OVS16

OVS16

ஒரு வார்த்தை… சொல்லடா…!!! அத்தியாயம் #16 
1402
1403
மருத்துவர் குழு ஈஸ்வரியை பரிசோதித்துவிட்டு,
“இது சாதாரண மயக்கம் தான். கொஞ்ச நேரத்தில் சரியாயிடும். உங்க காயத்துக்கு தான் முதுலுதவி தேவை.” என்றபடி அவன் காயங்களுக்கு மருந்திட்டனர்.
மனைவி மீது இருந்த கோபமெல்லாம் காணாமல் போக, அவளைத் தோளோடு அணைத்தபடி வந்தவனிடம்,
“ஊர்க் கண்ணெல்லாம் உங்க மேல தான் இருக்கு. இதுக்குமேல இங்க இருக்க வேண்டாம், நம்ம வீட்டுக்கு போயிடுவோம் ஐயா!” என்றார் குணவதி. அன்னை சொல்வது தான் சரியெனப்பட, அருகே நின்ற அன்பரசியிடம்,
“அத்தை, ஈஸ்வரி ரொம்ப சோர்ந்து போயிட்டா… இனி வீட்டுக்கு வந்து கிளம்பிப் போறது கூடுதல் அலைச்சல் தான். நீங்க எல்லோர்கிட்டையும் சொல்லிடுங்க. நாங்க இப்படியே கிளம்பறோம்.” என்றதும், மருமகன் தனக்காக மட்டுமே இவ்வளவு நேரம் இருந்திருக்கிறான் என்பதால் மறுப்பேதும் இன்றி
“ஈஸ்வரியை கூட்டிகிட்டு நீ கிளம்பு பாண்டி… அண்ணி வீட்டுக்குப் போனதும் பிள்ளைகளுக்கு சுத்திப் போடுங்க!” என அனுப்பி வைத்தார்.
அன்பும் அனுசரணையுமாய் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்குபவனின் மீது கோபமான கோபமும், தானிருக்க வேண்டிய இடத்தில் இவள் இருந்து கொண்டு அனைத்தையும் அனுபவிக்கிறாளே  என பொறாமையும் பெருக ஒன்றும் செய்ய முடியாத தன் கையாளாகாத்தனத்தில் எரிச்சல் மேலிட,
காலையில் இருந்து தான் தீட்டிய திட்டங்கள் அனைத்திலும் வெற்றி வாய்ப்பு கையருகே வந்தாலும் கடைசி நிமிடத்தில் மனைவிக்காக பரிந்துகொண்டு வந்து அனைத்தையும் தட்டிப் பறித்துவிடுகிறான் எனும் ஆத்திரத்தில், கோலத்துக்காக தான் வாங்கிய அரை பவுன் தங்க நாணயம் மதிப்பற்றுப் போக, இவர்களை கதறடித்தே ஆக வேண்டும் எனும் வெறியுடன் அவ்விடம் விட்டு விலகிவிட்டாள்.
வீட்டிற்கு வந்த பின்னும் பயம் தெளியாமல், அதை வெளிக்காட்டிக் கொள்ளவும் முடியாமல் மௌனமே உருவாய் தங்கள் அறையில் இருந்த ஜன்னலின் வழியே தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவளின் அருகே வந்து தோள் தொட,
கணவனின் வீரம் கண்டு பெருமை கொள்வதா அன்றி அதிலுள்ள ஆபத்தை எண்ணி நடுங்குவதா என தன்னுள் விவாதம் நடத்திக் கொண்டிருந்தவளை அந்த தீண்டல் சுயம் திருப்பியது.
“பயந்துட்டியா ஈஸ்வரி?!” என்றபடி தலைவருட அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.
“நான் எப்போதும் கவனமா தான் இருப்பேன். இப்போ கூடுதலா என்னை நம்பி நீயும் இருக்கங்கிறதால அதிக விழிப்போட தான் இருப்பேன். இதுலயாவது என்னை நம்பு ஈஸ்வரி.” பதில் சொல்லாது, அவனை தாவி அணைக்க, மறுப்பின்றி அவளை ஏற்றவன்,
“இது பயமா… பாராட்டா?” கள்ளச் சிரிப்புடன் காதுக்குள் ரகசியம் பேச,
“ம்… தண்டனை!” என்றாள் அவனை மேலும் இறுக்கியபடி.
“அப்போ தினமும் தப்பு பண்ணலாம் போலவே! எனக்கு பிடிச்சிருக்கு!” என்று அவளை மேலும் இறுக்க,
“தண்டனை நான் தான் கொடுப்பேன். நீங்க கையை எடுங்க” என்றாள் மிரட்டல் போலும்.
“முரட்டு காளையை அசால்ட்டா அடக்கிட்டேன். என் வீட்டு சைனா பீசுகிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன்!” என்று அட்டகாசமாய் சிரித்து அவள் தண்டனையை ஏற்றுக் கொண்டான்.
அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட, கண்களைத் திறக்க, குழல்விளக்கு ஒளியை கொட்டிக் கொண்டிருந்தது. அருகில் கணவனைக் காணவில்லை.
‘இவ்வளவு சீக்கிரம் எழுந்து எங்கே போயிட்டான்?’ யோசனையுடன், திறந்திருந்த ஜன்னல் வழியே பார்க்க… வியர்த்து வழிய சிலம்பம் சுழற்றிக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
சமையல் கட்டை கடந்து ரெஸ்ட்ரூம் செல்ல நேரும் போது அத்தையை எதிர்கொள்ள சங்கடமாக இருப்பதாக சொல்லி அட்டாச்ட் பாத்ரூம், டாய்லெட் இல்லை என வருந்தினாள் என்பதற்காக, இவர்கள் அறையின் பின்புறச் சுவரை இடித்து தோட்டத்திற்கு செல்ல வாசல் அமைத்துக் கொடுத்திருந்தான். அதை திறந்து கொண்டு வெளியே வர,
“என்னடா, அதுக்குள்ள எழுந்துட்ட?” தன் உடற்பயிற்சியை நிறுத்தி, வெள்ளைத் துண்டில் வியர்வையை துடைத்தபடி கேட்க,
“இவ்வளவு சீக்கிரம் எழுந்து நீங்க என்ன பண்றீங்க?” என்றபடியே அவனருகே வந்தாள். 
“இது தான் என் வழக்கம். உடற்பயிற்சி பண்றேன். உலகமகா அதிசயமாய் நீ தான் சீக்கிரம் எழுந்திட்ட!” கேலி கூத்தாடச் சொன்னான்.
‘ஓ! இதையே உடற்பயிற்சியாய் செய்வான் போல, அது தான் இத்தனை உரம்’ என எண்ணியவள்,
“காயம் வலிக்கலையா? ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு பண்ணலாம் தானே…?” என அருகில் வந்து அவன் காயங்களை பார்வையிட மனைவியின் முகத்தில் தெரியும் பரிதவிப்பு அவனிடம் நிறைவை உண்டாக்க,
“ஓய் ஜில்லுக்குட்டி இதெல்லாம் சின்ன கீறல் தான். பெருசா வலியில்லை. அதுவும் நீ வந்து பார்த்ததும் சரியாப் போச்சு.” (எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிப் போகும் மாயமென்ன மாயமென்ன பொன்மானே!… அபிராமி… அபிராமி! ச்ச ஈஸ்வரி!… ஈஸ்வரி!) என் இதழ் விரிக்க.
“ஹல்க்!” என முணுமுணுத்தவளுக்கு அவனை கவருவதற்கான அடுத்த திட்டம் தோன்றிவிட, வேக வேகமாய் முகம் கழுவிக் கொண்டு வந்தவள்,
“அத்தான் எனக்கு சொல்லித்தறீங்களா…” ஆர்வமும், ஆசையுமாய் விழி மலரக் கேட்க, சிறு சிரிப்பும் தலையசைப்புமாய் தன்னருகே நிறுத்தி, அவளுக்கு பின் நின்று தோள் வளைவில் தாடை உரச, கரம் பிடித்து கோல் பிடிக்க கற்றுக் கொடுத்தான்.
‘கடவுளே எனக்கு மட்டும் ஏன் இவன் ஏதாவது கத்துக் கொடுக்கும் போதே என்னவாவது ஆகி தொலைக்குது? திட்டப் போறான்’ தாடியின் குறுகுறுப்பும் கம்போடு சேர்த்து தன் கரத்தையும் பற்றியிருப்பதால் உண்டான அழுத்தமும் குட்டி பொம்மைக்கு குளிர் பரவச் செய்ய என்ன செய்வதென்று தெரியாமல் பேந்த விழித்துக் கொண்டிருக்க அவளது நிலை உணர்ந்தவன், (வீரா, நீ வேணும்னே வேணும்னே தானே பண்ற…)
“சிலம்பம் கத்துக்கறவளா நீ…? கையை பிடிச்சதுமே கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி கிறுகிறுத்து போய் நிக்கிற…?” அட்டகாசமாய் சிரிக்க,
‘ஐயோ! கண்டுகொண்டானே… இவனுக்கே தெரியும் படி உருகி நிக்கிறோமே ஷேம் ஷேம்…’ வெட்கம் வந்துவிட
‘இவன் முன் நிற்கவே கூடாது கேலி செய்தே கொல்லுவான்…’ மிரண்டு போய் விலக எத்தனிக்க,
“ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள எங்க கிளம்பற…? ஒழுங்கா பிடி” கண்ணோரம் சுருங்க சிரித்தபடி ஆணையிட்டான்.
“இப்போ வேண்டாம் இன்னொரு நாள் கத்துக்கறேனே…” ஒரு மனம் கணவனின் தொடுகைக்காக ஏங்க… மற்றொன்றோ,
‘சீ… போ! கொஞ்சமும் லட்ஜயே இல்லாத சைனா செட்டு!’ என கலாய்க்க தப்பி பிழைக்க வழி தேடி உளறிக் கொட்ட,
“என்னடி… கத்துக்கொடுங்கன்னு கேட்டு 5 நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள இப்போ வேண்டாம்னு எஸ்கேப் ஆகற… சரியில்லையே…” அவள் உயரத்திற்கு வாகாய் குனிந்து நெற்றி முட்டி இதழோர சிரிப்புடன்,
“என் ஜிலுக்குட்டிக்கு என்ன வேணும்?” மென்மையிலும் மென்மையாய் கேட்க, எச்சில் விழுங்கி உண்மை சொல்லத் தயங்கி
“தூக்கம் வருது…” அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை எனினும் கள்ளனுக்கு நன்றாகவே கேட்டு வைக்க,
“ஓ! பல்விளக்கி, முகம் கழுவிட்டு வந்தா செம தூக்கம் வருமா…? இத்தனை நாளா இது தெரியாம போச்சே… இது சீன உத்தியா பொம்மை?” கைவளைவில் இறுத்திய படி சிரிக்காமல் கிழித்து தோரணம் கட்டினான். 
“நான் போறேன்…” சிறு பிள்ளையாய் முகம் தூக்கினாலும் கொஞ்சமும் நகராமல் சொகுசு பூனை தன்னவனோடு ஒண்டிக் கொள்ள, பசலை படர்ந்து கிடப்பவளுக்கு மருந்தாக விரும்பியவனாய் 
“என் செல்ல பொம்மைக்கு இப்போ அத்தான் வேணும், அதானே?” மூக்கோடு மூக்கை உரசி சிரித்தவன், அவளை கைகளில் ஏந்திக் கொண்டான். அதன் பின் அன்றைய விடியல் அற்புதமாய் மாறிப் போனது.                                     
தினமும் ஸ்கூட்டியை ஓட்டிப் பழகவும், தமிழ் எழுதப் படிக்கவும் கற்றுக் கொள்வதோடு புதிதாய் ஒன்றையும் கற்க திட்டமிட்டு கணவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணினாள். அவள் கணவனோ வழக்கமான நேரத்தை விட முன்னதாக வீட்டிற்கு வர, அவளைக் காணாது அன்னையிடம் விசாரிக்க,
“அதை ஏன் கேக்குற தம்பி, ரெண்டு மூணு நாளா புது பாடம் படிக்கிறா. தோட்டத்தில் போய் பாரு!” என சிரிப்புடன் சொல்ல,
“அப்படியென்ன புதுசா கத்துக்கிறா?” என ஆர்வமாய் வர,
“டேய்! இது தேறாதுடா, மூணு நாளா சொல்லித் தரோம்… இன்னும் கம்பையே சரியா பிடிக்கத் தெரியலை, நீ வேஸ்டுக்கா!”
“ரொம்ப பண்ணாதீங்கடா, நீங்களே அரைப்பெடல் தான். ஓவரா பண்ணீங்க, நான் என் அத்தான்கிட்டயே கத்துப்பேன் பார்த்துக்கோங்க”
“ம்ஹூம்… அத்தானில்லை, ஆண்டவனே வந்து சொல்லிக் கொடுத்தாலும் கஷ்டம் தான்!” என அண்டை வீட்டு அரை டிக்கெட்டுகளெல்லாம் அவளை கிழித்து தோரணம் கட்டிக் கொண்டிருக்க, வீறு கொண்டவளாய் சிலம்பத்தை சுழற்ற, அது பறந்து போய் விழுந்தது. அவர்களெல்லாம் கூடிச் சிரிக்க,
“என்ன கொடுமை சரவணா இது? இவனுக எல்லாம் என்னை பார்த்து சிரிக்கிற மாதிரி ஆயிடுச்சே!” என புலம்பியபடி நிற்பவள் அருகே வந்து தோள் தொட,
“அத்தான்! எப்ப வந்தீங்க?” ஆச்சர்யமாய் விழி விரித்து,
“பாருங்க அத்தான், எல்லோரும் கேலி பண்றாங்க!?” என்று சிணுங்க,
“என்ன அலும்பு? சின்ன புள்ளையை ஏன்டா கேலி பண்றீங்க?” என சிரிக்காமல் கலாய்த்தாலும், அவள் கரம் பிடித்து கற்றுக் கொடுக்க கம்பு (கோல்) அழகாக சுழன்றது.
“ஹேய்!” என கூச்சலிட்டவளை அண்டை வீட்டு வாண்டுகளெல்லாம் அசந்து போய் பார்த்ததோடல்லாமல், ”எனக்கும்! எனக்கும்!” என லைன் கட்டி அவனிடம் கற்றுக் கொண்டன.
“அத்தான், பேசாம நீங்களே எங்க எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தா என்ன? வாரத்தில் ரெண்டு நாள் இல்லை வீக் என்டில் மட்டும். இப்படி வயசுப்படி பிரிச்சு, சிலம்பம் கிளாஸ் எடுக்கலாமே!” என்றதும் புருவம் உயர்த்தி தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியவன்,
“பண்ணலாமே…. இதை நான் யோசிக்கவேயில்லை. என்னடா கத்துக்கறீங்களா?” என கேட்டது தான் தாமதம், சம்மதமாய் கூச்சலிட்டதோடு நண்பர்களையும் அழைத்து வருவதாக வேறு உத்திரவாதம் கொடுத்தனர்.
“அத்தான் எனக்கும்…!” கணவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்ச,
“இது தூரிகை பிடிக்கிற கை ஜில்லுகுட்டி, கோல் பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. உனக்கு பாதுகாப்பு அரணாய் அத்தான் இருக்கேன்”
“ப்ளீஸ் அத்தான்”
“என்னை இம்ப்ரஸ் பண்ண ஏன்டி இவ்வளவு மெனக்கெடுற?” வம்பாய் வருத்திக் கொள்கிறாளே எனும் ஆற்றாமையுடன் கேட்டான். கூர்ந்து நோக்கியவள்,
“காதல் இல்லாம குடும்பம் பண்றது நெருடலா இருக்கு!” என்றதும் ஏனோ மனதின் ஓரம் சிறு வலி உண்டானது.
‘நெருடல் திருமண பந்தத்திற்கு நல்லதில்லையே…’ என யோசித்தவன்,
“ஐ லவ் யு“ என அடிக்குரலில் சொல்ல, வாய்விட்டு சிரித்தவள்,
“எனக்காக சொல்லாதீங்க அத்தான். உண்மையாவே நீங்க விரும்பினா இப்படி சொல்லமாட்டீங்க… ” (வேற எப்படி சொல்வாங்க… தாய் மொழியிலயா… இப்போவெல்லாம் ஆயா கூட ஐ லவ் யூ ன்னு தான் சொல்லுது!)
“நீ இப்படித் தானே சொல்ற?”
“ம்ஹூம்… உங்க கண்ல காதல் இல்லை, உணர்ச்சியே இல்லாத குரல், நான் வருத்தப்படக் கூடாதுன்னு சொல்றீங்களே தவிர நீங்க சொன்ன விதமா இன்னும் காதலை உணரவேயில்லை.” (ஏன் வீரா, விடிவி கணேஷ் வாய்ஸ் ட்ரை பண்ற?)
“நீ இவ்வளவு புத்திசாலியா இருந்திருக்க வேண்டாம்” என்றதோடு சென்றுவிட்டான்.
“என்ன இம்சைடா இது? இவனை எப்படித் தான் இம்ப்ரஸ் பண்றது?” (இப்போ புரியுதா பசங்க ஏன் ரொம்ப ரிஸ்க் எடுக்குறதில்லைன்னு!? சும்மா படத்துக்காக பிளான் பண்ணலாம்… உண்மையில எல்லாம் ஊத்திக்குது பாருங்க!)
பெரும் யோசனைக்குப் பின் புதிய திட்டத்திற்கான பல்ப் எரிந்தது. அதன்படி ஊர் ப்ரெசிடெண்ட் பெரியண்ணனை பார்க்கச் சென்றாள். குணவதியின் ஒன்றுவிட்ட நாத்தனார் தெய்வானையின் கணவர் தான் இவர். அண்டை வீடு தான் என்றாலும் இதுவரை சென்றதில்லை என்பதால் இவளைப் பார்த்ததும்,
“வா ஆத்தா!” என வாய் நிறைய வரவேற்றவர்,
“தெய்வானை, வராத புள்ளை வந்திருக்கு பாரு, விரசா வா!” என திண்ணையில் அமர்ந்தபடியே குரல் கொடுக்க,
“யாருங்கிறேன் அது? இந்தா வாரேன்!” பதில் குரல் கொடுத்தார் கூடத்தில் இருந்த தெய்வானை.
“நம்ம பாண்டியை கட்டியிருக்க, வெளிநாட்டு புள்ளை தான்!” என்றதும் அவருக்கும் சிறிது ஆச்சரியம் உண்டாக, வேக நடையில் வந்து,
“வா ஈஸ்வரி! இப்போ தான் பக்கத்து வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுச்சா?” என நீட்டி முழக்க,
“எப்போதும் நீங்களே வந்துடுவீங்க, கொஞ்ச நாளா உங்களை பார்க்க முடியலை. அதான் வந்துட்டேன்” என உரிமையாய் சொன்னவள் கிஃப்ட் வ்ராப் செய்யப்பட்ட பரிசை அவரிடம் கொடுக்க,
“இதெல்லாம் எதுக்கு ஈஸ்வரி?” என்றாலும் ஆர்வமாகவே பிரிந்தவருக்கு பெரும் அதிர்ச்சி. இது அவர் எதிர்பார்க்காதது என்பதை பகிரங்கமாய் விரிந்த விழிகள் காட்டிக் கொடுக்க,
“பிடிச்சிருக்கா பெரியம்மா?” வாஞ்சையாய் கேட்டவளை அணைத்துக் கொண்டு கன்னம் வழித்து திருஷ்டி கழித்து, கன்னத்தில் முத்தமிட்டு,
“ஏங்குறேன்! இதை பாருங்களேன்… புள்ளையே பண்ணியிருக்கு!” (நல்லா ஏங்குறாங்கைய்யா உங்க மனைவி!) என பெருமை பிடிபடாமல் சொல்ல, 
மனையாளின் கையில் இருக்கும் கேன்வாஸை வாங்கிப் பார்க்க, பெரியண்ணனும், தெய்வானையும் தங்கள் இளமைக் காலத்தில் இருந்தது போல அழகான ஓவியமாய் சிரித்துக் கொண்டிருந்தனர். அவருக்கும் இன்ப அதிர்ச்சியாய் தான் இருந்தது.
“நீ அந்த காலத்தில் இருந்த மாதிரியே அச்சுபிசகாம வரைஞ்சிருக்கு தெய்வானை”
“மாமா அத்தையோட கல்யாணத்துல ஒரு குரூப் போட்டோ எடுத்து கூடத்தில் மாட்டியிருக்காங்களே அதுல இருந்து தான் வரைஞ்சேன்”
“அடி என் ராசாத்தி! ஒரு போட்டோ புடிக்க அப்ப 10 ரூபாய் கேட்டான்னு இந்த மனுஷன் வேண்டாம்னு சொல்லிட்டார். அதான் பொண்ணு, மாப்பிளையோட எல்லாருமா சேர்ந்து நின்னு எடுத்துக்கிட்டோம்.”
அன்றைய நினைவுகளில் மனம் லயிக்க சொல்லிக் கொண்டிருந்தார் தெய்வானை.
“பெரியப்பா, நீங்க தானே இந்த ஊர் ப்ரெசிடெண்ட்? நிறைய நல்ல விஷயமெல்லாம் பண்ணியிருக்கீங்கன்னு அத்தான் சொன்னாங்க” என மெல்ல பேச்சை ஆரம்பிக்க,
“பெருசா ஒன்னும் பண்ணல ஆத்தா, கிராமிய வளர்ச்சி நிதின்னு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் கொடுத்து நம்ம ஊருக்கு தேவையானதை செஞ்சுக்கச் சொல்ல ஆண்களுக்கும், பெண்களுக்கும்ன்னு மொத்தம் பனிரெண்டு கழிப்பறை கட்டியிருக்கேன். தனித்தனியா ஆளைப் போட்டு தினமும் அதை சுத்தம் பண்ண சொல்லியிருக்கேன்”
“வாவ்! சூப்பர் பெரியப்பா, கழிப்பறை எல்லோரும் தான் கட்டுவாங்க, அதை சுத்தமா வச்சுக்க ஆள் போட்டு கவனிக்கிறீங்களே, இங்க தான் நீங்க உயர்ந்து நிக்கிறீங்க!” என அவர் கரம் பற்றிக் குலுக்க,
“ம்ஹூம்… ஊர்ல ஒரு பய மதிக்கமாட்டேங்குறான். ப்ரெசிடெண்ட்ன்னு பேர் தான் பெரிசா இருக்கு” என தெய்வானை கடுப்படிக்க,
“ஊரென்ன பெரியம்மா, உலகமே பெரியப்பவை புகழுற நிலை வரும் பாருங்க. நான் கிளம்பறேன், அத்தான் வந்துடுவாங்க!” என விடைபெற்றவள் நேரே பொது கழிப்பறைக்குத் தான் சென்றாள். பேஸ் புக்கில் எங்கள் ஊர் ‘மாதிரி கிராமமாய்’ உருமாறும் வளர்ச்சிப் பணிகள் எனும் தலைப்பில் கழிப்பறையின் புகைப்படங்கள், அதை தூய்மையாக வைத்திருக்கும் துப்புரவு தொழிலாளிகள், ப்ரெசிடெண்ட் பெரியண்ணன் அனைவரின் புகைப்படமும் பதிவிட லைக்குகளும், கமெண்டுகளும் குவியத் தொடங்கின.
மறுநாள் இதை பெரியண்ணனிடம் பகிர்ந்துகொள்ள, பெருமை பிடிபடாமல் புகழுக்கு ஏங்கிக் கிடந்த மனிதன் அதற்கு வழிவகுக்கும் விதமாய் ஈஸ்வரி சொன்ன அனைத்து திட்டங்களுக்கும் தானாகவே தலையசைத்தார்.
‘கவர்மெண்ட் கொடுத்த காசு இருக்கு, சொல்லிக் கொடுக்க நீயும், எடுத்துச் செய்ய நானும் இருக்கும் போது வெகு சீக்கிரம் நம்ம ஊர் மாதிரி கிராமமா வளர்ந்து நிக்கும். அடுத்தவங்க நல்லா இருக்கனும்னு நினைக்க பெரிய மனசு வேணும். நீ நல்லா வருவா ஆத்தா!” என மனமார வாழ்த்தினார்.
‘இதுலயும் என் சுயநலம் இருக்கு பெரியப்பா. என் அத்தானை காதலில் விழ வைக்கத் தான் எல்லாம். ஊர் மக்களுக்கு நல்லது செஞ்சா நிச்சயம் இம்ப்ரஸ் ஆவாங்க. நன்னிலம் மாதிரி கிராமமா மாறும் நேரம் அத்தான் சுயம் தொலைப்பாங்க!’ என தேற்றிக்கொண்டாள்.
வாரத்தில் மூன்று நாட்கள் வயது வாரியாக பிள்ளைகளையும், பெரியவர்களையும் பிரித்து இலவசமாக சிலம்பாட்டப் பயிற்சி கொடுக்கத் தொடங்கியிருந்தான் வீரபாண்டியன். வெளியூர்களில் இருந்தும் கூட ஆர்வமாய் பயில வந்தனர் என்றதும்,
“தேங்க்ஸ் ஜில்லு! நம்மோட பாரம்பரிய காலை தொடர்ந்து வளர்ச்சி பெற நீயும் காரணம். கத்துக்கிட்ட எனக்கு சொல்லிக் கொடுக்க தோணலை. இப்போ உன்னால அம்பது பேர் ஆர்வமா கத்துக்கிறாங்க. அம்பது நூறாகும், நூறு ஆயிரமாகும் நம்ம கலைக்கு அழிவே கிடையாது. 
இன்னும் ஐந்து ஆறு வாத்தியார்களை சேர்த்து ஒரு குழு அமைச்சு சுற்றுவட்டாரப் பள்ளி கல்லூரிகள்ல போய் சொல்லிக் கொடுக்கலாம்ன்னு யோசிக்கிறேன். டோர்னமெண்ட்டுக்கு ஸ்பெஷல் கோச் கூட கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன். எல்லாம் உன்னால் தான்!” நெற்றியில் இதழ் ஒற்றி இதமாய் அணைத்துக் கொள்ள,
“இங்க இருக்க சிம்மாசனத்தில் எப்போ என்னை உட்கார வைக்கப் போற?” எனும் கேள்வியுடன் அவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அடுத்தடுத்த நாட்கள் மாதிரி கிரமமாய் மாற்றும் நடவடிக்கைகளில் ரெக்கை கட்டிப் பறந்தன. அதில் முதல் திட்டமாய் கிராமம் முழுவதும் பசுமையாக்க முடிவெடுத்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மரக்கன்றுகள் நடும் பணியை பெரியண்ணனின் உதவியுடன் ஆரம்பித்தாள். அதற்காக அனைத்து வீட்டு வாசல்களிலும் சிறுசிறு குழிகள் வெட்டப்பட்டன.
அதைப் பார்வையிட்டபடியே பெரியண்ணனை தன் ஸ்கூட்டியில் அழைத்துக்கொண்டு வேளாண் துறையின் தோட்டக்கலை வளர்ச்சி மையத்துக்குச் சென்று அரளிச் செடிகள் வாங்க ,
“மரக்கன்னு வாங்கணும்னு சொல்லித் தானே கூட்டிட்டு வந்த ஆத்தா, இப்போ நாம ஏன் அரளி பூச்செடியை வாங்குறோம்?”
“கண்டிப்பா மரக்கன்றுகளும் தான் வாங்கப் போறோம் பெரியப்பா. அதை ரோட்டோரமா வைப்போம். வீட்டை ஒட்டி வச்சா, அதோட வேர் காம்பவுண்ட் சுவர்ல விரிசலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கு. அதுவே பூச்செடியை வச்சோம்ன்னா வீட்டுக்கு அழகு சேர்த்த மாதிரியும் ஆச்சு, பூஜைக்கு பூவும் ஆச்சு. ஆடு, மாடு அரளிச் செடியை சாப்பிடாது. ரொம்ப முக்கியமா அரளிச்செடியில மத்த செடிகளைக் காட்டிலும் அதிக அளவு ஆக்சிஜன் கிடைக்கும்.
எந்த வகை மண்ணிலும் இது பிழைச்சுக்கும். தண்ணீர் ரொம்ப தேவைப்படாது. உப்பு நீர்லயும் வளரும். அதனால் தான் இதை வீட்டு வாசலில் வளர்க்கப் போறோம்” என்றபடி அரளிச்செடிகளை எண்ணி டெம்போவில் வியர்க்க விறுவிறுக்க ஏற்றிக் கொண்டிருந்தவளை பெரும் அதிர்வுடன் எதிர்கொண்டான் சிவகுருநாதன்.
‘இவ இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கா இங்க? இந்த வேலையெல்லாம் தனியா செய்யச் சொல்லிட்டு சார் என்ன தான் பண்ணுவாரோ? பாவம், வெயிலின் தாக்கத்தால வாடிப் போன கீரைக்கட்டு மாதிரி பரிதாபமாக இருக்கா. பூவை போல வீட்டிலேயே பொத்தி வச்சுக்காம இப்படி கஷ்டப்படுத்துறாரே! பாவம் இந்த பொண்ணு… பக்கா கிராமத்து பொண்ணாவே மாறிட்டா!’ உள்ளம் வெதும்ப வெகு சிரமப்பட்டு தன்னை சமன் செய்து கொண்டு,
“ஹாய் ஈஸ்வரி! நீங்க எங்க இங்க?” என மெனக்கெட்டு இதழ்களை காது வரை இழுத்து சிரித்தபடி கேட்டான்.
“யாரிந்த பையன்? ரொம்ப தெரிஞ்சவரு மாதிரி வந்து பேசுறாரு… இதுவரை நாம எங்கேயும் பாத்ததில்லையே?” என யோசிக்கத் தொடங்க,
“வாங்க ஷிவா, பெரியப்பா இவர் சிவகுருநாதன். அத்தானுக்கு தெரிஞ்சவர். நம்ம வீட்டுக்கு கூட வந்திருக்காரு. கம்ப்யூட்டர் படிப்பு படிச்சு, வெளிநாட்டுல சம்பாதிச்சாலும் விவசாயம் பண்ணணும்ங்கிற ஆர்வத்துல அதை விட்டுட்டு வந்து அத்தான் உதவியோடு இப்போ முழு நேர விவசாயியா மாறிட்டாரு”
விஷயம் என்னவோ சிவகுருநாதனைப் பற்றி தான் என்றாலும், அதிலும் தன் அத்தானின் பெருமையை பறைசாற்றினாள் ஈஸ்வரி. (இது தான் சந்துல சிந்து பாடுறதா விக்கி?!)
பெரியண்ணன் கேட்காமலேயே சிவாவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சொன்னவளின் மீது அவருக்கு மதிப்பு கூடியது.
“சிவா, இவங்க என் பெரியப்பா. எங்க ஊர் ப்ரெசிடென்ட். நன்னிலத்தை ‘மாதிரி கிராமமா’ மாத்துறதுக்காக பெரும் முயற்சி பண்ணிட்டுருக்காங்க, அதுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்யுறேன். மரம் நடலாம்ன்னு திட்டமிட்டுருக்கோம். அதான் வந்தோம்!” என்றவளை ஊன்றி கவனித்தவனால் அவளது மாற்றங்களை கண்டுகொள்ள முடிந்தது.
முதன் முதலில் இவளைப் பார்த்தபோது இவளது பேச்சும், பழகிய விதமும் இப்பொழுது நடந்துகொள்வதற்குமான வித்தியாசத்தை எளிதில் கணித்தவன் இவள் முழு ஈடுபாட்டுடன், மனமொன்றியே இவர்களுடன் கிராமத்துவாசியாய் வாழப் பழகிவிட்டாள் என்பதையும் உணர்ந்துகொண்டான். மனதில் இருந்த பாரம் விலக,
“வாழ்த்துக்கள் ஈஸ்வரி! உங்க ஊர் ‘மாதிரி கிராமம்’மா மாற வாழ்த்துக்கள் ஐயா! நான் கிளம்பறேன்” என்று விடைபெற்றுக் கொண்டான்.
அவள் அறியாமல் அவள் செய்யும் அத்தனை வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு இதழ்கள் தானாக விரிந்த போதும், எதையும் கண்டு கொள்ளாமல் அறியாப்பிள்ளை வேஷம் போட்டு விலகியே நின்றான் அவளது கணவன்.
அனைத்து செடிகளும் ஒவ்வொரு வீட்டு வாசலின் இருமருங்கிலும் சம இடைவெளியில் நேர்த்தியாக நடப்பட்டன.
அடுத்ததாக, தெருவெங்கிலும் புண்ணை, வேம்பு, பூவரசம் போன்ற மரங்கள் நடப்பட்டன. அதை பராமரிப்பதற்கு தனியாக ஆட்களை நியமித்தார் பெரியண்ணன்.
இவை அனைத்தும் பேஸ்புக்கில் ஏற்றப்பட, பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்தன. மரம் வளர்க்க மழை வரும், அதை தேக்கி வைக்க ஊருணியும், கண்மாய்களும் தூர்வாரப்பட வேண்டும் என்று எடுத்துச் சொல்ல, அதையும் இவளை அருகில் வைத்துக்கொண்டே சிறப்பாக செய்து முடித்தார் ப்ரெசிடெண்ட் பெரியப்பா.
இப்பொழுது செய்யப் போவது மிகவும் முக்கியமான பணி. தெரு விளக்குகள் அனைத்தையும் சோலாராக்குவது, இதற்கு கணவனின் துணை கண்டிப்பாக வேண்டும் என்று தோன்றிவிட அவனுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தவள் வண்டி சத்தம் கேட்டதும் வழக்கம் போல்,
“அத்தான்!” என்ற அழைப்புடன் தாவி அணைத்துக் கொள்ள ஒருமுறை கூட திரும்ப அணைக்காதவன்,
“ஜில்லுக்குட்டி!” குழைவுடன் அணைத்து முதுகில் விரல்கள் கொண்டு கோலமிட, கூச்சம் அவளை நெட்டித் தள்ள, அவனுள் இன்னும் இன்னும் தன்னை ஆழப்புதைத்து கொண்டாள்.
“என்னடி, கட்டிக்க மாட்டேங்கிறேன்னு பஞ்சாயத்தை கூட்டுறவ, இப்போ இப்படி நெளியுற?” கள்ளச்சிரிப்புடன் செவியில் முறுக்கு மீசை முத்தமிட கிசுகிசுத்தான்.
“அத்தான் ப்ளீஸ்…” கெஞ்சியவளின் உடல் வெப்பம் கூட, தொண்டை வறண்டு, நா உலர்ந்து வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள,
“கடவுளே! கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்கமாட்டேங்கிறானே !” என மனம் சினுங்க, ஒருவேளை காதல் சொல்லப் போறானோ? எனும் ஆவலில் நிமிர்ந்து அவனைப் பார்த்து,
“என்ன…?”
“வெளியில் போலாமா ஜில்லு?”
“இதை சும்மா கேட்டா ஆகாதோ?” வெடுக்கென கேட்டாள். அட்டகாசமா சிரித்து வைத்தவன்,
“ஏன் இப்படி கேட்கிறதுல என்ன பிரச்னை?” பின்னிருந்து அணைத்து கன்னத்தோடு கன்னம் உரசினான்.
“லவ் சொல்லப் போறீங்களோன்னு நினைச்சேன் தெரியுமா?” அவள் முகம் தூக்க,
“லவ், லவ்வுன்னு ஏன்டி இப்படி படுத்துற? இப்போ என்னை இம்ப்ரஸ் பண்ற மாதிரி எதுவும் பண்ணலையே!” கண்கள் இடுங்க கூர்ந்து நோக்கினான்…
நாளை சொல்லுவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!