paadal thedal- 19(1)

19

ஏக்கம்

அன்று விடிந்து சூரியன் அவர்கள் அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்க்க,  அந்த வெளிச்சம் முகத்தில் பட்ட நொடி ஜானவி விழித்து கொண்டாள். படுக்கையில் அவள் எழுந்தமர்ந்து கொள்ள இரவு நடந்த விஷயங்கள் யாவும் அவள் நினைவுகளில் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றியது. அந்த நொடி அவளை வெட்கம் சூழ்ந்து கொள்ள, இப்போது நினைத்தாலும் செழியன் கொடுத்த முத்தம் அவளை போதைநிலைக்கு இழுத்து சென்றது.

மயங்கிய நிலையில் உறக்கத்திலிருந்த தன்னவனை பார்வையாலேயே வருடி கொண்டிருந்தவள், அவன் என்றுமில்லாத திருநாளாக அப்படி அசந்து தூங்குவதை கண்டு அதிசியத்தாள்.

அதுவும் விடுமுறை நாட்களிலும் கூட நேரத்தோடு எழுந்து கொள்ளும்  அவன் இன்னும் விழித்து கொள்ளாதது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவளுக்கு!

‘நம்ம தூங்கின பிறகும் இவர் முழிச்சிட்டு இருந்திருப்பாரோ… இருக்கும்… ப்ச் பாவம் செழியன் நீங்க… உங்களுக்காகவாச்சும் எதாச்சும் நடந்திருக்கலல்ல்லாம்’ என்றவள் அந்த லாமை இழுக்க, அது அவள் மனதிலும் இருந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான்.

செழியன் அப்போது புரண்டு படுக்க, ‘முழிச்சிட்டாரோ… ஐயோ! நம்ம இவர் தூக்கத்தில பேசனா கூட கேட்டிடும்… உஹும் எதுவும் பேச கூடாது’ என்று சொல்லி கொண்டே அவசரமாக குளியலறைக்குள் புகுந்து முகத்தை அலம்பி கொண்டு அவள் வெளியே வர, அவன் படுக்கையில் இல்லை. எழுந்துவிட்டிருந்தான். ஆனால் அதை அவள் கவனிக்கவில்லை.

வெளியே வந்ததும்அவள் பார்வை நேராக கடிகாரத்தின் மீதுதான் விழுநத்து.  ‘ஐயோ டைமாச்சு… டைமாச்சு’ என்றுஅந்த நொடியே அவள்  பதட்டமாகி தலையில் அடித்து கொண்டு சமையலறைக்குள் நுழைய போக உள்ளே செழியன் நின்றிருந்தான்.

மேலே செல்லாமல் அவனை பார்த்து அப்படியே அவள் உறைந்து  நிற்க செழியன் அவளை பார்த்து கல்மிஷ்மாக புன்னகைத்து, “என்ன… வேகமா வந்துட்டு  ஸ்பீட் ப்ரேக்ல ஏறி இறங்கின கார்  மாறி அப்படியே ஜெர்காகி நிற்கிறீங்க” என்று கேட்க,

“அது… நீங்க தூங்கிட்டுதானே இருந்தீங்க” என்றாள்.

“நீங்க எழுந்த சத்தம் கேட்டு எனக்கும் முழிப்பு வந்துடுச்சு… என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எழுந்திருக்க லேட்டாயிடுச்சு வேற” என்றவன் சொல்லவும்,

“ஆமா ஆமா லேட்டாதான் ஆயிடுச்சு” என்று அவள் அவன் வார்த்தைகளை அப்படியே ஆமோதித்தாள்.

“அதுக்கு  நீங்கதான் காரணம்” என்றவன் கோபமாக சொல்ல, “நான் என்ன பண்ணேன்?” என்று பரிதபாமாக கேட்டாள்.

“என்ன பண்ணேனா? குட் நைட் சொல்லிட்டு மேடம் நிம்மதியா  தூங்கிட்டீங்க” என்றவன் சொல்ல, அவள் இதழோரம் வந்த புன்னகையை அவள் சிரம்மப்பட்டு அடக்கி கொண்டாலும் செழியன் அதை பார்த்துவிட்டானே!

அவன் மெல்ல அவளை நெருங்கவும் அவள் பின்னே காலெடுத்து வைத்து,

“அத்தை வந்திற போறாங்க… நீங்க போங்க… வேலை இருக்கு… லேட் வேற ஆயிடுச்சு” என்று படபடப்பாக கூறினாள்.

அவன் சத்தமாக சிரித்து, “இப்போ என்ன பண்ணிட்டாங்க உங்களைன்னு இப்படி டென்ஷ்ன ஆகுறீங்க” என்றவன் திரும்பி ஒரு கோப்பையை எடுத்து அவள் கைகளில் வைத்து,

“உங்களுக்கு காபி போட்டேன்… அதை கொடுக்கலாம்னுதான்” என்று அவன் சொல்ல அவள் அசடு வழியும் புன்னகையோடு அவனை பார்த்தாள்.

செழியன் அவளிடம், “நீங்க நைட் வேற சாப்பிடவே இல்ல… காலையில எழுந்ததும் கிச்சனுக்குள் வந்த  வேலை செய்ற டென்ஷன்ல ஒரு காபி கூட போட்டு குடிக்க மாட்டீங்க… அதான் நான் எழுந்து வந்து போட்டேன்… குடிச்சிட்டு பொறுமையா வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க… அப்புறம் அவசரம் அவசரமா லஞ்ச எல்லாம் ரெடி பண்ண வேண்டாம்… நான் மதியம் வந்து பசங்களுக்கும் எனக்கும் லஞ்ச் எடுத்துட்டு போறேன்” என்று சொல்ல,

“இதுவும் நல்ல ஐடியாதான்… ஆனா நீங்க எதுக்கு வெயில்ல வந்துக்கிட்டு… நானே ஸ்கூலில் வந்து கொடுத்திடுறேனே” என்றதும் அவளை பார்த்து முறைத்தவன், “நான் வரேன்னு சொன்னா வரேன்” என்று அதிகாரமாக சொன்னாலும் அந்த பார்வையில் விஷமம் இருந்தது.

அவனை குழப்பமாய் அவள் பார்க்க, “சரி நான் போய் பசங்கள ரெடி பண்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல,

“உங்களுக்கு காபி போட்டுக்கலையா” என்று கேட்டாள்.

“நான் பிரஷ் எல்லாம் பண்ணிட்டு வந்து குடிக்கிறேன்”

“சரி நான் போட்டு வைக்கிறேன்” என்று அவள் சொல்ல, “அதெல்லாம் வேண்டாம்… நானே வந்து போட்டுக்கிறேன்” என்று சொல்லி கொண்டே அவன் சென்றுவிட,

அவள் அவன் போட்டு தந்த காபியை அருந்தி கொண்டே, ‘அதென்ன நானே வந்து போட்டுகிறேன்னு போறாரு… நான் போட்டு தர காபி அவ்வளவு கேவலமாவா இருக்கு… ஒருவேளை அப்படிதான் இருக்குமோ’  என்று அவள் தோள்களை குலுக்கி தீவிரமாக யோசித்து கொண்டிருந்த போது சந்தானலட்சுமி உள்ளே வந்து,

“டைமாச்சு டைமாச்சு… வெளிய போயிட்டு வந்ததுல அடிச்சி போட்ட மாறி தூங்கிட்டேன் ம்மா… இப்பதான் எழுந்து டைமை பார்த்தேன்” என்று அவர் பரபரக்க,

“டென்ஷன் ஆகாதீங்க அத்தை… டிபன் மட்டும் ரெடி பண்ணா போதும்… லஞ்ச் அவர் அப்புறமா வந்து எடுத்துட்டு போறேன்னு சொன்னாரு” என்று அவள் சொல்லவும் ஆசுவாசமாக மூச்சை விட்டவர்,

“அப்படியா நல்லதா போச்சு… ஆனா இதுக்குன்னு அவன் ஏன் மாங்கு மாங்குன்னு வரான்… நீ போய் குடுத்துட்டு வந்திர வேண்டியதுதானே” என்று அவர் சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்தது.

‘அதை சொன்னதுக்குத்தான் உங்க புள்ளை என்னை முறைச்சிட்டு போறாரே’ என்றவள் வாயிற்குள் முனக,

“என்னம்மா சொன்ன?” என்று சந்தானலட்சுமி அவள் முகத்தை பார்த்தார்.

“இல்ல அத்தை… உங்க புள்ளைக்கு எதாச்சும் வேலை இருக்குமாம்… அதான் வாராரு” என்று அவள் பூசி மொழுக அவர் தோளை குலுக்கி கொண்டு, “இருக்கும் இருக்கும்” என்றவர்,

“ஆமா அந்த வாண்டுங்க இரண்டும் நைட்டுஉங்க ரூம்ல வந்து படுத்துக்கிச்சா” என்று கேட்டார்.

“ஆமா அத்தை… உங்களை தூங்க வைச்சிட்டு அந்த வாலுங்க இரண்டும் இங்க வந்திருச்சு” என்று சொல்லி கொண்டே மாமியாருக்கு காபியை கலக்கியவள்,

“நீங்க காபி குடிங்க… வெறும் டிபன்தானே… நான் ரெடி பண்ணிக்கிறேன்” என்றாள் .

சந்தானலட்சுமி காபியை பருகி கொண்டு வெளியே வந்துவிட செழியன் அவரை பார்த்து, “ம்மா… காபி குடிச்சிட்டு பசங்கள எழுப்பி குளிப்பாட்டி விடுறீங்களா?” என்று கேட்க,

“நீ என்னடா பண்ண போற?” என்றார்.

“நான் காபி குடிக்க போறேன்… தலைவலிக்குது” என்றவன் சொன்னதும்,

“ஜானும்மா அன்புவுக்கு ஒரு காபி போட்டு கொடு… தலைவலிக்குதாம்” என்று ஊருக்கே கேட்பது போல் அவர் கத்த, “ஆ சரி அத்தை” என்று உள்ளிருந்தபடியே ஜானவியும் பதிலளித்தாள்.

அவன் எரிச்சலாகி, “இப்ப எதுக்கும்மா கத்திற… எனக்கு வேணும்னா நானே போய் கேட்டுக்க மாட்டேனாக்கும்” என்று சொல்லி கொண்டே அவன் சமையலறைக்குள் நுழைய ஜானவி அவனை பார்த்தும்,

“தலைவலிக்குதுன்னு சொல்லவே இல்லையே… இருங்க நானே காபி போட்டு தரேன்… நீங்க டிகாஷன் சக்கரை மட்டும் எவ்வளவுன்னு சொல்லுங்க… நான் கரெக்ட்டா போட்டுடிறேன்” என்று அக்கறையோடு சொன்னவளை ஆழ்ந்து பார்த்து இதழ்களை விரித்தவன்,

“எனக்கு வேண்டியதை கரெக்ட்டான அளவில நானே எடுத்துப்பேன்” என்று சொல்ல அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.

அவன் பார்வை வேறெதோ தொனியில் இருக்க அது என்னவென்று அவள் கணிப்பதற்கு முன்னதாக அவன் நினைத்ததை சாதித்திருந்தான்.

ஒற்றை கரத்தால் அவள் மெல்லிய இடையை தூக்கி அவள் இதழ்களில் முத்த மொழி பேசி கொண்டிருந்தான். அவன் கரம் அவளை விடும் வரை அவள் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை.

அவனின் முத்தத்தில் அவள் மொத்தமாக மயங்கி கிறங்கி போன நொடி அவளை தன் கரத்திலிருந்து விடுவித்த போதே அவள் அதிர்ச்சியாக அவன் விழிகளை பார்த்தாள்.

காதல் லீலைகள் புரியும் கண்ணனின் கள்ளத்தனத்தோடு நெருங்கியவன் தம் உதடுகள் கொண்டு அவள் காதோரம் உரசி,

“என் காபி டேஸ்ட் எப்படின்னு புரிஞ்சுதா ஜான.. வி” என்று ஒருவிதமாக சொல்லி அவன் விலகவும் செங்கொழுந்தாக அவள் முகம் சிவப்பேறி இருந்தது. அதனை படுரசனையாக அவன் ரசித்து பார்த்து கொண்டிருக்க அவள் ரொம்பவும் கஷ்ட்டப்பட்டு தன் வெட்கநிலையை மாற்றி கொண்டு,

“இதெல்லாம் ரொம்ப டூ மச்” என்று சொல்லி முறைத்தாள்.

“என்ன டூ மச்… ஒருவேளை காபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்துச்சோ… பிடிக்கலையா… வேணா ஸ்வீட்டா ஒன்னு ட்ரை பண்ணவா?” என்று கேட்டு அவன் நெருங்கவும் அவன் மார்பின் குறுக்கே கையை நிறுத்தி கொண்டு,

“என்ன நீங்க இப்படியெல்லாம்… போங்க ப்ளீஸ்” என்று கெஞ்சி கொண்டே அவனை தடுக்க அப்போது சந்தானலட்சுமி உள்ளே நுழைந்துவிட்டு,

“இன்னுமாடா காபி குடிக்கிற” என்று கேட்க இருவரும் சிரமப்பட்டு தங்கள் சிரிப்பை அடக்கி கொண்டனர்.

“குடிச்சிட்டேன் ம்மா” என்று செழியன் பதிலளிக்க,

ஜானவி சமையல்மேடை புறம் திரும்பி நின்று கொண்டு வெட்கப்பட்டு மௌனமாக சிரித்து கொண்டாள்.

சந்தானலட்சுமி மகனை பார்த்து, “காபி குடிக்கிறவன் வெளியே வந்து குடிக்க வேண்டியதுதானே டா” என்று கேட்க,

“காபி டேஸ்ட்டா இருந்துச்சா… அதான் இங்கேயே நின்னு அப்படியே” என்று அவன் சொல்ல ஜானவி தலையிலடித்து கொண்டாள்.

அடுத்த கேள்வியை சந்தானலட்சுமி கேட்பதற்கு முன்னதாக ஜானவி திரும்பி, “பசங்க எழுந்துட்டாங்களா அத்தை?” என்று பேச்சை மாற்ற,

“எங்கம்மா… இரண்டு பெரும் கும்பகர்ணீங்க மாறி தூங்குறாங்க… அதான் அன்புவை எழுப்ப சொல்லலாம்னு… அவளுங்க இரண்டு பேரும் அவங்க அப்பா குரலுக்குத்தான் எழுந்திருப்பாங்க” என்றார்.

ஜானவி அந்த வாய்ப்பை பிடித்து கொண்டு, “போங்க செழியன்… நீங்களே போய் பசங்கள எழுப்பி ரெடி பண்ணுங்க” என்று அவனை அங்கிருந்து துரத்தி விடும் எண்ணத்தில் அவள் சொல்ல அதனை புரிந்து கொண்டவன்,

“சரி சரி” என்று இயல்பாக சொன்ன அதேநேரம் அவன் அம்மா பார்க்காமல் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு வெளியேற, வெட்கத்தில் தலையை தாழ்த்தி கொண்டாள்.

அவன் சென்ற பிறகும் கூட  அவன் தந்த முத்தத்தின் சாரமும் போதையும் அவளுக்கு  இறங்கியாபாடில்லை. ஏதோ குருட்டாம்போக்கில் சமைக்கிறேன் என்று அவளின் கைகள் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் மனம் அவனிடத்தில் மொத்தமாக சரண்புகுந்தது.

அத்தகைய மனநிலையிலும் எப்படியோ கணவனையும் மகள்களையும் பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டாள். இருந்தும் அவள் மனம் பந்தய குதிரையாக இன்னும் படபடத்து கட்டுகடங்காமல் ஓட, அவளின் செயல், எண்ணம் என்று அனைத்திலும் அவனே பிரதானமாக இருந்தான்.

பின் அவள் குளித்து முடித்து மதிய உணவை தயார் செய்துவைத்து விட்டு சரவணன் ரேஷ்மாவோட தம் வேலைகளில் ஈடுப்பட்டாலும் மனதில் அவனுக்கான தவிப்புகள்!

செழியன் அவளிடம் கோபித்து கொண்டதிலிருந்து ஜானவி அவளின் அலுவல் வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டுவிட்டாள். சரவணனுக்கும் ரேஷ்மாவிற்கும் ஓரளவு தன் வேலைகளை பற்றிய நுணுக்கங்களை கற்று கொடுத்ததால் அவர்களே ஓரளவு எல்லாவற்றையும் கவனித்து கொண்டனர். அவர்களுக்கு தேவையான தகவல்களை பரிமாறுவது மற்றும் எப்படி எதில் முதலீடு செய்வது என்று யோசனைகள் கூறுவது மட்டுமே அவள் வேலையாக இருந்தது.

ஆனால் இன்று அந்தளவுக்கு கூட இல்லை. சுத்தமாக எதையும் கண்டுகொள்ளாமல் அவள் பாட்டுக்கு அமர்ந்திருந்தாள்.

அதுவும் செழியன் மதிய உணவிற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனாதால் நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்து கடுப்பானாள்.

“என்னாச்சு க்கா உங்களுக்கு?” என்று சரவணனும் ரேஷ்மாவும் கேட்குமளுவுக்காய் அவள் மனநிலை அப்பட்டமாக தெரிந்தது.

செழியன் வந்ததும் அவள் அங்கேதான் இருப்பாள் என்று யூகித்து நேராக வந்து கதவை தட்ட, அப்போது கதவை திறக்க எழுந்து கொண்ட சரவணனை அமர சொல்லிவிட்டு அவளே கதவை திறந்தாள்.

ஒருவரை ஒருவர் பார்த்த மாத்திரத்தில் இருவரின் முகமும் பிரகாசித்த அதேநேரம் சரவணன் வாசலை எட்டி பார்த்து, “ஒ! அப்போ சார் எப்போ வர போறாருன்னுதான் நீங்க டைம் பார்த்துக்கிட்டே இருந்தீங்களா?” என்று அப்படியே அவன் வத்தி வைக்க,

செழியன் முகம் மேலும் பிரகாசிக்க ஜானவி மாட்டி கொண்டதை காட்டி கொள்ளாமல் இருக்க, “அவன் உளறான்… நான் லண்டன் ஸ்டாக் மார்கெட் ஓபன் பண்ற டைமுக்காக பார்த்துட்டு இருந்தேன்” என்று சமாளிக்க, செழியன் அவளை பார்த்து புன்னகைத்தான். அவள் சொல்வது பொய்யென்று அவனுக்கு தெரியாதா என்ன?

ஜானவி அவனிடம், “லஞ்ச் எல்லாம் பேக் பண்ணி டேபிள் மேல வைச்சிட்டேன்” என்று அவள் சொன்ன நொடி, “ஏன் நீங்க வந்து எடுத்து தர மாட்டீங்களா?” என்று அவன் கேட்க,

“உள்ளே அத்தை இருக்காங்க… அவங்க எடுத்து தருவாங்க” என்று சொல்ல,

“வந்தவனுக்கு ஒரு காபி கூடபோட்டு தர முடியாதா?” என்றதும் அவள் அடக்கப்பட்ட புன்னகையோடு அவனை ஏறஇறங்க பார்த்து,

“மதிய வேளையில யாராச்சும் காபி குடிப்பாங்களா?” என்று கேட்டாள்.

“நான் குடிப்பேன்” என்றவன் அழுத்தி சொல்ல,

“அத்தை இருக்காங்க இல்ல… அவங்கள போட்டு தர சொல்லுங்க… என்னை விட நல்லா போட்டு தருவாங்க” என்று சொன்ன நொடி அவள் காலை மிதித்துவிட்டான்.

“ஆஆ…” என்ற அவள் கத்த அவன் கோபமாக அவளிடம், “போய் உங்க மார்க்கெட்டையே கட்டிக்கிட்டு அழுவுங்க” என்று சொல்லிவிட்டு அவன் திரும்பி தன் வீட்டிற்குள் புகுந்துவிட்டான்.  அப்போது அவள் கத்தியதை பார்த்து சரவணணும் ரேஷ்மாவும் என்னவென்று கேட்க,

ஒன்றுமில்லை என்று அவர்களிடம் சமாளித்துவிட்டு அவள் வீட்டிற்குள் நுழைய செழியன் மதிய உணவை எடுத்து கொண்டு வாசலை நோக்கி வந்தான். பாண்டியனும் சந்தானலட்சுமியும் முகப்பறையில் அமரந்திருக்க ஜானவி பார்வையாலேயே அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.

அவளிடம் இயல்பாக தலையசைத்துவிட்டு அவன் வாசலுக்கு வர அவன் பின்னோடு அவள் வழியனுப்ப வெளியேவர

அவன் அவள் புறம் திரும்பி ஏக்கமாக, “இல்லன்னும் இல்லாம… இருக்குனும் இல்லாம இந்த ரெண்டும்கட்டான் பீல் இருக்கே… ரொம்ப அவஸ்த்தையா இருக்கு ஜானு” என்றான்.

“ஜானுவா?” என்று கேட்டு அவனை வியப்பாக அவள் பார்க்க, “நான் ஜானுன்னு உங்களை கூப்பிட கூடாதா?” என்று அவன் கேட்க,

“சேச்சே அப்படியெல்லாம் இல்ல… நீங்க கூப்பிடுங்க… நீங்க எப்படி கூப்பிட்டாலும் எனக்கு ஒகேதான்” என்று வெட்கப்பட்டு அவள் கூற அவன் முகம் மலர்ந்தது.

“இதே இடத்தில நின்னுதான் என்னை பேரை கூட சொல்லி கூப்பிட கூடாதுன்னு யாரோ சண்டையெல்லாம் போட்டீங்க” என்று செழியன் கிண்டலாக சொல்ல,

“இப்ப எதுக்கு அதையெல்லாம் ஞாபக படுத்தறீங்க” என்று அவள் முகம் சுருங்கினாள்.

“சரி நான் பேசல” என்றவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, “நான் கிளம்பிறேன்… டைமாகுது… அப்புறம் லஞ்ச் பெல் அடிச்சிடுவாங்க” என்று சொல்லி கொண்டே படிக்கெட்டில் இறங்கினான்.

“நான் வேணாம் உங்களை டிராப் பண்ணிட்டு வரேனே” என்று ஜானவி இறங்கி செல்பவனை  பார்த்து எட்டி நின்று சொல்ல,

“பிக் அப்  பண்றேன்னு சொன்னா கூட ஒகே… டிராப் பண்றேன்னு சொல்றீங்களே ஜானவி” என்றவன் கேலி புன்னகையோடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“பிக் அப்பும் வேண்டாம் ட்ராபும் வேண்டாம்… நீங்க கால் நடையாவே போங்க” என்று அவள் கடுப்பாக சொல்ல அதனை கேட்டு சிரித்து கொண்டே அவன் சென்றுவிட்டான்.

காதிலில் காத்திருப்பும் கூட ஒரு சுகம்தான். அவனின் சின்ன சின்ன சீண்டல்களும் முத்தங்களும் அவளுக்கு ரசனையாக இருந்தது. அவனுடன்  ஒன்றாய் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு புதுப்புது உணர்வுகளை புகுத்தியது.

வாழ்க்கை இத்தனை அழகா என்று அவனுடன் வாழ்ந்து பார்க்கும் போதுதான் அவளுக்கு புரிய வந்தது. கடந்த சில நாட்களாய் செழியனுக்கும் ஜானவி மீதான காதல் அபரிமிதமாய் பெருகியிருந்தது. ஆனால் அதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லத்தான் அவனுக்கு தனிமையும் சந்தர்ப்பமும்  அமையவேயில்லை.

 

 

 

 

error: Content is protected !!