OVOV 43

OVOV 43

  (Nr.6 M24,ரெமிங்டன் மாடல் 700 –  இந்த ஆயுதம் அமெரிக்க இராணுவத்தின் முதன்மை ஸ்னைப்பர் ரைபிள் ஆகும். இது 1980 களில் ஸ்பிரிங்ஃபீல்ட் ஆர்மரி எம் 21 ஐ  1988 இல் களமிறக்கப்பட்டது. அந்த துப்பாக்கி குண்டுகள் .300 செஸ்டர் மேக்நம் வகை புல்லட்.  –ஆள் காட்டி விரலையும்,கட்டை விரலையும் விரித்தால்,எந்த அளவிற்கு பெரிதாய் நீளுமோ அந்த அளவிற்கு பெரிய புல்லட்)   

மறுநாள்….

அர்ஜுன் குடும்பத்தோடு,மற்றவர்களையும் ரஞ்சித் ஹோட்டல் அர்ரெஸ்ட் செய்த மறுநாள் மதியம், அந்த கார் வெகு வேகமாக அமிர்தசரஸ்  மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தது. முன்னே பின்னே சைரன் வைத்த கார்கள் அணிவகுத்து வழி ஏற்படுத்தி செல்ல, அந்த காரை பேய்த்தனமாய் ஒட்டி கொண்டிருந்தான் அர்ஜுன்.

அவன் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.அடிக்கடி பின்னால் திரும்ப பார்த்து கொண்டே இவன் காரை இயக்கி கொண்டிருந்தான்.

அசுர வேகம்,வாயு வேகம்,மன வேகம் என்ற பதத்திற்கு எல்லாம் அர்த்தம் கூறுவதை போல் வில்லில் இருந்து புறப்படும் அம்பானது எந்த அளவிற்கு  விசையுடன் செல்லுமோ அந்த வேகத்திற்கு காரை இயக்கி கொண்டிருந்தான் அர்ஜுன்.

அர்ஜுன் இயக்கி கொண்டிருந்த,அந்த போலீஸ் கார் அமிர்தசரஸ் circuit இல்லம்  அழைக்கப்படும் அரசாங்க அதிகாரிகள் தங்கும் இல்லத்திலிருந்து கிளம்பியிருந்தது.

அதன் இலக்கு  அந்த இல்லத்திலிருந்து ரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ‘ஹர்மின்தர் சாஹிப்’ என்று அழைக்கப்படும் பொற்கோயிலுக்கு அருகே இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் ‘ஜாலியன்வாலா பாக் தியாகிகள் நினைவு மருத்துவமனை.’

அந்த மருத்துவமனையை அடைய தான் அவ்வளவு வேகமாய் காரை இயக்கி கொண்டிருந்தான் அர்ஜுன். அந்த ரெண்டிற்கும் அதிகமான கிலோமீட்டரை கடக்க ஆறில் இருந்து பத்து நிமிடங்கள் போக்குவரத்து மாற்றத்தை பொறுத்து பிடிக்கும் என்றாலும் அதை மூன்றிற்கும் குறைவான நிமிடத்தில் அடைய ப்ரமப்ரயத்தனம் செய்து கொண்டிருந்தான்,அவன் கைகளில் ஒரு உயிர் ஊசல் ஆடி கொண்டிருப்பதால்

அர்ஜுனின் இந்த வேகத்திற்கு காரணம் அவன் காப்பாற்ற வேண்டிய உயிர் -ப்ரீத்தியின் உயிர்.

காரினுள் அமன்ஜீத் ப்ரீத்தியை மடி தாங்கி இருக்க,யோஜித் தேவையான முதலுதவிகளை செய்து கொண்டிருக்க, தோளிலும், மார்பிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து மயங்கிய நிலையில் இருந்தாள் ப்ரீத்தி.

கடைசியில் காபோஸ் ஜெயித்து இருந்தான்.அவன் சாம்ராஜ்யம் சரிய யார் காரணமோ அதில் ஒருவரை அவன் ஆட்கள் சுட்டு இருந்தார்கள்.

ரஞ்சித்தின் பலத்த காவலையும் மீறி,இது நடந்திருந்தாலும் ப்ரீத்தி உடனே தப்பித்து  இருக்க முடியும்.ஆனால் அர்ஜுனோஇல்லை அம்னஜீத்தோ,இல்லை இருவருமோ இறந்திருக்க கூடும்.

அர்ஜுன்,அமன் உடன் சிரித்து பேசியவாறு வெளியே வந்து கொண்டிருந்த ப்ரீத்தியின் கவனத்தை கவர்ந்தது ஒளிச்சிதறல். அது வந்து கொண்டிருந்த ஆங்கில்  தான் இவளை கவனத்தை முதலில் கவர்ந்தது. இவர்கள் வந்து கொண்டு இருந்த  இடத்தின் நேர் எதிர் இருந்த கட்டிடத்தில் இருந்து விடாமல் அந்த ஒளிச்சிதறல் வந்து கொண்ட இருக்க,அதை கவனித்து பார்க்க ப்ரீத்தி நடை தேங்கியது.

என்ன என்ற குழப்பத்துடன் நின்றவளின்  மூளை ‘ ஒரு டெலஸ்கோப் லென்ஸ் மேல்படும்  சூரிய கதிரின் ஒளி பிரதிபலிக்கிறது ,அந்த துப்பாக்கியை ஏந்தி ஒருவன் குறி வைத்து கொண்டிருக்கிறான்’ என்பதை தெளிவு படுத்த, முன்னே சென்று கொண்டிருப்பவர்களை நோக்கி எடுத்தாள் ஓட்டம்.

கடைசி நொடியில் அந்த ரைபிளின் டெலஸ்கோப் சூரிய கதிர் பட்டு மின்ன அர்ஜுன்,அமன் உயிர்க்கு ஆபத்து என்று ரஞ்சித் கொடுத்திருந்த வார்னிங் நினைவுக்கு வர, அவர்கள் இருவரையும் காப்பாற்ற தன் மேல் புல்லட் தாங்கி இருந்தாள் ப்ரீத்தி.

ரஞ்சித் அவசர போன் அழைப்பை ஏற்று சற்று தள்ளி நின்று பேசி கொண்டிருக்க அவனிடம் சொல்லவோ, உதவிக்கு ஆட்களை அழைக்கவோ முடியாத கடைசி நிமிடம். அர்ஜுன்,அமன் இருவரின் உயிரையும் குடிக்க காபோஸ் குறி வைத்து விட்டான்  என்பது கடைசி நொடியில் புரிய,ப்ரீத்தி தன் முன்னே சென்று கொண்டிருந்த அர்ஜுன்,அமன் இருவரையும் பலம் கொண்ட மட்டும் கீழே தள்ளி இருந்தாள்.

அர்ஜுன்,அமனை  தள்ளிய வேகத்திற்கு அவர்கள் எங்கே நின்று இருந்தார்களோ அந்தஇடத்திற்க்கு புவிஈர்ப்பு விசையால் ப்ரீத்தி வந்து நிற்கவும் ரெண்டு துப்பாக்கி குண்டுகள் அவள் உடலை துளைக்கவும் மிக சரியாய் இருந்தது.

“ரஞ்சித்….அங்கே அர்ஜுனையும்,அமன்ஜீத்தையும் டார்கெட் செய்துட்டாங்க.ஸ்னைப்பர் ஷாட்…..சேவ் தேம்.” என்று எதிர்முனையில் இருந்து ஒரு குரல் அலறவும்,அது கொடுத்த தகவல் கேட்டு, ஒரு கணம் திகைத்து ரஞ்சித் ரியாக்ட் ஆவதற்குள் அங்கு துப்பாக்கி குண்டுகள் வெடித்து இருக்க, ப்ரீத்தி கீழே சரிந்திருந்தாள் ரத்த வெள்ளத்தில்.

ஸ்னைப்பர் ரைபிள்/sniper rifle எனப்படும் Nr.6 M24,ரெமிங்டன் மாடல் 700 துப்பாக்கி , 1000 மீட்டருக்கு அப்பால்  கூட குறிவைத்து வெற்றிகரமாக சுடும் அளவிற்கு ஆற்றல் கொண்ட அந்த துப்பாக்கி குண்டுகளை பொழிந்து ப்ரீத்தி உயிரை மெல்ல எடுத்து கொண்டிருந்தது.

.300 செஸ்டர் மேக்நம் வகை பெரிய புல்லட்  ரெண்டு குண்டுகள் ப்ரீத்தியின் உடலில் மிக முக்கிய அர்டேரி எனப்படும் ரத்த நாளத்தை சிதைத்து இருந்தது.

மயிரிழையில் உயிர் தப்பி, என்ன ஆனது என்று புரியாமல் ஒரு அர்ஜுனும், அமன்னும் சுதாரிப்பதற்குள் ரத்த வெள்ளத்தில் கீழே உயிருக்கு போராடி கொண்டிருந்தாள் ப்ரீத்தி.

அதன் பிறகு துப்பாக்கி குண்டுகள் முழங்கின,அலறல் சப்தம் வானை எட்டியது. ஒரு சில நொடிகளில் அந்த இடம் போர்களமாகி போனது. காற்றில் எங்கும் கந்தக வாசனையும், ரத்த வாடையும் அடிக்க ஆரம்பித்தது.

“அர்ஜுன் கெட் அவுட் …”என்று ரஞ்சித் பெருங்குரல் எடுத்து கத்த,

“அவ அங்கே …”என்று பதிலுக்கு கத்திய அர்ஜுனை,”கெட் இன் அர்ஜுன்….நான் தூக்கி வரேன்…காரை ஸ்டார்ட் செய்.”என்று அலறினான் அமன்ஜீத்.

போலீஸாரின் துப்பாக்கி முழக்கம் ஒரு புறம்,அங்கு கூடி இருந்த மக்களின் அலறல் ஒருபுறம், ரஞ்சித் மற்றும் அவன் ஆட்களின் துப்பாக்கி தோட்டா பாய்ந்து, எதிர் கட்டிட மாடியில் இருந்து விழுந்தவனின் உயிர் போகும் அலறல் ஒருபுறம்  என்று ஒரு மினி கலவர பூமியாய் இருந்தது அந்த இடம்.

முன்னே இருந்த காரில் பாய்ந்து ஏறினான் அர்ஜுன்.ப்ரீத்தியை தூக்கி கொண்டு அமன்ஜீத் பின்னால் ஏற,யோஜித் கடைசி நொடியில் பாய்ந்து உள்ளே ஏறினான்.

ப்ரீத்தி சுடப்பட்டது முதலமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் அரசாங்க அதிகாரிகள் வந்து தங்கும் அமிர்தசரஸ் circuit இல்லத்தின் முன்பு.  ‘விருந்து அளித்து கௌரவிக்க’ என்று முதலமைச்சரின் அழைப்பின் பேரில் அமிர்தசரஸ் circuit இல்லத்திற்கு தான் ப்ரீத்தி,ஜெஸ்ஸி,அர்ஜுன்,அமன் ,யோஜித் எல்லாம் அன்று காலை வந்திருந்தனர்.

ஏதாவது ஆபத்து என்றால் முதலுதவி அளிக்க டாக்டர் தேவை என்று ரஞ்சித் சொல்லியிருக்க, யோஜித் அவர்களுடன் வந்திருந்தான்.அப்படி அவன் வந்ததும் ஒரு விதத்தில் நல்லதாய் தான் போனது. மெல்ல உயிர் பிரிந்து கொண்டிருந்த ப்ரீத்தியின் உயிரை காக்க போராடி கொண்டிருந்தான் யோஜித்.

முதல் ஹார்ட் அட்டாக் வந்து பிழைத்து  இருந்ததில் மனைவியுடன் தர்மா பொற்கோயிலுக்கு வந்திருந்தார்.அவருடன் ப்ரீத்தி, அர்ஜுன், ஜெஸ்ஸி,அமன்,குருதேவ் தங்கள் பிராத்தனையை செலுத்தி, விருந்தினர் மாளிகையில் தடபுடலாய் ஏற்பாடு ஆகியிருந்த விருந்தில் மனநிறைவோடு கலந்து கொண்டார்கள்.விருந்து முடிந்து ஒரு அரை மணி நேரம் சிரித்து பேசி என்று எல்லாமே மிகவும் நன்றாய் தான் சென்று கொண்டிருந்தது.

முதலமைச்சார் பொற்கோயிலுக்கு வருகிறார் என்ற தகவல் எப்படியோ கிடைத்து அங்கு குழுமியிருந்தனர் மீடியா.அது அர்ஜுனையும் ப்ரீத்தியையும் கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து என்ற தகவல் கிடைத்ததும் அது பிளாஷ் நியூஸ் ஆகி போனது.

விருந்து பிளாஷ் நியூஸாக, காபோஸ் ஆட்களுக்கு இவர்கள் இருக்கும் இடத்தை காட்டி கொடுத்தது போல் ஆக, தக்க சமயம் பார்த்து காத்திருந்தார்கள். சமயம் வந்ததும் போதை மருந்து குழுக்களின் அதி சக்தி வாய்ந்த ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்று அர்ஜுன்,அமன் உயிரை குடிக்க உயிர்த்தெழ அதை கேடயமாய்  மாறி தடுத்திருந்தாள் ப்ரீத்தி.

பஞ்சாபின் முக்கிய நியூஸ் சேனல்கள் லைவ் ரிலேவாக ப்ரீத்தி சுடப்பட்டதை பிளாஷ் நியூஸாக ஒட்டியது. அரசாங்கம் அந்த ஒளிபரப்பை நிறுத்த சொல்வதற்குள் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்த ‘லைவ் துப்பாக்கி சூடு’ சம்பவம் ஒளிபரப்பாகி விட்டு இருந்தது.

“யாஷ்வி உயிரை காப்பாற்றிய ப்ரீத்தி, முதலமைச்சரின் கெஸ்ட் ஹவுஸ் வாயிலின் முன் சுடப்பட்டார்.அவர் பிழைப்பாரா …?பதிலுக்கு காத்திருங்கள் “என்று பிளாஷ் நியூஸ் ஓடியது.

அதை அம்ரிஸ்டர் விமான நிலையத்தில் பார்த்த மிருதுளா, “ஐயோ ப்ரீத்தி”என்று கத்தியவாறே மயங்கி சரிந்தார்.

“சீக்கிரம் போ அர்ஜுன்..ஆபரேஷன் செய்யவில்லை என்றால் உயிரை காப்பாற்ற முடியாது.இப்பவே ரத்த சேதாரம் அதிகமாய் இருக்கு.போ …போ பல்ஸ் ரொம்ப வீக்காகிட்டு போகுது அர்ஜுன்….போ “என்று அலறினான் டாக்டர் யோஜித்.

“பைத்தியக்காரி….உன் உயிரை கொடுத்து தான் எங்களை நீ காப்பாற்ற வேண்டுமா?ஐயோ …உனக்கு ஏதாவது ஒன்று ஆச்சுன்னா என்னடீ செய்வேன்? கண்ணை திறடி….உன்னை கழுத்தை நெரித்து நானே கொன்னுடுவேன்….கண்ணை மூடாதே ….இன்னும் டு மினிட்ஸ் மா …..ப்ளீஸ் பைட் ….ப்ளீஸ் ” என்று வாய் விட்டே கதறினான் அர்ஜுன்.

அமன்ஜீத் உறைந்து போனவனாய்,”பேபி …..பேபி …உனக்கு ஒன்றும் இல்லை பேபி….உனக்கு ஒன்றும் ஆக விட மாட்டேன் பேபி…..”என்று இடைவிடாமல் கூறி கொண்டே இருந்தான்.

முதலமைச்சர் விருந்து என்றதும் மிக ஆடம்பரமாய் அவர்கள் அணிந்து வந்திருந்த அந்த விலை உயர்ந்த ஷெர்வானி,காக்ரா சோலி எல்லாம் வெள்ளை நிறத்திலிருந்து அடர் சிவப்பு நிறமாய் ப்ரீத்தியின் ரத்தத்தில் மாறி இருந்தது.ரத்த குளியல் போல் ப்ரீத்தியின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த வேகத்திற்கு,அருகே இருந்த அர்ஜுன்,அமன் இருவரின் முகத்திலும் ப்ரீத்தியின் ரத்தம் தெளித்திருந்தது.

அவள் முகத்தில் தனக்கு உயிரானவர்களை காப்பாற்றி விட்ட நிம்மதியும்,புன்முறுவலும் ஒருங்கே எழ,  தன் மேல் உயிரை வைத்திருக்கும் இருவரின் குரல் கேட்டாலும் எதையும் சொல்லவோ, செய்யவோ இயலாதவளாய், நினைவுகள் மங்க தன்னை சூழ்ந்த அந்தகாரத்தில் தன்னை இழக்க ஆரம்பித்தாள் ப்ரீத்தி.

“பேபி……….”என்று அர்ஜுன்,அமன் இருவரின் குரலும் உட்சபட்சமாய் அலறியது.

நேற்று…

ஹோட்டல் ‘TULIP INN’னில் அர்ஜுன் குடும்பத்தை பலத்த காவலுடன் வைத்திருந்தான் ரஞ்சித்.

ப்ரீத்தி  ரஞ்சித்திடம் அன்யா மரணம் பற்றி சந்தேகம் எழுப்பி விட்டு , டெல்லியில் உள்ளவர்களை தலையை பிய்த்து கொள்ள வைத்து,மக்கள் நம்பவைக்கப்படுவது போல் எல்லா மரணங்களும் விபத்தோ, தற்கொலையோ,தீவிரவாத தாக்குதலோ இல்லை என்று நம்பும் படியாக சந்தேகங்களை எழுப்பி இருந்தாள் ப்ரீத்தி.

டெல்லியில் டாக்டர் மயூரிஹரிபிரசாத் இடம் ரிப்போர்ட்களை கேட்டு எல்லோரையும் ஒரு வழி ஆக்கி இருந்தாள் என்று சொன்னால் மிகையல்ல.

மயூரியிடம் ரெகார்ட் கேட்டு ,டெல்லி அழைப்பை துண்டித்து விட்டு, அவள் பேசுவதை அதுவரை மறைந்திருந்து ஒட்டு கேட்டு கொண்டிருந்த நபரின்  நடவடிக்கைகளை கண்டு சிரித்தவாறு ஹாலுக்கு வந்து அமர்ந்தாள் ப்ரீத்தி.

ப்ரீத்தியின் பேச்சை ஒட்டு கேட்ட நபரும்,அவர் தான் கேட்ட விவரத்தை வெகு வேகமாய் சென்று அந்த ஹாலில் இன்னும் இருவரிடம் பதட்டத்துடன் சொல்வதும், ப்ரீத்தியின் கண்களுக்கு தப்பவில்லை. அவர்களின் ரியாக்ஷன்  மூலமாகவே அவர்கள் தங்களை காட்டி கொடுத்து கொண்டிருந்தார்கள்.ப்ரீத்தியும் இவர்களை கண்டும் காணாதது போல் ஜெஸ்ஸியுடனும்,ரஞ்சித் உடனும் பேசி சிரித்து கொண்டு அவர்களை டென்ஷன் ஏற்றி கொண்டு இருந்தாள்.

‘யாரு கிட்ட ….திருநெல்வேலிக்கே ஹல்வாவா ?நாங்களே மத்தவங்களுக்கு ஸ்பெஷல்லா கிண்டி கொடுக்கும் ஆளு…. எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னு இப்படியா பதறி,ரியாக்ஷன் காட்டுவீங்க?பல நாள் திருடன் …இல்லையே திருட்டு கூட்டம் இல்லையே… இவங்க திருடங்க இல்லையே ….என்ன சொல்வது ….இல்லுசனிஸ்ட்?இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் மாற்றி இருக்கும் மேஜிசியன்ஸ்….?உங்க குட்டு வெளிப்பட்டு தானே ஆக வேண்டும்.?’என்று எண்ணி கொண்ட ப்ரீத்தி, சிரித்து பேசியே அவர்களின் பிபியை ஏற்றி கொண்டிருந்தாள்.

அது தான் அவளுக்கு கை வந்த கலை ஆயிற்றே.ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தானாம். இங்கே அவர்கள் பதட்டத்தில், அடுத்து என்ன என்ற பயத்தில் திணறி தவித்து கொண்டிருக்க, இந்த நவயுக நீரோவின் பெண்பால், பாதம்கீரை சுவைத்து,ரசித்து,சப்பு கொட்டி குடித்து கொண்டிருந்தது.

ப்ரீத்தி எழுப்பிய சந்தேகத்தை எல்லாம்  ஜெஸ்ஸி மொழி பெயர்த்திருந்தாள் அர்ஜுன் குடும்பத்திற்கு. இப்படி எல்லாம் ஒரு ஆங்கில் இருக்கும்,இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு என்று அவர்கள் எண்ணியது இல்லை.ப்ரீத்தியை புகழ ஆரம்பித்தார்கள். அதுவே அங்கு சில உண்மைகள் வெளிவர காரணமாய் இருந்து பலருக்கு தலைவலியை உண்டாக்கியது.முக்கியமாய்  அமர்நாத்துக்கு.

“எப்படி இப்படி எல்லாம் உன்னால் யோசிக்க முடியுது?. சாதாரண பெண்கள்நினைத்தால் குடும்ப வாழ்வில் இருந்து கொண்ட எதையும் சாதிக்க முடியும்,மற்றவர்களுக்கு வழி காட்ட முடியும் என்று  நிரூபித்து இருக்கிறாய் மகளே. எந்த சூழ்நிலை வந்தாலும் தேவை யோசித்து எடுக்கும் முடிவு.எதற்கும் கலங்காத திட சித்தம். வைராக்கியம்.மன துணிவு மட்டும் இருந்து விட்டால் போதும் என்று எங்களுக்கு பாடமே எடுத்திருக்கிறாய் மகளே.”என்றார் வீரேந்தர்.

“சரியா சொன்னீங்க அண்ணா.ஒருத்தர் உடல் மொழியை வைத்து, அவர்கள் நடவடிக்கையை வைத்து அவர் நல்லவரா,கெட்டவரா,அவர் செய்கை யாருக்காவது பாதிப்பை ஏற்படுத்த போகிறதா என்று எண்ணி பார்த்து,சரியான முடிவு எடுக்கவும் கிரிட்டிக்கல் தின்கிங் தேவை தான். வெளியே செல்லும் பெண்களுக்கு இந்த ஹை லெவல் அவார்நெஸ் தேவை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறாய். எங்கு சென்றாலும் போனிற்குள் நெருப்பு கோழி போல் தலையை புதைத்து கொள்ளாமல் கண்கள் நான்குபுறமும் எச்சரிக்கையுடன் அலச வேண்டிய அவசியம் சில சமயங்களில் பல உயிர்களை காக்க எப்படி எல்லாம் உதவும் என்று புரிந்து இருக்கிறது.“என்றார் யதுவீர் பெருமையுடன்,அவர் மருமகள் ஆயிற்றே.கைகள் மீசையை பெருமையுடன் வருடியது.

“உண்மை தான் யதுவீர்…. ட்ரெயினில் அந்த பெண் மேல் சந்தேகப்பட்டு போலீஸ்சுக்கு தகவல் கொடுத்தது, உன் உயிர் ஆபத்தில் இருக்கும் போதும் போன் வழியாக கமாண்டோஸ்க்கு உதவியது, நீ மட்டும் துரிதமாய் செயல்பட்டிருக்கவில்லை என்றால் அந்த அதிகாரி உயிர் போயிருக்கும். யாஷ்வி உயிரை காக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்பட்ட விதம், இதோ பல முடிச்சுகளை அவிழ்த்து இருக்கிறாயே” என்று தாத்தா உபிந்தரும் சேர்ந்து பாராட்ட, அவர்களின் புகழ்ச்சியை ப்ரீத்திக்கு மொழி பெயர்த்து கொண்டிருந்தாள் ஜெஸ்ஸி.

“ஆக மொத்தம் நீ நல்லவ,வல்லவ,நாற்பதும் தெரிஞ்சவ,நவீன ஜான்சி ராணி,ரிவோல்வர் ரீட்டா,கன் பைட் காஞ்சனவாம் ….’பகத் சிங்க் பெயரை கேட்டாலே வீரம் உடலில் பாயும்.அவர் உடன் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட குடும்பத்தின் ரத்தம் வேறு எப்படி இருக்கும் என்கிறார்கள் “என்றாள் ஜெஸ்ஸி வஞ்ச புகழ்ச்சி அணியாய்.

“யோவ் ….நான் ஜஸ்ட் யோசித்தேன் அவ்வளவு தான்யா செஞ்சேன் …விட்டா துப்பாக்கி எடுத்துட்டு மலை மலையா எகிறி குதித்து ஹாலிவுட் ரேன்ஜ்க்கு நான் எதையோ செய்தது போல் எதுக்குயா இப்படி எல்லாம் ஓவர் பில்ட் அப் கொடுக்கிறாங்க? நானே வேலை வெட்டி இல்லாம, எப்படி ‘ரூபிக்ஸ் க்யூப்’ இப்படியும்,அப்படியும் திருப்பி ஒரே நிறத்தை எல்லா பக்கமும் கொண்டு வருவார்களோ, அதே போல் இப்படி நடந்து இருக்கலாம்,அப்படி நடந்து இருக்கலாமோ என்று என் மண்டையில் ஓடிய நண்டை தான் கீழே விட்டேன்…. சும்மா இருப்பவரின் மனம் சாத்தானின் உலைகளம் என்று சொல்வார்கள். அந்த சாத்தானே நாம தான் என்று  இவங்களுக்கு புரியலை ஜெஸ்ஸி கண்ணு. நம்ம மண்டையில் ஓடிய நண்டு ,அது சரியா இருக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்?ஆக்ஷன் பிளாக் எல்லாம் நமக்கு இல்லை…. “என்றாள் ப்ரீத்தி.

“ஆக்ஷன் பிளாக் என்றால் இப்போ ஒரு ஹிந்தி படத்தில் காட்டினார்களே ராக்கெட் லாஞ்சர்,ak 47 எல்லாம் இருந்தும், கையால் தீவிரவாதியை அடித்தே பிடிப்பதாய் அப்படியா?ரஞ்சித்தையே கேளு அவனே அந்த மாதிரி லூசு தனம் எல்லாம் செய்ய மாட்டான்.சினிமாவுக்கு தான் அதெல்லாம் சரியாய் இருக்கும் ப்ரீத்தி.ஆக்ஷன்னை விட ‘ஸ்ட்ராட்டஜி/strategy ரொம்ப முக்கியம்.இங்கே யாரும் யோசிக்காத முறையில் யோசிக்கும் அந்த ‘அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்/out of the box thinking’ முக்கியம்.அதுவும் பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் முதுகுக்கு பின்னால் மட்டும் அல்ல, உடல் முழுக்கவே தன்னை சுற்றி நடப்பதை இனம் கண்டு கொள்ள கண் வேண்டும். துப்பாக்கி எடுத்துட்டு கட்டிடம் விட்டு கட்டிடம் தாவி குதித்தால் மட்டும் இல்லை,வெறும் மிளகாய் பொடி,கால் ஹீல்ஸ் கூட  போதும்  தான். ஆனால் எத்தனை பேர் இதை எல்லாம் செய்து விடுவார்கள் சொல்லு?இதை பற்றி எல்லாம் பக்கம் பக்கமாய் பேசி,எழுதி,படித்து விட்டு அப்படியே கடப்பவர்கள் தான் அதிகம். செயல் என்று ஒன்று இருக்குல்ல? “என்றாள் ஜெஸ்ஸி.

“கண் எல்லோருக்கும் இருக்கு. இப்போ எல்லாம் தவறு என்றால் அதை எதிர்க்க பெண்கள் துணிந்து தான் இறங்கறாங்க. கண் இருந்தும் குருடர்களாய் தவறுகளை கண்டும் காணாமல் செல்வது எல்லாம் குறைந்து தான் வருகிறது. ஓவர் எக்ஸாகரேட் செய்யறாங்க ஜெஸ்ஸி…”என்றாள் ப்ரீத்தி  அவர்கள் பாராட்டை ஏற்க முடியாதவளாய்.

” கண் எல்லோருக்கும் இருக்கலாம் ப்ரீத்தி.ஆனால் எதை பார்த்தோம்,அதற்கு எப்படி ரியாக்ட் ஆனோம் என்பது முக்கியம்.எனக்கு என்ன வந்தது என்று போகாமல்,இன்று நாம் கண்ணை மூடி கொண்டு செல்லும் ஒன்று, நாளை நம் தலையிலே விடியும் என்ற விஷயம் புரியாமல் செல்பவர்கள் தான் அதிகம்.ஆனால் நீ  உனக்கு என்ன வேண்டும் என்றாலும் ஆகலாம் என்று தெரிந்தும் செயல்பட்ட விதத்தை தான் பாராட்டறாங்க.”என்றாள் ஜெஸ்ஸி.

“அதை தான்யா நானும் சொல்றேன்.இதெல்லாம் ஒன்றுமே இல்லை.  நான் தகவல் தான்யா கொடுத்தேன்.மத்த ஆக்ஷன் சீக்குவென்ஸ் எல்லாம் கமாண்டோஸ் தான்யா செய்தாங்க. இதோ அந்த லொள்ளு பிடிச்ச சிங்கத்தை புகழ்ந்தா கூட ஒரு அர்த்தம் இருக்குயா…பாமை எல்லாம் டிஸ்போஸ் செய்திருக்காங்க…..நம்மை என்னவோ ‘லாரா கிராப்ட்’ ரேஞ்சுக்கு இல்ல புகழ்ந்துட்டு இருக்காங்க …. பயபுள்ளைங்க விட்டா நம்மை புகழ்ந்து ஒரு கவிதை தொகுப்பே வரைந்துடுவாங்க போல் இருக்கே கககபோ”என்ற ப்ரீத்தியை முறைத்தாள் ஜெஸ்ஸி.

“உதைச்சேன்னு வச்சிக்கோ நேரா தமிழ்நாட்டில் போய் விழுவே …எவ்வளவு பெரிய ஆளுங்க உன்னை புகழறாங்க…அதை நக்கல் செய்துட்டு….வீரேந்தர் அங்கிள்,யதுவீர் அங்கிள் எல்லாம் லிவிங் லெஜெண்ட்ஸ்.அவங்க வாயால் புகழப்படுவதே எவ்வளவு பெரிய கவுரவம்ன்னு புரியுதா பாரு…பக்கி.”என்றாள் ஜெஸ்ஸி கடுப்புடன்.

“அதுல உண்மை இருந்தா ஒகேமா…அங்கே இவங்க போற்றி பாடும் அளவுக்கு அங்கே மேட்டரே இல்லைன்னு தான் சொல்றேன்…நீயே யோசிச்சி பாரு …பகத் சிங் எல்லாம் எவ்வளவு பெரிய போராளி…அவரு கூட….. இரு இரு…என்ன சொன்னாங்க? பகத் சிங் கூட இருந்த குடும்பமா? எங்களுடையதா? தூக்கத்துல கனவு ஏதும் கண்டுட்டு உளறிட்டு இருக்காங்களோ? …சும்மா ஆங்கிரி பேர்ட் லுக்க்கு விடாதே ஜெஸ்….

இந்தியன் படத்தில் ‘நெடுமுடி வேணு’ சொல்வது போல் தான் இருக்கிறது. ‘எவனோ வத்தி குச்சி கிழிச்சி போஸ்ட் பாக்ஸில் போடத்துக்கு என்னை அர்ரெஸ்ட் செய்துட்டாங்க ….தியாகிகள் பென்ஷன் வேணும் என்று சொல்வாரே’ ….அதை விட இது கொடுமையால இருக்கு.எங்க தாத்தா அதை கூட செய்திருக்கமாட்டார் ஜெஸ்ஸி …இருந்தாலும் இது எல்லாம் ஓவர்….இவங்க அன்புக்கு ஒரு அளவில்லாமா போகுதுயா ….எங்க தாத்தா எந்த கல்லும் உடைக்கலை,செக்கும் இழுக்கலை,’குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் ஒரு புரட்சியை ஏற்படுத்தாது. புரட்சியின் வாள், யோசனைகளின் கல் மீது கூர்மைப்படுத்தப்படுகிறது’ என்றெல்லாம் வீரமுழக்கம் இடவில்லை.

மொழி புரிந்தால் கூட கலாய்ச்சிடுவேன்…அது வேற புரியாமா இம்சையா இருக்கு….அவங்க கிட்டே சொல்லு ஜெஸ்ஸி எனக்கும்,என் குடும்பத்திற்கும், பகத்சிங் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை.

வேலை பார்க்க தான் வந்திருக்கேன்.அதை தவிர மற்ற எல்லாத்தையும் செய்துட்டு இருக்கேன்…இருக்கும் நிலை பார்த்தால் இவர்களே ஹோட்டல் அர்ரெஸ்ட்டில் இருக்காங்க. இதில் நான் எங்கே போய் எந்த வேலை பார்ப்பது?சொல்லு அவங்க கிட்டே …. தோ வரேன் ஆன்ட்டி.” என்று ராஷ்மி அவளை வருமாறு சைகை காட்ட எழுந்து சென்றாள் ப்ரீத்தி.

ப்ரீத்தி  சொன்னது முழுதாய் ரெஜிஸ்டர் ஆகவே ஜெஸ்ஸிக்கு ஒரு நிமிடம் முழுதாய் பிடித்தது.

“இவ பகத் சிங்க் உடன் இருந்த குடும்பம் என்றால் அப்போ நாங்க யாருயா?…ப்ரீத்தியும் அவங்க தாத்தா சுதந்திர போராட்ட வீரர் எல்லாம் இல்லை என்கிறாள்.வேலைக்கு வந்தேன் என்கிறாள்…இவ அர்ஜுனை மணக்க தானே வந்தாள்?வேலை பற்றி அர்ஜுன் எதுவும் சொல்லவில்லையே….அமன்ஜீத் தானே ஹாஸ்பிடலில் கூட வேலைக்கு என்று எதையோ என்னிடம் சொன்னான்.”என்று வாய் விட்டே ஜெஸ்ஸி, பஞ்சாபி மொழியில் தனக்கு தானே பேசி கொண்டிருக்க,அவளிடம் எதையோ சொல்ல வந்த ஒருவர் இதை கேட்டு ஜெர்க் ஆகி நின்றார்.

‘என்னது….ப்ரீத்தி சுதந்திர போராட்ட குடும்பம் இல்லை,ஜெஸ்ஸி தானா?ப்ரீத்தி வேலைக்கு வந்த பெண் என்றால் அவ அமன்ஜீத் வீட்டுக்கு தானே போயிருக்க வேண்டும்.  ஜெஸ்ஸி தானே தன்னிடம் வேலைக்கு வந்திருப்பதாய் அமன்ஜீத், தன்வி சொன்னார்கள்…என்னங்கடா நடக்குது இங்கே?’என்று மூளை குழம்பி நின்றார் அமர்நாத்.

ஆக மொத்தம்  தாங்களே அறியாமல் ரெண்டு பிரீத்திகளும் அங்கு இடம் மாறி இருப்பதை அமர்நாத்துக்கு சொல்லாமல் சொல்லி விட,அவர் மண்டையை உடைத்து கொண்டார்.

நேரம் செல்ல செல்ல அமர்நாத்தால் மனதில் ஏற்படும் நெருடலை தடுக்க முடியவில்லை.  ரஞ்சித்திடம்  அனுமதி வாங்கி,அவர் தோழர் ஹர்பிர்ருக்கு அழைத்தார்.

“ஹே அமர் பாய்…நானே உங்களுக்கு கால் செய்யணும் என்று நினைத்து இருந்தேன்.ப்ரீத்தி அம்மா மிருதுளா ஜெகன்நாதன்  நியூஸ் பார்த்துட்டு அங்கே பதிண்டா தான் வந்துட்டு இருக்காங்க…ப்ரீத்திக்கு போன் அடிச்சா நாட் ரீச்சபிள்ன்னு வருது.அது மட்டுமில்லை அந்த லூசு சுஷாந்ததும் அங்கே தான் வரான்.அந்த மேரேஜ் நின்னுடுசு.ப்ரீத்தியை தான் மணக்க போகிறானாம்… ப்ரீத்தி அவனை கொலை செய்வதற்குள் அவனை எப்படியாவது காப்பாற்றிடு…..”என்றார் அவர்.

“அவங்க மிருதுளா பெஹன்,போட்டோ இருக்கா?நாளைக்கு ப்ரீத்திக்கு இங்கே வேலையென்றால் நானே போய் பிக் செய்துடுவேன்.ஹ்ம்ம் இந்த நம்பருக்கே போட்டோ வாட்ஸாப்ப் அனுப்புங்க.”என்ற அமர்நாத்துக்கு, இவர் சொன்னதை கேட்டு ஹர்பிர் போட்டோ அனுப்பி வைக்க,வந்து சேர்ந்தது ப்ரீத்தி ஜெகநாதனின் போட்டோ மிருதுளாவை அணைத்தபடி.

போட்டோவை பார்த்ததும் பெண் மாறி வீடு சேர்ந்திருக்கும் விஷயம் புரிந்து விட,சட்டென்று தன் மேட்ரிமோனி வலைத்தளத்திற்கு சென்று அவர் சில தகவல்களை சரி பார்க்க,அங்கு எல்லாமே மாறி இருப்பது புரிந்து போனது.

அமன்ஜீத் வீட்டுக்கு ‘வேலைக்கு’ என்ற பெயரில் அவனுக்கு ஜோடியாய் செல்ல வேண்டிய ப்ரீத்தி ஜெகநாதன், அர்ஜுன் வீட்டிற்கும்,அர்ஜுன் வீட்டிற்கு வர வேண்டிய ,பகத் சிங் உடன் சுதந்திர போராட்டத்தில் துணை நின்ற குடும்ப பெண்ணான  ப்ரீத்தி ஜஸ்மிந்தேர் அமன்ஜீத் வீட்டிற்கு சேர்ந்து இருப்பதும்,ஏர் டிக்கெட்,ட்ரெயின் டிக்கெட் ,போன் நம்பர் எல்லாம் மாறி இருந்ததோடு மட்டும் இல்லாமல் பெண்களும் இடம் மாறி இருப்பது.

அலண்டு போனவராய் முகம் வெளுத்து மீண்டும் ஹாலுக்கு வந்து நிற்க அங்கே அர்ஜுன்,அமன்ஜீத் மாறி, மாறி ப்ரீத்தி ஜெகன்னாதனை சைட் அடித்து கொண்டிருப்பதை கண்டு அவருக்கு ஹார்ட் அட்டாக் மிக லேசாக இல்லை மாஸ்ஸிவ்வாக வந்து விடும் போலிருந்தது.

‘இதை சொன்னால் மருமகன்கள் இருவரும் தன்னை கொல்ல போவது உறுதி.இப்படியே சொல்லாமல் விட்டு விடலாமா?’என்று அவர் தன் வழுக்கை மண்டையை பிடித்து கொண்டு பேய் அறைந்தது போல் அமர்ந்திருக்க, அவரை மேலும் திகைக்க வைக்கும் பல விஷயங்கள் அங்கே நடக்க ஆரம்பித்தன.

ரஞ்சித்துக்கு அவன் தலைமையிடத்தில் இருந்து தகவல் வந்திருக்க, “ப்ரீத்தி,அர்ஜுன்,ஜெஸ்ஸி,அமன் …உங்க நான்கு பேருக்கும் நாளை மதியம் அமித்சரஸ் அரசாங்க கெஸ்ட் ஹவுசில் முதலமைச்சர் விருந்து கொடுக்க ஏற்பாடு ஆகி இருக்கு.நாளை சார் பொற்கோயில் வருகிறார்.அங்கே அவரின் பிராத்தனை முடிந்ததும் மதியம் உங்களுடன் விருந்து.குரு அங்கிள்,தன்வி ஆன்ட்டி உங்களை இப்பவே அழைத்து போக உங்க செக்யூரிட்டி ஆட்கள் தயாராய் இருக்காங்க… எல்லோரையும் ஒரே சமயத்தில் அழைத்து செல்வது கொஞ்சம் ரிஸ்க்.காத்து இருப்பவர்களுக்கு நாமளே வாய்ப்பை கொடுத்தது போல் இருக்கும்….” என்றான் ரஞ்சித்.

“ரஞ்சித்….பிள்ளைங்க உயிர்க்கு ஆபத்து இருக்கு போது, இதெல்லாம் தேவையா?”என்றார் உபிந்தர்.

“தாத்தா…ஏற்கனவே ப்ரீத்தி விருது வேண்டாம் என்பதே பிரச்சனையை உண்டாகி இருக்கு….இவங்க உயிருக்கு திரேட்  இருப்பது வெளியே யாருக்கும் தெரியாத வண்ணமே தான் வைத்திருக்கோம்.இப்போ இவங்க விருந்துக்கும் போகலை என்றால் அதை பத்தாய் மீடியா திரித்து கூறி,மக்கள் அதை நூறாய் கற்பனை செய்து கொள்வார்கள்…நாம CM சார் நிலைமையும் சற்று பார்க்கணும்.”என்றான் ரஞ்சித்.

அங்கு இருந்தவர்களுக்கும் ரஞ்சித் சொல்ல வருவது புரிந்தே இருந்தது.ப்ரீத்தி விருதை ஏற்கவில்லை என்று சொல்ல முடியாது.ஏன் என்ற கேள்விக்கு அவள் சொன்ன பதிலை சொல்லவும் முடியாது. அப்படியே சொன்னாலும் தர்மா தோற்று விட்டார் என்று யாஷ்வி உட்பட பல பிள்ளைகள் பாதிக்கப்பட்டது சான்றாய் இருக்கும் போது அது அவர் ஆட்சிக்கும், கட்சிக்கும் வரும் தேர்தலில் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

இவர்கள் உயிருக்கு ஆபத்து என்று வெளியில் சொன்னால், அதை கூட ‘கவனிக்காத அரசு’ என்று அதற்கும் பெயர் வரும். விருந்தே கொடுக்கவில்லை என்றாலும் ஏன் என்ற கேள்வி வரும்.

“செக்யூரிட்டி ஏற்பாடு எல்லாம்?”என்றார் குருதேவ்.

“ஹை  அலெர்ட்  கொடுத்திருக்கோம் அங்கிள்.இங்கே பக்கத்து வயல்வெளியில் இருந்து ஹெலிகாப்டர் நேரே அமிர்தசரஸ் போக ஏற்பாடு செய்த்திருக்கு.ஹெலிகாப்டர் வரும் வரை அங்கே இப்படி ஒரு ஏற்பாடு செய்திருப்பது யாருக்கும் தெரியாது. அங்கேயும் CM சார் தங்கும் பங்களா பக்கத்தில் தான் ஹெலிபேட் இருக்கு.சார் கூடவே  இவங்க  பொற்கோயிலுக்கு சென்று,அவருடன் அங்கிருந்து  பங்களாவிற்குள் சென்று விட்டால் பின் பிரச்சனை எதுவும் இருக்காது.வரும் வழியே திரும்பவும் அழைத்து வந்து விட போகிறோம்.” என்றான் ரஞ்சித்.

“எனக்கென்னவோ இது தேவை இல்லாத ரிஸ்க் போல் தான் தோன்றுகிறது ரஞ்சித்.ராஷ்மி ஆன்ட்டி உடல் நலத்தை காரணம் காட்டி இதை நிறுத்தி விடலாம் தானே?”என்றாள் ப்ரீத்தி யோசனையுடன்.

ஏதோ நடக்க கூடாதது நடக்க போவதாய் அவள் உள்உணர்வு எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்து இருந்தது.

“எப்போ இருந்தாலும் இந்த விருந்து கொடுத்து தான் ஆக வேண்டும் ப்ரீத்தி.அதை இப்பவே செய்துட்டு உங்களை எல்லாம் சவுத் பக்கம் கேரளா, இல்லைன்னா அஸ்ஸாம் பக்கம் ரஞ்சித்துடன் அனுப்ப சொல்லி இருக்கார் தர்மா.   அந்த பக்கம் ‘சேப் ஹவுஸ்/SAFE HOUSE’ என்று இந்திய முழுவதும் கமாண்டோஸ்க்கு பாதுக்காப்பு இல்லங்கள் உண்டு.

VIP,ஹை ரிஸ்க் ஆட்கள்,விட்னஸ்   உயிருக்கு ஆபத்து என்றால் இது போன்ற இல்லங்களில் தான் யாருக்கும் தெரியாமல் தங்க வைப்பார்கள்.  அங்கே போய்ட்டு திரும்ப வந்துட்டு, திரும்ப போய்ட்டு என்று இருப்பதற்கு ஒன்ஸ் அண்ட் பார் ஆல் விருந்தை முடிச்சுட்டு உங்களை பாதுகாப்பது எங்களுக்கும் ஈசியா இருக்கும்.தர்மாவுக்கும் மக்கள் மத்தியில் பிரஷர் இருக்காது” என்றார் வீரேந்தர்.

‘என்னது மாநிலம் விட்டு மாநிலம் நம்மை கடத்த போறாங்களா? சுத்தம்….நாம எதுக்கு வந்தோம்?…நம்மை சுற்றி என்னயா நடக்குது?சரி அரசாங்க செலவில் இந்தியா முழுவதையும் சுற்றி காட்டறேன் என்று அவங்களே வாலெண்டியரா வரும் போது நமக்கு என்ன ?’என்று தனக்குள் பேசி கொண்ட ப்ரீத்தி,

“ரஞ்சித் இந்த ஸ்டேட் கடத்தல் எத்தனை நாளைக்கோ ?”என்றாள் நக்கலாக

“எத்தனை நாள் என்று கேட்காதே பேபி…எத்தனை மாசம், வருஷம் என்று கேளு…அப்போ கூட பதில் எங்களுக்கே தெரியாது.காபோஸ் பிடிபடும் வரை…உடனே அவனை எப்போ பிடிப்போம் என்று கேட்காதே….அதற்கும் தெரியாது என்பது தான் பதில்….”என்றான் ரஞ்சித் அவளை விட வெகு நக்கலாய்.

“என்னடா விளையாடுறியா?”என்றாள் ப்ரீத்தி திகைப்புடன்.

“பேபி …உன்னுடன் விளையாட மாமனுக்கு ஆசை தான்…பட் பாரு நிலைமை சீரியஸ்…ரொமான்ஸ் செய்யும் மூட் எல்லாம் அய்யாவுக்கு இப்போ இல்லை …..”என்றான் ரஞ்சித்.

” குரங்கே உனக்கு காமெடி செய்ய நேரம் கிடைச்சுது பாரு…   டேய் நானும் சீரியஸ்ஸா கேக்கிறேன்….”என்றாள் ப்ரீத்தி கடுப்புடன்.

“ஹேய் இது என்ன சினிமாவா இல்லை கதையா ஒரே பாட்டில் குற்றவாளியை பிடிக்க பிடிச்சுட்டோம் என்று சொல்ல?ரியல் லைப் மா….நீ நினைப்பது போல் எல்லாம் இன்று மாலைக்குள், நாளை காலைக்குள் காபோஸ் பிடித்து விடுவோம் என்று வீர சபதம் எல்லாம் எடுக்க முடியாது. விசாரணை நடந்துட்டு தான் மா இருக்கு…இதுக்கு டைம் லிமிட் எல்லாம் கொடுக்க முடியாது.

உங்க பாதுகாப்பிற்கு வருடக்கணக்கில் என்றாலும் நீங்க தலைமறைவாக இருந்து தான் ஆகணும். அதை விட்டால் உங்களுக்கு வேறு எதுவும் ஆப்சன் இல்லை.Witness Protection Scheme, 2018 படி நீயும்,அர்ஜுன் குடும்பமும் கேட்டகரி A அதிக ஆபத்தில் இருக்கும் விட்னஸ்.சோ உனக்கு உயிர் முக்கியம் என்றால் நாங்க சொல்வதை செய்வது ஒன்று தான் உனக்குள்ள வழி. இனி உன் பழைய வாழ்க்கைக்கு  பை பை சொல்லிடு பேபி.இனி நீ ஒரு FUGITIVE  “என்றான் ரஞ்சித் நிஜத்தை வெளிப்படையாக சொல்லி.

ப்ரீத்திக்கு மட்டுமல்ல அங்கிருந்தவர்களுக்கு தாங்கள் இருக்கும்  நிலை புரிய,காபோஸ் பிடிபடும் வரை அவர்கள் யாரின் உயிரும், வாழ்க்கையும் அவர்களுக்கே சொந்தம் இல்லை என்ற உண்மை பொட்டில் அறைந்தது போல் புரிய திகைத்து போய் அமர்ந்திருந்தனர்.

“பார்த்துக்கோப்பா…உன்னை நம்பி தான் இந்த பிள்ளைகளை விடறோம்.”என்றார் யதுவீர்.

“நிச்சயம் அங்கிள்.”என்று உறுதி அளித்த ரஞ்சித்தோ,மனம் பதறினாலும் தர்மாவிற்காக என்று இந்த ஏற்பாட்டை ஒற்று கொண்ட இவர்களும் அறிய வாய்ப்பில்லை அந்த சந்தர்ப்பத்தை காபோஸ் ஆட்கள் பயன்படுத்த போவதையும்,அதனால் பஞ்சாப் அரசியலில் அது சூறாவளியை கிளப்ப போவதையும்.

“பொற்கோயிலுக்கு என்றால் அப்போ நம்ம சடங்கையும் முடித்து விடலாம் தானே? எப்போ எது நடக்கும் என்று புரியாத நிலையில் நாளைக்கு ஒன்று கிடக்க ஒன்று நடப்பதற்குள் இதை எல்லாம் முடித்து விடலாம் தானே? “என்றார் ராஷ்மி.

“எதை சொல்றே ராஷ்மி?”என்றார் யதுவீர்.

“அதான் குரு பையாவுக்கு,அவர் மூலம் தன்விக்கும்,அமன்ஜீத் மனைவிக்கும் வர வேண்டிய நமது வைர நகை கொடுக்கும் விழா தான்.நம் பரம்பரை தொழிலில் இவர்களும் சம உரிமை பெற்றவர்கள் என்று மாற்றுவது.அப்படியே அர்ஜுன்,ப்ரீத்திக்கும் இதை செய்து விடலாம்.நம் குடும்ப வழக்கம் நிச்சயம் செய்வதற்கு முன் இதை ரப்ஜி முன்னிலையில் செய்வது தானே?குரு பையாவுக்கு ஏற்கனவே செய்ததை தான் அவர் திருப்பி அனுப்பி விட்டாரே…”என்றார் ராஷ்மி.

“இல்லை ராஷ்மி அது ஒத்து வராது.இது உங்க பரம்பரை வழிமுறை.நான் இப்போ தன்வி கணவன்.அதை ஏற்க முடியாது.”என்றார் குருதேவ்.

“தன்வியும் எங்கள் மகள் என்பதை மறந்து விடாதே குரு.இத்தனை வருடம் தான் உன்னையும் அவளையும் எங்களை விட்டு விளக்கி வைத்து இருந்தோம்.இது தன்விக்கும்,தன்வியை தொடர்ந்து அமன் மனைவிக்கும் உள்ள உரிமை.காலம் காலமாய் ஒரு குடும்பத்தில் இருந்து பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்வதற்கு முன்  கொடுக்கபடும் உரிமை.திருமணம் ஆவதற்கு முன்பே தொழிலில்   அவர்களுக்கு என்று பாகம் பிரித்து வைப்பது தானே இந்த குடும்ப வழக்கம்?” என்றார் உபிந்தர்.

இதை கேட்ட மற்றவர்கள் எப்படி உணர்ந்தார்களோ தெரியாது ஆனால் அமர்நாத் ஸ்தம்பித்து போனார்.ஜெஸ்ஸிக்கு சேர வேண்டிய குடும்ப வைர நகை  ப்ரீத்திக்கு செல்ல போகிறது.

நன்றாக வயிறு நிறைய உண்டு விட்டு திரும்பி வந்த ப்ரீத்தியும், ஜெஸ்ஸியும் ராஷ்மி பேச்சை அரைகுறையாக கேட்டு இருந்தனர்.

“என்னது இவங்க தொழிலில் எனக்கு பங்கா?”என்றாள் ப்ரீத்தி ஜெஸ்ஸி மொழி பெயர்த்ததை நம்ப முடியாதவளாய்.

” ஏன் முன்னே பின்னே இது மாதிரி நீ கேள்வி பட்டதே இல்லையா என்ன?பத்ம பூஷன் விருது பெற்ற ஷிவ் நாடார் ஒரு மில்லியன் மதிப்பிலான HCL ஷேர்களை SSN காலேஜ்க்கு கொடுக்கவில்லையா என்ன?அசிம் பிரேம்ஜி,ஆதி கோட்ராஜ், கவுதம் அதானி,யூசுப் அலி மா ,சாவ்ஜி தோலாக்கியா, டாடாவின் ஷாபூர் மிஸ்ட்ரி என்று இவர்களை போல் தங்கள் வருமானத்தில் பிலான்தரப்பி/தான தர்மத்திற்கு  வேலைக்கு கொடுப்பது எல்லாம் சர்வ சாதாரணம் தானே?.தங்களிடம் வேலை செய்யும் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, கார்,வீடு வாங்கி தருவது எல்லாம் எத்தனை மீடியாவில் வந்திருக்கு.”என்றாள் ஜெஸ்ஸி.

அவர்கள் எல்லாம் வேலை செய்பவர்கள் இங்கே ப்ரீத்தியை அந்த வீட்டின் மருமகளாக தான் இதை செய்கிறார்கள் என்பதை ஜெஸ்ஸி அறியவில்லை.அவளே அறியாத ஒன்றை ப்ரீத்திக்கு அவள் எப்படி சொல்லமுடியும்?

“ஏய் லூசு ஜெஸ்ஸி…அப்படி ஷேர் வாங்கியவங்க எல்லாம் பல வருடம் அவங்க கிட்டே வேலை செய்தவங்கயா…நான் இன்னும் ஆபீஸ் ரூம் எப்படி இருக்கும் என்று எட்டி கூட பார்க்கலை… இந்த ரஞ்சித் பேய் வேற fugitive என்று ஹாலிவுட் பட பேரை எல்லாம் சொல்லி காப்ரா படுத்திட்டு இருக்கான்.சென்னையை விட்டே வந்திருக்க கூடாதோ என்று நானே புலம்பிட்டு இருக்கேன். இதில் இது எல்லாம் ஓவர் யா”என்றாள் ப்ரீத்தி.

இப்படி சொன்ன ப்ரீத்தி அறியவில்லை இப்படி பாதுகாப்பில் இருக்கும் சாட்சிகளின்  நிலை எல்லாம் உலக அளவில் பத்து வருடங்களுக்கு மேல் நீண்டு இருப்பதை.

“ஆமா அந்த சொத்துக்களை எடுத்துட்டு நீ என்ன வேலை செய்யாமல் ஓடிட போறியா என்ன?”என்றாள் ஜெஸ்ஸி.

“ச்சே சே ….அப்படி எல்லாம் செய்யும் ஆளா நான்…?என்னை பார்த்து நீ எப்படி இப்படி ஒரு வார்த்தை விடலாம்?”என்றாள் ப்ரீத்தி ஜெஸ்ஸி கையில் நறுக்கென்று கிள்ளி.

“எருமை கிள்ளாதேடீ ….தெரியுது இல்லை …அப்ப மூடிட்டு பெரியவங்க சொல் படி நாட.நாளைக்கு தேவை இல்ல என்றால் அதற்கு ஈடான பணத்தை கொடுப்பாங்க.வாங்கிட்டு தமிழ்நாட்டிற்க்கு மூட்டை கட்டு.சில இடங்களில் சம்பளம் தருவாங்க.சில இடங்களில் இது போல் ஷேர் தருவாங்க.நீ வேற நிறைய ஸ்டண்ட் எல்லாம் செய்திருக்கே இல்லை அதுக்கு பாராட்டியும் இதை எல்லாம் செய்யலாம்.ஏன் ஹர்பிர் அங்கிள் கூட நீ செய்யும் வேலைக்கு உனக்கு சம்பளம் தருவதற்கு பதில் ஷேர் கொடுத்திருக்கார் என்று சொல்லியிருக்கே தானே. அப்போ எதுக்கு இந்த ஓவர் பில்ட் அப் கொடுக்கறே? “என்றாள் ஜெஸ்ஸி.

ராஷ்மி  ‘வருங்கால மருமகளுக்கு’ என்று சொல்லும் போது இருவருமே அங்கே இல்லாது  போனதன் விளைவு,ஷேர்  வேலைக்கான ஊதியமாய் மாறி போனது மொழி பெயர்ப்பில். வைர நகை என்ற பேச்சே எழாமல் போனது.

“அது தான் நல்லது.அதற்கான ஏற்பாடை அங்கே உள்ள நம்ம ஆட்களிடம் செய்ய சொல்லிடு அமர்நாத்.”என்றார் உபிந்தர்.

‘என்னது நானா?’என்று பேய் விழி விழித்து அமர்ந்திருந்தார் அவர்.

‘பெண் மாறிய விஷயம் தெரிஞ்சுது ரெண்டு குடும்பமும் நம்மை கைமா செய்யாமல் விட மாட்டார்களே …ஹே குதா இது என்ன சோதனை?’ என்று இறைவனிடம் முறையிட்டு கொண்டிருந்தவருக்கு அடுத்து என்ன என்ன செய்வது என்று புரியவில்லை.

‘மீண்டும் ஒரு பெண்ணால் இதே குடும்பத்தில் தகராறு நிச்சயம். அர்ஜுன் இவளை தன் மனைவியாகவே நினைத்து வாழ தொடங்கி விட்டான். அமன்ஜீத் கிடைக்கும் சந்தில் ரூட் விட வழி தேடி கொண்டிருக்கிறான்.இந்த ஜெஸ்ஸி பொண்ணு யாரை பார்க்குதுனே தெரிலை.உண்மை தெரிந்தால் அர்ஜுன்,அமன் இருவரும் விட்டு கொடுக்க போவதில்லை.இதுல ஷேர்,பரம்பரை வைர நகை … ‘யோசிக்க யோசிக்க அவருக்கு தலை வலி வந்தது தான் மிச்சம்.

ஆளாளுக்கு ஏதோ யோசனையில் பொழுதை கழிக்க, டெல்லியில் இருந்து ரஞ்சித்துக்கும்,ப்ரீத்திக்கும் தகவல் வந்தது.

“ப்ரீத்தி …இங்கே ஸுல்பா என்ற பெண்ணிற்கு டிரீட்மென்ட் நடந்து இருக்கு….அந்த பெண் அன்யா மேடம் கிளினிக் ஒன்றில் தான் இறந்திருக்காங்க.இன்னும் சொல்ல போன அந்த கலவரம் நடக்கும் ரெண்டும் நாள் முன்பு தான் ஸுல்பா ‘பிரைன் டெட்’ என்று இங்கே லெக்ச்சர் கொடுக்க வந்திருக்கும் டாக்டர் பற்றி சொல்லியிருந்தேன் இல்லை அவர் தான் தான் சர்ட்டிபை செய்திருக்கார்.அந்த கலவரத்தில் அன்யா மேடம் உடன் இவங்களும் இறந்துட்டு இருக்காங்க.சாரி டியர்.”என்றாள் மயூரி.

“ஒகே மா தேங்க்ஸ்… இதை தான் எதிர்பார்த்தேன் மயூரி. நீ பத்திரமா போய்ட்டு வா….”என்றாள் ப்ரீத்தி.

“என்னை பற்றி கவலை படாதே ப்ரீத்தி.நீ தான் ஆபத்தில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.பி கேர்புல்….டேக் கேர்.”என்றாள் மயூரி.

அதே சமயம் ரஞ்சித்திடம்,”சார் நீங்க சந்தேகப்பட்டது சரி தான் சார்…இன்னும் அந்த பகுதியில் வாழும் சிலரை மறுவிசாரணை செய்தோம் சார்…அந்த பகுதியில் எந்த மதத்தின் கோயிலோ,புனிதமான இடமோ இல்லை என்கிறார்கள் சார்.அப்படி ஒரு மத சின்னம் அந்த பகுதியில் உடைக்கப்படவே இல்லையாம் சார்.நாங்க அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை என்று சொல்லி கூட தாக்க வந்தவங்க கேட்கவேயில்லை என்கிறார்கள் சார் இந்த பகுதி மக்கள். அங்கிருந்தவர்கள் மேல் பேருக்கு தான் அடி தடி நடத்தி ,கடை எல்லாம் உடைத்து இருக்காங்க.

கலவரம் செய்தவர்களின் முக்கிய டார்கெட் அன்யா மேடம் கிளினிக் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவங்க சொல்ராங்க சார்…இது ப்ரீ பிளான்ட் மர்டர் சார்.அதுக்கு மத கலவரம் என்று சாயம் பூசி இருக்காங்க.அந்த கிளினிக்கில் வேலை செய்த நர்ஸ் சிலரை கூட விசாரித்தோம்..இவர்களை எல்லாம் வெளியே அனுப்பிட்டு அன்யா மேடமையும் அவங்க கொண்டு வந்து சேர்த்திருந்த அந்த பெண்ணையும் உள்ளே வைத்து அந்த கிளினிக்கையே எரித்து இருக்காங்க என்கிறார்கள்.” என்றது டெல்லி தகவல்.

ரஞ்சித் இந்த விஷயத்தை  அங்கிருந்தவர்களிடம் சொல்ல,அங்கு இருந்தவர்களிடம் ஏற்பட்ட திகைப்பு,ஸ்தம்பிப்பு இன்னும் அகராதியில் என்னென்ன வார்த்தைகள்,விவரிப்புகள் உண்டோ அது அத்தனையும் சொன்னாலும் அவர்கள் இருந்த நிலையை விவரிக்க முடியாது தான்.

போதை மருந்தினை எதிர்த்து அர்ஜுன் குடும்பத்தில் ஏற்கனவே ரெண்டு உயிர்கள் பிரிந்து இருக்க இன்னும் எத்தனை உயிர்கள் போன பிறகு தான் இந்த கொடிய அரக்கனை தடுப்பார்களோ? இல்லை இது தொடர் கதையாக  தான் இருக்குமோ?  இன்னும் எத்தனை தலைமுறையில் எத்தனை உயிர் போன பிறகு இதை தடுக்க போகிறார்கள்?

தங்களை அவர்கள் சிறிது நேரத்திற்குள் சமாளித்து கொண்டாலும் உள்ளுக்குள் அனைவரின் மனமும் காரணம் இல்லாமல் அடித்து கொண்டே தான் இருந்தது.

ரஞ்சித் டீம் இவர்கள் மொபைலை வாங்கி வைத்திருக்க, குடும்பமாய் அமர்ந்து ஆடல்,பாடல்,விளையாட்டு என்று பொழுதை கழித்து கொண்டிருந்தார்கள். அதாவது நிதர்சனத்தை எதிர்கொள்ள பயந்து,தங்கள் உள்ள துடிப்பை மற்றவர்களுக்கு காட்டாமல் இருக்க இப்படி சந்தோஷமாய் இருப்பதாய் காட்டி கொண்டார்கள்.

குருதேவ்,தன்வி அம்ரித்சர்ஸ்க்கு கிளம்பி இருக்க,இரவு உணவு முடிந்து ஆங்காங்கே அமர்ந்து கதை பேசி கொண்டிருந்தனர். ஜெஸ்ஸி,ரஞ்சித் உடன் கதையளந்த படி பேசி கொண்டிருந்த ப்ரீத்தி,மெல்ல மற்றவர்கள் கவனத்தை கவராத வண்ணம் பழ சாலட் நிரம்பிய கிண்ணத்தை எடுத்து கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பால்கனி நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் யாருக்கோ காத்திருப்பது போல்.

ப்ரீத்தியின் எதிர்பார்ப்பை பொய்யாகாத வண்ணம் வந்து சேர்ந்தனர் அந்த மூவர் அர்ஜுன் குடும்பத்தில் மற்ற யாரும் அறியாவண்ணம்.வந்த மூவரில் ஒருவன் கையில் போர்க்/முள் கரண்டி தயாராய் இருந்தது. அதை வைத்து ப்ரீத்தியின் கழுத்தை குத்தவும் அவன் தயங்க மாட்டான் என்பது அவன் அந்த போர்க்கை பிடித்து இருந்த வகையிலே தெரிந்தது.

மூவரும் ப்ரீத்தி முன் வந்து நிற்க,”சோ நீங்க தான் எல்லோரும் தேடும் ஸுல்பா கரெக்ட்டா?”என்றாள் ப்ரீத்தி ஆங்கிலத்தில் அந்த மூவரில் ஒருவரை பார்த்து.

அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.போர்க் பிடித்து இருந்தவன் கரம் அதில் அழுத்தம் கொடுக்க,மற்ற மூவரும் வேண்டாம் என்பது போல் தலை அசைத்தனர்.

பயணம் தொடரும்…

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!