OVIYAPAAVAI-09

OP COVER PAGE-46ff4c69
ஓவியம் 09
 
பாத்ரூம் கதவைத் திறந்த ரஞ்சன் ஒரு நொடி சட்டென்று நின்று விட்டான். கட்டிலில் கிடந்த புத்தகத்தை சுமி புரட்டுவாள் என்று அவன் கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை. அவளைப் பார்த்த இந்த நான்கைந்து நாட்களில் ஓவியனின் கற்பனை எல்லை மீறிப் போயிருந்தது.
 
அவனும் அவளுமாக இருக்கும் ஓவியங்கள் அதீத நெருக்கத்தைக் காட்டின. அதிலும்… அந்தக் கடைசி ஓவியம்! தான் ஓவியங்களைப் பார்ப்பதை அவன் பார்த்துவிட்டான் என்று புரிய சுமித்ராவின் முகம் சிவந்து போனது.
 
“சாரி.” ஒரு ஒற்றை மன்னிப்போடு புத்தகத்தை எடுத்து தனது சூட்கேஸில் பத்திரப்படுத்தினான் ரஞ்சன். 
 
“நான் கொஞ்சம் பாத்ரூமை யூஸ் பண்ணலாமா?” அந்த இடத்தை விட்டுக் கொஞ்ச நேரம் அப்பால் போனால் நன்றாக இருக்கும் போல இருந்தது பெண்ணுக்கு.
 
“ஓ ஷ்யூர்.” அவன் அனுமதி வழங்கியதுதான் தாமதம். வெடுக்கென பாத்ரூமிற்குள் போய்விட்டாள்.
 
‘என்ன இவன்?! வெட்கமே இல்லாம இப்பிடியெல்லாம் வரைஞ்சு வெச்சிருக்கான்?!’ என்னவோ இப்போது கூட அந்த ஓவியங்கள் மாதிரி அவன் அவளோடு ஒட்டிக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு தோன்றவும் முகத்தில் குளிர்ந்த நீரை அடித்துக் கழுவினாள் சுமித்ரா.
 
‘இவனுக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம்?! அதான் கற்பனையிலேயே இவ்வளவு துல்லியமாக் குடும்பம் நடத்துறானே!’ முகத்தைத் துடைத்துக் கொண்டு சுமித்ரா வெளியே வந்த போது சூடு பறக்க இரண்டு டீ இருந்தது. 
 
“எடுத்துக்கோ சுமி.”
 
“ம்…” தலையை ஆட்டியவள் டீயை எடுத்துப் பருகலானாள். இரண்டாம் தளத்தில் இருந்தது அவனது ரூம். சுற்றுவட்டாரத்தை லேசான இருள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது. 
 
சாலைப் போக்குவரத்தைச் சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்தவள் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறினாள். அவள் தடுமாற்றத்தை அவனும் அவதானித்திருப்பான் போலும்.
 
“சொல்லு சுமி, என்னமோப் பேசணும்னு சொன்னியே.” பேச்சை அவனே ஆரம்பித்து வைத்தான். 
 
“ம்…” பேச்சை அவன் ஆரம்பித்து விட்டாலும் மேற்கொண்டு பேச பெண்ணுக்குக் கூச்சமாக இருந்தது. என்னவென்று அவள் மனதிலிருப்பதைச் சொல்வது?!
 
“என்ன சுமி?!” அவளருகில் வந்தவன் அந்த மதி முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
 
“என்ன டா? எங்கிட்டப் பேச என்னத் தயக்கம் உனக்கு?” அவன் குழைந்த குரலில் பெண்ணுக்கு லேசாகக் கண்கள் கலங்கியது.
 
“சுமி!”
 
“நீங்க… பேசினதை நான் நைட்டெல்லாம் யோசிச்சுப் பார்த்தேன்.”
 
“ம்…”
 
“இப்பிடியே இருக்க எங்க வீட்டுல என்னை விடப் போறதில்லை.”
 
“கண்டிப்பா.”
 
“சுரேஷ் அண்ணா இப்பவேக் குதிக்குது, சுமிக்கு வயசு ஏறிக்கிட்டேப் போகுது, சீக்கிரமாக் கல்யாணத்தை முடிச்சிடணும்னு.”
 
“ம்…”
 
“அதால…” இந்த இடத்தில் சுமித்ரா தடுமாறினாள். மனதுக்குள் குற்றவுணர்ச்சி ஒன்று தோன்றியது. உயிர்வரை உணர்ந்த காதலை அவன் சொல்லி இருக்கிறான். அப்படியிருக்க… எதிலிருந்தோத் தப்பிப்பதற்காகத் தான் அந்தக் காதலை ஏற்றுக் கொள்வது நியாயமில்லை என்று தோன்றியது பெண்ணுக்கு!
 
“நான் உங்களுக்கு நியாயம் பண்ணலை ரஞ்சன்.” என்றாள் சுமித்ரா தவித்தபடி. இப்போது ஓவியன் புன்னகைத்த படியே அவளருகில் வந்தான்.
 
“சுமி, என்னைப் பாரு.” அவன் சொல்லவும் பெண் அவனை நிமிர்ந்து பார்த்தது. கண்கள் இரண்டும் குளமாக இடது கண்ணிலிருந்து ஒற்றைக் கோடாய் கண்ணீர் இறங்கி இருந்தது.
 
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கிறியா?” இத்தனை மென்மையாக ஒரு ஆணுக்குப் பேசத் தெரியுமா?!
 
“ம்…” உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்தபடி மேலும் கீழுமாகத் தலையாட்டியது பெண்.
 
“அம்மா அப்பாவை வரச் சொல்லட்டுமா? உங்க வீட்டுல பேசச் சொல்லட்டுமா?” வெகு நிதானமாகக் கேட்டான் ரஞ்சன்.
 
“ரஞ்சன்…” எதையோப் பேச ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்தினாள்.
 
“உன்னோட மனசுல என்ன இருக்குது பொண்ணே? எதுக்கு இவ்வளவு கிடந்து கஷ்டப்படுறே?” அவன் கேட்டதுதான் தாமதம். அவள் வெடித்து அழுதாள்.
 
“சுமி! ஏய்! என்னாச்சு?!” அவள் அழுகைப் பார்த்து அவன் தவித்தாலும் அவளைத் தொட நினைக்கவில்லை. மறந்தும் அவளை அவன் நெருங்கவில்லை.
 
“சுமி! எதுக்கு டா அழுறே?” அவன் எவ்வளவு பேசியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை. ரஞ்சன் கையைக் கட்டிக்கொண்டு உடலும் மனதும் ரணமாக வலிக்க அவள் அழுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
“சாரி.” அழுது முடித்தவள் அவளாகவேப் பேச ஆரம்பித்திருந்தாள்.
 
“என்னாச்சு சுமி?”
 
“எனக்கு… எனக்குக் கஷ்டமா இருக்கு.” 
 
“ஏன்?”
 
“உங்களுக்கு நான் நியாயம் பண்ணவே இல்லை.”
 
“அப்பிடி நான் சொல்லவே இல்லையே.”
 
“நீங்க சொல்லலைன்னாலும் எனக்குப் புரியாதா?” ஒரு கேவலோடு அவள் கேட்ட போது ரஞ்சன் சிரித்து விட்டான்.
 
“அதுக்குத்தான் இந்த அழுகையா?! சரி… அதுக்கு இப்போ என்னப் பண்ணலாம்னு நீ நினைக்கிறே?”
 
“அது…”
 
“நேத்து நீ சொன்ன மாதிரி காதலை எம்மேல பொழியுற ஒரு பொண்ணைப் பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கவா?”
 
“….”
 
“அப்போ நான் அந்தப் பொண்ணுக்கு நியாயம் பண்ண மாட்டேனே?! ஏன்னா… எனக்கு சுமி மேல மாத்திரம்தானே இவ்வளவு காதல் வருது!” அந்த வார்த்தைகளில் சுமித்ரா இப்போது மீண்டும் அழ ரஞ்சன் சிரித்தான்.
 
நான் இன்னொருவனைக் காதலித்தவள் என்று சொல்லி என் இரு கைகளையும் கட்டிப் போட்டு விட்டு இப்படிக் கதறி அழுதால் நான் என்னவென்று அவளைச் சமாதானப் படுத்துவது?!
 
“சுமி… நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை.”
 
“என்னது?” பெண் கண்களைத் துடைத்துக் கொண்டது.
 
“அம்மா, அப்பாவை வரச் சொல்லட்டுமா?”
 
“ம்…”
 
“உங்க வீட்டுல பேசச் சொல்லட்டுமா?”
 
“இன்னொரு வருஷம் படிப்பு இருக்கே?”
 
“கல்யாணத்தைப் பண்ணிட்டுப் படி சுமி.”
 
“முடியுமா?” அவள் கேட்ட போது ரஞ்சனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.
‘ஆமா! கல்யாணம் பண்ணி எங்கூடக் குடும்பம் நடத்தப் போறே பாரு! உனக்குப் படிக்க முடியாமப் போக! போவியா!’ மனதுக்குள் அவளை வறுத்தெடுத்தான் ஓவியன்.
 
“அதெல்லாம் முடியும் சுமி.”
 
“அப்போ ஓகே.” 
 
“பேச்சு மாற மாட்டியே?”
 
“ம்ஹூம்.” சிறு பிள்ளை போல அவள் தலையாட்டி மறுக்க ரஞ்சன் இப்போதும் சிரித்தான். அவள் செய்கைகள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமாகவே இருந்தன.
 
“நான் கிளம்புறேன், ரொம்ப லேட்டான ஹாஸ்டல்ல திட்டு வாங்கணும்.” 
 
“போகலாம் சுமி, நான் ட்ராப் பண்ணுறேன்.” மனது முழுவதும் சந்தோஷம் பொங்கி வழிய அவளை அந்த மிகப்பெரிய நகை மாளிகைக்கு அழைத்து வந்திருந்தான் ரஞ்சன்.
 
“இங்க எதுக்கு வந்திருக்கோம்?!”
 
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சுமி, நான் ஆசைப்பட்ட மாதிரி நீயும் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி இருக்கே, அதை செலிபிரேட் பண்ணலாம்.”
 
“ம்ஹூம்…” அவள் மறுக்க ஆரம்பிக்கும் போதே ரஞ்சன் அவளைத் தடுத்தான்.
 
“சொன்னாக் கேட்கணும் சுமி, எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரமா ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டுர்றேன், இப்ப எங்கூட வா.” 
அதற்கு மேல் சுமித்ரா வாக்குவாதம் பண்ணவில்லை. காரிலிருந்து இறங்கி அவன் கூட நடந்தாள். இந்தக் கடையைப் பல முறை அவள் பார்த்ததுண்டு, ஆனால் உள்ளே வந்ததில்லை. 
 
அவன் மூன்றாம் தளத்திற்காக லிஃப்ட்டை அழுத்தவும் அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். ஏனென்றால் அது வைரங்கள் ஜொலிக்கும் தளம்.
 
“சின்னதா ஒரு ரிங் வாங்கலாம்.” 
 
“எதுக்கு இதெல்லாம்?” 
 
“ஏன் சுமி? நான் வாங்கிக் குடுக்கிறது உனக்குப் பிடிக்கலையா?” ரஞ்சனின் கேள்விக்கு பெண் பதிலேதும் சொல்லவில்லை. அப்போது மட்டுமல்ல, வெள்ளை நிறத்தில் பொடிப்பொடியாக ஏழு வைரங்களை பூ வடிவில் கோர்த்து வைத்திருந்த மோதிரத்தை அவன் தேர்வு செய்த போதும் அவள் பேசவில்லை. 
 
வெளியே அமைதியாக இருந்த போதும் சுமித்ராவின் மனதுக்குள் குற்றவுணர்ச்சி ஒன்று முளைவிட ஆரம்பித்திருந்தது. அளவுகடந்த காதலை, அன்பை, அக்கறையை என அவன் வாரி வழங்கிக் கொண்டிருக்க தான் மட்டும் எதையும் திருப்பிக் கொடுக்க வகையற்றிருப்பது அவளை வெகுவாக வருத்தியது.
 
அவளின் விரல் நுனி பற்றி அந்த மோதிரத்தை அவன் அணிவித்த போது சுமித்ரா உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள். கடையில் நின்றிருந்த ஒன்றிரண்டு இளம் பெண்களின் மெச்சுதலான பார்வைப் பார்த்து அவளுக்கு இன்னும் வலித்தது. 
 
சுமித்ரா நினைத்திருந்தால் அவனுக்கு அவளும் பரிசு கொடுத்திருக்கலாம். வைரமாக வேண்டாம்! அதைவிடப் பெறுமதியாக, ஓவியன் மயங்கும் விதமாக, ரசிக்கும் விதமாக அவன் கன்னத்தில் ஓர் ஒற்றை முத்தம் கொடுத்திருக்கலாம்!
 
அவளாகக் கொடுக்கும் அந்த ராஜ சுகத்தை ஓவியன் ஜென்மம் உள்ளவரைப் போற்றிப் பாதுகாத்திருப்பான். ஆனால், ஏனோ அதைச் செய்யப் பெண்ணுக்கு மனது வரவில்லை. 
 
மோதிரத்தை அணிவித்து விட்டு அந்த மெல்லிய விரல்களில் முத்தமிட நினைத்த ரஞ்சனும் அதைச் செய்யவில்லை. வெகுவாக முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்!
 
***
சுமித்ராவின் வீடு வாழை மரங்கள், தோரணங்கள் என மிகவும் அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது. பெண் எப்போது திருமணத்திற்குத் தனக்குச் சம்மதம் என்று சொன்னதோ அதன் பிறகு ரஞ்சன் காலதாமதம் செய்யவில்லை.
 
உடனேயே தனது குடும்பத்தினருடன் கலந்து ஆலோசிக்க, அடுத்த வாரமே அனைவரும் இலங்கை வந்து விட்டார்கள். இன்றைக்கு வீட்டோடு சின்னதாக ஒரு நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம் என்று ஏகமனதாக ஏற்கனவே முடிவாகி இருந்தது.
 
நேரடியாகப் பார்க்கவில்லை என்றாலும் பெண்ணை ரஞ்சன் வீட்டினருக்கு முன்னமேத் தெரியும் என்பதால் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. 
 
ரஞ்சனின் தாய் ஷாரதாவிற்கு மாத்திரம் மனதின் மூலையில் சின்னதாக ஒரு ஏமாற்றம் இருந்தது. எப்போதும் மகன் தங்கள் கூடவே இருப்பான் என்ற அவர் எண்ணம் நிறைவேறாமலேயேப் போகப் போகிறது.
 
“ரஞ்சி இனிமேல் நம்மக் கூட இருக்க மாட்டான் இல்லை ஸ்வப்னா?” ஏமாற்றம் நிறைந்த குரலில் அன்னை கேட்ட போது மகளாலும் எதுவும் சொல்ல இயலவில்லை.
 
“பொண்ணை அவனுக்கு அவ்வளவு புடிச்சிருக்கும் போது நாம என்னம்மா பண்ண முடியும்?!”
 
“ம்… அதுவும் சரிதான்.”
 
“அவனோட சந்தோஷந்தான் நமக்கு இப்ப முக்கியம் ம்மா.” தாயைத் தன்னால் இயன்றவரை சமாதானம் செய்தாள் ஸ்வப்னா. ஆனால் அம்மாவின் மனதில் இருக்கும் குறையைத் தம்பியிடம் சொல்லத் தயங்கவும் இல்லை பெண்.
 
“ரஞ்சி…” 
 
“என்ன ஸ்வப்னா?”
 
“அம்மா கொஞ்சம் அப்செட்டா இருக்காங்க, கவனிச்சுக்கோ.”
 
“என்னாச்சு?!”
 
“இல்லை… உன்னை நாங்க எல்லாருமே மிஸ் பண்ணுவோம், ஆனாலும்… அம்மா கொஞ்சம் ஜாஸ்தியா ஃபீல் பண்ணுறாங்க.”
 
“என்னக்கா இது சின்னப் புள்ளைங்க மாதிரி?!” கண்கலங்கிய தன் தமக்கையைத் தோளோடு சேர்த்தணைத்துச் சிரித்தான் ரஞ்சன்.
 
“அடப்போடா!” தம்பியின் முதுகில் ஒரு அடி பலமாக வைத்த ஸ்வப்னா கண்களைத் துடைத்த படி அப்பால் போய் விட்டாள்.
 
சுமித்ரா தரப்பிலும் இந்தக் கல்யாணத்தை யாரும் எதிர்க்கவில்லை. சொல்லப் போனால் மஞ்சுளாவுக்கும் பல்லவிக்கும் அத்தனை மகிழ்ச்சி. ஏற்கனவே ரஞ்சன் தங்கள் நாத்தனாருக்கு மிகவும் பொருத்தமான வரன் என்று அவர்கள் முடிவேப் பண்ணி இருந்தார்கள். அதே வரன் இப்போது கை கூடி வந்தபோது மகிழ்ந்து போனார்கள்.
 
இளைய அண்ணன் மாத்திரம் ஆரம்பத்தில் கொஞ்சம் முறுக்கிக் கொண்டான். ஆனால் சுமித்ராவே சம்மதித்து விட்டாள் என்று தெரிந்த போது அவனாலும் எதுவும் பேச முடியவில்லை.
 
ஆக மொத்தம் எந்தத் தடையும் இல்லாமல் ரஞ்சன், சுமித்ரா நிச்சயதார்த்தம் அன்று அமோகமாக நடந்தேறிக் கொண்டிருந்தது.
 
அடர்ந்த மெரூன் நிறத்தில் உடல் முழுவதும் தாமரை மலர்கள் நெய்யப்பட்ட பட்டுடுத்தி முழு அலங்காரத்தில் அமர்ந்திருந்தாள் சுமித்ரா. அண்ணிகள் இருவரும் பெண்ணைப் பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ணி இருந்தார்கள்.
 
ஒரு முழம் அகலத்தில் பளீரிட்ட தங்க நிற பார்டரில் அன்னம் நடை பயின்று கொண்டிருந்தது. ஆபரணங்களுக்கும் எந்தக் குறைவும் வைக்காமல் தங்கள் தங்கையை ஜொலிக்க வைத்திருந்தார்கள் அண்ணன்கள் இருவரும். 
 
சுமித்ராவின் தாத்தா காலத்திலிருந்தே தேயிலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவர்கள் குடும்பம். எஸ்டேட் வைக்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் இல்லை என்றாலும் தங்கள் தங்கையை நிறைவாக ஒரு இடத்தில் சேர்க்கும் அளவிற்கு அவர்களிடம் வசதி இருந்தது.
 
ரஞ்சன் தன்னை மறந்தவனாக சில நிமிடங்கள் சுமித்ராவையே பார்த்திருந்தான். இது போல பட்டுப் புடவைகளைப் பெண்கள் அணிந்து அவன் இதுவரைப் பார்த்ததில்லை. அதுவும் பெண்களுக்குப் புடவை அணிந்தால் இத்தனை அழகாக இருக்கும் என்றும் அவனுக்கு இதுகாறும் தெரியாது.
 
தனது அலைபேசியில் அவளைப் பல கோணங்களில் பதுக்கிக் கொண்டான். மாப்பிள்ளையையும் பெண்ணையும் அருகருகே அமர வைத்து பெண் வீட்டார் பல சடங்குகளைச் செய்த வண்ணம் இருந்தார்கள். 
 
மாப்பிள்ளை வீட்டாருக்கு இதுவெல்லாம் புதிதாக இருந்ததால் அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். 
 
”சுமித்ராவோட ஸாரி ரொம்ப அழகா இருக்கு, ரஞ்சி, உங்க வெட்டிங் க்கு நானும் இது மாதிரித்தான் ட்ரெஸ் பண்ணிக்கப் போறேன், சூப்பரா இருக்குமில்லை?” ஆசையாக ஸ்வப்னா சொல்ல்வும் சுமியை திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். 
 
“அட்டகாசமா இருக்கும் ஸ்வப்னா, அப்பிடியே உங்க அம்மாவையும் உங்கூடச் சேர்த்துக்கோ, இன்னும் சூப்பரா இருக்கும்.” சந்திர மூர்த்தி வேண்டுமென்றே மகளுக்கு சப்போர்ட் பண்ணுவது போல மனைவியை கேலி பண்ண அங்கிருந்த அத்தனைப் பேரும் சிரித்தார்கள்.
 
“வொய் நாட், நானும் உடுத்திக்கிறேன் மூர்த்தி.” ஷாரதாவும் கேலியில் இறங்க அந்த இடமேக் கலகலப்பாகிப் போனது. 
 
ரஞ்சன் இப்போதும் சுமித்ராவை திரும்பிப் பார்த்தான். அந்த உதட்டில் புன்னகை இருந்தது. ஆனால் அது சுற்றிவர இருக்கும் அனைவருக்குமான நடிப்பு என்பதை ஓவியன் புரிந்து கொண்டான். 
 
எல்லா சாஸ்திர, சம்பிரதாயங்களும் நிறைவு பெற்ற போது மாலை ஆகிவிட்டது. மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள். பகல் விருந்து பெண் வீட்டிலேயே நடைபெற்றிருந்தது.
 
“ஒரு ஏழு மணி போல டின்னரை நான் உங்க வீட்டுக்குக் கொண்டு வர்றேன்.” 
 
“எதுக்கு ஜெயராம் இப்பிடி உங்களை நீங்களே சிரமப் படுத்திக்கிறீங்க?”
 
“எங்களுக்கு இருக்கிறது ஒரே தங்கை, அவளுக்குச் செய்யாம வேற யாருக்குங்க செய்யப் போறோம்!” தேவையில்லாத சம்பிரதாயங்களை சந்திரமூர்த்தி எவ்வளவு மறுத்தும் சுமித்ராவின் அண்ணன்கள் எதையும் ஏற்கவில்லை. 
 
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெண்ணை மாத்திரம் கொடு என்று வந்து நிற்பவர்களுக்குத் தங்களால் முடிந்த அளவு திருப்திகரமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றே நினைத்தார்கள்.
 
“அப்ப சுமியையும் இப்ப எங்கக் கூட அனுப்புங்களேன், நைட்டுக்கு டின்னர் கொண்டு வரும்போது உங்கக்கூட திரும்பி வரட்டும்.” மகனின் பார்வை சுமித்ராவையே வட்டமிடவும் ஷாரதா இயல்பாகக் கேட்பது போலக் கேட்டார்.
 
“தாராளமாக் கூட்டிட்டுப் போங்க.” யாரும் மறுத்துவிடும் முன்பாகச் சட்டென்று சொன்னார் மஞ்சுளா. 
 
இன்றைக்கு முழுவதும் மஞ்சுளா சுமியை அவதானித்த படிதான் இருக்கிறார். முகத்தில் சிரிப்பு இருந்தாலும் அது அவள் கண்களை எட்டவில்லை. அவர் பார்க்க வளர்ந்த பெண்ணை அவருக்குத் தெரியாதா?!
 
சுமித்ராவுக்கு ஏற்கனவே திருமணம் ஒன்று நிச்சயதார்த்தம் வரை வந்தது ரஞ்சனை தவிர மாப்பிள்ளை வீட்டார் யாருக்கும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு காதல் திருமணம். கனவில் வந்த தேவதையைக் கண்டவுடன் காதல் கொண்ட மகன் அதைத் திருமணம் வரைக் கொண்டு வந்திருக்கிறான். அப்படித்தான் அவர்கள் நினைத்தார்கள்.
 
சுமித்ராவின் கடந்த காலம் ரஞ்சனுக்கு தெரியும் என்பது மஞ்சுளாவை தவிர அவர்கள் வீட்டில் கூட யாருக்கும் தெரியாது. அதை ரஞ்சன் விரும்பவுமில்லை. தான் காதலித்துக் கைப்பிடிக்கும் பெண் அவள்! அந்த எண்ணத்தைத் தவிர வேறெந்த நினைப்பும் யார் மனதிலும் வந்துவிடக் கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.
 
‘எல்லாம் சுமுகமாக நடைபெறும் போது எதற்காக இந்தப் பெண் இன்னும் எதையோ இழந்தது போல இருக்கிறது?!’ மஞ்சுளாவுக்கு தலை வேதனையாக இருந்தது. யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளவும் அவரால் இயலவில்லை.
 
நல்லவேளையாக ஷாரதாவே பெண்ணை அவர்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகக் கேட்கவும் சட்டென்று முந்திக் கொண்டார். ரஞ்சன்தான் அவளோடு பேசச் சரியான ஆள். அவளோடு மல்லுக்கு நிற்க அவரால் முடியாது. 
 
“சுமி இப்பிடியே வரட்டும் க்கா, எனக்குக் கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுக்கணும்.” ரஞ்சன் சொல்லவும் பெண்ணின் அலங்காரங்களைக் கலைக்கப் போன மஞ்சுளா எதுவும் செய்யவில்லை.
 
நேராக வீடு வந்த ரஞ்சன் பெண்ணைத் தனது அறைக்கு அழைத்து வந்தான். தனது பெரிய காமெராவை எடுத்தவன் சுமித்ரா அணிந்திருந்த நகைகள் ஒவ்வொன்றையும் க்ளோஸ் அப்பில் படம் பிடித்தான்.
 
“ரஞ்சி… நீ ஆரம்பிச்சுட்டியா?” ஸ்வப்னா தலையில் அடித்துக் கொள்ளவும் சுமித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை.
 
“ஒன்னுமில்லை சுமி, உன்னை இதே கெட்டப்ல வரையப் போறான், அதுக்குத்தான் ஐயா எல்லாம் ரெடி பண்ணுறாரு.”
 
“உன்னை அம்மா கூப்பிடுறாங்க ஸ்வப்னா.” ஏதோவொரு காரணம் சொல்லி மூத்தவளைத் தனது ரூமிலிருந்து வெளியே அனுப்பியவன் கதவை மூடிவிட்டு வந்தான்.
 
“இன்னும் கொஞ்சம் எடுத்துக்கிறேன் சுமி.” என்றவன் அவள் புடவைத் தலைப்பு, பார்டர், அதிலிருந்த சின்னச் சின்ன டிஸைன்கள் என ஒன்றையும் விடாமல் படம் பிடித்தான். 
 
“இப்ப சொல்லு சுமி, என்னப் பிரச்சினை?” தனது வேலை முடிந்தவுடன் சட்டென்று ரஞ்சன் பேச்சை ஆரம்பிக்க பெண் திணறிப் போனாள்.
 
“என்ன?!”
 
“உன்னோட மனசுக்குள்ள என்னவோ ஓடுது.”
 
“இல்லையே… அப்பிடி எதுவுமில்லையே.” அவள் முயன்றவரைச் சமாளித்துப் பார்த்தாள். ஆனால் எதிலிருப்பவன் அவளைப் பார்த்த பார்வையில் இப்போது சுமித்ராவின் கண்கள் கலங்கியது.
 
“எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு.” உள்ளுக்குள் போய்விட்ட குரலில் பேசியது பெண்.
 
“ஏன் சுமி? என்னாச்சு?” 
 
“உங்க வீட்டுல இருக்கிற அத்தனைப் பேரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க, அவங்கப் பையன் நேசிக்கிற பொண்ணு நானுன்னு எம்மேல ரொம்பப் பாசமா இருக்காங்க.”
 
“அது உண்மைதானே சுமி!”
 
“உங்களைப் பொறுத்தவரைக்கும் அதெல்லாம் உண்மைதான், ஆனா நான்? நான் உங்களுக்கு நியாயம் பண்ணலையே? நீங்க காட்டுற காதலை நான் உங்களுக்குத் திருப்பிக் காட்டலையே!” அவள் மீண்டும் மீண்டும் அதையேப் பேசினாள்.
 
“சுமி, இங்கப்பாரு… இது சினிமா கிடையாது, வாழ்க்கை, நிஜம்! நீ ஏன் எல்லாத்தையும் நெகட்டிவ்வா நினைக்கிறே?இப்போதைக்கு உம்மனசுல எதுவும் இல்லேங்கிறதுக்காக வாழ்க்கைப் பூரா நீ இப்பிடியே இருந்திருவேன்னு அர்த்தம் இல்லை, காலம் மாறும், உன்னை எப்பிடி மாத்தணும்னு எனக்குத் தெரியும், இதைப்பத்தியெல்லாம் நீ ரொம்ப யோசிக்காதே, இன்னொரு வருஷம் படிப்பு இருக்கு உனக்கு, முதல்ல அதை முடி நீ, மீதியை எல்லாம் அப்புறமாப் பார்த்துக்கலாம் என்ன?” 
 
ஏதோவொரு குற்றவுணர்ச்சியில் சுமித்ரா கலங்குகிறாள் என்றுதான் அப்போது ரஞ்சன் கூட நினைத்தான். அவள் மனதில் இருக்கும் பழைய வடு ஆறி தன்னை அவள் ஏற்றுக்கொள்ள சிறிது கால அவகாசம் அவளுக்கு வேண்டும் என்று இளையவன் நினைத்தான்.
 
இன்னும் ஒரு வருடப் படிப்பு இருக்கிறது. தன்னருகில் இருந்த படியே அவள் படிப்பை முடிக்கட்டும். தன் அருகாமை அவள் மனதிலும் காதல் விதையை ஊன்றி விடும் என்று ஓவியன் கணக்குப் போட்டான். 
 
ஒருவேளை தடாலடியாக முன்பு காட்டிய நெருக்கத்தை அவளிடம் அவன் தொடர்ந்து காட்டி இருந்திருந்தால் கூட அவன்  எண்ணம் நிறைவேறி இருக்குமோ என்னவோ?! அவள் மேல் தன் காதலைத் திணிக்க விரும்பாதவன் விட்டுப் பிடிக்க நினைத்தான். 
 
ஆனால் விதி வேறு விதமாக அவர்கள் வாழ்க்கையில் விளையாட நினைத்தது! ரஞ்சன் கதிகலங்கிப் போய் நிற்கும் ஒரு நாளும் வரும் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை!