OVS14

OVS14

உடல் தேறியதும் நல்ல நாள் பார்த்து மூலிகை டீ தயாரிக்கும் தொழிலை தொடங்கினர் மாமியாரும் மருமகளும். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், அதன் பிறகு டீத்தூள் தயாரிக்கும் பணியை நேர்த்தியாகவே செய்தனர். வாரம் ஒரு முறை நகரத்து கடைகளுக்கு சப்ளை செய்ய முதல் பேட்ச் வேகமாகவே விற்றது. ‘உழவும் தொழிலும்’ செயலியும் முற்று பெரும் தருவாயில் இருந்தது.
ராணியின் தந்தையோ மகளிடம் ரகசியமாய்,
“ஆத்தா, அந்த திருட்டுப்பயல் திட்டம் போட்டு காய் நகர்த்துறான். அந்த புள்ளை தன்னை விட்டு போயிடக்கூடாதுன்னு தொழில் தொடங்கி கொடுத்திருக்கான். அந்த பொண்ணுக்கு ஒட்டுதலையும், பிடிப்பையும் அதிகப்படுத்துறான். நாம அமைதியா இருந்தா வேலைக்காகாது. நானே நேர்ல போய் விருந்துக்கு அழைக்கிறேன், வந்தா நீ அவன் பொண்டாட்டிகிட்ட பேசு. நம்ம வீட்ல இருந்து கிளம்புறவ ஆத்தா வீட்டுக்கு போய் தான் திரும்பிப் பார்க்கனும்.!”
“நடந்த விஷயமெல்லாம் அவளுக்குத் தெரிஞ்சிருந்தா…?”
“அட கிறுக்கே! உன்னை யாரு நடந்ததை பத்தி பேசச் சொல்றது?” என்றதும் பொய் புரட்டு சொல்லி பிரித்துவிட வேண்டும் என்பது அவளுக்கும் புரிய,
“சரி தான் அப்பா! அவளுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டி ஓட வைக்கிறேன்” என்றாள் இறுக்கத்துடன்.
“ஒருவேளை வரலைன்னா கூப்பிட போன இடத்திலேயே நான் கொளுத்தி போட்டுட்டு வந்துடறேன். எறும்பு ஊற கல்லும் தேயும். திரும்ப திரும்ப முயற்சி பண்ணினா சுலபமா செஞ்சுடலாம்.” என விருந்துக்கு அழைக்க வந்தார் அன்பின் கணவர்.
ராணியைப் பார்த்திராததால் அவளைத் தவிர அன்பின் குடும்பத்தார் அனைவரும் ஈஸ்வரிக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால்,
“வாங்கப்பா!” என வாஞ்சையுடன் வரவேற்றாள்.
“யாரு யாருக்கு அப்பா? என் மக இருக்க வேண்டிய இடத்துல சட்டமா இருக்கோம்ங்கிற திமிரா?” கேட்க நினைத்த மனதை அடக்கி,
“வந்துட்டேன். உன்னை பார்க்க மட்டுமில்ல, விருந்துக்கு அழைக்கவும் தான் அப்பா வந்திருக்கேன். மாப்பிள்ளை எங்கே? உன் மாமனார், மாமியாரெல்லாம் எங்கே? வீட்டு மாப்பிள்ளை வந்திருக்கேன், உன்னைத் தவிர மற்ற யாரையும் காணோம்? இது தான் என் மரியாதை. இந்த குடும்பத்திலேயே நீ தான் மரியாதை தெரிஞ்ச புள்ளை” என புகழ்வது போல் இகழ்ந்து கொண்டிருக்க, ஒவ்வொருவராய் வந்து வரவேற்றாலும்,
“இவர் ஏன் இப்போ வந்தார்?” எனும் கேள்வி அனைவர் முகத்திலும் தொக்கி நின்றது.
“மாப்பிள்ளை, வர்ற வெள்ளிக்கிழமை விருந்து வைக்கிறேன் வந்துடுங்க!” வெகு நிதானமாய் குண்டைத் தூக்கி போட்டார்.
“இல்ல மாமா, அன்னைக்கு கலெக்டரோட விவசாயிகளை சந்திக்க போகணும். தோது பார்த்து நாங்களே வர்றோமே!” நாகரீகமாய்த் தவிர்க்க,
“நீங்க வர்றதுக்குள்ள பிள்ளையே பிறந்திடும் போல, அப்புறம் என் பேரன் அம்மா அப்பாக்கு விருந்து கொடுக்குறீங்களா இல்ல எனக்கு சோறு ஊட்டும் வைபவமான்னு கேட்ருடுவான். பகல்ல வர முடியாதுன்னா என்ன…? ராத்திரிக்கு வாங்க. ஒரு நேரம் சாப்பிட்டாலும் சரி தான்” விடாப்பிடியாய் நிற்க,
“மன்னிச்சுடுங்க மாமா. வாரக் கடைசியில் பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு அதனால நானே ஃப்ரீயா இருக்கும் போது ஈஸ்வரியை கூட்டிட்டு வரேன். நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு நீங்க அழைக்கணும்ங்கிறது இல்ல”
“உன் வீட்டு விருந்துக்காக இங்கே யாரும் ஏங்கி நிக்கலைன்னு சொல்றீங்க! ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்தில வேறொரு பொண்ணு இருந்தாலும் அதையும் என் மகளா நினைச்சு விருந்துக்கு அழைச்சவனுக்கு நல்ல மரியாதை பண்ணிட்டீங்க, ரொம்ப சந்தோஷம்!
மாப்பிளை பேசுறது தான் சரின்னு நீங்களும் வாய் திறக்காம இருக்கீங்களே மச்சான். இது தான் உங்க ஊர் நியாயமா? பொண்ணை பெத்தவன் பணிஞ்சு போற காலம் போய் பெண்ணெடுத்தவன் வளைஞ்சு கொடுக்கிற காலம் வந்திருச்சு. நல்லது. உங்க தோது போல வாங்க!” என விடைபெற்றாலும்,
‘கதறிக்கிட்டு வர வைக்கிறேன்டா!’ என சூளுரைத்துக் கொண்டார்.
இதோடாவது போனாரே என அயர்ந்து அமர்ந்தவனிடம்,
“அத்தான்! அவங்க பொண்ணு இருக்க வேண்டிய இடம்ன்னு ஏதோ…” இன்னொருத்தியின் உடைமையை தட்டி பறித்துவிட்டோமோ என்னும் பதைப்புடன் கேட்டவளை கை உயர்த்தி அடக்கியவன்,
“ஆளாளுக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கும் ஈஸ்வரி. அதையெல்லாம் பார்த்தா வாழ முடியாது!” என்றான் எங்கோ பார்த்தபடி.
பெண்ணை கட்டிக் கொடுக்க வேண்டும் எனும் ஆசையில் இருந்தவர், முடியாத ஆதங்கத்தில் சொல்கிறார் என ஒற்றை வரியில் சொல்லியிருக்கலாம். இவையெல்லாம் தனக்கெதிராய் திரும்பும் என நினைக்காமல் சூசகமாய் சொல்லி அவளிடம் சஞ்சலத்தை உண்டாக்க தருணம் பார்க்கத் தொடங்கிவிட்டான். அவளோ,
‘என்ன சொல்கிறான்? அந்த பெண்ணை மணமுடிக்க இவனும் ஆசைப்பட்டானோ? என்னால் தான் அந்த ஆசை நிறைவேறாமல் போனதோ?!’ மனதில் பெரும் பாரம் குடிகொள்ள,
“நீங்களும் ஆசைப்பட்டீங்களா அத்தான்?” தயங்கி நெஞ்சடைக்க கேட்க,
“ஷட்டப்! ஏதாவது உளறாம வெளியே போ!” என விரட்டினானே தவிர ஆம் என்றோ இல்லையென்றோ சொல்லவில்லை. அவளிடம் சிறு சந்தேகம் தோன்றியது.
‘ஒரு வேளை இந்தப் பெண்ணால் தான் என்னிடம் காதல் வயப்படவில்லையோ?’ என்று எண்ணும் போதே கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. சோர்ந்து, சுருண்டு கிடப்பவளை கண்டவனுக்கு வருத்தமாகிப் போக,
“ஈஸ்வரி…” என அருகே அமர்ந்து தோள் தட்டினான்.
‘ம்…‘ என்று கூட சொல்லாமல் படுத்திருந்தாள்.
“சாரி, நீ கேட்டது தப்பில்லையா? நான் உன் புருஷன்கிறதை மறந்து அவள் மேல ஆசைபட்டேனான்னு கேட்கிற! அதான் கோபம். அடுத்தவங்க ஆயிரம் சொல்லுவாங்க, அதையெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது. முறைக்கார பசங்ககிட்ட ஒரு ஈர்ப்பு இருக்காதா? எனக்குள்ளேயும் அது தான் இருந்துச்சு!”
“எனக்கு அத்தை மகன்கள் இல்ல!” முறைக்காரர்களைப் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்பது போல் வெடுக்கென பதில் கொடுத்தாலும், கண்களில் தாரை, தாரையாய் வழிந்தது கண்ணீர்.
அவளைத் தூக்கி இறுக அணைத்து, முதுகு நீவி,
“ஏய் லூசு! அழுது தொலைக்காதே…” என அவள் தலையில் கன்னம் அழுத்தி,  
‘சிறு வயதில் பேச்சு நடந்ததை சொல்லிவிடுவோமா என யோசித்தவன், இப்போ இருக்கிற மனநிலையில் தப்பா தான் எடுத்துக் கொள்வாள்’ எனத் தோன்றிவிட,
“பக்கத்துக்கு ஊர்னாலும் அடிக்கடியெல்லாம் பார்க்க முடியாது. எப்போவாச்சும் அத்தை கூட வருவா. நாங்க ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்ததோ, தனியா நின்னு பேசினதோ கூட கிடையாது. அவள் என்னை பார்க்கவே வெட்கப்படுவா.
எனக்கும் ரெண்டு தங்கைகள் இருக்க வீட்ல அத்தை மகளோட பேசி விளையாடனும்ங்கிற எண்ணம் கூட வந்ததில்லை. சரியா பார்க்க, பேச முடியலைங்கிறதால் சின்ன ஈர்ப்பு மட்டும் தான். இயல்பா பார்த்து பேசியிருந்தா அது கூட தோனியிருக்காது” அவன் சொன்னதையெல்லாம் விட்டு,
“ஈர்ப்புன்னா? பிடித்ததுக்கு முன்ன வர்றதா இல்லை அப்புறமா?” என வேகமாய் கேட்க,
“இவ்வளவு சொல்றேன் இன்னும் புரியலயா… பொம்மை! சின்ன சிரிப்பு, கள்ளப் பார்வை, கேலிப்பேச்சு, சீண்டல், தீண்டல் இதெல்லாம் செய்திருந்தாக் கூட தப்பா பார்க்க முடியாத உறவுக்காரி தான் இருந்தும், என் நிழல் கூட அவள் மேல பட்டதில்லை, விழி பார்த்து பேசினது இல்லை…
“வாங்க அத்தான்”, “ம்” இது ரெண்டைத் தவிர வேறு வார்த்தைகள் பேசியதும் இல்ல, கேட்டதும் இல்ல. இவ்வளவு தான் எனக்கும் அவளுக்குமான உறவு. உன் கேள்விக்கான பதிலை நீயே சொல்லுடி… என் பொம்மை! மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசத்தை வச்சுக்கிட்டு உன்னையும், அவளையும் இணை கூட்டுற…!” வலிக்க கன்னத்தில் தன் தடம் பதித்தான். விழிநீர் பெருகினாலும்,
‘இவன் மனதில் அவள் இல்லை, நாம் இவர்கள் வாழ்வை கெடுத்துவிடவில்லை’ எனும் பெரும் நிம்மதி மனதில் பரவ, அது மகிழ்ச்சியாய் முகத்தில் இடம் மாற… சட்டமாய் கணவனின் மடியில் அமர்ந்து கழுத்தை கட்டிக்கொண்டு தோளில் கன்னம் புதைத்து,
“சாரி அத்தான்” மென்குரலில் முணுமுணுக்க, முகம் நிமிர்த்தி,
“பார்டா…!” சிறு சிரிப்புடன்,
“உன் அழுகையெல்லாம் எங்க போச்சு ஜில்லு?” குறும்பு கொப்பளிக்க கேட்க,
“ம்… சைனாவுக்கு சீராட போயிருக்கு… வோ ஐ நி சோங் அர்!” என குழைந்து அடர்ந்த மீசைக்குள் அழகாய் பதுங்கியிருந்த அதரங்களை தன் வசமாக்கிக் கொண்டாள் அந்த கள்ளி. தெளியா போதை, தெவிட்டா இன்பம் என்ற போதும் முடியா நிலையில் தன் அதரங்களை விலக்கிக் கொண்டவளைப் பார்த்து,
“பிடிச்சிருக்கு ஜில்லுக்குட்டி!” என மூக்கோடு மூக்கை உரசி சிரிக்க,
“போங்க! இப்பவும் பிடிச்சிருக்கு தானா? எப்போ தான் இம்ப்ரஸ் ஆவீங்க அத்தான்?” சிணுங்க,
“ஆமாடி, அடுத்தவங்க சொல்றதையெல்லாம் கேட்டுக் கறுப்புக் கண்ணாடியை மாட்டிக்கிட்டு அத்தானை பார்த்து அப்பப்போ டர்ட்டி டைனோசர்ன்னு கோவிச்சுக்கிட்டு அழு… உன்கிட்ட இம்ப்ரஸ் ஆகிறேன்!” என வாரினான்.
“நீங்க டைனோசர் இல்ல ஆங்கிரி பர்ட் அத்தான்”
“வாய் மட்டும் வக்கனையா பேசு! உன்கிட்ட ஒரு வேலை கொடுத்து எத்தனை நாளாச்சு? இன்னும் அதை என்ன ஏதுன்னு கூட பார்க்கலை அப்படித் தானே?”
“ஹலோ, பார்க்கலைன்னு யார் சொன்னா? பினிஷிங் டச் தான் பாக்கியிருக்கு!”
“ம்ஹூம்… எடுத்துட்டு வா, பார்க்கலாம்!” என்றவன் சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டி அமர தன் லேப்டாப்புடன் வந்தவள் விரிந்திருந்த கால்களுக்கு நடுவில் அமர்ந்து, அவன் மார்பில் முதுகு சாய்த்து வசதியாய் அமர்ந்துகொண்டு ‘உழவும், தொழிலும்’ செயலியை இயக்க, அவன் கொடுத்த குறிப்புகளின் படி விவசாய பூமி வாங்கும் போது பார்க்க வேண்டியதில் ஆரம்பித்து,
என்னென்ன ஆவணங்கள் கையில் வைத்திருக்க வேண்டும், அதை யாரிடம் எங்கு போய் வாங்க வேண்டும், அந்த அலுவலகத்தில் வேலை நேரம், விடுமுறை நாட்கள், அதிகாரியின் பெயர், தொலைபேசி எண் போன்றவையும்,
மண் பரிசோதனை, நீர் பரிசோதனை போன்றவற்றை ஏன் செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும், மண்ணின் வகைக்கேற்ப என்னென்ன பயிர்கள் விளைவிக்கலாம், அதற்கான விதைகள் எங்கு கிடைக்கும்,
எதற்கெல்லாம் அரசாங்கம் மானியம் வழங்கும், குறுவிவசாயிகள், சிறுவிவசாயிகள் போன்றோருக்கான வங்கிக்கடன் பற்றிய தகவல்கள், உற்பத்தியை பெருக்குவதற்கான உத்திகள், லாபம் தரும் விவசாய முறைகள், வேளாண் அலுவலகங்கள் அமைந்திருக்கும் இடங்கள், அதன் தொலைபேசி எண்கள் என அனைத்தும் அடங்கியிருந்தது அந்த செயலியில்.
கூடுதலாய் வீரபாண்டியன் கைபேசி எண்ணும், சிறப்புசேவை எனும் பெயரில் இணைக்கப்பட்டிருந்தது. மனையாளின் தோள்வளைவில் தாடை அழுத்தி அனைத்தையும் பார்வையிட்டவன்,
“ஓய்! எல்லாத்தையும் நான் கொடுத்தது போலவே செஞ்சிருக்கியே, ஆங்கிலம் படிக்கத் தெரியாதவங்க எப்படி இதை உபயோகப்படுத்த முடியும்னு கொஞ்சமாவது யோசிச்சியா?”
“இதுல லாங்குவேஜ் கன்வர்ட்டர் இருக்கு அத்தான். இதோ பாருங்க, தமிழ்ன்னு இருக்க ஆப்ஷனை க்ளிக் பண்ணினா எல்லாம் தமிழுக்கு மொழி மாற்றமாயிடும். அப்புறம் படிக்கிறதுல பிரச்சனை இருக்காது” என தெளிவாய் விளக்கம் கொடுக்க, மனையாளின் நேர்த்தியான வேலையில் கவரப்பட்டவனாய் இருகரம் கொண்டு வயிற்றோடு அணைத்து மெச்சுதலாய் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
திடீரென நிகழ்ந்த இச்செயலால் காதல் ஹார்மோன்கள் விழித்துக்கொள்ள, அவன் கரத்தின் மீது தன் கரம் வைத்து அழுத்தி,
“என்ன?” என அவன் மார்பில் தலை சாய்த்து முகம் பார்க்க,
“எல்லாம் தான் முடிஞ்சிருச்சே, இன்னும் என்ன பினிஷிங் டச்?” என புருவம் ஏற்றி இறக்கினான்.
‘ம்ஹூம்… நீ இதிலேயே இரு!’ என விழித்தெழுந்த ஹார்மோன்களனைத்தும் மறுபடியும் முடங்கிவிட,
“எனக்கு சில டவுட்டுகள் இருக்கு அத்தான். இதுல இருக்க சில தமிழ் வார்த்தைகளே அப்படித்தானா? இல்லை ஸ்பெல்லிங் எறர் ஏதாவது இருக்குமோன்னு?”
“பார்டா, தமிழ் பண்டிட் பிழை கண்டு பிடிக்குறாங்க! இந்த சைனீஸ் பட்லியையே யோசிக்க வச்ச வார்த்தைகள் என்னன்னு சொல்லு பார்க்கலாம்?!”
“அத்தான், நான் ஒன்னும் சைனீஸ் பட்லி இல்லை!” என முகம் தூக்கினாலும்,
“ஏதோ பட்டு, சிட்டு, நம்மாளு… இப்படி சில வார்த்தைகள் பார்த்தேன்!?”
“ஓ! அதுவா… நான் தான் பொண்டாட்டி நமக்காக மெனக்கெட்டு செயலி உருவாக்குறாளே, அவளையும் கொஞ்சலாம்ன்னு நினைச்சு பட்டு, சிட்டு, சீனி சர்க்கரைன்னு போட்டேன்!” சிரிக்காமல் சொன்னாலும், குறும்பு கூத்தாடியது அவன் கண்களில்.
“நிஜமாவா?” ஆர்வமும், ஆச்சர்யமுமாய் அவன் முகம் பார்க்க, சிரிப்பை வெகு சிரமப்பட்டு அடக்கினாலும் கண்ணோர சுருக்கம் காட்டிக்கொடுக்க,
“கேலி பண்றீங்க தானே? போங்கத்தான்! எவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சேன் தெரியுமா? நீங்க மோசம்!” எழுந்து செல்ல எத்தனித்தவளை மடி சாய்த்து அணைத்துக் கொண்டவன்,
“அது பட்டு, சிட்டெல்லாம் இல்லை ஜில்லுக்குட்டி, பட்டா, சிட்டா, நான்குமால் அது தான் உங்க ஊர்ல நம்மாளுன்னு மாறிடுச்சு!” என கன்னத்தில் முத்தமிட,
“அப்போ கரெக்டா தான் எழுதி இருக்கீங்களா? அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?”
“அர்த்தம் புரியாமலேயே ஆப் உருவாக்கியிருக்க, இதுல ஏதாவது தப்பு இருந்தா என்ன செய்வ?”
“அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, இதை உருவாக்கினது Mr. வீரபாண்டியன் தான். Mrs. வீரபாண்டியன் ஹெல்ப் தான் பண்ணினாங்க தெரியும்ல…!” என செல்லமாய் கன்னம் கிள்ளிய கரத்தை பிடித்து முத்தமிட்டவன்,
“என் ஜில்லுக்குட்டி ரொம்ப சமத்தாயிடுச்சே… சூப்பர்டா!” என பாராட்டினாலும்
“பட்டான்னா அந்த நிலத்தோட தற்போதைய உரிமையாளர் யார், என்னங்கிற விவரம் அடங்கிய ஆவணம். இதை ரெஜிஸ்டர் ஆபீசில் வாங்கணும். பத்திரம் போட்டதும் முதல்ல வாங்க வேண்டிய டாகுமெண்ட் இது தான். அடுத்து பத்தின் கீழ் ஒன்னு 10/(1) இதை பஞ்சாயத்து போர்டில் வாங்கணும்.
உரிமையாளரோட பெயர், ஊர், இந்த நிலம் இருக்கும் இடம், அதோட அளவு எல்லாம் குறிக்கப்பட்டிருக்கும். அடுத்து நான்குமால், இதைத் தான் நம்மாளுன்னு சொன்னீங்க Mrs. வீரபாண்டியன்! இதில் நிலத்தின் நான்கு எல்லைகள் அதாவது நம்ம நிலத்திற்கு நான்கு பக்கமும் என்ன இருக்குன்னு சொல்லி அடையாளம் காட்டுறது. 
சிட்டான்னா நிலத்தில் என்னென்ன இருக்கு, அதாவது பம்ப்செட், கிணறு, நாம என்ன பயிரிட்டிருக்கிறோம் இது போன்ற விபரங்கள் இருக்கும். இப்போ புரியுதா ஜில்லு!” என அவள் விரல்கள் நீவி சொடுக்கு எடுக்க,
“இதோட யூஸ் என்ன அத்தான்?” ஆர்வமாய் கேட்டதால்,
“கவர்மெண்ட் விவசாயிகளுக்கு கடன் கொடுக்குது. நிறைய மானியம் கொடுக்குது. அதெல்லாம் வாங்கணும்ன்னா இதையெல்லாம் காட்டணும்”
“ஓ! அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை. எல்லாம் ரெடி அத்தான்!” என்றதும், அச்செயலியை அனைவரும் பயன்படுத்தும்படி இணையத்தில் இணைத்தனர் கணவனும், மனைவியும்.
“ஜில்லுக்குட்டி, அருமையான காரியம் பண்ணியிருக்க! தேங்க்ஸ்” என கன்னம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டு இதமாய் அணைத்துக் கொண்டான்.
‘இம்ப்ரஸ் ஆகிறானோ?’ மனம் துள்ளாட்டம் போட, முக்கியமான வார்த்தைகளை சொல்வான் என காத்திருக்க, அவனோ இயல்பாய் அடுத்த வேலைக்கு தாவி விட்டான். (எதிர்பார்த்து ஏமாந்து போறதே உன் வேலையா போச்சு விக்கி!)  
அன்பு தன் கணவரிடம்,
“வர்ற வெள்ளிக்கிழமை, நம்ம ஊர் திருவிழா வருது. உங்க அக்கா, தங்கச்சி வீடுகளுக்கு நானும், பெரியவனும் போய் சொல்லிட்டு வந்துட்டோம். அவன் வேலை விஷயமா வெளியூர் போறானாம். அதனால என் அண்ணன் வீட்டுக்கு நானும் நீங்களும் போய் சொல்லிட்டு வந்திடுவோம்” என நயமாய்ச் சொல்ல,
“என்னை மதிக்காத பய வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன். விருந்துக்குப் போய் கூப்பிட்டேன், வந்தானா உன் அண்ணன் மகன்? என் பொண்ணை கட்டிக் கொடுத்திருந்தா நான் பணிஞ்சு போறதுல அர்த்தம் இருக்கு. இப்போ எவன் தயவும் எனக்குத் தேவையில்லை. உனக்கு வேணும்ன்னா நீ போய் கூப்பிட்டுக்க, நான் சொல்றேன் அவன் வரமாட்டான். எழுதி வேணாலும் வச்சுக்க!” என நக்கலாகச் சொன்னார்.
“எனக்காக என் அண்ணன் மகன் மட்டுமில்ல எல்லோரும் வருவாங்க! வர்றவங்க கிட்ட மரியாதையா நடந்து உங்க மரியாதையை காப்பாத்திக்கங்க!” என நொடித்தவர், சின்ன மகனுடன் அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அண்ணனும், அண்ணியும், ஈஸ்வரியும் நன்றாகவே வரவேற்று உபசரித்தனர். வீரபாண்டியன் வேலைக்குச் சென்றிருந்ததால் அவனை நேரடியாக அழைக்க வேண்டும் என்பதால் அவனுக்காக காத்திருந்தார். மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தவனிடம்,
“வர்ற வெள்ளிக்கிழமை நம்ம ஊர்ல திருவிழா. ஒரு நேரமாவது அத்தை வீட்டுக்கு வந்துட்டு போயிடுய்யா…” அவர் சூசகமாக சொன்னதிலேயே அத்தையின் நிலை அறிந்தவன்,
“ஒரு நேரம் என்ன அத்தை, காலையிலேயே வந்து மூணு நேரமும் விருந்து சாப்பிட்டு எப்போதும் போல ராத்திரிக்கே வீடு திரும்புறோம்” என வாக்களித்தான்.
என்ன தான் பிரச்சனையா இருந்தாலும் தன்னையும், தன் மருமகளையும் பிறந்த வீட்டு சொந்தங்கள் விட்டுக்கொடுக்காததை எண்ணி நிறைந்து போனது அன்பரசியின் மனம்.
இருள் கவியத் தொடங்கும் வேளையில் கணவனின் கரம் பிடித்து ஏரிக்கரையில் நடந்தபடி,
“திருவிழான்னா என்ன அத்தான்?”
“இது கூடத் தெரியாதா உனக்கு?”
“தெரியுமே, கள்ளழகர் ஆத்துல இறங்குற சித்திரைத் திருவிழாவை யூ-டியூப்ல பார்த்திருக்கேன்… அப்படித் தான் நம்ம ஊர்லயும் நடக்குமா?”
“பரவாயில்லையே… இந்த அளவுக்காவது தெரிஞ்சு வச்சிருக்கியே! இது நம்ம கருப்பசாமிக்கு நடக்கிற கடா வெட்டுத் திருவிழா ஜில்லு. சொந்த பந்தம் எல்லாருக்கும் சொல்லி, கடா வெட்டி விருந்து வைப்பாங்க. நம்ம வீட்ல பிறந்த பொண்ணுங்களுக்கு நாம சீர் செய்யனும். தேங்காய் பழத்தோட புதுத் துணியும், சீர் பணமும் வைக்கணும். அது நம்ம வீட்டுப் பெண்ணின் கவுரவத்தை உயர்த்திக் காட்டும்.
“ஓ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா! அப்போ, நேரா அன்பு அம்மா வீட்டுக்கு போய் சாப்பிட்டு வர வேண்டியது தானா?” அறியாப் பிள்ளையாய் கேட்க,

“என் பொம்மை….! சாப்பிட்றதுக்கு மட்டுமா திருவிழா? முக்கியமா இங்க தான் பொண்ணு, மாப்பிள்ளை பார்க்கிறதெல்லாம் நடக்கும். அப்போ, பசங்க தங்களோட வீரத்தைக் காட்ட, இளவட்டக் கல்லைத் தூக்குறது, உறி அடிக்கிறது, வட மஞ்சுவிரட்டு, கபடின்னு போட்டிகள் பல நடக்கும்.

பெண்கள் தங்களோட திறமையை காட்டுறதுக்கு கோலம் போடுறது, மருதாணி போடுறது, பாட்டு பாடுறது, கும்மி கொட்டுறதுன்னு நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்கும்.

“நாம கலந்துக்கலாமா அத்தான்?” என ஆர்வமாய் கேட்க,

“இதெல்லாம் முக்கியமா நம்மள மாதிரி புது மணத் தம்பதியர், கல்யாணத்திற்கு காத்திருக்கிற இளவட்டங்களுக்குத் தான்! தாராளமா கலந்துக்கலாம்!”

“உனக்கு கோலம் போடத் தெரியுமா ஜில்லுக்குட்டி?!” கேலி கூத்தாடக் கேட்டான்.

“நான் நல்லா கலர் பண்ணுவேன் அத்தான்!” 

“அப்போ, போட்டியில கலந்துக்கிட்டு பரிசு வாங்கப் போறேன்னு சொல்லு! வீரபாண்டியனோட மனைவி தான் ஜெயிச்சாங்கன்னு ஊரையே சொல்ல வச்சிடுவியா ஜில்லு…!” என்றான் அட்டகாசச் சிரிப்புடன்.

வெள்ளிக்கிழமை விடிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை தட்டி எழுப்பி கிளம்பச் சொல்ல, தூக்கம் கலையாமலேயே தயாராகி வந்தாள். சென்டர் க்ளிப் செய்து விரியவிடப்பட்டிருந்த கூந்தலில் மல்லிகைச் சரம் சூடி, நெற்றியில் சிறிய பொட்டிட்டு அவள் நிறத்தை கூட்டிக் காட்டும் வண்ணத்தில் லெஹெங்கா அணிந்து, அதற்கு பொருத்தமாய் குந்தன் செட் நகைகளையும் போட்டு, சொக்கும் விழிகளுடன் நின்றவளைப் பார்த்து, தலை கிறுகிறுக்க, ஆச்சரியத்தில் விழிகள் விரியப் பார்த்தவன்,

“ஹே பொம்மை…! இருக்க இருக்க சின்ன பிள்ளை மாதிரி ட்ரெஸ் பண்ற!”

“ஏன் அத்தான், நல்லா இல்லையா?” மாற்றச் சொல்லிவிடுவானோ என்று மருண்ட பார்வையுடன் கேட்க,

“இப்பவே போகணுமா… மெதுவா போகலாமான்னு யோசிக்க வைக்கிற…” கள்ளப் பார்வையுடன் அருகே வந்து நெற்றிமுட்டி சிரித்தவன் சட்டென சமன் செய்து கொண்டு, 

“கிளம்பு… கிளம்பு. நேரமாச்சு! எப்போ தான் நெத்தி வகிடில் பொட்டு வைக்கிற பழக்கம் வருமோ?” எனும் முணுமுணுப்புடன் அவள் கன்னம் தாங்கி தன் உயரம் குறுக்கி தன் நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அவளது நெற்றி வகிடுக்கு இடம் மாற்றினான்.

“அதையெல்லாம் சரிபார்த்து வச்சுவிடத் தான் நீங்க இருக்கீங்களே அத்தான்…” என கொஞ்சியபடி அவனது முறுக்கு மீசையை பிடித்து விளையாட்டாய் இழுக்க

“என்னை டெம்ப்ட் பண்ணாத பொம்மை. அத்தை பாவம்… நமக்காக காத்திருப்பாங்க” என வாய் தான் சொன்னதே தவிர கரங்களோ தன்னவளை சுற்றி படர்ந்து தன்னோடு இறுக்கிக் கொண்டது. இதழ்கள் தானாக கழுத்து வளைவுக்கு இடம் பெயர்ந்துவிட நொடிகள் கரைய வெகு சிரமப்பட்டு தன்னிலை பெற்றவன்,

“உன் பக்கத்திலேயே வரக் கூடாது ஜில்லுக்குட்டி! என் மனசை கெடுத்துடற… டயமாச்சு வா…” என அழைத்துக் கொண்டு போனான். 

மருமகளின் கரம் பிடித்து அழைத்து வரும் மகனின் முகத்தில் விரவியிருக்கும் மகிழ்வைக் கண்டவருக்கு மகனின் விருப்பம் புரிய, அழகோவியமாய் இருக்கும் மருமகளின் கன்னம் வழித்து, திருஷ்டி கழித்து,

“அழகு போல இருக்கத்தா!” என அவள் தீட்டியிருந்த அஞ்சனம் எடுத்து தாடையில் திருஷ்டி பொட்டு வைத்தார்.

நாத்தனாருக்கும், மகளுக்கும் கொடுக்க வேண்டிய முறைகளுடன் வாடகைக் கார் பிடித்து அனைவரும் அன்பரிசியின் இல்லத்திற்கு சென்றனர். சொந்தபந்தங்களால் வீடே நிறைந்திருந்தாலும், தன் பிறந்த வீட்டு சொந்தங்களைக் கண்டதும் பெருமை பொங்க வரவேற்றனர் அன்பும், சுந்தரியும். வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்காவிட்டால் தன் மானம் கப்பலேறிப் போகும் என்பதால் முகம் கோணாமல் அப்பாவும் மகளும் கூட அனைவரையும் வரவேற்றனர்.
சுமதியின் நிச்சயதார்த்தத்தில் பார்த்ததற்குப் பிறகு மீண்டும் ராணியும், ஈஸ்வரியும் இப்பொழுது தான் மிகவும் நெருக்கத்தில் ஒருவரையொருவர் பார்க்கின்றனர் என்பதால் அவரவர் உள்ளத்தில் பற்பல எண்ணங்கள் அலைமோதின.
ராணியோ, அன்று பார்த்த ஈஸ்வரிக்கும் இன்று இருப்பவளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பொருத்திப் பார்த்தாள். புதுப் பெண்ணிற்கே உரிய வனப்பும், பளபளப்பும், பூசினார் போன்ற உடல் அமைப்பும், முகத்தில் நிரந்தரமாய் குடிகொண்டிருக்கும் மந்தகாசப் புன்னகையும் கணவன் மனைவியின் இணக்கத்தை அம்பலப்படுத்தியது.
அவள் அணிந்து இருப்பது லெஹெங்கா எனத் தெரியாவிட்டாலும் வேலைப்பாடுகளுடன் கூடிய பாவாடை தாவணி என எண்ணியவளுக்கு அதை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.
‘இதெல்லாம் எங்க தான் வாங்கியிருப்பாளோ, ஒருவேளை சீனாவுலயே வாங்கியிருப்பாளோ? நம்ம ஊர்ல கிடைக்கும்ன்னா அடுத்த தடவை இதை கண்டிப்பா வாங்கணும். ஆளு பார்க்க ஆழாக்கு மாதிரி இருந்தாலும் தனக்கு பொருத்தமா, நேர்த்தியா உடுத்தியிருக்கா ‘ என கண்களால் எடை போட,
கணவனின் வலிய கரத்தை சுற்றியிருக்கும் பூங்கொடியாளின் மினுமினுக்கும் கரத்தை கண்டவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது! என் உடைமையை தன் உரிமையாக்கிக் கொண்டிருக்கும் திமிர் போலும் என கண்களில் கோபம் கொப்பளிக்க அதை காட்டிக்கொள்ளாமல் இதழ்களில் புன்னகை ஏந்தி நின்றாள்.
ஈஸ்வரியோ தன் கணவனுக்கு பொருத்தமாய் ஓங்கு தாங்கான உருவ அமைப்புடன் பட்டுப்புடவையும், பலவித நகைகளும், தளரப் பின்னிய கூந்தலில் வாடைவாடையாய் மல்லிகைச் சரம் சூடி மிடுக்குடன் நிற்பவளை கண்டு,
‘இவள் தான் தன்னவனுக்கு பொருத்தமானவளோ!’ என மனம் சுருள, காரணமற்ற வருத்தத்தை கண்கள் ஒரு நொடி பகிரங்கப்படுத்த, சட்டென தன்னை சமாளித்து இயல்பாய் இதழ் விரித்தாள். ராணியின் பொருமலையும், மனையாளின் வருத்தத்தையும் ஒரு சேர உணர்ந்தவன்,
“நல்லா இருக்கியா ராணி?” என மென்முறுவலுடன் விசாரிக்க, அத்தான் தன் நலம் விசாரித்ததில் கர்வம் தலை தூக்க, மிடுக்காய்,
“நல்லா இருக்கேன் அத்தான். நீங்களும் நல்லா தானே இருக்கீங்க?!” என்றபடி ஏளனமாய் ஈஸ்வரியைப் பார்க்க, அவளோ எந்த பாதிப்பும் இன்றி இயல்பாய் இருப்பதாய் விழிகள் சங்கதி சொல்ல,
‘இது எப்படி சாத்தியம்?’ என அதிர்வுடன் அத்தானையும் அவன் மனையாளையும் அளவிட்டவளுக்கு ஈஸ்வரியின் குட்டிக் கரத்தை தன் கரத்தில் பொதித்து அழுத்திக் கொடுப்பவனின் செயலே காரணம் என்பது புரிய,
வாய் மட்டுமே நம்மிடம் உறவாடுகிறது. மனமோ மனையாளிடம் மயங்கிக் கிடக்கிறது என கண்டுகொண்டவளுக்கு கட்டுக்கடங்கா கோபமும், பொறாமையும் உண்டானது.
இந்தத் திருவிழா முடிந்து போவதற்குள் இருவரின் இணக்கத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிட வேண்டும் எனும் வெறியுடன் விலகிச் சென்றாள்.
ராணியின் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் அத்தை மக்கள் என கிட்டத்தட்ட ஒரே வயதொத்த பெண்கள் அங்கு அதிகம் இருந்தனர். அனைவருமே ஈஸ்வரியைவிட பெரியவர்கள் தான். பலர் திருமணம் முடித்து குழந்தையுடன் இருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் வீரபாண்டியன் ஈஸ்வரியை மணமுடித்தது ராணிக்கு செய்த துரோகமாகவே தெரிய யாரொருவருக்கும் ஈஸ்வரியை பிடிக்கவில்லை என்பது அவர்களது பார்வையிலும் பேச்சிலும் விலகலிலும் அப்பட்டமாய் தெரிந்தது.
“ஏன் ராணி, இது தான் ஒண்ட வந்த பிடாரியா?” ஜாடைமாடையாய் திட்டவும் செய்தனர். நல்லகாலம் அதெல்லாம் விக்கிக்கு புரியவில்லை அனைவரிடமும் சிரித்த முகமாகவே பேச விரும்பினாள்.
ராணியின் எண்ணம் நிறைவேறுமா நாளை பார்க்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!