Paadal thedal – 16(2)

Paadal thedal – 16(2)

 

செழியனின் குரல் கேட்டு அவன் புறம் திரும்பியவள், “ப்ளீஸ் செழியன் அவரை போக சொல்லுங்க” என்றாள்.

“அதெப்படி ஜானவி… வீட்டுக்கு வந்தவரை போய்… அதுவும் அவர் உங்களோட அப்பா” என்று செழியன் தாழ்வான குரலில் சொல்ல,

“அப்பா… அந்த உறவுக்கெல்லாம் அந்த மனுஷனுக்கு அர்த்தம் தெரியுமா?” என்றவள் கடுகடுப்பாய் கேட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

“உங்க கோபம் புரியுது… ஆனா இப்போ அவர்  நடந்ததுக்காக எல்லாம் மனசை வருந்தி உங்ககிட்ட மன்னிப்பு  கேட்கலாம்னுதான் வந்திருக்காரு” என்றவன் பொறுமையாக எடுத்துரைக்க,

“அதெப்படி? என் கனவு சந்தோஷம் சுயமரியாதைன்னு எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கிட்டு… இப்போ மன்னிப்பு கேட்கலாம்னு வந்திருக்காராமா… நான் என்ன மனுஷியா இல்ல ஜடமா?” என்றவள் உச்சபட்ச கோபத்தோடு கேட்ட அடுத்த நொடி உடைந்து ஆழ ஆரம்பித்தாள்.

“ஜானவி ப்ளீஸ் அழாதீங்க” என்றான் அவனும் மனவருத்தத்தோடு!

அவள் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு, “முடியல செழியன்… அன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா வீட்டுக்கு போனேன் தெரியுமா… எல்லோரும் சேர்ந்து என்னை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி அசங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க… அதுவும் குழந்தைங்க முன்னாடி…

ஏன்… அப்போ இந்த மனுஷனும் அவங்க கூட சேர்ந்துக்கிட்டு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சொல்லி… ச்சே! இப்படி எல்லாம் பேசினவங்கள எப்படி மன்னிக்க சொல்றீங்க… என்னால முடியாது… சத்தியமா முடியாது… நான் சாகிற வரைக்கும் இந்த அவமானத்தை என்னால மறக்கவும் முடியாது… மன்னிக்கவும் முடியாது” என்றவள் தீர்க்கமாக உரைக்க,

செழியன் மௌனமாக அவள் வேதனையை உள்வாங்கினான்.

மனதளவில் அவள் ரொம்பவும் காயப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு அத்தனை சீக்கிரத்தில் அவள் கோபம் சரியாகாது என்பது புரிய மேலே எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே வந்தான்.

முகப்பறையில் பாண்டியன் சங்கரனோடு சோபாவில் அமர்ந்து உரையாடி கொண்டிருக்க செழியன் தயக்கத்தோடு அவர்கள் முன்னே வந்து,

“ஜானவி கோபமா இருக்காங்க”என்று பேச ஆரம்பிக்கும் போதே,

“எனக்கு தெரியும் தம்பி… அவ நிச்சயம் என்னை மன்னிக்க மாட்டா… ஏன்னா நாங்க செஞ்ச காரியம் அப்படி” என்று அவர் தலைகுனிவாய் பதில் உரைத்தார்.

அவர் அருகில் அமர்ந்திருந்த பாண்டியன், “விடுங்க சம்பந்தி… எல்லாம் காலப்போக்கில சரியாகிடும்” என்க,

“அப்பா சொல்றதும் சரிதான்… கொஞ்ச நாள் போனா ஜானவி மனசு மாறும்” என்றான் செழியன்.

சங்கரன் தலையசைத்து அவர்கள் சொன்னதை கேட்டு கொண்டாலும் மனதளவில் அவருக்கு அந்த நம்பிக்கை இல்லை.

அப்போது சந்தானலட்சுமி காபியோடு வர, “இல்லங்க எனக்கு வேண்டாம்… நான் கிளம்பறேன்” என்று சங்கரன் சொல்லி மறுக்க,

“அப்படி எல்லாம் சொல்ல கூடாது… சம்பந்தி நீங்க முதல் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க” என்றார் பாண்டியன்.

அதேசமயம், “எடுத்துக்கோங்க” என்று செழியனும் சந்தானலட்சுமியும் சொல்ல சங்கரனுக்கு சங்கடமாய் போனது.

பாண்டியன் உடனே அந்த காபியை எடுத்து அவர் கையில் திணித்து,

“ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் உறவு விட்டு போகுமா? நீங்க ஜானவியோட அப்பா… எனக்கு சம்பந்தி… அப்படி எல்லாம் எதுவும் சாப்பிடாம உங்களை அனுப்ப முடியாது…  அது மரியாதையும் இல்ல” என்று பாண்டியன் முடிவாய் உரைக்க அதன் பின் சங்கரனும் மறுக்க மனமில்லாமல் வாங்கி பருகினார்.

அதேநேரம் செழியனின் குடும்பம் பழகும் விதத்தை பார்த்து சங்கரனுக்கு பெருமதிப்பு உண்டானது. செய்த தவறு ஒரு புறம் அவரை உள்ளூர வாட்டி வதைத்தாலும் மகள் நல்ல இடத்தில் வாக்கப்பட்டு இருக்கிறாள் என்று மனதில் நிம்மதி உண்டாகியிருந்தது.

சங்கரன் புறப்படும் தருவாயில் ஜானவியை எதிர்பார்த்தபடியே வீட்டின் வாயிலை தாண்டினார். ஆனால் அவள் அறையை விட்டு வெளியேவே வரவில்லை.

செழியன் அவரை வழியனுப்பும் போது, “நீங்க கவலைப்படாதீங்க ப்பா… நான் ஜானவியை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைச்சிட்டு வரேன்” என்று சொல்ல,

சங்கரன் கண்களில் நீர் தளும்பி நின்றது.

“இல்ல தம்பி… அவ என்னை மன்னிக்கலானாலும் பரவாயில்லை… அவ சந்தோஷமா இருந்தா போதும்” என்றவர் செழியன் கரத்தை பற்றி கொண்டு,

“ஜானுவை நல்லா பார்த்துக்கோங்க தம்பி… இனிமேயாச்சும் அவ சந்தோஷமா இருக்கட்டும்” என்று கண்ணீர் மல்க உரைத்தார்.

செழியனுக்கு என்ன பதில் சொல்வதேன்றே தெரியவில்லை. ஒரு நொடி திகைத்து நின்றவன் பின் அவர் முகம் பார்த்து, “நிச்சயம் நான் ஜானவியை சந்தோஷமா பார்த்துப்பேன் ப்பா” என்று உறுதியளித்தான்.

சங்கரன் சென்ற பிறகும் ஜானவி இயல்புநிலைக்கு திரும்பவில்லை. யாரிடமும் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லை. குழந்தைகளிடம் கூட!

செழியனும் அவள் மனமறிந்து தன் தந்தை தாயிடம் இது குறித்து ஜானவியிடம் பேச வேண்டாமென்று சொல்லியிருந்தான்.

எப்போதும் போல் உறங்கும் முன்னர் அன்புவும் மீனாவும் தங்கள் அரட்டைகளை செய்துவிட்டு உறங்கி போயினர்.

ஆனால் ஜானவி அவற்றையெல்லாம் கண்டும் காணாதவளாக திரும்பி படுத்து கொண்டிருக்க, குழந்தைகள் உறங்கிவிட்டனர் என்பதை உறுதி செய்து கொண்டு செழியன்,

“ஜானவி” என்று மெதுவாக அழைத்தான். பதிலில்லை.

அவன் மனதிற்கு என்னவோ அவள் உறங்கியிருக்க மாட்டாள் என்றே தோன்றியது.

அந்த அறையே மௌனத்தை சுமந்து கொண்டிருந்த போதும் மெலிதாக அவள் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது.

“அழறீங்களா ஜானவி” என்று அவன் வினவ அப்போதும் அவளிடமிருந்து பதிலில்லை. ஆனால் அவள்  படுத்திருந்தபடியே தன் விழிகளை அவசரமாக துடைத்து கொண்டாள்.

“ஜானவி” என்றவன் அழுத்தமாக அழைக்க,

அவள் முகத்தை துடைத்து கொண்டு எழுந்தமர்ந்து, “சொல்லுங்க” என்றாள் கம்மிய குரலில்.

இருவரும் படுக்கையில் அவரவர்கள் இடத்தில் அமர்ந்து கொண்டு, “என்னாச்சு ஜானவி?” என்றவன் கேட்க,

“உம்ஹும் ஒண்ணும் இல்லயே” என்று தலையசைத்து மறுத்தாள் அவள்!

“அப்புறம் ஏன் அழறீங்க?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இல்லையே” என்று அவள் மீண்டும் தன் முகத்தை துடைத்து கொள்ள,

“என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?” செழியன் இறக்கமாக கேட்டான்.

“என்ன சொல்லணும்?”

“என்ன கஷ்டமா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க… ஏன் உங்களுக்குள்ளயே எல்லா கஷ்டத்தையும் போட்டு புழுங்குக்கிறீங்க” என்றவன் கேட்கவும் அவனை மௌனமாக பார்த்துவிட்டு அவள் தலையை திருப்பி கொண்டாள்.

“சந்தோஷத்தில மட்டும் பங்குப்போட்டுக்கிறது இல்ல நட்பு… கஷ்டத்திலயும் பங்கு போட்டுக்கிறதுதான் உண்மையான நட்பு” என்று இடைவெளிவிட்டவன்,

“அதுவுமில்லாம நான் உங்க பெட்டர் ஹாஃவ் இல்லையா ஜானவி?!”  என்று அவன் மெல்லிய புன்னகையோடு வினவ ஜானவி அவன் புறம் அதிர்ச்சியாக திரும்பினாள்.

“இல்ல…  நம்ம பொறுப்புகளையும் கடமைகளையும் பங்குப்போட்டுக்கிட்ட விதத்தில நாம இப்போ பெட்டர் ஹாஃவ்தானே… அதை சொன்னேன்” என்று செழியன் சொல்ல,

ஜானவி சலிப்பாக முகத்தை திருப்பி கொண்டு, “ப்ச்… எனக்கு எந்த கஷ்டமும் இல்ல… நான் இங்கே சந்தோஷமாதான் இருக்கேன்…  மாமாவும் அத்தையும் என்னை அந்தளவுக்கு நல்லா பார்த்துக்கிறாங்க… இன்னும் கேட்டா முன்ன விட நான் ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கேன்…” என்றவள்  சொல்லும் போதே செழியன் முகத்தில் புன்னகை அரும்பியது.

ஜானவி மேலும், “இந்த மனுஷன் அதை கெடுக்க வந்துட்டாரு” என்று பல்லை கடித்து கொண்டு உரைத்தாள்.

“அப்படி சொல்லாதீங்க ஜானவி… என்னதான் இருந்தாலும் அவரு உங்க அப்பா”

“உங்களுக்கு தெரியாது செழியன்… அவராலதான் என் வாழ்க்கையை நாசமாகிடுச்சு” என்று ஜானவி வெறுப்பாக பதிலுரைக்க,

“தப்பு ஜானவி… எந்த அப்பாவும் பொண்ணோட வாழ்க்கையை நாசமா போகணும்னு நினைக்க மாட்டாங்க… ஏதோ சூழ்நிலை… அப்படி ஒருத்தரை நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு… அவரு மட்டும் என்ன தெரிஞ்சா அப்படி ஒரு கல்யாணத்தை உங்களுக்கு செஞ்சி வைச்சாரு” என்று பொறுமையாக எடுத்துரைத்தான்.

“சரி… எனக்கு நடந்த கல்யாணத்தை என் தலைவிதின்னு நான் நினைச்சுக்கிறேன்… ஆனா பெத்த பொண்ணை அப்பாவும் அம்மாவும் சந்தேகம் படலாமா செழியன்?” என்று அவள் நிதானமாக கேட்க,

“அது தப்புதான்… நான் இல்லைங்கல… ஆனா அதுக்காக அவங்க உறவே வேண்டாம்னு சொல்றதெல்லாம்” என்றவன் பேசி கொண்டிருக்கும் போதே இடைமறித்தாள்.

“வேண்டாம் செழியன்… எனக்கு அவங்க யாரும் வேண்டாம்… எனக்கு என் பசங்க மட்டும் போதும்” என்று சத்தமாக உரைக்க அன்புச்செல்வி தூக்கத்திலிருந்து சிணுங்கி,

“ஜானும்மா” என்றாள்.

“ஒண்ணும் இல்லடா நீங்க தூங்குங்க” என்று ஜானவி அவளை தட்டி மீண்டும் உறங்க வைத்தாள்.

செழியன் மௌனமாக அமர்ந்திருக்க, “படுங்க செழியன்… அன் ப்ளீஸ் இனிமே நாம இதை பத்தி பேச வேண்டாம்” என்றாள்.

“சரி பேச வேண்டாம்… ஆனா ஒரு விஷயம்” என்றவன்,

“ப்ளீஸ் உங்களுக்கு என்ன கஷ்டம்னாலும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கோங்க… இப்படி தனியா ஆழாதீங்க” என்றான்.

ஜானவி திகைப்போடு அவனை பார்க்க

செழியன் அவளை ஆழ்ந்து பார்த்து, “உங்களுக்கு பசங்க மட்டும் போதுமா இருக்கலாம்… ஆனா எனக்கு நம்ம பசங்களோட சேர்த்து நீங்களும் வேணும் ஜானவி…

இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில நீங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும்…  இனிமே நீங்க சந்தோஷமா இருக்கணும்… நான் உங்க கூட இருக்கிற வரைக்கும் உங்களை சந்தோஷமா பார்த்துப்பேன்… நீங்க தண்ணியை குடிச்சிட்டு நிம்மதியை படுத்து தூங்குங்க” என்றான்.

அவன் பேசி முடிக்கும் வரை இமைக்காமல் அவனையே பார்த்திருந்தவள் அவன் சொன்னது போல தண்ணீரை அருந்திவிட்டு படுத்து கொண்டாள்.

செழியன் அவளை பார்த்து மெல்லிதாக புன்னகைத்துவிட்டு படுத்து விழிகளை மூடி கொள்ள ஜானவிக்கு உறக்கம் வரவில்லை. வெறும் நட்போடு மட்டும் சொன்ன வார்த்தைதானா என்ற யோசனை அவளுக்குள்!

அவன் முகத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். தனிமையும் வெறுமையும் அவளுக்கு பழகி போன ஒன்றுதான். ஆனால் திடீரென்று துணையாகவும் ஆதரவாகவும் அவன் நிற்கிறேன் என்று சொன்னது அவள் மனதை நெகிழ செய்தது.

‘எப்பவும் என் கூடவே இருப்பாங்களா செழியன்’ என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் அளவுக்காய் கேட்டு கொண்டாள்.

அவன் காதல் ரஞ்சனிக்கு மட்டுமே உரியது என்று தீர்க்கமாக தெரிந்த போதும் அவள் மனம் அவன் மீது காதல் வயப்படுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

ரஞ்சனியின் இடத்தை பிடிக்க முடியாமல் போனாலும் மனைவி என்ற ஸ்தானத்தோடு  அவனுடன் இருப்பதே தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று மனதை தேற்றி கொண்டு கண்ணயர்ந்தாள்.

//கண்ணே கனியே உன்னை கைவிடமாட்டேன்…

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலை கதிரின் மேலே

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

குழந்தை போல ஒரு வைரம் போலே

தூய்மையான என் சத்தியம் புனிதமானது.//

error: Content is protected !!