paadal thedal -11(2)

paadal thedal -11(2)

செழியன் தன் வீட்டு வாசலுக்கு வந்து, “ஜானவி” என்று அழைக்க,

“ரெடி ரெடி” என்று அவசரமாக வெளியே மகளோடு வந்தவள் செழியனை அந்த உடையில் பார்த்து ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

அவள் விழிகளுக்கு இன்று என்னவோ அவன் புதிதாக தெரிந்தான்.

செழியன் அப்போது அவள் அருகில் வந்து,  “மறக்காம கதவை பூட்டுங்க” என்றதும் அவள் கடுப்பாகி, “அதெல்லாம் பூட்டுவோம்” என்றாள்.

ஜானவியும் செழியனும் அன்புச்செல்வி மீனாவை அழைத்து கொண்டு தரைதளத்திற்கு வர, அந்த புது காரை பார்த்து மீனாவால் நம்பவே முடியவில்லை.  அதேநேரம் அன்புச்செல்விக்கும் குதுகலமானது.

இருவரும் உற்சாகமாக காரின் பினிருக்கையில் ஏறி கொண்டு அந்த சந்தோஷத்தை அனுபவிக்க,  ஜானவி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொள்ள செழியன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஐந்து பேர் கச்சிதமாக அமர்ந்து செல்லும் அளவிலான கார் அது.

ஜானவி வண்டியை இயக்காமல் யோசனையாக பார்த்து கொண்டிருக்க, “ஜானவி உண்மையா உங்களுக்கு டிரைவ் பண்ண தெரியுமா?” என்று சந்தேகமாக இழுத்து கேட்டான் செழியன்.

“தெரியும்… ஆனா அந்தளவு பழகல… அதான் ஒரு தைரியத்துக்கு உங்களையும் கூட கூப்பிட்டேன்” என்று ஜானவி உண்மையை ஒத்துகொண்டாள்.

“அப்ப நான் டெஸ்ட் எலியா?” என்று செழியன் அதிர்ச்சியாக கேட்க,

“கொஞ்சம் அப்படிதான்” என்று சொல்லி ஜானவி காரை இயக்கி வெளியே எடுத்து சென்றாள்.

மாடியிலிருந்து இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த சந்தானலட்சுமி தன் கணவனிடம், “என் திருஷ்டியே பட்டிடோம் போல… ரெண்டு பேரும் அவ்வளவு பொருத்தமான ஜோடியா இருக்காங்க” என்று சொல்ல,

“அதெல்லாம் சரிதான்… ஆனா நம்ம நினைச்சது ஒன்னும் நடக்கிறமாறி தெரியலையே… அதுவும் ரெண்டு பேர் மனசுலயும் அப்படி ஒரு எண்ணம் இருக்க மாறியும் தெரியல… அப்படி இருக்கும் போது” என்று பாண்டியன் சொல்லி கொண்டே போனார்.

“அதெல்லாம் நடக்கும்… எனக்கு நம்பிக்கை இருக்கு… நான் கும்பிடுற அந்த சீனிவாச பெருமாள் நடத்தி வைப்பான்”

“அதென்னவோ சரிதான்… இது அந்த கடவுள் கையிலதான் இருக்கு… பார்ப்போம்” என்று பாண்டியன் சொல்ல, இறுதியாக அவர்களின் கடைசி நம்பிக்கை இறைவன்தான்.

ஜானவியும் செழியனும் கோவில் வாசலில் இறங்கியதும், “இருங்க செழியன்… சாமிக்கு அர்ச்சனையும் மாலையும் வாங்கிட்டு… அப்படியே காருக்கு ஒரு மாலை வாங்கிட்டு வந்திடுறேன்” என்று சொல்ல,

“சரி” என்று செழியன் குழந்தைகள் இருவரையும்  இறக்கி கையில் பிடித்து கொள்ள, “பொண்டாட்டிக்கு பூ வாங்கி தாங்க” என்று அங்கிருந்த பூ விற்கும் பெண்மணி உரைத்தாள். செழியன் முகம் இருளடர்ந்து போனது.

“என்ன நீங்க? அவங்க என் பிரெண்ட்” என்று செழியன் கடுகடுத்து சொல்ல அந்த பெண் உடனே, “மன்னிச்சுக்கோங்க தம்பி… என்னவோ பார்க்க அப்படி தோணுச்சு… பிள்ளைங்களுக்காச்சும் வாங்குங்களேன்… காலையில இருந்து இன்னும் முதல் போனியே ஆகல” என்று இரக்கமாக கேட்டதும் அவன் மனம் இறங்கி போனது.

“சரி கொடுங்க” என்று செழியன் சொல்லி மல்லி சரத்தை வாங்கி அன்புச்செல்விக்கும் மீனாவிற்கும் சிறு துண்டுகளாக கத்தரித்து அவர்கள் கூந்தலில் சூட்டிவிட்டான்.

பின் ஜானவி மாலை அர்ச்சனை எல்லாம் வாங்கி கொண்டு வர செழியன், “இந்தாங்க ஜானவி” என்று அந்த மலரை அவளிடம் கொடுக்க,

ஜானவி தயக்கமாக அவனை பார்த்தாள்.

“அந்தம்மாதான் முதல் போனி கூட ஆகலன்னு பீல் பண்ணி பேசுனாங்க” என்றவன் விளக்கமளிக்க,

“உடனே நீங்க மனசு இறங்கிடீங்களாக்கும்… அந்தம்மா காலையில இருந்து எத்தனை முதல் போனி பண்ணுச்சோ?” என்று ஜானவி குத்தலாக சொல்ல,

“ஒரு பூக்காரம்மா நம்மல ஏமாற்றி ஒரு பத்து இருபது ரூபா வியாபாரம் பண்ணி என்ன பெரிய பங்களாவா கட்டிட போறாங்க… அன்னன்னைக்கு ஜீவனத்துக்கு அல்லாடிறவங்க பாவம்!” என்று சொல்லி கொண்டே அந்த பூவை அவளிடம் நீட்டினான்.

“தெய்வமே! நான் பூவை வைச்சுக்கிறேன்… உங்க ஃப்லாசபி மட்டும் வேணாம் ப்ளீஸ்” என்று அவனை பார்த்து அவள் கெஞ்சலாக சொல்ல,

“என்ன கலாய்யா?” என்று கேட்டு முறைத்தான்.

“புரிஞ்சா சரி” என்று சொன்னவள் தன் கையிலிருந்த மாலை அர்ச்சனை எல்லாம் பார்த்து, “பூவை எப்படி வைச்சிக்க” என்று கேட்க,

“அதெல்லாம் என்கிட்ட கொடுங்க” என்று அவன் வாங்கி கொண்டு அந்த மல்லி பூவை அவளிடம் கொடுத்தான்.

இந்த காட்சியை தூரத்தில் நின்று பார்ப்பவர்களின் கண்ணோட்டம் அவர்களை என்னவாக எண்ணி கொள்ளும். தவறு பார்ப்பபவனின் பார்வையிலா இல்லை இதுதான் விதியின் விளையாட்டா?

ஆனால் இது பற்றியெல்லாம் எந்தவித சிந்தனையும் துளி கூட இல்லாமல் ஜானவியும் செழியனும் இறைவனை தரிசித்து முடித்து காருக்கும் பூஜை போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ஜானவி அதன் பின் செழியனையும் அன்புவையும் அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் இறக்கிவிட்டு, “நாங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரோம்” என்று சொல்ல,

“சரி” என்றான் செழியன். ஆனால் அன்புச்செல்வி, “நானும் வரேன் ஜானும்மா” என்றாள். அவளுக்கு அந்த கார் பயணம் வெகுவாக பிடித்திருந்தது.

“வேண்டாம் அன்பு… அவங்க போயிட்டு சீக்கிரம் வந்திருவாங்க” என்று செழியன் சொல்ல அன்புச்செல்வியின் முகம் தொங்கி போனது.

“அன்பப்பா… அனுப்பி விடுங்க… நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வந்து விட்டுடறேன்” என்று மீனா பெரிய மனுஷிதனமாக பேசவும் செழியன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“அனுப்பி விடுங்க செழியன்… இங்க பக்கத்திலதான்… நான் போயிட்டு உடனே திரும்பிடுவேன்” என்று ஜானவியும் சொல்ல அவன் மட்டும் தயக்கமாக மகளை பார்த்தான். ஆனால் அன்புச்செல்வி அடம்பிடிக்கவில்லை. முகத்தை மட்டும் சோகமே உருவமாக வைத்து கொண்டாள்.

அதற்கு மேல் செழியனால் மறுக்க முடியவில்லை. பெருமூச்சு விட்டு கொண்டு, “சரி அன்பும்மா… போயிட்டு வாங்க… ஆனா சேட்டை எல்லாம் பண்ண கூடாது…  ஜானும்மா சொல் பேச்சு கேட்டு சமத்தா நடந்துக்கணும்” என்று அவன் அறிவுரை வழங்கினான்.

“அதெல்லாம் அவ சமத்தா இருப்பா” என்று ஜானவி சொல்லி அன்புவையும் மீனாவையும் ஒன்றாக முன்னிருக்கையில் அமர்த்திவிட்டாள்.

“ஓகே ஜானவி… பார்த்து பத்திரம்” என்று செழியன் அவர்களை வழியனுப்பிவிட்டான்.

ஜானவி சந்தோஷமான மனநிலையோடு தன் அம்மா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். அவளை பொறுத்தவரை தலைநிமிர்ந்து சுயமாக நிற்பதை தன் வாழ்வின் வெற்றியாக கருதினாள். கர்வாமாக அந்த வெற்றியை பறைசாற்றி கொள்ளும் விதமாக அங்கே சென்று தன் தாய் வீட்டின் வாயிலுக்குள் காலெடுத்து வைத்தாள். விதி அவளுக்காக என்ன யோசித்து வைத்திருக்கிறது என்று கிஞ்சிற்றும் அறியாது!

“ம்மா” என்று அவள் அழைத்து கொண்டே உள்ளே வர மீனா அன்புவிடம், “இதுதான் எங்க அம்மம்மா வீடு” என்று அறிமுகம் செய்து அழைத்து வந்து கொண்டிருந்தாள்.

கிரிஜா அப்போது மகளிடம், “அங்கேயே நில்லுடி… நீ ஒன்னும் உள்ளே வர வேண்டாம்” என்று சத்தமிட்டார். ஜோதி உட்பட எல்லோரும் முகப்பறையில்தான் ஆஜராகி இருந்தனர்.

அத்தனை நேரம் ஜானவிக்கு இருந்த சந்தோஷமான மனநிலை பறிபோனது. கிரிஜாவின் குரலில் அரண்டு அன்புச்செல்வி ஜானவியின் கரத்தை கெட்டியாக பற்றி கொண்டாள்.

அங்கே இருந்த எல்லோரின் பார்வையும் அன்புச்செல்வியின் மீது விழுந்தது.

சங்கரன் அப்போது, “கிரிஜா அவசரப்படாதே… பொறுமையா பேசலாம்” என்று சொல்ல ஜோதி உடனே,

“அவ செஞ்ச வைச்ச காரியத்திற்கு பொறுமையா வேற பேசுவாங்களா?” என்றாள்.

ஜானவி புரியாமல், “என்ன செஞ்சுட்டாங்க… இப்ப எதுக்கு நீ தேவையில்லாம என்னை பத்தி பேசுற” என்று ஜோதியை பார்த்து கேட்டாள்.

“நான் பேச கூடாதுதான்… ஆனா நீ போட்ட சபதத்தில ஜெய்ச்சிட்ட இல்ல…” என்று கேட்டு எகத்தாளமாக ஒரு பார்வை பார்த்தாள் ஜோதி!

“ஆமா நான் சபதத்தில் ஜெய்ச்சிட்டேன்தான்” என்று ஜானவி கர்வமாக சொல்ல,

“பார்த்தியா ம்மா” என்று ஜோதி தன் அம்மாவை பார்த்தாள்.

கிரிஜாவின் சீற்றம் கட்டுகடங்கமால் போனது.

“குடும்ப மானத்தை வாங்கிட்டு இதுல என்னடி பெருமை உனக்கு… பாவி பாவி… எங்க கிட்ட எல்லாம் ஒரு வார்த்தை சொல்லணும்னு கூட தோணலயா? உன் இஷடத்துக்கு என்ன வேணா பண்ணுவியா” என்று மகளை சரமாரியாக திட்டி கொண்டே ஜானவியை அடிக்கவும் செய்தார்.

மீனா அதிர்ந்து நிற்க அன்பு அழவே ஆரம்பித்துவிட்டாள். ஜானவிக்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை. அப்படி என்ன குற்றம் செய்தோம் என்று கூட புரியாமல் தன் அம்மாவின் அடியை அவள் வாங்கி கொண்டிருக்க,

“கிரிஜா” என்று சங்கரன் சத்தமிட்டு மனைவியை பிடித்து இழுத்து, “அறிவு கேட்டு போச்சா உனக்கு… தோளுக்கு மேல வளர்ந்த பொண்ணை போய் அடிக்கிற” என்று கத்தினார்.

“தப்புதான்… இப்படி ஒருத்தியை பெத்து வளர்த்ததுக்கு நான் என்னைத்தான் அடிச்சுக்கணும்… என்னத்தான் அடிச்சுக்கணும்” என்று கிரிஜா அழுது கொண்டே தலையிலடித்து கொள்ள,

“போதும்… இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி எல்லாம் பேசுறீங்க” என்று ஜானவி குரலையுயர்த்தவும்,

“அந்த கர்மத்தை வேற நாங்க எங்க வாயால சொல்லணுமாக்கும்” என்று ஜோதி அவளை இளக்காரமாக பார்த்தாள்.

“மவளே! இப்படியே ஏடாகூடமா எதாச்சும் பேசிட்டு இருந்த அக்கான்னு கூட பார்க்க மாட்டேன்… செவுலு பேந்திரும்” என்று சொல்லி ஜானவி ஜோதியிடம் கை ஒங்க,

“ஜானவி” என்று கிரிஜா கோபமாக கத்தினார்.

ஜானவி மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, “இதுக்கு மேல இந்த வீட்டில நான் நின்னேன்… எனக்கு சத்தியமா பைத்தியம் பிடிச்சிரும்” என்று சொல்லி மீனாவையும் அன்புவையும் தன் கரங்களில் பிடித்து கொண்டு அவள் வெளியேற பார்க்க,

கிரிஜா அப்போது, “அப்படியே போயிடு… இனிமே இந்த வீட்டு பக்கமே வராதே… நானும் உங்க அப்பாவும் செத்தா கூட நீ இந்த வீட்டு பக்கம் வர கூடாது… சொல்லிட்டேன்” என்றதும் ஜானவி அதிர்ந்து திரும்ப கிரிஜா உடைந்து அழ ஆரம்பித்தார்.

“என்ன வார்த்தை சொல்றீங்க ம்மா?” என்று ஜானவி கண்ணீர் தளும்ப கேட்க, “ஆமா வர கூடாது” என்று மகளிடம் மீண்டும் அழுத்தமாக உரைத்தார்.

ஜானவி தன் தந்தையை பார்த்து, “என்னப்பா பேசறாங்க இவங்க” என்று கேட்க,

“ஏன் ஜானு? உனக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கணும்னா ஆசை இருந்தா… அதை நீ எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செஞ்சிருக்கலாம் இல்ல” என்றார்.

அந்த வார்த்தைகளை கேட்ட ஜானவிக்கு இந்த உலகமே தலைகீழாக சுழன்ற உணர்வு!

“யாரு இப்போ ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டா?” என்றவள் அதிர்ச்சியோடு கேட்க, “அதான் நிற்கிறாளே… அந்த பொண்ணு… அவளோட அப்பாவை” என்று அன்புச்செல்வியை சுட்டி காட்டி சொல்லி கொண்டிருக்கும் போதே ஜானவி இடைநிறுத்தி,

“போதும் நிறுத்து… உன் இஷடத்துக்கு பேசாதே… நானும் செழியனும் பிரெண்ட்ஸ்” என்றாள்.

“நீ நிறுத்துடி முதல… நீயும் அந்த ஆளும் எப்படின்னுதான் இந்த ஊரே சொல்லுதே” என்ற ஜோதியின் வார்த்தையை கேட்டதும், “செழியனை பத்தி பேச எல்லாம் உனக்கு தகுதியே இல்ல” என்று ஜானவி சீற்றமானாள்.

“சீ வாயை மூடிறி… செய்றதெல்லாம் செஞ்சிட்டு அவகிட்ட ஏன் எகிற” என்று கிரிஜா கோபமாக கேட்க,

“ஐயோ! அவ உளறா ம்மா… அவ சொல்ற மாறியெல்லாம் எதுவும் இல்ல” என்றாள் ஜானவி!

ஜெகன் அவன் பங்கிற்கு, “ஏன் க்கா பொய் சொல்ற… நான் உன் வீட்டுக்கும் வரும் போதெல்லாம் பார்த்திருக்கேனே” என்றான். ஜானவி இடிந்து போய் நின்றுவிட்டாள்.

கிரிஜா மகனிடம், “ஏன் டா… இதை பத்தி என்கிட்ட முதலையே சொல்லல” என்று கிரிஜா மகனிடம் ஆவேசமாக கேட்க, “இல்லம்மா… அப்படி இருக்காதுன்னு நினைச்சேன்” என்றான் ஜெகன்.

ஜோதி, “அதான் நானும் சொன்னேன்… இதுல நான் உளறன்னாம்… அந்த கன்றாவியை நான்தான் பார்த்தேனே… ஜோடியா இரண்டு பெரும் மாலையும் கையுமா கோவிலுக்குள்ள போனாங்க… போதா குறைக்கு அவங்க பூ வாங்கி தர்ரறது என்ன? இவ அதை தலையில வைச்சிக்கிறது என்ன?” என்று ஜோதி மேலே பேசி கொண்டே போக ஜானவிக்கு வார்த்தைகள் வராமல் தொண்டைக்குள் சிக்கி கொண்ட உணர்வு. தான் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்து தொலைத்தோம் என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

ஜானவியின் அந்த மௌனம் ஜோதிக்கு இன்னும் சாதகமானது.

“ஏன் டி… அப்படியே பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாறி நிற்கிற… இப்ப வாயை திறந்து சொல்லு பார்ப்போம்… நீங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ்ன்னு” எண்டு ஜோதி திருத்தமாக கேட்க ஜானவி முகம் வாடி நின்றாள். கண்களில் நீர் நிரம்பியது.

ஜோதி நிறுத்தாமல் பேசினாள்.

“கோவில என் வீட்டுகார் வேற கூட இருந்தாரு… அந்த மனுஷன் எங்க இந்த கன்றாவியை பார்த்து தொலைசிர போறாரோன்னு சாமியை கூட கும்பிடாம பயந்து கூட்டிட்டு வந்துட்டேன்… இல்லாட்டி அங்கேயே செவுல ஒன்னு விட்டிருப்பேன்…

ஐயோ! போச்சு… என் மாமியார் வீட்டில் என் மானமே போக போகுது… உன் தங்கச்சி இப்படி” என்று மேலே சொல்லாமல் ஜோதி நிறுத்தி கொண்டாலும் அடுத்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று ஜானவிக்கு புரியாமல் இல்லை.

ஜானவிக்கு ஏனோ தன் மீதுதான் தவறோ என்று குற்றவுணர்வு உண்டாகும் அளவிற்கு பேசினாள் ஜோதி.

ஜானவி மனம்நொந்து, “இப்பவும் நீங்க நினைக்கிற மாறி எல்லாம் கிடையாது” என்று நிதானமாக கூற, “அப்படியா?” என்று ஜோதி வேகமாக ஜானவியை நெருங்கி அவள் தோள் பட்டையில் ப்ளவுஸின் ஓரத்தில் கையை விட, “என்னடி பண்ற” என்று இழுத்து தன் தமக்கையை தள்ளிவிட்டாள்.

ஜானவி அவமானமாக விலகி வர ஜோதி அந்த நொடி, “அவ தாலி கூட கட்டிக்கல போலம்மா… ச்சே… இது இன்னும் அசிங்கம்” என்றாள்.

ஜானவிக்கு பெரிதாக அழ வேண்டும் போலிருந்தது. அவள் பக்கத்தின் நியாயத்தை கேட்க அங்கே யாருமே இல்லை.

கிரிஜா ஜோதியின் புறம் திரும்பி, “ஆமா… இதுக்கு மேல அசிங்கப்படணுமா? விடுடி… முதல அவளை வெளியே போக சொல்லு… இப்படி ஒரு பொண்ணு எனக்கு வேண்டவே வேண்டாம்… இப்படி ஒருத்தியை நான் பெத்துக்கலன்னே நினைச்சுக்கிறேன்… இப்பதான் ஜமுனாவுக்கு ஒரு வரன் முடியிற மாறி இருந்துச்சு… இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா அவங்க எப்படி ஒத்துப்பாங்க… ஐயோ! இப்படி மானத்தை வாங்கிட்டளா?” என்று புலம்பி கொண்டிருக்க,

ஜானவி மெதுவாக எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள். மீனாவும் அன்புவும் ஒரு ஓரமாக நின்று என்னவென்று புரியாமல் நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். அன்புவின் பார்வையில் அத்தனை மிரட்சி!

குழந்தைகளை பார்த்தும் ஜானவியின் அழுகை தானாகவே உள்ளே சென்றுவிட்டது. அவள் அழுதால் அது அவர்களையும் சேர்த்து பாதிக்குமே.

“நம்ம போகலாம்” என்று ஜானவி அந்த குழந்தைகளிடம் சொல்லவும் அன்பு வேகமாக அவள் காலை கட்டி கொண்டு அழ ஆரம்பிக்க, அவளை இறங்கி கட்டி கொண்டு, “ஒன்னும் இல்லடா” என்று சமாதானம் செய்தாள்.

ஆனால் மீனா அழவில்லை. “எதுக்கு எங்க அம்மாகிட்ட எல்லோரும் சண்டை போடுறீங்க?” என்று அந்த மழலை கேட்க, கிரிஜாவிற்கு பேத்தியின் வார்த்தைகளை கேட்டு கண்ணீர் பெருகியது.

“எதுக்கு உங்க அம்மாகிட்ட சண்டை போட்டும்னு… நீயே அவ கிட்ட கேளு” என்று ஜோதி சொல்ல,

“போங்க பெரிம்மா… நீங்க ரொம்ப மோசம்” என்றாள் மீனா!

“நான் மோசம்தான்… உங்க அம்மா செய்ற தப்பை எல்லாம் கேட்கறேன்னே… நான் மோசம்தான்”

“குழ்நதை கிட்ட ஏன்டி இப்படி எல்லாம் பேசுற” என்று கிரிஜா மகளை அதட்டிவிட்டு, “நீ அம்மம்மா கிட்ட வாடி தங்கம்” என்று அழைத்தார்.

“நான் வரமாட்டேன்… நீங்க அம்மாவை அடிச்சீங்க” என்று மீனா கோபமாக சொல்ல ஜானவி அப்போது மகளை பார்த்து, “மீனு…”என்று அழைத்து,

“நான் சொல்றதை அப்படியே எல்லோர்கிட்டயும் சொல்றியா?” என்று கேட்டாள். அவள், “ஹ்ம்ம்” என்று தலையசைக்க,

“இனிமே அன்பப்பாதான் என்னோட அப்பான்னு சொல்லு” என்றாள் ஜானவி அழுத்தமாக!

எல்லோரும் அதிர்ச்சியாக  மீனா அவர்களை பார்த்து, “இனிமே அன்பப்பாதான் என்னோட அப்பா… ஜானும்மாதான் அன்புக்கு அம்மா” என்று அவளாக அடுத்த வசனத்தை சேர்த்து கொள்ள ஜானவிக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்துவிட்டது.

“நிஜமாவா ஜானும்மா” என்று மீனா சொன்ன வார்த்தையில் அன்பு தலையை நிமிர்த்தி வியப்பாக ஜானவியிடம் கேட்க, “ஆமான்டி தங்கம்” என்றாள்.

ஜானவி புறப்படுவதற்கு முன்னதாக தன் வீட்டினர் புறம் திரும்பி,

“நான் எதை செஞ்சிட்டேன்னு இந்த குதி குதிகிறீங்களோ அதை நான் இதுவரைக்கும் செய்யல… செய்யணும்னு நான் யோசிக்கவும் கூட இல்ல… ஆனா இப்போ செய்யணும் தோணுது.

நான் செழியனை கல்யாணம் பண்ணிகிட்டா  உங்க மானம் எல்லாம் போகும்… நீங்கெல்லாம் அசிங்கப்படுவீங்கன்னா நான் அதை செய்வேன்… செஞ்சே தீருவேன்” என்று அவள் அவர்களிடம் தீர்க்கமாக சொல்லிவிட்டு  மீனாவையும் அன்புவையும் அழைத்து கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

********

ஜானவி அவளின் குடியிருப்பை அடைந்ததும் அன்புவும் மீனாவும் செழியன் வீட்டிற்குள் ஓடிவிட்டனர். ஜானவி தன் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். நேராக படுக்கையில் சென்று விழுந்தவள் கட்டுக்குள் வைத்திருந்த உணர்வுகளை எல்லாம் கண்ணீராக பெருக்கினாள்.

அழுதாள். அழுதாள். அவள் விழி நீர் வற்றி போகும் வரை அழுதாள்.

அப்போது அவள் வீட்டின் வாயிற்கதவு தட்டப்பட, ஜானவி முகத்தை துடைத்து கொண்டு கதவை திறக்க,  செழியன்தான் வாசலில் நின்றிருந்தான். அவன் முகத்தில் குழப்பம் படர்ந்திருந்தது.

அதேநேரம் ஜானவி நின்ற கோலத்தை பார்த்து அவன் உள்ளம் பதறி போனது. புடவை மடிப்பெல்லாம் களைந்து நெற்றியில் பொட்டில்லாமல் விழிகள் சிவந்து முகம் வாட துவண்ட மலராக நின்றிருந்தாள்.

“ஜானவி என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க… பசங்க வேற ஏதேதோ சொல்றாங்க… எனக்கு ஒண்ணும் புரியல” என்று செழியன் கேட்டு கொண்டு வாசலில் நிற்க,

“உள்ளே வாங்க… உங்ககிட்ட பேசணும்” என்றாள்.

செழியன் குழப்பமாக வாசலிலேயே நிற்க, “ப்ளீஸ் செழியன்… உள்ளே வாங்க” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

செழியன் தயக்கமாக அவள் வீட்டிற்குள் நுழைந்தான்.

error: Content is protected !!