OVIYAPAAVAI-14

ஓவியம் 14
 
உடல் வியர்க்க அந்த மைதானத்தில் ஓடிக்கொஎண்டிருந்தான் ரஞ்சன். நேற்று இரவு தூங்க வெகுநேரம் ஆகிப்போனது. எத்தனைச் சமாதானங்கள் செய்த போதும் அவன் மனது சுமித்ரா பேசிய வார்த்தைகளை மன்னிக்க மறுத்தது, மறக்கச் சண்டித்தனம் பண்ணியது. மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியோ அல்லது உடல் அயர்வோ தெரியாது, அவள் படுத்தவுடன் தூங்கிப் போனாள்.
 
நள்ளிரவு தாண்டிய பிறகுதான் பால்கனியை விட்டு அறைக்குள் வந்தான் ரஞ்சன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று கூட அவனுக்குப் புரியவில்லை. அவன் கவலையை யாரிடமும் சொல்லி அழவும் அவனால் முடியாது. தன் தந்தையின் காதுக்கு இன்றைய நிகழ்வு எட்டினால் அவர் நொறுங்கிப் போவார். எப்போதும் அவனுக்குத் துணையிருப்பது ஓவியம்தானே. எண்ணங்களின் போக்கில் வர்ணங்களைக் குழைத்து வரையத் தொடங்கினான். அப்போதும் அவனைச் சாடியவளே சிரித்தபடி ஓவியமாக வந்து நின்றாள். அவன் நாடி நரம்பெங்கும் வியாபித்து நிற்பவள் அவனை நம்பவில்லையே! 
 
காலையில் அவள் எழும் முன்பாக எழுந்து உடற்பயிற்சி செய்ய வந்துவிட்டான். உடம்பிலிருந்து வியர்வை வெளியேறும் போது மனதிலிருக்கும் கவலைகளெல்லாம் கழிந்து போவதுபோல ஒரு நிம்மதி தோன்றியது. ஷார்ட்ஸும் டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான். உடற்பயிற்சியில் முறுக்கேறியிருந்தது உடம்பு. அழகான மனைவியின் யௌவனம் தன்னை மயக்குவது போல ஆண்மையின் இலக்கணமான தானும் மனைவியை கவர்வோம் என்று ரஞ்சன் புரிந்துகொள்ளவில்லை. 
 
வீட்டை நெருங்கி இருந்தான் ரஞ்சன். இன்னும் இரண்டு நாட்களில் குடும்பத்தினர் யூகே புறப்பட இருப்பதால் ஷாரதாவும் ஸ்வப்னாவும் பயண ஏற்பாடுகளில் பிஸியாக இருந்தார்கள். சந்திரமூர்த்தி வாசலில் அமர்ந்திருந்தார். மகனைப் பார்த்ததும் முகம் மலர்ந்து போனது.
 
“ரஞ்சி…” என்றார் வாஞ்சையாக. ரஞ்சனும் புன்னகையோடு அப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.
 
“இன்னும் ரெண்டு நாள்ல நாங்கெல்லாம் கிளம்பிருவோம் ரஞ்சி, பாரிஸ் க்கு அனுப்ப வேண்டிய பீஸை டைமுக்கு முடிச்சிடுவ இல்லை?”
 
“அதைப்பத்தி நானே உங்கக்கிட்டப் பேசலாம் ன்னு இருந்தேன் ப்பா.”
 
“என்னாச்சு? ப்ளான்ல ஏதாவது சேஞ்ச் இருக்கா ரஞ்சி?”
 
“ப்ளான் ல எந்த சேஞ்ச்சும் இல்லைப்பா, ஆனா…” மகன் மேற்கொண்டு பேசத் தயங்கினான்.
 
“எதுவா இருந்தாலும் ஓபன்னா பேசு ரஞ்சி, எதுக்கு அப்பாக்கிட்டச் சொல்லத் தயங்கிறே?”
 
“இல்லைப்பா, சுமிக்கு அடுத்த மாசம் எக்ஸாம் இருக்கு, எனக்கும் இந்த வேலையை டைமுக்கு முடிச்சுக் குடுக்கணும்…”
 
“சரி…”
 
“அதனால… சுமியை ஹாஸ்டல்ல கொண்டு போய் விடலாமான்னு பார்க்கிறேன்.”
 
“என்னது? ஹாஸ்டலா?”
 
“ம்…” 
 
“என்னப்பா சொல்றே? இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு, இப்பப் போய் புதுப்பொண்ணை ஹாஸ்டல்ல விடுறேன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?”
 
“அது எனக்கும் புரியுதுப்பா, ஆனா… டைமுக்கு வேலையை… முடிக்க முடியாம…” பின்தலையைக் கோதியபடி ரஞ்சன் முணுமுணுத்தான். சந்திரமூர்த்தி மகனைக் கூர்ந்து பார்த்தார். தூக்கமற்றுச் சிவந்திருந்த அவன் விழிகள் அவருக்குத் தன் மகன் புதுமாப்பிள்ளை என்பதை ஞாபகப்படுத்தியது. 
 
“வாழ்க்கைன்னா இதெல்லாம் சகஜம்தான் ரஞ்சி, அதுக்காக ஹாஸ்டல்ல சுமித்ராவை இப்ப விடுறது சரிவராதுப்பா.” அப்பா எந்த அர்த்தத்தில் தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்தபோது ரஞ்சனுக்கு வலித்தது. உள்ளுக்குள் ஊமைபோல அழுதது அவன் மனது.
 
“ம்…” என்று தலையை ஆட்டிய மகனின் தோளில் ஒரு புன்னகையோடு லேசாகத் தட்டிக் கொடுத்தார் சந்திரமூர்த்தி. 
 
“ரஞ்சி, சுமி எங்க? இன்னைக்கு ஷாப்பிங் போகணும், மறந்துராதே.” என்றபடி வந்தார் ஷாரதா.
 
“சரிம்மா.” சொல்லிவிட்டு தங்கள் ரூமுக்குள் வந்த ரஞ்சன் சுமித்ராவை தேடினான். படுக்கை காலியாக இருந்தது. பாத்ரூம் கதவை அவன் திறக்கக் கை வைத்த போது உள்ளிருந்து அதுவாகத் திறந்து கொண்டது. அப்போதுதான் குளித்து முடித்துவிட்டு ஈரக்கூந்தலோடு நின்றிருந்தாள் மனைவி. 
 
“குட்மார்னிங் சுமி.” நடந்தது எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒரு செயற்கைப் புன்னகையோடு காலை வணக்கம் வைத்தான் ஓவியன். 
 
“குட்மார்னிங்.” பெண் பேச்சில் தடுமாற்றம்.
 
“அம்மா தேடுறாங்க சுமி, போய் என்னன்னு பாரு.” இயல்பாகச் சொல்லிவிட்டு ரஞ்சன் டவலோடு பாத்ரூமுக்குள் போய்விட்டான்.
 
அன்றைக்கும் சரி, அதன் பிறகு வந்த இரண்டு நாட்களுக்கும் சரி ரஞ்சனும் சுமித்ராவும் ஓய்வில்லாமல் குடும்பத்தினரோடு நேரம் செலவழித்தார்கள். புதிதாகப் புடவை கட்டக் கற்றுக் கொண்டிருந்த ஷாரதாவிற்கு பட்டுப் புடவைகள் மேல் தீராத காதல் ஏற்பட்டிருந்தது. மஞ்சுளா, பல்லவி சகிதம் பெண்கள் கூட்டம் ஆடைத் தெரிவுகளுக்கென்றே கடை கடையாக ஏறி இறங்கியது. 
 
எல்லாக் குதூகலங்களும் முடிந்து அன்றைக்கு சந்திரமூர்த்தி குடும்பம் ஃப்ளைட் ஏறியிருந்தது. சுமித்ராவின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் வீட்டு மாப்பிள்ளையின் குடும்பத்தை வழியனுப்பி வைத்தார்கள். எல்லோர் மனதிற்கும் மிகவும் நிறைவாக இருந்தது. 
 
“ரஞ்சி, பாரிஸுக்கு அனுப்ப வேண்டிய பீஸ்ல எந்த லேட்டும் வந்திடப்படாது, நானும் அடிக்கடி உனக்கு ஃபோன் பண்ணி ஞாபகப்படுத்துவேன்.” ஏர்போர்ட்டில் வைத்தும் சந்திரமூர்த்தி மகனிடம் இதைச் சொல்லிவிட்டுத்தான் உள்ளே போனார்.
***
வீடு மிகவும் அமைதியாக இருந்தது. குடும்பத்தினரை ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு வந்தபோது களைப்பாக இருக்கவும் ஒரு ரூமிற்குள் போய் தூங்கிவிட்டான் ரஞ்சன். அடித்துப் போட்டாற்போல உறக்கம் வந்தது. இரண்டு, மூன்று நாட்களாக ஓயாத அலைச்சல். சுமித்ராவும் தங்கள் அறைக்குள் நுழைவதைப் பார்த்தவன் அவளுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டு இன்னொரு ரூமிற்குள் போய் தூங்கிவிட்டான். வானிலை மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மழை வரும் அறிகுறிகள் தென்பட்டதால் கொஞ்சம் புழுக்கமாக உணர்ந்தான் ரஞ்சன்.
அணிந்துகொண்டிருந்த ஷர்ட்டை கழட்டிவிட்டுத்தான் தூங்கி இருந்தான்.
அப்போதும் தூங்கி எழுந்தவுடன் குளிக்க வேண்டும் போல இருந்தது. 
 
கட்டிலிலிருந்து எழுந்து பாத்ரூமிற்குள் போக இவன் எத்தனிக்கும் போது அறைக்கதவு தானாகத் திறந்தது. சட்டென்று திரும்பினான் ஓவியன். சுமித்ராதான் நின்றிருந்தாள். சொல்லாமல் கொள்ளாமல், அறைக் கதவைக் கூடத் தட்டாமல் அவள் வருவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. வாசலிலேயே நின்றிருந்தவளை விழியெடுக்காமல் பார்த்திருந்தான் ரஞ்சன். பெண்ணும் என்ன நினைத்ததோ, கொஞ்சம் தயங்கிவிட்டு பிற்பாடு உள்ளே வந்தது. 
 
“ரஞ்சன்…”
 
“சொல்லு சுமி.” எதையோ அவள் சொல்லத் தயங்கவும் ஓவியன் இயல்பாகப் பேச்சை ஆரம்பித்தான்.
 
“சாரி…”
 
“எதுக்கு?” ரஞ்சன் ஆச்சரியத்தோடு கேட்டான். குடும்பத்துடன் இரண்டு நாட்கள் செலவழித்ததில் மனைவியோடு இருந்த மனச்சுணக்கம் மறந்து போயிருந்தது இளையவனுக்கு.
 
“இல்லை… அன்னைக்கு நான்… அப்பிடிப் பேசியிருக்கப்படாது.” சுமித்ரா சொன்னதுதான் தாமதம், ரஞ்சனின் முகம் சட்டென்று ஒரு நொடி கூம்பி மீண்டது. அன்றைய இரவை நினைக்கக் கூட விரும்பாதவன் போல ஜன்னலருகில் போய் நின்று கொண்டான். வெளியே மழை லேசாகத் தூற ஆரம்பித்திருந்தது. மண்வாசனை மூக்கைத் தொட்டது.
 
“ரஞ்சன்…”
 
“நாம வேற பேசலாம் சுமி.” தன்னை எட்ட நிறுத்திய அந்தக் குரலில் பெண்ணுக்குக் கண்களில் நீர் திரண்டது. தன் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பாதவன் போல ஜன்னலோடு நின்றிருந்த அவன் தோற்றம் சுமித்ராவை வெகுவாகப் பாதித்தது. 
 
“ரஞ்சன்…” மீண்டும் கணவனைக் கண்ணீர் குரலில் அழைத்தபடி அவனை நெருங்கிப் போனது பெண்.
 
“நான் அன்னைக்கு அப்பிடிப் பேசினது தப்புத்தான், ஆனா… ஏன் அந்தமாதிரிப் பேசினேன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன்.” இது தன்னிலை விளக்கம்.
 
“என்னதான் காரணம் இருந்தாலும் அன்னைக்கு நீ அப்பிடிப் பேசியிருக்கப்படாது சுமி, பார்த்துப் பார்த்து வரையுறவன்தானேன்னு சொன்னே, அதுக்கு என்ன அர்த்தம்?” அத்தோடு பேச்சை நிறுத்தியவன் ஒரு சலிப்போடு அவளைத் திரும்பிப் பார்த்தான். 
 
“இங்கப்பாரு சுமி, அதைப்பத்திப் பேசினா வீணான மனவருத்தம்தான் மிஞ்சும், வேணாம் விட்டுரு.” அவன் முழுதாக முடித்திருக்கவில்லை. 
 
“ரஞ்சன்…” என்று கதறியபடி அவன் மார்பில் அடைக்கலமாகியிருந்தது பெண். இப்படியொரு நிலையை ஓவியன் கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடுக்கிட்டுப் போனான்.
 
“நீங்க எம்மேல கோபமா இருக்கீங்க, இந்த ரெண்டு நாளும் நீங்க எங்கூடச் சரியாப் பேசவேயில்லை, நீங்க என்னை வெறுத்துட்டீங்க ரஞ்சன், என்னால அதைத் தாங்க முடியலை, நீங்க எங்கூடப் பேசாம ஒதுங்கி ஒதுங்கிப் போறதை என்னால தாங்கமுடியலை ரஞ்சன்.” ஓவென்று கதறியபடி மனைவி அழ ஓவியன் திகைத்துப்போனான்.
 
“சுமித்ரா…”
 
“பாருங்க, இப்பக்கூட உங்களுக்கு சுமின்னு கூப்பிடத் தோணலை, சுமித்ரான்னு யாரோ போல கூப்பிடுறீங்க.” சொல்லிவிட்டு அவள் மீண்டும் ஓங்கியழ ரஞ்சனுக்கு சிரிப்பு வந்தது. 
 
“இங்கப்பாரு சுமி, முதல்ல அழுறதை நிறுத்து.”
 
“இல்லை… அன்னைக்கு நான் பேசினது தப்புத்தான், ஆனா உங்களைக் காயப்படுத்தணும்னோ இல்லை உங்களைக் கேவலப்படுத்தணும்னோ அப்பிடிப் பேசலை, ஏதோவொரு கோபம், உங்க மேல ஒரு கோபம்.”
 
“எதுக்காக அந்தக் கோபம் வந்துச்சு சுமி? நான் அப்பிடி என்னத் தப்புப் பண்ணினேன்?!”
 
“நீங்க என்னை விட்டு விலகி விலகிப் போனீங்க.” அவன் மார்பிலிருந்து தலையை நிமிர்த்தியவள் அவன் முகத்தைப் பார்த்துக் குற்றம் சுமத்தினாள்.
 
“நான் எப்பம்மா உன்னை விட்டு அன்னைக்கு விலகிப் போனேன்?! உங்கூடத்தானே இருந்தேன்?!”
 
“இல்லை! நீங்க அன்னைக்கு ரெண்டு தடவை எம்பக்கத்துல வந்தீங்க, வந்துட்டு…” அதற்குமேல் பெண் பேசவில்லை.
 
“வந்துட்டு…”
 
“தள்ளிப் போயிட்டீங்களே…” ஒரு கேவலோடு சொன்னவள் அவன் கண்களை நேராகப் பார்த்தாள். 
 
“ரஞ்சன்… ஐ லவ் யூ!” கன்னத்தில் கண்ணீர் இறங்க மனைவி தன் காதல் சொன்னபோது ஓவியன் திகைத்துப் போனான். இவள் என்னச் சொல்கிறாள்?!
 
“…..”
 
“எனக்கு… எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்குது, இப்பெல்லாம் நீங்க எங்கூடவே இருக்கணும் போல தோணுது… அப்பிடி நடக்கலைன்னாக் கோபம் வருது, என்னாலேயே என்னைக் கன்ட்ரோல் பண்ண முடியலை, அந்தக் கோபத்துல என்னையறியாம என்னென்னமோப் பேசிடுறேன்.”
 
“……”
 
“ஏன் எதுவும் பேசமாட்டேங்கிறீங்க? ரஞ்சன்… உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? நான் தப்பான பொண்ணெல்லாம் கிடையாது ரஞ்சன், உங்களை எனக்கு…” அதற்கு மேல் பெண்ணைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்க்கவில்லை ஓவியன். அவள் எலும்புகள் நொறுங்கும் படி இறுக அணைத்திருந்தான். 
 
“இதைச் சொல்ல உனக்கு இத்தனை நாளா?” அவளுக்கு வலிக்கும் என்று தெரிந்தும் அவள் கூந்தல் காட்டை இறுகப் பற்றி அவளை வதைத்தான். அந்த வலிகூட அவளுக்கு ருசித்திருக்கும் போலும். ஒரு புன்னகையோடு அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள்.
 
“என்னடீ!” என்றான் கிறக்கமாக.
 
“ஓவியரோட பதில் இப்பிடி இருக்காதே!” அவள் சிந்திய மோகனப் புன்னகையில் தன்னை அந்த நொடி தொலைத்தாலும் ரஞ்சன் சற்று நிதானித்தான். இன்றைக்கு இப்படிக் காதல் செய்பவள் அன்றைக்குச் சிதறவிட்ட வார்த்தைகள் அவனைக் கூரிய கண்ணாடியாகக் கிழித்திருந்தனவே!
 
“ரஞ்சன்!” வேகத்தோடான அவன் முத்தத்தை எதிர்பார்த்திருந்தவள் அது கிடைக்காமல் போகவும் ஏமார்ந்து போனாள். 
 
“ஓவியனோட டச் அத்தனைச் சுலபத்துல கிடைக்காது பொண்ணே!” கண்ணடித்தபடி அவன் சொல்ல, அந்த வெற்று மார்பில் இயல்பாகச் சாய்ந்து கொண்டாள் சுமித்ரா. ரஞ்சனும் மனைவியை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான். ஆனால் சிந்தனை எங்கெல்லாமோப் பறந்தது.
 
மனைவி இத்தனை இணக்கமாகப் பேசுவது அவனுக்கும் இன்பமாகத்தான் இருந்தது. சொல்லப் போனால் அவளது கடந்தகாலத்தை இத்தனைக் சீக்கிரத்தில் அவள் மறந்தது அவனுக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஆனால்… ரஞ்சனின் மனதில் எதுவோ நிரடியது. 
 
இல்லை… மனைவியின் மனதில் இன்னும் தான் எதிர்பார்க்கும் காதல் முழுதாகப் பூக்கவில்லை. நிறைவான காதல் நிதானத்தைத்தான் கற்றுக் கொடுக்கும். காத்திருத்தலின் சுகத்தைச் சொல்லிக் கொடுக்கும். சுமித்ராவின் மனதில் இப்போதுதான் தன்னைப் பற்றிய ஒரு ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. எங்கே தான் அவளை விட்டு விலகி விடுவோமோ என்கின்ற பயத்தில் அவசர அவசரமாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள நினைக்கிறது பெண். அதற்குக் காதல் என்று பெயரும் வைத்திருக்கிறது!
 
மனைவியை மிகவும் நிதானமாகக் கையாள வேண்டிய நிலையில் தான் இருப்பதை ரஞ்சன் புரிந்து கொண்டான். கூகுளில் அவன் சேகரித்த தகவல்கள் இப்போது அவனை மிகச்சரியாக வழி நடத்தின. இன்னும் கொஞ்சம் அவளை இறுக்கி அணைத்தவன் அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தம் வைத்தான்.
 
“லைட்டா பசிக்குது சுமி, இருந்த டென்ஷன் ல இன்னைக்கு ஒழுங்கா நான் லன்ச் எடுக்கலை.” அவளை நிதானப்படுத்த லேசாக ஒரு பொய் சொன்னான்.
 
“நானும் கவனிச்சேன் ரஞ்சன், நீங்க ஒழுங்காவேச் சாப்பிடலை, இருங்க டீ போட்டுக் கொண்டு வரேன்.” படபடவெனப் பேசிவிட்டு கிச்சனை நோக்கி ஓடிப்போகும் மனைவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ஓவியன். உண்மையைச் சொன்னால் இன்றைக்குச் சாப்பாட்டை அவன் ஒரு பிடி பிடித்திருந்தான். மாப்பிள்ளை வீட்டாருக்காக பெண் வீட்டார் ஸ்பெஷலாக இன்றைக்குச் சாப்பாடு ஆர்டர் பண்ணி இருந்தார்கள். சாப்பாடு அத்தனை ருசியாக இருந்தது. தாமரை இலையில் பரிமாறி இருந்தார்கள். ரஞ்சனுக்கு அது மிகவும் புதுமையாக இருக்க ஒரு தாமரை இலையை வேறு பத்திரப்படுத்தி இருந்தான். 
 
ஆனால் தான் ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்று பொய் சொன்னபோது அதை சுமித்ரா ஒத்துப் பேசியது அவனுக்குக் கொஞ்சம் மிரட்சியாக இருந்தது. ஏதாவது ஒன்றைச் சொல்லி தன் மேல் அவளுக்கு அபரிமிதமான அன்பு இருப்பதைப் போலக் காட்ட முயற்சிக்கிறாள். அன்பு உருவாவது நல்ல விஷயம்தான். ஆனால் அது இயல்பாக உருவாக வேண்டும். இப்படி சந்தேகத்தில் உருவாவதை அவன் விரும்பவில்லை. மனைவியை எப்படிச் சமாளிப்பது என்று சிந்தித்தபடியே பாத்ரூமிற்குள் போனான் ரஞ்சன்.
 
அன்று இரவாகியும் மழை ஓயவில்லை. லேசாகத் தூறிய படியே இருந்தது. சுமித்ராவின் வீட்டிலிருந்து மதியம் வந்த உணவே நிறைய மீதமிருந்ததால் இருவரும் அதையே இரவும் உண்டார்கள். இரவு ஏற ஏற மனைவியின் கண்களில் தெரிந்த மின்னல் கணவனுக்கு சிந்தனையை மூட்டியது. கொஞ்சம் நடந்துவிட்டு வந்தால் மனதுக்கு நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. ஆனால் இயற்கை அதற்கு ஒத்துழைக்கவில்லை.
 
இரவுக் குளியலை முடித்துவிட்டு வந்தவனிடம் பாலை நீட்டினாள் மனைவி. மறுக்காமல் வாங்கிக் குடித்தவன் நிச்சயதார்த்த தினத்தன்று அவளைத் தான் எடுத்த புகைப்படங்களை லாப்டாப்பில் எடுத்தான். திரை முழுவதும் பட்டுப் புடவையில் முழு அலங்கார தேவதையாக சுமித்ராவே திகழ்ந்தாள்.
 
“சுமி, இங்க வா.” விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டுத் தங்கள் அறைக்குள் வந்து கொண்டிருந்தாள் மனைவி.
 
“என்ன ரஞ்சன்?”
 
“இந்த ஃபோட்டோஸ் ல ஒரு நாலஞ்சை செலக்ட் பண்ணிக் குடு.” கணவன் சொல்லவும் அப்போதுதான் மடிக்கணினியின் திரையைப் பார்த்தவள் மலைத்தாள்.
 
“ரொம்ப அழகா வந்திருக்கில்லை?! நான் கூட அழகா இருக்கேனே?!”
 
“நீ அழகில்லையா சுமி?” அவளை எட்ட நிறுத்தினாலும் அவன் குரலில் காதல் வழிந்தது.
 
“நான் அழகா இருக்கேனா?” 
 
“அதிலென்ன சந்தேகம் உனக்கு?”
 
“தெரியலை, நடக்கிறதையெல்லாம் பார்க்கும் போது அப்பிடியொரு சந்தேகமும் வருது எனக்கு.” பெண்ணின் குரல் அவனைக் கேலி பண்ணியது.
 
“அதெல்லாம் இருக்கட்டும், முதல்ல எனக்கு நல்லதா நாலு ஃபோட்டோ செலக்ட் பண்ணிக் குடுமா.” பேச்சை மாற்றினான் ஓவியன்.
 
“எதுக்கு ரஞ்சன்?”
 
“பாரீஸ் ல நடக்க இருக்கிற கண்காட்சிக்கு என்னோட ஒரு பெயின்ட்டிங் அனுப்பணும் சுமி.”
 
“ஓ…”
 
“இந்தத் தடவை நான் அதுக்கு என்ன வரையப்போறேன் தெரியுமா?” மனைவியை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்த ஓவியன் சரசமாகக் கேட்டான்.
 
“என்ன?” விடை தெரிந்த போதும் கேள்வி கேட்டாள் பெண்.
 
“பட்டுப் புடவையில அழகு தேவதையா இருக்கிற என்னோட சுமியைத்தான் வரையப் போறேன், இதுவரைக் காலமும் என்னோட கனவு தேவதையைத்தான் கற்பனையில வரைஞ்சேன், முதல் முறையா என்னோட மனைவியை வரையப்போறேன்.” 
 
“….”
 
“சுமி…” நாணத்தோடு தலைகுனிந்து நின்ற மனைவியை அழைத்தான் கணவன்.
 
“ம்…”
 
“நமக்கான வாழ்க்கை நீண்டு கிடக்குது, நம்ம மனசுலயும் காதல் பூத்துக் குலுங்குது.” கணவன் சம்பந்தமே இல்லாமல் பேசவும் சுமித்ரா யோசனையோடு அவனை அண்ணார்ந்து நோக்கினாள். 
 
“நம்ம வாழ்க்கையை நாம ஆரம்பிக்க எந்த அவசரமும் படவேணாம்னு எனக்குத் தோணுதுடா.”
 
“…..”
 
“உனக்கு அடுத்த மாசம் எக்ஸாம் இருக்கு, எனக்கு இந்த பெயின்ட்டிங்கை எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரமா முடிக்க வேண்டி இருக்கு, இந்த அவசரத்துல, இவ்வளவு நாளும் நான் கனவோட காத்திருந்த வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பலைடா.”
 
“….”
 
“சுமி, என்னை நீ புரிஞ்சுக்கிறே இல்லை?”
 
“புரியுது ரஞ்சன்.” முகம் முழுவதும் குழப்பம் நிறைந்திருந்தாலும் கணவனின் கோரிக்கைக்குத் தலையாட்டினாள் சுமித்ரா. மனைவியைத் தன் கை வளைவில் வைத்தபடியே தூங்கினான் ஓவியன்.