paadal thedal- 14
paadal thedal- 14
14
முதல் நாள்
பாண்டியனும் சந்தானலட்சுமியும் சென்ற பிறகு அந்த வீடே அமைதி கோலம் பூண்டது. ஜானவி சோபாவில் அமர்ந்து கொண்டிருக்க, செழியன் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தான். அவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமான அன்புவும் மீனாவும் இப்போது உறங்கி கொண்டிருந்தார்கள்.
இருவருக்குமே இயல்பாக முகம் பார்த்து பேசி கொள்ள என்னவென்று புரியாத சங்கடமான உணர்வு. அவர்களுக்கு இடையில் தனிமையோடு கூடிய வெறுமை உருவாகியிருந்தது.
அதுவும் இருவரும் இன்னும் அதே மணகோலத்தில்தான் இருந்தனர். தான் செழியனுக்கு மனைவியாகிவிட்டோம் என்று ஜானவியால் ஏற்க முடியாததை போல செழியனாலும் மனைவி என்ற ஸ்தானத்தில் ஜானவியை வைத்து பார்க்க முடியவில்லை.
அதுவும் இத்தனை நாள் நல்ல நண்பர்களாக மட்டுமே இருந்துவிட்டு திடீரென இந்த மாற்றத்தை ஜீரணித்து கொள்ள சற்று சிரமமாகவே இருந்தது. ஜானவி அவனிடம் திருமணத்திற்கு பின்னும் நாம் நண்பர்களாவே இருக்கலாம் என்று வார்த்தைகளால் சுலபமாக சொல்லிவிட்டாள். ஆனால் அது எதார்த்தத்தில் அடிவாங்கியது.
நண்பர்கள் கணவன் மனைவியாகலாம். ஆனால் கணவனும் மனைவியும் நண்பார்களாக மட்டுமே இருந்துவிட முடியாது. அதுவும் கணவன் மனைவி உறவு என்பது மற்ற எல்லா உறவுகளையும் விடவும் சற்றே ஆழமானது.
அந்த நொடி இருவருக்குமிடையில் சஞ்சரித்தது… மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே!
அன்று இருவரின் உணர்வுகளை புரிய வைத்து நண்பர்களாக மாற்றிய அதே மௌனம் இன்று இருவரையும் விலகி நிறுத்தி வைத்தது. எத்தனை நேரம் இந்த மௌனத்தை சுமந்து கொண்டிருப்பது என்று யோசித்த ஜானவி எழுந்து அவன் அருகில் வந்து, “என் டிரஸ் எல்லாம் அந்த வீட்டில இருக்கு… நான் போய் ட்ரஸ் சேஞ் பண்ணிட்டு மீனாவுக்கும் எனக்கும் இப்போதைக்கு கொஞ்சம் தேவையான டிரஸ் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்திடுறேன்” என்றாள்.
செழியன் அவள் முகம் கூட பாராமல், “சரி” என்றான்.
ஜானவி அதன் பின் அவள் வீட்டிற்கு சென்றாள். சௌகரியமாக இருக்க வேண்டி ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு தேவையான துணிகள் யாவையும் ஒரு பெட்டியில் எடுத்துவைத்து அடுக்கினாள்.
அவள் பாட்டுக்கு அந்த வேலையை செய்து கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நன்றாக இருட்டிவிட்டிருந்தது. வீட்டிற்கு வந்தால் மீனாவும் அன்புவும் உடையெல்லாம் மாற்றி கொண்டு தொலைகாட்சியில் ஐக்கியமாகி இருந்தனர்.
“என்ன? எழுந்ததுல இருந்து இரண்டு பேரும் டிவிதான் பார்த்துட்டு இருக்கீங்களா?” என்றவள் முறைப்பாக கேட்க,
மீனா உடனே, “உஹும்… எழுந்து மூஞ்சி கழுவி டிரஸ் மாத்தி படிச்சிட்டு… இப்பதான் டிவி பார்க்கிறோம்” என்றாள்.
“ம்ம்கும்… வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி உனக்கு… சரி எங்க உங்க அன்பப்பா?” என்று அங்கே செழியன் இல்லாததை கவனித்து கொண்டே மகளிடம் வினவினாள்.
“அன்பப்பா இல்ல… அப்பா” என்றாள் மீனா. இனி தன்னை அன்பப்பா இல்லை. அப்பா என்று அழைக்க வேண்டும் என்று செழியன் அவளிடம் சொல்லியிருந்தான். ஒருமுறை சொல்லிவிட்டால் அதை அப்படியே பிடித்து கொள்ளும் வழக்கம் மீனாவிற்கு!
அவள் அப்படி சொல்ல ஜானவி பல்லை கடித்து கொண்டு, “சரி அப்பா எங்கே?” என்று கேட்க,
“எனக்கு தெரியாது… நான் டோரா பார்க்கிறேன்… போம்மா” என்றாள் மீனா.
“உன்கிட்ட போய் கேட்டேன் பாரு” என்றவள் அன்புச்செல்வியிடம் திரும்ப ஜானவி கேட்பதற்கு முன்னதாகவே அவள், “அப்பா உள்ளே சமையல் செய்றாங்க ஜானும்மா” என்றாள்.
“சமையல் செய்றாரா?” என்றவள் வியப்பாக கேட்டுவிட்டு உள்ளே செல்ல பார்த்தவள் மீண்டும் திரும்பிவந்து, “அன்பும்மா… நாம உள்ளே போய் அப்பா என்ன சமைக்கிறாருன்னு பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்டாள். தனியாக அவள் மட்டும் உள்ளே போக என்னவோ சற்று தயக்கமாக இருக்க துணைக்கு அன்புவை அழைத்தாள்.
ஆனால் அன்பு முகம் சுருங்கி, “நானும் டோரா பார்க்கிறேனே” என்று சிணுங்கினாள்.
“எனக்காக வாங்க” என்று ஜானவி கெஞ்சலாக கேட்க அன்பு மீனாவை பார்த்தாள். அவளுக்கு எழுந்து வர விருப்பமில்லை என்பதை உணர்த்தும் விதமாக!
ஜானவி கடுப்பாகி, “தினைக்கும் ஒன்னையே பார்த்தாலும் உங்களுக்கு அலுக்காதுடி” என்று கடிந்து கொள்ள
மீனா உடனே, “நான் வேணா அப்பாவை கூப்பிடவா?” என்று எழுந்து போகாமல் இருந்த இடத்திலிருந்தே, “அப்ப்ப்பாஆஆ” என்று அவனை உச்சஸ்ததியில் கத்தி அழைத்து விட்டாள்.
“ஐயோ! உன்னை யாருடி இப்ப கூப்பிட சொன்னது?” என்றவள் கடுப்பாக கேட்கும் போதே, “என்ன மீனு?” என்று கேட்டு கொண்டே செழியன் சமையலறை விட்டு வெளியே வந்தான்.
மீனாவோ, “அம்மாதான் கூப்பிட சொன்னாங்க” என்று தெளிவாக போட்டும் கொடுத்துவிட செழியன் ஜானவியை பார்த்து, “என்ன ஜானவி?” என்றான்.
“ஒன்னும் இல்ல… எங்கன்னு கேட்டேன்… அதுக்குள்ள கூப்பிட்டுட்டா” என்று மகளை ஒரு பக்கம் முறைத்து கொண்டே சொல்ல,
“ஒ! நான் கிச்சன்ல் குக் பண்ணிட்டு இருந்தேன்… ஹ்ம்ம்… உங்களுக்கு எதாச்சும் வேணுமா?” என்று கேட்க, “அதெல்லாம் இல்ல… நீங்க எங்கன்னுதான்” என்று அவள் பேசி கொண்டே,
“ஏன்? நீங்க சமையல் பண்ணிக்கிட்டு… நான் வந்திருப்பேன் இல்ல” என்றாள்.
“பரவாயில்ல… நீங்க வேலையா இருந்தீங்க… அதுவும் உங்களுக்கு எங்க வீட்டு கிச்சனல எது எங்க இருக்குன்னு தெரியுமா? கொஞ்ச நாளாச்சும் பழக வேண்டாமா?!” என்றவன் சொல்லி கொண்டே சமையலறைக்குள் நுழைந்துவிட,
“செஞ்சா… தானாவே பழகிக்க போறேன்” என்றாள்.
“ஹ்ம்ம்… பொறுமையா பழகிக்கலாம்… என்ன அவசரம்… அதுவுமில்லாம எனக்கும் குக்கிங் நல்லா தெரியும்… அதுவுமில்லாம குக் பண்ண எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அவன் வாணலியில் வதக்கி கொண்டே சொல்ல அந்த வாசனை வேறு முக்கை துளைத்தது.
“நிஜமாவா?” என்று அவள் வியப்படங்காமல் கேட்டு கொண்டே அவளும் உள்ளே வர,
“ஹ்ம்ம்… நான் நிறைய வெரைட்டி பண்ணுவேன்… நீங்க டேஸ்ட் பண்ணி பாருங்களேன்… அப்ப தெரியும் என் சமையல் எப்படின்னு” என்று பெருமிதமாக அவளை பார்த்து அவன் சொல்ல அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவள் பார்த்து இதுவரை அவள் வீட்டு ஆண்கள் யாரும் சமையலறை பக்கம் போனதே இல்லை. டிவியில்தான் ஆண்கள் சமைத்து பார்த்திருக்கிறாள். இருப்பினும் அவர்களும் வீட்டில் மனைவிக்கு சமைத்து கொடுப்பர்களா என்ன என்று எண்ணி கொள்வாள்.
செழியன் ரொம்பவும் பழக்கமாக சமையல் செய்வதை பார்த்து பார்க்காத ஒன்றை பார்ப்பது போல் அதிசயித்து நின்றுவிட்டாள்.
இப்படி யோசித்து கொண்டே நின்றவள் இயல்பு நிலைக்கு தாமதமாகவே வந்து, “நான் எதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று அவனிடம் கேட்கவும்,
“ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு… நீங்க பிளேட்ஸ் எடுத்துட்டு போங்க… நான் டிஷ்சை எடுத்துட்டு வரேன்… எல்லோரும் சாப்பிடலாம்” என்றான்.
ஜானவியும் அவன் சொன்னது போல் தட்டுக்களை எடுத்து வந்து உணவு மேஜையில் வைத்துவிட்டு மீனாவையும் அன்புவையும் அழைத்தாள். அவர்களோ டிவி பார்க்கும் ஆர்வத்தில் சாப்பிட வரமாட்டேன் என்று அடம் பிடிக்க, ஜானவி அதட்டவும் அடிபணிந்து உணவு உண்ண வந்தார்கள்.
அவன் எடுத்து வந்த உணவை குழந்தைகளுக்கு அவள் பரிமாற, அவர்கள் இருவரும் உணவை ருசி பார்த்துவிட்டு முதலில் அன்புச்செல்வி, “சூப்பரா இருக்கு ப்பா” என்று புகழ்ந்தாள்.
“உனக்கு மீனு” என்று செழியன் மீனாவின் கருத்தை ஆர்வமாக எதிர்பார்க்க, அவளோ சாப்பிடுவதில் மும்முரமாக உள்ளார்ந்து இறங்கி விட்டாள்.
சில நொடிகள் தாமதித்த பின்னே அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன.
“எங்க ம்மா சமையல் மாறி இல்ல… நல்லா இருக்கு… சூப்பர்” என்று ஒரே வார்த்தையில் ஜானவியையும் வாரி செழியனையும் பாராட்ட, அவன் சத்தமாக சிரித்துவிட்டான்.
“இப்ப என் சமையலை பத்தி கேட்டாங்களாடி உன்கிட்ட” என்று ஜானவி ஒருபுறம் கடுப்பானாள்.
அவர்கள் இருவரும் திருப்தியாக உண்டு முடித்த பின் செழியனும் ஜானவியும் உண்ண ஆரம்பிக்கவும், “டேஸ்ட் எப்படி இருக்குன்னு சும்மா எனக்காக சொல்ல கூடாது… உண்மையா சொல்லணும்” என்றான்.
அவள் அந்த உணவை ருசி பார்த்துவிட்டு உச்சு கொட்டி மெச்சுதலாக அவனை பார்த்து, “ஹ்ம்ம்… சான்சே இல்ல… உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு செழியன்” என்று பாராட்டி கொண்டே,
“எனக்கெல்லாம் இவ்வளவு நல்லா சமைக்கவே வராது” என்றாள்.
“அதான் மீனு சொன்னாளே” என்று செழியன் நகைக்க,
“ஒருவிதத்தில அவ சொன்னது உண்மைதான்… எனக்கு எதுவும் உருப்படியா வராது” என்றாள்.
“அதென்ன அப்படி சொல்லிட்டீங்க… ஷேர் மார்கெட் மாறி ஒரு ரிஸ்கான பிரொஃப்பஷன்ல அசாலட்டா நின்னு சாதிக்கிறீங்க… அதுவும் இன்டிபெண்டண்டா பிஸ்னஸ் ஆரம்பிச்சு ரெண்டு பேருக்கு வேலை குடுத்து… தோ இப்ப கார் வேற வாங்கிட்டீங்க… இதைவிட உருப்படியா நீங்க வேற என்ன செய்யணும்… இந்தளவு தன்னம்பிகையை நான் யார்க்கிட்டயும் பார்த்ததே இல்ல… யு ஆர் அன் ஐடல் உமன் ஜானவி” என்று செழியன் அவளை புகழ்ந்து முடிக்கும் வரை அவள் இமைக்கவே இல்லை.
அந்தளவு அவள் திறமையை கண்டு வியந்து அவள் குடும்பத்தில் உள்ள யாருமே பாராட்டியதே இல்லை. பொறுப்பே இல்லாதவள் என்று அவள் வாங்கிய திட்டுக்கள்தான் அதிகம். என்னதான் அவள் நன்றாக படித்தாலும் அது அத்தனை வியப்புக்குரிய மதிப்புக்குரிய விஷயமாக அவளை சுற்றி இருந்தவர்கள் பார்வைக்கு படவில்லை. அவள் குறையை மட்டுமே திரும்ப திரும்ப சுட்டி காட்டி அவளை காயப்படுத்தியவார்கள்தான் அதிகம்.
அதுவும் குழந்தையை சுமந்து கொண்டே அவள் போராடி படித்து தேர்வு எழுதிய போது கூட எதற்கு உனக்கு தேவையில்லாத வேலை என்று எதிர்மறையாக பேசி அவள் நம்பிக்கையை உடைதவர்கள்தான் பலரும்.
கார் வாங்கி கொண்டு பெருமையாக அவள் வீட்டிற்கு சென்ற போது கூட அவளுக்கு அதற்கான பாராட்டோ அங்கீகாரமோ கிடைக்கவில்லையே. அவமானம் மட்டுமே மிஞ்சியது. ஆதலாலேயே ஜானவி இதுவரை தன்னை தோற்று போனவளாகவே அடையாளப்படுத்தி கொண்டாள்.
ஆனால் இன்று செழியனின் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் நேர்மறை பக்கங்களை அவளுக்கே காட்டியது. வெற்றியும் கூட பிறரால் பாரட்டப்படும் போது மட்டும்தான் மதிப்பு.
ஜானவிக்கு மனம் நெகிழ்ந்து போனது. அதற்கு பிறகு ஒரு வார்த்தை கூட பேசாமல் உண்டு முடித்தாள். சந்தோஷத்தில் வார்த்தைகள் வருவதில்லை அல்லவா?
அவன் உண்டபடி, “என்னாச்சு ஏன் சைலன்ட் ஆகிட்டீங்க?” என்று கேட்க,
“ம்ச்… சாப்பாட்டோட டேஸ்ட் அப்படி?” என்று அவனை மெச்சிவிட்டு,
“எப்படி உங்களால இவ்வளவு டேஸ்டா சமைக்க முடிஞ்சுது செழியன்?” என்று அவள் ஆர்வமாக கேட்டாள்.
“சிம்பிள்… எந்த வேலை செஞ்சாலும் அதை ரசிச்சு நேசிச்சு செஞ்சா அது நல்லா வந்திட போகுது” என்றவன் சொல்ல அவனை சீரியஸான முகபாவத்தோடு ஏறிட்டு பார்த்து,
“பிலாசஃபி நம்பர். இருநூற்றி முப்பதி எட்டு” என்றாள்.
“இது பிலாசிஃபியா?” என்று செழியன் முறைக்க,
“பின்ன… சமையல் எப்படி செஞ்சீங்கன்னு கேட்டா… அதை இப்படி கத்துக்கிட்டேன்… இப்படியெல்லாம் செஞ்சேன்னு சொல்வீங்களா? அதை விட்டுவிட்டு நேசிச்சேன்… ரசிச்சேன்னு சொன்னா… கடுப்பாகாது…
இன்னைக்கு மிஷின்ஸ் கூட சமைக்குது… அதெல்லாம் கூட நல்லாத்தான் இருக்கு… இதுல என்ன ரசிக்கிறதுக்கும் நேசிக்கிறதுக்கும் இருக்கு… சத்தியமா உங்க பிலாசஃபி எனக்கு புரிய மாட்டேங்குது” என்றாள்.
“கரெக்ட்! என் பிலாசபி உங்களுக்கு புரியாது… அதே போல உங்க மெட்டீரியலிஸ்டிக் மென்டாலிட்டி எனக்கு வராது… இதுல ரெண்டு பேரும் வாழ்க்கை பூரா எப்படி சேர்ந்திருக்க போறோமோ?” என்றவன் கடுப்பாக கேட்டு கொண்டே உண்டு முடித்து எழுந்து கொள்ள,
“சிம்பிள்… நம்ம குழந்தைகளுக்காக” என்று ஜானவி வெகுஇயல்பாக பதிலளித்தான். சட்டென்று அவள் வார்த்தைகளை கேட்டு செழியன் நின்று திரும்பினான். அவளை ஆழமாக ஊடுருவி பார்த்து,
“இப்ப என்ன சொன்னீங்க?” என்று கேட்டான்.
“நம்ம குழந்தைகளுக்காகன்னு” என்று அவள் சொல்லும் போதே அவனின் வித்தியாசமான பார்வையும் அந்த வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தமும் புரிந்து லேசாக அவளின் குரலில் சுருதி இறங்க,
செழியன் அவளை பார்த்து மென்னகை புரிந்துவிட்டு பதிலேதும் பேசமால் அங்கிருந்து அகன்றான்.
‘நாம நார்மலாத்தானே… அதுக்கு என்ன நின்னு ஒரு சிரிப்பு’ என்று தனக்குதானே கேட்டு கொண்டபடி மேஜையை சுத்தம் செய்தாள். வேலையெல்லாம் முடிந்தது.
ஜானவிக்கு இப்போது அடுத்த நிலை சங்கடம் உருவாகியிருந்தது. ஒரே அறையில் படுத்து கொள்ள வேண்டுமா? பேசாமல் அவள் இருந்த வீட்டிற்கு மீனாவை அழைத்து கொண்டு அங்கே போய் படுத்து கொள்ளலாம் என்று ஒரு யோசனை எழுந்தது.
செழியனிடம் சொன்னால் அவன் மறுப்பு தெரிவிக்க மாட்டான் என்று எண்ணி கொண்டிருக்க, அன்புவும் மீனாவும் சேர்ந்து அவள் எண்ணத்தை முறியடித்துவிட்டார்கள்.
அவர்கள் இருவரும் சேர்ந்து தூங்க போகும் அந்த இரவை அத்தனை ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆர்பாட்டம் கலாட்டா என்று அந்த அறையே கத்தலும் கூச்சலுமாக அதகளப்பட்டு கொண்டிருக்க, செழியன் அவர்களின் அந்த சேட்டைகளை ரசித்து கொண்டிருந்தானே ஒழிய கட்டுபடுத்த எந்தவித முயற்சியும் செய்யவில்லை.
இன்னும் கேட்டால் அவர்களோடு அவனும் சேர்ந்து கொண்டான்.
ஜானவி குழந்தைகளுக்கு குடிக்க பால் எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தவள் அவர்களின் சத்தத்தில் எரிச்சலாகி, “இப்ப எதுக்கு இவ்வளவு சத்தம்… நீங்க கத்தறது இந்த அப்பார்ட்மெண்ட் முழுக்க கேட்கும் போல… ஒழுங்கா பாலை குடிச்சிட்டு படுங்க” என்று அதட்டினாள்.
அத்தோடு இருவரும் கப்சிப்பென்று ஜானவி கொடுத்த பால் டம்ளரை வாங்கி அருந்த அவள் செழியனை பார்த்து, “என்ன செழியன்? நீங்களும் இவங்களோடு சேர்ந்துக்கிட்டு” என்று கேட்க,
“ஹேப்பியா இருக்கிறது தப்பா? நீங்க ஸ்ட்ரிக்ட் ஆபீசரா இருந்துட்டு போங்க… நான் ஜாலியா இருந்துட்டு போறேன்” என்றான் சாதரணமாக.
அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என்று முடித்து கொண்டு, “சரி… உங்களுக்கும் பால் எடுத்துட்டு வரவா? நீங்க குடிப்பீங்களான்னு தெரியல” என்று அவள் சந்தேகமாக இழுக்க,
“உஹும் வேண்டாம்… நான் குடிக்க மாட்டேன்” என்று அவன் மறுத்துவிட்டான்.
அதேநேரம் மீனாவும் அன்புவும் பாலை அருந்திவிட்டு டம்ளரை திரும்ப தரவும் அதனை வாங்கி கொண்டு வெளியேறிய மாத்திரத்தில் மீண்டும் சத்தம் எழுந்தது.
அவள் திரும்பி வர மூவரும் ஒன்றாக அமைதியாகிவிட்டனர். ஜானவி சிரித்து கொண்டே அவர்கள் படுத்திருப்பதை பார்த்தாள்.
மீனாவும் அன்புவும் இடையில் படுத்து கொண்டிருந்தனர். அதுவும் அந்த வாண்டுகள் இடவாரியாக ஒதுக்கீடு செய்துவிட்டுத்தான் படுத்திருந்தார்கள்.
மீனு செழியன் அருகில் என்றும் அன்பு ஜானவி அருகில் என்றும் பேசி முடிவெடுத்திருக்க, ஜானவியும் அவர்கள் சந்தோஷத்தை கெடுக்க விருப்பமில்லாமல் அன்புச்செல்வி அருகில் படுத்து கொண்டுவிட்டாள். அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அவளும் எதையும் செய்ய விழையவில்லை. அந்த படுக்கையும் அகலமாக இருந்ததால் அவர்கள் நால்வருக்கும் அது போதுமானதாக இருந்தது.
இருப்பினும் செழியன், “உங்களுக்கு இடம் பத்துதா ஜானவி?” என்று அவள் சௌகரியத்தை கேட்க,
“ஆன்… இருக்கு” என்று அவளும் பதில் சொல்ல அந்த அறையில் அமைதி சூழ்ந்தது.
சில நிமிடங்களில் எல்லோரும் உறங்கிவிட ஜானவிக்குத்தான் அந்த இடமாற்றம் சற்றே பழக்கப்படாத உணர்வை கொடுத்தது. அவள் உறங்க வெகுநேரம் பிடித்தது. இயல்பாகவே தாமதமாக எழுந்திருப்பவள் அடுத்த காலை மிகவும் தாமதமாக எழுந்து கொண்டாள்.
நேரத்தை எப்போது போல அதிர்ச்சியாக பார்த்துவிட்டு,
“அலாரம் அடிச்சாலே நம்ம எழுந்திருக்க மாட்டோம்… இப்ப அதுவும் இல்ல” என்று அவள் புலம்பி கொண்டே செழியன் அங்கே இல்லாததை பார்த்து, “எப்போ எழுந்திருச்சிருப்பாரு” என்று எண்ணியபடி குளியலறையிலுக்குள் சென்று முகம் கழவி ஒரு துண்டை எடுத்து துடைத்து கொண்டே வெளியே வந்தாள்.
செழியன் சமையலறையில் இருந்தான். அவனே குழந்தைகளுக்கும் அவனுக்கும் காலை மற்றும் மதிய உணவையும் பள்ளிக்கு செல்ல வேண்டி தயார் செய்து வைத்திருந்தான்.
“இந்த மனுஷன் ஏன் இவ்வளவு பொறுப்பா இருக்காரு? நமக்கும் இவரோட பொறுப்புணர்ச்சிக்கும் கொஞ்சமும் ஒத்து போகாது” என்று எண்ணி கொண்டே,
“என்ன செழியன்… என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல” என்றவள் கேட்க,
“நீங்க புது இடம்… லேட்டா தூங்கியிருப்பீங்க சோ உங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு” என்று அவன் சொல்ல,
“நீங்க சொன்ன லாஜிக் சரிதான்… ஆனா நான் எப்ப தூங்கினாலும் இந்த டைமுக்குத்தான் எழுந்திருப்பேன்… பேஸிக்காவே எனக்கு மார்னிங் சீக்கிரம் எழுந்திருக்கிற பழக்கமே இல்ல” என்றாள்.
“அதான் மீனு எப்பவும் லேட்டோ?”
“அதெல்லாம் அப்போ… இப்ப இல்ல… அந்த பிரின்ஸ்பல் டிச்ப்ளின் டிக்னிடி டெகோரம்னு எப்போ கிளேஸ் எடுத்து அட்வைஸ் பண்ணியே என்னை கொன்னாங்களோ அன்னைக்கே திருந்திட்டேன்… எல்லாத்துக்கும் மேல ஏதோ உலக மகா தப்பை செஞ்ச மாறி லெட்டர் வேற எழுதி கொடுக்க சொன்னாங்க பாரு” என்றவள் கடுப்பாக சொல்ல செழியன் சிரித்து கொண்டே அவள் சொல்வதை கேட்டான்.
ஜானவியோ பேசி கொண்டே டென்ஷன் நிலைக்கு மாறி,
“ஐயோ! டைம் ஆச்சு நான் போய் பசங்கள குளிக்க வைச்சு யூனிபார்ம் போட்டு ரெடி பண்றேன்… நீங்களும் போய் ஸ்கூலுக்கு குளிச்சிட்டு ரெடியாகுங்க… அப்பதான் டைமுக்கு போக முடியும்” என்று படபடப்பாக சொல்லி கொண்டே அவள் வெளியேற போனாள்.
“இருங்க ஜானவி… காபி குடிச்சிட்டு போங்க” என்றவன் அவளுக்காக தயாரித்த காபியை நீட்ட,
“இல்ல டைமாச்சு… நான் அப்புறம் குடிக்கிறேன்” என்று பரபரத்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் ஆகல… நீங்க குடிங்க” என்று சொல்லி அவள் கையில் காபி கோப்பையை அவன் திணிக்கும் போதே,
“தேங்க்ஸ்” என்றாள்.
அவன் அந்த காபி கோப்பையை எடுத்து கொண்டு, “தேங்க்ஸ் சொன்னா காபி கட்டு… போய் பசங்கள ரெடி பண்ணுங்க” என்றான்.
“சரி தப்புதான் சொல்லல… அதுக்காக கொடுத்ததை இப்படி திருப்பி வாங்கினா எப்படி?” என்று அவள் பரிதபமாக கேட்க,
“இனிமே இந்த தேங்க்ஸ் சொல்ற பிசினஸே வேண்டாம்… சொல்லிட்டேன்” என்று கண்டிப்பாக சொல்லி அந்த காபி கோப்பையை அவன் திருப்பி தர,
அவள் அதனை வாங்கி பருகி கொண்டே, “ட்ரை பண்றேன்” என்று சொல்லி வெளியேறிவிட்டாள்.
அதன் பிறகு எப்போது போல பரபரப்பு சற்றும் குறையாமல் அந்த வாண்டுகளை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்து அவர்களுக்கு காலை உணவு தந்து செழியனோடு பள்ளிக்கு அனுப்பிவைப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றானது .
அவள் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டு கொண்டே உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டு எப்போதும் போல் செய்திதாளில் வரும் பொருளாதார பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்.
செழியன் ஜானவியின் இரண்டாவது திருமணத்தின் முதல் நாள் காதலோடு அல்லாமல் கடமைகளோடு தன் பயணத்தை செவ்வனே தொடங்கியது.