OVIYAPAAVAI-13

ஓவியம் 13
 
செஞ்சந்தன நிற பட்டுப் புடவை, கறுப்பு நிற பார்டர். தலை நிறைய மல்லிகை சூடிக்கொண்டு அங்குமிங்கும் வலம் வந்துகொண்டிருந்தாள் சுமித்ரா. மறுவீட்டு விருந்திற்காக அண்ணன்களின் வீட்டுக்கு வந்திருந்தது பெண்.
 
தன் புத்தம் புது மனைவி செல்லும் திசையெங்கும் ரஞ்சனின் பார்வை அவள் பின்னோடே அலைந்து கொண்டு திரிந்தது. கல்யாணத்துக்கு முன்பாக ஜவுளி எடுத்த போது அவள் ஆசையாகத் தேர்த்தெடுத்த புடவை. அந்த நிறம் சுமித்ராவுக்கு மிகவும் பிடிக்குமாம். அவளுக்கு நல்ல எடுப்பாகவும் இருந்தது.
 
“சுமி! இங்க வா.” பல்லவி அழைக்கவும் சமையலறையை நோக்கி வந்தது பெண். விருந்து தடபுடலாக ஆயத்தமாகிக் கொண்டிருக்க பல்லவியும் மஞ்சுளாவும் மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரஞ்சனின் குடும்பத்தினர் அனைவரும் விருந்துக்கு வந்திருந்தார்கள்.
 
“என்ன அண்ணி?”
 
“இப்பிடி உட்காரு.” பல்லவி கொஞ்சம் அதட்டலாகச் சொல்லவும் சுமித்ரா தன் பெரிய அண்ணியை கேள்வியாகப் பார்த்தாள். மஞ்சுளாவுக்கும் பல்லவி எதற்காக சுமித்ராவை அழைத்தாள் என்று புரியவில்லை. அவரும் ஆவலாக இப்போது பல்லவியை பார்த்தார்.
 
“சொல்லுங்க அண்ணி.”
 
“நான் என்னத்தைச் சொல்றது? நீதானே புதுப்பொண்ணு, நீதான் என்ன நடந்ததுன்னு சொல்லணும்.” இளைய அண்ணியின் பேச்சில் சுமித்ராவின் முகம் கன்றிச் சிவந்து போனது. உதட்டைக் கடித்தபடி தலையைக் குனிந்து கொண்டாள்.
 
“என்ன பல்லவி சுமிக்கிட்ட இப்பிடிக் கேட்கிறே?” மஞ்சுளாவுக்கும் இந்தப் பேச்சு கொஞ்சம் அசௌகரியத்தைக் கொடுத்திருக்கும் போலும். சட்டென்று பல்லவியை கேள்வி கேட்டார்.
 
“அக்கா! இதெல்லாம் உங்களுக்குப் புரியாதுக்கா, சுமி… நீ நேத்து என்ன நடந்ததுன்னு எங்கிட்டச் சொல்லு.” பல்லவி மீண்டும் அதட்ட சுமித்ரா திணறிப் போனாள்.
 
“அண்ணீ…”
 
“அண்ணிதான் கேட்கிறேன், பதில் சொல்லு, உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சினை இல்லையே? எல்லாம் சுமுகமா இருக்கில்லை?” இந்த வெளிப்படையான பேச்சில் சுமித்ராவுக்கு வெட்கமாக இருந்தது. எப்போதும் அவளை நன்கு புரிந்து வைத்திருக்கும் மஞ்சுளாவே இப்போதும் உதவிக்கு வந்தார்.
 
“பல்லவி, இப்பிடி முகத்துக்கு நேரே கேட்டா எப்பிடி அவ பதில் சொல்லுவா?”
 
“உங்களுக்கு ஒன்னும் தெரியாதுக்கா, இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நாகரிகம் பார்க்கப்படாது, நம்ம புள்ளைங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னா சட்டுன்னு வெளிப்படையாக் கேட்டுரணும், எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?”
 
“என்ன நடந்துச்சு?!”
 
“மொத ராத்திரி அன்னிக்கு புருஷன்காரன் அந்தப் பொண்ணைக் கைநீட்டி அடிச்சிருக்கான்.”
 
“ஐயையோ!” இப்போது மஞ்சுளா மட்டும் அதிசயிக்கவில்லை, சுமித்ராவும் மிரண்டு போனாள்.
 
“அந்தப் பொண்ணோட வாழ்க்கையேப் பின்னாடி பிரிஞ்சு போச்சு, பிரச்சினைகள் வர ஆரம்பிச்சப்போதான் புருஷன்காரன் மொத ராத்திரி அன்னைக்கே இப்பிடி நடந்துக்கிட்டான்னு அந்தப் பொண்ணு சொல்லியிருக்கு.”
 
“கடவுளே!”
 
“இதை இப்ப வந்து சொல்றியே, ஏன் அப்போ எங்கக்கிட்டச் சொல்லலைன்னு வீட்டுல இருக்கிற பெரியவங்க திட்டி இருக்காங்க.”
 
“புதுப்பொண்ணு இதையெல்லாமா வந்து சொல்லும் பல்லவி?!”
 
“அதைத்தான் க்கா நானும் சொல்றேன், சின்னப் பொண்ணுங்க வெட்கத்துல எதையும் சொல்ல மாட்டாங்க, ஆனா வீட்டுல பெரியவங்கன்னு நாம எதுக்கு இருக்கோம்? இதையெல்லாம் கவனிக்கணுமில்லை, நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணுமில்லைக்கா?” 
 
“ஆமா பல்லவி.” மஞ்சுளாவுக்கு ஒருபுறம் நெகிழ்ச்சியாக இருந்தது. இதுதான் பல்லவி. அடிதடியாகப் பேசினாலும் எல்லோர் மேலும் அன்பும் அக்கறையும் உண்டு. இன்னொரு புறம் படபடத்தது. இன்றைய இளையவர்களின் வாழ்க்கை முறை அவர் வயிற்றில் புளியைக் கரைத்தது. பல்லவியை போல வெளிப்படையாகப் பேச முடியாவிட்டாலும் அவரின் பார்வை இப்போது சுமித்ராவை ஒரு பயத்தோடு பார்த்தது.
 
“சுமீ…” ரஞ்சன் அழைக்கும் குரல் கேட்கவும் பெண்கள் மூவரும் சுதாரித்துக் கொண்டார்கள்.
 
“உன்னோட வீட்டுக்காரர்தான் கூப்பிடுறாரு, நீ என்னன்னு போய் பாரு, என்னப் பிரச்சினையா இருந்தாலும் எங்கிட்ட வந்து சொல்லணும், புரியுதா?”
 
“சரிண்ணி.” பல்லவியின் அதட்டலுக்குத் தலையை உருட்டி விட்டு அவசரமாக தனது ரூமுக்கு ஓடிவிட்டாள் சுமித்ரா. விட்டால் போதுமென்று இருந்தது. ரூம் கதவை மூடிவிட்டு அதன் மேல் சாய்ந்து நின்ற மனைவியை விசித்திரமாகப் பார்த்தான் ரஞ்சன். பெண்கள் மூவருக்குள்ளும் நடந்த பேச்சுவார்த்தை எதேச்சையாக சுமித்ராவின் அறைக்கு வந்த ரஞ்சனின் காதிலும் விழுந்திருந்தது. திருதிருவென விழித்தபடி நின்றிருந்த மனைவியை காப்பாற்றவே அவளை அழைத்திருந்தான்.
 
“என்னாச்சு சுமி?” நடந்தது எல்லாம் அவள் வாயாலேயே வரட்டும் என்று பேச்சை ஆரம்பித்தான் ரஞ்சன். 
 
“ஐயையோ! எங்க சின்னண்ணி இருக்காங்களே!” கண்ணை உருட்டி அதிசயித்த மனைவியை பார்த்த போது வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் ஓவியன்.
 
“ஏன்? அவங்களுக்கென்ன? ரொம்ப நல்ல மாதிரி, எதையும் மனசுல வெச்சுக்காம வெளிப்படையாப் பேசுறாங்க.” வேண்டுமென்றேத் தூண்டில் போட்டான்.
 
“நல்லாப் பேசினாங்க போங்க! அதுக்காக இப்பிடியா என்னை நிற்க வெச்சுக் கேள்வி கேட்பாங்க?!”
 
“அப்பிடி என்னக் கேட்டாங்க உங்கிட்ட?”
 
“அது…” கதவோடு சாய்ந்து நின்றபடி வார்த்தைகளுக்குத் தடுமாறிய மனைவியின் அருகில் மெள்ள நடந்து வந்தான் ரஞ்சன். காதோரம் அடங்கமறுத்த அவள் கூந்தல் சுருளை இதமாக ஒதுக்கிவிட்டான்.
 
“சுமி… நேத்து உங்கிட்டச் சொன்னதுதான், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம், நமக்கு இப்பிடி, அதை எல்லார்கிட்டயும் நாம சொல்லணும்னு அவசியமில்லைடா, அக்கறை இருக்கிறவங்க இப்பிடித்தான் கேள்வி கேட்பாங்க, அதுக்குத் திருதிருன்னு முழிச்சுக்கிட்டு நிற்கப்படாது.”
 
“இல்லை… அண்ணி யாரோ ஃபர்ஸ்ட் நைட்ல வைஃப அடிச்சுட்டாங்கன்னு சொன்னதும் எனக்கு பக்குன்னு ஆச்சு ரஞ்சன்!” இப்போதும் ஆச்சரியத்தில் கண்களை விரித்த மனைவியை பார்த்துச் சட்டென்று வாய்விட்டுச் சிரித்தான் கணவன்.
 
“அப்ப என்னப் பண்ணணும் சுமி?” அவன் குரல் குறும்பில் குளித்திருந்தது.
 
“…..” அழகாக நாணிய மனைவியின் கன்னத்தை வருடிக் கொடுத்தான் ஓவியன். அழகின் மொத்த உருவாக நின்றிருந்தவளை அள்ளிப்பருக இளமைத் துடித்தது. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
 
அன்றைய விடியல் பொழுது ரஞ்சனுக்கு பல சிந்தனைகளை உண்டாக்கி இருந்தது. எவ்வளவு தூரம் பார்த்துப் பார்த்துச் செய்த போதும் இன்னும் தன் மனைவிக்கு தன்மேல் முழுதான நம்பிக்கை வரவில்லை என்று புரிந்தது. 
 
அவநம்பிக்கை இருந்தபடியால்தானே ஆடைகள் இரண்டையும் முடிச்சிட்டு வைத்திருக்க வேண்டும்?! அவளை விட்டுவிட்டு அப்படி எங்கே நான் போய்விடுவேன் என்று நினைக்கிறாள்?! ரஞ்சனின் மனது அவள் செய்கையைப் பார்த்த அந்த நொடி மிகவும் வேதனைப்பட்டது. அவள் மனதில் எப்படி நம்பிக்கை விதையை விதைப்பது என்றும் அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
இருந்தபோதும் அவளது மனது என்றைக்கு முழுதாகத் தன்னை நம்புகிறதோ அன்றைக்கு அந்த ஏந்திழையை முழுதாக ஆளவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவர்களது முதல் கூடலில் காதல் கரைபுரண்டு ஓடவேண்டும் என்று கனவு கண்டான்.
 
இன்னும் தன்மேல் படராத அவள் மனதை அவசரப்பட்டு அணைக்க அவன் விரும்பவில்லை. இத்தனை அருகில் நெருங்கி வந்த கணவன் எதுவும் பேசாமல் அமைதியாக இதுவரையும் நிற்கவும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் சுமித்ரா. அந்தக் கண்களில் மெலிதாக ஒரு ஆசையையும் எதிர்பார்ப்பையும் பார்த்தபோது ஓவியன் வியந்து போனான்.
 
“சுமி…” அவன் வார்த்தை காற்றோடு கலந்து வந்தது. இன்னும் கொஞ்சம் ரஞ்சன் மனைவியை நோக்கி நெருங்கி வந்தான். மனைவியின் முகம் காட்டிய பாவனைகள் ஆயிரம் கதைகள் சொன்னது ஓவியனுக்கு. வெட்கத்தோடு தலை குனிந்து நின்றவளை இவனும் வேண்டுமென்று குனிந்து அவள் முகம் பார்த்தான். தன்னிடம் சில்மிஷம் செய்யத் தயாராகும் அந்த முகத்தை வலக்கரத்தால் தள்ளி விட்டாள் சுமித்ரா.
 
“ஹா… ஹா…”
 
“ரஞ்சீ…” வெளியே ஷாரதாவின் குரல் ஓங்கி ஒலித்தது. சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான் ரஞ்சன்.
 
“ஐயோ! அத்தை கூப்பிடுறாங்க.” பதறியபடி சுமித்ராவும் அறையை விட்டு வெளியேறவும் ரஞ்சனுக்கு சலிப்பு உண்டானது. இத்தனை இணக்கமான மனநிலையில் மனைவி அவன் முன் நாணம் கொண்டது அவனுக்கு வெகு திருப்தியாக இருந்தது. தானும் இப்போது வெளியே வந்தான்.
 
“ரஞ்சி, ஜெயராம் சூப்பரா ஒரு ஐடியா சொல்றாங்க, பக்கத்துல ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் இருக்குதாம், லன்ச்சை முடிச்சுட்டு நாம எல்லாரும் அங்கப் போகலாமா?” அம்மாவின் உற்சாகக் குரலில் ரஞ்சன் தன் மூத்த மைத்துனரை பார்த்தான்.
 
“ரொம்பத் தூரமெல்லாம் இல்லை மாப்பிள்ளை, இங்க இருந்து இருபத்தைஞ்சு கிலோமீட்டர்தான் இருக்கும், ஆனா கார்ல போக வேணாம், நான் ஜீப் ஏற்பாடு பண்ணிக் குடுக்கிறேன்.” 
 
“போகலாம் ரஞ்சி, இவங்க சொல்றதைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.” ஸ்வப்னாவும் இப்போது ஆசைப்பட ரஞ்சன் சுமித்ராவை திரும்பிப் பார்த்தான்.
 
‘உன் அபிப்பிராயம் என்ன?’ என்று கேளாமல் கேட்டது அந்தப் பார்வை. மனைவியும் சம்மதமாகத் தலையாட்டினாள்.
 
“அப்பா, உங்களுக்கு ஓகேவா?”
 
“டபுள் ஓகே ப்பா, நான் வரைஞ்சு ரொம்ப நாளாச்சு, இன்னைக்கு என்ஜாய் பண்ணிட வேண்டியதுதான்.” 
 
பகல் விருந்தை முடித்துக் கொண்டு மாப்பிள்ளை வீடு ‘செம்புவத்தை‘ என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டது. மலை, தேயிலைத் தோட்டம், ஏரி என அனைத்தையும் கொண்ட அந்தப் பிரதேசம் ‘எல்கடுவ’ எனும் இடத்தில் உள்ளது.
 
மலைப்பாங்கான இடம் என்பதால் ஜெயராம் தங்கள் மாப்பிள்ளையை வாகனம் ஓட்ட அனுமதிக்கவில்லை. மலையேற்றத்துக்கு ஏற்றாற்போல வாகனமும் அதற்கொரு சாரதியையும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருந்தார். சுமித்ரா அங்கு பலமுறை ஏற்கனவே வந்திருந்ததால் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆனால் சாரதாவும் ஸ்வப்னாவும் ஆர்பரித்தார்கள்.
 
“வாவ்! வன்டர்ஃபுல் சுமித்ரா! எவ்வளவு அழகா இருக்கு இந்த இடம்.” இது ஸ்வப்னா.
 
“ஏரியில இப்போ குளிக்கிறதுக்கு பர்மிஷன் இல்லை ண்ணி, ஆனா முன்னாடியெல்லாம் நாங்க இங்க வந்து குளிப்போம்.”
 
“அப்பிடியா?!” 
 
“ஆமா… அம்மா, அப்பா, அண்ணனுங்க எல்லாரும் காலையிலேயே வருவோம், அம்மா இங்க வந்து சமைப்பாங்க, நாங்கெல்லாம் தண்ணியில நல்லா ஆட்டம் போடுவோம், தேயிலைக் கொழுந்து பறிப்போம்.” பாதையின் இருமருங்கிலும் கைக்கெட்டும் தூரத்தில் தேயிலைப் புதர்கள் இருந்தன. ரஞ்சன் கைநீட்டி தேயிலை இலையொன்றைப் பறித்து அதன் வாசம் பிடித்தான்.
 
“ட்ரைவர், இங்க நிறுத்துங்க.” சந்திரமூர்த்தி சட்டென்று சொல்லவும் வாகனம் அங்கே நின்றது. மனைவியின் அருகாமையை ரசித்தபடி உல்லாசமாக இருந்த ரஞ்சன் அப்பாவை பார்த்தான்.
 
“என்னாச்சு ப்பா?”
 
“ரஞ்சி, வ்யூ இங்க ரொம்ப நல்லா இருக்குப்பா, நான் இங்கேயே இறங்கிக்கிறேன், நீங்க மேல போங்க.”
 
“என்னங்க நீங்க? பாதி வழியில இறங்குறேன்னு சொன்னா எப்பிடி?” 
 
“இல்லை ஷாரதா, இந்த இடம் வரையுறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது, நீங்க போங்க, நான் முடிச்சதும் உங்களுக்கு கால் பண்ணுறேன்.”
 
“கேட்டியா சுமி உன்னோட மாமா பேசுறதை, நான் இதை ரொம்ப நாளா அனுபவிக்கிறேன், நீ இப்போதானே ஆரம்பிச்சிருக்கே, போகப் போக உன்னோட நிலைமையும் இதுதான், ஸ்கெட்ச் போர்ட்டையும் நாலு ப்ரஷ்ஷையும் தூக்கிக்கிட்டு அப்பாவும் மகனும் தனியாக் கிளம்பும் போது நமக்குத் தலையை முட்டிக்கலாம் போல இருக்கும்.”
 
“சும்மா இரு ஷாரதா, சுமி உன்னை மாதிரி இல்லை, ரசனையுள்ள பொண்ணு, இல்லைம்மா?” சிரித்தபடி சந்திரமூர்த்தி கேட்கவும் சுமித்ரா கணவனை திரும்பிப் பார்த்தாள். குறும்புச் சிரிப்போடு அமர்ந்திருந்தான் ஓவியன்.
 
“ரசிக்கிற மாதிரி நீங்களும் வரையணும் ரஞ்சன், கண்டதையும் நீங்க வரைஞ்சு வெச்சா நாங்க எப்பிடி ரசிக்கிறதாம்?!”
 
“நான் ரசிக்கிறதைத்தானே என்னால வரைய முடியும் சுமி.” அவன் ரசனையின் அளவை அவள் நன்கு அறிவாள் என்பதால் சுமித்ரா அதற்கு மேல் பேசவில்லை.
சந்திரமூர்த்தி அங்கேயே இறங்கிக் கொள்ள மற்றைய நால்வரும் மலைமேல் பயணித்தார்கள். ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு புதுமணத் தம்பதிகளுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டு அம்மாவும் பெண்ணும் தங்களுக்குப் பிடித்த இடங்களைப் பார்க்கப் போய்விட்டார்கள். ரஞ்சன் தனது கனவுப்பாவையோடு தோளுரச நடந்தான்.
 
சுமித்ராவுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட இடமென்பதால் எங்கெல்லாம் ரம்மியமாக இருக்குமோ அங்கெல்லாம் கணவனை அழைத்துச் சென்றாள். ஏரியின் ஓரமாக இருவரும் கைகோர்த்து நடந்து கொண்டிருந்தார்கள். 
 
“எக்ஸ்கியூஸ் மீ.” இளம்பெண் குரலொன்று இவர்களை நிறுத்த இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். வெளிநாட்டுக்காரப் பெண்ணொன்று நின்றிருந்தது. ஆங்கிலம் பேசும் லாவகத்தைப் பார்த்த போது அமெரிக்கப் பெண் என்று தோன்றியது. எந்தத் தயக்கமும் இல்லாமல் ரஞ்சனிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தது. 
 
அந்தப் பெண் அன்றைக்குத்தான் அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கின்றதாம். டூரிஸ்ட் கைட் யாரும் கிடைக்காததால் தானாகவே கிளம்பி வந்திருக்கும் போலும். அந்த இடத்தைப் பற்றி ரஞ்சனிடம் தன் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தது.
 
ஓவியனுக்கும் அந்தப் பெண்ணிடம் பேசுவதில் எந்தத் தவறும் தெரியவில்லை. மனைவி வாய்மூலமாகத் தனக்குத் தெரிந்ததை அந்தப் பெண்ணுக்கு விளக்கிச் சொன்னான். அத்தோடு முடிந்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கணவனும் மனைவியும் ஆசையாசையாகச் சென்ற இடங்களுக்கெல்லாம் அந்தப் பெண்ணும் ஏதேச்சையாக வந்து சேர்ந்தது. அது திட்டமிட்ட செயல் அல்ல என்பதால் ரஞ்சனும் தன்னால் முடிந்தவரை அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தான். இதை ஒரு பெரிய விஷயமாக அவன் கருதாததால் மனைவியின் முகம் மாறியதையோ சில பொழுதுகளில் கோபம் கொண்டதையோ கவனிக்கத் தவறியிருந்தான்.
 
உயர்ந்த பைன் மரங்களுக்கு நடுவே நடந்த போது ரஞ்சனின் கரம் முதல் முறையாக மனைவியின் இடை வளைத்தது. உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபம் காணாமற் போக சுமித்ரா அந்த ஸ்பரிசத்தில் நெகிழ்ந்துதான் போனாள். அதன்பிறகு அந்த அமெரிக்கப் பெண்ணும் காணாமற் போக இருவரும் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு நடுவே அலைந்து திரிந்தார்கள். 
 
இளமை, குளுமை என அனைத்தும் சேர்ந்து பெண்ணுக்குள் ஒரு மந்திரத்தைப் பண்ணி இருக்க கணவனை உரசியபடி நடக்க ஆரம்பித்தது. ரஞ்சன் வானத்தில் பறக்காத குறையாக அந்த இடத்தை வலம் வந்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் இயல்பாகப் பெண் அவன் தோள்சாய அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் மனைவியை இறுக அணைத்திருந்தான் ரஞ்சன்.
 
“ரஞ்சன்… யாராவது…” அவனைத் தடுத்து நிறுத்தப் பேச ஆரம்பித்தவளுக்கும் அந்த அணைப்பு இனித்திருக்கும் போலும். அதற்கு மேல் பேசாமல் நிறுத்திக்கொண்டாள். 
 
“சுமி…” அணைப்பை இன்னும் அதிகப்படுத்திய ரஞ்சனுக்கு அப்போதுதான் தான் செய்யும் காரியத்தின் வீரியம் புரிய சட்டென்று நிதானித்தான். அவன் விலகலைப் பெண் ரசிக்கவில்லைப் போலும். கேள்வியாக அண்ணார்ந்து பார்த்தது.
 
“சுமி…” இப்போது ரஞ்சன் தடுமாறினான். தன்மேல் முழுதாக நம்பிக்கை வைக்காத பெண்ணை உறவுக்குள் இழுக்க அவன் மனது தயங்கியது. அவன் உள்ளமும் உடலும் அவளுக்காக ஏங்கிய போதும் தனது ஆசைகளை அவளுக்குள் திணிக்க அவன் தயங்கினான். 
 
“ரஞ்சன்…” சுமித்ராவின் மனதும் அந்த நொடி கணவன் பால் முழுதாகச் சாய்ந்திருந்தது. அன்று காலையில் அவள் அறையில் வைத்தும் அவளை நெருங்கிய கணவன் தீண்டாமலேயே விலகியிருந்தான். ஏனோ அது ஏமாற்றமாக இருந்த போதிலும் பெண் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் இப்போதும் அவன் அவளை விட்டு விலகவும் பெண்ணுக்குச் சொல்லமுடியாத தவிப்பு ஒன்று தோன்றியது.
 
தன் முகத்தை அண்ணார்ந்து அண்ணார்ந்து பார்த்து எதையோ சொல்லத்துடித்த அவள் தவிப்பு அவனுக்கும் இப்போது லேசாகப் புரிய அந்தப் பூ முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான் ஓவியன்.
 
“என்னோட சுமிக்கு இப்போ என்ன வேணும்?” அவன் வார்த்தைகளில் அத்தனைக் காதல், அத்தனைச் சரசம். அவளுக்கு என்ன வேண்டும் என்று அவள் கண்ணும் முகமும் அவனுக்குச் சொல்லிவிட ரஞ்சன் மனைவியின் இதழ்களை நோக்கிக் குனிந்தான். 
 
ராஜ சுகத்தில் திளைக்கத் துடித்த இளவலையும் கண்மூடி அவனை வரவேற்ற காரிகையையும் ஓங்கி ஒலித்த ரஞ்சனின் அலைபேசி நிஜவுலகிற்குக் கொண்டு வந்தது. திடுக்கிட்டு விலகினாள் சுமித்ரா. முகத்தில் ஏமாற்றத்தையும் தாண்டி இனம் புரியாத கோபம் ஒன்று முளைவிட்டது. ரஞ்சனும் சலிப்போடு அலைபேசியை எடுத்துப் பார்த்தான். ஷாரதா அழைத்துக் கொண்டிருந்தார்.
 
“சொல்லுங்கம்மா.”
 
“ரஞ்சி, எங்க இருக்கீங்க? நேரமாகுது… கிளம்பலாமான்னு அப்பா கேட்கிறாங்க.” ஷாரதா பேசியது சுமித்ராவுக்கும் கேட்டதால் சட்டென்று திரும்பி வந்தவழியே நடக்க ஆரம்பித்தாள். அதன்பிறகு கணவன் மனைவி இருவருக்கும் தனிமைக் கிடைக்கவில்லை. ரஞ்சன் எவ்வளவு முயன்றும் சுமித்ரா அவன் அருகாமையில் வரவில்லை. அத்தை, நாத்தனாரோடு இணைந்து கொண்டாள். 
 
“ஹாய்.” மீண்டும் அதே அமெரிக்கப் பெண். வாகனத்தில் ஏறப்போன ரஞ்சனை அழைத்தது. திரும்பவும் ஏதோ உதவி தேவைப்பட இவனை அழைத்தது. மனைவியின் கண்கள் தன்னைக் கண்காணிப்பதை அறியாத ரஞ்சன் அந்தப் பெண்ணோடு சாதாரணமாகச் சிரித்து உரையாடினான். தகவல் ஒன்று தேவைப்பட தனது அலைபேசியில் அதை எடுத்து பெண்ணுக்குக் காட்டினான். அப்போதும் அந்தப் பெண்ணுக்குத் தெளிவு ஏற்படாமல் போகவே அவளருகில் நெருங்கி நின்று அலைபேசியைக் காட்டி இரண்டொரு நிமிடங்கள் பேசினான். 
 
லேசாக இருள் பரவ ஆரம்பிக்கவும் தாமதிக்காமல் அனைவரும் கிளம்பிவிட்டார்கள். தனியே வந்திருந்த அந்தப் பெண்ணையும் ரஞ்சன் தங்களுடன் வருமாறு அழைக்கப் பெண்ணும் ஒப்புக்கொண்டது. சுமித்ராவை தவிர அங்கிருந்த யாருக்கும் ரஞ்சனின் செய்கைகளில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. சாதாரண உதவி, அதை யாரும் பெரிதுபடுத்தவுமில்லை.
 
ஆனால் சுமித்ரா உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள். இன்றைக்கு இருமுறைத் தன்னை ஆசையோடு நெருங்கிய கணவன் அப்புறமாக விலகிப் போனது அவள் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அவனைத் தன்னிடமிருந்து விலக்கியது என்று ஏனோ பெண் அறிந்துகொள்ள மறுத்தது. இணக்கம் காட்ட மறுத்த தன்னை விட்டுவிட்டு அந்த வெளிநாட்டுக் காரியோடு கணவன் இழைவதாகவே அவள் நினைத்தாள். 
 
அந்த வெளிநாட்டுப் பெண் இறங்க வேண்டிய இடத்தில் அவளை இறக்கிவிட்டு அவளோடு இரண்டொரு வார்த்தைகள் சம்பிரதாயத்திற்காகப் பேசிவிட்டு வந்தான் ஓவியன். அவன் அலைபேசி எண்ணை வாங்கத் தவறவுமில்லை அந்தப் பெண். இவை அனைத்தையும் தனக்கேயுரித்தான பாணியில் வர்ணம் தீட்டிக்கொண்டாள் சுமித்ரா. கணவன் மேல் புதிதாக முளைவிடத் தொடங்கி இருக்கும் காதலும் ஆசையும்தான் தன்னை இப்படியெல்லாம் சிந்திக்கச் செய்கிறது என்று அவள் புரிந்துகொள்ளவில்லை. இயல்பான ஒரு குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கத் தவறிய தன்னைக் கணவன் நிராகரிப்பதாகவே நினைத்தாள்.
 
வீடு வந்து சேர்ந்த அனைவரும் களைப்பு மிகுதியில் தங்கள் அறைகளுக்குள் முடங்கிப் போனார்கள். ரஞ்சனும் இதமான மனநிலையில் தங்கள் அறையின் உள்ளே வந்தவன் மனைவியைத் தேடினான். இன்றைக்கு அவள் காட்டிய இணக்கம் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
 
“சுமி… குளிக்கலையா?” 
 
“எதுக்கு?” பட்டென்று வந்த பதிலில் ஓவியனின் முகத்திலிருந்த புன்னகை சற்றே மெலிந்து போனது.
 
“தூங்க வேணாமா? டயர்டா இருக்குமே உனக்கு?” என்றான் மென்மையாக.
 
“அப்பிடி என்னத்தை வெட்டி முறிச்சதுக்கு நான் டயர்ட் ஆகப்போறேன்? நான் எதுவுமேப் பண்ணலைன்னு குத்திக்காட்டுறீங்களா ரஞ்சன்?”
 
“சுமி! என்னப் பேசுறே நீ?!” ரஞ்சன் திடுக்கிட்டான்.
 
“என்னை இன்னைக்கு அவாய்ட் பண்ணிட்டு எதுக்காக அந்த வெள்ளைக்காரிக்கிட்ட அவ்வளவு வழிஞ்சீங்க?”
 
“ஏய்!”
 
“பொண்டாட்டின்னு இருக்கிற இவ எதுக்குமே லாயக்கில்லை, நாம வேற யாரையாவது பார்த்துக்கலாங்கிறதுதானே உங்க நினைப்பு? அதுதானே உங்க மனசுல ஓடுது?” வார்த்தைகள் தரம் இறங்கி வந்து வீழ்ந்தது.
 
“சுமி!”
 
“எனக்குத் தெரியாதா ரஞ்சன்? பார்த்துப் பார்த்து அத்தனைத் தத்ரூபமா ஓவியம் வரைஞ்சவரால எப்பிடி சும்மா இருக்க முடியும்? இதுக்குத்தானே அலையுறீங்க?” ஆக்ரோஷமாக இதுவரைத் தன் ஏமாற்றங்களை வார்த்தைகளால் கொட்டியவள் இப்போது செயலிலும் இறங்கினாள். 
 
தாபம், கோபம், ஏமாற்றம், துக்கம், கழிவிரக்கம் என எத்தனையோ உணர்ச்சிகளால் தாக்குண்ட பெண் இப்போது தன் மார்புச் சேலையை அவிழ்த்து நிலத்தில் வீசியது. ரஞ்சன் மின்சாரத்தைத் தொட்டவன் போல அதிர்ந்து போனான். அவன் நாவிற்கு இப்போது வார்த்தைகள் வசப்படவில்லை.
 
“இதுக்குதானே ரஞ்சன்? உங்களோட தேவை இதுதானே?” மனைவியின் கோபக் குரலில் மலைத்து நின்ற ஓவியன் சட்டென்று நிஜத்துக்கு வந்தான். கண்கள் இரண்டையும் இறுக மூடியவன் கழுத்தை விலுக்கென்று வலது
புறமாகத் திருப்பிக் கொண்டான். 
 
சவுக்கால் அவனை யாரோ ஓங்கி அடித்தாற் போல அவனுக்கு அவ்வளவு வலித்தது. எவ்வளவு பெரிய அவமானம்! அவனது இத்தனை வருட வாழ்க்கையில் யாரும் அவனை இத்தனைத் தூரம் அவமதித்தது கிடையாது. என்ன வார்த்தைச் சொல்லிவிட்டாள்! அவனை அவள் தரக்குறைவாகப் பேசியதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. அவனது கலையையும் சேர்த்துக் காலில் போட்டு மிதித்துவிட்டாளே! 
 
என்ன மாதிரியான வார்த்தைகள் அவை?! தத்ரூபமாக பார்த்துப் பார்த்து வரைபவனா?! அப்படி எத்தனைப் பெண்களை வரைந்துவிட்டான்?! கனவில் கூட அவளோடு மட்டுமே வாழ்ந்தவனைப் பார்த்துப் பேசும் பேச்சா இது?! இடது கன்னத்திலிருந்து ஆரம்பித்த ஒருவித வலி கழுத்து, தோள்பட்டை என எங்கும் வியாபித்தது. அழுகையின் உச்சகட்ட நிலை அது. 
 
பார்க்கக் கூடாததைப் பார்த்துவிட்டது போல ரஞ்சனின் மனது குற்றவுணர்ச்சியால் தவித்தது. கதவைத் திறந்து கொண்டு பால்கனியில் போய் நின்றுவிட்டான். அன்றைய பொழுது முழுவதும் அவள் கொடுத்த தித்திப்பான நிமிடங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.
 
உறவென்ற ஒன்று இல்லாத போது அதீத உரிமை எடுத்தவன் அவன். அப்போது அது அவனுக்குத் தவறென்று படவில்லை. ஏனென்றால் அவள் அவனது சொத்து, உரிமை. இயல்பான உரிமையோடு அவளைத் தீண்டினான். 
 
ஆனால் இன்று யாராலும் மாற்ற முடியாத பந்தம் அவர்களுக்குள். அவளை என்ன செய்யவும் அவனுக்கு உரிமையுண்டு. அந்த இளம்பெண்ணின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவனுக்குச் சொந்தம். இருந்தபோதும்… தவறிழைத்தவன் போல, உரிமையற்றதைப் பார்த்தது போலக் கூனிக்குறுகி நின்றான் ரஞ்சன்.
 
முதல்முறையாகத் தான் எடுத்த முடிவு தவறோ எனும் எண்ணம் தோன்றியது. கண்கள் குளமாக இருட்டை வெறித்திருந்தான் ஓவியன்.
 
என் காதலே… என் காதலே… என்னை என்ன செய்யப் போகிறாய்?!
நான் ஓவியன் என்று தெரிந்தும்- நீ
ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?!