OVIYAPAAVAI-15

ஓவியம் 15
 
அன்றைக்கும் காலையில் கண்விழித்த ரஞ்சன் உடற்பயிற்சி செய்வதற்காக மைதானத்திற்கு வந்திருந்தான். விடிந்திருந்த போதும் மனம் என்னவோ நேற்றைய இரவிலேயே லயித்திருந்தது. தான் சொன்ன கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சட்டென்று தன் கை வளைவில் உறங்கிப் போன மனைவி அவனுக்கு விந்தையாகவே தெரிந்தாள்.
 
கண்ட நாள்முதலாக சுமித்ராவை அவன் நன்கறிவான். கற்பனையில் தான் கண்ட கனவு தேவதை நேரில் இல்லை என்பதை அவன் புரிந்து கொண்டான். கனவில் வந்த மங்கை அவன் ஆசைகள் அனைத்துக்கும் இசைந்து கொடுத்தாள். கை கோர்த்துக் களித்தாள். 
 
ஆனால் நிஜமோ வேறாக இருந்தது. அடாவடித்தனமாக அவன் ஆசைகளை அவள் மேல் திணித்தபோது வெகுண்டு சினந்தது. ஆரம்பத்தில் ஓவியனுக்கும் அது வெகு சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. ஆனால் என்றைக்கு அவள் தனது கடந்த காலத்தைக் கவலையோடு பகிர்ந்து கொண்டாளோ அன்றிலிருந்து அவன் வேறாகிப் போனான். 
 
அத்தனைத் தூரம் கடந்து போன கசப்பான நினைவுகளால் பாதிக்கப்பட்டிருந்தவள் நேற்றிரவு சட்டென்று தன் காதல் சொன்னபோது ரஞ்சனும் முதலில் மயங்கித்தான் போனான். ஆனால் காதல் என்றால் என்னவென்று அறிந்த அவன் மனது மனைவியின் நிலையைச் சட்டென்று புரிந்து கொண்டது. ஓவியன் ஒருசில நிமிடங்களில் தன்னை மீட்டுக் கொண்டான்.
 
சுமியோடு அவன் ஒரு வாழ்க்கை வாழவேண்டும். நாடி, நரம்பெங்கும் காதல் பரவ, ஒருவருக்குள் ஒருவர் உருகிக் கரைந்து, மரணிக்கும் போதும் மறைந்து போகாத காதலோடு அவளோடு ஒரு வாழ்க்கை அவன் வாழவேண்டும். அதற்கு… கனவில் அவன் கண்டு களித்த பெண்பாவை வேண்டும். மனம் நிறைய சஞ்சலத்தோடு கணவனைத் தன்னோடு தக்கவைத்துக் கொள்வதற்காகக் காதல் வேடம் போடும் இந்தப் பெண் அவனுக்குத் தேவையில்லை. அவளை முழுதாக அவன் மாற்ற வேண்டும். காதல் கொள்ளச் செய்ய வேண்டும்.
 
ஏதேதோ எண்ணங்களோடு வேகமான ஓட்டப் பயிற்சியை முடித்தவன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். சட்டென்று ஃபோன் சிணுங்கவும் எடுத்துப் பார்த்தான். அப்பா ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.
 
‘நலமாக வந்து சேர்ந்தோம், மிகவும் களைப்பாக இருப்பதால் நாளை தொடர்பு கொள்கிறேன், பாரீஸ் ஓவியத்தைக் காலதாமதம் செய்யாதே.’ என்றிருந்தது செய்தி. ரஞ்சன் சிரித்துக் கொண்டான். அப்பாவுக்கு எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் ஓவியம் சொன்ன நேரத்திற்கு முழுமைப் பெற்றிருக்க வேண்டும்.
 
“வீட்டுல உயிரோட இருக்கிற ஓவியம் இப்பிடி நாலு தடவை ஐ லவ் யூ சொன்னா நான் எப்பிடிப்பா சொன்ன தேதிக்கு வரைஞ்சு முடிக்கிறது?!” வாய்விட்டே புலம்பிய ஓவியன் வீட்டை நெருங்கி இருந்தான். என்னதான் ஆசைப்பட்ட வாழ்க்கை காதலோடு வேண்டும் என்று நினைத்தாலும் அவனும் சாதாரண மனிதன்தானே! நெருங்கி நெருங்கி வரும் மனைவியை முனிவன் போல எத்தனை நாளைக்குத்தான் அவனால் தள்ளி வைக்க முடியும்!
 
நேற்றிரவும் கை வளைவில் எழிலே உருவாக உறங்கிய மனைவியை அதிகாலையில் கண்விழித்தவன் பார்த்தபடியே அசையாமல் கிடந்தான். அவளால் மட்டுமே அவனுக்குள் உருவாக்க முடிந்த உணர்ச்சிகள் பேயாட்டம் ஆடின. ஆசை கொண்ட கணவனாய், ஒரு காளையாய் அவனை வெகு சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தியிருந்தான். ஆனால் இது எத்தனை நாட்களுக்கு?!
 
வீட்டுக்குள் நுழையும்போதே கலீரென்று எதுவோ உடையும் சத்தம் கேட்கவும் ரஞ்சன் திடுக்கிட்டுப் போனான். வீடும் திறந்துதான் கிடந்தது!
 
“சுமீ…” சத்தமாக மனைவியை அழைத்தவன் முதலில் கிச்சனை நோக்கித்தான் ஓடினான். திகைத்து விழித்தபடி நின்றிருந்த மனைவியைப் பார்த்த போதுதான் ரஞ்சனுக்கு ஆறுதலாக இருந்தது.
 
“என்னடா ஆச்சு?”
 
“ரஞ்சன், அது வந்து…” திணறிய மனைவியை விடுத்து நிலத்தைப் பார்த்தான். கண்ணாடி பிளேட் ஒன்று சிதறிக் கிடந்தது. 
 
“ஐயையோ! உனக்கு எங்கேயாவது அடிபட்டிடுச்சா?”
 
“இல்லை… ஆனா பிளேட்…” 
 
“சுமி சுமி…” கவனமாக மனைவியின் அருகில் போனவன் அவளை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான். 
 
“கவனமா வரணும் சுமி, கால்ல பட்டிடப் போகுது.”
 
“ம்…” தன்னோடு நெருங்கிய படி வந்தவளை சோஃபாவில் உட்கார வைத்தான் ரஞ்சன். 
 
“காலைக் காட்டு, எங்கேயாவது அடிபட்டிருக்கா?” சொன்னதோடு நிறுத்தாமல் மனைவியின் காலைச் சட்டென்று தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டான்.
 
“இல்லை… பரவாயில்லை, அதெல்லாம் ஒன்னுமில்லை ரஞ்சன்.” தடுமாறிய மனைவியின் முகத்தை அப்போதுதான் கவனித்தான் ஓவியன். தலைக்குக் குளித்திருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் திலங்க பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள். இப்போது இவன் பார்வைப் பார்த்து முகம் சிவந்து போனது.
 
“சுமி…” அவன் கைகள் இயல்பாக அந்த வெண்பளிங்குக் கால்களைத் தடவிக் கொடுத்தது. முழங்கால்களுக்கும் சற்றுக் கீழே இறங்கிய டைட் ஸ்கர்ட் அணிந்திருந்தவள் அவன் கைகளை அங்கேயே நிறுத்தினாள். தான் கோடு தாண்ட எத்தனிப்பதை ஓவியன் உணரவில்லை. 
 
“ரஞ்சன்… நான் கிச்சனை க்ளீன் பண்ணிட்டு வர்றேன்.” அவசரமாக எழுந்த மனைவியை நகரவிடாமல் தானும் எழுந்தவன் அவளைச் சட்டென்று இழுத்து அணைத்துக் கொண்டான். ஓவியன் இப்போது அவன்வசமில்லை! அவன் கனவுக்காரிகையின் கழுத்து வளைவில், கூந்தல் காட்டில் தன்னைத் தொலைத்தபடி இருந்தான். அடுத்து அவள் இதழ் ரசத்துக்காக அவன் நிமிர்ந்து நெருங்கிய போது,
 
“ரஞ்சன்!” என்றாள் பெண் திடுக்கிட்டுப் போய். நேற்றுக் காதல் சொல்லி, வாழ்க்கையை ஆரம்பிக்கத் தயாராக இருந்த பெண் இப்போது அந்த மனநிலையில் இல்லை. அந்தப் பரிதவித்த முகத்தில் ரஞ்சனுக்கு நிகழ்காலமும் அதில் தான் செய்து கொண்டிருக்கும் முட்டாள்தனமும் புரிந்தது. அப்போது ரஞ்சன் சின்னதாக ஒரு தவறு செய்தான். மனைவியைச் சட்டென்று விடுவித்து விட்டு பாத்ரூமிற்குள் போய் நின்றுவிட்டான்.
 
நடந்தது தவறென்றால் அதில் இருவருக்கும் பங்குண்டு. அன்றி நடந்தது சுகமான நிகழ்வென்றால் அதிலும் இருவருக்கும் பங்குண்டு. ஆனால் சுமித்ரா அனைத்துக்கும் ரஞ்சனையே பாத்திரமானவனாக நினைத்தாள். 
 
தான் எடுத்துக்கொண்ட சங்கல்பம் என்ன? இப்போது செய்து கொண்டிருக்கும் காரியம் என்ன என்று வெட்கித்த கணவன் அவசரமாக அவளை விட்டு நகர… அவன் தன்னை விட்டு விலகத் துடிப்பதாகப் பெண் புரிந்து கொண்டது. இருதலைக்கொள்ளி எறும்பாக அவன் துடிக்க, அழுத்தத்தில் புதைந்த பெண் மனதோ ஏதேதோ கற்பனைகளில் தன்னை ஆழ்த்திக் கொண்டது. 
 
***
இரண்டு நாட்கள் கடந்து போயிருந்தது. ரஞ்சன் தனது ட்ராயிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு பாரிஸுக்காக வரைய இருக்கும் படத்தின் ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டிருந்தான். வீடு இப்போது ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது.
இருவருக்குமான படுக்கையறை, சுமிக்கு படிப்பதற்கென்று தனியாக ஒரு அறை, ரஞ்சனின் ஓவிய அறை என்று வீடு தன்னை வகைபிரித்துக் கொண்டது.
 
வரைவது என்று உட்கார்ந்து விட்டால் ஓவியனுக்கு நேரம், காலம், பசி, தாகம் எதுவும் தெரியாது. ஆனால் அது முன்னொரு காலமோ என்று எண்ணும் வண்ணம் இப்போதெல்லாம் மனைவி அவனது கவனம் கலைத்தாள். பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்து கொள்ளும் மனைவியைப் பார்த்தும் பார்க்காதது போல இருப்பது அவனுக்குப் பெரிய சவாலாக இருந்தது. தன் கவனைத்தைக் கவரவே அவள் இத்தனையும் செய்கிறாள் என்று அந்த முட்டாள் ஓவியன் புரிந்து கொள்ளவில்லை.
 
ஓவியத்தில் கவனமாக இருந்த ரஞ்சனை அடுத்த அறையில் கேட்ட சத்தம் திடுக்கிட வைத்தது. பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால் சுமித்ரா இப்போதெல்லாம் அவளது படிக்கும் அறையில்தான் பெரும்பாலும் நேரம் செலவழித்தாள். கேட்ட சத்தம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவும் ரஞ்சன் எழுந்து போனான். உட்கார்ந்து படிக்கும் மேசை மேல் கைகள் இரண்டையும் ஊன்றியபடி நின்றிருந்தாள் சுமித்ரா. நிலத்தில் சில பொருட்கள் சிதறிக் கிடந்தன.
 
“சுமி… என்னாச்சு?” சிதறிக் கிடந்த பொருட்களைப் பார்த்தபடி கேட்டான் ஓவியன். ஏதோ பாடத்தோடு சம்பந்தமான படங்கள் வரைந்து கொண்டிருந்திருப்பாள் போலும்.
 
“ரஞ்சன்… எனக்கு இந்தப் படம் வரைய வரமாட்டேங்குது.”
 
“இன்னொரு தரம் ட்ர்ரை பண்ணுடா, உன்னால கண்டிப்பா முடியும்.”
 
“இல்லை… லாஸ்ட் வீக் இதே படத்தை நான் சரியா வரைஞ்சேன்.”
 
“அப்புறமென்ன? மறந்திருப்பே, திரும்பப் பண்ணு, வந்திரும்.”
 
“இன்னைக்கு நாலஞ்சு தடவை முயற்சி செஞ்சு பார்த்துட்டேன், எவ்வளவு திங்க் பண்ணியும் என்னால எதையும் ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியலை.” பேசும் போதே கண்களில் நீர் திரண்டது.
 
“ஓ… எக்ஸாம் டென்ஷன் கூடிருச்சு உனக்கு, அதான் மூளை ஒன்னையும் சப்போர்ட் பண்ண மாட்டேங்குது, வெளியே கொஞ்ச நேரம் போயிட்டு வரலாம் சுமி, வா.” அவன் அழைக்கவும் தலையை ஆட்டியது பெண். ஆனால் முகத்தில் அத்தனைக் குழப்பம். 
 
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தர்றேன்.”
 
“ம்… ஆனா பத்து நிமிஷந்தான், ஓகே?”
 
“ம்…” தலையை ஆட்டியபடி உள்ளே போகும் பெண்ணையே பார்த்திருந்தான் ரஞ்சன். எதுவோ சரியில்லை என்று மனது சொன்னது. இந்த இரண்டு நாட்களில் வீட்டில் சில பொருட்கள் உடைந்து போயின. தவறுதலாக நடந்த விஷயம் என்றுதான் அவனும் நினைத்திருந்தான். ஆனால் அது அப்படி இல்லையோ என்று இப்போது தோன்றியது.
 
தனது சந்தேகம்தான் எல்லை மீறிப் போகிறதோ என்று ஒரு கணம் நினைத்தவன் இல்லை என்றே உணர்ந்தான். ஏனென்றால் சுமித்ரா அவள் பாடங்களில் மிகவும் கெட்டிக்காரி. ஏற்கனவே வரைந்த படத்தை மறந்து போகும் அளவிற்கு அவள் படிப்பு சுமாரானதல்ல. அது அவனுக்கு நன்றாகவே தெரியும். மஞ்சுளாவுக்கு தன் நாத்தனாரின் பெருமைப் பேசவே அவ்வளவு நேரம் தேவைப்படுமே!
 
“சும்மாச் சொல்லப்படாது தம்பி, சுமி கணக்குல புலி!” இப்படி எத்தனை முறை சொல்லி மாய்ந்திருப்பார்! எதுவோ சரியில்லை.
 
“ரஞ்சன்! என்னோட ரெட் டாப்பை பார்த்தீங்களா?” மனைவி உள்ளிருந்து குரல் கொடுக்க ரஞ்சன் சட்டென்று கலைந்தான்.
 
“ரஞ்சன்!” மீண்டும் அவள் குரல்.
 
“இதோ வர்றேன் சுமி.” குரல் கொடுத்தபடியே உள்ளே போனான். தனது கர்போர்ட்டை திறந்து வைத்துக்கொண்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
 
“என்ன சுமி?”
 
“என்னோட ரெட் டாப்பை காணலையே? நேத்து இங்கதானே வெச்சேன்?”
 
“சரிம்மா, அதைக் காணலைன்னா வேற ஏதாவது டாப்பை போட்டுக்கோ.”
 
“இல்லை ரஞ்சன்… எனக்கு இப்போ அதுதான் வேணும்.” புதிதாகப் பிடிவாதம் பிடித்த மனைவியை வினோதமாகப் பார்த்தான் ரஞ்சன்.
 
“இப்பிடி என்னோட முகத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கிற நேரத்துக்குக் கொஞ்சம் நீங்களும் தேடலாமில்லை?” உரிமையோடு அவள் கடிந்துகொள்ள கப்போர்ட்டை நன்றாகத் திறந்து வைத்துவிட்டு ரஞ்சனும் தேட ஆரம்பித்தான்.
 
“நேத்து இங்கதான் வெச்சேன் ரஞ்சன்.”
 
“அப்ப எங்கடீ போச்சுது?!”
 
“அதான் தெரியலை, நீங்க கூட அன்னைக்கு அந்த டாப் எனக்கு ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னீங்களே?”
 
“ஓ… அதுவா?” என்றவன் சட்டென்று பேச்சை நிறுத்தினான். இன்று காலையில் தான் தனக்கு டீஷர்ட் தேடும் போது எதுவோ சிவப்புக்கலர் ஆடையொன்று கண்ணில் பட்டது ஞாபகம் வந்தது. 
 
“கொஞ்சம் பொறு சுமி.” சொல்லிவிட்டுத் தனது கப்போர்ட்டை திறந்தான் ரஞ்சன். சிவப்பு நிற டாப் அங்கே உட்கார்ந்திருந்தது. 
 
“இதுவா சுமி?” அவன் எடுத்துக் காட்ட,
 
“அட ஆமா! இது எப்பிடி அங்க வந்திச்சு?” என்றாள் பெண் வியந்தபடி.
 
“நல்லாப்பாரு, டாப்புக்கு கால் முளைச்சிருக்கோ என்னவோ?!”
 
“சரி சரி, போதும் கேலி, போய் கார்ல உட்காருங்க, இதோ வந்திடுறேன்.” அவள் முறைத்துக்கொண்டே சொல்ல சிரித்த ரஞ்சன் வெளியே வந்து காரை ஸ்டார்ட் செய்தான். சற்று நேரத்தில் அவளும் வந்துவிட அந்த ப்ளாக் ஆடி சுகமான இளங்காற்றில் மலைமேலே ஏறியது. ட்ரைவ் பண்ணும் போது சுகமான பாடல்கள் கேட்பது அவன் வழக்கம். சுமித்ராவுக்கு ஆங்கிலப் பாடல்கள் அத்தனைப் பரிட்சயம் இல்லாததால் இப்போதெல்லாம் தமிழ் பாடல்களுக்கு அடிமையாகிப் போனான் ஓவியன். மனைவியும் அந்தப் பாடல்களை அவனோடு சேர்ந்து ரசிக்கும் போது அவனுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
 
“சுமி…” பாடல் ஒன்றை ஒலிக்க விட்டவன் அதைப்பற்றி ஏதோ பேச வாயெடுத்து மனைவியைத் திரும்பிப் பார்த்தான். இமை மூடி சீட்டில் சாய்ந்திருந்தாள். நெற்றியில் நரம்பொன்று புடைத்திருந்தது. 
 
இயற்கை சுற்றிவர அத்தனை ரம்மியமாக இருந்தது. மலைப்பாதையில் அந்த ப்ளாக் ஆடி வளைந்து வளைந்து ஏறிக்கொண்டிருக்க, சுற்றிவர பச்சைப் பசேலென்ற தேயிலைத் தோட்டம். தூரத்தே தெரிந்த மலைச் சரிவுகளில் வெள்ளியோடையாய் பாலருவிகள். கார் செல்லும் பாதையின் மருங்கில் சில இடங்களில் சின்னஞ் சிறிய நீரோடைகள். பாலருவிகளின் மிச்சம் மீதிபோல சாலையோரத்தில் சலசலத்தன. 
 
இத்தனை இயற்கை அழகு அவர்களைப் புடைசூழ்ந்திருக்க கண்மூடி அமர்ந்திருக்கும் மனைவி அவனுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணினாள். இன்னும் கொஞ்ச தூரம் காரை செலுத்திய ரஞ்சன் ஓரிடத்தில் பார்க் செய்தான். அப்போதும் அமைதியாக அமர்ந்திருந்தவளின் தோள் தொட்டான் கணவன்.
 
“சுமி…” 
 
“ம்…” ஒரு அயர்வோடு கண்விழித்தாள் பெண்.
 
“என்னாச்சு டா.”
 
“ஒன்னுமில்லையே.”
 
“அப்போ கொஞ்ச தூரம் இறங்கி நடக்கலாமா?”
 
“ம்…” தலையாட்டியவளின் புறமாக வந்தவன் கார் கதவைத் திறந்துவிட்டான். ஒருவித சோர்வோடு இறங்கியவள்,
 
“ரஞ்சன்.” என்றழைத்தாள்.
 
“என்ன சுமி?” 
 
“எனக்கு ரொம்ப டயர்டான மாதிரி இருக்கு.”
 
“மூளைக்கு ரொம்ப வேலை குடுத்தா அப்பிடித்தான், எங்களை மாதிரி சாதாரண மனுஷங்களுக்கு இந்தப் பிரச்சினை எல்லாம் வராது, கணித மேதைகளுக்குத்தான் இப்பிடியெல்லாம் வரும்.” அவளைக் கலாய்த்தவன் தோளோடு பெண்ணை அணைத்துக் கொண்டான்.
 
“படிப்பு முக்கியந்தான் சுமி, அதுக்காகப் படிப்பு மட்டுந்தான் வாழ்க்கைன்னு நினைக்கப்படாது, எப்பப்பாரு உன்னோட ஸ்டடீஸ் பத்தின நினைப்புத்தான் உனக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு, அது நல்லதில்லைடா.”
 
“ம்…” கணவனின் தோள் இதமாய் சுகமாய் இருக்க அங்கேயே தலை சாய்த்திருந்தாள் சுமித்ரா. கொஞ்ச நேரம் அந்த இடத்தை வலம் வந்தவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். ரஞ்சன் காரை சுமித்ராவின் பிறந்த வீட்டுக்கு ஓட்டினான்.
 
“வீட்டுக்குப் போறோமா?” மனைவியின் ஆவலான குரலில் ரஞ்சன் சிரித்தான்.
 
“என்னமோ மாசக்கணக்குல பார்க்காத மாதிரி… நடிப்புத்தான்.”
 
“அப்பிடி இல்லை…” 
 
“சுமி, எனக்குக் கொஞ்சம் ப்ரஷ் வாங்க வேண்டி இருக்கு, வாங்கிக்கிட்டு வந்திடுறேன், நீ அக்காக்கிட்டச் சொல்லிடு.”
 
“சரிங்க, லேட்டாகுமா?”
 
“இல்லைடா, கடை பக்கத்துலதானே இருக்கு, இதோ வந்தர்றேன்.”
 
“ம்… சரி.” தலையாட்டிய படி மனைவி உள்ளே போக ரஞ்சன் காரை திருப்பினான். ஆனால் அவன் கடைக்குப் போகவில்லை. காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு லலித்தை அழைத்தான். சட்டென்று தொடர்புக்கு வந்தான் லலித்.
 
“சொல்லுங்க ரஞ்சன், எப்பிடிப் போகுது லைஃப்?”
 
“லலித்… நீங்க எனக்கொரு ஹெல்ப் பண்ணணுமே.”
 
“சொல்லுங்க, பண்ணிடுவோம்.”
 
“எனக்கு நல்ல ஒரு ஃபேமஸ் சைக்கியாட்ரிஸ்ட்டோட அப்பொயின்ட்மென்ட் வேணும்.” ரஞ்சன் சொல்லி முடித்த போது லலித் திடுக்கிட்டுப் போனான். புதிதாகத் திருமணம் செய்தவன் பார்க்க வேண்டிய டாக்டர் இதுவல்லவே! 
 
“ரஞ்சன்!”
 
“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா நான் டாக்டரை பார்க்கணும் லலித்.”
 
“கொழும்புக்கு உங்களால வர முடியுமா? இல்லை கண்டியில…”
 
“இல்லையில்லை… இப்போதைக்கு இது நமக்குள்ள இருக்கட்டும், நான் கொழும்புக்கே வர்றேன்.”
 
“அப்ப ஓகே, நான் புக் பண்ணிட்டு உங்களுக்குத் தகவல் சொல்றேன்.”
 
“ரொம்ப தேங்க்ஸ் லலித்.”
 
“அடிதான் வாங்கப் போறீங்க.” சிரித்த படி அழைப்பைத் துண்டித்த இருவரது முகமும் யோசனையில் ஆழ்ந்து போனது. ரஞ்சனுக்கு மனைவியின் மனநிலை ஓரளவு பிடிபட்டது. அதை டாக்டர் உறுதிப்படுத்தட்டும் என்று தன்னையே சமாதானம் செய்தான். மனது கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.