OVS6

OVS6

பட்டும், வைரமுமாய் ஜொலிக்கும் மருமகளின் தலையில் வஞ்சகமில்லாமல் வகையாய் மல்லிகைச் சரத்தை வைத்துவிட்டு, அனைவருக்கும் காலை உணவு பரிமாறி கோவிலுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார் குணவதி. 
சின்ன மகளின் குடும்பத்தாரும், சில உறவுகளும் தங்கள் வீட்டிலிருந்தபடியே கோவிலுக்கு வருவதாய் சொல்லிவிட, சுந்தரியும் ஈஸ்வரியுமாய் தான் பூஜை சாமான்கள், பொங்கலிடத் தேவையானப் பொருட்கள் எல்லாவற்றையும் வேனில் ஏற்றினர். அதற்குள் குறைபாடும் நான்கு அத்தைகளும் வந்து வேனில் அமர்ந்து கொண்டு, 
“வேகம் பத்தலையே! சீக்கிரம்… சீக்கிரம்!” என சிறு பெண்கள் இருவரையும் விரட்டிக் கொண்டிருந்தனர். 
“அதுங்க அப்படித் தான், நீங்க கண்டுக்காதீங்க அண்ணி.” எனது தேற்றிக் கொண்டிருக்க,
“ஈஸ்வரி… ஈஸ்வரி!” அவள் கணவன் தான் தங்கள் அறையிலிருந்து அழைத்துக் கொண்டிருந்தான்.
“அண்ணன் கூப்பிடுறாங்க அண்ணி. நீங்க போங்க! மிச்சத்தை நான் எடுத்து வைக்கிறேன்.” என அனுப்பி வைத்தாள். 
தண்ணீர் இறைத்துத் தரவில்லை என்னும் கோபத்தின் விளைவாய் அவனை ஏறெடுத்துக் கூட பாராமல் தன் போக்கில் சுற்றிக்கொண்டிருந்தவள் தப்பிக்க வழியின்றி பொம்மையாய் அவன் முன் நின்றாள். 
“அம்மா எங்க ஜில்லு?” தரை பார்த்தவளின் தாடை பற்றி நிமிர்த்த அப்பொழுதும் எங்கோ பார்த்தபடி,
“குளிக்கிறாங்க” என்றாள். (ஒரு வார்த்தை… ஒரு லட்சம்!)
“அம்மாவுக்கு வேலை மட்டும் தான் பிரதானம். தன் உடம்பை பார்த்துக்க மாட்டாங்க. எல்லாரையும் சாப்பிட வைக்கிறவங்க சாப்பிடாமலேயே வண்டி ஏறிடுவாங்க. இனி அவங்களை நேரத்துக்கு சாப்பிட வைக்குறது தான் உன்னோட முதல் வேலை. புரியுதா?” எனத் தோள்களில் கரம் பதித்து, விழி பார்த்து வினவ,
‘அம்மாகிட்ட அன்பா இருக்கிற பசங்க மனைவிகிட்டயும் அனுசரணையா இருப்பாங்கன்னு நேத்து சுந்தரி அண்ணி சொன்னாங்களே, அப்போ இவனுக்கு சீக்கிரமே என் மேலே காதல் வந்திடுமோ?!’ (இப்படி நினைச்சு எத்தனை பேர் ஏமாந்திருக்கோம் தெரியுமா?) நினைவுகளில் மூழ்கியிருந்தவளின் தோள்களை அழுத்தி 
“ஹேய், தமிழ் எழுதப் படிக்கத் தானே தெரியாது? பேசுறது புரியும் தானே?” கிண்டலாய் கண் சிமிட்டி வினவ, கேலி என்பது புரியாமல் தன்னை மட்டம் தட்டுவதாய் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டவளுக்கு அழுகை வந்தது.
நான் பார்த்துக்கிறேன்” வெடுக்கென மொழிந்து அவன் கரம் தட்டி விட்டு விடுவிடுவென வெளியேற,
‘இவளுக்கு என்னவாகி விட்டது?’ யோசனையுடன், 
“ஈஸ்வரி!” அழைத்தபடியே நாலே எட்டுகளில் அவள் கரம் பிடிக்க, விடுவிக்க எண்ணி தன் கரத்தை பின்னுக்கு இழுக்க, தங்கையின் கொலுசொலி கேட்டதும், பட்டென விட்டு விட்டான். சமையல்கட்டு பக்கம் சென்றவளை எதிர் கொண்ட குணவதி, 
“என்ன ஆத்தா, எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டீங்களா?” என விசாரித்தபடி பின் கதவை தாழிட, 
“வச்சுட்டோம் அத்தை. நீங்க சாப்பிட்டீங்களா?” மகனைத் தவிர வேறு யாரும் தன்னை இப்படி விசாரித்தது இல்லை. இன்று மருமகள் கேட்கிறாள் எனும் மகிழ்வில் வாஞ்சையாய் தலை வருடி,
“அதுக்கெல்லாம் நேரமில்ல. என் நாத்தனாரெல்லாம் வண்டியில ஏறிட்டாங்கன்னா உன் மாமா கிளம்பனும்ன்னு நச்சரிப்பாங்க! அவங்களுக்கு போட்ட காபி தண்ணி மிச்சமிருக்கு. அதை குடிச்சுட்டு வாரேன். நீங்க போய் வண்டியில ஏறுங்க.” என சாமியறை நோக்கி நகர,
‘பாவம், சாப்பிடக் கூட நேரமில்லையே!’ என வருந்தியபடி சமையல்கட்டில் நுழைந்து தேடித் துழாவி குட்டி தூக்கில் ஐந்து இட்லிகளும், தனி டப்பாவில் கொஞ்சம் சாம்பாரும் எடுத்துக் கொண்டவள், தன் கைப்பையில் எப்பொழுதும் வைத்திருக்கும் சிறிய வாட்டர் பாட்டிலில் தண்ணீரும் அடைத்துக் கொண்டாள். 
“பாண்டி, உன் ஆத்தாவும், பொண்டாட்டியும் வாரதுக்குள்ள கோவில் நடையே சாத்திருவாங்க போல…. வெரசா வரச் சொல்லுய்யா!” என பெரிய அத்தை ஏவல் செய்ய, (தண்ணியில காபி போட்டு கொடுத்தா இப்படி ஏவமாட்டீங்க)
“அம்மா..!” மகனின் குரல் கேட்டதும், குடிக்க எடுத்த காபியை அப்படியே வைத்துவிட்டு கிளம்பிவிட்டார். 
“அவ எங்கம்மா? சாவியைக் கொடுங்க! நீங்க போய் வண்டியில ஏறுங்க.” என்றவன், 
“ஈஸ்வரி!” என குரல் உயர்த்தி அழைக்க தங்கள் அறையில் இருந்து மின்னலாய் வந்தாள்.
“இன்னும் என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்க? உனக்காக எல்லோரும் காத்துக்கிட்டு இருக்கனுமா?” அத்தை சொல்லும்படி நடந்து கொள்கிறாளே எனும் கோபத்தில் சுள்ளென சொல்லிவிட்டான். 
கணவனின் முதல் கோபம், அவனது கத்தல் அனைவர் காதிலும் விழுந்திருக்கும் எனும் அவமானத்தில் அழுகை வந்துவிட்டது. உதடு கடித்து அதை அப்படியே விரட்டியவள், வண்டிக்கு வர, அங்கு டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்த மாமனார்,
“புள்ளைக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எடுத்திட்ட. இன்னும் உனக்கு பொறுப்பே இல்ல குணா! காலாகாலத்தில் கிளம்பாம வீட்டுக்குள்ளேயே என்ன தான் பண்ணுவியோ தெரியல?” என சிடுசிடுக்க, 
“இந்த வீட்டு ஆண்களே இப்படித் தானோ? பெண்களெல்லாம் வேலைவெட்டி இல்லாமல் விழுந்தடித்து தூங்கி கொண்டிருப்பதாக எண்ணமோ? பாவம் அத்தை! காலையில் எத்தனை மணிக்கு எழுந்தார்களோ? காபி கூட குடிக்க நேரமில்லாமல் பம்பரமாய் சுழன்று இருக்கிறார்கள்… 
அது கூட தெரியாமல் அனைவர் முன்னிலும் மாமா இப்படி கோபப்படுகிறார்களே…. அது சரி, படித்த இவனுக்கே மனைவியை அடுத்தவர் முன்னிலையில் கடிந்துகொள்ளக் கூடாது என்பது தெரியவில்லை. சரியான நாட்டான்! காட்டான்! கிராமத்தான்!’ திட்டி தீர்த்தாள். 
மாமியாரோ ஒன்றுமே நடவாதது போல் ஜன்னல் ஓர இருக்கையில் அமைதியாய் அமர்ந்திருந்தார். (காது கேட்டாலும் கேக்காத மாதிரியே இருக்கிற இந்த லைஃப் ஹேக் மட்டும் தெரியலைன்னா குப்பை கொட்டுறது ரொம்ப கஷ்டம் தான்!) அவரிடம் கொஞ்சமும் வருத்தமோ, அவமானக் கன்றலோ இல்லை என்பது புரிய,
‘திருமணமானதில் இருந்து இப்படி அவமானப்பட்டே மரத்துப் போய்விட்டதோ, நானும் இப்படித் தான் ஆகிவிடுவேனோ!’ மனம் கண்டதையும் நினைத்துக் குழம்பினாலும் மெல்ல அத்தையிடம்,
“அங்கே போக இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் அத்தை?” மென்குரலில் வினவ,
“அது ஆகும் முக்கால் மணி நேரம்” என இதமாகச் சிரித்தார்.
“அப்போ, நீங்க சாப்பிடுங்க” எனத் தன் கைப்பையில் இருந்து இட்லியையும், சாம்பாரையும் எடுத்துக் கொடுக்க, ஒரு நொடி அனைவரிடமும் பெரிய அதிர்வு.
‘இதனால் தான் நேரமானதோ!? ச்சே யோசிக்காமல் கடிந்து கொண்டோமோ?’ என தன் மனையாளிடம் இரக்கம் சுரக்க, கோபம் காணாமல் போனது வீரபாண்டியனிடம். (போயா… லேட் பிக் அப்)
சுந்தரியோ, ‘ஒரு நாள், ஒரு பொழுதில் நாம் அம்மாவுக்கு இப்படி செய்ததில்லையே? சாப்பிட்டாயா? என கேட்டது கூட இல்லையே?!’ என வருத்தமாய் அமர்ந்திருந்தாள்.
‘இப்படியெல்லாம் நம் மருமகள்கள் கொடுத்ததுமில்லை… நாமும் நம் மாமியாருக்கு செய்ததுமில்லை. குணவதி கொடுத்து வைத்தவள் தான்.’ என அத்தைகள் பொறாமை பொங்க அமர்ந்திருந்தனர்.
கண்கள் பணிக்க, மருமகள் கொடுத்த உணவை உண்டவருக்கு தனித் தனி பாத்திரத்தில் நறுவிசாய் இட்லியும், சாம்பாரும் கொண்டு வந்திருக்கும் அன்பும், நாகரீகமும் பிடித்திருந்தது. தண்ணீர் பாட்டிலை கொடுக்க, அவளை பாராட்டாமல் இருக்க முடியாத அத்தைகளில் ஒருவர்,
“பாண்டி, உன் பொண்டாட்டி சூதானமாத் தான் இருக்கா!” எனவும் சிறு பெருமையும், பெரும் மகிழ்வுமாய் தன்னவளை நோக்க, 
‘சிடுசிடுன்னு எரிஞ்சு விழுந்துட்டு இப்போ என்ன பார்வை?’ என உதடு சுளித்து முகம் திருப்பிக் கொண்டாள்.
அருகில் இருந்த குணவதிக்கு இவர்களின் ஊடல் புரிய, சிரிப்புடன் ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டார். வேனில் ஒலிக்கும் பாடலும், மற்றவர்களின் பேச்சும் பேரிரைச்சலாய் இருந்தது. 
‘இவங்களுக்கெல்லாம் வாயே வலிக்காதா? பிஷ் மார்க்கெட் க்ரானீஸ்…!’ என முணுமுணுத்துக் கொண்டிருந்தவளின் விரலோடு விரல் கோர்க்க, சிறு முறைப்புடன் கணவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டாள். 
மெல்ல அவள் புறம் சரிந்து, “தேங்க்ஸ், ஜில்லுக் குட்டி!” பட்டென கன்னத்தில் முத்தமிட, அவள் திகைத்து விழிக்க, ஒன்றுமறியா அப்பாவி போல் கதையளப்பவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டான். 
‘யாரேனும் பார்த்திருப்பாங்களோ? இம்சை!!’ படபடப்புடன் நோட்டம் இட, ஆளாளுக்கு கதை அளப்பதில் தான் கண்ணாய் இருந்தார்கள். 
“பயந்துட்டியா? அத்தான் டைமிங் எல்லாம் பார்த்து தானே கொடுத்தேன். யாரும் பார்க்கலை.” என மீண்டும் கிசுகிசுத்தான். 
கோபம் போய் வெட்கம் வந்து தொலைக்க, ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள். வேண்டுமென்றே அவளோடு ஒட்டி, உரசி நெருக்கமாக அமர்ந்தான். 
‘கடவுளே, ஏன் இப்படி படுத்துறான்?’ மருகியவள் 
‘தள்ளி உட்காருங்க ப்ளீஸ்…’ எனக் கண்களால் இறைஞ்சினாள்.
“நீ என் பொண்டாட்டி ஜில்லுக்குட்டி. யார் என்ன சொல்லுவா?” என மீசையை முறுக்க, (அத்தைகள் அரட்டையில் இருக்கிற தைரியம் தானே!)
இவன் சங்காத்தமே வேண்டாம், ஆள் மயக்கி! வேஷ்டியை மடிச்சு கட்றதுலையும், மீசையை முறுக்கி விடுறதிலையும் கூடவா மயக்க முடியும்? இல்ல நான் தான் இவன் விஷயத்தில் ரொம்பவும் பலவீனமாய் இருக்கேனா?’ இதயம் எகிறி குதிப்பதை நிறுத்தும் வகை தெரியாமல் அவனிடம் தன்னையறியாமல் மயங்கிக் கொண்டிருந்தாள் மாது. 
கோவிலில் இவர்களுக்கு முன்னதாகவே சுமதியின் குடும்பத்தாரும் அன்பரசியும் மற்ற சொந்தங்களும் வந்து காத்திருந்தனர். வேனை கண்டதும் மான் குட்டி போல் துள்ளிக் கொண்டு ஓடிவந்த சுமதி, 
“அப்பா!” என ஆசையாய் அழைக்க,
“வாத்தா, நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்றபடி இறங்கினார் குலசேகரன்.
“இல்லைப்பா, இப்போ தான் வந்தோம்!” சாமான்களை இறக்கியபடி,
“எல்லோரும் அனுசரணையான நடந்துக்கிறாங்களா சுமதி?” என்ற அன்னைக்கு 
“ம்… அத்தான் மட்டும் இல்ல, மாமா அத்தையும் நல்ல விதமா தான் பழகுறாங்க! எல்லா வேலைக்கும் ஆள் இருக்காங்கம்மா. தூங்கி எழுந்து குளிச்சு கிளம்பியது தான் நான் பார்த்த வேலை.” என குதூகலமாய் கொஞ்சிக் கொண்டிருக்க, ஈஸ்வரியோ தன் பெற்றோரை ஏக்கமாக பார்த்தபடி சாமான்களை தூக்கிக் கொண்டு நடக்க, 
‘அடக்கடவுளே, இவள் ஏன் இப்படி பயந்து சாகுறா? அம்மா அப்பா கிட்ட பேசக்கூட யாரும் எதுவும் சொல்வாங்களோன்னு தயங்குறாளே?!’ அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது எண்ண ஓட்டத்தை எளிதில் கணிக்க முடிந்தது. 
“ஈஸ்வரி, மாமா அத்தையை வாங்கன்னு கூப்பிடு… போ!” என்றதும் ஒரே ஓட்டம் தான். அண்ணன், அப்பா, அம்மா என மூவரும் சூழ்ந்து கொள்ள, அழுகையும் சிரிப்புமாய்,
“வாங்க, வாங்க! எல்லாரும் எப்போ வந்தீங்க” என குசலம் விசாரிக்க, ஒரே நாளில் தங்கள் மகள் காணாமல் போய் வீரபாண்டியனின் மனைவியாய் மட்டுமே தெரிய, பிழைத்துக்கொள்வாள் பயப்பட வேண்டியதில்லை எனும் நிம்மதியில் நிறைவும் உண்டாக, தங்கள் வீட்டுப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். 
‘பொத்திப் பொத்தி வளர்த்திருப்பார்கள் போலும், அதான் நேருக்கு நேர் பார்க்கக் கூட பயப்படுகிறாள். உடம்பும், மனசும் ரொம்பவும் பூஞ்சையா இருக்கு. நிறைய மாத்தணும்!’ என தன்னவளை தன் குடும்பத்திற்கு ஏற்றது போல் மாற்ற என்னவெல்லாம் செய்யலாம் என யோசிக்கத் தொடங்கிவிட்டான்.
“ரெண்டு பேரும் போய் பொங்கல் வைக்க தண்ணீர் எடுத்துட்டு வாங்க!” என சுமதிக்கும், ஈஸ்வரிக்கும் ஆளுக்கொரு சிறிய பித்தளை குடத்தைக் கொடுக்க, அதன் பெயர் என்ன என்பது கூட தெரியாமல் நாத்தனாரை பின் தொடர்ந்தாள் விக்னேஸ்வரி
சசியும் பின்னோடு செல்ல, 
“நீங்க எங்க போறீங்க மாப்பிள்ளை? அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க… இப்படி வந்து உட்காருங்க. பொங்கல் வைக்கும் போது கூட இருக்கலாம்” என மருமகனை அழைத்தார் மாமனார்.
‘உங்க பொண்ணு எல்லாத்தையும் பண்ணிடும், என் தங்கச்சிக்கு எதுவும் தெரியாதே!’ நேரடியாக சொல்ல முடியாமல் தவிப்புடனேயே நின்று கொண்டிருந்தான்.
குளத்தில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வறண்டு போய் கிடந்தது. 
“ரொம்ப நாளா மழையே இல்லை அண்ணி. இந்த சாமிக்கு பொங்கல் வச்சா அன்னைக்கு நல்லா மழை பெய்யும். பாருங்களேன், இன்னைக்கு செம மழை பெய்யும்!” என்றபடி குளத்திற்கு நடுவே இருந்த கிணற்றில் இருந்து நீர் இரைத்து குடத்தில் ஊற்றினாள் சுமதி. 
“தண்ணீர் நிறைய இருக்கும் போது இங்கே கிணறு இருப்பதே தெரியாது அண்ணி. தப்பா நினைச்சுக்காதீங்க, சாமி காரியத்தில் அடுத்தவங்க உதவக் கூடாது. புண்ணியத்தில் பாதி அவங்களுக்கு போயிடும்னு அம்மா சொல்லுவாங்க! உங்களுக்கு இரைக்கத் தெரியும் தானே? இல்ல அண்ணனை வரச் சொல்லவா?” எப்படி செய்யப் போகிறோம் என்ற பயம் தோன்றினாலும், 
“நானே பண்ணிடுவேன்!” என மென்குரலில் சொன்னாள்.
“அப்போ, நீங்க வாங்க. நான் போறேன்! இல்லைன்னா உங்களுக்கு உதவினேன்னு இதுக ஏதாச்சும் பிரச்சனையை கிளப்புங்க!” என குடத்தை தூக்கிக் கொண்டு போய்விட்டாள்.
வரும்போது கையில் பிடித்திருந்த குடம், இப்பொழுது இடுப்பில் இருப்பதைப் பார்த்து, 
‘என்னால் இப்படித் தூக்க முடியுமா? வழுக்கி விழுந்துவிடாதா? பத்திரமா கொண்டு போயிடுவேனா?’ மிரட்டும் கேள்விகளுக்கு விடை காண எண்ணியவளாய் நீர் இறைக்கத் தொடங்கிவிட்டாள்.
காலையில் கணவன் கொடுத்த பயிற்சி கை கொடுத்தாலும், வாய் குறுகிய குடத்திற்குள் ஊற்றத் தெரியாமல் ஊற்ற, புடவை நனைந்தது. சுமதியைப் போல் இடுப்பில் தூக்கி வைத்து தட்டுத் தடுமாறி, நடக்கத் தொடங்க, ஈரப் புடவை காலில் இடறியது. இடுப்பிலிருந்து குடம் நழுவ தருணம் பார்த்தது. அதற்குள் உறவுகளில் முதிர்ந்த பெண்மணி,
புது மருமகள் என்ன தான் செய்கிறாள்? என பார்க்க வர, அடி மேல் அடி வைத்து வந்தவளைக் கண்டு,
“குணவதி, வெளிநாட்டில் இருந்தாலும் உன் மருமக கெட்டிக்காரி தான். அழகா தண்ணி தூக்கிட்டு வர்றாளே!” (நூறு ரூபாய்க்கு நடிக்க சொன்னா 500 ரூபாய்க்கு நடிக்குதே… ஓவர் ஆக்ட் பண்ணி நம்மளை மாட்டிவிடுது!) என பாராட்டு பத்திரம் வாசிக்க, 
அபிஷேகத்திற்கு நீர் சேந்துவதற்காக அவ்வளவு நேரமும் காத்திருந்த வீரபாண்டியன், படித்துறையில் இறங்கத் தொடங்கினான். இல்லையேல் இந்த பாராட்டு கிடைத்திருக்காது. மனைவிக்கு இவன் தான் உதவினான் என்று சொல்லியிருப்பார்கள்
பொம்ம! இப்படி தூக்கினா நிச்சயம் போட்டு உடைச்சிடுவா!!’ என, வேக எட்டுக்களில் அவள் அருகே வந்து, குடத்தை வாங்கி கீழே வைத்து,
“புடவையை தூக்கி இடுப்பில் சொருகு ஜில்லு” என்றதும் 
‘எதை, எங்கு சொருக?’ என்பது போல் திருதிருப்பவளைக் கண்டு, தானே புடவையை எடுத்து கால்களில் பின்னாதவாறு தூக்கி சொருகிவிட்டான். இடை மூடி இருந்த புடவையும் விலகிக் கொள்ள, மெரூன் வண்ணப் பட்டு அவளது வெளுப்பை கூட்டிக் காட்டியது. அதில் மயங்கியவன்,
“அழகா இருக்கடா!” எனக் கொஞ்சி அழுத்தமாய் கன்னத்தில் முத்தமிட்டு குடத்தை தூக்கிக் கொடுத்தான். (சாமி கண்ணை குத்தப் போகுதுல பக்கி) இப்பொழுது நடப்பதற்கு சுலபமாய் இருந்ததோடல்லாமல் இடுப்பில் இருந்து குடமும் இறங்கி வராமல் கச்சிதமாய் பொருந்தி நின்றது. 
அவள் வருவதற்குள் கல்லெடுத்து, அடுப்புக் கூட்டி பானை வைத்து, பாலூற்றிக் கொண்டிருந்தாள் சுமதி. வேகமாக புடவையை சரி செய்து கொண்டு நாத்தனாரைப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்தவளுக்கு தீக்குச்சி உரச வராமல் சதி செய்தது. சசியோ,
“ஏதாவது ஹெல்ப் பண்ணவா சுமி?” என தொணத்தி கொண்டிருக்க, தன் கணவனோ கல்லுளிமங்கன் போல் உதவிக்கு வராமல் நிற்பது எரிச்சலை கிளப்பியது. பத்து குச்சிக்கு மேல் உரசியும் பற்ற வைக்க முடியாமல் போக, இயலாமையில் விழிநீர் பெருகியது.
“என்னத்தா ஈஸ்வரி, நீ அடுப்பு பத்த வைக்கிறதுக்குள்ள உன் நாத்தனா பொங்கலே வச்சு இறக்கிடுவா போலவே?!” என கேலி செய்தது உறவுக் கூட்டம். (பத்த வச்சுட்டியே பரட்டை) வெட்கம் விட்டு,
“ஹெல்ப் பண்ணுங்க, ப்ளீஸ்!” என கணவனிடம் கெஞ்ச, 
“லேட்டானாலும் பரவாயில்லை நீயே ட்ரை பண்ணு!” கொஞ்சமும் இளக்கம் இல்லாமல் சொன்னான். 
‘என்ன மனுஷன்டா இவன், மனைவி கஷ்டப்படுவதை பார்க்க பாவமாய் இருக்காதா?’ என எண்ணியளின் கண்களில் அணை உடைபட, விழிநீர் வெள்ளமாய் பெருக,
‘இவனையெல்லாம் நம்பி கட்டிக் கொடுத்திருக்காங்களே, அவங்களை சொல்லணும்! இரக்கமில்லாத காட்டுமிராண்டியோட குறை காலமும் எப்படி குடும்பம் நடத்தப் போறேன்?’ சுயபட்சாதாபம் தலை தூக்க, கூடவே சுய மரியாதையும் விழித்துக் கொண்டது.
‘யார் உதவியும் எனக்குத் தேவை இல்லை’ கண்ணீரை துடைத்து, குச்சிகளை உரச, அடுத்த எட்டாவது குச்சியில் விறகுகள் பற்றிக் கொண்டன. மெல்ல கை தட்டி, கட்டை விரல் உயர்த்தி சிரிக்கும் கணவனை,
‘நீ நல்லவனா, கெட்டவனா?’ என்பது போல் பார்த்து வைத்தாள்.
பொங்கல் வைக்கிறது எப்படின்னு யூ-டியூபில் பார்த்துட்டு வந்திருக்கலாம். பரீட்சையில் கூட இப்படியெல்லாம் காப்பி அடிச்சதில்லை. இன்று பொங்கல் வைக்க சுமதியை பார்த்துப் பார்த்து செய்யும் காப்பி கேட் ஆகிப் போனோமே!’ எனத் தன்னையே நொந்து கொண்டு நிற்க,
“அத்தான், இன்னும் கொஞ்ச நேரம் வெந்தால் போதும். வெல்லத்தைப் போட்டு இறக்கிடலாம்! எனக்கு கால் வலிக்குது. நான் கொஞ்ச நேரம் எல்லார் கூடவும் கடலை போட்டுட்டு வரேன். நீங்க அப்பப்போ கிளறி விடுங்க போதும்” என நகரப் போக, 
“வெந்ததை எப்படி தெரிஞ்சுகிறது சுமி?” கணவன் ஆசையாக கேட்பதாக நினைத்து,
“சாதத்தை எடுத்து அழுத்தினா மையாட்டம் வரணும். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அத்தான்.”
“அதாவது பேஸ்ட் மாதிரி வரணும். அப்படித் தானே!” தங்கைக்கு குறிப்பு காட்டினான் சசி.
“ஆமாம்…” என்றபடி ஓடியே விட்டாள். 
‘போடா, நீ உதவாட்டி என்ன, என் அண்ணன்  பண்ணுவான்!’  உதட்டு சுழிப்பும், முறைப்புமாய்  அண்ணனிடம் போனவள்,
“தேங்க்ஸ் அண்ணா!” என சலுகையாய் தோளில் சாய்ந்து கொள்ள, 
“ஒரே நாளில் என் விக்கி செல்லம் ஒபாமா ரேஞ்சுக்கு செமையா கலக்குதே! நாலு பேர் உதவி, நல்லா பண்றதை விட தட்டு தடுமாறி நாமே சுமாராப் பண்ணினாலும் அது தான்டா சூப்பர்! என் தங்கச்சி எப்பவும் எதுலயும் தி பெஸ்ட் தான்!!” என தங்கையின் மூக்கை செல்லமாய் கிள்ளினான் அன்பு அண்ணன்.
இவர்களது குலாவலை சிறு பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆசைக்கார கணவன். 
விளக்கம் நாளை சொல்லுவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!