paadal thedal – 19(2)

paadal thedal – 19(2)

அன்று செழியன் மகள்களை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர அன்புவும் மீனாவும் ஆளுக்கொரு திசையில் முகத்தை திருப்பி கொண்டு உள்ளே  வந்தனர்.

ஜானவி அவர்கள் முகத்தை பார்த்துவிட்டு, “என்னாச்சு செழியன்?” என்று கேட்க,

“ஏதோ ஸ்கூலில கேம் வைச்சிருக்காங்க… அதுல மீனா அவ கிளாஸ்ல இருக்க வேற ஒரு பொண்ணோட சேர்ந்து விளையாடினாலாம்… அன்புவுக்கு அதனால மீனா மேல கோபம்” என்று அவன் சொல்லி முடிக்கும் போது அன்பு ஜானவியிடம்,

“மீனு அந்த பொண்ணு கூடத்தான் எப்பவும் பேசறா” என்று புகார் செய்தாள்.

மீனா உடனே, “தியா என் பிரெண்டு… நான் அப்படிதான் பேசுவேன்” என்றாள் அழுத்தமாக!

ஜானவி கோபமாகி, “அதுக்கு… நீ அன்புக்கிட்ட பேச மாட்டியா?” என்றுமிரட்ட, “இல்லம்மா நான் அன்புகிட்ட பேசுறேன்” என்று மீனா அம்மாவின் மிரட்டலில் பயந்தாள்.

“இல்ல பொய்” என்று அன்பு சொல்ல,

“வாயை மூடு அன்பு… நீ செய்றது தப்பு” என்று செழியன் மகளை அதட்ட அன்பு ஓடி வந்து ஜானுவின் காலை கட்டி கொண்டாள்.

ஜானவி செழியனை முறைத்து, “அன்பு என்ன தப்பு செஞ்சா?” என்று அன்புவிற்கு வக்காலத்து வாங்க,

“மீனா மட்டும் என்ன தப்பு செஞ்சா… அவ பிரெண்டோட பேசுனா… அவ்வளவுதானே” என்று செழியன் மீனாவிற்கு பரிந்து பேசினான்.

அப்போது பாண்டியன் அவர்கள் இடையில் வந்து, “குழந்தைங்க சண்டையெல்லாம் ஒரு விஷயமா… இதுக்கு போய் ரெண்டு பேரும் முறைச்சுக்கிறீங்க… போய் உங்க வேலையை பாருங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில அவங்களே சமாதானமாயிடுவாங்க” என்று சொல்ல ஜானவி மௌனமாக உள்ளே சென்றுவிட செழியனும் தன் அறையில் சென்று உடையை மாற்றி கொண்டு வந்தான்.

அன்புவிற்கும் மீனாவிற்கும் ஜானவி உடைகளை மாற்றிவிட்டு அருந்த பால் கொடுக்க, அப்போதும் கூட இருவரும் எதிரும் புதிருமாகத்தான் அமர்ந்திருந்தனர்.

ஜானவி அந்த காட்சியை செழியனிடம் காண்பித்து கண்ஜாடையில் அவர்களை சமாதானம் செய்ய சொன்னாள். அவனும் இமைகளை மூடி அவளிடம் ஆமோதித்துவிட்டு

அவர்களிடம் சென்று, “ஹம்ம் ஹ்ம்ம்… சீக்கிரம் பால் குடிங்க… நம்ம எல்லாம் கீழ பார்க்ல போய் விளையாடலாம்” என்று அவன் சொன்னதுதான் தாமதம்.

“ஐ!” என்று சொல்லி குதுகலித்து அவர்கள் பாலை குடிக்க ஜானவி பெருமூச்செறிந்தாள். அதன் பின் செழியனும் பாண்டியனும் அவர்களை அழைத்து கொண்டு பூங்காவிற்கு சென்று விட ஜானவி பால்கனியில் நின்று கொண்டு மகள்கள் விளையாடுவதை பார்த்தபடி நின்றாள்.

அதேநேரம் செழியன் குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாடுவதை பார்த்து கண்கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தாள். செழியன் மகனாக தந்தையாக கணவனாக காதலனாக… ஏன் நண்பனாக என்று எல்லாவற்றிலும் அவன் சிறப்பானவனாக திகழும் சூட்சமம் என்ன என்று அவள் மனம் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது பூங்காவிலிருந்த செழியனை காணவில்லை. அவள் சுற்றி சுற்றி தன் பார்வையை சுழற்றி தேட அப்போது அவள் பின்புறம்,

“யாரை தேடுறீங்க ஜானவி?” என்று வெகுஅருகாமையில் அவள் செவிகளை அவன் குரல் தீண்டியது.

அவள் துணுக்குற்று திரும்ப, “இங்க நீங்க என்ன பண்றீங்க செழியன்… குழந்தைங்க எங்க?” என்று கேட்க,

“கீழ அப்பா கூட இருக்காங்க” என்றான்.

“ஒ!” என்றவள் அவனை சந்தேகமாக பார்த்து, “இப்போ நீங்க ஏன் மேல வந்தீங்க?” என்று கேட்கவும்,

“நான் பசங்க விளையாட பால் கேட்டாங்க… அதை எடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றவன் சொல்ல அவனை நம்பாமல் பார்த்தவள்,

“அதுக்கு நீங்க ஏன் மேல ஏறி வரணும்… என்கிட்ட கேட்டு இருந்தா நான் மேல இருந்தே தூக்கி போட்டு இருப்பேன் இல்ல” என்றவள் சொல்ல,

“நான் ஃபோன் எடுத்துட்டு போலயே” என்றான் அவன்!

“எதுக்கு ஃபோன்… ஒரு குரல் கொடுக்க வேண்டியதுதானே…  நான் பால்கனில நின்னு உங்களைதானே  பார்த்துக்கிட்டு இருந்தேன்” என்றவன்  சொன்ன நொடி அவளை நெருங்கி வந்தவன்,

“என்னைதான் பார்த்துக்கிட்டு இருந்தீங்களா?” என்று ஆழமான பார்வையோடு  கேட்க அவள் உதட்டை கடித்து கொண்டு,

“நான் அப்படி சொல்லல… உங்க எல்லோரையும் பார்த்துக்கிட்டு இருந்தேன்” என்று அவள் சமாளிக்கும் போதே அவன் அவள் இடையை பற்றி அருகே இழுத்தான்.

“செழியன்” என்று அவள் சொல்லும் போதே அவன் உதடுகள் அவளை பதம் பார்க்க தொடங்கியிருந்தது. அவள் முகத்தில் முத்தத்தால் அவன் அர்ச்சனை செய்ய அவள் பதறி கொண்டு அவனை விலக்கி விட முயன்றாள்.  ஆனால் அது அவளுக்கு சற்றே அசாத்தியமான காரியமாக இருந்தது.

அந்த அளவுக்கு அவன் அவள் மீது மோகம் கொண்டிருந்தான். அவன் ஏக்கமும் தாபமும் ஒன்று சேர்ந்து கொள்ள அவள் கழுத்து வளைவில் இறங்கி கொண்டிருந்தன அவன் இதழ்கள்.

அவள் நாணத்தோடு, “செழியன்” என்று கொஞ்சம் தீவிரமாக அவனை விலக்க எத்தனிக்க அப்போது அவன் ஸ்டிக் கைகளில் இருந்து நழுவிவிட்டது.

அவன் தடுமாறிய சமயம் வேறுவழியின்றி ஜானவியே அவனை இறுக்கமாக அணைத்து கொள்ள நேரிட்டது. விஷமாமாக யோசித்தவன் தானும் ஸ்டிக்கை எடுக்க எத்தனிக்காமல் அவளையும் எடுக்க விடாமல் தன் இரு கரங்களாலும் அவளையே சார்ந்துவிட, என்ன செய்வாள் அவள்?

“இப்போ தள்ளி விட்டுட்டு போங்க பார்ப்போம்?” என்றவன் கல்மிஷ்மாக கேட்ட தொனியில் அவள் பரிதபாமாக பார்த்து, “உஹுமம் மாட்டேன்” என்று அவள் தலையசைக்க,

அவன் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு அவளை பார்த்தவன், “நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும் ஜானு… உங்களை நான் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்” என்று சொல்லும் போதே அவன் விழிகளில் நீர் சூழ்ந்து கொண்டது. அவனின் முந்தைய இழப்பின் வலி அதில் அத்தனை ஆழமாக தெரிந்தது.

அவள் விழிகளிலும் நீர் கோர்க்க, “கண்டிப்பா நான் உங்களை விட்டு போக  மாட்டேன்” என்றவள் உறுதியாக சொன்ன மறுகணம் அவன் இதழ்கள் அவள் இதழ்களிடம் தஞ்சம் புகுந்துவிட்டன.

தீரா தாபத்தோடு அவன் அந்த முத்தத்தை நின்று நிதானமாக அனுபவிக்க, ரஞ்சனி இல்லாமல் சூனியமாகி போன அவன் வாழ்க்கையின் அரிதினும் அரிதான தேடலாக அவனுக்கு கிடைக்கபெற்றவளை இழந்துவிட கூடாது என்ற அச்சமே  இன்னும் இன்னும் அவளை தனதாக்கி கொள்ள வேண்டுமென்ற அவாவை அவனுக்குள்  தூண்டியது.

அவள் அவனின் முத்தத்தில் கிறங்க அவளின் உணர்வுகளும் தேகமும் அவனிடம் மொத்தமாக சரணடைய விழைந்தது. மெல்ல மெல்ல அவனின் எல்லைமீறல்களை அவள் வெகுவாக ரசித்து கொண்டிருந்த நேரம் இருவருமே ஒரு சேர நிமிர்ந்து முகம் பார்த்தனர்.

“ஜானவி” என்று செழியன் அழைக்க,

“அன்புவும் மீனாவும் அழற மாறி கேட்குது இல்ல” என்று அவள் சொல்ல, செழியனும் ஆமோதித்தான். அவன் கரத்தை பிடித்து கொண்டே அவள் அவன் ஸ்டிக்கை குனிந்து எடுத்து தந்துவிட்டு முன்னே நடந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.

அப்போது பாண்டியன் அழுது கொண்டிருக்கும் அந்த வாண்டுங்களை சமாதானம் செய்ய பாடாய்பட்டு கொண்டிருக்க, “என்னாச்சு மாமா?” என்ற கேட்ட மீனா உடனே, “அன்பு என்னை அடிச்சிட்டா” என்றாள்.

செழியன் அவள் பின்னோடு வந்து நிற்க அன்பு தன் அப்பாவிடம் ஓடி சென்று, “நான் அடிக்கல இவதான்” என்று சொல்ல

“அன்புதான் என்னை முதல அடிச்சா?” என்று மீனா அன்புவை கை காட்ட,

“இல்ல மீனுதான்” என்று அன்பு மீனாவை சுட்டிக்காட்டினாள்.

“பொய்” என்று மீனா சொல்ல, “இல்ல இவதான்” என்று அன்பு மீண்டும் சொல்ல,

“வாயை மூடுறீங்களா இரண்டு பேரும்” என்ற ஜானவியின் அதட்டலுக்கு இரண்டு பேரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டனர்.

“போய் கம்னு உட்காருங்க” என்று அவள் சொல்ல இருவரும் சோபாவில் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து கொள்ள,

பாண்டியன் நடந்த விஷயத்தை உரைத்தார்.

“இரண்டு பேரும் நல்லாதான் விளையாடிட்டு இருந்தாங்க… அப்போ என் பிரெண்டு வந்தான்… அவன்கிட்ட பேசிட்டு திரும்பிறதுக்குள்ள  இரண்டு பேரும் சண்டை போட்டு அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க” என்று அவர் நடந்தை சொல்ல சந்தானலட்சுமி கோபமாக,

“புள்ளைங்கள பார்த்துக்கிறதை விட அப்படியென்ன பொல்லாத பிரெண்டு உங்களுக்கு” என்று கணவனை கடிந்து கொண்டார்.

ஜானவி உடனே, “ஐயோ விடுங்க அத்தை… அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டா அதுக்கு மாமா என்ன பண்ணுவாரு” என்று அவள் மாமனாருக்காக பரிந்து பேச  சந்தானலட்சுமி விடாமல் கணவனை முறை முறை என்று முறைத்து விட்டு பேத்திகளை சமாதனப்படுத்த முயல,

“ம்மா நான் அவங்கள பார்த்துக்கிறேன்… நீங்க போங்க” என்றான் செழியன்.

சந்தானலட்சுமி மீண்டும் கணவனை பார்த்து முறைத்து, “வாங்க உங்களுக்கு இருக்கு” என்று சொல்ல,

“நான் எதுவும் பண்ணல லட்சு” என்று மனைவியை சமாதானம் செய்ய அவர் பின்னோடு உள்ளே சென்றுவிட்டார்.

ஜானவி கணவனை பார்க்க செழியன் இருவரின் அருகிலும் அமர்ந்து,

“இரண்டு பேருக்கும் அப்படி என்ன சண்டை?” என்று நிதானமாக விசாரிக்க,

“அவதான் ப்பா ஜானும்மா உனக்கு அம்மா இல்ல… எனக்கு மட்டும்தான் அம்மான்னு சொன்னா” என்று அன்பு சொன்ன நொடி ஜானவி அதிர்ந்து மீனாவை பார்த்து, “ஏன்டி அப்படி சொன்ன?” என்று மிரட்ட,

“ஜானவி பொறுமையா இருங்க… நான் பேசிக்கிறேன்” என்றான் செழியன்.

அவள் மௌனமாக மகளை முறைக்க மீனா அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

“மீனு” என்று செழியன் அவள் தோளில் கை போட அவள் வேகமாக ஓடிவந்து ஜானவி காலை கட்டி கொண்டு, “அன்புதான் முதல  இது ஒன்னும் உங்க வீடில்லைன்னு என் வீடுன்னு என்கிட்ட சொன்னா… அப்புறம்தான் நான் அப்படி சொன்னேன்” என்றாள் மீனா.

ஜானவி அதிர்ச்சியில் பேச முடியாமல் நிற்க, “என்ன அன்பு நீ அப்படி சொன்னியா?” என்று செழியன் மகளை பார்க்க,

“அவதான் பா நீ எனக்கு வேண்டாம் போ… கா ன்னு சொன்ன” என்று அஞ்சி கொண்டே பதிலுரைத்தாள் அன்பு!

செழியன் நிதானமாக யோசித்துவிட்டு மீனாவிடம், “மீனு அப்பாகிட்ட வா” என்று அழைக்க,

“நீங்க ஒன்னும் எனக்கு அப்பா இல்ல… அன்புவுக்குதான் அப்பா” என்ற வார்த்தை கேட்டு செழியன் ஆடி போனான். கணவனின் வேதனையை  துல்லியமாக கண்ட  ஜானவி சீற்றமாகி, “என்னடி சொன்ன?” என்ற மகளை கோபத்தில் அடித்து விட்டாள்.

“ஜானவி” என்று செழியன் கோபமான அதேநேரம்,

மீனா சத்தமாக அழுது, “போ… நீ என்னை மட்டும் அடிக்கிற… அன்புவை ஒரு தடவயாச்சும் அடிசிருக்கியா?” என்று கேட்டுவிட, ஜானவிக்கு மேலும் அதிர்ச்சியானது. மீனா அவளை விட்டு விலகி சென்றாள்.

செழியனும் கோபம் பொங்க, “எத்தனை தடவை சொல்றது உங்களுக்கு… குழந்தை மேல கை ஒங்காதீங்கன்னு” என்று சொல்லிவிட்டு, “மீனா” என்று செழியன் மகள் அருகில் சென்றான்.

அதேநேரம் பாண்டியனும் சந்தானலட்சுமியும் என்னவோ ஏதோ என்று முகப்பறைக்கு ஓடி வந்தனர்.

மீனா பிடிவாதமாக செழியனிடம் வரமாட்டேன் என்று ஒதுங்கி கொள்ள அந்த பிஞ்சு உள்ளத்திற்கு தான் என்ன செய்கிறோம் என்று புரியவில்லை. மீனா வேகமாக சென்று படுக்கறைக்குள் புகுந்து கொள்ள அன்புச்செல்வி நடந்த நிகழ்வுகளை பார்த்து பயந்து  தன் பாட்டி தாத்தாவிடம் ஓடிவிட்டாள்.

பிரச்னையின் தீவிரம் புரிந்து பாண்டியன் என்னவென்று விசாரிக்க, “நீங்க அன்புவை அழைச்சிட்டு உள்ளே போங்க” என்றவன் ஜானவியை பார்க்க அவள் அதிர்ச்சியில் நின்றகெதியில் அப்படியே சிலையாக நிற்க,

“ஜானவி… போய் மீனாவை சமாதானப்படுத்துங்க… ஆனா குழந்தையை எக்காரணம் கொண்டு அடிக்கவோ மிரட்டவோ செய்யாதீங்க” என்று சொல்ல அவளும் உள்ளே சென்று மீனாவிடம் பேசினாள்.

என்னதான் அடித்தாலும் மீனாவால் ஜானவியை ஒரு நாளும் விலகி இருக்க முடியாது. ஓடி வந்து தன் அம்மாவை அணைத்து கொண்டவள், “நம்ம இப்பவே அம்மம்மா வீட்டுக்கு போலாம்” என்று அடம் பிடிக்க, அவளுக்கு எரிச்சலானது. ஆனால் செழியன் சொன்ன ஒரு வார்த்தைக்காக மகளிடம் தன் கோபத்தை காட்டாமல் முடிந்தளவு பொறுமையாக இருந்தாள்.

“நாளைக்கு கூட்டிட்டு போறேன்” என்று மகளை சாப்பிட செய்து உறங்கவும் வைத்துவிட இன்னொரு புறம் அழுது கொண்டிருந்த அன்புவை சந்தானலட்சுமி சாப்பிட வைத்தார். அதன் பின் அவர்கள் நால்வரும் உணவு உண்ண அமர்ந்தார்கள். ஆனால் யாருக்குமே சாப்பாடு உள்ளே இறங்கவில்லை.

செழியன் தன்னறைக்குள் நுழைந்த போது மீனா உறங்கி கொண்டிருந்தாள். அவர்கள் திருமணமான நாள் முதற் கொண்டு இன்று வரை அன்புவும் மீனாவும் தனித்தனியாக படுத்து கொண்டதே இல்லை.

எந்த அறையில் படுத்து கொண்டாலும் இருவரும் ஒன்றாகவே படுத்து கொள்வதுதான் வழக்கம்.

அந்த சிந்தனையோடு செழியன் ஆழ்ந்த உறக்க நிலையிலிருந்த  மீனாவின் அருகில் சென்று அமர்ந்து தலையை வருடி கொடுக்க உள்ளே வந்த ஜானவி,

“மீனா அப்படி பேசனதால ரொம்ப ஹார்ட்டாயிடீங்களா?” என்று கேட்டாள்.

அவன் அவள் முகம் பார்க்காமல், “நீங்க மீனாவை அடிச்சதாலதான் நான் ரொம்ப ஹார்ட்டாயிட்டேன்” என்றவன் மேலும், “யாரை கேட்டு நீங்க அவ மேல கை ஒங்கினீங்க” என்று அவளை உக்கிரமாக முறைத்தான்.

“அவ அப்படி உங்ககிட்ட பேசனதாலதான்” என்று ஜானவி தயங்கியபடி சொல்ல,

“தப்பு ஜானவி… கடைசில மீனா உங்களை பார்த்து என்ன சொன்னானு கேட்டீங்களா?” என்றவன் அவள் முகம் பார்த்து, “இந்த மாதிரி நீங்க அன்புவை அடிச்சிருக்கீங்களான்னு கேட்கிறா” என்றான்.

ஜானவி பதிலின்றி குற்றவுணர்வோடு நிற்க அவன், “குழந்தைங்க நாம சின்ன சின்னதா செய்ற ஒவ்வொரு விஷயத்தையும் கவனிச்சிட்டு இருப்பாங்க… அதுவும் மீனா ரொம்ப மெச்சூர்ட்… அதுவும் நீங்க இதுவரைக்கும் ஒருதடவை கூட அன்புவை அடிக்காததை அவ கவனிச்சிருக்கா” என்று சொல்லவும்,

“நான் எப்படி அன்புவை அடிக்க முடியும்” என்று எதார்த்தமாக கேட்ட ஜானவியை விழிகள் இடுங்க பார்த்து,

“இப்ப என்ன சொன்னீங்க ஜானவி” என்று கேட்டான்.

அவன் பார்வையின் தீவிரத்தை உணர்ந்த அப்படியே படுக்கையில் அமர்ந்து அவள் தலையை தாழ்த்தி கொண்டு, “அப்படி பார்க்காதீங்க செழியன்… நான் சத்தியமா அன்புவை என் மகளாதான் பார்க்கிறேன்” என்றாள்.

“அது எனக்கு நல்லா தெரியும்… ஆனா நீங்க ஏன் அன்புவை நடத்துற மாறி மீனாகிட்டயும் நடந்துக்க மாட்றீங்க” என்று கேட்ட நொடி அவள் அதிர்ச்சியாகி, “நான் மீனாகிட்ட எப்பவும் போலதான் நடந்துக்கிறேன்” என்றாள்.

“இல்ல ஜானவி… நீங்க அன்புகிட்ட நடந்துக்கிற மாறி மீனாகிட்ட நடந்துக்கல… அதுவும் மீனாகிட்ட காட்டிற கண்டிப்பை நீங்க அன்புகிட்ட காட்டிறதில்ல… ஒன்னு நீங்க அன்புகிட்ட நடந்திக்கிற மாறி மீனாகிட்ட நடந்துக்கோங்க  இல்ல  மீனாகிட்ட நடந்துகிற மாறி அன்புக்கிட்ட நடந்துக்கோங்க… அப்பதான் அவங்க இரண்டு பேருக்குள்ள எந்த பிரிவினையும் வராது” என்று அவன் தெளிவாக சொல்ல,

“இனிமே அப்படி நடந்துக்கிறேன்… ஆனா இப்போ இவங்க சண்டையை  எப்படி சால்வ் பண்றது” என்றவள் பதட்டமாக கேட்டாள்.

“அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல… நான் பார்த்துக்கிறேன்… நீங்க படுத்துக்கோங்க” என்றவன் சொல்ல ஜானவி முகத்திலிருந்த அச்சமும் கவலையும் துளி கூட குறையவில்லை.

“என்னால முடியல… இந்த பசங்க சண்டை போட்டுக்கிட்டதை பார்த்ததில இருந்து  மனசை போட்டு பிசையுது”

“குழந்தைங்க சண்டையை போய் சீரியஸா எடுத்துக்கிட்டு… விடுங்க ஜானு” என்றவன் சொன்ன சமாதானம் அவள் மூளையை எட்டவேயில்லை.

“இல்ல செழியன்… இந்த மாறி அவங்க இரண்டு பேரும் இதுவரைக்கும்  சண்டை போட்டுக்கிட்டதே இல்லையே” என்றவள் படபடப்போடு சொல்ல அவனுக்கு அவள் மனநிலை ஓரளவு புரிந்து போனது. எங்கே அன்புவிற்கும் மீனாவிற்கும் இடையில் பிரிவினை வந்துவிடுமோ என்று எதிர்க்காலத்தை குறித்த அச்சம் அவளை தொற்றி கொண்டிருந்தது.

செழியன் எழுந்து அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, “ஜானு” என்று அவள் கன்னங்களை தழுவ, “ஹ்ம்ம்” என்று அவள் குரல் வராமல் அழுகைதான் வந்தது.

“நான் இருக்கும் போது நீங்க ஏன் பயப்டுறீங்க… நம்ம பசங்களுக்குள்ள பிரிவினை வர நான் விட்டுருவேணா?” என்றவன் சொல்லி கொண்டே அவள் கண்ணீரை துடைத்துவிட அந்த வார்த்தைக்கு மேல் அவளுக்கு வேறென்ன வேண்டும். அதுவே அவளுக்கு போதுமானது.

அவன் தோள் மீது அவள் தலை சாய்த்து கொள்ள செழியன் அவள் தலையை வருடி கொடுகத்தான்.  அத்தனை நேரம் இருந்த அவள் மனபாரமெல்லாம் லேசானது. அவள் அப்படியே அவன் மீது சாயந்து கொண்டே உறங்கியும்விட்டாள்.

மனைவியின் உறக்கம் கலையாமல் அவளை படுக்கையில் படுக்க வைத்து விளக்கை அணைத்தான். ஆனால் அவன் விழிகளை உறக்கம் தழுவவில்லை. அந்த பிரச்சனையை முடிப்பதற்கான நிரந்திர தீர்வை அவன் தீவிரமாக யோசித்படி இரவெல்லாம் விழித்திருந்தான்.

 

 

 

error: Content is protected !!