OVS – 15
OVS – 15
கண்ணசைவில் அண்ணன் இட்ட கட்டளை புரிய, அண்ணியை கொஞ்சமும் விட்டு விலகாது அடை காத்தாள் சுந்தரி. காலை உணவுக்கான பந்தியில் கணவனின் அருகே அமர்ந்து சாப்பிடத் துவங்க அனைத்து பதார்த்தங்களும் ருசிகரமாக இருக்கவே நன்றாக உண்டாள்.
“ராணி… ஈஸ்வரிக்கு கற்கண்டு வடை வை!” என அன்பு உத்தரவு பிறப்பிக்க வடையை எடுத்துக் வந்தவள் அவளை தவிர்த்து வீராவிற்கு மட்டும் வைத்துச் செல்ல,
‘அன்பு அத்தை ஈஸ்வரிக்கு வைன்னு தானே சொன்னாங்க… கவனிக்கல போல!’ சிந்தனையுடனேயே உண்டவன், தன் இலையில் இருந்த வடையை மனைவிக்கு இடம் மாற்றினான்.
‘இவ சாப்பிடக் கூடாதுன்னு நினைச்சு செஞ்சா, அத்தான் உருகிகிட்டு தன்னோடதை எடுத்து வைக்கிறாங்களே… நல்லா தான் மயக்கி வச்சிருக்கா. இந்த கிரகத்துக்கு நாமே வச்சு தொலைச்சிருக்கலாம்’ என மனதோடு வம்பளந்து கொண்டிருக்கத் தான் முடிந்தது ராணியால். (உன்னால உன் அத்தானோட வடை போச்சே!)
பெண்கள் அனைவரும் தனியாக உள் பத்தியில் அமர்ந்து கதையளந்து கொண்டிருக்க, ஈஸ்வரியோ கணவனின் பார்வையில் நாத்தனாரின் பாதுகாப்பில் அமர்ந்திருந்தாள்.
“சுந்தரி அண்ணி… அத்தான் போட்டியெல்லாம் நடக்கும்னு சொன்னாங்க… நீங்க எல்லாம் கலந்துக்க மாட்டீங்களா?” என பொதுவாக கேட்க, இவள் வாய் திறப்பதற்காகவே காத்திருந்தவள் போல்,
“நாங்க என்ன ஒன்னும் தெரியாதவங்களா? எல்லா போட்டியிலும் கலந்துக்கிறது மட்டுமில்ல பரிசும் வாங்குவோம். எப்போதுமே எங்க ராணி தான் கோலப் போட்டில முதல் பரிசு வாங்குவா” என நீட்டி முழக்க (ராணி கோல போட்டியில் பரிசு வாங்குவா… நீங்க வாயை கோண வைக்கிற போட்டியில பரிசு வாங்குவீங்க போல!)
“ஓ, சூப்பர் சூப்பர்! எனக்கு கோலமெல்லாம் போடத் தெரியாது, நல்லா கலர் பண்ணுவேன். என்னையும் சேர்த்துக்கறீங்களா?” அப்பாவியாய் கேட்க
“ம்ஹூம். இதுலயும் அவளோட பங்கு போடணுமா?” என ஒரு பெண்மணி முகம் தூக்க, சூழலை சமாளிக்கும் விதமாய்,
“நானும் நல்லா தான் போடுவேன் அண்ணி! நாம ரெண்டுபேரும் சேர்ந்து போட்டியில கலந்துக்குவோம்.” என்றாள் சுந்தரி. அவர்களது வினயமான பேச்சு புரியாமல் சிறுபிள்ளையாய் குதூகலத்துடன் கோலப் போட்டிக்கு தயாராகிவிட்டாள் ஈஸ்வரி.
ஊருக்கு பொதுவான பிள்ளையார் கூடத்தில் போட்டி துவங்கியது. ராணியும் அவளது பெரியப்பா மகளும் சேர்ந்து கோலமிட, சுந்தரியும் விக்கியும் இணை சேர்ந்திருந்தனர். பின்னல் கோலம், பூ கோலம், விதவிதமான ரங்கோலிகள் என வரையப்பட்டிருந்தாலும் அனைவரையும் ஈர்த்தது ஈஸ்வரியின் கோலமே.
கிராமத்தையே தங்களது கருவாகக் கொண்டு சூரியன், குடிசைவீடு, விநாயகரின் முகம், கரும்பு, நெற்பயிர், அழகாய் அலங்கரிக்கப்பட்ட காளை, மையத்தில் பொங்கல் பானை என தன் ஓவியத்திறன் காட்டி புதுவிதமாக வண்ணம் தீட்டியிருக்க வெறும் கோலமாக மட்டுமல்லாது உயிரோட்டமுள்ள ஓவியமாய்த் தான் தெரிந்தது.
ஊரே அதற்குத் தான் முதல் பரிசு கொடுக்க வேண்டும் எனச் சொல்ல, ராணியும் அவளை சார்ந்தவர்களும் இது கோலப் போட்டி… ஓவியப் போட்டியில்ல அதனால் இதுக்கு பரிசு கொடுக்க கூடாது என சண்டையிட்டனர். (கொடுத்த காசுக்கு மேல கூவுறீங்களேம்மா!)
“ஏன் அண்ணி, இது போல போடக் கூடாதா?” பரிதாபமாய் சுந்தரியின் முகம் பார்த்தாள் ஈஸ்வரி.
‘இது என்ன புது பிரச்னை? இவர்கள் வாதம் மறுக்கும் படியாய் இல்லை அதற்காக இத்தனை அற்புதமாய் இருக்கும் ஒன்றிருக்கு பரிசு கொடுக்காமலும் இருக்க முடியாதென நடுவர்கள் குழம்பி நிற்க,
வீரபாண்டியன் கைபேசியின் வாயிலாக பரிசை ராணிக்கு விட்டுக்கொடுக்கும் படி மனையாளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். ஒருநொடி கணவனின் நியாயமில்லாத்தன்மை நெருடலை உண்டாக்கினாலும்,
“பரிசை அவங்களுக்கே கொடுத்துருங்க. இப்படி எல்லாரும் ஒன்னா சேர்ந்து சந்தோஷமா இருக்கும் சூழலை அனுபவிக்க தான் போட்டியில கலந்துக்கிட்டேன். பரிசுக்காக இல்ல. நீங்க எல்லோரும் பாராட்டினதே பல பரிசுகளுக்கு சமம். எனக்கு அதுவே போதும்” என்றதும்
“சின்னப்புள்ளையா இருந்தாலும் விட்டுக்கொடுக்கிற மனசு இருக்க நீ தான் ஆத்தா பெரியமனுஷி!” எனப் பாராட்டி முதல் பரிசான 4 கிராம் தங்க காசை ராணியிடம் கொடுக்க,
“நாங்க ஒன்னும் இந்த பரிசுக்காக ஏங்கி நிக்கல… நியாயத்துக்காக தான் சண்டை போட்டோம்!” என மிடுக்கு காட்டியே பரிசை பெற்றுக் கொண்டாள் ராணி. (பரிசு உனக்கு…. பாராட்டு விக்கிக்கு! எப்படி?!)
தான் சொன்னதும் எந்த மறுப்புமின்றி சூழலை அழகாக சமாளித்த மனைவியிடம் காதல் பெருக தனியாக சிக்கினால் இறுக்கி அனைத்து ஒரு உம்மா கொடுக்கும் மூடுக்கு வந்துவிட்டான் வீரா.
வியர்த்து வழிந்தத்தில் நெற்றி வகிட்டில் இருந்த குங்குமம் அழிந்துவிட தாலி பெருக்கி போடும் போது மஞ்சள் கயிறும் தாலி செயினுக்கு இடமாறிவிட வீரபாண்டியனை தெரியாதவர்களுக்கு ஈஸ்வரியையும் தெரியவில்லை.
திருவிழாவிற்காக சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் அயலூர் மக்களின் கண்களெல்லாம் இவள் மீதே இருந்தது. அவளது உடையும், அழகான தோற்றமும், கோலமும் அனைவரையும் கட்டி இழுக்க, 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி தண்ணீர் பந்தலில் மோர் குடித்துக் கொண்டிருந்த ஈஸ்வரியின் அருகே வந்து,
“நீ எந்த ஊர் ஆத்தா? வீட்ல கல்யாணத்துக்கு பாக்குறாங்களா? என் ரெண்டாவது மகன் குவைத்ல இருக்கான். ஆளு அழகா அம்சமா ராஜா வீட்டு பிள்ளையாட்டம் இருப்பான். உங்க சோடி பொருத்தம் நல்லா இருக்கும். விவரம் சொன்னா வீட்ல வந்து பொண்ணு கேட்பேன்…” என முகம் பார்க்க குடித்துக் கொண்டிருந்த மோர் தலைக்கேறி கண்கள் கலங்கினாலும் உள்ளூர சிரிப்பும் பயமும் ஒன்றாய் தோன்ற,
“இல்ல, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே விலகி இருந்தாலும் பார்வை முழுவதும் மனையாளிடமே இருந்ததால் அவளது அதிர்ந்த பார்வை கண்டவன் அருகில் வந்து,
“என்னாச்சு ஈஸ்வரி?” புருவம் சுருங்க கூர்விழிகளுடன் மனையாளை நோக்க,
‘இவன் யாரு?’ என்பது போல் பார்த்து வைத்த பெண்மணியை தவிர்த்து,
“ஒன்னுமில்ல இவங்க என்னை யாருன்னு விசாரிச்சாங்க…” என மென்று விழுங்க அவரை பார்த்ததுமே ஏன் விசாரித்திருப்பார் என்பதும் புரிய
“நன்னிலத்து வீரபாண்டியன் பொண்டாட்டின்னு சொல்லறதுக்கென்ன?” என்றான் கொஞ்சம் காட்டமாகவே. அதற்குள்ளாகவே பட்டுப்புடவையும், மல்லிகைச்சரமும், பட்டைப்பட்டையான நகைகளுமாய் புதுப்பெண் போல அங்கு வந்த ராணி, உரிமையாய்
“அத்தான், இங்க என்ன பண்றீங்க?” என அக்கறை போல விசாரிக்க,
“வாத்தா… இது உங்க வீட்டு பொண்ணா?” என்றதும் தன் வீட்டிற்கு வந்திருப்பவள் தானே என்னும் நினைவில் ஆமோதிப்பாய் தலையை அசைக்க,
“இவுக தான் உன் அண்ணனும், அண்ணியுமா? புள்ள அழகா அம்சமா இருக்குன்னு என் மகனுக்கு எடுத்துக்கலாம்னு நினைச்சேன். அதான் யாரு என்னன்னு விசாரிச்சேன் வேற ஒன்னுமில்ல” என விளக்க, (டிசைன் டிசைனா டார்ச்சர் பண்றாங்களே!)
தன்னை அண்ணன் என்றது முதல் அதிர்ச்சி என்றால் ராணியை தன் மனைவியாய் நினைத்தது பேரதிர்ச்சியாய் போக, ஈஸ்வரியை பெண் கேட்டது மூன்றாம் நிலைக்கு வர கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்து,
“இவ தான் என் மனைவி. இது என் அத்தை மகள்” என மொழிந்து மனையாளின் கரம் பற்றி இழுத்துச் செல்லாத குறையாய் அழைத்துச் சென்றான்.
ராணிக்கோ தண்ணி வீரபாண்டியனின் மனைவி என்றதும் மனம் துள்ளாட்டம் போட்டாலும் மனைவியாகியிருக்க வேண்டிய வாய்ப்பை தான் இந்த மேனாமினுக்கி தட்டி பறித்துவிட்டாலே என்னும் ஆற்றாமையும் விரவியது.
“சுந்தரியை விட்டு நீ ஏன் தனியா வந்த?” உரிமைக்காரியான மனைவி அத்தான் என அழைக்கத் தயங்க, அத்தை மகள் தயக்கமின்றி அழைத்ததால் தான் அந்த பெண்மணி ராணியையும் தன்னையும் இணை கூட்டினார் என்னும் கோபம் கனன்றது அவனிடம்.
“பாப்பா பலூன் கேட்டுச்சு வாங்கப் போனாங்க. ரொம்ப தாகமா இருந்துச்சு, அதான் தண்ணி குடிக்க வந்தேன்…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“உள்ளூர் மக்களே! உறவுக்கார சொந்தங்களே! வீரமுள்ள இளவட்டங்களே! நம்ம ஊர் மாப்பிள்ளைகளே முக்கியமாய் உங்களுக்கான போட்டி இப்போ ஆரம்பிக்கப் போகுது.
நியாயத்துக்கு இளவட்ட கல்லைத் தூக்குறவனுக்குத் தான் பொண்ணு கொடுக்கணும், என்ன பண்ணறது எங்கவிட்டு பெண்ணெல்லாம் கன்னியாவே இருந்துடக் கூடாதுன்னு மாப்பிள்ளைகளோட திறமை தெரிஞ்சும் போனா போகுதுன்னு பொண்ணை கட்டிக் கொடுத்துட்டோம்!
அதுக்காக அப்படியே விட்டுற முடியாதுல்ல, எங்க வீட்டுப் பெண்களை நீங்க எப்படி வச்சிருக்கீங்க… வச்சுக்கப் போறீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“பொண்ணை கட்டிக் கொடுத்த பிறவு தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க?” நக்கலாய் அந்தவூர் மாப்பிள்ளைகளில் ஒருவர் வினவ,
‘”கல்லைத் தூக்குறவர் எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு பெருமையாய் சொல்லுவோம்… தூக்காதவனை வீட்டோட மாப்பிள்ளையாய் மதிப்போம்” என மைக்கை வைத்திருந்த விழாக் குழுவின் தலைவர் சொல்ல, ஊரே சிரித்தது.
“உங்க வீட்டு பொண்ணுகளை விடவா இந்த கல்லு கனமா இருந்துறப் போகுது?” வேறொருவரின் கேள்விக்கு,
“வாங்க வந்து கல்லைத் தூக்கி எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு எங்களை பெருமை பேச வைங்கய்யா… கேட்டுக்கோங்க மக்களே இது மாப்பிள்ளை முறைக்காரர்களுக்கு மட்டுமே நடத்தப்படுற போட்டி.
இந்த ஊர் மாப்பிள்ளைன்னு இல்ல, நம்ம ஊர்ல அத்தை, மாமனை கொண்டிருக்க மாப்பிள்ளைகளும் கலந்துக்கலாம்… வாங்க வாங்க நீங்களும் சிங்கம் தான்னு நிரூபிங்க…” என மேடையில் இருந்தபடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்க,
மனைவிகளின் வம்படியான வற்புறுத்தலால் வந்தவர்களில் பலரால் கல்லை அசைக்க கூட முடியவில்லை. சிலரோ மல்லுக்கட்டி வயிறு வரை தூக்கினர். வெகு சிலரே மார்புயரத்திற்கு தூக்கினர். (தண்ணிக் கேனை தூக்குறதே பெரிய விஷயமா இருக்கு!)
“என்னய்யா மாப்பிள்ளை பார்த்து பொண்ணு கட்டுனீங்க…? எல்லோரும் ஆம்பிளைன்னு நிரூபிச்சிருக்கீங்களே தவிர வீரன்னோ மாவீரன்னோ நிரூபிக்க மாட்டேங்கறீகளே…! எவன் தோள் அளவுக்கு கல்லைத் தூக்கி மறுபக்கம் போடுறானோ அவன் தான் வீரன்.
கல்லை மறுதோளுக்கு மாத்தி முன்ன இருந்த இடத்திலேயே போடுறவன் மாவீரன். நம்ம ஊர்ல ஒரு மாவீரன் வேண்டாம், வீரன் கூடவா இல்லை…?” என மாப்பிள்ளைகளை கிழித்து தோரணம் கட்டினர் விழா கமிட்டியினரும், மச்சான் முறைக்காரர்களும். (நீங்க பாட்டுக்கு மைக்கு கிடைச்சுதுன்னு ஏதாவது சொல்லுங்க, வீட்டுக்குப் போனதும் யாருய்யா விளக்கம் வைக்குறது?)
“அத்தான் நீங்க ட்ரை பண்ணுங்க ப்ளீஸ்… ப்ளீஸ்…” என கெஞ்சும் தன் ஜில்லுக்காக களமிறங்கினான் வீரபாண்டியன்.
“வாங்க, வாங்க… வடமஞ்சுவிரட்டு புகழ் நன்னிலத்து வீரபாண்டியன்! இந்த வருஷம் மணம்முடிச்ச பெண்ணுக்காக இளவட்ட கல் தூக்க வந்திருக்கார்.
இந்த கல்லை நெஞ்சுகிட்ட தூக்கிறப்ப ஒரு அமுக்கு அமுக்கும் அதையும் தாண்டி தூக்கிறவன் தன்னை நம்பி வந்த பொண்ணை எப்படியாப்பட்ட கஷ்டத்தில இருந்தும் காத்திடுவான்! குடும்ப பாரத்தை சுலபமா சுமந்துருவான்.
பார்க்கலாம் வீரபாண்டியன் இதையெல்லாம் உண்மையாக்குவாரா… வீரனாவோ, மாவீரனாவோ மாறுவாரா? இல்ல… பேர்ல மட்டும் தான் வீரத்தை வச்சிருக்காரான்னு இப்ப தெரிஞ்சு போயிரும்! ஆரம்பிங்க மாப்பிள்ளை…” என உத்தரவு கொடுக்க,
தன் முன் நின்று கைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் மனையாளிடம் ஓர் பார்வையை செலுத்தியபடி தம்பிடித்து கல்லை தூக்கி, தோளுக்கு உயர்த்தி மறு தோளுக்கு மாற்றி கீழே போட கைதட்டலும், விசில் சத்தமும் ஊரையே அதிரச் செய்தது.
பலமான கைத்தட்டலுடன் அருகே வந்த மனையாள் சந்தோச மிகுதியில் தழுவிக் கொள்ளக்கூடாதே என்னும் பயத்தில் அவளது கரங்கள் பற்றி குலுக்கி நிலைப்படுத்தினான்.
“செம அத்தான்!” என குதூகலிக்க அவனை முத்தமிட அவள் மனம் ஆளாய் பறப்பது அவனுக்கும் புரிய,
“எதுவா இருந்தாலும் வீட்ல போய் கொடு, இப்போ வேண்டாம்” என மென்குரலில் முணுமுணுத்தான்.
“பட்டிக்காட்டான்!” தன் உள்ளம் கண்டுகொண்டாலும் தன்மானம் காக்க விழிப்போடு இருப்பவனின் மீது செல்லக் கோபம் தோன்ற சொல்லியே விட்டாள்.
“இருந்துட்டுப் போறேன் விடுடி!” என மந்தகாசமாய் சிரித்து வைத்தான் அந்தக் கள்ளன்.
மதியம் கடா வெட்டு விருந்துக்குப் பிறகு அனைவரும் சாவதானமாய் பேசிக் கொண்டிருக்க,
“இந்த வருஷம் வடமாடு பிடிக்கிறீங்கள்ல மாப்பிள்ளை?” என கேட்ட தங்கையின் கணவனிடம்,
“பாக்கலாம் மச்சான், யாரும் பிடிக்கலைன்னா எறங்கிடுவோம்!” என்றதைக் கேட்ட அவன் மனைவி,
“வடமாடு பிடிக்கிறதுன்னா என்ன அண்ணி?” என தன் அருகில் இருக்கும் நாத்தனாரிடம் கேட்டாள்.
“வட்ட வடிவத்துல கம்புகளால் வேலி போட்டு அதோட மையத்துல மாட்டை கட்டியிருப்பாங்க. அதோட கழுத்து கயிறை நீளமா விட்டிருப்பாங்க. முழு வட்டத்தையும் காளையால சுத்தி வர முடியும். இங்க மஞ்சுவிரட்டு மாதிரி நிறைய பேர் போக முடியாது.
ஒத்தைக்கு ஒத்தை தான். நேரா பாயிற மாடு, தரை பாய்ச்சல் மாடுன்னு விதவிதமான மாடுகள் இருக்கும். அதுக்கேத்த மாதிரி உத்தியை உபயோகப்படுத்தி காளையை அடக்கனும். இதுல எப்போதுமே அண்ணன் தான் ஜெயிப்பாங்க!” என்றதும்,
“அதனால தான் வட மஞ்சுவிரட்டு புகழ் வீரபாண்டியன்னு உங்க அண்ணனுக்கு பேர் வந்துச்சா, மைக்கில சொன்னாங்களே?” என ஆர்வமாய் கேட்க,
“ஆமா அண்ணி, நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நம்ம ஜமீன் அவரோட காளையை இந்த போட்டிக்கு தயார் பண்ணி, ‘இந்த காளையை அடக்கிறவங்களுக்கு என் பொண்ணை கட்டிக் கொடுத்து, ஜமீன்ல பாதியை பிரிச்சு கொடுக்கிறேன்னும் அறிவிச்சாரு. பல ஊருக்கு போய்ட்டு வந்துச்சு அந்தக் காளை.
அப்படித் தான் நம்ம ஊருக்கும் வந்துச்சு. நிறைய பேரு முயற்சி பண்ணினாங்க. யாராலையும் முடியல. மாட்டை பார்க்கவே பயங்கரமா இருந்துச்சு. அது தரைப் பாய்ச்சல் மாடு. கீழே விழுந்தா குத்தி தூக்கிடும்! நிறைய ஊருக்குப் போய் யாருமே பிடிக்கலைன்னு வருத்தமும், கோபமுமா இருந்தாரு ஜமீன். அதுல,
“என்னடா, சுத்து வட்டாரத்துல ஒரு வீரன் கூட இல்லையா? எல்லாருமே சோத்துக்கு செத்தவங்களா” ன்னு வார்த்தையை விட்டுட்டாரு! அதனால அண்ணன் இறங்கிட்டாங்க. அண்ணனுக்கும் அது சவாலா இருந்தாலும் காளையை அடக்கிட்டாங்க, ஜமீனுக்கு ரொம்ப சந்தோசம். வீட்டு மாப்பிள்ளை ஆக்கிக்கிறேன்னு சொன்னப்ப, அண்ணன்,
“உங்க பொண்ணுக்கோ, சொத்துக்கோ ஆசைப்பட்டு காளையை அடக்கல! நன்னிலத்துக்காரங்களும் தினவும், வீரமும் உள்ளவங்கன்னு உங்களுக்கு தெரியப்படுத்தத் தான் பண்ணினேன். உங்க இடத்துலே நல்ல மாப்பிள்ளை பார்த்து உங்க பொண்ணை கட்டிக் கொடுங்க. ஒரு வார்த்தை சொல்லிவிடுங்க, கல்யாண வேலை பார்க்க வரேன்”னு சொன்னதும்,
ஜமீன்தாருக்கு ரொம்ப சந்தோசம்! இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சும் தன்னிலைல இருந்து மாறாத நீ உண்மையான வீரன் தான்னு பாராட்டி, சொத்தை மட்டுமாவது வாங்கிக்க சொன்னாங்க. அண்ணன்,
“காசு பணம் வாங்கிக்கிட்டா என் வீரத்தை அடமானம் வச்ச மாதிரி ஆயிடும் அதனால் வேண்டாம் “னு மறுத்திட்டாங்க. அதுல இருந்து ஜமீன்தாருக்கு அண்ணன்னா ரொம்ப இஷ்டம். என சொல்லி முடிக்க,
ஈஸ்வரியோ, மற்றதையெல்லாம் புறந்தள்ளி, “உங்க அண்ணன் ஏன் ஜாமீன் வீட்டுப் பெண்ணை கட்டிக்கலை?” என்று அதிராமல் பதறாமல் குண்டை தூக்கிப் போட, சிறு வயதிலேயே ராணியை பேசி வச்சிருந்தது தான் காரணம் என சொல்ல முடியாமல் சுந்தரி திருதிருக்க, இது தான் சரியான சமயம் என,
‘எனக்காகத் தான் அத்தான் ஜமீன் வீட்டு பொண்ணை வேண்டாம்ன்னு சொன்னாங்க! அப்படிப்பட்டவங்களை அவங்க தங்கச்சி கல்யாணத்தை காரணம் காட்டி நீ தாலி வாங்கிக்கிட்ட!’ என குத்திக்காட்ட வாய் திறக்க, அதே சமயம்
“உன்னைத் தான் கட்டிக்கணும்னு இருக்கும் போது நான் எப்படி ஜமீன் வீட்டு பொண்ணை கட்டிக்குவேன் ஈஸ்வரி?!” என சிரித்தபடி சொல்ல, அதைக் கேட்டு, ராணியைத் தவிர அனைவருமே சிரித்தனர். சூழல் சுமூகமாகியது. (செம சமாளிப்பு மாப்ள!)
அன்பரசி புது மணத் தம்பதியருக்கு தான் வாங்கி வைத்திருந்த புத்தாடைகளைக் கொடுக்க,
“மாத்திக்கோ ஈஸ்வரி!” என்றபடி தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். சுந்தரியின் அறையில் தயாராகிக் கொண்டிருந்தவளிடம் மல்லிகைப் பந்தை கொடுத்து அனைவரும் பாராட்டும்படி கோலமிட்டதோடல்லாமல் தான் சொன்னதற்காக மட்டுமே தன் அங்கீகாரத்தை விட்டுக்கொடுத்தவளை இறுக அணைத்து முத்தமிட வந்தவன்,
தன்னவளை புடவையில் பார்த்ததும், காலையில் ஊர் பேர் தெரியாத யாரோ ஒரு பெண்மணி தன்னையும் ராணியையும் இணைத்துக் கூறியதற்கு இவளது தோற்றமும், தன்னிடமான விலகலும் தான் காரணம் என்பது நினைவு வந்து தொலைக்க, மறைந்திருந்த கோபம் முந்திக் கொண்டது. முகத்தில் விரவியிருந்த புன்னகை காணாமல் போக சிறு கடுமை வந்து ஒட்டிக்கொள்ள,
“இதை எல்லாருக்கும் கொடுத்துட்டு நீயும் வச்சுக்க ஈஸ்வரி!” என்று சொன்னவன்,
“இதே மாதிரி காலையில் உடுத்தியிருந்தீன்னா யாரும் பொண்ணு கேட்டிருக்க மாட்டாங்க பொம்மை! ராணியால அத்தான்னு இயல்பா கூப்பிட முடியுது ஆனா உனக்கு இன்னும் வரலை! அதனால தான் அந்த அம்மா என்னையும் ராணியையும் கணவன் மனைவியா நெனைச்சுட்டாங்க!” என சிடுசிடுக்க,
கணவன் தனியாக சிக்கினால் இளவட்ட கல்லை தூக்கிய போதே முத்தமிட துடித்த மனதிற்கான வாய்ப்பை கொடுக்க எண்ணியிருக்க அவனது கோபம் அவளிடமும் சினத்தை உண்டாக்க,
“நீங்களும் தான் என்னை விட்டுட்டு ராணிக்கு சப்போர்ட் பண்ணுனீங்க!” என அவளும் தன் மன வருத்தத்தை பகிர்ந்து கொண்டாள்.
“ஆமா, இந்த 4 கிராம் தங்கக்காசு வந்து தான் நம்ம வீடு நிறையப் போகுது! அங்க இருந்த எல்லாருக்குமே உன்னோட கோலம் தான் பெஸ்ட்ன்னு தெரியும். உன்னை பாராட்டவும் செஞ்சாங்க! அதுக்கு மேல என்ன வேணும் உனக்கு?”
“என்ன இருந்தாலும், முதல் பரிசு வாங்கினது யாருன்னு கேட்டா, ராணியைத் தானே கை காட்டுவாங்க! என்னோட கோலத்துக்கு அதுக்கான தகுதி இருந்தும் கிடைக்கலைல்ல… நீங்க தான் காரணம்! உங்களால தான் வேண்டாம்ன்னு சொன்னேன்!” என சினத்துடன் சீற,
“இது நம்ம வீடில்லை முட்டாளே! இந்த பஞ்சாயத்து இங்க அவசியமும் இல்ல! தேவையில்லாம பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் உன்னை விட்டுக்கொடுக்கச் சொன்னேன். அதனால ஒன்னும் குறைஞ்சு போயிடலை. வீம்புக்கு சண்டை போடுறதை நிறுத்திட்டு கிளம்புற வழியைப் பாரு!”
“நானா வீம்புக்கு பண்ணறேன்? நீங்க தான் வித்தியாசமா நடந்துக்கறீங்க… விட்டகுறை தொட்டகுறை போல என்னைவிட ராணி தான் உங்களுக்கு முக்கியமா தெரியிறாங்க…” என வார்த்தைகளை விட்டாள்.
“ஈஸ்வரி!” என்னும் அதட்டலுடன் அவளை நோக்கி நீண்ட தனது கரத்தை வெகு சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்து,
“என்னை நம்பாத உன்னோடயெல்லாம் குடும்பம் நடத்த வேண்டியிருக்கும் என் தலையெழுத்தை என்னன்னு சொல்றது? காதலுக்கு அடிப்படையே நம்பிக்கை தான், அதுவே இங்க தகராறு… ஆனால் மூச்சுக்கு முன்னூறு தரம் நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்றதுல ஒன்னும் குறையில்லை. வந்த இடத்தில என்னை சீண்டிப் பார்க்காத.” என தன் கோபத்தையும், வருத்தத்தையும் பதிவுசெய்துவிட்டே சென்றான்.
தன் உளறலும், அதனால் ஏற்பட்ட கணவனின் மனவருத்தமும் புரிய, தன் காதல் மீதே சந்தேகம் வந்தது.
‘காதல் என்பது ஒருவர் மற்றவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தானெனில் அவன் சொல்வது நிஜம் தானோ?!’ என குழம்பிப் போனவள் அங்கேயே அமர்ந்து, சுய அலசலில் ஈடுபட,
‘பட்டென ராணியையும், கணவனையும் இணைத்து பேசியதற்கு காரணம் நம்பிக்கையின்மையா அன்றி கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற உரிமை உணர்வா?’ விடை தேட முற்பட, அதை கலைக்கும் விதமாய் உள்ளே வந்த சுந்தரி, அவளை கையோடு அழைத்துச் சென்றாள்.
வீரபாண்டியோ, அனைவருக்கும் முன்னால் கோவிலில் ஆஜராகிவிட்டான். மனைவியோடு மல்லுக்கு நின்றுவிட்டு வந்தாலும் மனமெல்லாம் அவளிடமே நிலைபெற்றிருந்தது.
‘ஆளு இத்துனூண்டா இருந்துகிட்டு எவ்ளோ பெரிய பேச்சு பேசுறா? அர்த்தம் புரிஞ்சு பேசுறாளா இல்ல கோபத்துல உளர்றாளா? கோபம் வந்துட்டா படபடன்னு வார்த்தைகளை விட்டுட்டுடறா.
அவ்வளவு எடுத்து சொன்ன பிறகும் விட்ட குறை, தொட்ட குறைன்னு சொல்றா… என் மேல அவளுக்கு நம்பிக்கை இல்லைன்னு வருத்தப்படவா இல்ல… இவ்வளவு உரிமை எடுத்துக்கிறான்னு சந்தோஷப்படவா?! என்னையே குழப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறா? இவளை வச்சுக்கிட்டு… முடியலைடா சாமி!’ என்று நொந்து போனான்.
அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடிக்க, மருதாணி இடும் போட்டியில் ராணியும், அவளது அத்தை மகளும் கலந்து கொள்ள, ஓவியம் வரைந்து பழக்கப்பட்டவள் என்பதால் எந்த தடுமாற்றமும் இன்றி சுந்தரியின் கையில் ஈஸ்வரி அழகாக மருதாணி இட்டாள்.
இப்பொழுது அனைவரது பாராட்டையும் பெற்று ஒரு மனதாய் வெற்றி வாகை சூடினாள். கண்கள் இரண்டும் கணவனை சுற்றியே வட்டமிட, மெச்சுதலாய் ஒரு பார்வை கூட பார்க்காமல் கோபத்தை இன்னும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தான்.
வடமஞ்சுவிரட்டுக்கான நேரம் துவங்க, ஒலிபெருக்கியில் அதற்கான அழைப்பு விடப்பட்டது. சின்னமனூர் செவலைக் காளை, தங்க நெற்றிப் பட்டமும், கழுத்தில் பட்டுத் துண்டும், சலங்கை வைத்த வெள்ளிப் பட்டையும் கால்களில் தண்டை கொலுசும் அணிந்து, தன் கூரிய கொம்புகளை மண்ணில் குத்தி வேக மூச்சுகளை விட்டபடி சிலிர்த்துக் கொண்டு நின்றது.
மூன்று வருடங்களாய் யாரிடமும் பிடிபடாமல் செல்லும் இடமெல்லாம் வெற்றி வாகை சூடி வந்த காளை. இதை பாக்கு வைத்து, தங்கள் ஊர் மஞ்சுவிரட்டுக்கு அழைப்பதற்கே முன்பதிவு செய்து ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். அவ்வளவு பேரும், புகழும் பெற்றிருந்த காளை என அதன் சிறப்பு பற்றி அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாடு பிடி வீரருக்கும் பத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். அதற்குள் தங்கள் திறன் காட்டி முன்னோர் வழக்கப்படி ஒற்றைக்கு ஒற்றையாய் காளையை அடக்க வேண்டும். கூட்டமாக இறங்குவது அனுமதிக்கப்படாது என விதிமுறை விதிக்கப்பட, ஒவ்வொருவராய் முயன்றனர்.
பலரால் அதன் அருகில் கூட போக முடியவில்லை. சீறிப் பாய அது தரைப்பாய்ச்சல் காளை என்பது தெரிந்தே பலர் களத்தில் இறங்க பயந்தனர். நின்று விளையாடியது சின்னமனூர் செவலைக் காளை.
ஈஸ்வரி தன் நாத்தனாரிடம்,”உங்க அண்ணன் எப்போ தான் இறங்குவாங்க?” என தனக்கு எதிர்புறத்தில் நிற்பவனைக் காட்டி கேட்டாள்.
“அண்ணன் இறங்கிட்டா காளையை அடக்கிருவாங்க அண்ணி, அதனால எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்கணும்ன்னு கடைசியா தான் களத்துல இறங்குவாங்க”
‘இத்தனை பேரால பக்கத்தில் கூட நெருங்க முடியாத காளையை கணவன் எப்படித் தான் அடக்குவான்? உடன்பிறப்பு இத்தனை பெருமை பேசுகிறதே என்ன தான் செய்வான் என்று பார்த்தே ஆக வேண்டும்!’ என ஆர்வமாய் காத்திருக்க, ஆடுகளம் எந்த சலசலப்புமின்றி அமைதியாய் இருந்தது.
பிடிபடாத காளைக்கு ஊர் சார்பில் காணிக்கை வைத்து மாலை மரியாதையை செய்து போட்டி நிறைவு செய்யப்படும் என்பதால் விழா கமிட்டியினர்,
“என்னப்பா, களமிறங்க யாரவது இருக்கீங்களா… இல்ல காளைக்கு காணிக்கை வச்சுடலாமா” என கடைசி அழைப்பு விடுக்க,
கையில்லா வெள்ளை பனியனும், இடையில் துண்டுமாய் வேஷ்டியை தார்ப்பாய்ச்சியாய் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினான் வடமஞ்சுவிரட்டு புகழ் வீரபாண்டியன்.
“இது தான்யா போட்டி, ஆளுக்கேத்த காளை…. காளைக்கேத்த ஆளு! இது தான் சரியான ஜோடி! சின்னமனூர் செவலைக் காளையும், வடமஞ்சுவிரட்டு வீர பாண்டியனும் நேருக்கு நேர் தங்கள் திறன் காட்ட தயாராகிவிட்டார்கள்…!” என்று ஒலிபெருக்கி ஊருக்கே அறிவித்துக் கொண்டிருந்தது.
முதல் ஐந்து நிமிடம், சரிக்குச் சரியாய் பிடிப்பதும் தாக்குவதுமாய், சீறிப் பாய்ந்து தினவு காட்டினர்.
“சின்னமனூர் செவலையன் வீரபாண்டியனுக்கே தண்ணீர் காட்டுகிறான்! வீரியமான காளை தான்! செவலையன் மேல பந்தயப் பணம் கட்டுறவங்க கட்டுங்க! மாடு பிடிபட்டால் பிடித்தவருக்கு பந்தையப் பணம், நெற்றிப் பட்டம், கழுத்து வெள்ளிமணி பட்டை, தண்டை கொலுசுகள் அது போக பரிச பணம்… அத்தனையும் மாடு பிடி வீரனுக்குச் சொந்தம்!!” என அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
மார்புப்படம் விரித்து, வியர்த்து வழிய, மண்ணை அள்ளி உள்ளங்கைகளில் தேய்த்துக் கொண்டு ஒரே பாய்ச்சலில் காளையின் திமில் பிடித்துவிட்டான்.
செவலையனோ முழு வட்டமடித்து… சீறி, உடல் குலுக்கி கீழே தள்ள, அந்த நொடி அவன் மனைவி பயத்தில் உடல் வெடவெடக்க கணவனுக்கு எதுவுமாகிவிடக் கூடாது என மனம் பிதற்ற, இமை கொட்டாது உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இத்தனை ஆபத்தான வீர விளையாட்டா இது?! ஒற்றை குத்தில் உயிர் வாங்கிவிடும் போலிருக்கிறதே!’ நிற்க முடியாமல் கால்கள் வெடவெடக்க, வேலியை பிடித்தபடி இப்பவோ அப்பாவோ என மயங்கி விழத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
“இதுக்குத் தான் இவனை இறங்கக் கூடாதுன்னு தலைப்பாடா அடிச்சுக்கிறேன்! என்னோட சேர்த்து கட்டிக்கிட்டு வந்தவளையும் கலங்கடிச்சுக்கிட்டு இருக்கான். ஐயா பாண்டி…! போதும் வந்துருய்யா!” என்ற அன்னையின் குரலெல்லாம் அவன் காதுகளுக்கு எட்டவேயில்லை.
“நேரம் முடியப்போகுது… கடைசி ரெண்டு நிமிஷம் தான் இருக்கு. மாட்டை அடக்கி மானம் காப்பாத்துங்க மாப்பிள்ளை!” என மச்சான் முறைக்காரர்கள் கூவ,
“வாயை மூடுங்கடா எடுபட்ட பயலுகளா! உங்க ஊரு மானம் காப்பாத்த நீங்க குதிங்கடா! என் மகனா கிடைச்சான்…! எஞ்சாமி வந்துருய்யா…!” என ஆடுகளத்தை சுற்றிச் சுற்றி வந்தார் குணவதி.
அது தரைப்பாய்ச்சல் மாடு என்பதால் கீழே கிடப்பவனை தன் கூரிய கொம்புகளால் குத்தி தூக்க எத்தனிக்க, தன் வலிய கரங்களால் அதன் கொம்புகள் பற்றி ஒரே தாவலில் எழுந்து நின்றான். பிடித்த கொம்பை விடாமல் மூக்கில் ஒரு கையை விட்டு அழுத்த, தன்னை விடுவித்துக் கொள்வதற்காக சீற்றத்துடன் தலையசைத்து அவனையும் இழுத்தபடி சுற்ற, அவன் மார்பிலும், புஜத்திலும் கூரிய கொம்புகள் கீறின. இருந்தும் பிடியை விடாமல் காளையை தன் முழுத்திறன் காட்டி மண்ணில் சாய்த்தான்.
வீரபாண்டியன் வெற்றி பெற்றதாய் அறிவித்து, மாட்டின் உரிமையாளர் வீரபாண்டியனுக்கு நெற்றி பட்டத்தை கழட்டிக் கொடுப்பதற்காக காளையின் நெற்றியில் கை வைக்க, அவர் கரம் பிடித்து தடுத்தவன், மறுப்பாய் தலையசைத்து,
“நெற்றிப்பட்டத்தை கழட்டுனா உங்களுக்கும், சின்னமனூர் செவலையனுக்கும் கவுரவத்துல ஒரு மாற்று குறைச்சல்! உங்களைப் போல பல பேரு காளைகளை வளர்த்து எங்களைப் போல பல பேரோட வீரத்தை வளர்க்கணும். அதுக்கு என்னோட பங்கா பரிசுப் பணம், நீங்க கொடுக்கிறேன்னு சொன்ன காளையோட மத்த ஆபரணங்களையும் உடைமைக்காரங்களான நீங்களே வச்சுக்கோங்க!
உங்க கையில இருந்து ஒத்த ரூபா வாங்கினாலும் இவ்வளவு நேரம் பல பேரோட நின்னு போராடின அந்த காளைக்கு மரியாதை இல்லாம போயிடும்!” என பெருந்தன்மையாய் மறுக்க, கரகோஷம் காதைப் பிளந்தது. காளையின் உரிமையாளர் கட்டித் தழுவிக் கொண்டார்.
ஆரவாரமாய் மச்சான்ங்கள் எல்லோரும் அவனை தூக்கிக் கொண்டு வர, மாட்டின் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களில் இருந்து ரத்தம் வழிய வருபவனை கண்டவள், அவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து நின்ற தன் தைரியம் காணாமல் போக, மயங்கிச் சரிந்தாள். அன்னையும், தங்கையும் அவளைத் தாங்கிப் பிடிக்க,
“ஈஸ்வரி!” என்ற பதட்டமான அழைப்புடன் அவளிடம் விரைந்தான் வீரபாண்டியன். அவளைத் தன் மடியில் தாங்கி, கன்னம் தட்டி, தண்ணீர் தெளித்து எழுப்ப, ரத்தக் கரையுடன் இருப்பவனை கண் திறந்து பார்த்தவள், மீண்டும் மயங்கிச் சரிந்தாள்.
இது வேலைக்காகாது என ஊர் பார்க்க எந்த தயக்கமும் இன்றி அவளை தன் கைகளில் சிறுகுழந்தையாய் ஏந்தி முதலுதவிக் குழுவிடம் அழைத்துச் சென்றான். இதைக் கண்ட ராணிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“இப்போ எதுக்கு இவ மயங்கி விழுந்தா? அத்தானுக்கு சின்னதா தான் காயம் பட்டிருக்கு. அதுக்கே மயக்கம் வருதாமா? என்னமா நடிக்கிறா?” என தன் உறவுக்காரியிடம் பொரிந்து கொட்ட, (அவள் மாமா… அவள் மயங்குறா! உனக்கென்ன போச்சு?)
“ஊர் பார்க்க உன் அத்தான் இவளை தூக்கிட்டு திரியணும்னு தான் எல்லாமே… கைகாரி! வெளிநாட்ல வளர்ந்தவள்ல… அதான் கூச்ச நாச்சமே கிடையாது…” என அவளும் கூட்டு சேர்ந்துகொண்டாள்.
உண்மையாகவே மயங்கி விழுந்தவளை உரிமையுள்ள அவள் கணவன் தூக்குவதற்கு இத்தனை வயிற்றெச்சல் உண்டானது அவனை கைநழுவவிட்டவளுக்கு… இது எங்கு போய் முடியுமோ…?
நாளை சொல்லுவான்…