OVIYAPAAVAI-10

ஓவியம் 10
 
கல்யாண ஜவுளி எடுப்பதற்காக எல்லோரும் டவுனுக்கு வந்திருந்தார்கள். அந்த ஏரியாவிலேயே மிகவும் பிரசித்தமான பெரியதொரு கடைக்கு அனைவரையும் அழைத்து வந்திருந்தார் ஜெயராம்.
 
மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என்று இரு தரப்பாரும் கூடி இருந்தார்கள். இரு வீட்டிலும் நடக்கும் கடைசித் திருமணம் என்பதால் இருதரப்பினரும் நடக்கும் நிகழ்வுகளை மிகவும் ரசித்தார்கள், கொண்டாடினார்கள்.
 
ரஞ்சன் தரப்பினருக்கு இந்த இலங்கைத் திருமணம் இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது. தங்கள் பெண்ணுக்கு ஏற்கனவே அவர்கள் திருமணம் முடித்து வைத்தவர்கள்தான். ஆனால் அது முற்று முழுதாக வேறு பாணியில் நடைபெற்றிருந்தது.
 
ஆனால் ரஞ்சனின் திருமணம் தங்கள் வேர்களின் வாசத்தோடு நடப்பதை அவர்கள் மிகவும் விரும்பி வரவேற்றார்கள். பெண் வீட்டார் கலாச்சாரம், நடைமுறைகளை ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல அவற்றையெல்லாம் சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்கள்.
 
“ரஞ்சி, எனக்குப் பட்டுப்புடவை வாங்கிக் குடு.” ஷாரதா கேட்கவும் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான் மகன்.
 
“உனக்குப் புடவைக் கட்டத் தெரியுமா ஷாரதா?”‌ சந்திர மூர்த்தி மனைவியைக் கேலி பண்ணினார்.
 
“நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? நீங்க தயங்காமப் புடவையை வாங்குங்க ம்மா.” பல்லவி சொல்லவும் ஷாரதா குஷியாகிவிட்டார். 
 
“அப்பிடிச் சொல்லும்மா பல்லவி, இந்த மூர்த்திக்கு வேற வேலையே இல்லை, எப்பப்பாரு என்னைக் கேலி பண்ணிக்கிட்டு!”
 
“என்னம்மா கல்யாணப் பொண்ணு! இந்நேரத்துக்கு காஸ்ட்லியா பத்துப் புடவையை செலக்ட் பண்ணி அண்ணன்மாருக்கு பெரிய பில்லா வெக்கிறதை விட்டுட்டு என்ன அப்பிடிப் பலத்த யோசனை?” ஸ்வப்னா நாத்தனார் கேலியில் இறங்கவும் அனைவரது கவனமும் சுமித்ராவின் பக்கம் திரும்பியது. 
 
“சுமிக்கு எப்பப் புடவை எடுக்கிறதுன்னாலும் நானும் பல்லவியும்தான் செலக்ட் பண்ணுவோம், அவளுக்குப் புடவையைப் பத்தி எதுவும் தெரியாது ஸ்வப்னா.” மஞ்சுளா சட்டென்று உதவிக்கு வந்தார்.
 
“அதெல்லாம் இனி சரி வருமா? கல்யாணம் ஆனா சுமிக்கு தேவையானதை அவதானே வாங்கணும்?”
 
“ஏன்? நான் எதுக்கு இருக்கேன் ஸ்வப்ஸ்?” சட்டென்று ரஞ்சன் சொல்ல பல்லவி பட்டென்று சிரித்து விட்டாள்.
 
“அப்பிடிச் சொல்லுங்க தம்பி, எங்க தம்பி சுமிக்கு தேவையானதை அழகா செலக்ட் பண்ணிடுவாரு.” மஞ்சுளா நிலைமையை சமாளித்தாலும் ஸ்வப்னாவின் பார்வை அடிக்கடி சுமியை ஒரு யோசனையோடு தொட்டு மீள்வதைக் கவனிக்கத் தவறவில்லை.
 
“சுமி, உனக்குப் பிடிச்ச புடவைங்களை ஒரு பக்கமா எடுத்து வை.” நாத்தனாரின் காதோடு யாரின் கவனத்தையும் கவராதவாறு சொன்னார் மஞ்சுளா.
 
“அண்ணீ…”
 
“ஸ்வப்னா உன்னையேக் கவனிக்குது, உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னா இப்பவே அவகிட்டச் சொல்லிடு, அவ தம்பியை கையோட யூகே கூட்டிட்டுப் போயிடுவா, அதுக்கப்புறமா உங்கண்ணன் பார்க்கிற எவனையாவது நீ கட்டிக்கோ.” கறார் குரலில் மூத்த அண்ணி சொல்ல பெண் விதிர் விதிர்த்துப் போனது.
 
அதன் பிறகு எதையும் கவனிக்காமல் சுமித்ரா பட்டுப் புடவைகளுக்குள் தன் தலையைப் புகுத்திக் கொண்டாள். ரஞ்சன் சற்றுத் தாமதமாக வந்து அவளருகே அமர்ந்து கொண்டான்.
 
“சுமி.”
 
“சொல்லுங்க ரஞ்சன்.” அவனைப் பார்க்கும் போது மாத்திரம் இப்போதெல்லாம் அந்தக் கண்களில் ஒரு கனிவு வந்து அமர்ந்து கொள்கிறது.
 
“ஸாரி செலக்ட் பண்ணி முடிச்சுட்டு கொஞ்சம் சுடிதார், குர்தா எல்லாம் எடுத்துக்கோ, யூனிவர்ஸிட்டி போகும் போது தேவைப்படும் இல்லை.”
 
“எங்கிட்டத்தான் அதெல்லாம் நிறைய இருக்கே.”
 
“பரவாயில்லை, இப்போ இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோ.” அவன் அழுத்திச் சொல்லவும் பெண் புன்னகைத்தது. 
 
வாங்க வேண்டியவை எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு ரஞ்சன் குடும்பம் வீடு வந்த போது ஸ்வப்னா தம்பியின் அறைக்கு வந்தாள்.
 
“ரஞ்சி.”
 
“என்ன ஸ்வப்ஸ்?”
 
“நான் ஒன்னு கேட்கட்டுமா?”
 
“என்ன க்கா? கேளேன்.”
 
“சுமித்ராக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையா?” தமக்கை சட்டென்று கேட்க ரஞ்சன் அதிர்ந்து போனான்.
 
“என்னாச்சு க்கா? ஏன் இப்பிடிக் கேட்கிறே?!”
 
“வந்த நாள்ல இருந்து நானும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன், சுமித்ரா முகத்துல கல்யாணப் பொண்ணுக்கான எந்த மலர்ச்சியையும் காணலை.”
 
“ஏய் ஸ்வப்ஸ், அவ ஏற்கனவே டென்ஷன்ல இருக்கா.”
 
“என்ன ரஞ்சி டென்ஷன்? நானும் இந்த ஸ்டேஜை கடந்து வந்தவதான், கல்யாண டென்ஷன்னா என்னன்னு எனக்கும் தெரியும்.”
 
“அதில்லை க்கா, இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு, கல்யாணத்தைக் கொஞ்சம் லேட்டா வெச்சுக்கலாமா ன்னு எங்கிட்டக் கேட்டா.”
 
“ஏன்? கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டுப் படிக்க மாட்டாளாமா?”
 
“சுமி படிப்பா, ஆனா உன்னோட தம்பி விடணுமே? அந்தக் கவலை அவளுக்கு.” ரஞ்சன் கேலியாக எதையாவது சொல்லிச் சமாளிக்க எத்தனிக்க அது கொஞ்சம் வேலை செய்தது. கட்டிலில் கிடந்த தலையணையை எடுத்த ஸ்வப்னா அதனால் தன் தம்பியை நன்றாக அடித்தாள்.
 
“பேச்சைப் பாரு பேச்சை! எங்கிட்டப் பேசுற பேச்சாடா இது?”
 
“பின்ன என்னதான் பண்ணுறது? இவ்வளவு சந்தேகப்பட்டா உண்மையைச் சொல்லித்தானே ஆகணும் ஸ்வப்ஸ்.”
 
“ரஞ்சி… உண்மையைச் சொல்லு, வேறெந்தப் பிரச்சினையும் இல்லையே?” உண்மையாகவே இப்போது ஸ்வப்னாவின் குரலில் கவலைத் தெரிந்தது. ரஞ்சன் தன் சகோதரியை அணைத்துக் கொண்டான்.
 
“அதெல்லாம் ஒன்னும் இல்லை க்கா, படிச்சுக்கிட்டு இருந்த பொண்ணுக்கிட்டத் திடீர்னு கல்யாணம் ன்னு சொன்னதும் மிரண்டுட்டா, அவ்வளவுதான்.”
 
“அப்போ சரி டா.” அதற்கு மேலும் குடையாமல் ஸ்வப்னா போய் விட்டாள். ஆனால் ரஞ்சனின் தலைக்குள் வண்டு புகுந்து விட்டது. மஞ்சுளாவை அலைபேசியில் அழைத்தான்.
 
“சொல்லுங்க தம்பி.”
 
“அக்கா… சுமிக்கிட்ட கொஞ்சம் பேசணும்.”
 
“வீட்டுக்கு வாங்க தம்பி.”
 
“இல்லை… அங்க…”
 
“பல்லவி அவ வீட்டுக்காரரோட அவளோட சொந்த பந்தங்களுக்குப் பத்திரிகை வெக்கப் போயிருக்கா, இவரு சாப்பிட்டுட்டு ஏதோ வேலை இருக்குன்னு வெளியேப் போயிருக்கார்.”
 
“ஓ…” அடுத்த ஐந்தாவது நிமிடம் ரஞ்சன் சுமித்ராவின் வீட்டில் இருந்தான்.
 
“சுமீ… இங்க வா.” மஞ்சுளா குரல் கொடுக்கவும் ரூமிலிருந்து வெளியே வந்தது பெண். அவர்கள் பேசிக் கொள்ளட்டும் என்று அந்த இடத்தை விட்டு நகரப் போனார் மஞ்சுளா.
 
“அக்கா, கொஞ்சம் நில்லுங்க.” ரஞ்சன் அழைக்கவும் சட்டென்று நின்றார் மஞ்சுளா. 
 
“என்ன தம்பி?”
 
“ஸ்வப்னா எங்கிட்ட இப்போப் பேசிச்சு.”
 
“என்னவாம்? ஜவுளி எடுத்ததுல ஏதாவது குறை இருந்துச்சா தம்பி? எதுவா இருந்தாலும் நீங்க எங்கிட்டத் தயங்காமச் சொல்லுங்க.”
 
“இல்லை க்கா, சுமிக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லையான்னு கேட்டா.” சொல்லிவிட்டு ஓவியன் அமைதியாக நிற்க மஞ்சுளா தன் நாத்தனாரைப் பார்த்த பார்வையில் பொறி பறந்தது.
 
“எனக்கு என்ன சொல்றதுன்னேப் புரியலை, சுமிக்கிட்ட சம்மதம் வாங்கிட்டுத்தான் நான் எல்லா வேலையிலயும் இறங்கினேன், இப்போ சுமி இப்பிடி நடந்துக்கிட்டா நான் கேட்கிறவங்களுக்கு என்னக்கா பதில் சொல்றது?”
 
“அதான் கேட்கிறாங்க இல்லை, வாயைத் தொறந்து பதில் சொல்லு சுமி!.” மஞ்சுளாவுக்கு ஏற்கனவே இது சம்பந்தமாக சுமித்ரா மேல் கோபம் இருந்ததால் சமயம் வாய்த்த போது வெடித்தது.
 
“இன்னைக்குப் பூரா நானும் கவனிச்சேன் தம்பி, உங்கக்கா இன்னைக்கு இவளைப் பார்த்த பார்வையேச் சரியில்லை, அவங்களுக்கு என்னவோச் சந்தேகம் வந்திருக்கு, அதை நானும் கவனிச்சேன்.”
 
“சுமி முகத்துல ஒரு கலகலப்பே இல்லையேன்னு கேட்கிறாங்க.”
 
“கொழுப்பு தம்பி, வேறொன்னுமில்லை… யூனிவர்ஸிட்டி வரைக்கும் போய் படிக்கிறாங்கல்லை, அந்தத் திமிரு.” மஞ்சுளா மேலும் கோபப்படவும் சுமித்ரா சட்டென்று தன் அறைக்குள் போய் விட்டாள். 
 
அங்கு நின்றிருந்த இருவருக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. மஞ்சுளாவின் முகத்தில் கவலை மண்டிக் கிடந்தது. சுமித்ரா இப்படியெல்லாம் நடக்கும் பெண்ணல்ல. எதற்காக இந்தப் பெண் இப்படியெல்லாம் நடக்கின்றது என்று புரியாமல் தடுமாறினார்.
 
“நான் பார்த்துக்கிறேன் க்கா.” மஞ்சுளாவின் சங்கடமான முகம் ரஞ்சனுக்கு வருத்தத்தைக் கொடுக்க அவருக்கு சமாதானம் சொல்லிவிட்டு சுமியின் அறைக்குள் போனான்.
 
ஜன்னலின் ஓரமாக நின்றிருந்த பெண் இவனைக் காணவும் அவசரமாக இவனருகே வந்தது. 
 
“ரஞ்சன்… நீங்க என்னை உண்மையாவே நேசிக்கிறீங்களா?” தீவிர முக பாவத்தோடு பெண் கேட்ட போது ரஞ்சன் திடுக்கிட்டான். என்ன மாதிரியான கேள்வி இது?!
 
“அதிலென்ன சந்தேகம் சுமி உனக்கு?”
 
“அப்பிடீன்னா ஏன் உங்களால என்னைப் புரிஞ்சுக்க முடியலை?”
 
“…….”
 
“என்னைச் சுத்தி இருக்கிறவங்க எம்மேல எவ்வளவு குறைப்பட்டாலும் நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும் இல்லையா?”
 
“கண்டிப்பா…” ரஞ்சனின் குரல் எழும்பவில்லை.
 
“அப்போ எதுக்கு அவங்கக்கூட சேர்ந்துக்கிட்டு நீங்களும் என்னைக் குத்தம் சொல்றீங்க?” ஏதோ அவன் தவறு செய்தது போல சுமித்ரா பேசிக் கொண்டிருந்தாள்.
 
“சுமி, நீ இப்பிடி…”
 
“கொஞ்சம் பொறுங்க ரஞ்சன், நான் பேசி முடிச்சிர்றேன்.” பேச ஆரம்பித்தவனைப் பாதியில் நிறுத்தியது பெண். அவளின் நடவடிக்கைகள் அன்று வித்தியாசமாக இருந்தது.
 
“ரஞ்சன்… இதையெல்லாம் நான் உங்கக்கிட்டப் பேசுறது சரியா, தப்பான்னு கூட எனக்குத் தெரியலை, ஆனா… எம்மனசுல உள்ளதை உங்கக்கிட்ட மறைக்காமச் சொல்லணும்னு தோணுது…‌ என்னைப் புரிஞ்சுக்கோங்க, ப்ளீஸ்.” அவள் படபடத்தாள்.
 
“சொல்லு சுமி.”
 
“வாழ்க்கையில ஒரு மனுஷன்… என்னைத் தூக்கி வீசினப்போ… நான் பயங்கரமாத் தோத்துப் போயிட்டேன்.” கண்கள் கலங்கியது.
 
“சுமி, அது முடிஞ்ச கதை.”
 
“இருக்கலாம்… ஆனா எம்மனசு… எம்மனசுல… ரஞ்சன்.” சுமித்ரா மூச்சுக்காற்றுக்குத் தவிப்பவள் போலத் தடுமாறினாள்.
 
“எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணு சுமி.”
 
“என்னால முடியலையே! எவ்வளவு பெரிய நிராகரிப்பு! எவ்வளவு பெரிய அவமானம்!”
 
“அப்பிடியெல்லாம் எதுவுமில்லை சுமி.” தன்னால் முடிந்த அளவு அவளைச் சமாதானம் செய்தான் இளையவன்.
 
“உங்களுக்குத் தெரியாது ரஞ்சன்… நானா ஆசைப்பட்டிருந்தாக் கூடப் பரவாயில்லை, நமக்குப் பிடிச்சிருந்துது, அவனுக்குப் பிடிக்கலை… அதுதான் விட்டுட்டுப் போயிட்டான்னு நான் சமாதானம் ஆகிறதுக்கு.”
 
“……”
 
“அவனா வந்து எல்லாம் பண்ணிட்டு, கடைசியில தூக்கி வீசினப்போ… நான் செத்துப் போயிட்டேன் ரஞ்சன்.” சுமித்ரா இப்போது கேவிக் கேவி அழவும் ரஞ்சன் அவளருகே வந்து அவள் தலையைத் தடவிக் கொடுத்தான்.
 
“என்னோட படிச்சவங்க, அவனோட படிச்சவங்க எல்லாரும் என்னை ஏதோ ஒரு பரிதாபத்துக்குரிய ஜென்மம் போலப் பார்த்தாங்க, ஒரு சிலர் கேலி கூடப் பண்ணினாங்க.”
 
“சுமி…”
 
“என்னால அந்த நினைவுகள்ல இருந்து வெளியே வர முடியலை ரஞ்சன்.”
 
“முடியும் சுமி, உன்னால கண்டிப்பா முடியும்.”
 
“இப்பக்கூட நடந்து முடிஞ்ச நிச்சயதார்த்தம் நின்னுடுமோ, இல்லை இந்தக் கல்யாணம் நின்னுடுமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது, என்னால எப்பிடி இதையெல்லாம் தாண்டி இயல்பா இருக்க முடியும் ரஞ்சன்?!” 
 
“சுமி!”
 
“இதோ! உங்கக்கா கேட்டுட்டாங்க, சுமிக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையான்னு, இதையே ஒரு காரணமாச் சொல்லி இந்தக் கல்யாணத்தை அவங்க நிறுத்திட்டா?” அவள் பேச்சில் அவன் திடுக்கிட்டுப் போனான்.
 
ஒவ்வொரு காரணங்களாகப் பெண் சொல்லச் சொல்ல ரஞ்சனுக்கு பைத்தியம் பிடித்தது. சுமித்ராவை கூர்ந்து ஒரு நொடி பார்த்தான். இல்லை, அவள் இயல்பாக இல்லை!
 
கண்கள் இரண்டும் அலைப்புற ஏதோவொரு பதட்டத்தில் இருப்பவள் போல தவித்துக் கொண்டிருந்தாள். ஓரிடத்தில் நிற்காமல் அவள் கால்கள் நிலையிழந்து தடுமாறின.
 
அவளது கடந்த காலம் என்று தான் சுலபமாக நினைத்து அப்புறப்படுத்திய விஷயத்தால் இந்தப் பெண் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறாள் என்று அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. ரஞ்சனுக்கு இப்போது தலையைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் ஓரிடத்தில் அமர்ந்தால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.
 
ஆனால், அவள் முன்பாக அதைக்கூடச் செய்யப் பயமாக இருந்தது. தான் இப்போது செய்யும் சின்னச் சின்னக் காரியங்கள் கூட அவளை வெகுவாகப் பாதிக்கலாம்.
 
“சுமி, என்னைத் தாண்டி இந்தக் கல்யாணத்தை யாராலயும் நிறுத்த முடியாது.” என்றான் உறுதியாக.
 
“அதை நான் எப்பிடி நம்புறது?”
 
“உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேன்னு அவங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா? அப்பிடி இருக்கும் போது எப்பிடிம்மா இந்தக் கல்யாணத்தை நிறுத்துவாங்க?” 
 
“அந்த டாக்டரும் இப்பிடித்தானே சொன்னான்? கடைசியில எல்லாம் நின்னு போகலை?”
 
“அவனும் நானும் ஒன்னா சுமி?”
 
“தெரியலையே! எனக்குத் தெரியலையே ரஞ்சன்! இந்தக் கருமத்துக்குத்தான் நான் கல்யாணம், மண்ணாங்கட்டி எதுவும் வேணாம்னு சொன்னேன், நீங்க கேட்கலை.” அவள் மீண்டும் அதே புள்ளியில் வந்து நிற்க ரஞ்சன் பொறுமை இழந்தான். 
 
“சுமீ…” எதையோக் கோபமாகப் பேச ஆரம்பித்தவன் அவள் கலங்கிய முகம் பார்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். சரியாக அப்போது பார்த்து அவன் அலைபேசி சிணுங்க அதைப் பார்த்தான் ரஞ்சன். அவன் அப்பா அழைத்துக் கொண்டிருந்தார்.
 
“சொல்லுங்கப்பா.”
 
“பாரிஸ் ல நடக்க இருக்கிற ஓவியக் கண்காட்சிக்கு உன்னோட ஒரு மாஸ்டர் பீஸ் வேணும்னு கேட்கிறாங்க, ஓகே சொல்லட்டுமா ரஞ்சன்?”
 
“எப்போ வேணுமாம்?”
 
“நெக்ஸ்ட் மன்த்.”
 
“ஓகே ப்பா.”
 
“முடியுமா ரஞ்சி உன்னால? கல்யாண வேலையெல்லாம் இருக்கு.”
 
“கண்டிப்பா இதைப் பண்ணணும் ப்பா, ஓகே சொல்லிடுங்க, அமௌன்ட்டை மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியா ஃபிக்ஸ் பண்ணுங்க இந்தத் தடவை.”
 
“சரி ப்பா.” பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டு ரஞ்சன் சுமியிடம் திரும்பினான். 
 
“சுமி, நாம ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம், நீ ரெடியாகிட்டு வா, நான் அக்காக்கிட்டச் சொல்லிக்கிறேன்.”
 
“அண்ணி விடமாட்டாங்க ரஞ்சன்.”
 
“அதை நான் பார்த்துக்கிறேன், நீ சீக்கிரமா ரெடியாகு.” சம்மதிக்கத் தயங்கிய இரு பெண்களையும் ஒருவாறாக சரிக்கட்டி இருந்தான் ரஞ்சன்.
 
அந்த ப்ளாக் ஆடி சரிவான மலைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தது. அன்றைக்கு அவன் அவளுக்காகத் தெரிவு செய்திருந்த லெமன் கலர் சுடிதாரை அணிந்திருந்தாள் பெண். வீடு தேடி அலைந்த போது இந்த இடத்தை லலித் இவனுக்குக் காட்டி இருந்தான்.
 
“சூப்பரான ப்ளேஸ் இல்லை ரஞ்சன்! செம ரொமாண்டிக்கா இருக்கு, நல்லாப் பார்த்துக்கோங்க, பின்னாடி யூஸ் ஆகும்.” லலித் சொல்லிச் சிரித்த போது உண்மையிலேயே அந்த இடத்திற்கு சுமியோடு வரவேண்டும் என்று ரஞ்சன் அப்போது ஆசைப்பட்டான். 
 
கார் அடர்ந்த அந்த வனப்பகுதியில் போய் நின்றது. ஆங்காங்கே ஒன்றிரண்டு மனிதர்களின் நடமாட்டம் தவிர வேறு யாரையும் அங்கே காணவில்லை. ரஞ்சன் காரை விட்டு இறங்கினான்.
 
சுமித்ராவின் அகன்ற விழிகள் அவனைக் கேள்வியாகப் பார்த்தன. எதுவும் பேசாமல் அவள் பக்கக் கதவை வந்து திறந்து விட்டான் ஓவியன்.
 
“இறங்கு சுமி.” பெண் இறங்கவும் காரை லாக் பண்ணிவிட்டு பொடி நடையாக நடந்தான். அவளும் கூட நடந்தாள். இளங்காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.
 
“சுமி…” அழைத்துவிட்டு அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தான் ரஞ்சன். வீட்டில் இருந்த போது தெரிந்த படபடப்பு இப்போது காணாமல் போயிருந்தது. சுற்றுப்புறத்தின் அழகில் அவளும் சுகப்பட்டிருப்பாள் போலும். முகம் அமைதியாகக் காணப்பட்டது. 
 
“நான் உம் பக்கத்துல வரலாமா சுமி? எனக்கு அதுக்கு அனுமதி உண்டா?” ஓடும் ரயிலில் அத்துமீறியவன் இப்போது நல்ல பிள்ளைப் போல அனுமதி கேட்டான். அவளுக்கும் அதுவேத் தோன்றி இருக்கும் போலும். அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
 
“இனி எல்லாமே உன்னோட விருப்பப்படி மாத்திரந்தான் நடக்கும், இப்ப சொல்லு… உம் பக்கத்துல நான் வரவா, வேணாமா?” 
 
“ரஞ்சன்…” அவள் தடுமாறி நிற்க ஓவியன் அவள் பக்கத்தில் வந்து நின்றான்.
 
“என்னை உனக்கு எப்பிடி நான் நிரூபிக்கணும் சுமி?”
 
“என்ன…”
 
“இல்லைடா, இந்தக் கல்யாணம் நடக்காதோ, நான் யாரோட பேச்சையாவது கேட்டுக்கிட்டு உன்னை விட்டுட்டுப் போயிடுவேனோன்னு நீ பயப்பிடுறே இல்லையா?”
 
“……”
 
“அப்பிடியெல்லாம் எதுவுமில்லை, இந்த ரஞ்சன் முழுசா உனக்கு மட்டுந்தான் சொந்தம்னு நான் எப்பிடி உனக்கு நிரூபிக்கிறது? நீயே சொல்லு.”
 
“அ… அது…”
 
“என்னோட ஸ்டைல்ல நான் நிரூபிச்சா உனக்குக் கோபம் வரும்.”
 
“அது என்ன?” அவள் குழப்பத்தோடு கேட்க ரஞ்சன் அவன் சுட்டு விரலால் அவன் உதடுகளைத் தொட்டுக்காட்டி, பின் அவள் உதடுகளைச் சுட்டிக் காட்டினான். பெண் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டது. 
 
“நீ யாரு, என்ன, ஏதுன்னு ஒன்னுமேத் தெரியாதப்ப கூட உங்கிட்ட அவ்வளவு உரிமை எடுத்துக்கிட்டேனே… நான் உன்னை விட்டுட்டுப் போயிடுவேனா சுமி?” 
 
“….”
 
“நம்ம கல்யாணம் ஆனதுக்கு அப்புறமாத்தான் நமக்குள்ள உறவுங்கிறது ஊர் உலகத்துக்கு, ஆனா எனக்கு அப்பிடியில்லை சுமி, நான் உங்கூட ரொம்ப நாளா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன், நான் எப்பிடி சுமி உன்னை விட்டுட்டுப் போவேன்?”
 
“….” அவளுக்கும் அவன் பேசும் எல்லாமும் புரிந்தது. ஆனால் இள மனதில் வீழ்ந்த பலத்த அடி இவற்றையெல்லாம் சந்தேகப்படச் சொன்னது. 
 
“சுமித்ரா…” அந்த ஒற்றை வார்த்தை அத்தனை குழைவோடு வந்தது ஓவியனின் வாயிலிருந்து. பெண்ணும் ஏதோ மந்திரித்து விட்டவள் போல அனைத்தையும் மறந்து அவனையேப் பார்த்திருந்தது.
 
“நிச்சயதார்த்தப் புடவையில அன்னைக்கு எவ்வளவு அழகா இருந்தேன்னு தெரியுமா?” கேட்டபடியே அவன் நெருக்கம் இன்னும் அதிகமானது. 
 
ஆசைப்பட்ட மனது! உரிமை இல்லாத போதே உயிர் வரை நேசத்தை வளர்த்த மனது! இப்போது சுற்றம் கூடி நின்று இவள் உனக்குச் சொந்தம் என்று சொன்ன பிற்பாடு அடங்க மறுத்தது.
 
தன் காதலை அவள் மேல் இனித் திணிக்கக் கூடாது என்று தான் செய்து கொண்ட சங்கல்பத்திற்கு சில நிமிடங்கள் விடுமுறைக் கொடுத்தான் ஓவியன். 
தன்னைப் பார்த்து மருண்டு நின்ற விழிகளில் மென்மையாக இதழ் பதித்தான் ரஞ்சன். அவளுக்கே உரித்தான அந்த இதமான வாசனை அவன் நாடி நரம்பெங்கும் ஊடுருவிச் சென்றது. விழிமூடி நின்றிருந்தவள் விலகிச் செல்லாததால் அதரங்கள் அந்த நொடி அவன் வசமானது. 
 
அப்போதும் அவள் இணக்கத்தையேக் காட்ட ரஞ்சன் இறக்கை இல்லாமல் பறந்தான். கனவில் சுகித்த சுகம் மீண்டும் நனவில் நடந்தேறிய போது இன்னும் இன்னுமென்று அவளுக்குள் புதைந்து போக நினைத்தான். 
 
என் ஆதி முதல் அந்தம் வரை இனி உனக்கு மாத்திரமே சொந்தம் என்று அவன் நிரூபித்துக் கொண்டிருக்கும் போது அவள் சட்டென்று விலகினாள். 
 
“ரஞ்சன்…” அந்தக் குரலில் இப்போது மீண்டும் படபடப்பு, பயம். 
 
“இப்பிடியெல்லாம் பண்ணிட்டு நீங்க என்னை விட்டுட்டுப் போயிட மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் ரஞ்சன்?” அவள் கேட்ட கேள்வியில் ஒட்டுமொத்தமாக நொறுங்கிப் போனான் ஓவியன்!