OVIYAPAAVAI-11

ஓவியம் 11
 
ரஞ்சன் பேசிய விஷயங்களை எந்த இடையூறும் செய்யாமல் அமைதியாகக் கேட்டபடி இருந்தார் சந்திரமூர்த்தி. எதுவும் பேசவில்லையேத் தவிர அவர் முகம் அதிக சோகத்தைக் காட்டியது.
 
“ரஞ்சி… நீ ரிஸ்க் எடுக்கிறேன்னு எனக்குத் தோணுது.” எல்லாவற்றையும் மகன் கூறி முடித்தபோது வாயைத் திறந்தார் அப்பா.
 
“எனக்கும் புரியுதுப்பா, ஆனா நான் எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணத் தயாரா இருக்கேன்.”
 
“கொஞ்சம் நிதானமா முடிவெடுக்கலாம் ப்பா, இந்தப் புள்ளியிலேயே நீ இந்தச் சிக்கல்ல இருந்து விடுபட முடியும்.”
 
“இல்லைப்பா, சுமித்ராவை தவிர இன்னொரு பொண்ணு என்னோட வாழ்க்கையில வர்றதுக்கான எந்த வாய்ப்பும் கிடையாது.”
 
“ரஞ்சி…” கண் கலங்கிய தந்தையின் தோளில் தட்டிக் கொடுத்தான் ரஞ்சன்.
 
“கவலைப்படாதீங்க ப்பா, எல்லாமே நல்ல படியா நடக்கும்.”
 
“இல்லை ரஞ்சி… நீ சொல்றதைப் பார்க்கும் போது சுமித்ரா மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா, இந்த நிலைமையில உன்னால நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியுமாங்கிறதே சந்தேகந்தான்.” 
 
“எனக்கும் புரியுதுப்பா, கொஞ்சம் போராட வேண்டி இருக்கும், ஆனா இந்தச் சஞ்சலங்கள்ல இருந்து சுமித்ரா கூடிய சீக்கிரமே வெளியே வந்திடுவா.”
 
“எதுக்குப்பா இந்த விஷப் பரிட்சை?” கவலைப்பட்ட தந்தையை இப்போது தோளோடு அணைத்துக் கொண்டான் ரஞ்சன்.
 
“அம்மாக்கிட்டயும் ஸ்வப்னாக்கிட்டயும் என்னால இந்த விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியாது, புரிஞ்சுக்க மாட்டாங்க.”
 
“உங்கம்மா ஒரு டான்ஸே ஆடுவா.”
 
“ம்… ஸ்வப்னா இப்பவேக் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டா.”
 
“ஓ… என்னன்னு?”
 
“சுமித்ராக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையா? ஏன் ஒரு மாதிரியா இருக்கான்னு கேட்டா.”
 
“லேடீஸ் இந்த விஷயங்களையெல்லாம் சட்டுன்னு கண்டு பிடிச்சிடுவாங்க ரஞ்சன், நீ ரொம்பக் கவனமா இருக்கணும்.”
 
“அது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லை ப்பா, கல்யாணம் முடிஞ்ச கையோட எல்லாரும் கிளம்பிடுவீங்க, அதுக்கப்புறம் நானும் சுமியும்தானே, சமாளிச்சிடலாம்.”
 
“ரஞ்சி… எதுக்கும் ஒரு டாக்டர் கிட்ட இந்த விஷயத்தை டிஸ்கஸ் பண்ணுறது நல்லதுன்னு எனக்குத் தோணுது.”
 
“ஆமா ப்பா, அதைக் கண்டிப்பாப் பண்ணணும், ஆனா இப்போ இல்லை, சுமிக்கு எம்மேல முழு நம்பிக்கை வரணும், நான் எது பண்ணினாலும் அது அவளோட நன்மைக்குத்தான்னு அவளுக்குப் புரியணும், இல்லைன்னா அவ என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கவும் வாய்ப்பிருக்கு.”
 
“தப்பான்னா? எப்பிடி ரஞ்சி?”
 
“இல்லைப்பா, இந்த மாதிரி ப்ராப்ளம் இருக்கிறவங்க முதல்ல இந்தப் பிரச்சினை அவங்களுக்கு இருக்குன்னே ஏத்துக்க மாட்டாங்க, அந்த டைம் ல நாம டாக்டர் கிட்டப் போகலாம்னு போய் நின்னா, இவங்க நம்மளைப் பைத்தியம் ன்னு நினைக்கிறாங்களான்னு நினைக்கத் தோணும், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிடும்.”
 
“ம்… இவ்வளவு ரிஸ்க் உனக்கெதுக்கு ரஞ்சி?” பெற்றவர் மீண்டும் கலங்க ரஞ்சன் சிரித்தான்.
 
“எனக்கு சுமி வேணும் ப்பா, அவ எனக்குன்னு பொறந்தவ, அவளை எப்பிடிப்பா என்னால விட்டுக் குடுக்க முடியும்?”
 
“இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமாப்பா?”
 
“கொஞ்சம் சிக்கல்தான், நான் இல்லேங்கலை, ஒருவேளை நான் நிறையவேப் போராட வேண்டியும் வரலாம், அதுக்காக நான் ஆசைப்பட்டவளை எப்பிடிப்பா விட முடியும்?”
 
“ம்… இப்போ என்னப் பண்ணுறதா ஐடியா?” ஒரு பெருமூச்சோடு கேட்டார் சந்திரமூர்த்தி.
 
“வீடொன்னு விலைக்கு வந்திருக்கில்லை ப்பா, அது முடிச்சிடலாம்.”
 
“எதுக்கு இவ்வளவு அவசரமா?”
 
“இல்லைப்பா, வீட்டை சுமித்ரா பேர்ல வாங்கலாம் ன்னு நினைக்கிறேன்.”
 
“தட்ஸ் குட்.”
 
“ஆமா, நான் பண்ணுற ஒவ்வொரு விஷயத்திலயும் என்னோட அன்பை அவ உணரணும் ப்பா, நான் அவளை விட்டு எங்கேயும் போக மாட்டேங்கிற எண்ணம் அவளுக்குள்ள ஆழமாப் பதியணும்.” 
 
“ம்… கேரி ஆன் ரஞ்சி.” மகனின் முதுகில் நம்பிக்கையோடு தட்டிக் கொடுத்த சந்திரமூர்த்தி அத்தோடு நின்றுவிடவில்லை. துரிதமாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தார்.
 
அடுத்து வந்த நான்காவது நாள் சுமித்ராவின் வீட்டில் அத்தனைப் பேரும் கூடி இருந்தார்கள். இந்த நிகழ்வை சுமித்ராவின் வீட்டில்தான் ஏற்பாடு பண்ணி இருந்தான் ரஞ்சன்.
 
அவர்கள் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளை அந்த ஊரிலேயே இவ்வளவு பெறுமதியான வீட்டை வாங்குவது பெண் வீட்டாருக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அண்மையில் கட்டப்பட்ட வீடுதான். கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி பெறுமானம் உள்ளது. 
 
வீட்டைக் கட்டிய மனிதருக்கு அமெரிக்காவில் வேலை பார்க்க வாய்ப்புக் கிட்டவும் குடும்பத்தோடு கிளம்பிவிட்டார். அங்கே வாடகை வீட்டில் இருந்து கொண்டு சொந்த நாட்டில் எதற்கு வீடு?! அதுதான் விற்பதென்று முடிவு பண்ணிவிட்டார்.
 
ரஞ்சனுக்கு இது வசதியாகிப் போனது. வீடு இன்றைய மாடலில் அனைத்து வசதிகளோடும் இருந்தது. சுமித்ராவை அழைத்துக் கொண்டு போய் வீட்டைக் காட்டினான். அவளுக்கும் வீடு பிடித்திருந்தது. 
 
“இன்னுமொரு பத்து லட்சம் குறைச்சுக் கேட்கலாம் தம்பி, நீங்க வெளியூர் காரங்கன்னதும் அவங்களும் நல்லா விலையை ஏத்திச் சொல்லுறாங்க.” ஜெயராமின் கருத்து இது.
 
“பரவாயில்லைங்க, வீடு பார்க்க ரொம்ப அழகா இருக்கு, அதோட சுமிக்கும் புடிச்சுப் போச்சு, முடிச்சிடலாம், இது மாதிரி எல்லாம் ஒன்னா அமைஞ்சு வராது.”
 
“உங்க இஷ்டம்.” ரஞ்சன் உறுதியாக நிற்க அதற்கு மேல் ஜெயராம் ஒன்றும் சொல்லவில்லை.
 
அவருக்கு ரஞ்சன் மேல் இப்போது மரியாதைக் கூடி இருந்தது. தங்கள் பெண்ணை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் மாப்பிள்ளை கிடைத்தால் எந்தப் பெண் வீட்டாருக்குத்தான் கசக்கும்?!
 
வீட்டை விற்பவர்கள், வாங்குபவர்கள் என அனைவரும் சுமித்ராவின் வீட்டில் கூடி இருந்தார்கள். சட்டபூர்வமாக அன்றே ப்ராபர்ட்டியை ரெஜிஸ்டர் பண்ண அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றிருந்தன. ஏற்கனவே பேங்க்கில் பணப் பரிவர்த்தனை நிறைவு பெற்றிருந்தது. 
 
லாயர் பத்திரத்தைப் படிக்க ஆரம்பித்திருந்தார். ரஞ்சன் வீடு வாங்கப் போகிறான் என்று பெண் வீட்டாருக்கும் தெரியுமேத் தவிர தங்கள் பெண்ணின் பெயரில்தான் வாங்கப் போகிறான் என்று அவர்களுக்குத் தெரியாது. லாயர் பத்திரத்தைப் படிக்க ஆரம்பித்திருந்தார். 
 
“சுமித்ரா, வந்து சைன் பண்ணும்மா.” சந்திரமூர்த்தி அழைக்கவும் பெண் வீட்டார்கள் திகைத்துப் போனார்கள். பத்திரத்தில் சுமித்ராவின் பெயரே எழுதி அது லாயராலும் படிக்கப்பட்டிருந்தது. 
 
“சுமீ…” அப்பா அழைத்த பின்பும் பெண் தனது ரூமிலிருந்து வெளியே வராததால் உள் நோக்கிக் குரல் கொடுத்தான் ரஞ்சன்.
 
“தம்பி… என்ன இதெல்லாம்?!” இப்போதுதான் ஜெயராம் வாயைத் திறந்தார். மற்றவர்கள் எல்லோரும் வாயைப் பிளந்தபடி அமர்ந்திருந்தார்கள். 
 
ஷாரதாவிற்கும் ஸ்வப்னாவிற்கும் ரஞ்சன் எடுத்த முடிவில் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. வெளிநாடுகளில் மாமியார், நாத்தனார் அரசியல் எல்லாம் இல்லாததால் அவர்கள் பாட்டில் அமர்ந்திருந்தார்கள். அவன் பணம், அவன் மனைவி பெயரில் வாங்குகிறான், இதில் தாங்கள் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது என்ற ரீதியில் நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
இங்கே இப்படி என்றால் உள்ளே அமர்ந்திருந்த சுமித்ராவின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. நடப்பவற்றை நம்பமுடியாமல் அமர்ந்திருந்தது பெண். எவ்வளவு பெரிய தொகை! அதை எதற்காக ரஞ்சன் தன் பெயரில் சொத்தாக வாங்குகிறான்?!
 
“மஞ்சுளா! சுமித்ராவை வரச்சொல்லும்மா.” சத்தியமூர்த்தி சொல்லவும் அதிர்ச்சி நீங்கிய மஞ்சுளா சட்டென்று உள்ளேப் போய் சுமித்ராவை அழைத்து வந்தார்.
 
“வாம்மா, வந்து சைன் பண்ணு.” மருமகளின் தலை தெரியவும் அழைத்தார் சந்திரமூர்த்தி. ஆனால் பெண்ணின் பார்வையோ ரஞ்சனையே வட்டமிட்டது.
 
‘என்ன இதெல்லாம்?!’ என்று கேள்வி கேட்டது அந்தப் பார்வை. ரஞ்சன் ஒரு புன்சிரிப்புடன் பேனாவை அவள் கையில் கொடுக்க பெண் இப்போது தன் பெரிய அண்ணனைப் பார்த்தது. அவர் தலை சம்மதமாக ஆடவும் தன் கையெழுத்தைப் போட்டாள் சுமித்ரா.
 
அதன் பிறகு சிறிது நேரம் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அனைவரும் புறப்பட்டுப் போய் விட்டார்கள். ரஞ்சன் சுமியிடம் சொல்லிக் கொண்டு கிளம்புவதற்காக அவள் அறை வரை வந்தான். அவனைப் பார்த்ததும் இதுவரைப் பேச்சை மறந்திருந்த பெண் சட்டென்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.
 
“ரஞ்சன்! என்ன இதெல்லாம்?! ஏன் ஏங்கிட்ட முன்னமே இதைப்பத்தி நீங்க சொல்லலை?”
 
“எதுக்கு சுமி? சொல்லலைன்னா என்ன? சும்மா ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் சொல்லலை.”
 
“அதுக்காக… இவ்வளவு பெரிய தொகையை? என்ன ரஞ்சன் இதெல்லாம்?” அவள் குரலில் இப்போது கவலைத் தொனித்தது.
 
“ஏய்! எதுக்கு நீ இப்போ இவ்வளவு ஃபீல் பண்ணுறே? உம்பேர்ல வாங்கினா என்ன? எம்பேர்ல வாங்கினா என்ன? எல்லாம் ஒன்னுதானே ம்மா?”
 
“அதுக்காக…”
 
“உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் சுமி, இது ஒரு பெரிய விஷயமே இல்லைடா.” அவன் நாடக பாணியில் வேண்டுமென்றேச் சொல்ல சுமித்ரா சட்டென்று சிரித்துவிட்டாள். ரஞ்சனும் சத்தமாகச் சிரித்தான்.
 
“எனக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்களா ரஞ்சன்?” இப்போது அவளும் கேலியாகக் கேட்டாள்.
 
“என்ன செய்யணும் சுமி? ஓடுற ரயில்ல இருந்து குதிக்கணுமா? இல்லை… கத்தியை எடுத்து சத்தக் சத்தக் ன்னு நெஞ்சுல குத்திக்கணுமா?” அவன் ஒவ்வொன்றாகச் சொல்ல சுமித்ரா பொங்கிச் சிரித்தாள்.
 
“கத்தியைக் கொண்டு வந்து குடுக்க மாட்டேங்கிற நம்பிக்கையில பேச்சு பலமாத்தான் வருது ரஞ்சன்.” பெண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் அறையின் உள்ளே வந்த ரஞ்சன் அங்கே மேசையிலிருந்த ட்ராயிங் காம்பஸை கையில் எடுத்தான்.
 
“ரஞ்சன் என்னப் பண்ணுறீங்க?” சிரித்துக் கொண்டே கேட்ட சுமித்ராவின் முகம் சட்டென்று வெளுத்தது. தன் கையிலிருந்த உபகரணத்தின் கூரான முனையால் தன் கையில் கீறினான் ஓவியன்.
 
“ரஞ்சன்!” பெண்ணுக்கு அந்த வார்த்தையைத் தவிர அப்போது வேறெதுவும் வசப்படவில்லை. கண்கள் தெறிக்க ஊமையைப் போல நின்றிருந்தாள். அழுத்தி ஆழமாகக் கீறாததால் ரத்தம் வரவில்லை. ஆனாலும் அவன் கையில் பச்சை நரம்பிற்குப் பக்கத்தில் சிவப்பாக ஒரு கோடு தெரிந்தது.
 
“இன்னும் கொஞ்சம் அழுத்தட்டுமா சுமி? உனக்காக இந்த ரஞ்சன் கொஞ்சம் ரத்தம் சிந்துறதைப் பார்க்கிறியா?” ஒரு குறும்புச் சிரிப்போடு அவன் கேட்ட போது சுமித்ராவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ!
 
ஓடிப்போய் அவன் கையிலிருந்த ஆயுதத்தைப் பறித்தவள் அதைத் தூர வீசினாள். வீசிய கையோடு ரஞ்சனின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். இந்தத் தாக்குதலை ரஞ்சன் எதிர்பார்க்கவில்லை. 
 
“லூசா ரஞ்சன் நீங்க? எதுக்கு இப்பிடிப் பண்ணினீங்க? நான் சும்மா விளையாட்டுக்குத்தானேப் பேசினேன்.” அவள் கண்கள் கலங்கிப் போனது. 
 
“எது விளையாட்டு சுமி? உனக்காக நான் எது வேணும்னாலும் பண்ணுவேங்கிறது உனக்கு விளையாட்டா?” அவள் கண்களைப் பார்த்தபடியேக் கேட்டான் ரஞ்சன். வைத்தியரிடம் போகும் முன்பாகவே வைத்தியத்தை ஆரம்பித்திருந்தான் ஓவியன்.
 
“இது விளையாடுற விஷயம் இல்லைம்மா, விளையாட்டுக்குக் கூட இனிமேல் நீ அப்பிடிக் கேட்கக் கூடாது.”
 
“ரஞ்சன்…”
 
“யோசிச்சுப் பாரு சுமி, நீ அப்பிடிக் கேட்கும் போது எனக்கு வலிக்குமில்லையா? சுமி நம்மளை நம்பலேன்னு கஷ்டமா இருக்குமில்லையா?”
 
“ஐயையோ! உங்களை வருத்தப்பட வைக்க நான் என்னைக்குமே நினைக்கலை ரஞ்சன்.” பெண் பதறியது.
 
“அது எனக்கும் தெரியும் சுமி, நீயா நினைச்சு எதுவுமேப் பண்ணலை, ஆனா உன்னை அறியாமலேயே இப்பிடியான சிந்தனைகள் உம் மனசுல வந்திடுது, அதை எனக்காக நீ கொஞ்சம் கொஞ்சமா கன்ட்ரோல் பண்ணக் கத்துக்கணும்.” குழந்தைக்குச் சொல்வது போல பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஓவியன்.
 
“ம்…” ஆமோதிப்பாகத் தலையை ஆட்டிய பெண் அவன் தோளோடு லேசாகச் சாய்ந்து கொண்டது. அவளாக அவனை நெருங்கும் முதல் தருணம். ரஞ்சனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 
அவன் கையை எடுத்து அதில் நீளமாகக் கீறி இருந்த சிவப்புக் காயத்தைத் தொட்டுப் பார்த்தாள் பெண். கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. 
 
“இனிமேல் இப்பிடியெல்லாம் பண்ணாதீங்க ரஞ்சன், என்னால தாங்க முடியலை.”
 
“அப்போ இனிமேல் நீயும் இப்பிடியெல்லாம் பேசக்கூடாது, சரியா?”
 
“ம்…” தலையை ஆட்டிய பெண்ணை ரஞ்சன் அத்தனைச் சீக்கிரத்தில் நம்பிவிடவில்லை. அவனுக்குத் தெரியும், சுமியின் மனதில் பதிந்திருக்கும் காயத்தை மெதுவாகத்தான் ஆற்ற முடியும். அதற்கு நான் நிறையவே உழைக்க வேண்டி இருக்கும். 
 
அவள் தோளை இதமாக வருடிக் கொண்டவன் மேலே என்னென்ன செய்யலாம் என்று சில திட்டங்கள் வகுத்துக் கொண்டான். சுமித்ராவின் மனதை முழுதாக அவன் பக்கம் மாற்ற வேண்டும். அதற்காக அவன் என்ன விலை கொடுக்கவும் தயார்!
 
***
அன்று ரஞ்சனும் சுமித்ராவும் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்தார்கள். இப்போதெல்லாம் ரஞ்சன் சுமித்ராவோடு அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்திருந்தான். நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்ததால் சுமித்ரா வீட்டிலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.
 
குளுகுளுவென மழை பொழிந்து கொண்டிருந்தது. நூற்றி நாற்பத்தி ஏழு ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்தத் தாவரவியல் பூங்காவை கால் போன போக்கில் இருவரும் வலம் வந்து கொண்டிருந்தார்கள். உள்ளூர் வாசிகளை விட அன்று வெளிநாட்டு வாசிகள்தான் அதிகமாக உலவிக் கொண்டிருந்தார்கள். 
 
இலங்கையின் மிக நீளமான மகாவலி கங்கை பூங்காவை அண்மித்து ஓடிக் கொண்டிருந்ததால் அந்த இடம் எப்போதுமே சில்லென்று இருக்கும். வருடத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட நாட்கள் அங்கு மழை பெய்த வண்ணமே இருக்கும். 
 
ரஞ்சன் தனது பெரிய காமெராவை கையோடு கொண்டு வந்திருந்தான். அவன் படம் பிடிக்க அங்கே எக்கச்சக்கமான விஷயங்கள் இருந்தன. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட விதவிதமான தாவர இனங்கள் அங்கே இருந்ததால் ஓவியன் மிகவும் பிஸியாக இருந்தான்.
 
“ஏன் ரஞ்சன்? இதையெல்லாம் வரைவீங்களா?”
 
“இதைத் தனியா வரையுறது இல்லை சுமி, ஆனா ஒரு மெயின் பிக்சர் பண்ணும் போது சமயத்துக்கு பார்டர் தேவைப்படும், இல்லைன்னா பேக்ரவுன்ட்ல ஏதாவது வரைய வேண்டி இருக்கும், அப்போ இதெல்லாம் ஹெல்ப்பா இருக்கும்.” 
 
“ஓ…”
 
“இந்த இலையெல்லாம் எவ்வளவு குட்டியா அழகா இருக்கு பார்த்தியா?!”
 
“ம்…” அசிரத்தையாகச் சொன்னவள் சற்று அப்பால் போனாள். ரஞ்சன் தனது காரியத்தில் மும்முரமாக இருக்க பெண்ணுக்குச் சலிப்பு ஏற்பட்டது. 
 
“இதுக்கு நாம வீட்டுலயே இருந்திருக்கலாம்!” வாய்க்குள் முணுமுணுத்தவள் தன்னைச் சுற்றிக் கண்களைச் சுழல விட்டாள். இயற்கை வஞ்சகமில்லாமல் அந்த இடத்தைப் பசுமை ஆக்கி இருந்தது. சில்லென்ற ஈரப்பதம், சிலுசிலுக்கும் மழை என சுமித்ரா அன்று சுகமானதொரு மனநிலையில் இருந்தாள்.
 
சுற்றிவர ஆங்காங்கே மனிதர்கள் நடமாட்டம். அதிலும் ஜோடி ஜோடியாக வெளிநாட்டவர் சஞ்சாரம். சுமித்ரா ஒரு புன்னகையோடு அவர்களையேப் பார்வையிட்டாள். யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கையை அனுபவித்து வாழும் மனிதப் பிறவிகள். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!
 
தங்கள் இணையோடு கைகோர்த்து, தோளோடு தோள் சேர்த்து, அவ்வப்போது முத்தமிட்டு, மழை நீரில் நனைந்த படி இதழோடு இதழ் சேர்த்து… என்று இன்புற்றிருந்த இளம் வயதினரைப் பார்த்த போது சுமித்ராவுக்கு ஏக்கமாக இருந்தது.
 
“ஹூம்… இதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணும்! இங்க ஒன்னு இலையைக் கட்டிக்கிட்டு அழுது!” 
 
“அப்பிடியா?!” தனக்கருகில் கேட்ட குரலில் பதறிப்போய் திரும்பினாள் சுமித்ரா.
 
“ரஞ்சன்!” இலையோடு ஐக்கியமாகி இருந்தவன் எப்போது இங்கே வந்தான்?!
 
“இலைக்குப் பதிலா என்னோட சுமியை இப்போ நான் கட்டிக்கட்டுமா அப்போ?” 
 
“ஐயையோ! ரஞ்சன்… அது…” திக்கித் திணறியவள் அவன் முகம் பார்க்க முடியாமல் அப்பால் நகர்ந்து விட்டாள். ரஞ்சன் முகம் முழுவதும் புன்னகைப் பூக்க மனதளவில் தன்னை நெருங்கும் பெண்ணை மகிழ்ச்சியாகப் பார்த்திருந்தான்.