தன்னை மறந்து கூவியது. அவனை நோக்கி ஓடும் முன்பாகவே ரஞ்சனின் முஷ்டி அந்த இளைஞனின் முகத்தில் இறங்கி இருந்தது.
“ரஞ்சன்! என்னப் பண்ணுறீங்க நீங்க?!” சுமித்ரா அவனிடம் வந்து சேர்ந்த போது அந்த இரு இளைஞர்களுக்கும் சரமாரியாக நான்கைந்து அடிகள் வீழ்ந்திருந்தன.
“ஐயோ ரஞ்சன்!” சுமித்ரா அவனை அவர்களிடமிருந்து விலக்கப் பெரும் பாடுபட்டாள். அதற்குள்ளாக வீழ்ந்த அடியின் வீரியம் தாங்காமல் அந்த இருவரும் ஓடி விட்டார்கள்.
“என்னப் பண்ணுறீங்க நீங்க?!” மீண்டும் அவள் கத்திய பிறகுதான் சுயநினைவுக்கு வந்தான் ரஞ்சன்.
“அவன் வேணும்னேப் பண்ணினான் சுமி!” கோபத்தில் தெறித்தன வார்த்தைகள்.
“அது எனக்கும் தெரியும், அதுக்காக இப்பிடியாக் கோபப்படுவாங்க?!”
“வேற என்னப் பண்ணச் சொல்றே?”
“முதல்ல இங்க இருந்து போகலாம் வாங்க, போறவனுங்க இன்னும் யாரையாவது கூட்டிட்டு வந்தாப் பிரச்சினையாப் போயிடும்.”
“வரட்டும்! இன்னைக்கு ஒரு கை பார்த்திடுறேன்!”
“ஐயோ ரஞ்சன்! ப்ளீஸ்… உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், வாங்க போயிடலாம்.” அவள் இறைஞ்சவும் லேசாக இளகியவன் காரை நோக்கி நடந்தான்.
அந்த இடத்தை விட்டு நகரும் வரை சுமித்ராவிற்கு மூச்சு சீராகவே வரவில்லை. காரை அவன் ஹோட்டலின் முன்பாகக் கொண்டு நிறுத்திய பின்புதான் ஆசுவாசமாக மூச்சு விட்டாள்.
“நான்… உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசலாம்னுதான் கிளம்பி வந்தேன்.” தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பெண் சொன்ன போது ரஞ்சன் அவளைச் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
அவன் முகத்தில் இப்போது பதட்டம் தெரிந்தது. இவள் எங்கேத் தன்னை மறுத்து விடுவாளோ என்ற எண்ணம் தோன்றிய போது அவனுக்கு உள்ளுக்குள் படபடத்தது.
“என்னாச்சு?!” அவன் பதட்டம் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்திருக்கும் போலும். அவள் வியப்போடு கேட்டாள்.
“ஒன்னுமில்லை சுமி, வா… உள்ளேப் போய் பேசலாம்.”
“ம்…” அவர்கள் இருவரும் உள்ளே வந்தார்கள். ரஞ்சன் ரிசப்ஷனில் கீயை வாங்கிக் கொண்டு அவளை ரூமிற்கு அழைத்து வந்தான்.
“கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க.” அவள் சொன்ன பிறகுதான் தன் கசங்கிய ஆடையைக் கவனித்தான்.
“நீ உட்காரு சுமி.” சொல்லிவிட்டு தனக்கான ஆடைகளோடு பாத்ரூமிற்குள் போய்விட்டான் ரஞ்சன். அவன் குளிக்கும் சத்தம் கேட்கவும் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தது பெண்.
‘இவன் ஒருத்தனுக்கு எதுக்கு டபுள் ரூம்?’ எண்ணமிட்ட படியேக் கட்டிலில் கிடந்த அந்தப் புத்தகத்தைப் புரட்டினாள். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது அந்தப் புத்தகம்.
அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது. புரட்டிய போதுதான் அது ஓவியம் வரைவதற்கானது என்று புரிந்தது. இரண்டு தாள்களுக்கு நடுவே வெள்ளை செலோபேன் தாள் வைத்துப் பாதுகாக்கப் பட்டிருந்தது.
புத்தகத்தைப் புரட்டிய பெண் ஒவ்வொரு பக்கமாக அதிலிருந்த ஓவியங்களை ரசித்தது. முதல் நான்கைந்து பக்கங்கள் இயற்கையோடு இணைந்திருந்தன. ஆங்காங்கே ஆணும் பெண்ணுமாக இருவர் கை கோர்த்து நடந்தார்கள். சில பக்கங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கின.
கடைசியாக இரண்டொரு பக்கங்களைப் புரட்டிய போது பெண் லேசாகத் தடுமாறியது. அப்போது பார்த்து பாத்ரூம் கதவு சட்டென்று திறந்தது.
கதவைத் திறந்த ரஞ்சனும் அவள் பார்த்துக் கொண்டிருந்த படங்களைப் பார்த்து ஒரு நொடி நிதானித்தான். இருவருமே எதுவும் பேசாமல் அப்படியே ஸ்தம்பித்திருந்தார்கள்!