paadal thedal- 10(1)

paadal thedal- 10(1)

10

ரௌத்திரம்

மாலை நேரம். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன்புறம் இருந்த குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்தாள் ஜானவி.

அன்புச்செல்வியும் மீனாவும் விளையாடி கொண்டிருக்க, செழியனும் அவர்களோடு சேர்ந்து குழந்தை போல் விளையாடி கொண்டிருந்தான்.

ஜானவியின் விழிகளோ அவர்கள் மூவரை மட்டுமே கடிவாளம் கட்டிய குதிரை போல் பார்த்து கொண்டிருந்தது. அந்த காட்சியை பார்க்கும் போது அவளுக்கு அப்படி ஒரு மனநிறைவு.

ஜானவி எந்தவித வேலைப்பாடும் இல்லாத மஞ்சள் நிற சுடிதார் அணிந்து கொண்டு தன் மேல்அழகை மறைத்த வண்ணம்  ஒரு வெள்ளை நிற துப்பட்டாவை போட்டிருந்தாள்.

அந்தி மாலையின் செந்நிற துகள்கள் அவள் மேனி நிறத்தோடு சேர்ந்து மின்ன, அந்த திவ்யமான அழகு அவள் வெளிப்புற தோற்றத்திலிருந்து மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவள் மனதிலிருந்தும் பிரதிபலித்தது. சில நாட்களாக அவள் வாழ்வும் மனநிலையும் மாறியிருந்ததன் வெளிப்பாடுதான் அது!

மௌன சிலையென அமர்ந்திருந்த அவளின் அமைதியை குலைத்தது அவள் கைபேசியின் ரீங்கார ஒலி. அதனை காதில் வைத்து பேசியவளின்  பார்வை அப்போதும் அவர்கள் மூவரை விட்டு நீங்கவில்லை.

“நான் ஜட்ஜ ம்மா கிட்ட கூட பேசிட்டேன் ஜானு… கண்டிப்பா இந்த தடவை கேஸ் பைனல் ஆகிடும்… மத்த பார்மாலடீஸ் கூட சீக்கிரம் முடிச்சுடலாம்” என்று எதிர்புறத்தில் ஒரு குரல் சொல்ல, “நிஜமாவா மேடம்” என்று அவள் முகம் அத்தனை அழகாக மலர்ந்தது. அவள் அதற்காகத்தானே காத்திருந்தாள்.

“ஹம்ம்… ஆனா நீ அந்த ஆளை சும்மா விட கூடாது ஜானவி… பெருசா எதாச்சும் நஷ்ட ஈடா கேட்டு வாங்கணும்”

“ஐயோ வேண்டவே வேண்டாம் மேடம்… என்னால இனிமே முடியாது… திரும்பியும் இந்த பிரச்சனை பெருசாகும்…  எனக்கு என் பொண்ணு என் கூட இருந்தா மட்டும் போதும்… இனி அந்த ஆளோட சங்காத்தமே வேண்டாம்” என்று அவள் முடித்து கொள்ள அதற்கு மேல் அவர்கள் சம்பாஷணை நீளாமல் ஒரு சில வார்த்தைகளோடு நிறைவடைந்தது.

ஜானவி தன் பேசியின் தொடர்பை துண்டித்த போதும் அவள் முகத்தில் இன்னும் அவள் கேட்ட செய்தியின் சந்தோஷம் நிலைகொண்டிருந்தது.

“என்ன? கால் பேசனதும்… ரொம்ப ஹேப்பியா ஆயிட்டீங்க ஜானவி… என்ன விஷயம்?” என்று செழியன் அவள் அருகில் வந்து கேட்க,

“என் வக்கீல்தான்… சீக்கிரம் டிவோர்ஸ் கிடைசிடும்னு சொன்னாங்க” என்றவள் சொல்ல, செழியன் முகம் வருத்தாமாக மாறியது.

“இதுக்கா ஹேப்பியானீங்க?!” என்று அவன் சந்தேகமாக கேட்க, “எனக்கு இப்போதைக்கு இதுதான் ஹேப்பியான நியூஸ் செழியன்” என்றாள் அவள் முகமெல்லாம் புன்னகையோடு!

செழியன் அவளை புரியாமல் பார்க்கும் போது அன்புச்செல்வியின் அழுகை குரல் கேட்க, ஜானவி தன் இருக்கையில் இருந்து எழுந்து ஓடினாள்.

அன்புச்செல்வியும் மீனாவும் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்ததில் அன்பு கால் தடுக்கி விழுந்துவிட,  ஜானவி அவளை தூக்கிவிட சென்றாள்.

“ஜானவி விடுங்க… அவளே எழுந்திருக்கட்டும்… இப்படியெல்லாம் விழுந்து எழுந்திருச்சாதான் குழந்தைகளோட மனமும் உடலும் பலப்படும்… லெட் ஹெர்” என்றவன் அவளை தடுத்தான்.

“குழந்தைங்க விழுந்தா தூக்கிவிடணும்… இப்படி பிலாஃசபி பேச கூடாது” என்றவள் அவனிடம் கோபமாக சொல்ல,

“இது ஒன்னும் பிலாஃசபி இல்ல ஜானவி… பேஃக்ட்” என்றான்.

“நீங்களும் உங்க உருப்படாத ஃபேக்ட்டும்” என்றவள் அவன் சொல்வதை காதில் வாங்காமல் குனிந்து அன்புவை தூக்க, அவள் மேலிருந்த துப்பட்டா சரிந்துவிழுந்தது.

அதனை எடுப்பதை காட்டிலும் ஜானவி அன்புவின் கால்களை நீவிவிட்டு அவள் கண்ணீரை துடைத்துவிட்டு சமாதானப்படுத்துவதில்தான் ரொம்பவும் மும்முரமாக இருந்தாள்.

“ஜானவி உங்க துப்பட்டாவை எடுத்து மேல போடுங்க” என்று செழியன் சொல்ல அவள் அப்போதே அதனை உணர்ந்து தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டாள். அதன் பின் ஜானவி அன்புவை சமாதானப்படுத்தி கொண்டிருக்க, அந்த நொடி அங்கே பெரும் சத்தம் எழுந்தது.

ஜானவி என்னவென்று பார்க்க அத்தனை நேரம் அவளுடன் பேசி கொண்டிருந்த செழியன் யாருடனோ சீற்றமாக சண்டையிட்டு கொண்டிருந்தான். அவனை சுற்றி ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டது.

அன்பு அச்சத்தோடு ஜானவியின் கால்களை கட்டி கொண்டு,  “அப்பா ஏன் சண்டை போடுறாரு?” என்று கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… நம்ம போலாம்” என்று அவள் மீனாவை தேட அவள் அந்த கூட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

“மீனு வா இங்கே?” என்று ஜானவி மகளை அழைக்க, “நான் போய் பார்த்துட்டு வரேனே” என்றாள்.

“பின்னிடுவேன்” என்று சொல்லி இருவரையும் தன் கைகளில் பிடித்து கொண்டு ஜானவி அங்கிருந்து செல்லும் போது செழியனின் முகத்தை பார்த்தாள். அவன் முக்கத்தில் அத்தனை ரௌதிரம். எரிமலையாக வெடித்து கொண்டிருந்தான்.

இந்த ஆறு மாதத்தில் அவனிடம் அப்படி ஒரு பரிமாணத்தை அவள் பார்த்ததே இல்லை. அவன் அடித்த அடியில் எதிரே இருந்தவன் முகமெல்லாம் ஒரே இரத்த காயம் வேறு. அந்த காட்சியை பார்க்க அவளுக்கு என்னவோ போலிருந்தது.

ஜானவி தன் பார்வையை திருப்பி கொண்டு குழந்தைகள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட,  மீனா அன்புவோடு விளையாடுகிறேன் என்று சொல்லி செழியன் வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.

ஜானவியோ செழியன் வரும் வரை வீட்டின் வாயிலிலேயே காத்திருக்க, அவன் கரத்தை உதறி கொண்டே மெல்லமாக தன் ஊன்று கோளை பிடித்து கொண்டு படியேறி வந்தான்.

“என்னாச்சு செழியன்? உங்களுக்கும் அடிப்பட்டிடுச்சா?” என்று அவள் பதட்டத்தோடு கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவன், “குழந்தைங்க” என்று நிறுத்தி அவளை பார்த்தான்.

“உள்ளே இருக்காங்க” என்றவள் அவன் வீட்டை காட்ட, மேலே ஏறி வந்த செழியன் ஜானவியை தயக்கமாக பார்த்தான்.

“உங்களுக்கு இது தேவையா செழியன்?” என்றவள் அவனை ஆழமாக ஒரு பார்வை பார்க்க, “தப்பை தட்டி கேட்டா தப்பா?” என்று அவன் அவளை முறைப்பாக பார்த்தான்.

“தேவையில்லாத விஷயத்தில தலையிடுறது தப்புதான்”

“எது தேவையில்லாத விஷயம்?”

“விடுங்க செழியன்… அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு” என்றவள் அலட்சியமாக பார்க்க,

“அப்போ நான் எதுக்கு சண்டை போட்டேன்னு உங்களுக்கு தெரியும்” என்று செழியன் குற்றம் சாட்டும் பார்வையோடு கேட்டான்.

ஜானவி சிரித்துவிட்டு, “பொண்ணுங்களுக்கு இயல்பாவே ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு… பார்வை எங்க இருந்தாலும் எங்க கவனம் எல்லா இடத்திலும் இருக்கும்… நம்மல யார் எப்படி எப்படி பார்க்கிறாங்கன்னு எல்லாமே தெரியும்” என்றதும் செழியன் முகம் கோபமாக மாறியது.

“அப்போ தெரிஞ்சும் சைலன்ட்டா இருந்தீங்க”

“ஐயோ! செழியன்… ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோங்க… நான் ட்ரேவல் பண்ற பஸ், ட்ரெயின், அபீஸ்… தங்கி இருக்க அப்பார்ட்மெண்ட்னு சுத்திலும் ஒரு பத்து பேர் இப்படி வன்மமா அலைஞ்சிட்டுத்தான் இருக்காங்க… எல்லார்கிட்டயும் என்னை ஏன் பார்க்கிறன்னு சண்டைக்கு போடுட்டு இருக்க முடியாது… இன்னும் கேட்டா எவன் பேக்கெட்ல கத்தி வைச்சிருக்கான்… கையில அசிட் பாட்டில் வைச்சிருக்கான்னு யாருக்கு தெரியும்… அதுவும் இல்லாம நான் ஒரு சிங்கிள் மதர்… அப்படி இருக்க நான் எப்படி இந்த மாதிரியான பிரச்சனையை எல்லாம் இழுத்து போட்டுக்க முடியும்”

அவள் சொல்வதை எல்லாம் நிதானித்து கேட்ட செழியன் அவள் முகம் பார்த்து, “நான் கேட்கறேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… அன்னைக்கு என்கிட்ட மட்டும் அப்படி சண்டை போட்டீங்க… அப்போ இந்த சோ அன் சோ ரீஸன் பத்தி எல்லாம்யோசிக்கலயா?” என்று கேட்க,

“நான் அன்னைக்கு சண்டை போட்டது என் மகளுக்காக செழியன்… என்னோட பலமும் அவதான்… என்னோட பலவீனமும் அவதான்… மீனுக்காக நான் எந்த பிரச்சனையையும் சமாளிப்பேன்… ஆனா என்காகன்னு வரும் போது எதையும் செய்யணும்னு எனக்கு தோணல” என்று அவள் விரக்தியாக பேசி கொண்டே நடக்க,

“ஏன் இவ்வளவு விரக்தியா பேசுறீங்க ஜானவி?” என்று கேட்டு கொண்டே அவனும் அவளோடு நடந்து வந்தான். இருவரும் மேல் மாடிக்கு வந்துவிட அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

“என்ன சொல்றது? என் வாழக்கை அப்படி? ப்ளஸ் டூ ல நான் ஸ்டேட் ரேன்க் வாங்கணும்னு ஆசை பட்டேன்… நடக்கல… டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்தான் வர முடிஞ்சுது… பரவாயில்லன்னு மனசை தேத்திக்கிட்டேன்

எஞ்சனியர் படிக்க ஆசைதான்… ட்ரை பண்ணா ஸ்காலர்ஷிப் கூட கிடைச்சிருக்கும்… ஆனா போற வர செலவு சாப்பாடு அது இதுன்னு எல்லாம் நம்மதான் பண்ணி ஆகணும்… எதுக்கு அப்பாவுக்கு கஷ்டம்…

அதெல்லாம் வேண்டாம்னு டிக்ரி பண்ணேன்… படிப்பை முடிச்சு குடும்பத்துக்கு எக்கெனாமிக்கலா சப்போர்ட் பண்ணனும்னு  நினைச்சேன்…  ஆனா அதுவும் நடக்கல… செகண்ட் இயர் படிக்கும் போதே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க

வேண்டாம்னு சொல்லி பார்த்தேன்… எங்க கேட்டாங்க… உனக்கு அப்புறம் ஒரு தங்கச்சி இருக்கா தம்பி இருக்கான்னு சொல்லி என்னை ஒரு மாதிரி கன்வின்ஸ் பண்ணிட்டாங்க…

சரி… இனிமே இதுதான் நம்ம லைஃப்னு நான் அக்ஸ்ப்ட் பண்ணிக்கத்தான் பார்த்தேன்… ஆனா எனக்கு அதுக்கான டைம்மை யாருமே  குடுக்கல… எல்லோருக்கும் அவங்க தேவை… அவங்க விருப்பம்… அவசரம் அவரசமா படிக்கும் போதே ஒரு குழந்தைக்கு அம்மாவாயிட்டேன்” என்று சொல்லும் போதே அவள் விழிகளில் தாரை தாரையாக நீர் வர ஆரம்பித்தது.

“ஜானவி!” என்றவன் தவிப்போடு அவளை பார்க்க அவள் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு,

“தாய்மைங்கிறது ஒரு அழகான உணர்வு… அதை என்னால அந்த நேரத்தில ரசிக்க கூட முடியல தெரியுங்களா… படிக்கணும் வேலைக்கு போகணும்… இதுதான் என்னோட ஒரே குறிக்கோளா இருந்துச்சு… அந்த சூழ்நிலையிலையும் நான் பிடிவாதமா என் படிப்பை முடிச்சேன்… ஆனா வேலைக்கு போக முடியல… மீனுவை காரணம் காட்டி என்னை எதுவுமே செய்ய விடல… நான் நினைச்சதை எதுவும் செய்ய முடியலயேன்னு  ஃபிரஸ்டிரேஷன்… கோபம்… வெறுப்பு… வீட்டில இதனால எப்ப பாரு சண்டை சண்டை சண்டை

மீனுவுக்கு விவரம் தெரிஞ்சதும் அவளுக்கு அவங்க அப்பா மேல வெறுப்பு உண்டாயிடுச்சு” என்று பேசி கொண்டே ஜானவி மௌனமானாள்.

செழியன் வேதனையோடு, “ஒ! இதனாலதான் நீங்க உங்க கணவரை பிரிஞ்சி வந்துட்டீங்களா?” என்றவன் கேட்க, இல்லை என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.

அவன் குழப்பமாக அவளை பார்த்து கொண்டிருக்க, “அந்த மனுஷன் வேற ஒரு பொண்ணோட” என்று வார்த்தைகள் வராமல் நிறுத்தி கொண்டுவிட, அவன் அதிர்ச்சியானான்.

“ச்சே” என்று செழியன் முகம் அசூயையாக மாற அவள் மேலும், “கேட்கிற உங்களுக்கே இப்படி இருக்கே… எனக்கு எப்படி இருக்கும் செழியன்” என்றாள் கண்ணீரோடு!

அவனால் எதுவும் பேச முடியவில்லை.

ஜானவி அவன் புறம் திரும்பி, “இதெல்லாம் கூட பரவாயில்ல… ஆனா அவன் செஞ்ச தப்புக்கு என் பொறுப்பில்லாதனம்தான் காரணம்னு சொல்லிட்டான்… ரேஸ்கல்… இதுல என் குடும்பமும் கூட அவன் சொன்னதையே சொல்லி என்னை அசிங்கப்படுத்திட்டாங்க… போதும்டா சாமின்னு நான் என் பொண்ணை கூட்டிட்டு இங்க வந்துட்டேன்

இனிமே நான் வாழ்ற வாழ்க்கை முழுக்க என் பொண்ணுக்காகத்தான்… யாருடைய தயவையும் எதிர்ப்பார்க்காம அவ தேவை எல்லாத்தையும் நானே செஞ்சி கொடுக்கணும்…  அதான் இப்போ என்னோட ஒரே குறிக்கோள்… லட்சியம்… ஆசை எல்லாம்” என்று வேதனையோடு சொல்லி கொண்டிருந்த ஜானவியை பார்த்த செழியனுக்கு அந்த நொடி அவள் மீது பரிதாபமும் அதேநேரம் மரியாதையும் உண்டானது.

“இவ்வளவு சின்ன வயசில எவ்வளவு பிரச்சனை போராட்டம் உங்க வாழ்கையில… ஆனா இருந்தும் எல்லாத்தையும் கடந்து வந்து நிற்கிறீங்க… நீங்க உண்மையிலேயே உமன் ஆஃப் இன்ஸ்பிரேஷன் ஜானவி” என்றவன் சொல்ல அவள் கேலியாய் சிரித்து,

“நான் உமன் ஆஃப் இன்ஸ்பிரேஷனா… போங்க செழியன்… கலாய்க்காதீங்க… ஐம் அ உமன் ஆஃப் பைஃலியர்” என்று அழுத்தமாக உரைத்தாள்.

அவன் ஸ்தம்பித்து அவளை பார்க்க அவள் இயல்பு நிலைக்கு வந்திருந்தாள்.

“நான் யார் கிட்டயும் இப்படி என் பெர்ஸ்னலை ஷேர் பண்ணதில்லை… ஆனா உங்ககிட்ட ஏதோ ஒரு வேகத்தில எல்லாத்தையும் உளறி கொட்டிட்டேன்… சாரி… தேவையில்லாம் என் லைஃப் பத்தி பேசி உங்க மனசை கஷ்டப்படுத்திட்டேன்”

செழியன் உடனே, “சேச்சே… அப்படி எல்லாம் எதுவுமில்ல… ஒரு வகையில உங்க கஷ்டத்தை கேட்கும் போது என் வாழ்கையில நடந்ததெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணுது” என்று சொல்ல, ஜானவி அவனை புரியாமல் பார்த்தாள்.

“என் லைப் அப்படியே வேற மாதிரி… நான் என் வாழ்கையில நினைச்ச எல்லாத்தையும் அடைஞ்சேன்… இன்னும் கேட்டா நான் வெற்றியை மட்டுமே பார்த்து வளர்ந்தவன்… சின்னதா ஒரு ஸ்கூல் காம்பட்டீஷன்ல கூட நான் தோல்வியை பார்த்ததில்ல… அதே போல நான் ஆசைப்பட்ட படிப்பு வேலை காதல்னு எல்லாமே எனக்கு கிடைச்சுது…

அதுவும் எல்லாமே தி பெஸ்ட்தான்… ஹெப்பியாஸ்ட் மேன் இந்த வேர்ல்ட்… அப்படிதான் நான் என்னை நினைச்சுப்பேன்… என்னை அப்படிதான் என் ரஞ்சு வைச்சிருந்தா… தேவதை மாறி ஒரு மகளை கொடுத்தா….” அதற்கு பிறகு ஒரு சில நொடிகள் அவனிடம் மௌனம் மட்டுமே. ஜானவி அவனையே ஆழ்ந்து பார்த்து கொண்டு நின்றாள். அவன் மௌனத்தை கலைக்க அவளால் முடியவில்லை. மனம் கனத்த போனது.

ஆனால் செழியனே மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து,

“அந்த கடவுளுக்கே என் வாழ்கையை பார்த்து பொறாமை போல ஜானவி… அதான் என்னோட எல்லாம் சந்தோஷத்தையும் மொத்தமா ஒரே அக்ஸிடென்ட்ல பறிச்சுக்கிட்டான்… டேமிட்” என்றவன் சீற்றமாக முடிக்க, அவன் விழிகளில் அத்தனை வலியும் வேதனையும்தெரிந்தது.

அந்த சமயம் அவன் மன வேதனையை கூட்டும் விதமாக அவன் கைப்பேசி ஒலிக்க,  அவனோ அந்த உணர்வே இல்லாமல் நின்றிருந்தான். அவன் நினைப்பெல்லாம் வேறெங்கோ தூரமாக பயணித்து கொண்டிருந்தது.

“போ நீ போ

போ நீ போ

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ

பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ”

 

 

error: Content is protected !!