paadal thedal- 12

paadal thedal- 12

12

அதிர்ச்சி

கரங்களை கட்டி கொண்டு செழியன் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் நின்றிருந்தாள் ஜானவி. அவள் முகத்தையே உற்று பார்த்து கொண்டிருந்தான் செழியன். அவளிடம் என்ன கேட்பது எதை கேட்பது என்றே அவனுக்கு புரியவில்லை. முழுக்க முழுக்க குழப்பமான மனநிலையில் நின்றிருந்தான்.

அதுவும் மீனா வந்த உடனே, “அன்பப்பா… நீங்கதான் இனிமே எனக்கு அப்பாவா?” என்று கேட்ட நொடி அவன் அதிர்ந்துவிட்டான்.

இன்னொரு புறம் அன்புச்செல்வி தன் பாட்டியிடம், “இனிமே ஜானும்மாதான் என்னோட அம்மா” என்று சந்தோஷப்பட்டு சொல்லி கொண்டிருக்க, அந்த குழந்தைகளின் இந்த திடீர் மனநிலை அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அவர்கள் ஏன் அப்படி பேசுகிறார்கள் என்று யோசித்தவன் மீனாவிடம் சென்ற இடத்தில் என்ன நிகழ்ந்தது என்று விசாரிக்க அவள், “அம்மாவை அம்மம்மா அடிச்சிட்டாங்க… பெரிம்மா திட்டிட்டாங்க” என்று அவள் மூளைக்கு எட்டிய வரை சொல்லி முடித்தாள்.

அதன் பின்னே செழியன் ஜானவியிடம் அது குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வந்தான். ஆனால் அவள் அவனை வீட்டிற்குள் அழைத்ததோடு சரி. அதன் பின் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

உணர்ச்சிகள் யாவும் வடிந்த நிலையில் வெறுமையான முகத்தோடு நின்றிருந்தாள். அழுகை, கோபம், சோகம், வெறுப்பு என்று எந்த உணர்ச்சிகளுமே அவள் விழிகளில் தென்படவில்லை.

அவர்களுக்கு இடையில் சஞ்சரித்த அந்த கனத்த மௌனத்தை செழியன் உடைத்தான்.

“ஜானவி ப்ளீஸ்… என்ன நடந்ததுன்னு கொஞ்சம் சொல்லுங்க… உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவன் சொன்னதுதான் தாமதம்.

ஜானவியின் பார்வை அவனை நேர்கொண்டு பார்த்தது. அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவன் அவளை ஆவலாக பார்க்க, அவளோ பேச வார்த்தைகள் வராமல் திண்டாடி கொண்டிருந்தாள்.

தான் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தோம் என்றெல்லாம் அவள் சுயஅலசலில்  ஈடுபடவில்லை. மாறாக செழியினிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்ற யோசனை மட்டுமே!

“செழியன்” என்றவள் ஆரம்பிக்க, “சொல்லுங்க ஜானவி!” என்று அவன் பரபரப்பாக கேட்டான்.

“நம்ம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன?” ஜானவி கொஞ்சமும் தயங்காமல் பளிச்சென்று கேட்டுவிட,

அவன் இப்படி ஒரு கேள்வியை அவளிடம் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை.

“என்ன பேசுறீங்க ஜானவி? என்னாச்சு உங்களுக்கு?” என்று அவன் மாறாத அதிர்ச்சியோடு வினவ,

“நான் கேட்ட கேள்விக்கு முதல பதில் சொல்லுங்க செழியன்… ஏன் நம்ம கல்யாணம் பண்ணிக்க கூடாது… அன்புவுக்கு நான் அம்மாவா மீனாவுக்கு நீங்க அப்பாவா இருந்தா என்ன? நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு கணவன் மனைவியா இருக்க வேண்டாம்… ஒரு நல்ல அம்மா அப்பாவா இருக்கலாம்

முடியும் முடியாது… உங்க டெஸிஷனை சொல்லுங்க… அவ்வளவுதான்?” என்று ரொம்பவும் உணர்வுப்பூர்வமான ஒரு கேள்வியை அசாதாரணமனாக கேட்டுவிட்டு அவனிடம் பதிலை எதிர்ப்பர்த்த்தாள். அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அதிர்ச்சி மட்டுமே மேலோங்கியிருந்தது.

ஆனாலும் அவன் மனம் அவள் மனநிலையை கணித்தவாறு சற்று நிதானமாக யோசித்து, “நீங்க இப்படி எல்லாம் பேசற ஆள் இல்லயே ஜானவி… வேறேதோ நடந்திருக்கு… முதல அந்த விஷயத்தை சொல்லுங்க” என்று அவன் அழுத்தமாக கேட்க,

“அதெல்லாம் நான் அப்புறமா சொல்றேன்… நீங்க உங்க முடிவை சொல்லுங்க?” என்று ஜானவி மீண்டும் அதே இடத்தில் நின்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “சாரி ஜானவி… சத்தியமா நீங்க சொன்னதுக்கு என்னால ஒத்துக்க முடியாது… காதலும் கல்யாணமும் ஷேர் மார்கெட்ல பண்ற  இன்வஸ்மென்ட் இல்ல… ஒரு கம்பனில போட்டு லாஸ் ஆகிட்டா… அப்புறம் வேற ஒரு கம்பெனில இன்வஸ்ட் பண்ணி லாபம் பார்க்கிறதுக்கு… இது லைஃப்” என்று அவன் தெளிவாகவும் தீர்க்கமாகவும் பதிலளிக்க,

அவள் கசந்த முறுவலோடு அவனை பார்த்து, “யாருமே இந்த உலகத்தில செகன்ட் மேரேஜே பண்ணிக்காத மாறியும் செகன்ட் டைம் லவ்வே பண்ணாத மாறியும் பேசாதீங்க… நீங்க பேசற பிலாஃசபிக்கும் பேஃக்டுக்கும் ரொம்ப தூரம்” என்றாள்.

“அது ஒவ்வொருத்தரோட மனநிலையை பொறுத்து… நான் இப்படித்தான்…”

“உங்க மனநிலையை நான் தப்பு சொல்லல செழியன்… ஆனா இப்ப நான் இருக்க சூழ்நிலையில எனக்கு கல்யாணம்ங்கிற ஒரு இமேஜ் தேவைப்படுது… திரும்பியும் யார் என்னன்னு தெரியாத ஆளோட என்னால ரிஸ்க் எடுக்க முடியாது… ஏன்னா இதுல என் பொண்ணோட லைஃப்பும் இருக்கு…”

செழியன் அவளை யோசனையாக பார்த்து, “ஒருத்தர் மேல ஒருத்தர் விருப்பம் இல்லாம எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?” என்று கேட்க,

“ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்கிற நம்பிக்கையின் பேர்ல பண்ணிக்கலாம் செழியன்… கல்யாணம்ன்னா காதலைத்தான் பங்கு போட்டுக்கணுமா… நாம நம்ம கடமையை பங்கு போட்டுக்கலாம்னு சொல்றேன்…”

“நீங்க சொல்றது பார்த்தா மேரேஜ் பாஃர் கன்வீனியன்ஸ்… அப்படியா?”

“யு ஆர் ரைட்” என்றவள் தலையசைக்க,

“சாரி ஜானவி… நீங்க சொல்ற மாறி மெட்டீரியலிஸ்டிக்கா என்னால இருக்க முடியாது… நான் எதை செஞ்சாலும் மனசார நேசிச்சு ரசிச்சுத்தான் செய்வேன்… நான் செய்ற வேலையில கூட அப்படித்தான்… கல்யாணத்தை கூட ஒரு கமிட்மென்ட் மாறி எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது ஜானவி… அதெல்லாம் தாண்டி எனக்கு சில இமோஷன்ஸ் இருக்கு… ஸோ நீங்க சொல்றது நாட் பாஸிப்பில்” என்றான்.

ஜானவி அவனை வெறுமையாக பார்த்து, “சரி விடுங்க செழியன்… இனிமே நம்ம இதை பத்தி பேச வேண்டாம்” என்று முடித்து கொள்ள அவன் தயங்கிய பார்வையோடு, “நான் உங்க நட்பை ரொம்ப மதிக்கிறேன் ஜானவி… அது எப்பவுமே இப்படியே இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்” என்றான்.

செழியனின் வார்த்தைகளுக்கு ஜானவி எதுவும் பதில் சொல்லவில்லை. அவள் பதில் சொல்லும் நிலையிலும் இல்லை. அவள் வலியும் வேதனையும் அவளுக்கானது.

அதேநேரம் அவள் அவனிடம் நடந்தவற்றையெல்லாம் சொல்லி அவள்  மீது ஒரு பரிதாபநிலையை உருவாக்கி கொண்டு, அதன் பின் அவனிடம்  திருமணத்திற்கு சம்மதம் கேட்க விரும்பவில்லை.  அப்படி கேட்டால் அவன் மீது அவள் முடிவை திணிப்பதாகிவிடும். ஆதலாலேயே அவனிடம் அப்படி நேரடியாக கேட்டாள்.

ஜானவிக்கு செழியனின் பதிலில் பெரிதாக ஏமாற்றமும் இல்லை. பிறந்ததிலிருந்து உடன் இருந்த உறவுகளே அவளை புரிந்து கொள்ளாமல் அவமானப்படுத்திய பின் மற்ற யாரும் அவளுக்கு துணை வருவார்கள் என்று அவள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் வைத்து கொள்ளவில்லை. கனவுகளும் காணவில்லை. அவளுக்கு தோல்விகளும் வீழ்ச்சிகளும் பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆதலால் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்க தொடங்கினாள்.

செழியனோ அவன் அறையில் அமர்ந்து கொண்டு  ஜானவி பேசிய விஷயத்தை யோசித்து ரொம்பவும் குழம்பி போயிருந்தான். அதுவும் அவள் திடீரென்று இப்படி ஒரு கேள்வி கேட்டதை அவனால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

மகன் அப்படி யோசனையாக இருப்பதை பார்த்து, “என்னாச்சு அன்பு?” சந்தானலட்சுமியும் பாண்டியனும் மாறி மாறி கேட்ட போதும் அவன் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.

இரவெல்லாம் செழியனுக்கு இதே யோசனை. ஜானவி மனதை காயப்படுத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வில் வேறு தவித்து கொண்டிருந்தான்.

இரவு உறங்கும் நேரமாகிவிட எப்போதும் போல் அன்புச்செல்வி துள்ளி குதித்து ஓடிவந்து தன் தந்தையின் அருகில் வந்து படுத்து கொள்ள அவன் விளக்கை அணைத்துவிட்டு அவளை தட்டி உறங்க வைத்து கொண்டிருந்தான்.

ஆனால் அவளோ மிகுந்த சந்தோஷத்தில் உறக்கம் வாராமல், “அப்பா” என்றழைக்க, “என்ன டா?” என்றான்.

“இனிமே ஜானும்மாதான் எனக்கு அம்மாவா?” என்று கேட்க,

அவன் அதிர்ச்சியாகி எழுந்து அமர்ந்து கொண்டு, “யார் சொன்னா அப்படி? உனக்கு ரஞ்சுதான் அம்மா” என்றான்.

“உஹும்… எனக்கு ஜானும்மாதான் அம்மாவா வேணும்” என்று அவளும் எழுந்து உட்கார்ந்து கொண்டு சொல்ல அவன் தவிப்போடு, “ஜானும்மா வேண்டாம்ன்னு நான் சொல்லல அன்பும்மா… ஆனா ரஞ்சுதான் உனக்கு அம்மா… ஜானும்மா மீனாவோட அம்மா” என்று மகளுக்கு தெளிவாக உரைத்தான்.

“மீனாதான் சொன்னா… அவளுக்கும் எனக்கும் ஜானும்மாதான் அம்மான்னு”

“மீனா சும்மா சொல்லி இருப்பா அன்பு”

“ஜானும்மா கூட சொன்னாங்களே” என்றவள் சொல்ல, “இல்லடா… ஜானும்மா அப்படி எல்லாம் உனக்கு அம்மா ஆக முடியாது” என்று செழியன் அழுத்தமாகவே மகளிடம் உரைத்தான்.

அவன் பதிலில் அன்புவின் முகம் சுருங்கி போக, “ஏன் ஆக முடியாது? ஆக முடியும்… நீங்க என்கிட்ட பொய் சொல்றீங்க” என்று அவன் பிடிவாதமாக உறைத்தாள். அதற்கு மேல் குழந்தை மனதை காயப்படுத்த அவன் விரும்பவில்லை.

“சரி… நீ தூங்கு… நம்ம இதை பத்தி அப்புறம் பேசிக்கலாம்” என்று மகளை எப்படியோ அவன் பிரயத்தனப்பட்டு சமாதானப்படுத்தி உறங்க வைத்துவிட்டான். ஆனாலும் அவள் ஜானும்மா ஜானும்மா என்று உறக்கத்திலேயே பிதற்றி கொண்டிருந்ததை கேட்டு அவன் மனம் கலங்கித்தான் போனது.

இப்படியே ஒரு வாரம் கழிந்து போக, அன்பு மீனா நடந்த விஷயங்களை மறந்து எப்போதும் போல் தங்கள் விளையாட்டு படிப்பு என்றிருந்தனர். எது நடந்தாலும் குழந்தை உள்ளங்கள் அதை மனதில் தேக்கி வைத்து கொண்டு மருகுவதில்லை. புது நீர் பிரவாகம் போல அவர்கள் மனம் தங்கள் குழந்தைத்தனதிற்கே உண்டான உற்சாகத்தை கொண்டிருந்தன. ஆனால் ஜானவியாலும் செழியனாலும் அப்படி இயல்பாக இருக்க முடியவில்லை. முகம் பார்த்துபேசி கொள்ளவும் முடியவில்லை.

செழியன் பள்ளியில் இருந்தான். அன்று மதிய வேளையில் அவன் முதலவர் அறையை கடந்து செல்லும் போதே ஜானவி அங்கே வந்து கொண்டிருப்பதை பார்த்தான். இந்த நேரத்தில் அவள் இங்கே என்ன செய்கிறாள் என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே அவள் முதல்வர் அறைக்குள் நுழைந்தாள். சில நிமிடம் கழித்து அவள் வெளியேறிவிட, இருவரும் இயல்பாக இருந்திருந்தால் அவளிடமே என்ன விஷயம் என்று வினவியிருப்பான்.

ஆனால் இப்போது நிலைமை வேறு. அவள் எதற்கு வந்தால் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் முதல்வரின் காரியதரிசியிடம் விசாரித்தான். ஜானவி வந்து பேசிய விஷயத்தை அவன் கேட்ட பின் அவனுக்கு வேலையே ஓடவில்லை.

அவனால் இயல்பாக பாடம் நடத்த கூட முடியவில்லை. அவளிடம் அப்போதே பேசியாக வேண்டுமென்று தவிப்பு உண்டானது. பள்ளியில் விடுப்பு எடுத்து கொண்டு நேராக வீட்டிற்கு வந்தான். ஜானவியிடம் பேச வேண்டி அவள் வீட்டின் கதவை தட்ட, அவள்தான் கதவை திறந்தாள்.

ஜானவியிடம் வேலை செய்யும் சரவணனும் ரேஷ்மாவும் அவள் வீட்டில் லேப்டாப்பில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து வெளியேவே தயங்கி நின்றவன், “உங்ககிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும் ஜானவி” என்றான்.

ஜானவி உள்ளே பார்த்துவிட்டு, “வேலையா இருக்கேனே” என்று சொல்ல, “அதெல்லாம் பரவாயில்ல… இப்பவே பேசணும்” என்று பிடிவாதமாக நின்றான்.

“அப்படி என்ன விஷயம்?” என்றவள் யோசனையாக கேட்க,

“கொஞ்சம் மேல வாங்க? நான் வெய்ட் பண்றேன்” என்றவன் கூறிவிட்டு படிகட்டுகள் ஏறி சென்றுவிட அவளுக்கு அவன் மனநிலையை கணிக்க முடியவில்லை.

அவள் உள்ளே சென்று, “ரேஷ்மா… ஒரு டென் மினிட்ஸ்… நீ பார்த்துக்கோ… நான் வந்திடுறேன்” என்று சொல்ல, “ஓகே க்கா” என்றாள்.

அவளும் மேலே ஏறி சென்றாள். அவன் ஓரமாக நிழலான இடத்தில் நின்று கொண்டிருக்க அவன் அருகில் வந்தவள், “எதுவாயிருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க… யாரச்சும் பார்த்தா அப்புறம் இஷ்டத்துக்கு கதை கட்டுவாங்க” என்றாள்.

அவளை வித்தியாசமாக பார்த்தவன், “இதுவரைக்கும் நாம இங்க நின்னு பேசனதே இல்லையா ஜானவி?” என்று கேட்க,

“பேசி இருக்கோம்… ஆனா இனிமே வேண்டாம்” என்றாள்.

செழியன் அவளை மௌனமாக ஆராய்ந்து பார்க்க,

“ஏதோ பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா நின்னா என்ன அர்த்தம் செழியன்?” என்று அழுத்தமாக கேட்டாள்.

“பிரின்ஸ்பாலை பார்க்க வந்தீங்களா ஸ்கூலுக்கு?” என்றான் .

“ஹ்ம்ம் மீனாவுக்கு… டி.சி வாங்குற விஷயமா பேசலாம்னு வந்தேன்”

“எதுக்கு இப்போ மீனாவுக்கு டி.சி வாங்கணும்?”

“ம்ச்… அது… நான் சில பேர் கண்ணில எல்லாம் படாம ரொம்ப தூரம் போயிடலாம்னு பார்க்கிறேன்” என்றவள் விரக்தியான பார்வையோடு  சொல்ல,

“என்னதான் பிரச்சனை ஜானவி உங்களுக்கு…என்னால முடியல…. மண்டை வெடிச்சிரும் போல இருக்கு… ஏன் அன்னைக்கு அப்படிஎன்கிட்ட பேசுனீங்க… ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் புரியிற மாறி சொல்லுங்க…” என்றான்.

அவள் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, “என்னத்தை சொல்ல… என் குடும்பமே என்னை அசிங்கமா பேசுது… கேவலமா பார்க்குது… என் கூட பொறந்த அக்கா தம்பியே… நம்ம நட்பை எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு கொச்சைப்படுத்தி பேசிட்டாங்க… எங்க அம்மா அவங்க செத்தாலும் நான் அவங்கள பார்க்க வரகூடாதுன்னு சொல்லிட்டாங்க… என்னால முடியல செழியன்…

நான் தப்பே செய்யாம என்னை குற்றவாளியா நிற்க வைச்சா எப்படி இருக்கும்… அதுவும் திரும்ப திரும்ப… அதான் கடுப்பில…அவங்க எல்லோரையும் பார்த்து நீங்க சொல்றதை உண்மையாக்கி காட்டிறேன்னு சாவல் விட்டுட்டு வந்துட்டேன்” என்றவள் நடந்தவற்றை சுருக்கமாக சொல்லி முடிக்க அவன் முகம் குழப்பமாக மாறியது.

“புரியல… எதை உண்மையாக்கி காட்டிறேன்னு சாவல் விட்டு வந்தீங்க?”

“அது” என்று சில நொடிகள் தயங்கியவள் பின் அவனை பார்த்து,

“நான் உங்களை கல்யாணம் பண்ணி காட்டிறேன்னுதான்” சொல்லி கொண்டே தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.

செழியனுக்கு இப்போது முழுவதமாக நடந்த விஷயம் புரிந்தது. ஜானவியை அவன் மெளனமாக பார்க்க,

“சாரி உங்ககிட்ட கேட்காம அப்படி நான் சொல்லி இருக்க கூடாது… பட் நான் என்ன பண்ணட்டும் செழியன்… என் சிட்டுவேஷன் அப்படி அமைஞ்சி போச்சு” என்றாள்.

சில நிமிட மௌனத்திற்கு பின் செழியன் அவளிடம், “சரி அது இருக்கட்டும்… இப்ப நீங்க கண்டிப்பா இங்க இருந்து போகணும்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்று தீர்க்கமாக கேட்கவும்,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள்,

“சாரி செழியன்… எப்படி யோசிச்சாலும் இந்த பிரச்சனைக்கு ரெண்டே வழிதான் தீர்வு… ஒன்னு நம்ம இரண்டு பேரும் ஊருக்காகவாச்சும் கல்யாணம் பண்ணி சேர்ந்திருக்கணும்… இல்ல உங்களை விட்டு நான் ரொம்ப தூரம் தள்ளி போயிடணும்… நீங்க முதல் ஆப்ஷனுக்கு முடியாதுன்னு சொல்லிட்டீங்க… அப்போ நான் ரெண்டாவதைதானே சூஸ் பண்ணி ஆகணும்… அதான்” என்று சொல்லும் போதே அவள் கண்களில் நீர் ஊற்றெடுத்தது.

“எனக்கும் அன்புவையும் மீனாவையும் பிரிக்க கஷ்டமாதான் இருக்கு… ஆனா குழந்தைங்கதானே… நம்மல மாறி இல்ல…  கொஞ்ச நாளில எல்லாத்தையும் மறந்திடுவாங்க” என்றாள்.

“இந்த பிரச்சனைக்கு இதான் ஒரே சொல்யுஷனா?” என்று செழியன் அவளிடம் தவிப்பாக கேட்க,

“புரிஞ்சிக்கோங்க செழியன்… நான் ஒரு பெண் குழந்தைக்கு அம்மா… என் மேல விழற பழியும் கலங்கமும் என் மகளையும் சேர்த்து பாதிக்கும்…. இதெல்லாம் நான் முன்னாடியே யோசிச்சு இருக்கணும்… ரொம்ப லேட்டா ரியலைஸ் பண்றேன்… ஆனா உங்க நட்பை நான் ரொம்ப மதிக்கிறேன் செழியன்… அதை கலங்கப்படுத்தி பார்க்கணும்னு எனக்கு சத்தியமா விருப்பமில்ல… ஐம் சாரி… உங்களை நான் ஹர்ட் பண்ணி இருந்தா” என்று அவள் சொல்ல சொல்ல செழியன் மௌனமாகவே நின்றான்.

“இந்த பிரச்சனையை பத்தி இனமே பேச வேண்டாம் செழியன்… ரெண்டு பேருக்கும் அது கஷ்டம்… சரி வாங்க… கீழே போலாம்” என்று படபடவென தான் சொல்ல வேண்டியவற்றை பேசி முடித்துவிட்டு ஜானவி முன்னே நடக்க,

“சரி ஜானவி… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான்.

ஜானவி அதிர்ச்சியாக அவன் புறம் திரும்ப,

“நான் மீனாவையும் அன்புவையும் வேற வேறயா பார்க்கலன்னு சொன்னது வெறும் வார்த்தையில்ல ஜானவி… எனக்கு அவங்க ரெண்டு பேருமே வேணும்… என்னால அவங்கள விட்டு கொடுக்க முடியாது… உங்களையும் சேர்த்துதான்… வாங்க போலாம்” என்று செழியன் தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லிவிட்டு அவன் செல்ல, அவள் ஸ்தம்பித்து நின்றாள்.

விதியாக அவள் வாழ்க்கை பாதையை மாற்றியிருக்கலாம். ஆனால் செழியன் அதை இன்னும் இன்னும் அழகாக மாற்ற போகிறான்.

குறை நிறையோடு என்னை நானாகவே ஏற்று கொள்ள வேண்டும்.

என் மனதை வருடும் பாடலாக நீ வேண்டும்.

நீ தொலைத்த இன்பங்களின் தேடலாக நான் உன்னோடு வேண்டும்.

*****************

மேகதூதம் பாட வேண்டும்.

மேனி மீது சாரல் வேண்டும்.

காளிதாசன் காண வேண்டும்.

வானவில் வரும் வாழ்வில் மீண்டும்.

 

error: Content is protected !!