OVS12

OVS12

அன்பரசியின் இல்லத்தில் தனது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த சுந்தரியை அழைத்தார் அவளது மாமனார்,
“சுந்தரி… ஆத்தா சுந்தரி… இங்க சத்த வா.” என்றதும்
“சொல்லுங்க மாமா.” என பம்மியபடி வந்து நின்றவளுக்கு புதிதாக இவர் எந்த வில்லங்கத்தையும் கிளப்பாமல் இருக்க வேண்டுமே என படபடப்பாக இருந்தது.
“உன் அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் கல்யாண விருந்து கொடுக்க வேண்டாமா? அடுத்த வாரத்தில சுமதியும் புருஷனோட வெளிநாடு கிளம்பிரும். ரெண்டு ஜோடியையும் ஒன்னா வரவச்சு விருந்து கொடுத்துற வேண்டியது தானே! நீயும் பேசாம இருக்க, உன் மாமியாவும் பட்டும் படாமலும் இருக்கா. நல்லாயில்லையே உன் அத்தைய கூப்பிடு பேசி முடிச்சுடுவோம்.” என்றதும்
‘இவர் என்ன கலகம் இழுக்குறதுக்கு திட்டம் போடுறாருன்னு தெரியலையே…’ என சிந்தித்தபடியே நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள பதில் சொல்லக் கூட முடியாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு மாமியாரை தேடித் சென்றதோடல்லாமல் கையோடு கூட்டிக் கொண்டும் வந்தாள். சாவதானமாக வந்து அன்பு,
“எதுக்கு கூப்பிட்டீங்க…?” என கணவரின் முன் ஆஜராக,
‘மாமியாவும் மருமகளும் கூடி பேசிட்டு தான் வந்திருப்பாளுக, அதை கொஞ்சம் கூட காட்டிக்காம ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறதைப் பாரு.’ என்னும் முறைப்புடன்
“நம்ம பாண்டி மாப்பிள்ளைக்கும், சுந்தரிக்கும் கல்யாண விருந்து கொடுக்க வேண்டாமா? அதைப்பத்தி மூச்சுக்கு கூட விடாம இருக்கியே என்ன சங்கதி?” இடக்காகவே கேட்டார்.
“இப்ப தானே கல்யாணமாயிருக்கு…? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். புது பொண்ணு கொஞ்சம் பழக்கட்டும். சுந்தரி வீட்டுக்காரர் அவளை சைனாவுக்கு கூட்டி போறதுக்கு என்னனென்னமோ வாங்க இங்கயும் அங்கயுமா அலைஞ்சுக்கிட்டு இருக்கார். இப்ப அவுகளை தொந்தரவு பண்றது நல்லா இருக்காது. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது விருந்து கொடுத்துக்கலாம். உடனே விருந்து கொடுக்கலைங்கிறதுக்காக அத்தை வீட்டு சொந்தம் பட்டுன்னு முறிஞ்சுடாது.” என நொடித்தாலும்
‘அப்படி முறிச்சுவிடத் தானே அப்பனும் மகளும் நினைக்கிறீக…? உங்க உள்குத்தெல்லாம் தெரியும்டி இல்லன்னா இத்தனை வருசமா உருப்படியா குடும்பம் பண்ண முடியுமா…?’ என்பது போல அசராமல் நிற்க,
“இந்தா அன்பு… ஒரு நேரம் வந்து சாப்பிட்டு போறதுல என்ன குறைஞ்சு போய்டப் போறாங்க…? நடக்க வேண்டியதெல்லாம் காலாகாலத்தில் முறைப்படி நடக்கணும். முதல்ல பாண்டி மாப்பிள்ளையை கூப்பிடுவோம் அவுக தோதுக்கு சுந்தரியாலையும் வர முடிஞ்சா சேர்த்து கொடுப்போம், இல்ல அது அடுத்த தவணை வரும் போது கொடுப்போம்.” என்கிறார் தணிவாக.
“பாண்டி உள்ளுர்லயே இருக்கப் போறவன் வெளிநாட்டுக்கு போறவுகளுக்கு தான் முதல்ல விருந்து வைக்கணும். ரெண்டு பேரையும் ஒன்னாவெல்லாம் கூப்பிட வேண்டாம் ஊர் கண் எல்லாம் அவுக மேல தான் இருக்கும். நானே சுந்தரிகிட்ட கேட்கிறேன். அப்புறம் முடிவு பண்ணுவோம்.”
“சும்மா எதுக்கு தள்ளிப் போடனும் முடிச்சுவிட்டுற வேண்டியது தானே…?” அவரும் சளைக்காமல் மனைவிக்கு கொக்கி போட, (உள்குத்து… உனக்கு இருக்கு கும்மாங்குத்து)
“என்னது?” என உக்கிரமாக முறைத்தார் அன்பு.
“இப்ப என்னத்துக்கு இந்த பார்வை பாக்குற…? விருந்தை வச்சு முடிச்சுவிட்டுரலாம்ன்னு தான் சொன்னேன். என்னவோ உறவை முறிச்சுவிட்டுரலாம்னு சொன்னது மாதிரி பாக்குற…?”
“அப்பனும் மகளும் அப்படி எதுவும் திட்டம் போடுறிகளோன்னு தான் சந்தேகமா இருக்கு” என்றதும்
“அம்மா! நானே கைப்பொருளை இன்னொருத்திக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு நொந்து போய் இருக்கேன். நீ அபாண்டமா ஏதாவது சொல்லாத…” என விழிநீர் பெறுக சொன்னாள் ராணி. பெற்ற மனமாயிற்றே மகளுக்காய் அசைந்தது.
‘நல்ல எண்ணத்தோட தான் சொல்லறாங்களோ…?’ சிறு யோசனை தோன்றினாலும்,
‘இவுகளையெல்லாம் நம்பக் கூடாது. இல்லாதது பொல்லாததை சொல்லி புள்ளைக ரெண்டையும் பிரிச்சுவிடக் கூட நினைக்கலாம். உள்ளதே பாண்டியும் அவன் பொண்டாட்டியும் ஒத்துப் போக முடியாம தடுமாறிக்கிட்டு இருக்குங்க. இந்நேரம் இவ வாயை திறந்து என்னத்தையாச்சும் சொன்னா இன்னும் புரிதல் வராத உறவு ஒரேயடியா பிச்சுக்கிட்டு போயிரும். எதுக்கு இந்த வம்பெல்லாம்…’ என
“முதல்ல அதுக ரெண்டும் ஒன்னை ஒன்னு நல்லா புருஞ்சுக்கட்டும். அதுக்கு அதுகளை தனியாவிட்டு நாம விலகி நிக்கிறது தான் அழகு. ஒருவழியா திருவிழாவுக்கு கூப்பிட்டுக்குவோம்.” என்றார் முடிவாய்.
“அடி கூறுகெட்டவளே, இந்த விருந்து கொடுக்குறதெல்லாம் அவுக ரெண்டு பெரும் நல்லா புரிஞ்சு வாழணும்கிறதுக்காக தானே? இப்படி சொந்தபந்த வீடுகளுக்கெல்லாம் போகும் போது பொண்ணு மாபிள்ளையை பத்தி பெருமையா சொல்லி ஒருத்தரை பத்தி ஒருத்தர் மனசுல நல்ல எண்ணத்தை உண்டாக்கி ஒத்துமையா குடும்பம் பண்ண உதவி செய்யணும்னு தான் இந்த வழக்கமே வச்சிருக்காக.” தன் செயலுக்கு நியாயம் கற்பித்தார் அன்பின் கணவர். (பேச்செல்லாம் வக்கணையா தான் இருக்கு…)
“போதும்! நாம ஒன்னும் பண்ண வேண்டாம். சும்மா இருந்தாவே தன்னால் முட்டி மோதி புரிஞ்சுக்குவாக அது தான் நல்லது.” என அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டார். இனி இதைப் பற்றி பேச ஒன்றும் இல்லை என்று சொல்லாமல் சொல்லிச் சென்றார் அன்பு.
“என்னப்பா அம்மா கொஞ்சம் கூட பிடி கொடுக்க மாட்டேங்குது?”
“பொறந்த வீட்டை தாங்கி பிடிக்கிறாகளாம். யார்கிட்ட? அந்தப்பயலுக்கு விருந்து வைக்கிறது ரெண்டாவது வழி தான். உன் ஆத்தாகாரிய மாதிரி தான் அவனும் சூதானமா இருப்பான். நாம கூப்பிடாலும் தட்டிக்கழிக்க தான் வழி பார்ப்பான். அதுனால உன் ஆத்தா என்ன சொன்னாலும் காதில் போட்டுக்காம விருந்துக்கு அழைக்கப் போகணும். அப்பவே குட்டையை குழப்பிட்டு வந்துரணும்கிறது தான் என் எண்ணம். இவ சொல்லிக்கிட்டு இருக்கட்டும். நான் பார்த்துக்கறேன் விடு ஆத்தா.” என தன் திட்டம் விளக்கினார் தந்தை. (சரியான வில்லங்கம் பிடிச்ச ஆளுய்யா!)
காலை பதினோரு மணியோடு குணவதிக்கு அனைத்து வேலைகளும் முடிந்துவிடும். மீண்டும் மாலை தான் ஆரம்பமாகும். இடைப்பட்ட நேரத்தில் செய்வதற்கு ஒன்றும் இல்லாததால் தங்கள் வீட்டிற்கு வந்து கதை பேசுபவர்களை பார்த்துக் கொண்டும், நாத்தனார்களிடம் வசவு வாங்கியுமே பொழுது கழியும். அதை உபயோகமாக்கும் பொருட்டு பெரும் திட்டத்துடன் மாமியாரிடம் வந்தவள்,
“அத்தை, நீங்க கொடுத்த இஞ்சி டீயால என் பிரச்சனையெல்லாம் சரியாயிடுச்சு. அது மாதிரி நம்ம தோட்டத்தில் இருக்க, செம்பருத்தி பூவில் கூட டீ போடலாம் அத்தை. இது ரத்த அழுத்தம், ரத்த சோகை எல்லாத்தையும் சரி பண்ணும்.”
“அப்படியா? இது தெரியாது ஆத்தா! ஆனா ஆவாரம்பூ கஷாயம், கொய்யா இல்லை கஷாயம் எல்லாம் போடுவேன்”
“சூப்பர் அத்தை! ஆவாரம்பூ சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், உடம்பு சூட்டை குறைக்கும், தோலை பளபளப்பாக்கும். கொய்யா இலை தைராய்ட் பிரச்சனைக்கும், கொழுப்பை குறைக்கவும் உதவும், முருங்கை டீ ஆண்மையை அதிகரிக்கும், புதினா டீ உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது மட்டுமில்ல உடல் எடையை குறைக்கும். இதைச் செய்யுறது சுலபம். அத்தை இதை நாம குடிசைத் தொழிலா பண்ணினா என்ன?” பட்டென கேட்டுவிட,
“அடி ஆத்தி! உனக்கு வேணா போட்டுத் தரேன். வியாபாரமெல்லாம் சரியா வராது!” என்றார் படபடப்பாய். இத்தனை ஆண்டுகளாய் கணவன், பிள்ளைகள் என இருந்தவர், வயல் வேலை கூட பார்க்காதவர், குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டவர் என்பதால் தொழில் செய்வோம் என்றதும் அது பெரிய காரியம், தன்னால் சிறப்பாக செய்ய முடியாது என பயந்து போனார்.
“தயார் பண்ற வேலையை மட்டும் நீங்க பாருங்க அத்தை! வியாபாரத்தை நான் பார்த்துக்கிறேன். உங்க பையன் ஹெல்ப் பண்ணுவாங்க. நான் அவங்ககிட்ட பேசிட்டேன். இதெல்லாம் சிரமமே இல்லத்தை. மூலப் பொருட்களை மொத்தமா வாங்கி, உலர்த்தி, பொடி பண்ணி, 100 கிராம் பாக்கெட்டில் போட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு தயார் பண்ண வேண்டியது தான். 
முதல்ல நம்ம பக்கத்தில் இருக்கிற பெரிய நகரங்களுக்கு சப்ளை பண்ணுவோம். விற்றதும் காசு வாங்கிக்கிறோம்ன்னு சொன்னா தயங்காம வாங்கிப்பாங்கன்னு நினைக்கிறேன். சைனாவில் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸில் எல்லாம் இது சாதாரணம்.
நம்ம பொருளை அடுக்கிக்க சின்னதா நமக்கு இடம் கொடுப்பாங்க. அது பக்கத்தில் நின்னு வர்றவங்க கிட்டயெல்லாம் அதோட நன்மைகளைச் சொல்லி, சில நேரங்களில் சின்ன, சின்ன கப்புகளில் சாம்பிளுக்கு குடிக்க கொடுத்து, சுவையை அறிமுகப்படுத்தி வியாபாரம் பண்ணுவாங்க. நாமளும் அது போல செய்யலாம். ஒவ்வொரு டீக்கும் அதோட பயன்களை பிரிண்ட் பண்ணி ஒட்டிட்டோம்ன்னா நம்ம மக்களே ஆரோக்கியத்துக்காக வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. பெரிய செலவெல்லாம் வராது அத்தை. 
நம்ம தாழ்வாரத்திலேயே ரெண்டு மருந்து அரைக்கிற மிஷினை வச்சுக்கிட்டே செஞ்சுடலாம். ப்ளீஸ் அத்தை… பண்ணலாம். “குணா மூலிகை டீ”! எப்படி இருக்கு?” என மாமியாரை முதலாளி ஆக்கி அவர் பேர் வைத்ததும், மகிழ்ந்து போனவரால் மறுக்க முடியவில்லை. சம்மதம் சொல்லிவிட,
“வோ ஐ நி” (woi ai ni) என கட்டிக் கொண்டாள். மாமியாருக்கு முதலில் இந்த அணைப்பு கூச்சம் உண்டாக்கினாலும், மெல்ல அணைத்து, கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார். இதை பார்த்துக் கொண்டிருந்தவன்,
“அம்மா, இவ உங்களை லவ் பண்றாளாம்” என சிரிக்க, (உன்னை லவ் பண்றதுக்கு… உன் அம்மாவையே பண்ணலாம் போடா!)
“அப்படியாத்தா சொன்ன? நானும் ஓ ஐ நி!” என மருமகளின் நெற்றியில் முத்தமிட, தனக்கோ, தங்கைகளுக்கோ இதுவரை முத்தமிட்டு அறியாத அன்னை, மனைவிக்கு முத்தமிட்டது பெரும் ஆச்சர்யமாய் இருந்தது அவனுக்கு. (நீ பண்ற அலும்புக்கு உங்க ஆயாகிட்ட கூட நீ முத்தம் வாங்க முடியாது. ஏதோ சீனா டால் சின்னபுள்ளத்தனமா கொடுக்குது!)
“பேபி டால் மாதிரி இருந்துக்கிட்டு முத்தம் வாங்கிட்டாளே! சிறு பொறாமை கூட தோன்றிவிட்டது. தன் பின்னோடு அறைக்குள் நுழைந்தவளை ஆவேசமாய் கட்டிக்கொண்டு,
“பொம்மை! நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? அம்மாகிட்டேயே முத்தம் வாங்கிட்ட!” என கன்னம் சுவைத்து பேசவிடாது இதழ்களை சிறைபிடித்தான். அதிர்ந்து மெல்ல அடங்கிப் போனவளை விடுவிக்க,
“உங்களையும் சுயம் தொலைக்க வைப்பேன் அத்தான்!” என மிடுக்காக சொன்னவளை வாரிக் கொண்டு,
“இப்போ உன்னுள் தொலையத் தான் ஆசைப்படுறேன்” என முன்னேறினான். மென்மையின் திரு உரு இன்று மேனி வெடவெடக்க வைக்க மிரட்சியுடன்,
“என்ன?” வழக்கமான கேள்விக்கு,
“ம்… எல்லாம் தான்!” இப்போ தான் கிராமத்தான் பொண்டாட்டியா மாற ஆரம்பிச்சுருக்க!” என வசியக் குரலில் மந்திரம் போட்டான் அந்தக் கள்ளன். கள்ளியும் மயங்கித் தான் போனாள்.
ஈஸ்வரியின் பெற்றோரும், அண்ணன், அண்ணியும் சைனா செல்ல வேண்டிய நாள் நெருங்க, சுமதியை இங்குவிட்டு தன் தங்கையை கொஞ்ச நாட்கள் தங்களோடு வைத்துக் கொண்டால் பிரியும் முன் இருவருமே தன் பிறந்த வீட்டுச் சொந்தங்களை எண்ணி அதிகம் வருந்தும்படி இருக்காது என நினைத்து மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான் சசி. காரில் இருந்து இறங்கியவர்களை வரவேற்றபடி தன் பைக்கில் இருந்து இறங்கினான் வீரபாண்டியன்,
“வாங்க மச்சான்! சுமதிம்மா… நல்லா இருக்கியா? வா… வா… வா! உள்ள வாங்க!” என முன்னே செல்ல, கணவனுக்காக வந்தவள் அவன் பின்னோடு வரும் அண்ணனைக் கண்டதும் ஓடிச் சென்று,
“அண்ணா!” என அணைத்துக்கொள்ள, தங்கையை தோளோடு அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு அதன் பிறகே,
“விக்கி செல்லம், எப்படிடா இருக்க?” என வாஞ்சையுடன் கேட்க, லேசாய் தலையசைத்து கலங்கிய விழிகளும், மென்சிரிப்புமாய்,
 “ம்…” என்றாள்.
இவர்களது பாசம் கண்டு,
“எனக்கும் தான் ரெண்டு தங்கச்சிக இருக்காங்க, என்னமோ உலகத்துலேயே இவங்க மட்டும் தான் பாசமலர்கள் மாதிரி சீனைப் பாரு!” ஏனோ காண்டானது பாண்டிக்கு. (காதுல புகை வருதா, நீயும் சீனைப் போடு, பார்க்க நாங்க ரெடி!) அதற்குள் கணவனுக்கும், அண்ணனுக்கும் சிற்றுண்டி வைத்து எடுத்து வந்துவிட்டாள் சுமதி.
‘வீட்டுக்கு வந்தவங்களை கவனிக்காம கொஞ்சல் என்ன வேண்டி கிடக்கு?’ இது தான் சமயமென,
“ஈஸ்வரி! எல்லோருக்கும் காபி எடுத்துட்டு வா! சுமதி, நீயும் சாப்பிடு!” என தங்கையை நீ வேலை செய்ய வேண்டியதில்லை, ஓய்வெடு. இதோ இந்த பொம்மையைப் போல் கொஞ்சிக் குலாவு! என மறைமுகமாய் சொன்னான். மருமகன்களை நேருக்கு நேர் வரவேற்கும் வழக்கம் இல்லாததால் குணவதி அடுக்களையிலேயே நின்றுவிட்டார். நேரே அவரிடம் சென்றவள் காபிக்காக காத்திருக்க,
“இருங்க மச்சான், கைகால் கழுவிட்டு உடுப்பு மாத்திட்டு வந்துடுறேன்” எனத் தங்கள் அறைக்கு சென்றவன்,
“ஈஸ்வரி…!” எனக் குரல் கொடுக்க,
“போத்தா, நான் காபியை போட்டுட்டு கூப்பிடுறேன், நீ பாண்டியை கவனி…” என அனுப்பி வைத்தார். மருமகள் கையை சுட்டுக் கொள்கிறாள், விரலை வெட்டிக் கொள்கிறாள் என்பதால் சமைக்கவோ, அது சார்ந்த வேலைகளைச் செய்யவோ அனுமதிப்பதில்லை குணவதி. அவரைப் பொறுத்தவரை மகனின் மனம் கோணாமல் அவன் விருப்பப்படி நடப்பது ஒன்றே மருமகளின் தலையாய பணி என்பதாய் விரட்டினார். அறைக்கதவு இரண்டும் விரியத் திறந்திருக்க, அவனைத் தான் காணவில்லை,
“எங்க போயிட்டான்?” முணுமுணுப்புடன் நுழைந்தவளை கதவின் மறைவில் இருந்து கரம் பற்றி இழுத்து… சுவற்றோடு சாய்த்து, தன் கரங்களை தோள்களில் பதித்து, நெற்றிமுட்டி,
“இங்க தான்டி இருக்கேன் பொம்மை!” என்றதும், இவனுக்கு ஏதோ கோபம் என்பது அவளுக்கு தெரிந்து போனது. பொம்மை என்பது செல்ல அழைப்பல்ல கோபத்தின் வெளிப்பாடு என்பதை கண்டு கொண்டிருந்ததால்,
“என்ன வேணும்?” பவ்யமாய் முகம் பார்க்காமல் கேட்க,
“நடிக்காதடி! எப்போதும் வண்டிச் சத்தம் கேட்டு அத்தான்னு குஷியா வந்து கட்டிக்கிறவ, இன்னைக்கு அண்ணனை பார்த்ததும் அங்க தாவிட்ட. ஒரே கொஞ்சல்ஸ் வேற!” (பார்டா, உன்னை கண்டுக்கலைன்னும், கட்டிப் பிடிக்கலைன்னும் தானே கோபம்… நடிக்காதடா!)
‘அடப்பாவி, ஒவ்வொரு நாளும் இப்படி வரவேற்பு கொடுக்கிறப்ப, திரும்ப கட்டிக்காம தோள்ல தட்டி, தலைவலிக்குது காபி கொண்டு வா, பசிக்குது ஸ்னாக்ஸ் எடுத்து வை, போனை சார்ஜில் போடுன்னு வேலை ஏவிட்டு, இன்னைக்கு செய்யலைன்னதும் கோபம் வருது. அப்போ நீ ரசிச்சிருக்க, உனக்கு பிடிச்சிருக்கு, ஆனாலும் அடங்காம கெத்த மெயின்டெயின் பண்ணியிருக்க, என்ன ஒரு வில்லத்தனம்?’ எனக் கூர்ந்து நோக்க,
“என்ன பார்வை… எப்போதும் போல அத்தான்னு கொஞ்சிகிட்டே கட்டிக்கிற!” என மிரட்டலாய் சொல்லவும், (கட்டிப்பிடிங்கிறதைக் கூட கடுப்பாய் சொல்ல உன்னால தான் முடியும்!)
“அத்தான்!” என்றபடி கட்டிக்கொள்ள, தன்னிடமிருந்து பிரித்து விலக்கி,
“என்னது இது? செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி… துள்ளல் மிஸ்ஸிங்! திரும்ப பண்ணு!” (மறுபடியும் முதல்ல இருந்தா?!)
“கடவுளே, படுத்தாதீங்க அத்தான்! ரொம்ப நேரம் மிஸ் பண்ணிட்டு பார்க்கும் போது அதெல்லாம் இயல்பா வரும். இவ்வளவு நேரம் வம்பு பண்ணிட்டு, அதெல்லாம் முடியாது!” சிறுபிள்ளையாய் முகம் பார்க்க,
“அப்போ வேற என்ன முடியும்? இது…” என முகத்தோடு முகம் உரசி தோள் வளைவில் முத்தமிட,
“ப்ளீஸ் அண்ணன் இருக்கான். நான் போகணும், காபி கொடுக்கணும்…” இடை பற்றி இருந்த அவனது கரம் நீக்க முயல,
“என் தங்கையும் தான் இருக்கா…!” கள்ளச் சிரிப்புடன் குறும்புக் கூத்தாட சொன்னவனின் பிடி தளரவேயில்லை.
“கதவு மூடல, விடுங்க…”
“என் வீட்டாளுங்க எல்லோரும் நாகரீகம் தெரிஞ்சவங்க, கதவு திறந்திருந்தாலும் நாம உள்ள இருக்கும் போது யாரும் வரமாட்டாங்க, உன் அண்ணனுக்கு நாகரீகம் தெரியும் தானே?” அவ்வளவு நக்கல் அவனிடம்.
“நாங்க பாசமா இருந்தா உங்களுக்கு ஏன் பொறாமை? அண்ணனை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க?” என சிடுசிடுக்க, அவனுக்கு உரைத்தது. ஏன் தனக்கு இத்தனை பொறாமை? எனத் தெளிந்தவனாய்,
“சாரி” என முணுமுணுத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு போகச் சொன்னான். ப்ரஷ்ஷாகி வந்தவனிடம்,
“மச்சான், வர்ற புதன்கிழமை ஊருக்கு கிளம்புறோம். அதுவரை சுமதி இங்கேயும், விக்கி அங்கேயும் இருக்கட்டும். எல்லோரையும் விட்டுப் பிரியிறது அவங்களுக்கும் கஷ்டமா இருக்குமில்லையா? நாலு, அஞ்சு நாள் தாய் வீட்ல சீராடட்டுமே!” என்றான் இதமாய்.
“ஐயோ! ஒரு நாள் தங்கியதுக்கே என்னை வறுத்து எடுத்தானே … லூசு அண்ணா! என்கிட்டே சொல்லாம உன்னை யார் பர்மிஷன் கேட்கச் சொல்றது? திரும்ப கோபப்படப் போறான், அவனே ஒரு ஆங்கிரி பர்ட்… நீ வேற தூபம் போட்டு விடுறியே!” என கோபமும், பயமுமாய் அண்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தவளை,
“ஆகட்டும் மச்சான், நல்ல விஷயம் தான். கூட்டிட்டு போங்க!” என்ற கணவனின் பேச்சு அவளை அதிர்ச்சி அடையச் செய்தது.
“போ… ஈஸ்வரி! கிளம்பு!” என்றான் சிறு முறுவலுடன்.
‘அண்ணன்கிட்ட மறுக்க முடியாம கிளம்பச் சொல்லிட்டு, பின்னாடியே வரான். செத்தடி ஜில்லு! இன்னைக்கு சரியான மண்டகப்படி இருக்கு” தனக்குத் தானே தைரியம் சொன்னபடி அறைக்குள் சென்று, சரண்டராகத் தயாராகியவளாய் முந்திக் கொண்டு,
“நான் போகலை அத்தான்”, (நீ பொழச்சுக்குவ!) வாய்விட்டு சிரித்தவன்,
“ஏன்?” என்றான் அவள் முகம் தாங்கி.
“நீங்க நைட்டெல்லாம் கால் பண்ணி நினைச்சு, நினைச்சு திட்டுவீங்க…!” பரிதாபமாய் சொல்ல, மீண்டும் சிரித்து ஓய்ந்தவன்,
“ஜில்லுக்குட்டி, அப்போ… நீ போனது, கோபம் இல்லை. சொல்லாம போயிட்டேங்கிறது தான் பிரச்சனை. இப்போ திட்டமாட்டேன் கிளம்பு” எனக் கொஞ்சி பெற்றோர் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தான்.
மருமகள் இல்லாத நேரத்திற்கு காத்திருந்தவர் போல்,
“பாண்டி, சுமதி ஊருக்கு போறதுக்குள்ள உங்களுக்கு விருந்து வைக்கணும்னு அன்பு வீட்ல அந்த அண்ணன் பிரியப்படுறாங்களாம். நேத்து சுந்தரி போன் பண்ணினா…”
“எனக்கும் தான் அக்கா போன் பண்ணுச்சு, நாங்க போகப் போறதில்ல… ஒன்னுகிடக்க ஒன்னை பேசி அத்தானை நோகப் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு” என்றாள் சுமதி.
“எனக்கும் அதான் யோசனையா இருக்கு, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். மெல்ல கூப்பிடுவோம்ன்னு அன்பு சொல்றதைக் கேட்காம மாமாவும், ராணியும் இப்போவே கூப்பிடனும்னு ஒத்தக்கால்ல நிக்கிறாங்களாம். 
இல்லாததைச் சொல்லி ஈஸ்வரி மனசை கலைச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு. அந்தப் புள்ளை இப்போ தான் உன் மேல இருக்க பயம் விலகி கொஞ்சம் ஒட்டுதலா குடும்பம் பண்ண ஆரம்பிச்சிருக்கு. மாமாவே அழைக்க வந்தா என்ன பண்ணுறது?” கவலையுடன் மகனை எச்சரித்தார் குணவதி. ஆழ்ந்த மூச்சின் மூலம் தன்னை சமன் செய்தவன்,
“என்கிட்டேயே ஈஸ்வரியைப் பத்தி ராணி தப்பா பேசினா, இப்போ அதோட நிறுத்தமாட்டா! நான் அவளை காதலிச்சு கைவிட்ட ரேஞ்சுக்கு எதையாவது சொல்லி வைப்பா”
“நீங்க இன்னும் அண்ணிகிட்ட சொல்லலையா அண்ணா?”
“சொல்லலை. இது சாதாரண விஷயம், ஆனா உன் அண்ணி சின்ன விஷயத்தை பூதாகரமா கற்பனை பண்ணி பயந்து சாவா… அது தான் யோசிக்கிறேன். இன்னும் மெச்சூரிட்டி வரலை, பார்க்கலாம். முடிஞ்ச வரை அவாய்ட் பண்ணுவோம். அதுக்கு மேல ஏதாச்சும் நடந்தா சமாளிச்சு தான் ஆகனும்.” என்றவனுக்கு மனைவியின் நினைவு வந்துவிட்டது.
“என்ன தான் சமாதானம் சொன்னாலும் ராணியை நிராகரிச்சது தப்பு தான். என் குடும்பத்துக்காக நானும் சுயநலமா நடந்துக்கிட்டேன். இதை உன்கிட்ட சொல்ல கில்ட்டியா இருக்கு. என்னை மன்னிச்சுடு ஜில்லு!” மானசீகமாய் இறைஞ்சியவனுக்கு தெரியவில்லை இதுவே தனக்கு பெரும் பிரச்சனையாக வந்து நிற்கும் என்பது.
அண்ணனுடன் வந்தவளை வாஞ்சையுடன் வரவேற்று அருகமர்த்திக் கொண்டனர் அன்னையும், தந்தையும்.
“விக்கிம்மா எப்படிடா இருக்க?” என தலை வருடும் அன்னையின் தோள் சாய்ந்து,
“ம்…” என்று மட்டும் சொன்னாள்.
‘நான் கேட்டதுக்கும் இதைத் தான் சொன்னா. இப்போ அம்மா கேட்கும் போதும் அதே பதில், அங்கயாவது மச்சான் பக்கத்தில் இருந்தார்ன்னு தயங்கினதுல நியாயம் இருக்கு, இங்கே ஏன் நல்லா சொல்ல மாட்டேங்கிறா? ஒருவேளை இவளால பொருந்த முடியலையோ?’ சிந்தனை வயப்பட்டிருந்தவன் சட்டென தன்னை சமன் செய்து கொண்டு, மோடாவை இழுத்துப் போட்டு தங்கைக்கு எதிரே அமர்ந்து, தாடை தாங்கி,
“ஏன் இதையே சொல்ற? உனக்கு ஏதும் பிரச்சனையா? ஏதாவது வசதிக் குறைவா? சொல்லு, நான் வீரபாண்டியன் கிட்ட பேசுறேன்” என்றதும், பெற்றோருக்கும் சிறு கலக்கம் உண்டானது. இன்னும் ஒரு வாரத்தில் கடல் கடந்து மகளை தனித்துவிட்டுப் போகப் போகிறவர்கள் என்பதால் எதுவாயினும் சரி செய்தே ஆக வேண்டும் எனும் எண்ணத்தில்,
“சொல்லுடா, மாப்பிள்ளை நல்லா வச்சிருக்கார் தானே? மாமியார் அன்பா பார்த்துகிறாங்க இல்லியா?” என கேள்விகளை அடுக்க,
“ஒன்னும் பிரச்சனையில்லம்மா. அத்தான் நல்லா தான் கேர் பண்றாங்க, என்னால தண்ணீர் இறைக்க முடியலன்னதும் உடனே பைப் லைன் போட்டுட்டாங்க.
சமையல் தவிர எல்லா வேலைக்கும் ஆள் வச்சிருக்காங்க. நான் ஏதாவது காயம் பண்ணிக்கிறேன்னு அத்தை என்னை சமையல்கட்டு பக்கமே போக விடுறதில்லை. மாமா ரொம்ப பேச மாட்டாங்க. பட் தேவையான நேரத்துல நறுக்குன்னு பேசுவாங்க. அதுவும் எனக்கு சாதகமாத் தான் சொல்லுவாங்க. அத்தான் சொல்றதையெல்லாம் மறுப்பில்லாம கேட்டுட்டா எந்தப் பிரச்சனையும் இல்ல. அதான் எனக்கு பிடிக்கலைன்னா கூட அத்தான்னு கூப்பிடுறேன். முகம் வாடச் சொன்னாள்.
“விக்கி குட்டி, கிராமத்து ஆட்கள் மரியாதை விஷயத்துல ரொம்ப கறாரா தான் இருப்பாங்க. நம்மைப் போல அவுட்வர்டா இருக்க மாட்டாங்க, ஏன்னா மாமன், மச்சான் முறைக்காரங்க மரியாதை இல்லாம பேசுறதை கேலியாகவோ குத்தலாகவோ சொல்லிக் காண்பிச்சுருவாங்கடா! அது கவுரவ பிரச்சனையாகிப் போகும். மச்சான் சொல்றபடியே கூப்பிடு. அது தான் நல்லது. 
உன் அண்ணியை சசின்னு கூப்பிட சொல்றேன், உங்க கால்ல வேணும்னாலும் விழறேன், பேர் சொல்லிக் கூப்பிட மாட்டேன், அத்தான்னே கூப்பிடுறேன்னு  அலுச்சாட்டியம் பண்ணுறா. அவங்க வளர்ந்த சூழல் அப்படி. இதெல்லாம் பெருசா எடுத்துக்காத. போகப் போக உனக்கே அத்தான்னு கூப்பிடுறது தான் பிடிக்கும் பாரேன்!” என தங்கையை தேற்றினான்.
இரவு உணவுக்குப் பின் தன் அறையில் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தவளுக்கு தூக்கம் வராமல் போக,  ‘உழவும் தொழிலும்’ செயலியை  உருவாக்கும் வேலையைத் தொடங்கிவிட்டாள். இரவு பதினோரு மணியை நெருங்கிக் கொண்டிருக்க, கைபேசி செல்லமாய் சிணுங்கியது.
‘ஐயோ அத்தானா!?’ என்று பதட்டத்துடன் பார்க்க, அவனே தான்.
‘திட்டமாட்டேன் போன்னு சொன்னதெல்லாம் சும்மாவா? ஆரம்பிச்சுட்டானே, எடுப்போமா வேண்டாமா ?’ பெரும் யோசனைக்குப் பின் எடுத்துவிட்டாள்.
“ஜில்லுக்குட்டி தூங்கலையா?” குழைந்தது குரல்.
“தூக்கம் வரலை அத்தான், அது தான் செயலி உருவாக்கிட்டு இருக்கேன். நீங்க தூங்கலையா அத்தான்?”
“அங்கே போய் ஏன் இந்த வேலையெல்லாம் பார்க்கிற ஜில்லு? அத்தை, மாமா கூட பொழுதை போக்கு. நம்ம வீட்ல போர் அடிக்கும் போது செய்துக்கலாம்” என்றான் அன்பும், அக்கறையுமாய்.
“வந்ததில் இருந்து அவங்க கூடத் தான் இருந்தேன். இப்போ தூங்க போயிட்டாங்க. அது தான் என் ரூமுக்கு வந்துட்டேன். நீங்க என்ன சாப்பிட்டீங்க அத்தான்?” ஏதேனும் பேச வேண்டுமே என கேட்டு வைத்தாள்.
“தோசையும், தேங்காய் சட்னியும். மட்டன் வச்சாங்க, வேண்டாம்னு சொல்லிட்டேன். உன்னை விட்டுட்டு சாப்பிட மனசு வரல…” உண்மை சொன்னான்.
‘இது எல்லாம் காதலே இல்லைன்னு சத்தியம் பண்ணுவான் விருமாண்டி’ செல்லக் கோபத்தை ஒதுக்கி,
“வோ ஐ நி சோங் அர்” என கிசுகிசுக்க,
“தேங்க்ஸ், ஏதாவது ஒரு விதத்துல உன் அன்பு தேவைப்பட்டுச்சு. இப்போ ஓகே.  இனி நல்லா தூங்கிடுவேன். நீயும் நல்லா தூங்கு. குட் நைட்.” என முத்தத்தை அனுப்பி கைபேசியை அணைத்தவன், மனையாளின் தலையணையை கட்டிக் கொண்டு தூங்கிப் போனான்.
அவளோ, எப்போ இந்த பட்டிக்காட்டான் மனசுல பச்சக்குன்னு ஒட்டிக்குவேன்னு தெரியல! எனும் சிந்தனையுடனே தூங்கிப் போனாள்.
காலையில் மகளிடம், “மதியத்துக்கு சிக்கன் பிரியாணி பண்ணவா? “என கேட்ட அன்னைக்கு,
“ஐயோ, நான்வெஜ்ஜே வேண்டாம்மா! நான் ரொம்ப பூஞ்சையா இருக்கேன்னு அத்தான் சொல்லிட்டாங்க. அதனால அத்தை தினமும் மட்டன், சிக்கன், மீன் இப்படி ஏதாவது ஒன்னு சமைச்சிடுறாங்க. காலிபிளவர் மன்ச்சூரியனும், சேஷ்வான் பிரைட் ரைஸ்சும் பண்ணிடுங்க ” என்றாள்.
“மாப்பிள்ளையோடு சேர்த்து பார்க்கும் போது நீ மெலிஞ்சு தான் தெரியுற!”
“போங்கம்மா, சாப்பிடுறதையும் தூங்குறதையும் தவிர வேற எந்த வேலையும் பார்க்காம கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்.” என சிணுங்க, மகளின் பூரிப்புக்குக் காரணம் உணவும், உறக்கமும் இல்லை, கணவனோடு உறவாடுவது தான் என்பது வாழ்ந்து பார்த்தவருக்கு தெரியத் தான் செய்தது. 
மெல்ல பொழுதுகள் கரைய, நாளை கிளம்பப் போகிறார்கள் என்னும் தருவாயில், இனியும் தள்ளிப் போடக் கூடாது, கேட்டு தெளிவு பெற்றே ஆகவேண்டும் என எண்ணியவள், அன்னையின் மடி சாய, தலை வருடி கொடுத்தார். 
“அம்மா…”
“என்னடா?”
“எனக்கு ஒரு விஷயம் தெரியணும்?”
“என்ன தெரியணும்…” ஆதூரமாய் பார்க்க,
“அது… வந்து… காதலில்லாம… அதெல்லாம் வச்சுக்க முடியுமா?” தயங்கித் தயங்கிக் கேட்க, மகளுக்கு ஏதோ பிரச்சனை என்பது புரிய,
“ஏன்டா இப்படி கேட்குற?” தலை கோதுவதை நிறுத்தாமல் கேட்டார்.
முகம் பார்க்க முடியாமல் பக்கவாட்டில் படுத்து, எதையோ வெறித்துக் கொண்டிருந்தவள்,
“இல்ல, அத்தானுக்கு என் மேல லவ்வே இல்லம்மா. ஆனால் மத்ததெல்லாம் தன் போக்கில் நடக்குது.” சொல்லும் போதே கண்ணீர் மடி நனைத்தது.
“ஏதாவது உளறாத விக்கி. காதலில்லாமலா உன் கஷ்டத்தை உடனே சரி பண்ணினார்? “
“ப்ச்… அதெல்லாம் கணவனோடு கடமையாம். நான் தான்,  நான் மட்டும் தான் அவங்க உலகம்னு நினைக்கிறது தான் காதலாம்!”
“இந்த அன்பும், அக்கறையும் கூட காதலின் வடிவம் தான், மாப்பிள்ளை  சொல்றது காதலின் உச்சம். மனசைப் போட்டு குழப்பிக்காத! அந்த நிலை வர கொஞ்ச நாள் ஆகும்டா”
“காதல் வந்துடும் இல்லம்மா? சில நேரங்கள்ல இந்த கேள்வி தான் என்னை பயப்பட வைக்குது”
“கண்டிப்பா வரும். அதுவரை நீ பொறுமையா இருக்கனும். மாப்பிள்ளை ரொம்ப எதார்த்தவாதியா இருக்கார்.”
“ம், சில நேரங்களில் இவ்வளவு எதார்த்தமா இருக்க வேண்டாமோன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கார் ” என விழிநீர் துடைத்து சிரித்தவளின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டார். 
காதலே இல்லையோ என கலங்கியவளுக்கு அன்னை தந்த தெளிவில் கணவனின் கண்ணாம்பூச்சி ஆட்டம் புரிய, தாய் மடி என்னும் சொர்க்கபுரியில் நிம்மதியாய் தூங்கிப் போனாள் அந்த கள்வனின் காதலி.
தன்னிலை திங்கள் சொல்லுவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!