OVS-17

OVS-17

“உங்களுக்கு ஒன்னுமே தெரியாதுல்ல? சும்மா நடிக்காதீங்க அத்தான்! பேஸ்புக்குல என்னையும், பெரியப்பாவையும் வானளாவ புகழ்ற வீரபாண்டிய கட்டபொம்மன் நீங்க தான்னு தெரியும்!”

“சோ ஸ்வீட் ஜில்லுக்குட்டி! இப்படி பெரிய கருத்தா சொன்னா தான் நம்மை ஃபாலோ பண்ணி நாலு பேர் புகழ் பாடுவாங்க. ஊரும், உலகமும் நன்னிலத்தை திரும்பிப் பார்க்கும். சரி, அம்மா எங்கடா?” என கன்னம் வருடினான்.

“இஞ்சி டீயோட ஆர்டர் கூடுதலா வந்துச்சா, அதான் தயார் பண்ணிட்டு இருக்காங்க!” என தண்ணீரை கொண்டு வந்து கொடுக்க,

“சீக்கிரம் கிளம்புடா, வெளியில் போய்ட்டு வரலாம்” என துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் செல்ல, அவன் பின்னோடு சென்றவள்,

“அத்தான்! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே!” என கிணற்றுக் கட்டையின் அருகில் நிற்க,

“நீ இப்படி கொடுக்கு பிடிக்கிறதைப் பார்த்தா ஏதோ முக்கியமான விஷயம் போல தெரியுது. குளிச்சுட்டு வரேன் அப்புறம் சொல்லு!”

“நான் இப்போவே சொல்றேன். நீங்க குளிச்சுகிட்டே கேளுங்க” என கிணற்றுக் கட்டையில் அமர,

“ஏய்! எங்க உட்காருற? விழுந்து வைக்கிறதுக்கா?!” என்றபடி தன் பொம்மையை தூக்கி துணி துவைக்கும் கல்லில் அமர வைத்தான்.

“நானும் பெரியப்பாவும் நம்ம ஊர் தெரு விளக்கையெல்லாம் சோலார் விளக்கா மாத்தலாம்னு நினைக்கிறோம்”

“ம்…” அவன் வார்த்தை அவளை எட்டவேயில்லை. வெற்று மார்பும், இடையில் துண்டுமாய் தண்ணீரை இறைத்து தலையில் ஊற்றியபடி நீர் சொட்டச்சொட்ட நிற்பவனிடம் மனம் மயங்கிக் கிடக்க, (எத்தனை நாளைக்கு தான் ஹீரோயின் குளிக்கிற சீனையே காட்டுவாங்களாம்… அதான் ஒரு சேஞ்சுக்கு…) சூழல் மனதில் பதியாமல் அவனையே விழுங்கிக் கொண்டிருக்க, இதழோரச் சிரிப்புடன் கையில் நீர் எடுத்து அவள் முகத்தில் தெளிக்க, தலை சிலுப்பி இயல்புக்கு வந்தவள்,

“அத்தான்…” என சிணுங்கியபடி முகம் துடைக்க,

“இதுக்குத் தான் குளிச்சுட்டு வந்துடுறேன்னு சொன்னேன். விஷயம் என்னன்னு சொல்லாம என்னைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருக்கியா?” என கண் சிமிட்டிச் சிரித்தான். (உன் பொண்டாட்டி உன்னை ஜொல்லுறதை ஊரே பாக்குது தம்பி… வியூவர்ஸ் என்ன சொல்லுவாங்களோ? எங்க கிரகம் உங்ககிட்ட வந்து மாட்டிகிட்டு ரீடர்ஸ் கிட்ட திட்டு வாங்கப் போறோம் போடா!)

“கண்டுகொண்டானே கள்ளன்!?” என வெட்கத்தில் நிலம் பார்க்க,

“தினமும் தானே பார்க்கிற, இருந்தும் ஒவ்வொரு முறையும் புதுசா பார்க்கிற மாதிரியே கண்களால் என்னை கபளீகரம் பண்றியே ஏன்?”

“ஏன்னா நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க அத்தான்!” கண்கள் மலரச் சொன்னாள். 

“சில பல மாதங்களுக்கு முன்ன, என்னைப் பார்க்க பயந்த பொம்மையா இது? என்ன சொல்லு… அழகில் என் பொம்மை குட்டியை யாரும் அடிச்சுக்க முடியாது. பேரழகு பொம்மை!” என அமர்ந்திருந்தவளின் அருகே வந்து அணைத்துக்கொள்ள, ஈரம் இடம் மாற, சில்லெனும் அவனது ஸ்பரிசம் ஜில்லை சிலிர்க்க வைக்க,

“வெளியே போகனுமா அத்தான்? (போங்க, போகாம இருங்க… எங்களுக்கு சீனை மாத்தணும். எட்டி நில்லுங்கடா!)

பட்டென விலகிக் கொண்டவன், “கண்டிப்பா போகணும்! என்னை டைவர்ட் பண்ணாம கிளம்பு ஜில்லு!” தப்பித்தோம் பிழைத்தோம் என தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டான். பைக் பிரயாணத்தின் போது அவனது தோளைச் சுரண்ட,

“என்னடா?” என்றான் குழைவாய்.

“நான் பேசணுமே…!”

“அது தான் சொல்லிட்டியே, சோலார் ஸ்ட்ரீட் லைட் தானே? விசாரிக்கிறேன். நம்ம சமுதாய கூடத்துக்கும் சேர்த்து போட்டா, பசங்க கரண்ட் கட்டாகுற சமயத்தில் அங்க வந்து படிப்பாங்க, நான் பார்த்துகிறேன் விடு!”

“வோ ஐ நி சோங் அர்!” என அவன் இடை தழுவி முதுகில் கன்னம் அழுத்திக்கொள்ள,

“பொம்மை பப்ளிக் ப்ளேஸில என்ன பண்ற? கையை வச்சுக்கிட்டு சும்மா வர மாட்டியா?” (உன் முதுகு எப்போ பப்ளிக் பிளேஸ் ஆச்சு?)

“ம்… லவ் பண்றேன்! என் புருஷன்! என் இஷ்டம்!”

“வீட்ல போய் கொஞ்சினா ஆகாதா? இல்லை ஏதாவது மோகினி வந்து உன் புருஷனை ராத்திரிக்கு ராத்திரி கட்டிலோட தூக்கிட்டு போயிடுமா?” (நீ என்ன ஜகன்மோகினி பட ஹீரோவா?)

“ஆகாது, ஆகாது! நானெல்லாம் ரொம்ப ரொமான்டிக்கான பொண்ணு, உங்கள மாதிரி காதல்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்குற வீராப்பு விருமாண்டியில்ல! நாம லைட் போட்டுட்டு தானே தூங்குறோம், அந்த வெளிச்சத்தில் எந்த மோஹினி வரும்?

அப்படியே வந்தாலும் இந்த ஆங்கிரி பேர்ட் கண்ணை விரிச்சு முறைச்சா கதறிக்கிட்டு ஓடியே போயிடும்” என கலகலத்துச் சிரிக்க,

“இந்த வாய் தான் உன்னை வாழ வைக்குது!” என முணுமுணுத்தாலும், இடை தழுவியிருந்த கரங்களை விலக்கிவிடவில்லை அவளது செல்ல பட்டிக்காட்டான்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு அழைத்து வந்திருந்தான். ஆச்சர்யமும், மகிழ்ச்சியுமாய் கன்னத்தில் உள்ளங்கைகள் பதித்து விழி விரிய பார்த்தவளை தோளோடு அணைக்க, அடுத்த அதிசயம் போலும் அவள் அவனை நோக்க,

“இப்படியே போகலாம் ஜில்லுக்குட்டி! இல்லன்னா என் தங்கச்சின்னு நினைச்சு சைட் அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. இனி எவனாவது பார்ப்பான்?” என புருவம் உயர்த்த, மந்தகாச புன்னகையுடன்,

“சோ ஸ்வீட் அத்தான்!” என கரத்தோடு கரம் பிணைத்துக் கொண்டாள். கோவிலையும், ஆவுடையாரையும் கண்டவளுக்கு வியப்பு! வியப்பு… வியப்பு தான். மற்றவற்றைப் பற்றி சிந்திக்க முடியாமல் மனப்பிறழ்ச்சி உண்டாக அதிலேயே நின்றுவிட்டாள்.

“ஜில்லு…ஓய்! ஈஸ்வரி…!” என தோள் தட்ட

“சாரி அத்தான், பார்க்கும் போதே இவ்வளவு மலைப்பா இருக்கே… இதை கட்டின ராஜராஜ சோழனுக்கும், அவரோட ஆட்களுக்கும் கூட பிரம்மிப்பா தானே இருந்திருக்கும்!”

“வாவ், ஜில்லுக்குட்டி! இதைக் கட்டினது இராஜராஜன்னு உனக்கு தெரியுமா?” வேண்டுமென்றே ஆச்சர்யம் போலும் கேட்க, சிறு முறைப்புடன்,

“நாங்களும் இந்த ஊர்க்காரி தான்!” என முகம் திருப்ப,

“அது சரிதான்! உனக்கொன்னு தெரியுமா ஜில்லு… பூர்வ ஜென்மத்துல நாம எங்க பிறந்து வாழ்ந்தோமோ, அங்கேயோ இல்ல அதைச் சுற்றியோ தான் திரும்பத் திரும்ப நம் பிறப்பும், வாழ்க்கையும் இருக்குமாம். அப்படி பார்த்தா இந்த கோவிலை கட்டும் போது நாமும் இங்க தான் இருந்திருப்போம்.

நீ மிகச் சிறந்த ஓவியர் யாருக்காவது மகளாகப் பிறந்திருப்ப, நான் உன்னைப் பார்த்து மயங்கி, கிறங்கிக்கிட்டே கல் சுமக்கும் அடிமை வீரனா இருந்திருப்பேன். விட்ட குறை, தொட்ட குறை தான் சம்பந்தா சம்பந்தம் இல்லாத போதும் இந்த ஜென்மத்திலும் தொடருது” என செல்லமாய் மூக்கை கிள்ள,

“நீங்க!? என்னை பார்த்து ஜொள்ளுவிட்ட அடிமை வீரன்…? வாய்ப்பே இல்லை! ராஜராஜ சோழனோட மெய்க்காவல் படை வீரனா இருந்திருப்பீங்க, அதான் இன்னும் கடுமையா, இளக்கமே இல்லாம இருக்கீங்க, அப்பவும் உங்களைப் பார்த்து பார்த்து இம்ப்ரஸ் ஆனது பத்தாதுன்னு இப்போ போலவே இம்ப்ரஸ் பண்ணவும் போராடியிருப்பேன்னு நினைக்கிறேன்” என பரிதாபமாய் சொன்னாள். வாய்விட்டுச் சிரித்தவன்,

“இம்ப்ரஸ் பண்ணியே ஆகணும்ங்கிற இந்த வீம்பு தான்டீ உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்! இதுக்காகவே நம் ஊருக்கும் நிறைய நல்ல விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சுட்ட. நீ எள்ளுன்னா எண்ணையா நிக்கிறார் உன் பெரியப்பா.

நேத்து போன் பண்ணி, என் மக ரொம்ப நல்ல திட்டமெல்லாம் வச்சிருக்கு, உங்களை மட்டுமே பார்த்துக்காம என் புள்ளைக்கும் எல்லாத்துலயும் உதவி ஒத்தாசை பண்ணி ஊர் நலத்தையும் பாருங்க மாப்பிள்ளைன்னு அறிவுரை சொல்றார். அப்படி என்ன தான் திட்டம் வச்சிருக்க ஜில்லு? உனக்கு என்ன உதவி வேணும், சொல்லு?” என கரம் பிடித்து கோயில் பக்கவாட்டில் இருந்த புல் தரையின் அருகே அமர்ந்தபடி கேட்டான்.

“நம்ம ஊரை சிறந்த “மாதிரி கிராமமா” மாத்துறது தான் என் திட்டம். அடிப்படை வசதிகள் மட்டுமில்லாம சிறப்பான விஷயங்களும் பண்ணனும். முதல்ல நல்ல சுகாதாரமான சுற்றுச்சூழல். அதுல பெரியப்பா பெஸ்ட்ன்னு தான் சொல்லுவேன். நம்ம ஊர்ல எல்லோருமே பப்ளிக் டாப்லெட்டை யூஸ் பண்றாங்க. அதை தூய்மையாவும் வச்சிருக்காங்க.

அடுத்து, குடிநீர் வசதி! இதுல எனக்கு பெரிய வருத்தம் இருக்கு அத்தான். நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சுகிட்டே போகுது ஆனா நாம மாசத்துக்கு ஐம்பது ரூபாய் கொடுக்கிறோமேன்னு தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்குறோம். முனிசிபாலிட்டி வீட்டுக்கு ஒரு பைப் போட்டுக் கொடுத்து காலை, மாலைன்னு ரெண்டு நேரமும் தண்ணி விட்டா, தேவையோ, தேவையில்லையோ பைப்பை திறந்து விட்டுடறோம்.

அதனால் இனி கரெண்ட்க்கு மாதிரி தண்ணிக்கும் மீட்டர் வைக்கப் போறோம். உபயோகப்படுத்துறதுக்கு காசு. அப்போ தானாவே குறைச்சு செலவு பண்ணுவோம்” என்று சொன்னவள் கரம் பற்றி புறங்கையில் முத்தமிட்டவன், நெருங்கி அமர்ந்து,

“மீட்டர் வைக்க எதிர்ப்பு தெரிவிச்சா என்ன பண்ண உத்தேசம்?” சிறு முறுவலுடன் விழி பார்க்க,

“பைப் கனெக்ஷன் கட். போர் போடுறது பெரிய செலவு, கிணற்றில் நீர் இறைக்க கை நோகும். சோ, எங்க திட்டத்துக்கு ஒத்துக்கத் தான் வேணும். ஐம்பது ரூபாயோட குறைச்சு வரும் வாய்ப்புகள் இருக்குன்னு உற்சாகப்படுத்துவோம்.

யார் வீட்ல குறைவான அளவுல தண்ணியை உபயோகிக்கிறாங்களோ அவங்களுக்கு மூன்று மாசத்துக்கு ஒரு தரம் தண்ணீர் பில்லில் சிறப்பு கழிவு கொடுப்போம்” என்றவளையே கண்களால் அவன் விழுங்கிக் கொண்டிருக்க,

“என்னத்தான் ஒர்க் அவுட் ஆகாதா?” முகம் வாடக் கேட்க, (ம்… அவனே இம்ப்ரஸ் ஆகுறான் நீ தான் ஒர்க் அவுட் ஆக விடாம கெடுக்கிற)

“ஜில்லுக்குட்டி போற போக்கைப் பார்த்தா அத்தான் இந்த பொம்மைக்கிட்ட தடுக்கி விழுந்துடுவேன் போலவே…!” கண்சிமிட்டி சிரிக்க,

“ஹேய்! ஜாலி! அப்போ இன்னும் மிச்சசொச்சத்தையும் கேளுங்க. நம்ம ஊர்ல பிளாஸ்டிக் பைக்கு தடை விதிக்கப் போறோம்!”

“ம்…” என யோசிக்க,

‘யோசிக்கிறான்…? அது அவ்வளவு சுலபமில்லையோ?!’ எனும் மிரட்சியுடன்,

“என்னாச்சு அத்தான்?” என அவனது நீண்ட விரல்களை நீவியபடி கேட்க,

“இல்ல, இதை கட்டாயப்படுத்துறதை விட, தாங்களாகவே பிளாஸ்டிக் பையை உபயோகப்படுத்த வேண்டாம்ங்கிற எண்ணத்தை உருவாக்கனும் ஜில்லுக்குட்டி. அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கிறேன்?”

“ஓ! “


‘இவன் சொல்றதும் சரி தான்! அதுக்கு என்ன பண்ணலாம்?’ அவளும் சிந்தனை வயப்பட்டாள். சிறிது நேரத்திற்குப் பின்,


“வீட்டிலிருந்தே பை கொண்டு வர்றவங்களுக்கு மொத்த பில்லில் இருந்து டிஸ்கவுன்ட் தரோம்ன்னு சொன்னா?” கண்கள் மின்னக் கேட்டாள்.


“நம்மைத் தவிர எந்த கடைக்காரனும் ஒத்துக்க மாட்டான். ஆனா நம்ம கிட்ட கடை இல்லையே பொம்மை, இதையே கொஞ்சம் மாத்தி இனி ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் காசுன்னு சொல்லலாம். அப்போ கை காசைப் போட்டு ஒன்னத்துக்கும் உதவாத பையை வாங்கணுமான்னு மாற்று ஏற்பாடு பண்ணிடுவாங்க.


கடைக்காரங்களையும் முன்ன மாதிரி எல்லா பொருளையும் பொட்டலமாவோ, இல்லை பேப்பர் பையிலோ கட்டிக்கொடுங்கன்னு சொல்லலாம். ஸ்பாட் செக் பண்ணி ஃபைன் போட்டு கட்டுக்குள்ள வச்சுக்கலாம்” என்றதும்,


“வோ ஐ நி சோங் அர்!” என்று பட்டென கன்னத்தில் முத்தமிட,


“ஏய்!” சிறு முறைப்புடன் கன்னத்தை துடைத்தபடி சுற்றம் பார்த்து திருப்திபட்டுக் கொண்டான்.


“முத்தம் கொடுத்தா அனுபவிக்கனும், இப்படி அலறக் கூடாது அத்தான்!”


“நான் எப்படி ரிஆக்ட் பண்றேன்னு தெரியனும்ன்னா ரூம்ல கொடுடி சைனா செட்டு! அது சரி, இது வரை இருக்கும் பிளாஸ்டிக் குப்பையையும், வெளியூர்ல இருந்து வர்றவங்க கொண்டு வர்ற பிளாஸ்டிக் பைகளையும் என்ன பண்ணுவீங்க Mrs வீரபாண்டியன்?” என புருவம் உயர்த்த,


‘இவனுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் தோணுது?’ என சுணங்கினாலும், அவன் கேட்பது நியாயம் எனத் தோன்றியதால் உடனே தன் அண்ணனுக்கு அழைத்துவிட்டாள்.


‘இதை என்கிட்டே கேட்டா ஆகாதோ? அண்ணனுக்கு போன் போடுறா அலும்புக்காரி!’ என சிரிப்புடன் அமர்ந்திருந்தான். பேசி முடித்து விரிந்த புன்னகையுடன் வருபவளைக் கண்டதும், சரியான விடை கிடைத்துவிட்டது என்பதை உணர்ந்தவன்,


“ஜில்லுக்குட்டி, டைம் ஆச்சு, சாப்பிடப் போலாமா?” என தூக்கிவிடு என்பது போல் தன் கரம் நீட்ட, அவன் கரம் பற்றி எழுப்பியவள்,


“அண்ணன் சூப்பர் ஐடியா கொடுத்தான் அத்தான்! பிளாஸ்டிக் குப்பை எல்லாத்தையும் உருக்கி ஷீட்டுகளா மாத்தி, அதை சின்ன சின்ன துகள்களா க்ரஷ் பண்ணி ரோடு போட யூஸ் பண்ணலாமாம். அந்த ரோடு ரொம்ப உறுதியா இருக்குமாம். இதை செய்யிற இண்டஸ்ட்ரீஸ் பத்தின தகவல் வேணும்ன்னா அனுப்புறேன், மச்சானை கேட்டுச் சொல்லுன்னு சொன்னான்!” என்றபடி ரெஸ்டாரண்டில் உணவை சுவைத்துக் கொண்டிருந்தவளை ஏறிட்டவன்,


“என்கிட்டே தான் முதல்ல கேட்கணும்ன்னு உன் அண்ணனுக்கு கூட தெரியுது! என் ஜில்லுக்குட்டிக்கு தான் தெரியல, இங்கேயே சில ஸ்மால் ஸ்கேல் யூனிட்ஸ் இந்த வேலையை பார்க்கிறாங்க. அவங்களையே உபயோகப்படுத்திக்குவோம்.” என்றதும்,


“உங்களுக்கு ஏற்கனவே இந்த திட்டம் இருந்துச்சா? பின்ன ஏன் என்னை கேட்டீங்க?” என முகம் தூக்க,


“என் பொம்மையை யோசிக்க வைக்கணும்ன்னு தான் கேட்டேன்! (அவள் யோசிச்ச வரைக்கும் போதும்… எங்களுக்கு தலையை சுத்துது!) அவ என்னடான்னா பிள்ளையார் அம்மா அப்பாவை சுத்தி மாம்பழம் வாங்கின மாதிரி அண்ணனுக்கு பேசி விஷயத்தை வாங்கிட்டா!” என மலர்ந்து சிரித்தவன்,

“அவ்வளவு தானா? இல்ல இன்னும் வேறு ஏதாவது இருக்கா?”

“இருக்கே! எல்லோர் வீட்டிலேயும் காஸ் ஸ்டவ் இருக்கு. பட் காஸ்?” அதுக்கு மாற்றா இயற்கை எரிவாயு திட்டம் வச்சிருக்கோம். ஊரோட ஒதுக்குப்புறமான இடத்தில் பெரிய எரிவாயு கூடம் அமைச்சு எல்லோர் வீட்லயும் இருக்க சாணத்தையும் கலெக்ட் பண்ணி உபயோகப்படுத்தி எரிவாயு தயாரிச்சு பைப் கனெக்ஷன் மூலமா எல்லோருக்கும் சப்ளை பண்ணலாம்ன்னு இருக்கோம். சரி தானே அத்தான்!?”


“பைப் லைனா?”


“ஆமா அத்தான், சைனாவிலே நார்மல் கேஸே பைப் லைனில் கிடைக்கும். செய்யலாம் தானே அத்தான்?”


“செஞ்சுடலாம் ஜில்லுக்குட்டி! நன்னிலத்துக்கு சிறந்த மாதிரி கிராம விருதை வாங்கிக் கொடுக்கிறது தான் நம்ம வேலை” என உறுதி கொடுத்தவன், மனையாளை நகைக்கடைக்கு அழைத்துச் செல்ல,


‘வில்லேஜ் விருமாண்டி இம்ப்ரஸ் ஆகிட்டானா? வாவ்! கலக்குற விக்கி, நகை வாங்கிக் கொடுத்து காதல் சொல்லப் போறான்!” அதிர்வும், மகிழ்வுமாய் அவனை பின்தொடர, வளையல்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றவன்,


“ஜில்லுக்குட்டி, உனக்கு பிடிச்சதை வாங்கிக்கோடா!” என்றதோடு நில்லாமல் இது, அது என பலவற்றை எடுத்துக்காட்டச் சொல்லி,


“பிடிச்சிருக்காடா?” கேட்டுக் கேட்டு வாங்கிக் கொடுத்தான். இதற்கு முன் இருவரும் நகைக்கடைக்கு வந்தது திருமணத்திற்கு வித்திட்டது. இது, காதலுக்கு வித்திடும் போலும்! என மகிழ்ந்து தான் போனாள். வீட்டிற்கு வந்ததும் கணவனைப் போட்டு விடச் சொல்ல, மறுப்பின்றி வளைக்கரம் பிடித்து வளையலை அணிவித்தவன்,


“இனி இதையே போட்டுக்கோ ஜில்லு! உன் கைக்கு ரொம்ப அழகா இருக்கு!” என முன்கையில் முத்தமிட,


“ம்… அதையும் சொல்லிடுங்க அத்தான்!” என்றாள் குதூகலமாக.


“எதைச் சொல்லணும் ஜில்லு?” தெரியாதது போலவே கேட்க,


“ன்..றே..கி..க்..லி..த..கா!” என அவன் கால்களில் பாதம் பதித்து, தன் உயரம் கூட்டி பரந்து விரிந்த தோள்களில் மென்கரம் பதித்து கண்களில் காதல் வழிய, பெரும் எதிர்பார்ப்புடன் சொல்ல, (உன் அத்தானுக்கு நேரா சொன்னாலே புரியாது, இதுல ரிவர்ஸ்ல வேற…)


ஒற்றைக் கரம் கொண்டு அவள் இடை சுற்றி வளைத்து, மறு கரத்தால் தாடை தாங்கி, குறுகுறு பார்வையுடன்,


“ஓய் சைனா பொம்மை! நீ எப்போதும் போடும் வளையல் உன்னை தொடும் போதெல்லாம் குத்திக்கிட்டே இருந்துச்சா? அது தான் வேற வாங்கிக் கொடுத்தேன்! லவ் சொல்லப் போறேன்னு நினைச்சுட்டியா? சோ சேட் பொம்மை. முன்னை விட கூடுதலாவே இப்போ உன்னை பிடிக்கும் தான், அதுக்காக என் சுயம் தொலைச்சுட்டேன்னு நினைச்சுட்டியா ஜில்லுக்குட்டி?” (போங்கடா… நீங்களும் உங்க காதலும்!)


‘கள்ளன்! ஒதுக்கவேமாட்டான், டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்’ முடிவெடுத்தவளாய் தலை சாய்த்து,


“இல்லையா வீரா?”


‘சைனா செட்டெல்லாம் எனக்கு டெஸ்ட் வைக்குது! யார்கிட்ட?’ கண்டுகொண்டவன்,


“திரும்ப ஆரம்பிச்சுட்டியா? அத்தான்னு சொல்லு” என மூக்கோடு மூக்கை உரச,


‘நிஜம் தான், இவன் சுயம் தொலைக்கலை!’ முகம் வாட, அவன் கையணைப்பில் இருந்து பட்டென விலகிக் கொண்டாள். (பெரிய ISO டெஸ்ட், உத்துப் பார்த்தா உலகத்துக்கே தெரியுது உனக்கு மட்டும் தான் தெரியல)

கண்ணோரச் சிரிப்புடன்,


“பொம்மை, நான் உன்னை விரும்பல, என் சுயம் தொலைக்கல, ஆனா அதெல்லாம் நடந்திடுமோன்னு பயமாயிருக்கு!” என்றவனிடம் கேலி கூத்தாடியது. அது புரியாமல், கள்ளன் வாய்மொழி நிஜமென நம்பி,


“எனக்கு நம்பிக்கை இல்லை! நீங்க லவ் பண்றதுக்குள்ள நானே கிழவி ஆகிடுவேன் போங்…” முடிப்பதற்குள்ளாக கன்னம் பற்றி முகம் நிமிர்த்தி, சொல்லவிடாமல் இதழ்களை சிறைபிடித்து விட்டான்.


மென்மையும், வன்மையுமாய் முத்தம் பெற்றிருந்தவளுக்கு, காதலும் காமமுமாய் கொடுத்த இதழ் முத்தம் சொல்ல வந்த சங்கதி புரியவில்லை. அவள் மீது கொண்ட காதல் மொத்தத்தையும் ஒற்றை முத்தத்தில் கொட்டினான்.


வார்த்தைகளாக சொல்லப்படாதலால் அவளுக்கு புரியவில்லை. அதைப் பற்றி அவன் கவலை கொள்ளவும் இல்லை. நீண்ட நெடிய முத்தம் பித்தம் கொள்ள வைக்க,


“லவ் பண்ணாம உங்களால எப்படி இதெல்லாம் முடியுது?” கிறக்கமாய் கேட்க,


“நீ சைனா செட்டுங்கிறதை நிரூபிக்கிறடி பொம்மை! முத்தம் கொடுக்க உதடும், ஆசையும் இருந்தா போதும். காதல், காரம், காபியெல்லாம் சுவை கூட்டத் தான். விடாமுயற்சி விஷ்வரூப வெற்றின்னு சொன்னல்ல, முயற்சி திருவினையாகட்டும். அத்தான் உன்னையே சுற்றி வரட்டும் ததாஸ்து!” என கையுயர்த்தி ஆசீர்வதிக்க,


“வந்துட்டாலும்! கடவுளே காதலிக்க தெரியாத கிராமத்தானை என் தலையில் கட்ட கல்யாண நிறுத்த சதி வேற பண்ணியிருக்கீங்க, இவனைப் போலவே நீங்களும் மோசம்!” வானம் பார்த்து கடவுளோடு சண்டையிட்டு கணவனை விலக்கி, தலையணையை கட்டிக் கொண்டு தூங்கிப் போனாள்.


மெல்ல அவளருகே படுத்து தன் செல்ல பொம்மையின் தூக்கம் கலைந்து விடாதபடி மார்போடு அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு,


“இப்ப இல்ல ஜில்லுக்குட்டி, முதன்முதலா என்னோட பைக்ல கண்ணை இறுக மூடி கம்பியை இறுக்கி பிடிச்சுக்கிட்டு விழுந்துடக் கூடாதுன்னு பயந்து நடுங்கிட்டு வந்தியே, அப்போவே உன்கிட்ட இம்ப்ரஸ் ஆயிட்டேன்.


அது புரியல இந்த மக்கு குட்டிக்கு! இம்ப்ரஸ் ஆகல, லவ் இல்லைன்னு என்ன ஆர்ப்பாட்டம் பண்ற? கொள்ளை, கொள்ளையா உன் மேல காதல் இருக்குடி! அதை நீயா எப்ப தான் உணர்றன்னு பார்க்கிறேன்.


சின்னதா இது காதலோன்னு சந்தேகப்படுறியே தவிர நூறு சதவிகிதம் காதல் தான்னு நம்பி, ஒத்துக்கோடான்னு என்னோட சண்டை போடமாட்டேங்கிறியே? என் செல்ல பொம்மை இன்னும் வளரனும்!” என இறுக்கிக் கொள்ள அனிச்சை செயலாய் அவனுள் புதைந்து கொண்டவளின் தோள் தட்டிக் கொடுத்து தானும் தூங்கிப் போனான்.


அதன் பிறகு ஈஸ்வரியின் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் வண்ணம், பெரியண்ணன் பணம் செலவழிக்க, வீரபாண்டியன் அதற்கான ஆட்களை நியமிக்க, துரிதமாக வேலைகள் நடந்தன.


முதல் வேலையாக தண்ணீர் கனெக்ஷன் பெற்றிருந்தவர்கள் அனைவருக்கும் அதன் பயன்பாட்டை அளக்க மீட்டர் பொருத்தப்பட்டது.

சிறு சலசலப்பு தோன்றினாலும், அதன் அவசியமும், முக்கியத்துவமும் எடுத்துச் சொல்லப்பட சிலர் முழுமனதுடனும், பலர் வேறு வழியின்றியும் ஏற்றுக் கொண்டனர்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடும் காசு என்றதும் கட்டுக்குள் வந்து படிப்படியாக குறையத் துவங்கியது. சாண எரிவாயுக்கூடத்தின் கட்டிடப்பணி நடந்து கொண்டிருந்தது. சோலார் பேனல் அமைக்கும் பணியும் ஆரம்பமாகியது. அந்த கிராமத்தின் ரோடுகள் அனைத்தும் பிளாஸ்டிக் துகள்கள் சேர்த்துப் போடப்பட கெட்டிப்பட்டு திண்மையும், உறுதியுமாய் உருமாறின. நாட்கள் அழகாக நகர்ந்தன…


நன்னிலம் கொஞ்சம், கொஞ்சமாக மாதிரி கிராமமாய் மாறிக் கொண்டிருக்க, இதற்கான முக்கிய காரணம் வெளிநாட்டு மருமகளான விக்னேஸ்வரியே பெரிதும் பேசப்பட்டாள். ஊரெங்கும் அவளைப் பற்றிய பேச்சாகவே இருக்க, ராணி தன் தந்தையிடம்,


“அப்பா, நாம நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை, மாசம் ஆக ஆக வீட்டார் மனசுல மட்டுமில்ல ஊரோடவே பசை போட்டது போல ஒட்டிகிட்டா. இது தொடர்ந்தா, ஒட்டுமொத்தமா கைகழுவிட வேண்டியது தான். ஏதாவது செய்யுங்கப்பா. ஒரே ஒரு தரம் நேரா பார்த்து பேசினா போதும். பிரிச்சு விட்டுடலாம்” எனக் கண்கள் மின்ன சொன்ன ராணியை கூர்மையுடன் நோக்கி,


“அது அவ்வளவு சுலபமில்லத்தா! அந்த புள்ள கூட எப்போதும் ப்ரெசிடெண்ட் பெரியண்ணன் இருக்கார். நம்ம வீட்டுக்கு கூட்டி வரமாட்டாங்க, நாம பேசினாலும் தனியா பேசிவிட மாட்டாங்க, தனியா இருக்க சமயம் பார்த்து கச்சிதமா காய் நகர்த்தனும். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. அந்தப் புள்ளையோட வெளிநடவடிக்கைகளை நோட்டம் விட்டு தகுந்த நேரம் எதுன்னு சொல்றேன்” என நம்பிக்கை கொடுத்தார் அவளது தந்தை. இங்கோ, 


“பெரியம்மா… இன்னிக்கு என்ன ஸ்பெஷல், தெருவே மணக்குது?” என்றபடி வீட்டிற்குள் நுழைந்த ஈஸ்வரியை இன்முகத்துடன் வரவேற்ற தெய்வானை,


“நீ செஞ்சியே காரட் பாயசம் அதைத் தான் வைக்கிறேன். இன்னைக்கு எங்களுக்கு கல்யாண நாள்” என்றார் சிறு வெட்கத்துடன்.


“வாவ்! சூப்பர் பெரியம்மா… அப்போ இந்த நல்ல நாளுக்கு ஏத்த பரிசோட தான் வந்திருக்கேன். பெரியப்பா எங்க?”


“அந்த மனுஷனை நீ வண்டியில வச்சு சுத்துறதும் போதும் அவசர ஆத்திரத்துக்கு கூட நடக்க மாட்டேங்கிறார். இப்பத் தான் கெஞ்சி முந்திரி பருப்பு வாங்க கடைக்கு அனுப்பியிருக்கேன்!” என நீட்டி முழக்க, அவர் உடுத்தியிருந்த புதுப் புடவையை பார்வையிட்டபடி,


“பெரியம்மா இந்த புடவை உங்களுக்கு செமையா இருக்கு” என பாராட்டவும் செய்தாள்.


“நல்லா இருக்கா? நான் தான் எடுத்தேன். காலையில இருந்து கட்டியிருக்கேன்… பார்த்த ஒருத்தி கூட வாயை திறந்து நல்லா இருக்குன்னு சொல்லலை. அம்புட்டு நல்ல எண்ணம் போ!” என சிலாகித்துக் கொண்டிருக்கும் போதே பெரியண்ணனும் வந்துவிட்டார்.


“வா ஆத்தா, உனக்காகத் தான் காத்திருந்தேன். அதுக்குள்ள இவ கடைக்கு விரட்டிவிட்டுட்டா… தெய்வானை முந்திரியை நிறைய போடு வருசத்துக்கு ஒரு தடவை தான் கண்ணுல காட்டுற, கொஞ்சம் தாராளமா போட்டீன்னா நல்லா பார்த்துக்குவேன்”


“ஏங்குறேன், இந்த நக்கல் தானே வேண்டாங்கிறது!” என அவரும் முறைக்க,


“ஏங்குறேன்… ஏங்குறேன்னு… வாய் தான் சொல்லுது. நிஜம் அப்படி இல்ல போ” என அவரும் வம்பளக்க இருவரின் இத்தனை வருட ஒற்றுமையும், புரிதலும் ஈஸ்வரியிடம் ஏக்கத்தை உண்டாகிவிட்டது. தானும் இதுபோல் அத்தானுடன் ஒன்றி காதலுடன் வாழ்வோமா? என மனம் கணவனிடம் செல்ல, அதை இழுத்து பிடித்து,


“பெரியப்பா, பெரியம்மா ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என இருவரின் கால்களிலும் பணிய, தன் மருமகள் கூட இது போன்ற நல்ல நாளில் ஆசி கேட்டதில்லை எங்கிருந்தோ வந்த பெண் இப்படி அன்பும், அனுசரணையுமாய் இருக்கிறதே என விழிகள் மகிழ்வில் கலங்க,


“புள்ளகுட்டியோட சீரும் சிறப்புமா நீயும் உன் புருஷனும் மனமொத்து சந்தோஷமா ஆண்டாண்டு காலத்துக்கு வாழனும்!” என்னும் ஆசியுடன் விபூதி வைத்துவிட்டனர். வாழ்ந்து பார்த்தவர்களின் வார்த்தை பலிதமாகவேனும் கணவனின் மனதில் காதல் உண்டாகும் என்னும் நிம்மதியுடன் வந்த வேலையை ஆரம்பித்துவிட்டாள்.


“பெரியம்மாவை முதலாளி ஆக்கிடலாமா பெரியப்பா…?” மலர்ந்த சிரிப்புடன் கேட்க…

பதில் திங்கள் வரும்…

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!