OVS10

OVS10

அதிகாலை வேளை
“ஜில்லு குட்டி எழுந்துக்கோ… வெளியில் கூட்டிப் போறேன்…” என கன்னம் தட்டி எழுப்ப 
“குட் மார்னிங் அத்தான்…” என்றபடி அவன் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“தூங்கு மூஞ்சி பொம்மை, எழுந்துக்கோடி…” செல்லமாய் கன்னம் கிள்ள,
“சைனாக்கும் இந்தியாக்கும் டைம் டிபிரன்ஸ் இருக்குல்ல… இன்னும் செட்டாகல அத்தான்.” சிணுங்கலாய் அவன் இடை தழுவிக் கொண்டாள். 
“இப்படி எதாவது பண்ணி என் கோபத்தையெல்லாம் விரட்டி அடிச்சிடு…” என்றவன் வசமாய் அமர்ந்து கொண்டு தலை வருடிக் கொடுத்தான். மீண்டும் சிறிது நேரத்திற்குப் பிறகு எழுப்ப, 
“எங்க போறோம்…?” கண் திறக்காமலேயே கேட்டாள். 
“நம்ம வயலுக்கு கூட்டி போறேன் கிளம்பு.” என்றது தான் தாமதம்,
“வயலுக்கா…?” துள்ளி எழுந்துவிட்டாள். 
‘உழவன் மகன் என பெருமை பேசினான்ல, கட்டாயம் போய் பார்க்க வேண்டும்.’ என வேகமாய் கிளம்ப, 
“ஓய்! ஜில்லு! இதை கட்டிக்கோ…” என கனம் குறைந்த கண்டாங்கி புடவையை கையில் கொடுக்க,
“ஏன் அத்தான் இந்த டிரஸ் நல்லா இல்லியா?” முகம் தூக்கினாள்.
“வயல்ல இறங்கும் போது சுடிதாரெல்லாம் வசதிப்படாது. சேராய்டும். வாய்க்கால் தண்ணீர்ல நனையும்…”
“இதுன்னா தூக்கி பிடிச்சுக்கலாம்னு சொல்றிங்களா…? பேண்ட்ஸை ஏத்திவிட்டுக்கலாம் அத்தான். மறுபடியும் மாத்தணும்னா இட்ஸ் சோ போரிங்…”
“சோம்பேறி பொம்மைக்கு இங்லீஷ் என்ன வேண்டிக்கிடக்கு? புடவையை தூக்கி பிடிச்சுக்கிட்டு இருந்தா எப்படி வயல் வேலை பார்ப்ப…? அம்மா கட்டியிருக்க மாதிரி தட்டு கொசுவம் வச்சு ஆடுதசை அளவுக்கு ஏத்தி கட்டிக்கிட்டா தூக்கி பிடிக்க வேண்டியதில்ல. போ அம்மாகிட்ட கட்டிக்கிட்டு வா…” என விரட்ட 
“ஏன் அத்தான் உங்களுக்கு கட்டிவிடத் தெரியாதா?” கண் சிமிட்டினாள் கள்ளி. 
“இன்னிக்கு வயலுக்கு போக வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா?” கிறங்கியவன் தன் கைவளைவுக்குள் செல்ல பொம்மையை நிறுத்தி, முத்தமிட வாகாய் தன் உயரம் குறுக்கி இதழோடு இதழ் உரசி நிற்க அவளும் கிளர்ந்தாள். தன் கரங்களை முதுகில் படரவிட்டு கள்ள சிரிப்புடன் அவனை அணைக்க, 
“ஜில்லுக்குட்டி அநியாயத்துக்கு கெட்டு போயிட்ட… காலங் காலையிலேயே ஆரம்பிக்காத… அப்புறம் எல்லா ப்ளானும் ஊத்திக்கும். கழுத்து வளைவில் சரசமாடிக் கொண்டிருக்கும் தாலிசரடையும், குட்டி செயினையும் விலக்கி முறுக்கு மிசையால் கூச்சமூட்டி வன்முத்தம் கொடுத்து விலகிக் கொண்டான். 
“ஆள் மயக்கி! வலிக்குது!… செல்ல சிணுங்கலுடன், 
“போங்க, அத்தையை வரச் சொல்லுங்க.” என பிடித்து தள்ளாத குறையாய் அனுப்பி வைத்தாள். தன்னைப் போல உடுத்திக்கொள்ள மருமகள் ஆசைப்பட்டதில் பெருமையும் மகிழ்வும் உண்டாக அழகாய் கட்டிவிட்டவர்,
“வயலுக்கு போறதுன்னா முடியை இப்படி விரிச்சு விடாத ஆத்தா. வேர்க்கும் கசகசன்னு இருக்கும்.” என அறிவுறுத்த, 
“அப்போ நீங்க போட்டிருக்க மாதிரி கொண்டை போட்டு விடறீங்களா அத்தை?” என்றதும் மறுப்பில்லாமல் போட்டுவிட்டார். எப்பொழுதும் வைக்கும் சிறிய வட்டப்பொட்டு இதற்கு பொருந்தாமல் போக கொஞ்சம் பெரிய சைஸ் பொட்டை வைத்துக் கொண்டாள். கண்ணாடியில் தன்னைப் பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் அழகாகவே இருப்பதாய் தோன்ற கணவனிடம் காண்பிக்க எண்ணி கைபேசியில் அழைக்க முன் வாசலில் அமர்ந்திருந்தவன்,
‘கிளம்பிட்டா வராம இப்போ எதுக்கு வீட்டுக்குள்ளயே போன்…’ என்னும் முணுமுணுப்புடன் தங்கள் அறைக்குள் வர கதவின் மறைவில் இருந்து வெளிப்பட்டவளை பார்த்தவன் அசந்து தான் போனான். 
கண்டாங்கி புடவையும், கொண்டையும், பெரிய பொட்டுமாய் நின்றவளை நோக்கி தன் கரம் விரிக்க, அதற்காகவே காத்திருந்தவள் போல் அவன் கையணைப்பில் அடங்கி அண்ணாந்து முகம் பார்த்து, 
“எப்படி இருக்கேன் அத்தான்?” ஆசையும், வெட்கமும் போட்டிபோட கேட்டாள்.
“ஜில்லுக்குட்டி இப்போ தான் குழந்தைத்தனம் மாறி பெரிய பொண்ணா முதிர்ச்சியோட இருக்க. என் அழகு பொம்மை! பிடிச்சிருக்குடி!” அழுந்த கன்னத்தில் முத்தமிட்டான்.
“அப்போ இப்படியே இனி கட்டிக்கட்டுமா? இம்பிரஸ் ஆயிடுவீங்களா?” (ஒரு பேச்சுக்கு சொன்னா, இம்ப்ரஸ் பண்ணக் கிளம்பிர்றதா?)
“நீ அதிலேயே இரு. எப்போதும் போலவே உடுத்திக்கோ… அது தான் ரொம்ப பிடிச்சிருக்கு ஜில்லு.”
“உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லிடுங்களேன்…!?” சிணுங்கியவளின் கரம் பிடித்து, (உலக தமிழ் புக்குகளில் முதல் முறையா…. கரெக்ட் பண்ணுவது எப்படின்னு ஹீரோகிட்டயே கேட்ட ஹீரோயின்?)
“ஃபிரீயா விடு ஜில்லு, தானாவே எல்லாம் நடக்கும்.” என்றதோடு அழைத்துச் சென்றுவிட்டான்.  
ஏக்கர் கணக்கில் சுற்றிலும் கம்பி வேலி போட்டு இருந்தது அவனது விவசாய பூமி. பைக்கை நிறுத்திவிட்டு இறங்க எங்கிருந்துதான் வந்தது என தெரியாமல் மின்னல் வேகத்தில் வந்த நாய் ஒன்று இவளைப் பார்த்து குரைப்பதும் வீராவை சுற்றி சுற்றி வருவதுமாக இருக்க, பயந்து நடுங்கி, 
“அதை போகச் சொல்லுங்க அத்தான்!” என கூப்பாடு போட்டவள் பின்னிருந்து அவனை தழுவியிருந்தாள். முடிந்தால் அவனுள் புதைந்து தன் உயிர் காத்துக் கொள்ளும் வேகம் அதில் இருக்க அவள் பயம் புரிந்தவனாய், 
“மணி, இவ உன் அண்ணிடா…” என்றபடி அதன் தலை வருட அவ்வளவு தான் ரொம்பவும் சாந்தமாய் முனகியபடி அவளருகே வந்து முகர்ந்து பார்க்க இவளுக்கு ஆச்சரியமான ஆச்சர்யம். 
“நீங்க சொன்னது அதுக்கு புரிஞ்சுதா அத்தான், அமைதியாயிடுச்சு..?” என விழி விரிக்க 
‘மணி என் தம்பி மாதிரி, நான் பேசுறதெல்லாம் புரியும். நீயும் கொஞ்சம் பயம்விட்டு அன்பா நடந்துக்கோ. நீ பேசுறதையும் புரிஞ்சுப்பான்.” என முன்னோக்கி நடக்க அவனை பின்தொடர்ந்தவளிடம், 
“ஜில்லுக்குட்டி இங்கிருந்து வயல் ஆரம்பமாகுது. வரப்புல செருப்பு போடக் கூடாது இங்கயே கழட்டிக்கோ” என்றதும் 
“ம்ஹூம்… செப்பல் இல்லாம நடக்க முடியாது. கால் வலிக்கும்.” என சிறுபிள்ளையாய் சினுங்க 
“என்னடி சைனால ஃபார்ம் வச்சிருக்கோம்னு அள்ளிவிட்ட, வெறும் கால்ல நடக்க அழுகிற…”
“நாங்க பூட்ஸ் போட்டுப்போம் தெரியும்ல…”
“அதைச்சொல்லு! நீங்க எல்லாம் பந்தாவுக்காக ஃபார்ம் வச்சிருக்கவங்க. நமக்கு பயிர் தொழில் தான் உயிர் தொழில். இது படிஅளக்கிற பூமி அந்த மரியாதையை கொடுக்கனும். வெறும் கால்ல தான் நடக்கனும்” என்றான் ஆணை போலும்.
‘இனி இவனிடம் பேசுவதில் பிரயோஜனம் இல்லை’ என்பது புரிய வெறும் காலுடன் நடக்கத் தொடங்கிவிட்டாள். 
“ஸ்…” என்னும் அவளது வேதனைக் குரல் கேட்டாலும் பழகட்டும் என கண்டுகொள்ளாமல் முன்னே நடக்க
‘இது தானே வழக்கம்… போகப் போக சரியாய்டும்னு தான் சொல்லுவான்’ அவன் குணம் தெரிந்தவளாய் வலி பொறுக்கப் பழகிக் கொண்டாள். 
வரப்பின் இரு புறங்களிலும் குட்டி குட்டி முருங்கை கன்றுகள் தான் இருந்தனவே தவிர இவள் எண்ணியது போல் நெல் பயிரடப்படவில்லை என்பதால் 
“அத்தான் நெல்லு போடமாட்டீங்களா? கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் முருங்கை செடி தான் இருக்கு…” அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள்.
“ஒரே பயிரை போட்டா மண்ணில் இருந்து அதுக்கு தேவையான குறிப்பிட்ட சத்தை மட்டுமே எடுத்துக்கும். மண்ணும் செழிப்பம் இல்லாமல் போய்டும் அதனால் இப்படி மாத்தி மாத்தி தான் பயிர் பண்ணனும். 3 ஏக்கருக்கு முருங்கை தான் போட்டிருக்கேன். 
20 நாளைக்கு ஒரு தரம் ஈல்டு இருக்கும். முருங்கை இலையில் உடலுக்கு வீரியம் கொடுக்க கூடிய நிறைய தாதுக்கள் இருக்கு அதனால இதை பொடியாக்கி ஏற்றுமதி பண்றாங்க. இப்போ இது அதிக லாபம் தரும் பயிர்.” பெரிதாய் விளக்கம் கொடுத்தவன் வரப்பை விட்டு கீழே இறங்கி , அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு, 
“ஏறிக்கோ ஜில்லுக்குட்டி!” என்றான் விரிந்த புன்னகையுடன் எங்கே மனம் மாறினாலும் மாறிவிடுவானோ என மிரண்டவள் பட்டென தாவி அனைத்து தத்தையாய் கழுத்தைக் கட்டிக் கொண்டு முதுகில் தொத்திக்கொள்ள, வாய் விட்டு சிரித்தவன்,
“பாதம் ரொம்ப வலிக்குதா ஜில்லு?” எனவும், ஆமோதிப்பாய் தலையாட்டி
“தேங்க்ஸ் அத்தான்!” என கன்னத்தில் முத்தமிட 
“ஏய்! எச்சில் பண்ணாத…” என்றதும் வேண்டுமென்றே வலிக்க கடித்து வைத்தாள்.
“தேங்க்ஸ் பொம்மை, இப்போ இது தான் தேவையா இருந்துச்சு!” என கண் சிமிட்டி சிரித்தான். 
‘கள்ளன் தனக்கு தேவையானதை எப்படி வாங்கிக்கிறான்…?’ பெருமையுடன் சொகுசு பூனையாய் அவன் முதுகில் ஒட்டிக் கொண்டு பயணிக்க,
“இந்த பக்கத்தில் எல்லாம் அத்திப்பழ கன்றுகள் வச்சிருக்கோம்.”
“ஓ…! இது மிளகு தானே? இது மலைப் பாங்கான இடத்தில தானே வளரும். இங்க எப்படி?’ 
“மிளகில் நிறைய வகை இருக்கு ஜில்லு. மலைப் பிரதேசத்தில் வளர்றது, வரண்ட பூமியில் வளர்றது கூட இருக்கு.” என்றவன் மீன் குழியில் இறக்கிவிட, குட்டி குட்டி மீன்கள் வந்து காலை கடிக்க 
“அத்தான்…” எனத் துள்ள 
“நில்லுடி… அவனவன் காசு கொடுத்து இத ஒரு தெரபியா செய்றான்…!” என்று அவனும் அவள் கரம் பிடித்தபடி நீருக்குள் இறங்கி நின்றான். 
ஐயோ கடிக்குது அத்தான்…” கூப்பாடு போட்டவள் மார்புறத் தழுவிக் கொண்டு கால்களை மாற்றி மாற்றி துள்ளிக் கொண்டிருந்தாள். அவனோ நின்று தான் ஆகவேண்டும் என்பது போல் வம்படியாக நகரவிடாமல் அணைத்துக் கொண்டான். நேரம் நண்பகலை கடந்துவிட, 
“டயர்டா இருக்கு, பசிக்குது அத்தான்…” என சோர்வாய் சொல்ல, 
“உன்னை தூக்கிட்டு சுத்தினது நான்… இதுக்கே டயர்ட்டா இருக்கா? அப்புறம் எப்படி வயல்ல இறங்கி வேலை பார்ப்ப பொம்மை? இன்னும் கொஞ்சம் தான் பார்த்துட்டு போய்டலாம். நம்மைப்பத்தி உனக்கு முழுசா தெரிய வேண்டாமா?” என கன்னம் கிள்ளியவன் பண்ணை ஆளை கடைக்கு அனுப்பி கரும்புச்சாறு வாங்கி வரச் சொன்னான். 
“வயல்ல வேலை பார்க்க சொல்வீங்களா அத்தான்?” அரண்ட விழிகளுடன் கேட்டவளை தோளோடு அணைத்து, 
“பொம்மை… என் செல்ல பொம்மை! உன்னை வீட்டுவேலை பார்க்கவே அனுமதிக்காதவன் எப்படி வயல் வேலை செய்யச் சொல்வேன்? நீ என் வீட்டு சின்ன மகாராணிடி!” என நெற்றியில் இதழ் ஒற்றினான். 
வெள்ளாடுகள், நாட்டு மாடுகள், நாட்டுக்கோழிகள் எல்லாம் தனி தனி தொகுதியில் அழகாய் பராமரிக்கப் படுவதை கண்டவளுக்கு அதற்கான தீவனங்களையும் தாமே பயிரிடுவதாக அதையும் காட்டினான். சமீபத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி ஒன்றை துரத்தி பிடித்து அதோடு கொஞ்சி குலாவி விளையாடி பொழுதை போக்கிக் கொண்டிருக்க மாமனார் இருவருக்கும் சாப்பாடு கொண்டுவந்துவிட்டார்.
“நீங்க ஏன் வெயில்ல அலையறீங்கப்பா? நாங்களே இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திருப்போம்…” என்றவனிடம், 
“மருமக பசி தாங்காதுன்னு தான் கொண்டாந்தேன். ரெண்டு பேரும் சாப்பிட்டு வெயில் தாள வீட்டுக்கு வாங்க…” என்றபடி சென்றுவிட்டார்.
“மாமாவும் அத்தையும் ரொம்ப நல்லவங்க அத்தான்.” மனைவியின் வாயிலாக தன் பெற்றோரின் புகழ் கேட்பது பெருமையாக இருந்தாலும்,
‘அப்போ நான் கெட்டவனாடி?” புருவம் சுருக்கி கண்கள் இடுங்க கேட்டான். (நீ மொக்க பேபி!)
“நீங்க ரொம்ப… நல்லவங்க அத்தான்!” என கண்களில் குறும்பு மின்ன சொன்னவளை இடையோடு அணைத்துக் கொண்டவன், 
“பிழைச்சுக்குவ பொம்மை!” என தாடை கடித்தான். வயலின் நடுவில் அமைக்கப் பட்டிருந்த பரனின் கீழே அமர்ந்து அன்னை கொடுத்துவிட்டிருக்கும் உணவை தானே எடுத்துவைத்து மனையாளை மடியில் அமர்த்தி ஊட்டத் தொடங்கியவன்,
“இப்படி ஊட்டிவிடலைன்னு தானே கல்யாணத்தன்னைக்கு அழுத ஜில்லுக்குட்டி…?”
“பார்த்துட்டீங்களா? அதான் ஊட்டிவிட்டீங்களா? சோ ஸ்வீட் அத்தான்” என கன்னம் கிள்ளி கொஞ்சினாள். அவனது பண்ணை முழுவதையும் பார்த்த பிறகு தான் இவன் விவசாயி என பெருமைபட்டுக் கொள்வதில் தவறேயில்லை என்பது புரிந்தது.  இவனை இம்ப்ரஸ் பண்றது சிரமம் தான் ஆனால் செய்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தவள், அன்று முழுவதும் அலைந்து திரிந்த களைப்பில் அயர்ந்து உறங்கிவிட,
‘பொம்மை சரியான நோஞ்சான்! இந்த அழகில் இவங்கள வயல் வேலை பார்க்க சொல்லிடுவோம்னு பயம் வேற…’ சிறு சிரிப்புடன் அணைத்தபடி அவனும் தூங்கிப் போனான்.       
     காலையில் காபியோடு கணவனை எழுப்பனும் என திட்டமிட்டிருந்தவளின் கன்னம் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான் அவள் கணவன். வேலைக்குச் செல்ல தயாராகி நின்று கொண்டிருந்தவனைக் கண்டதும்,
‘விருமாண்டி முந்திக்கிட்டானே… சரி விடு! அடுத்து என்ன பிளான் பண்ணோம்?” யோசனையாய் அமர்ந்திருக்க, (உன் பிளானை அவன் காப்ச்சர் பண்ணி உன்னை இம்ப்ரெஸ் பண்ணுடுவான் போல! என்னமா… நீங்க இப்படி பண்றீங்களேம்மா!)
குட் மார்னிங் ஜில்லு!” என கன்னத்தில் முத்தமிட்டான்.
“ஹலோ Mr. விக்னேஸ்வரி! நீங்க என் ஐடியாவெல்லாம் திருடி, நான் செய்ய வேண்டியதையெல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க, இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்!”
“பாருங்க Mrs. வீரபாண்டியன்! எதையும் மனசுல நினைச்சுகிட்டு இருந்தா பிரயோஜனம் இல்ல… செயல்படுத்தனும்! அத்தான்கிட்ட இருந்து கத்துக்கோங்க!” என நெற்றி முட்டி சிரித்தவன்,
“கிளம்புறேன் ஜில்லு! பை!” என பறந்துவிட்டான். 
குளித்து தயாராகியவள் தன் அடுத்த திட்டத்துடன் அடுக்களைக்குள் களமிறங்கினாள்.
“முதன்முதலா சமைக்கிறது இனிப்பா இருக்கட்டும். ஏதாவது பாயாசம் வைத்தா!” என்ற மாமியின் சொல்படி கேரட் கீர் தயாரித்துக் கொண்டிருக்க, அண்டைவீட்டு மக்களும், நாத்தனார் கூட்டமும் கதையளக்க வந்துவிட்டனர். வாய் நிறைய ஒவ்வொருவரையும் வரவேற்றாலும் இவங்களுக்கு வேற வேலையே இல்லை போலும்… என சிறு அலுப்பு உண்டாகத் தான் செய்தது.
“என்னத்தா ஈஸ்வரி, இன்னைக்கு மாமியாவோட சேர்ந்து சமைக்க தயாராகிட்டியா? அப்படி என்ன சமைக்கிற?” என ஆரம்பிக்க,
“இன்னைக்கு நான் தான் உங்க டார்கெட்டா?” என நினைத்தவள், 
“கேரட் கீர் பெரியம்மா!” என விளக்கம் வைத்ததோடல்லாமல் மாமியின் சொல்படி அனைவர்க்கும் ஊற்றிக் கொடுத்தாள்.
“நல்லா தான் இருக்கு. வெயிலுக்கு இதமா, எப்படி செய்யுறதுன்னு சொல்லுத்தா. திருவிழா விருந்துக்கு இந்த பாயாசத்தையே வச்சுருவோம்” என பிரசிடெண்ட் பெரியண்ணனின் மனைவி குணாவின் பெரிய நாத்தனார் தெய்வானை தான் கேட்டார். தெய்வானையின் பாராட்டு தேவர்களின் வாழ்த்துக்குச் சமம். ஏனெனில் குறை சொல்லியே பழக்கப்பட்டவர், ரொம்பவும் அற்புதமாக இருந்தால் ஒழிய பாராட்டமாட்டார். அவரே விருந்துக்கு வைத்துக் கொடுக்கும் அளவிற்கு சுவையாக இருப்பதாக சொன்னதும், மருமகளைவிட மாமியாருக்கு தான் கூடுதல் பெருமை. 
மதிய உணவிற்கு வந்த குலசேகரனும் மருமகளின் கைப்பக்குவத்தை புகழத் தான் செய்தார். யார் என்ன சொன்னாலும் தான் யாரைக் கவர திட்டமிட்டு இதைச் செய்தாளோ அவன் இன்று மூன்று ஆகியும் சாப்பிட வராமல் சதி செய்தான். இனிப்பு சரி பார்க்க ருசி பார்த்ததோடு சரி. பாவம், கணவனுக்காக இருக்கும் ஒரு டம்ளர் கீர் அவளை அநியாயத்துக்கு சோதித்துப் பார்த்தது. (காரட் கீர்-ரா கட்டின கணவனாங்கிற ஆப்ஷன் ரொம்ப கஷ்டமான சாய்ஸ்… கீர் என்னைக்குமே நல்லா வரும், கணவன் என்னைக்காவது தான் நல்லா வரும்…யோசிச்சு முடிவு எடும்மா!)
“இவன் வர்றதுக்குள்ள நானே எடுத்து குடிச்சிருவேன் போல இருக்கே…! ” 
ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வாசலை பார்ப்பதும், குளிர்சாதனப் பெட்டியை பார்ப்பதுமாய் அமர்ந்திருக்க, ஒரு வழியாக வந்து சேர்ந்தான் அவள் கண்ணாளன். மாமியாரும், மாமனாரும் மதிய உறக்கத்தில் இருக்க, வண்டியை நிறுத்திவிட்டு வந்தவனை ஆவலுடன் ஓடிச் சென்று கட்டிக் கொண்டவள்,
“ஏன் இவ்வளவு லேட்?” என சினுங்க,
“பசிக்குது ஈஸ்வரி, முதல்ல சாப்பாட்டைப் போடு அப்புறம் கொஞ்சலாம்!”  என கரங்களை விலக்கிவிட்டு கை, கால் கழுவச் சென்றுவிட்டான். (கட்டிப்பிடி வைத்தியத்தின் அருமை தெரியாதவன்! கொஞ்சம் விட்டுப் பிடி) இது தான் நிதர்சனம் எனத் தெரிந்தும் மனம் சுருண்டுவிட்டது
பசியில் இருக்கும்போது கொஞ்சவோ, கொஞ்சலை ஏற்கவோ முடியாது தான். ஆனால் அதை இப்படி சொல்ல வேண்டியதில்லை. இது தான் சராசரி கணவனுக்கும் காதல் கணவனுக்கும் உள்ள வேறுபாடு போலும்! என்ன தான் தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்டாலும், முகத்தில் இருந்த மகிழ்ச்சி காணாமல் போயிருந்தது. 
பசியும், வெயிலும் கிறுகிறுக்கச் செய்ய, முகம் கழுவியதும் தான் புத்துணர்ச்சி பெற்றவனாய் சட்டையை கழட்டி மனையாளின் தோளில்  போட்டபடி சாப்பிட அமர்ந்தவன்,
“நீ சாப்பிட்டியா ஜில்லு?” கரிசனமாய் கேட்க,
‘ஒன்னு, இப்படி இரு… இல்ல அப்படி இரு! நிமிஷத்துக்கு நிமிஷம் மாறித் தொலைக்காத… என்னால உன்னை கணிக்க முடியலை. இயல்பான கொஞ்சலைக் கூட உன் மூட் பார்த்து தான் செய்யனும்ன்னா, இது என்ன வாழ்க்கை? இதுக்காகவே உன்னை லவ் பண்ண வைக்கனும்!’ மனம் தன் போக்கில் அவனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாலும் கை என்னவோ உணவு பரிமாறிக் கொண்டிருந்தது. பதில் வேண்டி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,
“ஓய்! இது என்ன அவ்வளவு கஷ்டமான கேள்வியா? இல்ல நீ இன்னும் சாப்பிடலையா?” என்றான் பதட்டத்துடன்.
“ம்… சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க” என லேசாய் இதழ் விரிக்க, 
“வரும் போது நல்லா தானே இருந்த, அதுக்குள்ள என்னாச்சு?”
‘செய்யுறதையும் செஞ்சுட்டு கேள்வி வேற?’ என கேட்கத் தோன்றினாலும்,
“இல்ல, இப்பவும் நல்லா தான் இருக்கேன்” என பொரியலை எடுத்து வைக்க, அவள் கரம் பற்றியவன்,
“என்ன இது?” என முறைக்க,
“சமைக்கும் போது சுட்டுகிட்டேன்” அவன் கேட்ட விதமே கோபமாகிவிட்டான் என்பதை பறைசாற்ற நடுக்கத்துடனேயே சொன்னாள்.
“எந்த வேலை செஞ்சாலும் கவனம் அதுல தான் இருக்கனும். என்னை இம்ப்ரெஸ் பண்ணனும்ன்னு நினைச்சுகிட்டே பண்ணினா இப்படித் தான் ஏடாகூடமா ஏதாவது நடக்கும். எனக்காக உன்னை வருத்திக்கிறன்னு நினைக்கும் போது இந்த சாப்பாடே ருசிக்காது. காதல் தானா வரனும். மெனக்கெட்டு வரவைக்கக் கூடாது. உணவின் வழி மனசைக் கவரலாம்ங்கிற பழைய கதையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு, நீ நீயாவே இரு” என சிடுசிடுத்தவன், பாதி காரட் கீர் -ஐ வைத்துவிட்டு எழுந்துவிட்டான்.
‘இதுவும் ஊத்திக்கிச்சே! எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லலை. பக்கம் பக்கமா அட்வைஸ்! அப்பா முடியலடா சாமி! சரியான ஆங்கிரி பர்ட் ! வில்லேஜ் விருமாண்டி! நல்லா இல்லையோ… அதான் மிச்சம் வச்சிட்டானோ? நான் கூட குடிக்காம இவனுக்காக கொடுத்தா… என்ன அலும்பு? எவ்வளவு மோசமா இருந்தாலும் நீ குடிச்சுத் தான் ஆகனும்!’ எனும் முறைப்புடன்,
“இதை ஏன் வச்சிட்டு வந்தீங்க?” அதிகாரமாய் கேட்க,
“நான் தான் சொன்னேனே… எனக்கு ருசிக்கல !” (உன் நாக்குல வசம்பை வச்சு தேய்க்க!)
“இதை அத்தை தான் செஞ்சாங்க, நான் பொரியல் தான் பண்ணினேன். வேஸ்ட் பண்ணாம குடிங்க” என இடுப்பில் கைவைத்து உக்கிரப் பார்வை பார்க்க,
“28 வருஷமா எங்க அம்மா சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். இதை பண்ணினது நீ தான்னு தெரியும். நீயே குடி!”
“ஆமா, நான் தான் பண்ணினேன். அதுக்கென்ன இப்போ? குடிக்கப் போறீங்களா இல்லையா? “
“நீ குடி! அப்போ தானே எப்படி சமைச்சிருக்கன்னு தெரியும்?” அத்தனை கேலி அவனிடம்.
“இதுக்கென்ன குறைச்சல்! ஊரே ஆஹா ஓஹோன்னு சொல்லுது. உனக்குத் தான் சுவை அறியும் சுரப்பி செத்துப் போச்சு போ… நானே குடிச்சுடுறேன்! “
உதட்டுச் சுழிப்புடன் ஒரே வாயில் மொத்தத்தையும் சரித்துக் கொண்டிருந்தவளின் அருகே வந்து தாடை பற்றி இதழோடு இதழ் பொருத்த கீர் இடம் மாறியது. திகைப்பும் விழிப்புமாய் நின்று கொண்டிருந்தவளின் வாயில் கொஞ்சம் மட்டுமே விட்டு வைத்தவன்,
“இப்படி வாய் நிறைய வச்சு சாப்பிடக் கூடாதுடி என் குட்டி பொம்மை, தலைக்கு ஏறிடும், அதான் அத்தான் ஷேர் பண்ணிக்கிட்டேன்” என கண் சிமிட்டிச் சிரிக்க,
“போடா! ருசிக்கலைன்னு சொன்ன… இப்போ மட்டும் எப்படி சாப்பிட முடிஞ்சது?” முகம் தூக்க, அவள் காது பற்றி வலிக்க கிள்ளியவன்,
“மரியாதை! போடா, வாடா பொட்டக்கண்ணாவை எல்லாம் தூக்கி கடாசிடு! அழகா, அன்பா அத்தான்னு கூப்பிடு. நான் உன்னைவிட எட்டு வருஷம் பெரியவன். நினைவில் வை. பொண்டாட்டியோட இதழ் அமுதம் சேர்ந்து கூடுதலா இனிக்குமான்னு டேஸ்ட் பண்ணி பார்த்தேன்… சுமார் தான்!” என சிரிப்புடனேயே விட்டான்.
‘இந்த சுயகவுரவமும் மரியாதை மண்ணாங்கட்டியும் தானே காதலிக்கவிடாம தடுக்குது. இரு, எல்லாத்தையும் தூக்கி கடாச வைக்கிறேன்!’ என சிலிர்த்துக் கொண்டவள்,
“நம்பிட்டேன்!” என உதடு சுளிக்க, வன்மையாய் அதரங்களை சிறை செய்தான். 
“விருமாண்டி, அப்போ உனக்கு பிடிச்சிருக்கு தானே? நீ இம்ப்ரஸ் ஆகுற… ஐ நோ!” என குஷியாகவே ஒத்துழைத்தாள். அத்தானை அசரடிக்க அடுத்த திட்டத்துடன் தயாராகிக் கொண்டிருக்க, அவனோ அலுவலகத்தில் சிவகுருநாதனுக்கு விவசாயப்பாடம் எடுத்துக் கொண்டிருந்தான். 
மண் மற்றும் நீர் பரிசோதனையின் அடிப்படையில் இடத்தில் பழுதில்லை, கொஞ்சம் ஊட்டம் கொடுக்க வேண்டும் என்பது கண்டறியப்பட அடுத்து செய்ய வேண்டியவற்றைப் பற்றி வீரபாண்டியனின் ஆலோசனையை பெற்றவன் ஸீரோ பட்ஜெட் விவசாயம் பற்றி விசாரிக்க,
“விவசாயம் மட்டுமே செய்யுறதை விட அதோட இணைந்த சில விஷயங்களையும் செய்தால் நமக்காகும் செலவு அறவே குறையும் அதை அடிப்படையா வச்சு லாபம் கிடைக்கும். இதில் ஆரம்பத்திலேயே பெரும் லாபம் பார்க்க முடியும்னு சொல்லமாட்டேன். ஆனால் நாமும், நம் சமுதாயமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு திரும்ப முடியும். அடுத்த தலைமுறை சிறப்பானதா உருமாறுவதற்கு இது அடிப்படையா இருக்கும்” எனும் பீடிகையுட,
“ஆடு, மாடு, கோழி இதெல்லாம் வளர்த்தோம்ன்னா இவற்றோட கழிவு உரமாவும், பூச்சிக்கொல்லியாவும் பயன்படும். அதோட பாலும், இறைச்சியும் விற்பனை செய்து பணம் ஈட்டலாம். மீன் குழி அமைச்சு அந்த தண்ணீரில் அசோலாங்கிற பாசி போட்டோம்ன்னா இதை மீனுக்கும், கோழிக்கும் உணவா கொடுக்கலாம். இந்த தண்ணீரில் ஆக்சிஜென் அதிகமா இருக்கும். மீனும், கோழியும் செழிப்பமா இருக்கும். முட்டைகளில் ஊட்டச்சத்து அதிகமா இருக்கும். இதையெல்லாமும் விற்கலாம்
ஒரு போகம்ன்னு விவசாயத்தில் லாபம் பார்க்கணும்ன்னா அது குறைவா தான் கிடைக்கும். பட் இந்த மாதிரி ஒருங்கிணைந்த பண்ணையம் பார்தோம்ன்னா நமக்கு தினப்படி வருமானம் கிடைக்கும். அப்போ முக்கிய பயிரோட வருமானம் நமக்கு லாபமா மாறிடும். ஊடுபயிரா காய்கறிகள் போடலாம். இதெல்லாம் தான் வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள். நீங்க ஆசைப்பட்டா என்னோட பண்ணையை பார்க்கலாம். இப்போ உங்ககிட்ட சொன்னதைப் போல தான் அமைச்சிருக்கேன். நேரடியா பார்க்கும் போது இன்னும் தெளிவா புரியும்.
“சார், நீங்க விவசாயமும் பண்றீங்களா? கண்டிப்பா வரேன் சர். மேற்கொண்டு அதுபடியே நானும் பண்ணை உருவாக்க, ஆடு, மாடு, கோழி, மீன் இதெல்லாம் எங்கே வாங்கனும், அதோட தீவனம் பற்றியும், நோய் தடுப்பு முறை பற்றியும் சொல்லுங்க சர்”
“உங்க ஆர்வம் பார்க்க சந்தோஷமா இருக்கு Mr. சிவா. என்னோட பண்ணையை அப்பா தான் பார்த்துகிறாங்க. இன்னைக்கு உங்களை அறிமுகப்படுத்தி விடுறேன். அவங்ககிட்ட கேட்டீங்கன்னா இன்னும் விளக்கமா எல்லா தகவலும் கொடுப்பாங்க” என அழைத்துச் சென்றான். வீரபாண்டியனின் பண்ணை வியப்படைய செய்வதாகத் தான் இருந்தது. 
 சீசனுக்கு ஏற்றது போல் பயிர்கள் மற்றும் ஆடு மாடு போன்ற மற்ற உயிரினங்களுக்கும் உண்டாகும் நோய்களுக்குக்கான தடுப்பு மருந்துகளின் விவரமெல்லாம் அற்புதமாய்ச் சொன்னார் குலசேகரன். மகன் கேட்டுக் கொண்டதற்காக, தானே எல்லா இடத்திற்கும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திவிடுவதாய் சொன்னார். 
அன்று மதிய உணவிற்கு சிவகுருநாதனையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தவன் முதல் பத்தியில் அமர வைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்று அன்னையிடம் விவரம் சொல்லி, நேற்று ஆசையாய் கட்டிக்க கொண்டவளை கண்களால் தேடி தங்கள் அறை நோக்கி விரைய, மடித்த துணிகளை பீரோவில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அவன் மனையாள்.
“ஓய்! ஜில்லு, நேத்து ஓடி வந்து கட்டிக்கிட்ட… இன்னைக்கு கண்டுக்கவே மாட்டேங்கிற…!” என முகம் தூக்கியவன் பின்னிருந்து இடையோடு அணைத்திருந்தான். 
“எதுக்கு? வழியப்போய் வாங்கி கட்டிக்கணும்ன்னு தான் விலகி நிக்கிறோம்!” சுருக்கென சொல்லிக் காட்டினாள். 
“யப்பா ஆண்டவா! இந்த ரோஷத்தில் ஒன்னும் குறையில்லை. நேற்று பயங்கர பசி, மயக்கமே வந்திடுச்சு. இன்னைக்கு உனக்காகத் தான் சீக்கிரம் வந்திருக்கேன், மரியாதையா கட்டிக்கோடி ஆங்கிரி பேர்ட்” என கன்னத்தோடு கன்னம் உரசினான்.
“ஏய்! இது உங்களுக்கு நான் வச்ச பேர். சிடுசிடு சிம்பன்சி, வில்லேஜ் விருமாண்டி, அடங்காத ஆங்கிரி பர்ட்!” (செல்ல பேரு யோசிச்சு யோசிச்சு இப்படி வந்து நிக்குது!)
“எத்தனை? அதென்னடி விருமாண்டி?” என அயர்ந்து போய் புருவம் உயர்த்தி வினவ,
“அது அப்படித் தான்! வீரபாண்டி மருவி விருமாண்டி ஆயிடுச்சு! இந்த பேரை வச்சது நான் தான். கூப்பிட முழு உரிமையும் இருக்கு தெரியும்ல.
“அது சரி! பேரை மாத்துவியே தவிர பேர் சொல்ற பழக்கத்தை மாத்தமாட்ட?” என கையோடு கூட்டிக் கொண்டு வர, அதற்குள்ளாகவே வெயிலுக்கு இதமாய் சீரகம், இஞ்சி போட்ட மோர் கலக்கி வைத்திருந்தார் குணவதி. 
நாகரீகமாய் சிறிய டம்ளர்களில் ஊற்றி அதை தட்டில் வைத்து கொண்டு போக, இந்த நறுவிசும், நாகரிகமும் மாமியாரிடம் பெரும் பாதிப்பை உண்டாக்க, இதழ்கள் மலரச் சிரித்தாள். 
மெரூன் வண்ண காலர் வைத்த குர்தியும் அதற்கு பொருத்தமாய் சந்தன நிற லெகின்சும் அணிந்து, கோணலாய் கூந்தலை ஒதுக்கி விரிய விட்டு, நெற்றியில் சிறு ஸ்டிக்கர் பொட்டும் மெல்லிய தங்க வளையல்கள் அணிந்த கைகளுமாய் மோர் டம்ளர்களை ஏந்திக் கொண்டு வந்தவளை விழி எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான் சிவகுருநாதன்.
“சர் தங்கச்சியா இருக்குமோ? பார்க்கும் போதே அழகா அம்சமா இருக்கே… குணம் எப்படியோ தெரியல, இவர்கிட்ட நல்லவிதமா பழகி, பேர் வாங்கிய பிறகு படார்ன்னு கால்ல விழுந்து பொண்ணு கேட்டுற வேண்டியது தான். இவளுக்காக விழலாம் ஒர்த் தான். கிராமத்தில் மார்டன் பிகர். சிட்டில படிச்சிருக்கும் போல…” (நீ பொண்ணு கேட்டுப் பாரு… உனக்கு பொங்கல் வச்சுருவான்) தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தவனின் முன்னே வந்து, 
“ஹாய்… மோர் எடுத்துக்கோங்க” என இதமாய் இதழ் விரிக்க, இவ தான் பேசியை குயில் போல எவ்வளவு இனிமை!” மென்முறுவலுடன்,
“தேங்க்ஸ்”-ஐ உதிர்த்து மோரை எடுக்க, 
“ஈஸ்வரி, இவர் தான் சிவகுருநாதன்! ஆர்வமுள்ள விவசாயி நிச்சயம் ஜெயிக்கிற திறன் கொண்டவர்.”
“ஈஸ்வரி, சிவா பேர் கூட பொருத்தமா இருக்கே…” கனவில் மிதந்தவனின் தோள் தட்டி,
“சிவா இவங்க…” என ஆரம்பித்து,
“தெரியும் சர்… உங்க தங்கை!” என்றான் வேகமாய். 
வீரபாண்டியன் அதிர…
நாளை சொல்லுவான்…    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!